கற்பனைக் குமிழிகள்
சில படங்கள் முதல் காட்சியிலே நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடக்கூடியவை. அப்படியான ஒரு திரைப்படம் தான் Asino vola.( DONKEY FLIES) 2015ல் வெளியான இத்தாலியத் திரைப்படம்.

மொரிசியோ என்ற இசைக்கலைஞரின் பால்ய நினைவுகளை விவரிக்கும் இப்படத்தின் முதற்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக மொரிசியோ செல்லும் போது அவர் கூடவே ஒரு கோழியும் செல்கிறது. அவருடன் அந்தக் கோழி பேசுகிறது. அவருக்காக ஒரு முட்டையைத் தருகிறது. மொரிசியோவும் அந்தக் கோழியுடன் உரையாடுகிறார். அதன் முன்னே இசை நிகழ்த்துகிறார். அந்தக் கோழி உன்னை உன் அம்மா தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறது. அதன் வழியே அவரது கடந்த கால நினைவுகள் ஒளிரத் துவங்குகின்றன
தெற்கு இத்தாலியிலுள்ள சிறிய ஊரில் வாழும் ஏழு வயது மொரிசியோ வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த பையன். புத்திசாலித்தனமான கழுதை மற்றும் குரல் கொடுக்கும் கோழி தான் அவனது நண்பர்கள்.
சதா சிறார்களுடன் விளையாடித் திரியும் மொரிசியோவை அடித்து வீட்டிற்கு இழுத்து வருவதற்காக அவனது அம்மா கையில் ஒரு குச்சியோடு அலைந்து கொண்டிருக்கிறாள்.
மொரிசியோ குப்பைமேட்டில் கிடக்கும் பழைய பொருட்களைக் கிளறிக் கொண்டு திரிகிறான். அங்கே அவனைத் தேடி அம்மா வருகிறாள். அம்மாவின் அடிக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொள்கிறான்.

வழியில் நிற்கும் கழுதையோடு பேசுகிறான். அவன் பூனை, கோழி, கழுதை என எல்லா விலங்குகளுடன் பேசக்கூடியவன். அந்த விலங்குகளும் அவனுக்கு அறிவுரை கூறுகின்றன. உண்மையில் அந்த விலங்குகள் தான் அவனைப் புரிந்து கொண்டிருக்கின்றன. வழிகாட்டுகின்றன.
கற்பனை, நிஜம் என்று நாம் பிரித்து வைத்துள்ள கோட்டினை அழித்து எல்லாமும் நிஜம் என்கிறான் மொரிசியோ.
ஒரு நாள் மொரிசியோ உள்ளூர் இசைக்குழு ஒன்றில் இணைந்து பயிற்சி எடுக்கத் துவங்குகிறான். மற்ற சிறுவர்களைப் போல அவனிடம் இசைக்கருவியில்லை. இதனால் அவன் பின்தங்கிய மாணவனாக நடத்தப்படுகிறான்.
அவனது அம்மா இசை கற்பதெல்லாம் வீண் என்று நினைக்கிறாள். இசை கற்கவோ, இசைக்கருவி வாங்கவோ பணம் தர மறுக்கிறாள். ஆனால் இசை ஆசிரியர் அவன் மீது அன்பு கொண்டு தேவையான உதவிகளைச் செய்கிறார்.
உள்ளூர் இசைக்குழுவினை நடத்தி வரும் கிழவர் இறந்து போன தனது மகனின் நினைவாக அவன் வாசித்த இசைக்கருவி மற்றும் அவனது இக்குறிப்புகளைப் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்துப் பராமரித்து வருகிறார். அதிலுள்ள இசைக்கருவியை மொரிசியோவிற்குத் தரலாம் என்று அவரது மகன் முனையும் போது பெரியவர் கோபம் கொள்கிறார்.
எப்படியாவது தனக்கென ஒரு இசைக்கருவியைப் பெற வேண்டும் என்பதற்காக மொரிசியோ மேற்கொள்ளும் முயற்சிகள் வேடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வாத்தியக்குழுவில் டிரம்ஸ் வாசிக்கத் துவங்கி தனது இசைப்பயணத்தை எப்படி மொரிசியோ துவங்கினான் என்பதே படம்.

குப்பை மேட்டில் கிடக்கும் பொருட்களை ஒரு சூட்கேஸில் நிரப்பிக் கொண்டு தன் வீட்டிற்கு மொரிசியோ கொண்டு வருவதும், தானே பழைய டிரம் ஒன்றைச் சரி செய்ய முயல்வதும். டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொள்ளும் போது அவனது நடையும். கடைசியில் இசைக்குழுவின் சீருடை அணிந்து மிடுக்காகச் செல்வதும் அழகான காட்சிகள்.
ஒரு காட்சியில் அவனது வீடு தேடி இசை ஆசிரியர் வருகிறார். அப்போது மொரிசியோவின் அம்மா அவரை வரவேற்று உபசரிக்கிறாள். அன்று தான் தனது மகன் உண்மையில் இசையில் ஆர்வம் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்கிறாள்,
படத்தின் முடிவில் மொரிசியோ அவளிடம் தனக்குக் கிடைத்த பணத்தைத் தரும் போது அவள் பெருமைப்படுகிறாள். மொரிசியோவின் அம்மா ஒரு அபூர்வமான கதாபாத்திரம்.
இசை கற்றுக் கொள்ளத் துவங்கிய பிறகே தனது குடும்பச் சூழல். பணத்தின் மதிப்பு. உதவி செய்கிறவர்களின் இயல்பு, தனக்கானவற்றைப் பெறுவது உள்ள சங்கடம் இவற்றை மொரிசியோ உணர்ந்து கொள்கிறான். உண்மையில் அவன் பெரியவர்கள் உலகில் அப்போது தான் அடியெடுத்து வைக்கிறான். அவனுடன் சேர்ந்து இசையமைப்பவர்கள் அத்தனை பேரும் பெரியவர்கள். மொரிசியோ தனது ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்கிறான். இசை கற்க முடியாது என்ற சூழல் வரும்போதெல்லாம் அவன் தைரியமாக இசை கற்பதே தனது ஆர்வம் என்பதில் உறுதியாக இருக்கிறான். அவன் இசையின் மூலமாகத் தன்னை நிரூபித்துக் கொள்ள முனைகிறான்.
பால்ய வயதின் கனவுகளை மிக இயல்பாக, கவித்துவமாகப் பதிவு செய்துள்ளது இப்படம். காமிக்ஸ் புத்தகத்தில் வரும் உரையாடல் போல அவன் மனவோட்டங்கள் சிறிய குமிழ்களாக வெளிப்படுகின்றன. அதில் வேடிக்கையான சித்திரங்கள் தோன்றி மறைகின்றன.
“All grown-ups were once children… but only few of them remember it.” என்றொரு வரி குட்டி இளவரசனில் வருகிறது. இந்தப் படமும் நம்மை அப்படிச் சிறுவனாக உணர வைக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
