இருவர் கண்ட ஒரே கனவு
திபெத்தின் கெக்சிலி பீடபூமியின் 16,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையே உலகின் மிக உயரமான சாலையாகும். அந்தக் கெக்சிலி சாலையில் லாரி ஒட்டிக் கொண்டு செல்கிறான் டிரைவர் ஜின்பா. ஆள் நடமாட்டமேயில்லாத நீண்ட சாலை. பழைய ஆடியோ கேசட் ஒன்றை ஒலிக்கவிட்டபடியே வண்டி ஒட்டுகிறான் ஜின்பா. கேமிரா அவன் முகத்தையே மையமிடுகிறது. சலிப்போ, கோபமோ எதுவுமில்லை. அவன் கண்கள் அடிக்கடி கயிற்றில் தொங்கும் டாலரில் உள்ள மகளின் புகைப்படத்தை நோக்குகின்றன. அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டுமே பயணம் செய்கிறான்.

எதிர்பாராதவிதமாக ஒரு செம்மறி ஆடு அவனது லாரியில் விழுந்து அடிபட்டுச் சாகிறது. ஏன் இந்த ஆடு தன் லாரியில் வந்து அடிபட்டது எனக் குற்றவுணர்வு கொள்கிறான் ஜின்பா.
செத்த ஆட்டினை லாரியில் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறான். வழியில் தற்செயலாக ஜின்பா என்ற அதே பெயருள்ள நாடோடி ஒருவனைச் சந்திக்கிறான். அவன் தன் தந்தையைக் கொன்றவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். நாடோடியை லாரியில் ஏற்றிக் கொள்ளும் ஜின்பா அவன் மீது அதிகாரம் செலுத்துகிறான். அவனிடமே சிகரெட் வாங்கி அதைப் பற்றவைக்கவும் சொல்கிறான். தனது தவற்றை மறைத்துக் கொண்டு ஜின்பா முரட்டுதனமாக நடந்து கொள்கிறான்.

நாடோடியோ தன் தந்தையைக் கொன்ற ஆள் பக்கத்து ஊரான சனக்கில் வசிப்பதாகவும் அந்தச் சாலையில் தன்னை இறக்கிவிடும்படியாகக் கேட்டுக் கொள்கிறான். ஜின்பா அதற்கு ஒத்துக் கொள்கிறான். இருட்டில் அந்தச் சாலையில் இறக்கிவிட்டுச் செல்லும் ஜின்பா ஒரு கறிக்கடையில் நிறுத்தி முழு ஆட்டின் விலை எவ்வளவு என்று விசாரிக்கிறான். கடைக்காரன் அவன் வாங்க விரும்புகிறான் என நினைத்துக் கொண்டு ஆசையாக விலை சொல்கிறான். ஆனால் ஜின்பா மாலை வருவதாகச் சொல்லி விடைபெறுகிறான்.
மடாலயம் ஒன்றுக்குச் செல்லும் ஜின்பா இறந்து போன ஆட்டிற்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யும்படி ஒரு பௌத்த குருவிற்குக் காசு கொடுக்கிறான். அவர் பிரார்த்தனை செய்வதுடன் இறந்த ஆட்டினை கழுகிற்குப் படையல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். அப்போது ஒரு பிச்சைக்காரன் கழுகிற்குப் பதிலாகத் தனக்கு உணவாகத் தரலாமே என்று யாசிக்கிறான். அவனுக்கு நிறையப் பணம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லும் ஜின்பா இறந்த ஆட்டினை கழுகிற்குப் படையல் செய்கிறான். திரும்பிச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் வீட்டில் இரவு தங்குகிறான். இன்பம் அனுபவிக்கிறான்.
மறுநாள் கிளம்பும் போது அந்த நாடோடி என்ன ஆனான் என்று தெரிந்து கொள்வதற்காக அவனை இறக்கிவிட்ட சனக்கிற்க்குப் போகிறான். யாரை நாடோடி கொல்ல முயன்றானே அந்த மனிதனைச் சந்திக்கிறான். அவனுடன் பேசுகிறான். அந்த மனிதன் பயத்துடன் தன்னை அப்படி ஒருவன் வந்து சந்தித்தான். ஆனால் ஒன்று செய்யவில்லை. கண்ணீர் சிந்தியபடியே வெளியேறிப் போய்விட்டான் என்கிறான். உண்மையில் யாரை கொல்ல நாடோடி விரும்பினான் என்பது முடிவில் தெரிய வருகிறது

நாடோடியைத் தேடி ஒரு மதுவிடுதிக்கு ஜின்பா செல்லும் காட்சி அபாரமானது அந்தக் கடையை நடத்தும் பெண்ணுடன் நடக்கும் உரையாடல். கடையின் சூழல்.. அந்தக் காட்சி அப்படியே செபியா டோனுக்கு மாறி நாடோடி வந்து போன நடந்த நிகழ்வுகளைச் சொல்வது என அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே கனவை இருவர் காணுவது போலிருக்கிறது அந்தக் காட்சி.
ஆடு லாரியில் அடிபட்டு விழும் காட்சி சட்டென அதிர்ச்சியை உருவாக்குகிறது. அதிலிருந்து ஒருவன் குற்றவுணர்வில் ஊசலாடத் துவங்குகிறான். மகள் மீது பாசம் கொண்டு அவள் நினைவாக ஒரு பாடலைக் கேட்டபடியே வரும் ஜின்பா உண்மையில் முரட்டுத்தனமான மனிதனா அல்லது தோற்றம் தான் அப்படியிருக்கிறதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. அவனது தோற்றம் ஜானி டெப் போலுள்ளது. எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறான். ஒரு காட்சியில் Animals have souls, too என்று சொல்கிறான் ஜின்பா. மனிதர்களின் ஆன்மாவிற்கும் விலங்குகளின் ஆன்மாவிற்குமான வேறுபாடு பற்றியும் பேசுகிறான். இத்தனை நுண்ணுணர்வு கொண்ட ஜின்பா ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்ற புதிர் படம் முடியும் போது தான் விலகுகிறது.
இதற்கு மாறாக நாடோடியோ தோற்ற அளவில் பிச்சைக்காரன் போலிருக்கிறான். ஆனால் அவன் கொலை செய்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறான். அவன் வாழ்க்கையின் லட்சியமே பழிவாங்குவது தான். ஆனால் அதை அவன் கடைசிவரை நிகழ்த்துவதில்லை. அதற்குத் தன்னை அவன் தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை

மளிகைப்பொருட்கள் விற்கும் ஆளைத் தேடிச் செல்லும் ஜின்பாவை அந்தக் கடைக்காரனின் மனைவி வரவேற்று உபசரிக்கிறாள். அப்போதும் ஜின்பா உண்மையைச் சொல்வதில்லை. வீடு திரும்பும் கடைக்காரன் துறவி போல நடந்து கொள்கிறான். அவரிடம் ஜின்பா உண்மையைச் சொல்கிறான். இந்த மூன்று கதாபாத்திரங்களும் குறியீடுகளே. அகவிழிப்புணர்வு தான் படத்தின் மையப்புள்ளி. .
கர்மா மற்றும் விதியின் செயல்பாடுகள் பற்றிய ஒரு உவமை போன்றே இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திபெத்தியத் திரைப்பட இயக்குநரான பெமா ட்ஸெடன் இப்படத்தை மிகுந்த கவித்துவத்துடன் உருவாக்கியிருக்கிறார். லு சாங்யேவின் ஒளிப்பதிவு அபாரமானது. செர்ஜியோ லியோனின் படங்களை நினைவுபடுத்தும் ஒளிப்பதிவு. காட்சிக் கோணங்களும் வண்ணங்களும் மிகச்சிறப்பாக உள்ளன.
பௌத்த நீதிக்கதை ஒன்றை வாசிப்பது போன்ற உணர்வைத் தருகிறது படம்
மனிதனின் இருவேறு முகங்களை, இயல்புகளைச் சொல்வதற்காகத் தான் ஜின்பா என்று ஒரே பெயர் இருவருக்கும் வைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது
சினிமாவிற்குப் பெரிய கதைகள் தேவையில்லை. சிறிய கதையை அழுத்தமாகச் சொல்ல முயன்றால் அதுவே போதும் என்கிறார் பெமா ட்ஸெடன். இந்தப் படத்தைப் புகழ் பெற்ற இயக்குநர் Wong Kar Wai தயாரித்திருக்கிறார்.
மிகச்சிறந்த ஒளிப்பதிவு. இசை, படமாக்கப்பட்ட முறை இப்படத்தை மிகச்சிறந்த திரையனுபவமாக மாற்றுகிறது. உலக சினிமா அரங்கில் திபெத்திய சினிமாவின் நிகரற்ற சாதனை இப்படம் என்கிறார்கள். . அது உண்மையே.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

