இரண்டு மோனாலிசா
லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனா லிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது. இந்த ஓவியம் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன்

The Secret Of The Mona Lisa என்ற பிபிசியின் ஆவணப்படம் ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது
மோனாலிசாவின் நகல்களை நாம் பார்த்திருப்போம். புகைப்படமாகவும் காலண்டர் ஓவியமாகவும் பார்த்திருப்போம். பாரிஸ் நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நேரில் காணும் போது நாம் அடையும் முதல் வியப்பு ஓவியம் இவ்வளவு சிறியதா என்பதே. ஒவ்வொரு ஆண்டும், ஆறு மில்லியன் மக்கள் மோனாலிசாவை பார்த்துப் போகிறார்கள்.
பாரீஸின் லூவர் ம்யூசியத்தில் இருக்கும் மோனாலிசா உண்மையில் யார். அவரை எதற்காக டாவின்சி ஓவியம் வரைந்தார். இந்த ஓவியத்தின் பின்னுள்ள அறியப்படாத வரலாற்றைத் தேடிச் செல்லும் பயணமாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோ என்ற பட்டு வணிகரின் மனைவி லிசா டெல் கியோகாண்டோவின் உருவப்படமாகக் கிபி. 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்கிறார்கள்.

ஐந்து குழந்தைகளின் தாயான லிசா முகத்தில் புன்னகை மலரச்செய்ய இசைக்கலைஞர்களையும் கோமாளிகளையும் அழைத்து வந்து டாவின்சி வேடிக்கை செய்யவைத்தார் என்கிறார்கள். இதுவும் ஒரு கற்பனை கதையாக இருக்கக்கூடும். ஆனால் மோனாலிசாவின் பார்வையும் புன்னகையும் அலாதியானது.
பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோ டாவின்சி தந்தையோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். ஒரே வீதியில் குடியிருந்திருக்கிறார். அவரது விருப்பத்தின்படியே டாவின்சி லிசாவை ஓவியம் வரைந்திருக்கிறார் என்கிறார்கள். லிசா டெல் கியோகாண்டோவின் குடியிருந்த வீதியைத் தேடிச் செல்லும் ஆண்ட்ரூ கிரஹாம்-டிக்சன் குறுகலான அந்தத் தெருவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக லிசா வசித்த வீட்டினை அடையாளம் கண்டு கொள்கிறார். உருமாறிய இன்றைய சூழலில் அந்த இடத்தின் பழைய நினைவுகளையும் அதற்குச் சான்றாக உள்ள ஜியோர்ஜியோ வசாரி 1550ல் வெளியிடப்பட்ட லியோனார்டோ பற்றிய ஆவணங்களையும் விவரிக்கிறார் ஆண்ட்ரூ
உண்மையில் டாவின்சி ஒரு மோனாலிசா ஓவியத்தை வரையவில்லை. இரண்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார். லூவரில் இருப்பது இரண்டாவது ஓவியம். முதல் ஓவியம் எங்கே போனது என்ற தேடலில் இறங்குகிறார் ஆண்ட்ரூ.
2005ம் ஆண்டு ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் ஒருவரால், 1477ம் ஆண்டு ரோமனிய தத்துவவாதியான “சிசரோ” எழுதிய ஒரு தொகுதியிலிருந்து ஒரு சாட்சியம் கண்டுபிடிக்கப்பட்டது. டாவின்சின் சமகாலத்தவரான அகஸ்டினோ வெஸ்புசியின் அடிக்குறிப்பு ஒன்றில் அக்டோபர் மாதம் 1503ம் ஆண்டு, பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியான லிசாவின் டாவின்சி வரைந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது
தேவாலயத்திலுள்ள பழைய ஏடு ஒன்றில் மோனாலிசாவின் மரணம் பற்றிய குறிப்பும் தேவாலயத்தில் நடைபெற்ற சடங்கு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த ஆவணத்தை ஆண்ட்ரூ கையில் எடுத்துப் பார்க்கும் போது அவரது முகத்தில் வெளிப்படும் ஆச்சரியம் நிஜமானது.

இது போலச் சிங்கப்பூரில் உள்ள தனிநபர் சேமிப்பிலிருந்த இன்னொரு மோனாலிசாவைக் காணச் செல்கிறார். அந்த ஓவியத்தின் முன் நிற்கும் போது மோனாலிசாவை காணக் கடல் கடந்து வந்திருப்பதாகச் சொல்கிறார். நிஜமான பெண்ணைத் தேடி வந்த பயணம் போலவே இருக்கிறது
இது போலவே ரஷ்யாவில் உள்ள தனிநபர் கலைசேகரிப்பில் இன்னொரு மோனாலிசா இருப்பதை அறிந்து அதைக் காணவும் செல்கிறார். இந்த ஓவியங்களில் எது உண்மையாக டாவின்சி வரைந்தது. எது நகல் என்று கண்டறிவது எளிதாகயில்லை. காரணம் இந்த ஓவியம் திருடப்பட்டிருக்கிறது. பல்வேறு ஓவியர்களால் துல்லியமாக நகல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது
இன்றுள்ள அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியத்தை ஆராய்ந்து எது உண்மை என்று கண்டறிகிறார்கள். மோனாலிசாவின் மர்மமான புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு உண்மைகள் புதையுண்டு இருக்கிறதா என வியப்பளிக்கிறது.
இன்னொரு பக்கம் மூல ஓவியங்களை எப்படிக் கண்டறிகிறார்கள்.. அதைத் தேடும் ஆய்வாளர்கள் எவ்வளவு சிரத்தையாக, ஆழ்ந்து ஆய்வு செய்கிறார்கள் என்பதும் முக்கியமாக உள்ளது.
பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவிடம் டாவின்சி தான் வரைந்த லிசாவின் ஓவியத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. முற்றுப்பெறாத அந்த ஓவியம் தற்போது எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு விடைதேடி ஆண்ட்ரூ மிக நீண்ட பயணங்களை மேற்கொள்கிறார்
பாரீஸில் இருப்பது லிசா டெல் கியோகாண்டோ எனும் மோனாலிசாவே இல்லை. அவளது சாயலில் வரையப்பட்ட வேறு ஒரு பெண். உண்மையில் பெண் கடவுள் போலவே அவள் உருவாக்கப்பட்டிருக்கிறாள்.
கியுலியானோ டி மெடிசியால் இந்த ஓவியம் வரைவதற்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. தனது நினைவிலிருந்து இதை டாவின்சி வரைந்திருக்கக் கூடும் முற்றிலும் புதிய முறையில் இயல்பைக் கடந்து உருவாக்கப்பட்டிருக்கும் வரைகோடுகள் வண்ணமும் இந்த ஓவியத்திற்குத் தனித்த வசீகரத்தை அளிக்கின்றன என்கிறார். மார்ட்டின் கெம்ப்

மோனாலிசா ஒவியத்தின் நீண்டகால மர்மம் என்னவென்றால், ஏன் அவர் புருவங்கள் இல்லாமல் வரையப்பட்டிருக்கிறார் என்பதே. அக்டோபர் 2007 இல், பிரெஞ்சு ஆய்வாளரான பாஸ்கல் கோட்டே, தனது அதிநவீன கேமரா மூலம் மோனாலிசாவின் முகத்தை ஆராய்ந்து அதில் டாவின்சி ஓவியத்தில் மெல்லிய புருவம் வரைந்திருக்கிறார். அது ஓவியத்தைச் சுத்தம் செய்யும் போது கவனக்குறைவாக அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். கூடுதலாக
லூவரில் உள்ள மோனாலிசா யார் என்ற விடைகாணமுடியாத கேள்விக்குப் பதிலாக அவள் மகிழ்ச்சியின் அடையாளமாக மக்களால் கருதப்படுகிறாள். உண்மையில் டாவின்சி மனிதகுலத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளமாகவே இந்தச் சிரிப்பை வரைந்திருக்கிறார் என்கிறார்கள்
இந்த ஆவணப்படத்தில் ஒரு சிறுகுறிப்பு முக்கியமான வரலாற்று உண்மையை விளக்கச் சான்றாக மாறுவது என்னை ஈர்த்தது. “சிசரோ” எழுதிய நூலில் இடம்பெற்றுள்ள இந்தச் சிறிய குறிப்பு தான் டாவின்சி இந்த ஓவியத்தை லிசாவை மாடலாக வைத்து வரைந்திருக்கிறார் என்பதன் சாட்சியம்.
புகைப்படக்கருவி வருவதற்கு முன்பு வரை புகழ்பெற்ற ஓவியங்களைக் காண வேண்டும் என்றால் அந்த ஓவியம் உள்ள ம்யூசியத்திற்குச் சென்று காத்திருந்து நேரில் காண வேண்டும். ஆனால் புகைப்படத்தின் வருக நகல்களை உருவாக்கிவிட்டது. பல்வேறு தரத்தில் வெளியிடப்படும் நகல்களைப் பார்த்துப் பழகிய மக்கள் அசலை காணுவதில் விருப்பமற்றுப் போய்விடுகிறார்கள். ஒருவேளை அசலை நேரில் கண்டாலும் இவ்வளவு தானா என ஏமாற்றம் அடைகிறார்கள்.
இன்னொரு பக்கம் கலை வரலாற்றாசிரியர்கள். ஆய்வாளர்கள். கலைரசிகர்கள் மூல ஓவியங்களைக் காண நீண்ட பயணத்தை மேற்கொண்டு தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். அதி நவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் ஓவியங்களைப் பாதுகாப்பதும் சீரமைப்பதும் எளிதாகி வருகிறது
இந்த ஆவணப்படத்தில் இரண்டு தனிநபர் சேமிப்புகளில் உலகின் அரிய ஓவியங்களைப் பாதுகாக்கப்பட்டு வருவதைக் காட்டுகிறார்கள். கோடிகோடியாகப் பணம் கொடுத்து இப்படி அரிய கலைப்பொருட்களை வாங்கிப் பதுக்கிக் கொள்வது பெருவணிகர்களின் பொழுதுபோக்கு.
வாழ்நாளில் போதுமான வருமானமின்றிக் கடனாளியாகக் கஷ்டப்பட்டவர் டாவின்சி. ஆனால் இன்று அவரது ஓவியங்களின் மதிப்பு பலநூறு கோடிகள்.
மோனாலிசாவின் புன்னகையை விடவும் காலம் எப்படிக் கலையின் மதிப்பை உருவாக்குகிறது என்ற மர்மம் புதிரானது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
