கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள்.
வெஸ் ஆண்டர்சன் எழுதி, இயக்கியுள்ள ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் திரைப்படம் சினிமாவின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திப் புதியதொரு அனுபவத்தைத் தருகிறது. உண்மையில் சினிமாவின் அடுத்த கட்டம் இதுவென்பேன்.

ஆண்டர்சனின் திரைமொழி ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் சிறார் கதைப்புத்தகங்களை நினைவூட்டக்கூடியது. அவருடைய பெரும்பாலான காட்சிகள் விசித்திர கதைகளைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்ச்சியைத் தரக்கூடியது. நடிகர்களின் விசித்திரமான தோற்றம் மற்றும் வெளிப்பாடு, அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவது, துள்ளலான இசை, வியப்பூட்டும் அரங்க அமைப்புகள். இவை அவரது படங்களின் விசேச அம்சங்களாகும்.
கதை சொல்வதற்கான ஊடகமாக மட்டும் சினிமாவைக் காணாமல் சினிமாவின் வழியே எதையெல்லாம் சொல்ல முடியும், காட்டமுடியும். விவாதிக்க முடியும் என்பதையே வெஸ் ஆண்டர்சன் தனது படங்களின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
நான்லீனியர் முறையில் அமைந்த இவரது படங்கள் விசித்திரமும் அபத்தமும் நிரம்பிய ஒரு உலகை சித்தரிக்கக்கூடியவை. அது பிரம்மாண்டமான ஹோட்டலாக இருந்தாலும். டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் ரயிலாக இருந்தாலும் அதை ஒரு தனியுலகமாக மாற்றி அதனுள் நடைபெறும் விநோதமான நிகழ்வுகளை மிகுந்த கவித்துவத்துடன் வெஸ் ஆண்டர்சன் சித்தரிக்கக்கூடியவர். அனிமேஷன் படங்களை இயக்கியவர் என்பதால் இந்தப் படத்தின் ஒரு பகுதி அனிமேஷனாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்பது போன்ற நிகழ்வுகளையே இவர் காட்சிகளாக்குகிறார்.
வெஸ் ஆண்டர்சனின் திரைமொழி விசேசமானது. திரையில் அவர் உருவாக்கிக் காட்டும் விசித்திர நிகழ்வுகளும் பகடியான சித்தரிப்புகளும் தனித்துவம் கொண்டிருக்கின்றன.
இந்தப் படம் ஒரு நாளிதழைப் பற்றியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க்கர் இதழின் தீவிர ரசிகரான வெஸ் ஆண்டர்சன் அந்த இதழுக்குச் செலுத்திய அஞ்சலி போலவே படம் உள்ளது

ஒரு நாளிதழின் வடிவத்தை அப்படியே திரைவடிவமாகக் கொண்டிருப்பது திரைக்கதையின் புதுமை
பிரான்சின் கற்பனையான ஊரிலிருந்து வெளியாகி வரும் ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் ஆஃப் தி லிபர்ட்டி, கன்சாஸ் ஈவினிங் சன் என்ற இதழ் அதன் பத்திரிக்கையாளர்கள். ஆசிரியர் குழு அவர்களின் செயல்பாடுகளைப் படம் விவரிக்கிறது. படத்தின் இறுதியில் இந்தக் கதை எவரது எழுத்துகளின் பாதிப்பால் உருவானது என்பதற்கு நன்றி அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.
தி பிரெஞ்சு டிஸ்பாட் செய்தித்தாளின் ஆசிரியர் ஆர்தர் திடீரென மாரடைப்பால் இறந்து போகிறார். அவரது உயிலின் படி அந்த இதழ் அத்தோடு நிறுத்தப்படவுள்ளது. கடைசியாக ஒரு இதழை அவர்கள் தயாரிக்கிறார்கள். அதில் ஆர்தருக்கான இரங்கல் செய்தியோடு முன்பு வெளியான சில கட்டுரைகளைச் சேர்த்து வெளியிடுகிறார்கள். அந்தக் கட்டுரைகளின் திரைவடிவம் அத்தியாயமாக விரிகிறது.
சைக்கிளில் ஊர் சுற்றி அலைந்து தான் கண்டறிந்த மனிதர்களை நிகழ்வுகளை விவரிக்கும் பத்திரிக்கையாளரைப் பற்றியது முதல் பகுதி. இதில் நகரின் ஒவ்வொரு இடமும் கடந்தகாலத்தில் எப்படியிருந்தது. இன்று எப்படியுள்ளது. எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கற்பனை விவரிக்கப்படுகிறது.
நம்மைச் சுற்றிய வாழ்க்கையை அவதானிக்கும் விதமான இந்த முதற்பாதியில் இடமும் மனிதர்களும் மாறிக் கொண்டேயிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இரண்டாவது பகுதி சிறையிலிருக்கும் மோசஸ் ரோசென்தால் என்ற ஓவியரைப் பற்றியது. வான்கோ முதல் புகழ்பெற்ற பல்வேறு ஓவியர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட இந்தப் பகுதியே படத்தின் உச்சம். காட்சிக் கோணங்களும் சிறைச்சூழலில் ஓவியன் நடந்து கொள்ளும் முறையும். கலைக்கூடத்தில் நடைபெறும் விரிவுரையும் கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகிறவர்களின் ஏமாற்றுத்தனமும் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. மெல்ல மோசஸ் ஒரு பிம்பமாக மாற்றப்பட்டு அவர் கலக்கார ஓவியராக அடையாளப்படுத்தப்பட்டு அவரைப் பின்பற்றும் ஓவிய இயக்கம் உருவாவது அபாரம்.
முடிவில் மோசஸ் சிறைச்சுவரிலே சுவரோவியங்களை வரைகிறார். சிறைச்சுவரை எப்படிப் பாதுகாத்து வைப்பது என்ற பிரச்சனை எழுகிறது.
மூன்றாவது பகுதி மாணவர் போராட்டம் பற்றியது மாணவர்கள் போராட்டத்தைக் கேலி செய்யும் இந்தப் பகுதியில் அவர்கள் புரட்சியாக எதைக் கருதுகிறார்கள். அதற்காக எப்படிப் போராடுகிறார்கள் என்பதைப் பகடியாக விவரித்திருக்கிறார்கள். போராட்டக்குழுவின் அறிக்கையைத் தயாரிப்பதும் அதைத் திருத்தம் செய்து தருவதும் அரசியல் செயல்பாட்டின் பின்னுள்ள அபத்தமான செயல்களை வெளிப்படுத்துகிறது. வானொலி கோபுரத்தைப் பழுது நீக்கச் சென்ற ஜெஃபிரெல்லி கொல்லப்படுவதும் அவரது பிம்பம் புரட்சிகரச் செயல்பாட்டின் அடையாளமாக மாறுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.,

அடுத்தபகுதி போலீஸ் கமிஷனர் மற்றும் சமையல் கலைஞரின் உலகினை அறிமுகம் செய்கிறது. காவல்துறையினருக்கான சிறப்பு உணவு வகைகளைத் தயாரிக்கும் நெஸ்காபியர் என்ற சமையற்கலைஞர் கதாபாத்திரம் புதுமையானது. இந்தப் பகுதியில் ஆணையரின் மகன் கடத்தப்படுவதும் அவரை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளும் நெஸ்காபியர் விஷம் கலந்த உணவை கொடுத்துப் பையனை மீட்பதும் சாகசக்கதைகளைக் கேலி செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது
இறுதிப்பகுதி ஆர்தருக்கான அஞ்சலிக்குறிப்பை எழுதுவது. அவர்கள் ஒன்றுகூடி அந்த அஞ்சலிக்குறிப்பைத் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தோடு நேரடியாகத் தொடர்பில்லாத போதும் சிட்டிசன் கேன் திரைப்படம் ஏனோ நினைவில் வந்தபடியே இருந்தது. அதுவும் பத்திரிக்கை உலகின் செயல்பாட்டினையும் பத்திரிக்கை உரிமையாளரின் வாழ்க்கையைப் பற்றியதும் தான்.
இந்தப் படம் ஒரு நாளிதழின் வடிவம் அந்தப் பண்பாட்டின் அடையாளமாக எப்படி உருக்கொள்கிறது என்பதையே முதன்மைப்படுத்துகிறது. எல்லாவற்றையும் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் அசாதாரணமான விஷயம் போலப் பத்திரிக்கைகள் எழுதுகிறார்கள். உண்மைக்கும் செய்திகளுக்குமான இடைவெளி பெரியது. அவர்கள் தங்களுக்கேயுரித்தான விசித்திரமான கற்பனையுலகில் சஞ்சரிக்கிறார்கள். ஆளுமைகள் அரசியல் நுண்கலைகள் சினிமா க்ரைம் செய்திகள், உணவு விளையாட்டு எனப் பல்வேறு மசாலா தூவி செய்தியை மணக்கச் செய்கிறார்கள்.
இது போன்ற ஒரு படத்தின் மிகப்பெரிய சவால் அதைப் படமாக்குவது. அந்த வகையில் வெஸ் ஆண்டர்சன் பெரிய சாதனையைச் செய்திருக்கிறார் என்றே சொல்வேன். அரங்க அமைப்புகள். பல்வேறு சட்டகங்களைக் கொண்ட ஒளிப்பதிவு. வியப்பூட்டும் கேமிரா கோணங்கள். வரைகலை சாத்தியங்கள். அடுக்கடுக்காக விரியும் எடிட்டிங். மாறுபட்ட கதாபாத்திரங்கள் என இந்தப் படம் கதைசொல்லுதலின் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.
இப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வெல்லும் என்றே தோன்றுகிறது
**
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

