தொலைந்து போனவர்களின் உலகம்

.

ஹருகி முரகாமியின் Kafka On The Shore நாவலில் காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப்போகிறான். அதுவும் அவனது பதினைந்தாவது பிறந்தநாள் அன்று. ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவது ஒரு நாளில் நடக்கும் நிகழ்வில்லை. அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு தாவரம் போல மெல்ல வளர்ந்து கொண்டவரும். முடிவில் ஒரு நாள் சாத்தியமாகும்.

அப்படித் தான் டமூரா ஓடிப்போவதற்குத் தயார் ஆகிறான். தந்தையிடமிருந்து விலகி ஓடுகிறான் என்பதாலே அவன் காஃப்காவின் மறு உருவம் போலக் கருதப்படுகிறான்.

அவன் வீட்டை விட்டு ஓடும் போது எதையெல்லாம் தன்னோடு எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று தீர்மானிக்க முடியாத குழப்பம் கொள்கிறான். அவனும் சகோதரியும் உள்ள புகைப்படத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். அப்பாவின் கைப்பேசியை தனக்காக எடுத்துக் கொள்கிறான். கொஞ்சம் உடைகளுடன் புறப்படுகிறான்.

வீட்டை விட்டு ஒடிய அவன் நீண்ட தூரம் பயணித்து டகமாட்சு செல்கிறான். அங்கே ஒரு விடுதி அறையில் தங்குகிறான். அடுத்த நாளை எப்படிக் கழிப்பது என்று திட்டம் எதுவும் அவனிடமில்லை. அவன் தனக்கான புகலிடமாக நூலகத்தைத் தேர்வு செய்கிறான். கொமூரா நினைவு நூலகம் என்ற பழமையான ஒரு நூலகத்திற்குச் சென்று ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் நூலை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறான்.

இந்த நாவலில் காஃப்கா டமூரா நூலகத்தில் கழிக்கும் நாட்களே சிறப்பான பகுதி. அவன் ஒவ்வொரு முறை நூலகத்திற்குச் செல்லும் போதும் புதிய அனுபவத்திற்கு உட்படுகிறான். கடந்தகாலத்தை மீட்கும் செயலாகவே அவனது வாசிப்பு நடைபெறுகிறது.

முதல்முறை அந்த நூலகத்திற்குச் சென்ற போது ஒரு இளம்பெண் அந்த நூலகத்தின் சிறப்புகளைச் சுற்றிக் காட்டுகிறாள். புகழ்பெற்ற கவிஞர்கள் வந்து தங்கிய இடமது. அவர்களின் கையெழுத்துப் பிரதிகள் கூடப் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. அந்த நூலகத்திற்கு வயதானவர்களே அதிகம் வந்து போகிறார்கள்.

நூலகம் என்பது காஃப்கா டமூரா போல உலகைத் தனியே சந்திக்க விரும்புகிறவர்களுக்கான இடம். அங்கே அவர்கள் தனக்கான பாதையைத் தேடுகிறார்கள். கண்டறிகிறார்கள்.

எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்குப் பதிலாக எதற்காகக் காஃப்கா டமூரா ஆயிரத்தோரு அரேபிய இரவுகளை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது போல ஏதாவது மாயம் நடந்துவிடும் என்றா. அல்லது முடிவில்லாத கதைகளின் வழியே தனக்காக விஷயத்தைக் கண்டறிய முடியும் என்று நம்புவதாலா. அல்லது அவனது அம்மாவின் நினைவு தான் அந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்ய வைக்கிறதா.

விசித்திரங்கள் நிறைந்த அரேபிய இரவுகளின் கதையில் ஒரு பெண் தான் கதை சொல்லுகிறாள். பயணத்தில் காஃப்கா டமூரா சகுரா என்ற ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். அவளும் கதை சொல்கிறாள். புராதன கதை சொல்லிக் காட்டும் உலகம் வேறு. வழியில் சந்தித்த இளம்பெண் காட்டும் உலகம் வேறு. ஆனால் இரண்டும் ஒரு புள்ளியில் ஒன்று சேருகின்றன

நூலகம் என்பதே கடந்தகாலத்தின் உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தைத் தேடி ஒருவன் அதற்குள் செல்லுகிறான் என்பது வியப்பளிக்கிறது.

பூனைகள் காணாமல் போவதும் மனிதன் காணாமல் போவதும் தனித்தனியே நடக்கின்றன. நகாடா ஒரு அற்புதமான கதாபாத்திரம். மனித மொழி மறந்து போன அவர் பூனைகளுடன் உரையாடுகிறார். தொலைந்து போன பூனைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். தீர்க்கதரிசியைப் போல நடந்து கொள்கிறார்.

ஒரு இடத்தில் பூனைகளுக்குப் பெயர் முக்கியமில்லை. ஒரு பெயரில்லாமல் பூனையால் வாழ்ந்துவிட முடியும் என்கிறது ஒரு பூனை. வீட்டை விட்டு ஓடும் காஃப்கா டமூராவும் தனது பெயரைப் பற்றி யோசிக்கிறான். தனது அடையாளத்தை இழப்பது பற்றிச் சிந்திக்கிறான்.

நமது அன்றாட உலகம் என்பது நான்கைந்து அடுக்குகள் கொண்டது. எந்த அடுக்கிற்கு நாம் செல்கிறோம் என்பதை வைத்து அனுபவம் மாறிவிடும். டமூரா அப்படியான அனுபவத்தினைத் தான் அடைகிறான்.

நூலகத்தில் ஒஷிமாவோடு அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அபாரமானவை. அதில் தான் அவனது ஆளுமை வெளிப்படுகிறது. முடிவில் காஃப்கா டமூரா நூலகத்தின் ஒரு அறையிலே தங்கிக் கொள்கிறான்.

தொலைந்து போவது என்பதை மையப்படிமமாக நாவல் கொண்டிருக்கிறது. மீட்சி என்பது முனைந்து மேற்கொள்ளவேண்டிய செயலாகிறது.

வீட்டை விட்டு வெளியேறிய பிறகு காஃப்கா டமூரா தனது வீட்டிற்கு ஒருமுறை போன் பண்ணிப் பார்க்கிறான். மணியோசை வீட்டில் ஒலிப்பது அவனுக்குச் சந்தோஷம் தருகிறது. அந்த மணியோசையின் வழியே வீடு முழுமையாக அவனுக்குள் நிரம்பி விடுகிறது

வரலாறு, நிகழ்காலம், நூலகம், இரண்டாம் உலகப்போரின் நினைவுகள், பூனைகளின் உலகம் என வேறுவேறு அடுக்குகளுக்குள் சென்று வரும் முரகாமியின் புனைவெழுத்து மாயத்தையும் யதார்த்தத்தையும் அழகாகப் பின்னிச் செல்கிறது

நினைவுகள் இல்லாமல் வாழுவது, நினைவைக் கதையாக்குவது. கதையின் வழியே ஒரு நிகழ்காலத்தை உருவாக்குவது. எது நிஜம் எனது விந்தை என அறியமுடியாதபடி ஒன்று கலந்த நிகழ்வுகள் என விசித்திரமான இழைகளைக் கொண்ட இந்த நாவல் ஒரு சிம்பொனி போல உருவாக்கப்பட்டிருக்கிறது.

880 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் காஃப்கா கடற்கரையில் எனச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர்வெளியீடு பதிப்பித்துள்ளார்கள். பல்வேறு நுண்ணடுக்குகள் கொண்ட இந்த நாவலை மொழியாக்கம் செய்வது சவாலானது. அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் கார்த்திகை பாண்டியன். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2022 23:04
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.