தண்ணீரின் கதவுகள்
நேற்று கவிஞர் தேவதச்சனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இயற்கையை ஏன் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் வருகிறது. உரைநடைக்கு அதில் ஏன் அவ்வளவு பெரிய கவனமில்லை என்ற பேச்சு வந்தது. அதைப்பற்றி உரையாடினோம்

கவிதையைப் பற்றிய உரையாடல்கள் என்பது பாராட்டு அல்லது நிராகரிப்பு என்ற இருநிலைகளுக்குள் இன்று சுருங்கிப் போயிருக்கிறது. ஆனால் கவிதைகளின் போக்கு மற்றும் அதன் இயல்புகள். இன்று உருவாகி வரும் மாற்றங்கள். அது மொழியில் வெளிப்படும் விதம். புதிய காட்சிப்படிமங்கள், கவிஞனின் குரல் என்று பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முன்னறியாத ஒரு குகையினுள் பிரவேசிப்பது போலவே கவிதையினுள் பிரவேசித்து வழிகளைக் கண்டறிந்து அபூர்வ சுவரோவியங்களின் அழகில் மயங்கி புராதனமும் தற்காலமும் ஒருங்கே கூடியிருக்கும் அதன் இயல்பை உணர்ந்து இருட்டையும் வெளிச்சத்தையும் அறிய வேண்டியிருக்கிறது
ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி. அதன் முதல் சொல்வழியாகவா, அல்லது முதல் வரியின் வழியாகவா. உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது. நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை இழந்துவிடுகிறான். இடவலம் ஒன்று போலாகவிட்டதை உணருகிறான். கவிதையில் பிரவேசிக்கும் ஒருவன் கவிதையிலிருந்து அனுபவத்தைத் திரட்டிப் போவது ஒருவகை. இன்னொரு வகை எதையும் கவிதையிலிருந்து எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீரோடு கொள்ளும் உறவைப் போல நனைந்தும் நனையாமலும் உறவு கொள்வதும் கவிதை வாசிப்பே. கவிதைக்குள் நுழையும் ஒருவன் கவிதையின் வழியே சில சித்திரங்களை, சில குரல்களை, சில அனுபவங்களை, சில புதிர்களை, சில புரியாத விஷயங்களை அறிந்து கொள்கிறான். சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களைப் போல வேகமாக முடிவு வரை நோக்கிச் சறுக்கிப் போகிறான். உண்மையில் முதல் வரியும் முடிவு வரியும் மாயக்கதவுகள். கவிதையின் கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம். ஆனால் கவிதையிலிருந்து வெளியேற முடியாது.
கைகழுவுவது போலக் கவிதையிலிருந்து
வெளியேறுவது சுபலமில்லை
என்றொரு வரியை கேப்ரியல் டிமெலோவின் கவிதையில் வாசித்திருக்கிறேன்.
கவிதையினுள் உள்ள மரங்கள் மெதுவாக அசைகின்றன. நிலவு நீண்ட நேரம் ஒளிர்கிறது. மலர்களின் நிறம் மெருகேறி ஒளிர்கிறது. மேஜிக் செய்பவன் தொப்பியிலிருந்து முயலை எடுக்கும் போது முயல் ஒரு விலங்கில்லை. அது ஒரு மலரைப் போலவே தோன்றுகிறது. அப்படித் தான் கவிதையில் அன்றாட வாழ்க்கை புதியதாக மாறிவிடுகிறது.
இயற்கையை வரையறை செய்வது கவிதையின் முக்கியமான பணிகளில் ஒன்றாக உள்ளது. வியந்து போற்றுதல். அல்லது உணர்ச்சிகளை ஏற்றிச் சொல்லுதல். புதிர் தன்மை அல்லது விநோதம் கொண்டதாக அணுகுவது. இயற்கையிடம் தஞ்சம் அடைதல் அல்லது இயற்கை சக்திகளை ஆராதனை செய்தல் என்று பல்வேறு நிலைகளில் கவிதை இயற்கையைப் பற்றிப் பேசுகிறது. மெய்தேடல் கொண்ட கவிகளும் இயற்கையை விலக்கிச் செல்வதில்லை.
ரூமியின் கவிதை ஒன்றில் மாணிக்கம் தான் வேண்டாம் என்று நினைத்தாலும் சூரிய வெளிச்சத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றொரு வரி வருகிறது.

உலகின் விலைமதிப்பில்லாத மாணிக்கத்தினுள் ஒளி எளிதாக நுழைகிறது. ஒளியால் மாணிக்கம் பிரகாசமடைகிறது. உலகம் இந்த வெளிச்சத்தைப் புகழுகிறது. ஆனால் உண்மையில் இதை மாணிக்கம் விரும்புகிறதா என்று யாருக்கும் தெரியாது. மாணிக்கத்தை ஒளி அபூர்வமாக நினைப்பதில்லை. அது கடந்து செல்லும் பாதையில் மாணிக்கம் ஒரு பொருள் மட்டுமே. மாணிக்கமும் சூரிய ஒளிக்காகக் காத்துகிடப்பதில்லை. ஆனால் இரண்டும் சந்திக்கும் போது அபூர்வ வெளிச்சம் பிறக்கிறது.
உலகம் அறிந்தவற்றைக் கவிஞன் மாற்றிவிடுகிறான். அவன் இயற்கையை ஆராய முனைவதன் வழியே தன்னைத் தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். நவீன கவிதையில் இயற்கையும் தானும் வேறில்லை எனக் கவிஞன் அறிந்து கொண்டிருக்கிறான்.
இயற்கையை ஒரு நுண்ணோக்கி வழியாகக் காணுவ்து போன்ற அனுபவத்தை வேர்ட்ஸ்வெர்த் தனது கவிதைகளில் உருவாக்கினார். அதன்பிறகு உலகம் திடீரென அதிகப் பசுமையோடு அதிக அழகோடு தோன்றத்துவங்கியது. சங்க கவிதைகளையோ, அல்லது செவ்வியல் சீனக்கவிதைகளையோ வாசிக்கும் போது உலகம் மிருதுவாக, நிசப்தமாக, நெருக்கடிகள் எதுவுமற்று விடிகாலைக் காட்சிகள் போலத் தோன்றுகிறது. உண்மை அப்படியாக இருந்திருக்க முடியாது. ஆனால் புல்லாங்குழலில் நுழையும் காற்று இசையாகிவிடுவது போலக் கவிதையில் நுழையும் அன்றாடக் காட்சிகள் விநோத தோற்றம் கொண்டுவிடுகின்றன.
நிலக்காட்சி ஓவியங்களைக் காணுவது போலவே நான் செவ்வியல் கவிதைகளை வாசிக்கிறேன். இரண்டிலும் அரூபமான இயக்கமுள்ளது. தொலைவும் அண்மையும் ஒரே நேரத்தில் கண்வசமாகின்றன.
கதையை எழுதுகிறவன் இயற்கையைத் தேநீர் கோப்பையைப் போலவே பயன்படுத்துகிறான். அழகான கோப்பை தேவை தான். ஆனால் முக்கியமானது தேநீர் தான். கோப்பையின் வழியே தேநீர் தான் ருசிக்கப்படுகிறது. வாழ்க்கை அனுபவங்களை ஏந்திக் கொள்ளும் கலன் போலவே உரைநடையில் இயற்கை கையாளப்படுகிறது. காரணம் இயற்கையைத் தனித்து அறிய வேண்டியது தனது வேலையில்லை என்று கதையாசிரியன் நினைக்கிறான். அபூர்வமாக ஒரு சில படைப்பாளிகள் இயற்கையைப் பற்றி ஆழ்ந்த புரிதலை, புதிரை, கண்டுணர்தலை தனது கதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார்கள்.
மோபிடிக் நாவலை வாசிக்கும் எவரும் கடலை ஆராதிப்பதில்லை. மாறாகக் கேப்டன் ஆகாப்பின் மூர்ககத்தை மோபிடிக்கின் மூர்க்கத்துடன் இணைந்து புரிந்து கொள்கிறார்கள். இது போலத் தான் ஜாக் லண்டனின் கதைகளும். அதில் உறைபனியில் சிக்கி பசியால் அவதிப்படும் மனிதனே சித்தரிக்கபடுகிறான். உறை பனியின் மென்மையோ அழகோ வியந்து பேசப்படுவதில்லை. ஜப்பானியக் கவிஞர்களில் பலர் பனிக்காலத்தைக் கொண்டாடி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். ஜென் கவிதைகளில் வரும் பனி என்பது குறிப்பிட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு. சில நேரங்களில் பனி பிரிவைக் குறிக்கிறது. மரணத்தை அடையாளப்படுத்துகிறது. தற்காலிக சந்தோஷத்தைப் பேசுவதாக மாறுகிறது.
இயற்கையை இன்றைய கவிஞன் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறான் என்பது முக்கியமானது. தேவதச்சனின் சில வரிகள் இயற்கையைப் பற்றிய புதிய புரிதலை உருவாக்குகின்றன
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
••
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
••
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்
ஒரு சொட்டு தண்ணீருக்குள் ஆயிரம் சொட்டுகளைக் காண முடிவது தான் கவிஞனின் தனித்துவம். ஒரு கவிதையின் கடைசிவரியாக உள்ள இதிலிருந்து எப்படி ஒரு கவிதை வாசகன் வெளியேறிப் போக முடியும். உண்மையில் அவன் இந்த வரியின் வழியாகத் தண்ணீருக்குள் பிரவேசிக்கிறான். தண்ணீரின் கதவுகளைத் திறந்து உள்ளே செல்கிறான். ஓராயிரம் நீர்த்துளிகள் அவனை வரவேற்கக் காத்திருப்பதைக் காணுகிறான். ஒவ்வொரு துளியும் இன்னொரு கதவு. முடிவில்லாத துளிகள். முடிவில்லாத பயணம். கவிதை ஒரு போதும் முடிவதேயில்லை
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
