நிழலின் பந்தம்
“மண்டியிடுங்கள் தந்தையே” நூல் குறித்த வாசிப்பு விமர்சனம்…
மஞ்சுநாத்
எழுத்தாளனுக்கு எழுத்தின் வழியேயான சுதந்திரம் எல்லையற்றது. கட்டுபாடுகள் இல்லாதது. உண்மையில் எல்லா வகையான படிமங்களிலும் இதைச் சாத்தியமாக்குவது முடியுமா…? முடியாது என்பதே எதார்த்தம்.

குறிப்பாகத் தனி மனிதர்களின் வரலாற்றுப் பின்புலத்தைச் சாரமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கதைகளுக்கு எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதிகம் உள்ளன. கூடுதலாக ரஷ்ய எழுத்துலகின் கொண்டாட்டமான மனிதரான டால்ஸ்டாய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதுவதென்பது காட்டில் திரியும் குதிரை தானாக விரும்பி தனது முகத்தைச் சேணத்திற்குள் பொறுத்திக் கொள்வதைப் போன்றது.
நான் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் படைப்புகளின் சுவாசத்துடிப்பை நெருக்கமாக உணர்ந்தவன். அவரது புனைவு சுதந்திரம் ஞிமிர்சிட்டு(Trochilidae) என்கிற தேன் சிட்டு பறவை இனத்தின் சிறகசைப்புக்கு (நொடிக்கு 60-80 சிறகசைப்புகள்) ஒப்பானது. கர்னலின் நாற்காலி தொகுப்பை வாசித்தவர்கள் அவரது புனைவின் சிறகசைப்புச் சுதந்திரத்தை புரிந்து கொண்டிருப்பார்கள். அத்தகைய எழுத்தாளர் எப்படித் தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, இப்படி முற்றிலும் மாறுபட்டு அவரது பாணியிலிருந்து விலகி அதேசமயம் வியப்பான நாவலை தர முடிந்தது.
எதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறமோ நாம் அதுவாகவே மாறி விடுகிறோம். எஸ்.ரா ரஷ்ய இலக்கியங்களில் வாழ்ந்தவர். அந்த வாழ்க்கையின் சாரத்தைத் தமிழ் வாசகர்களுக்குத் தனது பேச்சு மற்றும் கட்டுரைகள் வழியாக அறிமுகப்படுத்தியவர். குறிப்பாக டால்ஸ்டாய் பற்றியும் அவரது படைப்பிலக்கியம் குறித்தும் நீண்ட உரையை நிகழ்த்தி இருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் தந்தையாகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் பெரும்பாலான வாசகர்களின் விருப்பம் மட்மல்லாது உலக எழுத்தாளர்களின் ஆதர்சமாக இன்று வரையிலும் கூடத் திகழ்பவர்.
பறவைகளை விரட்டுவதற்காகக் கோதுமை வயலின் நடுவே டால்ஸ்டாயின் ஆடைகள் அணிவிக்கப்பட்ட வைக்கோல் பொம்மையின் வாசம் திமோஃபியின் நிழலுக்கு மிகவும் நெருக்கமானது. நெருக்கத்தின் இடைவெளி உருவாக்கும் அன்பைப்போல் கோபத்திற்கும் அளவு என்பதே கிடையாது.
வைக்கோல் பொம்மை மீது தீ வைத்து மகிழ்கிறான் சிறுவன் திமோஃபி. காலம் அவனைத் துரத்துகிறது. அதனோடு இயைந்து ஓடுபவன் அனுபவத்தின் மூத்த அதிபதியாகிறான். காலம் அனுபவத்தையும் மூர்க்கமாகச் சோதிக்கும் காலம் சவலானது. சோதனைகள் அனுவத்தின் உச்சத்தில் மறைந்துள்ள ருசி. அவை அளவுக்கு அதிகமாகி விடும் போது சிலருக்கு வாழ்க்கை அருசியாகத் திகட்டி விடுகிறது.
தனது தாயின் புதைமேட்டில் டால்ஸ்டாய் வைத்துவிட்டு போன மஞ்சள் மலர்களைக் கையில் எடுக்கும் திமோஃபி அதனை மென்மையாக முத்தமிட்டபடியே முகர்கிறான். அவன் சிறுவனாக இருந்த போது முகர்ந்த வைக்கோலின் வாசத்திற்கும் இப்போது முகரும் மலர்களின் வாசத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இவ்விரு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவாகிய பலநூறு வாசத்தின் அச்சாணியாக டால்ஸ்டாயின் மூச்சுக்காற்று எவ்வாறு தொடர்படுத்தப்படுகிறது என்பது தான் நாவல்.
பெரும் பண்ணை முதலாளியான டால்ஸ்டாயின் பார்வை தனது தொழிலாளிகள் மீது எந்த விதமாக இருந்தது…? மனைவி சோபியாவின் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் அவரது அன்பு எப்படிப் பிரதிபலித்தது. இளமையில் அவரது எண்ணற்ற காதலிகளின் காதலனாகச் சுற்றி திரிந்த போதும், முதுமையின் போது எதிர்கொண்ட பெரும் பஞ்ச கால நிவாரணப்பணிகளில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்ட தருணித்திலும் அவரது சிந்தனை எவ்வாறு எதன் போக்கில் இயங்கியது.
டால்ஸ்டாய் தனது காலத்தில் வாழ்ந்த தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், கோகோல், ஆன்டன் செகாவ் போன்ற எழுத்தாளர்களின் மீது எவ்விதமான மதிப்பீடுகள் கொண்டிருந்தார், “மிதமிஞ்சிய மதபோதனைகளும் நீதி கருத்துகளும் டால்ஸ்டாய் படைப்புகளை ஆக்கிரமித்துள்ளன…” போன்ற அவரது காலத்தில் எழுந்த எதிர் விமர்சனங்களுக்கு அவரது நிலைப்பாடு என்ன? அளித்த பதில் என்னவாக இருந்திருக்கும்…?
டால்ஸ்டாயின் மனைவி சோபியா, அவரது பிள்ளைகள், அபலை அக்ஸின்யா, பண்ணை தொழிலாளர்கள், அரசு அதிகாரிகன், சமூகம், எழுத்தாளர்கள், வாசகர்கள் என அனைவரது பார்வையிலும் டால்ஸ்டாய் என்னவாக இருந்தார்…? இப்படி 360 டிகிரி காட்சியில் நாவல் விரிவடைந்தாலும் முழுமை பெறாதது போன்றே தோன்றுகிறது. விரைவாகவும் சுருக்கமாகவும் முடிந்து விட்டதைப் போன்ற ஏக்கத்தைத் தருகிறது. டால்ஸ்டாய் கால ரஷ்யாவின் பெருங்கதவின் வழியே நுழையவிட்டு விரைவில் நம்மை வெளியேற்றி விடுகிறது.

இந்த நாவல் டால்ஸ்டாய் பிம்பத்தின் ஒளிக்கீற்றாகக் கசிந்தாலும், விளக்கு திரியின் மீது சேர்த்துக்கொள்ளும் கருந்துகள் படிம நிழலின் துயரத்தை, தனிமையை, எதிர்பார்ப்புகளை, நிராகரிப்பை,பழிச்சொற்களை,வெளிப்படுத்த முடியாத கோபத்தை, அன்பை திமோஃபி வாயிலாகப் பேசுகிறது.
சமூகத்தின் பார்வையிலும் அதன் தரத்திலும் டால்ஸ்டாய் உயர்வானவராக இருக்கலாம். ஆனால் வாழ்வின் தரத்தை வைத்து பார்க்கும் போது திமோஃபி போன்றவர்களே உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எஸ்.ரா எழுத்துகளில் பிரதிபலிக்கும் ரகசியங்களில் இதுவும் ஒன்று.
எழுத்தாளன் தன்னை எவ்வாறு தரிசித்துக் கொள்கிறானோ அதற்கான உருவத்தைத் தெரிந்தோ தெரியாமாலோ தனது படைப்புகள் வழியே உருவாக்கி கொள்வதுடன் அதற்கு உயிரையும் கொடுத்து விடுகிறான். அவனைச் சமூகம் முட்டாளாகவே பார்த்துச் சிரிக்கிறது. காரணம் அவன் சமூகத்தின் ரகசியத்தை அறிந்தவன். நாய்களைத் தூக்கிலிடும் மனிதர்கள் மத்தியில் நாய்களின் இறப்பிற்காக அழுகிறவன் கோமாளியாகவே கருதப்படுகிறான்.
“இளமைப் பருவம் சந்தோஷத்தை தேடித்தேடி அனுபவிக்கச் சொல்லும். ஆனால் எல்லாச் சந்தோஷமும் முழுமையானதில்லை என்பதே அது தரும் பாடம். நடுத்தர வயதிற்குள் நுழைந்துவிட்ட பிறகு சந்தோஷம் என்பது தோளில் அமரும் வண்ணத்துப்பூச்சியைப் போல அபூர்வமான நிகழ்வாகி விடுகிறது.”
ரஷ்ய பெருவெளிக்குள் ஒரு தமிழ் நாவல் மூலம் பயணிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் மட்டுமல்ல. தமிழ் இலக்கிய உலகின் அபூர்வமான நிகழ்வாகவும் புதிய திறப்பிற்கான முன்னேடுப்பாகவும் கருதுகிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
