கூடு- சில கேள்விகள்

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்,

கூடு சிறுகதையை வாசித்தேன்.நுண்மையான தகவல்களின் பிரம்மாண்டத்தை கொண்ட இக்கதை பிரம்மாண்டமான ஒரு நுண்மையை சொல்கிறது. கடிதம் எழுதிய வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த நுண்மையை ஒவ்வொரு கோணத்தில் அணுகியுள்ளார்கள். முதல் முறை வாசிப்பிற்கு மலைக்க வைக்கும் மற்றும் அற்புதமான வாசிப்பின்பத்தை தந்த கதை.கதையின் நுண்மை மனதை நிறைத்துவிட்டதால் சிந்தனை திறக்கவில்லை. இதை சவாலாக எடுத்துக்கொண்டு, மலைப்பு நீங்கி கதை இலகுவாகும் வரை வாசிக்க முடிவு செய்தேன். இந்த ஒரு வார காலத்தில் நான்கு முறை படித்துவிட்டேன். கதை எனக்குள் இறகு போல பறக்கிறது.

கதையின் சாராம்சம் இயற்கை வல்லவர்கள் வழி நிகழ்த்தும் தன்னறம்.இதை ஆறு கேள்விகளாக என்னுள் கேட்டுக்கொண்டேன். குறித்து வைப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் மறந்துவிட்டது. மறுபடியும் யோசித்தால் அந்த கேள்விகள் வரவில்லை.

ஏன் அலைகிறார்கள்?மூன்று முறை உடலைத் திறப்பது என்றால் என்ன?கூடு என்றால்என்ன?ஏன் நோர்பு திரக்பா ராப்டனுக்குஒளியாய் தெரியவில்லை?ஏன் அலைகிறார்கள்?

முக்தானந்தா தெற்கிலிருந்து வடக்கு உச்சிக்குச் செல்கிறார். நோர்பு திரக்பா வடக்கின் உச்சிலிருந்து தெற்குக்கு வருகிறார்.வளர்ச்சியும், வீழ்ச்சியும் இல்லாத நிறைவான வாழ்க்கை கொண்ட உம்லா ஊரை விட்டு ஏன் கிளம்புகிறார்.கணிதத்தில் கிடைப்பதைப் போல் ஒற்றைப் பதில் கிடையாது ஆனால் நுண்மையான பதிலை அடையலாம். நான் அடைந்த பதில் இது. இந்திய மரபுப்படி மனம் நான்கு அடுக்குகளைக் கொண்டது. நான் அதை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்கிறேன். விழிப்புமனம் மற்றும் ஆழ்மனம்.அலைவது விழிப்பு மனத்தின் மூலம் உடல்.அலையவைப்பது ஆழ்மனம். ஐம்புலன்கள் வழியாக ஆழ்மனம் வெளி உலகத்தை உணர்ந்து கொள்கிறது.அது வெளி உலகத்தோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. உடல் வழியாக அல்லது விழிப்புமனம் வழியாக மட்டுமே வெளிப்படும்.விழிப்புமனம் ஆழ்மனதைக் கூர்ந்து கவனிப்பது மூலம் அதன் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளலாம். அது நினைக்கும் பாதையை தேடித்தான் அடைய முடியும்.இது trial and error method.புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி, தன் ஆழ்மனம் தேடிய ஞானத்தை அப்படித்தான் அடைந்திருப்பார்.ஆழ்மனத்தின் தேடல்கள் நிகழ்ந்து அது நிறைவுறும் போது விழிப்புமனம் அதை தெளிவாக அறிகிறது. அந்த அறிதலே கண்டுபிடிப்புகள் அல்லது ஞானம். புத்தரின் தம்மம், ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி, ராமானுஜரின் கணித சூத்திரங்கள்.

மூன்று முறை உடலை திறப்பது என்றால் என்ன?

கருப்பை திறப்பு, நான் உடலல்ல என்னும் உணர்வு, மொத்த பிரபஞ்சமும் நான் என உணர்வது.

தாயின் உடலுக்குள் வளர்ந்த கரு இந்த உடல் போதுமென முடிவு செய்து வெளியே வரும் தருணத்தை முடிவு செய்கிறது. வெளியே வரும் குழந்தை நாள்தோறும் முன்னே செல்கிறது.குழந்தை ஆழ்மனத்துடன் பிறக்கிறது. அதன் விழிப்புமனம் இன்னும் கருதான்.ஆழ்மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அது தன் தேவையை உடல் மூலம் அழுகையாய், சிரிப்பாய் வெளிப்படுத்துகிறது.உடல் வளர வளர இரு மனங்களும் வளர்கிறது.ஒரு பருவத்தில் ஆழ்மனம் தன் உடலை எண்ணி ஏங்குகிறது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை வருத்திக் கொள்கிறது.விழிப்புமனம் மூலம் பதிலை தேடுகிறது. ஒரு கட்டத்தில் இதுதான் நான் அல்லது உடலல்ல நான் என்று உணர்கிறது.உடல் ஒரு கருவி என அறிகிறது. அது ஒரு விடுதலை.இது இரண்டாவது திறப்பு. இத்திறப்பைக் கடந்து தன் உச்சத்தை விழிப்புமனம் மூலம் அடைகிறது. அந்த உச்சியில் மொத்த பிரபஞ்சமும் நான்தான் என உணர்கிறது. அதன் ஒரு துளிதான் உடலாய் இங்கு பிறந்துள்ளதென்று அறிகிறது.அந்த உடலையும் கடந்து பிரபஞ்சமாய் விரிகிறது. இது மூன்றாவது திறப்பு.

3.கூடு என்றால் என்ன?

தாய் தந்தையின் கர்மத்தால் கிடைத்த கருப்பை என்ற கூடு. அது போதவில்லை என்று வெளியே வந்து பெற்றோரின் அரவணைப்பு என்ற கூடு.ஒரு கட்டத்தில் அதுவும் போதாதென்று உணர்த்து தன் கூட்டை தானே கட்டிக்கொள்ள வெளியேறுகிறது. இந்த கூடு ஒவ்வொரு உயிரின் வல்லமையை பொறுத்து அமையும். அதையும் கடந்தபின் பிரபஞ்சம் என்ற கூடு.

4.ஏன் நோர்பு திரக்பா ராப்டனுக்கு ஒளியாய் தெரியவில்லை?

இதைப் பற்றிய சிந்தனை வந்தது ஆனால் தெளிவாக இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

தங்கப்புத்தகம் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.