விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-3

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

அன்பிற்கினிய ஜெ,

இரண்டு நாள் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு விழா இவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்குடன், யாரின் கட்டுப்பாடின்றி வாசகர்களால் நடக்கிறது என்பது மிக அபூர்வமான ஒன்று. நீங்கள் கூட முதல் நாள் முழுதும் பின் வரிசையில் அமர்ந்து வாசகர்களாகிய எங்களை முன்னிருத்தியது அற்புதம்.

ஒரு சிறந்த கல்வி நிலையத்தில் பார்ப்பது போல் அனைவரது கைகளிலும் ஒரு நூலை கண்டது மிக அழகு. தேநீர் இடைவேளைகளில் சிறு சிறு கூட்டங்கள் எல்லா எழுத்தாளர்களையும் மொய்த்துக்கொண்டு அங்கும் ஒரு விவாதம் நடந்தது. செவிக்கு ஈயாத பொழுது வயி றுக்கும் தாராளமாகவே சுவைமிக்க உணவு வழங்கப்பட்டது.

அஜிதன்

நான் எழுத்துகள் வழியாக பார்த்த முகங்களாகிய காளிப்ரசாத், இரம்யா, விக்னேஷ் மற்றும் ஜாஜா, ஷாகுல் ஹமீது,ஆஸ்டின் சௌந்தர் போன்றோரை கண்டது இனிது .நான் இந்த விழாவிற்கு வந்த  காரணங்களில் ஒன்று தொலைபேசி வழியாக மட்டுமே தொடர்பில் இருந்த ஸ்டாலின் மற்றும் குக்கூ சிவராஜ் அவர்களை சந்திப்பது . வந்த முதல் நாளே முதல் ஆளாக என்னை ஆரத்தழுவி ஸ்டாலின் என்னை வரவேற்றார்.  பின்பு என்னை குக்கு முத்துவிடம் அறிமுகம் செய்தார். அவரும் என்னை கண்டதும் தழுவிக்கொண்டார். பின்பு அவர்களுடன் தன்னரம் புத்தக அங்காடியில் உதவிக்கு இருக்கும் பொழுது நூர்பு சிவகுருநாதன் அவர்களை சந்தித்தேன். எனக்கான பல கேள்விகள் அவரிடம் இருந்தது. காந்தியம் மற்றும் காந்திய பொருளாதாரம் குறித்து 2ம் நாள் அதிகாலை ஒரு தேநீர் விடுதியில் பேசிக்கொண்டோம்.

அமிர்தம் சூரியா

பிரியும் பொழுது மிக உயர்த்த இந்த மனிதர்கள் எனக்கு நண்பர்களாக மாறி இருந்தனர். ஒரு வாசகனாக எனக்கான இந்த விழா மிக முக்கியமானது. என்னை எங்கு நிருத்திக்கொள்வது என்னும் தெளிவு அடைந்தேன். இன்னும் வாசிப்பை வலிமை படுத்த உறுதி கொண்டேன். நான் திருச்செந்தாழையின் சில புனைவுகள், விக்ரமதியன் ஐயா அவர்களின் இரு தொகுப்பு மற்றும் கவிமணியின் ஆசிய ஜோதி (முக்கால் பாகம்) மட்டுமே படித்து விட்டு வந்திருந்தேன். திரு சோ.தருமன் மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை படிக்க வில்லை. மேலும் விழாவில் திரு போகன் சங்கர் மற்றும் லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை கண்டதும் என் வாசிப்பு இவ்வளவு சிறு வட்டத்திற்குள் உள்ளது என கண்டு கொண்டேன். இந்த விழா எவ்வளவு கோருகிறது என்பதை இனிமையுடன் உணர்துகொண்டேன். நிச்சயம் அடுத்த ஆண்டு நான் இவற்றை மறக்க மாட்டேன்.

இந்த இரு நாட்களும் என் வாழ்வின் மிக பெரிய நாட்கள். ஒன்றை நான் எப்பொழுதும் எண்ணுவதுண்டு.

இலக்கியமே என் மீட்சி…

அன்புடன்

அரவிந்தன்

இரஜை

 

பி.கு

கவிதை எனக்கு வாய்க்கப்படாத ஒன்று என நினைத்திருந்தேன். கூட்டத்தில் தேநீர் இடைவேளையில் நான் எழுதிய கவிதை. விக்கிரமாதித்தன் ஐயா அவர்களுக்கு நன்றி.

 

சுட்டெரிக்கும் வெயில்

கசியும் காற்றிற்க்கு ஏங்கி

நோடிப்போழுது திறக்கும்

பெருமங்காடி வாசர்கதவுகளில்

நுகர்வோர் தேடும் பூக்கார சிறுமி

சுனில் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.விஷ்ணுபுரம் விழா அறிவிப்பு வந்தது முதல் கலந்து கொள்வதற்கு ஆவலாக காத்திருந்தேன்,வெள்ளிக்கிழமை இரவு கோவைக்கு வந்து சேர்ந்தேன் அண்ணனின் நண்பர்கள் அறையில் தங்கி கொண்டேன்.

நான் 2018 -இல் விழாவில் கலந்து கொண்டாலும் அமர்வுகளில் பங்கு கொள்ளவில்லை அதனால் இதை என் முதல் விஷ்ணுபுரம் விழாவாகவே கருதுகிறேன்

நான் உங்களை பல தருணங்களில் சந்தித்திருந்தாலும் உரையாடியதில்லை,இம்முறையும் உரையாடவில்லை ஆனால் அறிமுகம் செய்து கொண்டேன்,என்னளவில் நான் அந்த தயக்கத்தை கடந்தது மகிழ்ச்சி

என் பெயரைக் கேட்டவுடன் எந்த ஊர் என்று கேட்டீர்கள் ,கல்லிடைக்குறிச்சி என்று சொன்னதும் இது இங்கே உள்ள பெயர் கிடையாது குமரி நெல்லை பகுதிகளில் உள்ள பெயர் என்று கூறினீர்கள்

விழா அறிவிப்பை தொடர்ந்து விருந்தினர் அறிவிப்பு, உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதனால் நான் ஒவ்வொரு நாளும் விருந்தினர்களை கணிக்க தொடங்கினேன் 8 விருந்தினர்களில் 4 விருந்தினர்களை கணித்தேன்

இலக்கிய அமர்வுகள் அனைத்துமே ஆசிரியர்களின் படைப்புலகத்துக்குள் நம்மை அழைத்து செல்பவையாக இருந்துது

ரம்யா

நான் மிகவும் ரசித்த அரங்குகள்;

1. கோகுல் பிரசாத்

அவர் சினிமாவை “Reverse process to literature” என்று கூறியது,இலக்கியம் சினிமாவாக மாறும் போது மூன்று இடங்களை தவிர்த்து (Intimate scenes, Landscape, Sports) மற்ற அனைத்து இடங்களிலும் இலக்கிய பிரதி தான் மேலோங்கி நிற்கும் என்று கூறியது, இலக்கியம் சினிமாவாக மாறும்போது அதன் மீது நாம் எந்த அளவு எதிர்பார்ப்பை வைக்க வேண்டும் என்ற தெளிவை தந்தது.

2 . ஜா. தீபா

இந்த அரங்கு தொடங்கும் முன்பே அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது, எப்படி உரையாடலை தொடங்குவது என்று யோசித்து மிகவும் பழைய பாணியில் நீங்களும் திருநெல்வேலியா என்று ஆரம்பித்து அவருடைய ஆவணப்படங்கள் குறித்தும் கதை to திரைக்கதை கட்டுரை தொகுப்பு குறித்தும் பேசினேன்.விஷ்ணுபுரம் விவாத அரங்குகள் நடக்கும் ஒழுங்கினை குறித்தும் இது ஏன் கோவையில் நடப்பது சிறந்தது என்றும் எடுத்துரைத்தார்.

3 . பா. திருச்செந்தாழை

இந்த அரங்கை ஈரோடு கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்,இந்த அரங்கை துவங்கும் போது கேள்வி கேட்க தயங்குபவர்கள் தங்கள் தயக்கத்தை விடுத்துகேள்விகளை கேட்கலாம் பாதி கேள்வி கேட்டால் கூட போதும் நான் அதை முழுமை படுத்தி அவரிடம் கேட்டுவிடுவேன் என்று ஊக்கப்படுத்தினார் அனால் முடிவில் ஒரு திருப்பம் வைத்து இந்த அரங்கில் மட்டும் கேள்வி கேட்பவர்களிடம் திருப்பி கேள்வி கேட்கப்படும் என்றார், சரிதான் என்று கைதட்ட ஆயுத்தமானேன்

இவருடைய கதைகளில் வரும் கவிதை தன்மையை பற்றியும் உரையாடல்கள் சிறப்பாக அமைவதை பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தன.

4 . சோ தர்மன்

இவருடைய எழுத்துக்களை படித்தது இல்லையே என்ற எண்ணமே எனக்கு எழவில்லை அவருடைய படைப்புகள் சார்ந்த கேள்விகளுக்கு அவர் எளிமையாக அளித்த பதில்கள் எனக்கு புரியும் வகையிலேயே அமைந்தன , அவருடைய படைப்புகளை விரைவில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் வகையில் அவருடைய அரங்கு அமைந்தது.

என்னுடைய நாவல் வெளி வருவதற்கு காலதாமதம் ஆவது என்னுடைய சோம்பேறித்தனத்தால் அல்ல நான் எழுதுவதற்கு  தேவையான அனைத்து தகவல்களையும் சேர்த்து வைத்து ஒரு நெசவாளனை போல நெசவு செய்வேன் என்றார், நேரடியாக எனக்கு காஞ்சிவரம் படம் தான் நினைவுக்கு வந்தது, தினமும் சிறிதளவு பட்டு நூலை திருடி வந்து முழுமையான அலங்கார நேர்த்தியுடன் ஒரு பட்டு தயாராக காலம் பிடிக்கவே செய்யும்.

விழாவில் திரையிடப்பட்ட ஆவணப்படம் என்னை மிகவும் கவர்ந்தது, குறிப்பாக பகவதியம்மாள் பேசுமிடம் அவ்வளவு அருமையாக இருந்தது.

விருது விழாவில் நீங்கள் குறிப்பிட்டது போல் நீங்களும் ஒரு பார்வையாளராகவே அரங்குகளில் கலந்து கொண்டீர்கள்.நண்பர்கள் அனைவரும் விழாவை சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்தினார்கள், குறிப்பாக இரண்டு நாட்களும் உணவு சிறப்பாக இருந்தது.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக அமைந்தது எழுத்தாளர்களும் வாசகர்கள் போலவே ஆர்வமாக இந்த விழாவில் கலந்து கொண்டது தான். நாஞ்சில் நாடன், சு வேணுகோபால் ,லட்சுமி மணிவண்ணன் ,சுஷில் குமார் ,செல்வேந்திரன் ,ஜாதீபா ஆகியவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு பேசியது அந்த சூழல் எனக்கு கொடுத்த தைரியமாகவே கருதுகிறேன். என் வயது ஒத்தவர்கள் எவ்வளவு அருமையாக கேள்வி கேட்கிறார்கள் என்பதை பார்க்கும்போது  நான் இன்னும் வாசகன் என்று சொல்லி கொள்வதற்கே வெகுதூரம் செல்லவேண்டி  இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

என் வாழ்வில் நிறைவடைந்த இரு நாட்களாக இது நீடிக்கும் அடுத்த விஷ்ணுபுர விழாவில் நான் கலந்துகொள்ளும் வரை.

அன்புடன்
பிச்சையா பாலசுப்ரமணியன்

https://www.facebook.com/vishnupuram.vattam/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.