ரகசியத்தின் பாதையில்
Souad என்ற எகிப்திய படத்தைப் பெண் இயக்குநரான அய்டன் அமீன் இயக்கியுள்ளார். 2021ல் வெளியான இப்படம் ஆஸ்கார் விருதுக்கான அயல்மொழி பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
பேஸ்புக், டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இளந்தலைமுறையினருக்கென ஒரு ரகசிய வாழ்க்கை உருவாகியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் காதல் கொள்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் முந்தைய தலைமுறை அறியாத விஷயம்.

டீனேஜர்கள் இணையவெளியில் எவருடன் நட்பாக இருக்கிறார்கள். யாருடன் சாட் செய்கிறார்கள். எந்த வீடியோவை, புகைப்படத்தை ரசிக்கிறார்கள். எதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்ன பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார்கள். என்பதைக் குடும்பத்தினர் அறிந்து கொள்ள முடியாது. பாஸ்வேர்டுகளின் உலகை பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாது
வீடும் சமூகமும் அனுமதிக்க மறுத்த விஷயங்கள் யாவும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. மாயச்சுழல் போல ஒரு விசை அவர்களை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. இந்தச் சுழலுக்குள் சிக்கி மீளமுடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அது போன்ற டீனேஜர்களில் ஒருத்தியான சோகேத்தின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. டீனேஜ் பெண்களின் அக உலகை இவ்வளவு நெருக்கமாக இதுவரை திரையில் யாரும் சித்தரித்ததில்லை. மிக உண்மையாக, நுட்பமாக உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
டீனேஜர்களை வழிநடத்துவது இணையவெளியில் பகிரப்படும் இசை, சினிமா, விளையாட்டு, விளம்பரங்களே. அவர்கள் தன்னை வேறு ஒருவராக அதில் காட்டிக் கொள்கிறார்கள். பேஸ்புக்கில் உள்ள புனைபெயர்களை வாசித்துப் பாருங்கள். அந்த விநோதம் புரியும். தன்னை தானே ரசித்துக் கொள்ளும் இவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்பும் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக் கொண்டேயிருக்க கூடியது.

பெருநகரம் துவங்கி சிறு கிராமம் வரை செல்பி எடுப்பது இயல்பாகிவிட்டது. பேஸ்புக்கில் நேரம் செலவிடுவது வாடிக்கையாகிவிட்டது. உலகெங்கும் இது தான் சூழல். இந்த மாயவெளி பெண்களுக்கு புதிய சுதந்திரத்தை அளித்த அதே நேரம் அவர்களின் மீதான வன்முறைக்கருவியாகவும் மாறிவிட்டிருக்கிறது.
இப்படம் அந்த உலகை தான் பேசுகிறது. பதினாறு வயது பெண் தன் வயதை மறைத்து ஏன் யாரோ முகமறியாத ஒருவனின் நட்பை நாடுகிறாள். அவனுக்காக ஏங்குகிறாள், தற்கொலை செய்து கொள்கிறாள என்ற கேள்வியை எழுப்புகிறது
சமூக ஊடக செயல்பாட்டில் எது சரி எது தவறு என்ற நிலைப்பாட்டினை படம் எடுக்கவில்லை. மாறாக எப்படி இது போன்ற பிம்பவெளியால் இளம்பெண்கள். காவு வாங்கப்படுகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
இளைஞனான அகமது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் பேஸ்புக்கில் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டும் விதவிதமான ஸ்டோரி போட்டு லைக்குகளை அள்ளிக் கொண்டும் காதல் நாயகனாக வலம் வருகிறான். அவன் அலெக்சாண்டிரியாவில் வசிக்கிறான். செல்போன் தான் அவனது உலகம். உறக்கத்திலும் அவன் கைகள் தானே போனை எடுத்துப் பேசுகின்றன. அவனுக்கு ஏராளமான பெண் தோழிகள். அவர்களுடன் அரட்டை அடிப்பதே வாழ்க்கையென இருக்கிறான்.
ஜகாசிக் என்ற சிற்றூரில் வசிக்கும் மருத்துவ மாணவியும் தீவிர மதநம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவளுமான சோகேத் பேஸ்புக் மூலம் அகமதுவின் நட்பைப் பெறுகிறாள். அவனது வீடியோக்களை ரசித்துப் பாராட்டுகிறாள். இந்த நட்பு மெல்லக் காதலாக மாறுகிறது.
அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கனவு காணுகிறாள். ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதைப் பற்றி அவளுடனே பேசுகிறான். காதலியின் படங்களைப் பகிர்ந்து கொள்கிறான். அவனை எப்படியாவது தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அவனுடன் ஃபோன் செக்ஸில் கூட ஈடுபடுகிறாள். அப்படியும் நெருக்கமாகயில்லை. இதனால் ஆத்திரமாகி அவனுடன் சண்டை போடுகிறாள். தனது ரகசிய காதலை குடும்பத்தினர் அறிந்துவிடாமல் ஒளித்துக் கொள்கிறாள். அவளது தோழிகளுக்குக் கூட உண்மை தெரியக்கூடாது என நினைக்கிறாள்.
ஒரு நாள் மூன்று இளம்பெண்களும் வீட்டில் ஒன்றுகூடி ரகசிய ஆசைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது சோகேத் செக்ஸியாகப் போட்டோ எடுத்துப் பேஸ்புக்கில் போஸ்ட் போட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதற்காக அவளும் தங்கையும் ஸ்டைலாக ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துப் பகிருகிறார்கள்.
மதக்கட்டுபாடும் வீட்டின் அதிகாரமும் அவளுக்கு மூச்சுத் திணறச்செய்கின்றன. இதிலிருந்து விடுபட அவள் இணையவெளியில் சுதந்திரமாகச் சஞ்சரிக்கிறாள். டிஜிட்டல் மீடியா அவளது கனவுலகமாகிறது

மனக்குழப்பம் அதிகமான ஒரு நாளில் அகமது தன்னை நிராகரிப்பதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் சோகேத் தற்கொலை செய்துவிடுகிறாள். இந்த அதிர்ச்சியைக் குடும்பத்தினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அம்மா அழுது கரைகிறாள். அவளது தங்கை ரபாப் அக்காவின் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து அவளது ரகசிய வாழ்க்கையை அறிந்து கொள்கிறாள்.
அக்கா ரகசியமாகக் காதலித்த அகமதுவைக் காண அலெக்சாண்ட்ரியா புறப்படுகிறாள். அங்கே அவனுடன் ஒருநாளைச் செலவிடுகிறாள். இந்த நாளில் தன்னையே அவள் அக்காவாக உணருகிறாள். படத்தின் மிக அழகான பகுதியது
அவர்கள் ஒன்றாக ஷாப்பிங் மாலில் சுற்றுவதும். கடற்கரைப் பகுதியில் நடப்பதும், உணவகத்தில் சாப்பிடுவது. வானளாவிய கட்டிடங்கள் கொண்ட நகரத்தின் வழியாகக் காரில் பயணம் செய்வதும், பாலத்தில் நின்று வேண்டுதல் செய்வதும். முத்தம் கேட்பதும் என இழப்பின் துயரத்தை தாண்டி அவர்கள் இளம் காதலர் போலவே நடந்து கொள்கிறார்கள்.

அக்கா தன் வாழ்நாளில் சந்திக்காத அகமதுவைத் தங்கை சந்திக்கிறாள் என்பது அழகான முடிச்சு. இந்தச் சந்திப்பின் போது அகமதுவிடம் குற்றவுணர்வே இல்லை. அவனுக்குத் தெரிந்த பல பெண்களில் சோகேத்தும் ஒருத்தி. அவளது மரணத்திற்காகப் பிரார்த்தனை செய்யும் காட்சியில் கூட அவன் உண்மையாகப் பிரார்த்தனை செய்வதில்லை.
மார்க்கட்டுக்குப் போகும் போது கூடச் சோகேத்தின் அம்மா அவளது கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறாள். அந்த அளவு சோகேத் குடும்பத்திற்குள்ளாகவே வளருகிறாள். ஆனால் அதே சோகேத் பேருந்தில் உடன் வரும் பெண்ணிடம் தன்னைப் பற்றிக் கற்பனையாக ஏதோ சொல்கிறாள். தனது அடையாளத்தை வேறாகக் காட்டிக் கொள்ள முயலுகிறாள். இந்தக் குழப்பம் தான் அவளது பிரச்சனை.
சோகேத்தின் படுக்கையறையில் மூன்று பெண்களும் சேர்ந்து உரையாடுவதும் அவர்களின் அத்தை போல நடித்துக் காட்டுவதும் சிறப்பான காட்சி. சோகேத் கையிலுள்ள, ஃபோன் கேமரா என்பது அவளது அகத்தைக் காட்டும் கண்ணாடி போலாகிறது. அவள் கேமிராவுடன் பேசுகிறாள். கேமிராவிற்குத் தனது உடலைக் காட்டுகிறாள். கேமிரா முன்பு அழுகிறாள். செல்போன் கேமிரா என்பது வெறும் கருவியில்லை. அது ஒரு சாளரம். ரகசிய கதவு.

கதாபாத்திரங்களுடன் ஒருவராகக் கேமிரா கூடவே பயணிக்கிறது. நகரை அது காட்டும் அழகும். சமூக ஊடகவெளியை பிரதிபலிக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. சிறந்த இசையும் படத்தொகுப்பும் பாராட்டிற்குரியது.
இளமைப் பருவத்தின் கொந்தளிப்புகளையும் சமூக ஊடகங்களில் அது வெளிப்படும் விதத்தையும் அசலாகப் பதிவு செய்துள்ளதில் இப்படம் முக்கியமானதாகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

