உலகில் நடந்திராத சந்திப்பு
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த செக் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும். போஹுமில் ஹ்ரபால் எழுதிய Too Loud a Solitude என்ற சிறிய நாவலை வாசித்தேன்.. கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக இந்த நாவல் இடம் பெற்றுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

இதனை நண்பர் ஆம்பூர் அசோகன் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நான் போஹுமில் ஹ்ரபால் எழுதிய Dancing Lessons for the Advanced in Age முன்னதாகப் படித்திருக்கிறேன். அவரது எழுத்து மிகவும் பிடித்திருந்தது.
Too Loud a Solitude நாவல் மதுவிடுதி ஒன்றிலோ அல்லது தெருவிலோ தற்செயலாகச் சந்தித்த ஒருவரால் ஒரு கதை சொல்லப்படுவது போலவே வாசகருக்குச் சொல்லப்படுகிறது.
ஹன்டா என்ற கிழவர் தான் முக்கியக் கதாபாத்திரம். அவர் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். இடையிடையே வாசிப்பிலிருந்து தான் பெற்ற அரிய ஞானத்தை வெளிப்படுத்துகிறார். பழைய ப்ராக் நகரின் ஸ்பாலென் தெருவில் சிறிய குடியிருப்பு ஒன்றில் வாழும் ஹன்டா பியர் குடிப்பதிலும் புத்தக வாசிப்பிலும் அதிக விருப்பம் கொண்டவர். அவருக்கென உறவுகள் இல்லை. தனிமையான வாழ்க்கை, அவரது அம்மாவின் மரணத்தைப் பற்றிய பகுதியில் அம்மாவின் சாம்பலை மயானத்தில் வாங்கும் ஹன்டா புத்தகங்கள் எரிக்கப்பட்ட போது உண்டான சாம்பலுக்கும் அதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார்
பழைய காகிதங்களை வாங்கி அழித்துக் காகிதமாக்கும் வேலை செய்யும் ஹன்டா 33 ஆண்டுகளாக இந்தப் பணியினைச் செய்து வருகிறார்
குப்பை என மக்களால் வீசி எறியப்பட்ட புத்தகங்களைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. பல்வேறு அரிய நூலகங்கள் மூடப்பட்டு அங்கிருந்த புத்தகங்கள் ரயில் மூலம் வந்து இறங்குகின்றன. வேண்டாத புத்தகங்கள் என இலக்கிய நூல்களைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்.

நாவலின் துவக்க அத்தியாயத்திலே ஹன்டா சொல்கிறார். உண்மையில் இவர்களின் செயலைக் கண்டு புத்தகங்கள் மௌனமாகச் சிரித்திருக்கும் என்கிறார். காரணம். நெருப்பால் அழிப்பதன் மூலம் புத்தகத்தை உலகிலிருந்து மறைய செய்துவிட முடியும் நினைப்பது முட்டாள்தனம். புத்தகங்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை அரூபமான தாவரம் போல நமக்குள் கிளை விரித்து வளர்கின்றன. நினைவில் வேர்விடுகின்றன என்பதே நிஜம்
புத்தகங்களை அழிக்கும் தனது வேலையை மன்னிக்கமுடியாத குற்றமாக ஹன்டா கருதுகிறார். இதனால் பழைய பேப்பர் கட்டுகளிலிருந்து கிடைக்கும் அபூர்வமான புத்தகங்களைச் சேகரித்து வீடு முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறார். அந்தப் புத்தகங்களுக்குள்ளே வாழுகிறார்.
உலகில் ஏன் புத்தகங்கள் கைவிடப்படுகின்றன. அதிலும் இப்படிச் சர்வாதிகாரம் ஏன் நூலகங்களை அழித்து மகத்தான படைப்புகளைச் சாம்பலாக்க முயலுகின்றன என்று ஹன்டா வருத்தம் கொள்கிறார்
படித்த புத்தகங்களிலிருந்து அவரது மனதில் தேங்கிய உண்மைகள். தேடல்கள் அவரது வாழ்க்கையை வழிநடத்துகின்றன. அழுக்கான தோற்றத்துடன் ஒதுங்கிய குடியிருப்பில் வாழும் அவருக்கு எழுத்தில் உருவான மனிதர்களும் எழுத்தாளர்களும் தான் தோழர்கள். . பிரபல தத்துவஞானிகள் அவருடன் கற்பனையாக விவாதிக்கிறார்கள். சாக்ரடீஸ் முதல் லாவோ-ட்ஸே, கான்ட் முதல் சார்த்தர் வரையிலான சிறந்த இலக்கியப் படைப்புகளால் அவரது வீடு நிரம்பியுள்ளது,
நாவலின் ஒரு அத்தியாயத்தில் இயேசு நாதரும் சீன ஞானியான லாவோ-ட்ஸேவும் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். மிக முக்கியமான சந்திப்பு. உலகில் நடந்திராத அந்தச் சந்திப்பு நாவலில் நடக்கிறது. இருவரையும் ஒருங்கே சந்திக்கும் ஹன்டா அவர்களின் சந்திப்பைப் பெருமைக்குரியதாக நினைக்கிறார். புனைவின் தனித்துவமே இது போலச் சாத்தியமற்ற விஷயங்களைச் சாத்தியப்படுத்திக் காட்டுவது தானே. இயேசுவும் லாவோ-ட்ஸேவும் அருகருகில் நிற்கும் காட்சி அத்தனை அழகாக இருக்கிறது.
முப்பத்து மூன்று ஆண்டுகளாகப் பழைய காகிதங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் ஹன்டா ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதைச் சொல்கிறார். அது தான் அவரது ஒரே அடையாளம். குற்றவுணர்வு. அவர் வாசித்த புத்தகங்கள் மூலம் அவரது ஆளுமை மாறுபட்டதாக உள்ளது. உலகின் கண்களில் அந்த ஆளுமை வெளிப்படவேயில்லை
ஒரு அழகான மீன் எப்போதாவது தொழிற்சாலைகளின் வழியாக ஓடும் மாசுபட்ட நதியின் நீரில் பிரகாசிப்பது போல, பழைய காகித கட்டுகளுக்குள் ஒரு அரிய புத்தகம் எப்போதாவது தன் முதுகெலும்பைக் காட்டிக் கொண்டு பிரகாசிக்கும், , உடனே அதை மீட்டு வெளியே எடுத்துத் துடைத்து, விரித்து, முதல் வாக்கியத்தைப் படிப்பேன் அப்போது ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது என்கிறார் ஹன்டா
புத்தகம் படிக்கும்போது, நான் உண்மையில் வாசிப்பதில்லை; நான் ஒரு அழகான வாக்கியத்தை என் வாய்க்குள் நுழைத்து அதை ஒரு பழச்சாறு போல உறிஞ்சுகிறேன், அல்லது மது போல் சிந்தனை கரைந்து போகும் வரை குடித்து மூளை மற்றும் இதயத்தை ஊடுருவி நரம்புகள் வழியாக ஒவ்வொரு இரத்த அணுவிற்குள்ளும் செல்கிறேன் என்று இன்னொரு இடத்தில் சொல்கிறார் ஹன்டா
புத்தகங்களுடன் இருப்பவர்கள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை எனும் ஹன்டா, அந்தி நேரத்தை மிகவும் நேசிக்கிறார். அந்த நேரத்தில் ஏதோ: முக்கியமான ஒன்று நடக்கலாம் என்ற உணர்வு அவருக்குள் எப்போதும் இருந்தது. அந்தி வேளையில் அனைத்து பொருட்களும், அனைத்து தெருக்களும் மக்களும் மிகவும் அழகாக இருக்கின்றன அந்தி ஒரு மாய வெளிச்சம் என்கிறார்.
the heavens are not humane, nor is any man with a head on his shoulders என நாவலின் ஒரு இடத்தில் ஹன்டா சொல்கிறார். சொர்க்கம் என்பது மனிதர்களுக்கான இடமில்லை என்பதை அவர் புத்தகங்களின் வழியே தான் கண்டுபிடிக்கிறார்.
அவரது வீட்டில் படுக்கை அறை துவங்கி கழிப்பறை வரை எங்கும் புத்தகங்கள் நிரம்பியிருக்கின்றன. அவரும் சில எலிகளும் அந்தப் புத்தகங்களுக்குள் ஒன்றாக வாழுகிறார்கள். தன்னையும் ஒரு எலிபோலவே அவர் நினைக்கிறார்.
இந்தக் கதையில் வரும் ஹன்டா போலவே ஹ்ரபால் பழைய காகிதம் அரைக்கும் ஆலை ஒன்றில் வேலை செய்திருக்கிறார். புத்தகங்கள் கைவிடப்படுவதையும் அழிக்கப்பட்டு கூழாக்கப்படுவதையும் தாங்கமுடியாமல் வேலையை விட்டு விலகிப் போயிருக்கிறார்.
இந்த நாவலை மூன்று மாறுபட்ட வடிவங்களில் போஹுமில் ஹ்ரபால் எழுதியிருக்கிறார். இதன் இறுதி வடிவமே நான் இன்று வாசிப்பது. புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கில்லை. அது ஒரு வாழ்க்கை முறை என ஹன்டா நம்புகிறார். அதை அவர் உணரும் விதம் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது
தனது, 82 வயதில், பிராக்கின் புலோவ்ஸ் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் புறாக்களுக்கு உணவளிக்கும் போது ஜன்னலிலிருந்து விழுந்து ஹ்ரபால் இறந்து போனார். அவரது கதையில் வரும் நிகழ்வு போலவே அவரது வாழ்க்கையும் முடிந்து போனது துயரமானது. .
இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது
உலகம் ஒருமனிதனைக் கைவிடும் போது புத்தகங்கள் அவனை அரவணைத்துக் கொள்கின்றன. ரகசியமாக அவனுடன் பேசி உற்சாகத்தை, நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. புத்தகங்களில் நாம் வாசிக்கும் சொற்கள் அன்றாட வாழ்வில் தராத புதிய அர்த்தத்தைத் தருகின்றன. வாசித்தல் என்பதை எளிமையான விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஒரு விந்தை. வாசிப்பின் வழியே மனதில். நினைவில் உருவாகும் மாற்றங்களை எளிதாகச் சொல்லிவிட முடியாது
செக்கில் இப்போது ஹன்டா பெயரில் பியர் விற்பனை செய்யப்படுகிறது. அந்த அளவு இந்த நாவல் புகழ்பெற்றிருக்கிறது. குறைந்த கோடுகளில் அழகான சித்திரத்தை உருவாக்கிக் காட்டும் ஓவியனைப் போலவே போஹுமில் ஹ்ரபால் செயல்பட்டிருக்கிறார். சிறிய நாவல் என்றாலும் மறக்கமுடியாத அனுபவம் தரும் நாவலாகவே உள்ளது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
