காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள்
ஜார்ஜ் கேட்லின்(George Catlin) ஓவியங்களில் காணப்படும் அமெரிக்கப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது

காட்டெருமைகளைத் துரத்தி வேட்டையாடும் ஓவியத்தில் அந்த எருமைகள் ஓடிவரும் வேகமும் நிலவெளியின் பிரம்மாண்டமும் வில்லேந்தியபடியே குதிரையில் வரும் இனக்குழுவின் ஆவேசமும் பரவசமளிக்கின்றன.
கூட்டமாகக் காட்டெருமைகள் பாய்ந்து வருவதை எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். உடலை வளைத்துத் திரும்பி வில்லேந்தும் வீரனின் தோற்றமும் எருதுகளின் ஆவேசப் பாய்ச்சலும் ஒவியத்தை உயிரோட்டமாக்குகின்றன.
வேகத்தை ஓவியத்தில் கொண்டு வருவது எளிதானதில்லை. அதிலும் அகன்ற நிலவெளியின் ஊடே குதிரை வீரர்கள் காற்றில் பறக்கும் தலையோடு ஆவேசமாக எருதுகளை வேட்டையாடும் தீவிரத்தை ஓவியமாக்குவது எளிதானதில்லை. கேட்லின் இதை மிகச்சிறப்பாக வரைந்திருக்கிறார்.
எருதைத் துரத்திச்செல்லும் வீரன் அமர்ந்துள்ள குதிரை தரையில் கால் பதியவில்லை. காற்றில் செல்லும் அதன் பாய்ச்சல் ஒருபுறம் என்றால் மறுபுறம் பாய்ந்தோடும் எருதுகளின் வேகம். அதன் கால்களின் சித்தரிப்பு. திமில்களின் பாய்ச்சல். இந்த இரண்டு விசைகளும் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் ஒசை ஒவியத்தில் இல்லை. ஆனால் ஓவியத்தை நுண்மையாகக் காணும் ஒருவரால் அந்த ஓசையைக் கேட்க முடியும்.

அமெரிந்தியர்களின் உருவச்சித்திரங்களைக் கேட்லின் மிக அழகாக வரைந்திருக்கிறார். வெண்மேகம் என்ற இனத்தலைவரின் உருவப்படத்தினைக் காணும் போது அவர் அமர்ந்துள்ள விதத்தில் வெளிப்படும் கம்பீரமும் சிகையில் சொருகப்பட்டுள்ள பறவை இறகுகளும் கரடி நகங்களின் மாலையும் உதட்டில் வெளிப்படும் மென்சிரிப்பும் தனித்த அழகினை கொண்டிருப்பதை உணர முடிகிறது, வெண்மேகத்தின் கண்களில் கனிவு வெளிப்படுகிறது.

செவ்விந்தியர்கள் என்றாலே நாகரீகமற்றவர்கள். ரத்தம் குடிப்பவர்கள். நரமாமிசம் உண்பவர்கள், காட்டுமிராண்டிகள் என்ற பொது பிம்பம் தவறானது என்பதைக் கேட்லின் தனது இந்த ஓவியத்தின் மூலம் புரிய வைத்திருக்கிறார்.
தனது ஓவியத்தில் வண்ணங்களை அவர் பயன்படுத்தும் விதமும் தோற்றத்தை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்யும் திறமையும், உணர்ச்சிகளைச் சரியாக வெளிகொண்டு வரும் லாவகமும் நிலக்காட்சியின் பிரம்மாண்டத்தையும் ஒளிபாயும் விதத்தைக் கையாளுவதிலும் தேர்ந்த கலைஞராக வெளிப்படுகிறார்.
ஜார்ஜ் கேட்லின் சுயமாக ஒவியம் வரையக் கற்றுக் கொண்டவர். அவரது தந்தை அவரை வழக்கறிஞராக்க விரும்பினார். ஆனால் கேட்லினுக்கு அதில் ஆர்வமில்லை. தந்தையின் கட்டாயத்தால் வழக்கறிஞர் ஆன போதும் அவரது ஈடுபாடு முழுவதும் கலையின் மீதே இருந்தது.
செவ்விந்தியர்களைப் பற்றிய நிறையக் கதைகளைச் சிறுவயதில் கேட்லின் கேட்டிருக்கிறார். 1805 ஆம் ஆண்டு ஒரு நாள், தென்மத்திய நியூயார்க்கில் உள்ள சுஸ்குஹன்னா ஆற்றங்கரையில் இருந்த காட்டில் சுற்றிக் கொண்டிருந்த கேட்லன் ஒரு செவ்விந்தியனை நேருக்கு நேராகச் சந்தித்தார். அப்போது அவரது வயது ஒன்பது.
தலையில் இறகுகள் அணிந்த விசித்திரமான தோற்றத்தைக் கண்டு பயந்து ஒட முயன்றபோது அந்த மனிதன் நட்போடு கையை உயர்த்தினான். அச் செய்கை சிறுவனை மிகவும் ஈர்த்தது. அந்த மனிதனை நெருங்கி தானும் கையை நீட்டினான். அவர்கள் நட்போடு கைகுலுக்கி கொண்டார்கள். அந்தப் பூர்வகுடிமனிதன் வெளிப்படுத்திய நட்பைச் சிறுவன் கேட்லினால் மறக்க முடியவில்லை. அந்த நினைவு தான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் பூர்வகுடிகள் மீது தனிக்கவனம் கொள்ள முதற்காரணமாக அமைந்தது
1830 ஆம் ஆண்டில் கவர்னர் வில்லியம் கிளார்க்குடன் மிசிசிப்பி ஆற்றுப் பகுதியிலுள்ள செவ்விந்தியர்களைச் சந்திக்கச் சென்ற கேட்லின் அவர்களின் தனித்துவமான வாழ்க்கைமுறையின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டார்.
1832 மற்றும் 1837 க்கு இடையில் பூர்வகுடிகளைத் தேடி படகு, குதிரை மற்றும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டார். பல்வேறு இனத்தலைவர்களையும் அவர்களின் வேட்டை, மற்றும் கொண்டாட்டஙகளையும் ஒவியங்களாக வரையத் துவங்கினார். இன்று அந்த ஓவியங்களே அம் மக்களின் ஆவணமாக அறியப்படுகிறது.

1830 மற்றும் 1836 க்கு இடையில் ஜார்ஜ் கேட்லின் பூர்வகுடிகளைத் தேடி ஐந்து முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் ஊடாக 150 விதமான இனக்குழுக்களை நேரில் கண்டு ஒவியம் வரைந்திருக்கிறார். இருபது லட்சம் பேருக்கும் மேலாக இருந்த பூர்வகுடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி அழிக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு
முறையான பாதைகள் இல்லாத அந்த நாட்களில் பூர்வகுடிகளைத் தேடி பயணம் செய்வது ஆபத்தான செயலாகக் கருதப்பட்டது. செவ்விந்தியர்களின் வளங்களை ஏமாற்றிக் கொள்ளையிட முயன்றவர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களைக் கேட்லின் அறிந்திருந்தார். ஆனால் அவரது பயணத்தில் கண்ட நிஜம் வேறுவிதமாக இருந்தது.
“எந்த ஒரு பூர்வகுடி இந்தியனும் என்னை ஏமாற்றவில்லை. தாக்கவில்லை. என்னிடமிருந்து ஒரு ஷில்லிங் மதிப்புள்ள பொருளைக் கூடத் திருடவில்லை. மாறாக அவர்கள் நிறையப் பரிசுகளை எனக்கு அளித்தார்கள். நல்ல உணவு கொடுத்து அன்போடு நடத்தினார்கள். காட்டெருமைகளை வேட்டையாடுவதைக் காண அழைத்துப் போனார்கள். அவர்களின் கூட்டுவழிபாடுகளை நேரில் கண்டிருக்கிறேன். அவர்கள் என்னைத் தங்களில் ஒருவனாகவே நடத்தினார்கள் என்கிறார் கேட்லின். அதை அவரது ஒவியங்களின் வழியே நம்மால் உணர முடிகிறது. . .
செவ்விந்தியர்களின் அன்பைப் பெற்ற கேட்லின் அவர்களில் ஒருவராகவே உருமாறினார். பூர்வகுடி தலைவர்களை ஓவியமாக வரைவதற்கு எளிதாக ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கேட்லினை தங்களின் தூதுவராக உணரத் துவங்கிய பிறகு ஓவியம் வரைய ஒத்துக் கொண்டார்கள்.
கொலம்பஸ் காலம் தொட்டு இந்தப் பூர்வகுடிகள் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்பட்டதே அமெரிக்க வரலாறு. தங்கள் வாழ்விடத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பூர்வகுடிகள் கடுமையாகப் போர் புரிந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் அவர்களின் எழுச்சி அடங்கவில்லை.
பல்வேறு தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு அவர்களை ஒடுக்கிய வெள்ளை அரசு முடிவில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நிலத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தின் போது தான் கேட்லின் பூர்வ குடிகளைச் சந்தித்துப் பழகியது நடந்தேறியது.
அவர் தொல்குடி மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தினார். கண்காட்சி வைப்பதுடன் உரைகளும் நிகழ்த்தினார்.
சிவப்பிந்தியர்கள் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது தவறான பழக்கம் என்கிறார்கள். அது உடலை பலவீனமாக்கி சாவை கொண்டுவந்துவிடும். ஆகவே மூக்கால் மட்டுமே சுவாசிக்க வேண்டும். உறக்கத்தில் கூட வாயால் சுவாசிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று கூறும் கேட்லின் பூர்வகுடிகளின் பண்பாடு பற்றி ஆராய்ந்து Shut Your Mouth என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
பூர்வகுடி மக்களில் ஒருவர் கூடக் கூன் விழுந்து காணப்படவில்லை. மனநிலை சரியில்லாதவர் என ஒருவரும் கிடையாது. எந்த இனக்குழுவிலும் கருக்கலைப்பு என்ற விஷயமே கிடையாது. பாம்பு கடித்தும் குதிரையிலிருந்து விழுந்தும் செத்துப் போனவர்களைத் தவிர நோயுற்று இறந்தவர்கள் மிகக்குறைவே.
பெரும்பாலும் பிறந்த சில நாட்களில் அல்லது ஒன்றிரண்டு வயதிற்குள் குழந்தைகள் சின்னம்மை கண்டு இறந்துபோவது நிறைய நடந்திருக்கிறது. பத்து வயதைத் தாண்டி விட்டால் பின்பு அவர்கள் நோயுற்று இறப்பதைக் காண முடியாது. முழு ஆரோக்கியத்துடன் தேர்ந்த உடல் வலுவுடன் அவர்கள் வாழுகிறார்கள்.
குழந்தைப் பேற்றின் போது ஒரு பெண் கூட இறந்து போனதாக வரலாறு கிடையாது. இது போலவே காது கேளாத ஒருவரைக் காண்பதும் அரிதே என்கிறார் கேட்லின்.
நீண்ட நடையும் ஆழ்ந்த தூக்கமுமே தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் எனும் பூர்வ குடிகள் சரியான தூக்கம் உடலை வலுப்படுத்தும் என்கிறார்கள். நல்ல தூக்கத்திற்குச் சீரான சுவாசம் அவசியம். அதைத் தாங்கள் பழக்கமாக்கி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இவரது தொடர் செயல்பாடுகளின் மூலம் தொல்குடிகளின் வாழ்க்கை முறையும் பண்பாடும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பூர்வ குடிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கவனம் பொதுவெளியில் உருவானது.
கேட்லின் ஓவியத்தில் பூர்வகுடி மக்களின் ஆடைகள், வேட்டையாடும் முறை, நம்பிக்கைகள். கொண்டாட்டங்கள். சடங்குகள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதன் தனித்துவ அழகும் மூர்க்கமான வெளிப்பாடும் அசாதாரணமாகத் தோற்றம் தருகின்றன.

பூர்குடிகள் ஒன்றுகூடி செய்யும் சடங்குகளைச் சித்தரிக்கும் ஓவியத்தில் வெளிப்படும் வண்ணமும் தோற்றங்களின் சேர்ந்தியக்கமும் அபாரமாக வரையப்பட்டுள்ளன. பெண்களையும் குழந்தைகளையும் கேட்லின் அதிகம் வரையவில்லை.
அவர் அதிகம் வரைந்திருப்பது ஆண்களை. அதுவும் வேட்டையாடுகிறவர்களை, இனக்குழு தலைவர்களைத் தான் வரைந்திருக்கிறார். 300 உருவப்படங்கள் மற்றும் 175 நிலக்காட்சி ஓவியங்கள் மற்றும் சடங்கு காட்சிகளைக் ஜார்ஜ் கேட்லின் வரைந்திருக்கிறார். மஞ்சளும் நீலமும் பச்சையும் அவருக்கு விருப்பமான வண்ணங்கள். உருவங்களைத் துல்லியமாகச் சித்தரிப்பதை விடவும் அதன் தீவிரமான இயக்கத்தைக் காட்சிப்படுத்தவே கேட்லின் முயலுகிறார்.
ஓவியம் வரைவதன் மூலம் தங்களின் ஆன்மாவை ஓவியத்தில் கைப்பற்றிவிடுகிறார் கேட்லின். ஆகவே தங்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சியோக்ஸ் பழங்குடிகள் பயந்தார்கள். தங்களின் பாதி உடலை மட்டுமே ஓவியம் வரைந்தால் மறுபாதி உடல் செயலற்று போய்விடும் என ஒரு இனக்குழு பயந்தார்கள்.

கேட்லின் பூர்வ குடி மக்களின் வீடுகள் மற்றும் கூடாரங்கள் பற்றி நிறையத் தகவல்களை ஓவியங்களுடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் களிமண்ணால் செய்யப்பட்ட இந்தக் குடில்கள் நீர்புகாவண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு மழையினையும் இந்தக் குடில்கள் தாங்கக் கூடியவை. அது போலவே அவர்கள் பனிக்காலத்தைக் கடந்து செல்ல அமைத்திருந்த கணப்பு அடுப்புகளையும் வெப்பம் சீராகப் பரவும் முறையினையும் வியந்து எழுதியிருக்கிறார்.
தன்னால் அந்தப் பழங்குடி மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் அவர்களின் பண்பாட்டினையும் தோற்றத்தையும் இயற்கை வளத்தையும் தனது ஓவியங்கள் மூலம் காப்பாற்ற முடியும். எதிர்காலத் தலைமுறைக்கு ஆவணமாக்கிவிட முடியும் என்று கேட்லின் நம்பியிருக்கிறார். அது இன்று நிஜமாகியிருக்கிறது
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

