குமரித்துறைவி வாசிப்பு

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/ குமரித்துறைவி மென்பதிப்பு வாங்க சில நாட்களுக்கு முன் “குமரித்துறைவி” குறுநாவல் வாசித்தேன். அபாரமான படைப்பு என்பதைத் தாண்டி வெகுநேரம் மனம் ஏதோ மீள முடியாத ஒன்றில் சிக்கியதைப் போல ஒரு உணர்வில் இருந்தேன். நீண்ட குறிப்பை எழுதலாம் என நினைத்து பின் சரி இன்னும் எத்தனை நாள் அதன் தாக்கம் இருக்கும் எனப் பார்த்தேன். காலை முதற்கொண்டு “தந்தை மூத்து மகன், மகன் மூத்து தந்தை” என்கிற வரி உள்ளே நிறைந்துகொண்டது. சம்பிரதாயங்கள், சடங்குகள் மூலமே ஒரு தொன்மம் நம்மிடையே வலுவாக இருக்கிறது. யாரோ எதற்கோ ஆரம்பிக்கிற ஆட்டம் சொல்லும் பொருளும் கொண்டு அது பயணிக்கும் தொலைவு பிரமிப்பைத் தருகிறது.புனைவின் அதி நுட்பங்களையும், சொற்களையும் ஒரு கணம் கூட வாசிப்பு மட்டுப்படாத அளவிற்கு எழுதியிருக்கிறார். தொன்மமும், வரலாறும் இணைந்து செல்லும் ஒரு மாயம். மகளை உருகி உருகி நேசித்த தந்தைகளை பார்த்திருக்கிறேன். என் தந்தையும் அதில் இருக்கிறார். மகளிடம் எந்த தகப்பனும் தன்னை மறைத்துக் கொள்வதில்லை. அவளின் பிரிவு என்பது அவர்களுக்கு தங்களின் இறப்பை பார்ப்பதைப் போன்றது. மகாராஜா ‘என் நாட்டின் வளங்கள் நம்மை விட்டு செல்கிறது’ என சொல்லும் இடத்தில் உள்ளம் உடைய இறுதி பகுதியை நோக்கிச் சென்றேன்.கடந்த ஆண்டு மலையாள எழுத்தாளர் ஓ.வி. விஜயனின் நினைவில்லம் சென்றிருந்தேன். என் பாட்டி வீட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் தஸ்ரக் என்கிற அத்தனை அழகான இடம் அது. அங்கிருந்து வேறு ஒரு வழியில் செல்லும் போது சிறு வனப்பகுதி ஒன்றிலிருந்து பாரதப்புழாவின் கிளை ஆறு ஒன்று வெளியே தெரிய வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஆற்றின் ஓரமாக தொட்டால் சிணுங்கி தளைந்திருந்த ஒரு சிறிய பாதையில் உள்ளே நுழைந்தேன். ரீங்கராத்தை தாண்டி வாகை, ஆலமரம், அரசமரம் , காட்டு வேங்கை என சிறகடித்து எழுந்த பறவைகளின் ஒலியில் வெளியே செல்ல மனம் படபடத்தது. நிசப்தம் ஒருவகையான மாயை. தடுமாற்றத்தில் மேலும் உள்ளே சென்றேன்.கருங்கற்களால் திட்டு அமைக்கப்பட்ட ஒரு அரசமரத்தின் அடியில் ஒரு சிலையை அமர்த்தியிருந்தார்கள். ஏதோ ஒரு குலத்தின் மூதாதை. இப்போது வரை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான் ஆனால் அந்த கணம் எதையும் சிந்திக்காமல் முதல் படியில் அமர்ந்து கண்களை மூடி பிராத்தனை செய்தேன். இதோ என் வாழ்க்கை ஒரு பிடிப்பும் இல்லாத ஒரு பலத்த காற்றுக்கு மாறுகிற திசையைப் போல. எனக்கு ஒரு பிடியைக் கொடு அல்லது அது எதுவெனக் காட்டு என இமையில் கண்ணீர் படற அமர்ந்திருந்தேன். அத்தனை நேரம் வாழ்வில் வேறு எந்த படைப்பின் முன்னாலும் இப்படி சிந்தனை தளர நின்ற நினைவில்லை. இருட்டத் தொடங்கியதும் எல்லாம் சரியாக நடந்தால் நான் மீண்டும் உன்னை காண வருகிறேன் எனக் கிளம்பிவிட்டேன்.பின்னாட்களில் உண்மையில் பயம்தான் கடவுளா இல்லை கலைமனம் கொண்டதால் அந்த வடிவத்தில் ஈர்க்கப்பட்டு அமர்ந்தேனா என பல குழப்பங்களுக்கு பின் யோசித்த போது ஒன்று புரியவந்தது. நாம் மூர்க்கத்தனமாக நம்புகிறவற்றில் நாம் இல்லை. அதை மீறி நம் இயல்பில் ஒதோ ஒன்றில் உறைந்திருக்கிறோம். அது அறிய வருகிற நேரம் உள்ளே இருக்கிற அறிவுஜீவி அதை நம்ப மறுப்பதால் உள்ளம் நடுக்கம் கொள்கிறது . ஒரு கணத்தால் அடித்துச் செல்லப்பட்டு நீ போடுகிற‌ வேசங்கள் அல்ல‌ நீ என‌ உணர்கிறோம்.‌ இந்த மாதிரி படைப்புகளை வாசிக்க அதை அனுபவிக்க ‘அந்த ‘ மன நிலைகளும் தர்க்கங்களும் உதவாது என்பதற்காக சொல்கிறேன்.இரண்டு நிகழ்வுகள் என் நினைவிற்கு வருகிறது . ஒன்று கோவில் பூசாரியான என் தாத்தா சன்னதி முன் அமர்ந்து ஏதோ வேண்டுதலை முன் வைத்தார். அது பூவின் நிறமாக மறுப்பு தெரிவிக்க உடனே இவர் எழுந்து “என்கிட்ட களிக்காதடி பின்ன ஞான் யாருன்னு காணிச்சு தாரேன் இட்டயா” என மலையாளம் கலந்த தமிழில் சில உரையாடலை நடத்திவிட்டு மீண்டும் கேட்டார். இந்த முறை அவருக்கு சாதகமாக இருந்தது அந்த பயம் இருக்கட்டும் என எழுந்துகொண்டார். நான் தூண் அருகே “conversation with maniratnam” என்பதைப் போல இதுவும் ”conversation with maariyamman” னாக இருக்கும் என ஒதுங்கிக் கொண்டேன்.பின்னொரு சமயத்தில் முகநூலில் ஒரு வீடியோ சத்தியமங்கலம் பகுதியில் இரவில் சென்று கொண்டிருக்கும் ஒரு வானகத்தை யானை ஒன்று இடை மறிக்கிறது உள்ளே இருந்து பீதி குரல்கள். ஒருவரின் குரல் மட்டும் தனியாக பணிந்து “பண்ணரியம்மா காப்பாத்து” என ஒலிக்கிறது. யானை மேலும் முன்னே வந்து அனைத்து வைக்கப் பட்டிருந்த விளக்குகளுடன் பின்னகரும் வாகனத்தை முட்டி மோதி சாலையில் இருந்து மண் பாதைக்கு நகர்த்துகிறது. இப்போது ஆட்கள் முகம் தெரியாத அளவிற்கு கைபேசி கீழே விழுந்துவிட்டது மீண்டும் அதே குரல் “அம்மா வேண்டாம் சொன்னா கேளு” என வேண்டுதலை மீறி கோபத்துடன் முன் வைக்கிறார். எளியவர்களின் தெய்வம் என்பது இதுதான். உண்மையில் பயத்தை, பணிவை மீறிய நேசம் அது. குமரித்துறைவி அதை சரியாக வெளிப்படுத்திய புனைவு.ஒரு சிலை மீண்டும் கிளம்பிய இடத்திற்கு செல்ல வேண்டும். அதில் எத்தனை விழுமியங்கள். கடவுள்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் மூலம் ஒழுகிச் சென்றவண்ணம் இருக்கிறார்கள்.ஒரு படைப்பு அதன் சாத்தியங்களை சரியாக அடையும்போது நிலை கொள்கிறது என்பதைத் தாண்டி வெறும் கதைதான் என நம்பமுடியவில்லை என்பதே இந்தப் படைப்பின் வெற்றி. இறை வழிபாடு இப்படிப்பட்ட புனைவாக வரும்போது அது மேலும் வேரூன்றிக் கொள்கிறது. மதுரை மீனாட்சியை இனி காண நேர்ந்தால் அது முற்றிலும் வேறு ஒரு கோணமாக இருக்கப் போகிறது. தனி நூலாக வரும் அளவிற்கு சிறந்த படைப்பு.சங்கர் சதா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.