லியுடா தேடும் உண்மை
வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு பெற்றுள்ள Dear Comrades என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

சமகால ரஷ்யப் படங்கள் ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் விதமாகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேசச் சந்தையைக் குறித்து வைத்து உருவாக்கப்படும் இந்தப் படங்கள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சிறந்த கலைப்படங்களின் உருவாக்கமும் விநியோகமும் குறைந்து வருகிறது.
ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கி போன்ற சினிமா மேதைகள் உருவாக்கிய புதிய அழகியலை இளம் இயக்குநர்களில் ஒரிருவரே முன்னெடுக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது நிறைய இடங்களில் தார்க்கோவஸ்கியின் பாதிப்பினை உணர முடிந்தது.
1962ல் கதை நடக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் தெற்கிலுள்ள மாநகரமான நோவோச்செர்காஸ்க்கில் லியுடா வசிக்கிறாள்., நடுத்தர வயது பெண்ணான இவள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். தீவிர விசுவாசி. நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறாள்.

அரசின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக நாடெங்கும் விலைவாசி அதிகமாகிறது உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு உருவாகிறது. இந்தச் சூழலில் ஒரு நாள் காலை அவள் ரேஷனில் வழங்கப்படும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்காகச் செல்கிறாள். அந்தக் கடையின் முன்னே நிற்கும் மக்கள் கூட்டம் தள்ளுமுள்ளு செய்கிறது. கடையின் பின்பக்கம் வழியே சென்று தெரிந்த பெண் மூலம் தனக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்கிறாள்.
இந்த முதற்காட்சியிலே வேண்டியவர்களுக்கு மட்டுமே எல்லாமும் கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.. லியுடாவின் மகள் அரசு போராட்டக்காரர்களுடன் நெருக்கமாக இருக்கிறாள். . அவள் அம்மாவின் அறிவுரைகளைக் கேட்பதில்லை.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடக்கும் கூட்டத்தில் உணவுப்பொருட்கள் விலையேற்றம் இப்படியே நீடித்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். ஆனால் அதிகாரிகளோ இது அமெரிக்காவின் சதி. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள்

இந்த நிலையில் நோவோச்செர்காஸ்க் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் ஆலையில் வேலை நிறுத்தம் ஏற்படுகிறது. தொழிற்சாலை அலுவலக்தை மக்கள் முற்றுகையிடுகிறார்கள். லியுடா உள்ளிட்ட அதிகாரிகள் தப்பிப் போக வழியில்லை. ஆகவே ராணுவம் அழைக்கப்படுகிறது. ராணுவ அதிகாரியோ மக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என்கிறார்.
ஆனால் சூழ்நிலை கைமீறிப்போகவே துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்டது என லியுடா உணருகிறாள். ஆனால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் எண்பது பேர் காயமடைகிறார்கள். 26 பேர் கொல்லப்படுகிறார்கள்
இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல அதிகாரிகள் உடனடியாகச் சாட்சியங்களை அழிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கிறார்கள். இறந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்கள். இரவோடு இரவாகத் துப்பாக்கிச் சூடு நடந்த சதுக்கத்தினைப் புதிய தார் போட்டு மறைக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின் சாட்சியாக உள்ளவர்களை மிரட்டி வாயை அடைக்கிறார்கள்
அப்படி உளவுத்துறையைச் சேர்ந்த விக்டர் லியுடா வீட்டிற்கு வந்து அவளை எச்சரிக்கை செய்கிறான். அத்துடன் அவளது மகளைப் பற்றி விசாரணை செய்கிறான். வீட்டினை சோதனையிடுகிறான். இந்தத் துப்பாக்கி சூட்டிற்குப்பிறகுத் தன் மகளைக் காணவில்லை என்று லியுடா கவலையோடு சொல்கிறாள்.

ஒருவேளை தன் மகள் ஸ்வெட்காவும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பாளா என அறிந்து கொள்ளப் பிணவறைக்கு ஓடுகிறாள். அங்கே அப்படியான உடல் இல்லை. உண்மையைத் தேடும் அவளது பயணம் அன்று தான் துவங்குகிறது
லோகினோவுடன் இணைந்து லியுடா கண்டறிந்த உண்மைகள் கசப்பானவை. அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுவரை அவள் வைத்திருந்த நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப் போகின்றன. அதிகாரத்தின் உண்மையான முகத்தை அறிந்து கொள்கிறாள்
ஆரம்பத்தில் லியுடா கட்சி கூட்டத்தில் ஆதரவாகப் பேசுவதும். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நடக்கும் கூட்டத்தில் பொய் பேசமுடியாமல் கழிப்பறையில் நின்று கதறுவதும். மூடப்பட்ட நகரவாசலைக் கடந்து போக அனுமதி மறுக்கப்பட்ட போது நிர்கதியாக உணருவதும். கல்லறைத் தோட்டத்தில் நின்று துயரத்தை வெளிப்படுத்துவதும் மிகச் சிறந்த காட்சிகள்.
கறுப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். உண்மையைத் தேடும் பயணம் என்பதால் கறுப்பு வெள்ளையைத் தேர்வு செய்தேன் என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரி கோன்சலோவ்ஸ்கி

படத்தின் ஒன்றிரண்டு காட்சியிலே மட்டுமே தோன்றும் லியுடா தந்தை சிகரெட் பிடிப்பதும் வீட்டைவிட்டு வெளியேறாமல் ஒடுங்கியிருப்பதுமாக வாழுகிறார். துப்பாக்கிச்சூடு பற்றி அறிந்தவுடன் அவர் ஒரு பழைய கடிதம் ஒன்றை அவளிடம் படிக்கக் கொடுக்கிறார். அதில் கசாக்கியரான அவரது மாமாவும் இப்படியான ஒரு எதிர்ப்புப் போராட்டத்தில் தான் கொல்லப்பட்டார் என்பதை லியுடா அறிந்து கொள்கிறாள்.
லியுடாவின் தந்தையிடம் நடந்த நிகழ்விற்குச் சாட்சியமாக ஒரு கடிதம் உள்ளது. ஆனால் லியுடாவிடம் அது கூட இல்லை. இன்னொரு காட்சியில் காரில் அவளுடன் வரும் கல்லறை காவலாளி வாயைத் திறக்க மறுக்கிறான். எதுவும் நடக்கவில்லை. தனக்கு எதுவும் தெரியாது என்று திரும்பத் திரும்பச் சொல்கிறான். உண்மையைப் புதைத்துக் கொண்டு மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதை லியுடா நன்றாக உணர்ந்து கொள்கிறாள்.
கம்யூனிச எதிர்ப்பிற்காகவே உருவாக்கப்பட்ட படம் என்று இதைப்பற்றி ஒரு கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் நடந்த உண்மைகளை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதில் மறைக்க எதுவுமில்லை என்று ரஷ்ய இதழ்களே பாராட்டும் தெரிவித்திருக்கின்றன.

லியுடாவாக யூலியா வைசோட்ஸ்காயா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். Paweł Pawlikowski வின் Cold War படத்தினை நினைவுபடுத்தும் ஆண்ட்ரி நைடெனோவ்வின் அபாரமான ஒளிப்பதிவு.
We can express our feelings regarding the world around us either by poetic or by descriptive means. I prefer to express myself metaphorically. என்று தார்க்கோவஸ்கி கூறுகிறார். இந்தப் படமும் அப்படியான ஒரு முயற்சியைத் தான் மேற்கொண்டிருக்கிறது.
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
