எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி 2

(அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்)

நீங்கள் ஒவ்வொரு நாளும் வாசிப்பு மற்றும் எழுத்துக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? நடுவே சினிமாவுக்கும் எழுதுகிறீர்கள். பயணம் செல்கிறீர்கள். உலகச் சினிமாக்களைப் பார்க்கிறீர்கள். பதிப்பக வேலைகள், இதர பத்திரிக்கைகளுக்கான சிறுகதைகள், உரைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் ‘சென்னையும் நானும்’ போன்ற காணொளித் தொடர்கள். எப்படி இதைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்?

மேற்கத்திய எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி வாசித்தபோது அவர்கள் எழுதுவதற்காக, படிப்பதற்காக, பயணம் செய்வதற்காகத் தனித்தனி நேரம் ஒதுக்கிச் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். இந்தப் பழக்கத்தை என் கல்லூரி நாட்களில் இருந்தே கடைபிடிக்கத் துவங்கினேன்.

நான் தற்செயலாக எழுத வரவில்லை. எழுத்தாளன் ஆவது என்று மட்டுமே முடிவு செய்து அதற்காக என்னைத் தயார் செய்துகொண்டவன். எழுத்தை மட்டுமே நம்பி சென்னையில் வாழுபவன். முழுநேர எழுத்தாளன். அதன் சிரமங்களைச் சொன்னால் புரியாது. பொருளாதாரச் சிரமங்கள் அதிகம். ஆகவே நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று மிகக் கவனமாகச் செயல்படுவேன். படிப்பு. எழுத்து, பயணம், சிறிய நண்பர்கள் வட்டம், இது தான் எனது உலகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெகு அரிதாகவே பார்ப்பேன். இணையத்தில் தான் செய்திகளை வாசிக்கிறேன்.

Daily Rituals: How Artists Work by Mason Currey என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் எழுதினார்கள். எப்படி ஒரு நாளை வகுத்துக்கொண்டார்கள் என்று சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்கள். எழுத்தைப் போலவே எழுத்தாளர்களின் வேலை முறையும் விசித்திரமானதே.

எழுதத்துவங்கிய நாட்களில் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி காலை நாலு மணி வரை எழுதுவேன், பகலில் உறங்கிவிடுவேன். மதியம்தான் எழுவேன். பின்பு படிப்படியாக இரவில் எழுவதைக் குறைத்துக்கொண்டு காலை இரண்டு மணி நேரம், இரவு நான்கு மணி நேரம் என மாற்றிக்கொண்டேன்.

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய்த் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு ஓய்வு. அதில் வாசிப்பேன். இசை கேட்பேன். மனதில் சில நேரம் மேகமூட்டம் சூழ்ந்துவிடும். அது போன்ற தருணங்களில் உடனே பயணம் கிளம்பிவிடுவேன். நீண்ட தூர பயணங்களே எனது விருப்பம். இடிபாடுகளே என்னை வசீகரிக்கின்றன.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்னுடைய அறையில் மட்டும்தான் என்னால் எழுத இயலும். வேறு ஒரு புது இடத்தில் என்னால் ஒரு வரி எழுத இயலாது.

சிற்றிதழ்களும் வெகுஜன ஊடகங்களும் ஒன்றை ஒன்று தீண்டத் தகாதவையாகக் கருதும் சூழலைப் பற்றி உங்கள் கருத்து? இதில் மாற்றம் வேண்டுமா? என்ன செய்யலாம்?

உலகம் முழுவதும் இந்த இடைவெளி இருக்கிறது. அதை மாற்ற இயலாது. காரணம் இரண்டின் நோக்கங்களும் வேறுவேறு. ஆனால் இந்த இடைவெளி முன்பு இருந்ததை விடவும் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. எண்பதுகளில் அசோகமித்ரன், சா.கந்தசாமி, பிரபஞ்சன் கதைகள் குமுதம் விகடன் வார இதழ்களில் நிறைய வெளியாகியுள்ளன. அது மெல்ல வளர்ந்து இன்று தமிழில் எழுதும் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் வார இதழ்களில் கதையோ, கட்டுரையோ, கவிதையோ, அல்லது பத்திகளோ எழுதியிருக்கிறார்கள். சிறுபத்திரிக்கையாளர்கள்தான் அதிகமும் வார இதழ்களில் பணியாற்றுகிறார்கள். ஆகவே இந்த இடைவெளி முன்பைவிடக் குறைந்திருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு இதழ்களின் கவனமும் நோக்கமும் மாறிவிடவில்லை. அது முன்பைவிட இப்போது மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை மாற்றுவது எளிதானதில்லை.

சிறுபத்திரிக்கைகள் எப்போதும் போலத் தீவிரமாக மொழிபெயர்ப்புகள், கதை, கவிதைகள், நேர்காணல்கள் எனத் தனது தனித்துவத்துடன் இன்றும் வெளியானபடியே தான் இருக்கின்றன. இதன் மாற்றுவடிவம் போலவே இணைய இதழ்கள் வெளியாகின்றன. இணைய இதழ்களின் வருகையை நான் வரவேற்பேன். அது தரும் சுதந்திரம் மிகப்பெரியது

ஆனாலும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் வெற்று அபிப்ராயங்கள். வம்புகள். வெறுப்புகளைக் கொட்டுகிறார்கள். பொதுவெளியில் இவ்வளவு வசைகள், கேவலமான, அருவருப்பான பதிவுகளை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு காணமுடியாது. கோபமான விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் இது போன்ற தனிமனித தாக்குதல்கள். காழ்ப்புணர்ச்சிகள் வெளியானதில்லை.

காந்தியைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காந்தியைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களே மலிந்திருக்கும் இன்றைய சூழலில், அவரைக் குறித்து நேர்மறையாகவும், இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தி குறித்த கதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காந்தியை நீங்கள் எப்படி அறிமுகம் செய்துகொண்டீர்கள், உங்கள் வாழ்விலும் எழுத்திலும் காந்தியின் பாதிப்பு மற்றும் அவரை அறிந்துகொள்ள உதவும் சில முக்கியமான நூல்கள் இவற்றைப் பற்றி.

காந்தியின் மீது எப்போதுமே பெருமதிப்புக் கொண்டிருக்கிறேன். காந்தியின் பேச்சையும் எழுத்தையும் ஆழ்ந்து அறிந்திருக்கிறேன். காந்தியவாதிகள் பலருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். காந்தி குறித்துக் ‘காந்தியோடு பேசுவேன்’, ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ ஐந்து வருஷ மௌனம் என்று மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தற்போதும் ‘காந்தியின் நிழலில்’ என இணையத்தில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதி வருகிறேன். காந்தியைப் பின்தொடர்வது என்பது உண்மையைப் பின்தொடர்வதாகும். காந்தி மீதான எதிர்மறை விமர்சனங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் காந்தியைப் பற்றிப் பேசுவது எழுதுவது முக்கியமான செயல் என்று நினைக்கிறேன்.

காந்தி இன்று பொதுவெளியில் அற்பர்களால் அவமதிக்கபடுகிறார். காரணமில்லாமல் வெறுக்கப்படுகிறார். பொய்யான குற்றசாட்டுகள் அவர் மீது வைக்கப்படுகின்றன. காந்தி தன்னை ஒருபோதும் தேவதூதராகக் காட்டிக் கொள்ளவில்லை. அவரது பலவீனங்கள் யாவும் அவர் எழுதி உலகிற்குத் தெரிய வந்தவைதானே. அவர் தன்னுடைய தவறுகளை எப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். திருத்திக் கொண்டிருக்கிறார். இந்திய மக்களின் ஆன்மாவைப் புரிந்துகொண்ட மகத்தான ஆளுமையாகக் காந்தியைச் சொல்வேன்.

காந்தியின் தைரியம், பிடிவாதம், நம்பிக்கை மூன்றையும் முக்கியமானதாக நினைக்கிறேன். இந்த மூன்றும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால் அவர் கடைசி வரை தன் செயல்முறைகளில் உறுதியாக இருந்தார். பிடிவாதமாகத் தான் செய்ய நினைத்த நற்காரியங்களைச் செய்தார். தைரியமாகத் தன் கருத்துகளை வெளியிட்டார். களத்தில் செயல்பட்டார்.

காந்தி இந்தியாவிற்குக் காட்டிய வழியும் முன்னெடுப்புகளும் மகத்தானது. அதை இன்று நாம் தவறவிட்டுவிட்டோம் என்பது வருந்தக்குரியதே.

தமிழ், இந்திய மொழிகள் மட்டுமன்றி உலக இலக்கியத்திலும் சமகாலப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர் நீங்கள். தற்கால உலக இலக்கியத்தில் எம்மாதிரியான பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன? அவற்றில் எவை தமிழிலும் நிகழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?

உலகம் முழுவதுமே கதை சொல்லுதலை நோக்கியே இலக்கியம் திரும்பியிருக்கிறது. சமகால நாவல்கள் விரிவாகக் கதை சொல்லுகின்றன. தலைமுறைகளின் வாழ்க்கையை இதிகாசம் போலச் சொல்லுகின்றன.. இன்னொரு பக்கம் வரலாற்றை மீள்புனைவு செய்வது, தொன்மங்களைப் புதிய நோக்கில் எழுதுவது, அதிகாரத்திற்கு எதிராகக் குரலை ஒலிப்பது, பெருநகர வாழ்வின் தனிமையை, நெருக்கடிகளை எழுதுவது எனச் சமகால இலக்கியம் தீவிரமாகச் செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளைப் பெற்ற புத்தகங்களைப் பாருங்கள். நினைவுகளைத்தான் பிரதானமாக எழுதுகிறார்கள். தனிநபர்களின் நினைவுகள் என்று சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிடாமல் பண்பாடு, சமூகம், வரலாறு, இனப்பிரச்சனை எனப் பரந்த தளத்தில் நினைவுகளை எழுதுகிறார்கள். விசித்திரமும் யதார்த்தமும் ஒன்று கலந்த எழுத்துமுறையே உலகெங்கும் காணப்படுகிறது.

‘லிங்கன் இன் தி பார்டோ’ (Lincoln in the Bardo) என்ற அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸின் மான் புக்கர் பரிசு பெற்ற நாவல் வாழ்க்கைக்கும் மறுபிறப்புக்கும் இடையில் உள்ள இடைநிலையைப் பேசுகிறது. மாயமும் யதார்த்தமும் ஒன்று கலந்து நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் நிலத்தில் எழுதப்படாத விஷயங்கள் ஓராயிரம் உள்ளன. சங்க கால வாழ்வியலை முதன்மைப்படுத்தி நாவல் எழுதலாம், தமிழகத்திற்கு வந்த யவனர் கிரேக்க வாழ்க்கையைப் பற்றி எழுதலாம். தமிழகத்தில் இருந்த முக்கியமான இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், நாடக ஆசிரியர்கள் என எவரைப் பற்றியும் இலக்கியத்தில் விரிவாக எழுதப்படவில்லையே. மொசாம்பிக் எழுத்தாளரான Mia Couto நாவல்களைப் பாருங்கள். அளவில் சிறியது என்றாலும் எத்தனை புதியதாக இருக்கிறது. Javier Marías, Elena Ferrante, Carlos Ruiz Zafón, Alessandro Baricco, Annie Ernaux, Marilynne Robinson CeSar Aira நாவல்கள் புதிய கதைமொழியை, கதைக்களத்தைக் கொண்டிருக்கின்றன. அவை நமக்கு எதை எழுத வேண்டும் என்பதை அறிமுகம் செய்கின்றன. புதிய கதை சொல்லும் முறையை அடையாளம் காட்டுகின்றன.

உங்கள் பார்வையில் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து?

மிகச்சிறப்பாக எழுதக்கூடிய பெண்கள் நிறைய இருக்கிறார்கள். புக்கர் பரிசிற்காகப் பரிந்துரைப் பட்டியலைப் பாருங்கள். பெரும்பாலும் பெண் எழுத்தாளர்கள். அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளுக் (Louise Glück) தானே சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்றிருக்கிறார். இந்திய அளவில் நிறைய இளம் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். காத்திரமான கதைகளை, கவிதைகளை எழுதுகிறார்கள். முதல் நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளரான சல்மா லாகெர்லாவ் எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர். அவரைப் போலவே வில்லா கேதரை (Willa Cather) விரும்பி வாசித்திருக்கிறேன். மார்க்ரெட் யூரிசனாரின் (Marguerite Yourcenar) சிறுகதைகள் அற்புதமானவை. Isak Dinesen, Anna Akhmatova, Marina Tsvetaeva, Emily Dickinson, Virginia Woolf, Krishna Sobti, Mamoni Raisom Goswami, Qurratulain Hyder, இஸ்மத் சுக்தாய். அம்ரிதா ப்ரீதம், கமலாதாஸ், ஆண்டாள், வெள்ளிவீதியார், முத்துப்பழனி அம்பை, ஹெப்சிபா ஜேசுதான், கிருத்திகா, கே.ஆர். மீரா, சூடாமணி, தமிழ்செல்வி, சந்திரா, சசிகலாபாபு போன்ற படைப்பாளிகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

குடும்பம் குறித்த ஆணின் சித்திரமும் பெண்ணின் சித்தரிப்பும் வேறுவேறானவை. கிருஷ்ண சோப்தி ஞானபீட விருது பெற்ற பெண் எழுத்தாளர். அவரது நாவல்கள் பெண்ணின் காமம் குறித்துத் தீவிரமாகப் பேசுபவை. இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai) மீது நீதிமன்ற வழக்கு தொடுத்தார்கள். இன்றும் பெண்கள் எதை எழுத வேண்டும், எதை எழுதக்கூடாது என்ற பண்பாட்டு நெருக்கடிகள் இருக்கிறது. அதை எதிர்த்துப் போராடித்தான் எழுதுகிறார்கள்.

எங்கள் வாசிப்பில் இன்றைய நவீன சிறுகதைகளில் பெண்களை மையமாக வைத்து அல்லது பெண்ணின் கோணத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதியவர் நீங்கள். ‘அவரவர் ஆகாயம்’, ‘கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது’, ‘விரும்பிக் கேட்டவள்’, ‘அவளது வீடு’, ‘ஆண்கள் தெருவில் ஒரு வீடு’, ‘ஆண் மழை’, ‘பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்’, ‘சௌந்திரவல்லியின் மீசை’, ‘உனக்கு 34 வயதாகிறது’, ‘அம்மாவின் கடைசி நீச்சல்’, ‘காந்தியோடு பேசுவேன்’, ‘மழைப்பயணி’ போன்று நிறையக் கதைகளைச் சொல்லலாம். பெண்களின் உலகை இவ்வளவு நுட்பமாகவும் காத்திரமாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள். “பெண்களின் கதைகளைப் பெண்கள்தான் எழுதவேண்டும்,” என ஒரு கருத்து எழுத்துலகில் உலவுகிறது. இது குறித்து உங்கள் பார்வை?

அப்படி எந்தக் கட்டுபாடும் கிடையாது. பெண்கள் தங்களின் வலியை, உணர்ச்சிகளை எழுதும்போது இன்னும் துல்லியமாக, முழுமையாக எழுதக்கூடும். ஆனால் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, பிளாபெர்ட், துர்கனேவ் துவங்கி கூட்ஸி வரை அழுத்தமான பெண் கதாபாத்திரங்களை எழுதியவர்கள் நிறைய இருக்கிறார்களே. தமிழிலே புதுமைப்பித்தன், குபரா, ஜானகிராமன், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் கதைகளில் பெண்களின் அகம் மிகத் துல்லியமாக விவரிக்கபட்டிருக்கிறதே.

என் கதைகளில் வரும் பெண்கள் குடும்ப அமைப்பால் ஒடுக்கப்பட்டவர்கள். கடற்கன்னி வேஷமிடும் பெண்ணைப் பற்றிய ‘துயில்’ நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். எளிய கிராமத்துப் பெண்ணை ஒருவன் காட்சிப் பொருளாக்கி சம்பாதிக்கிறான். அவள் அந்தக் கடற்கன்னி உடையை அணிந்து கொண்டபிறகு மூத்திரம் பெய்யக்கூட எழுந்து போக முடியாது. அதைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது. ஷோ முடிந்து இரவில் அவள்தான் சமைக்க வேண்டும். அவளது மகனுக்குத் தன் அம்மா உண்மையில் கடலில் பிடிப்பட்ட மீனா, அல்லது நிஜமான பெண்ணா என்ற குழப்பம் உருவாகிறது. அவளுக்கே அந்த மயக்கம் உருவாகிறது. அவளது நெருக்கடியான வாழ்க்கை துயரைத்தான் துயில் விவரிக்கிறது.

‘சௌந்தரவல்லியின் மீசை’ கதையில் வரும் மாணவிக்கு லேசாக அரும்பியுள்ள மீசை மயிர்கள் தொந்தரவாக உள்ளன. கேலி செய்யப்படுகிறாள். படிப்பே நின்று போய்விடும் நிலை ஏற்படுகிறது. என் கதையில் வரும் பெண்கள் தாங்களாக மீட்சியைக் கண்டறிகிறார்கள்.

குடும்ப அமைப்பு தரும் அழுத்தத்தில் உழலும் பெண் கதாப்பாத்திரங்களின் மனவலியை நுட்பமாகப் படைத்தவர் நீங்கள். எஸ்ராவின் பெண்கள் பெரும்பாலும் குடும்ப அமைப்பில் சிதைந்தவர்களாகவோ அல்லது தனக்கான வெளியைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு ரகசியமாக அதனுள் சென்று அவ்வப்போது ஆசுவாசம் அடைபவர்களுமாகவே இருக்கிறார்களே. ஏன்?

அவ்வளவுதான் சாத்தியமாகியிருக்கிறது. புத்தகம் படிக்க மாட்டேன் என்று கணவருக்குச் சத்தியம் செய்து கொடுத்த ஒரு பெண் அவர் இறந்த பிறகும் அதே சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறார். அப்படி ஒரு பெண்ணை ஒரு முறை நான் சந்தித்தேன். யாராவது படித்துக் காட்டினால் கேட்டுக்கொள்கிறார். எது அவரை இன்றும் படிக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது. என் பாட்டி எழுபத்தைந்து வயதில் தனி ஆளாகக் காசிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். மொழி தெரியாது. கையில் காசு கிடையாது. ஆனால் எப்படியோ காசிக்குப் போய்ப் பத்து நாள் தங்கிச் சாமி கும்பிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால் அவரால் உள்ளூர் பஜாருக்குத் தனியே போக முடியாது. யாராவது துணைக்கு ஆள் போக வேண்டும். அந்தத் துணிச்சல் ஏன் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படவில்லை. அழகாகப் பாடத் தெரிந்த, நடனம் ஆடத்தெரிந்த எத்தனை பேர் திருமணத்திற்குப் பிறகு அந்தக் கலையை அப்படியே கைவிட்டிருக்கிறார்கள். என்றாவது ஆசைக்காக ரகசியமாக ஒரு பாட்டுப் பாடிக்கொள்வது மட்டும் ஏன் நடக்கிறது.

என் கதையில் வரும் பெண்கள் தங்கள் நெருக்கடியில் இருந்து விடுபடத் தாங்களே ஒரு வழியைக் கண்டுபிடித்துக்கொள்கிறார்கள். ‘அம்மாவின் கடைசி நீச்சல்’ கதையில் வரும் அம்மா கோபம் கொண்டால் நீண்ட நேரம் நீந்துகிறார். அவ்வளவுதான் அவரால் முடியும். இன்னொரு கதையில் பீங்கான் குவளையை உடைத்துவிட்டாய் என்று மனைவியைக் கணவர் மிக மோசமாகத் திட்டுகிறார். அவள் வாழ்நாள் முழுவதும் அவரை நிமிர்ந்து பார்ப்பதேயில்லை. இறந்த அவரது உடலைக்கூடக் குனிந்தே பார்க்கிறாள். இதைப் புறக்காரணங்களைக் கொண்டு மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

இலக்கியத்தைச் சினிமாவாக எடுக்கும்போது அது ஒரு போதும் இலக்கியப் படைப்பை மிஞ்சிவிட முடியாது எனத் தலையை உலுக்கிச் சொல்பவர்கள் ஒரு புறம் என்றால் சத்யஜித் ரேயின் ‘சாருலதா’ பார்த்ததில்லையா என மேதாவி சிரிப்புச் சிரிப்பவர்கள் மறு புறம் (இரண்டுமே அரூ குழுவில்தான் …) உங்கள் கருத்து என்ன?

இலக்கியத்தைச் சினிமாவாக எடுக்கும்போது மௌனவாசிப்பில் ஒருவர் அடைந்த அனுபவத்தை ஒரு போதும் தர இயலாது. ஆனால் மிகச்சிறந்த இயக்குநர்கள் நாவலில் நாம் பெற்ற அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தைத் திரையில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ‘பதேர் பாஞ்சாலி’ நாவலில் ரயிலை அபு காணும் காட்சி ஒரு அனுபவம் மட்டுமே. ரேயின் பதேர்பாஞ்சாலியில் அந்தக் காட்சி பரவசமாகிறது. டேவிட் லீன் இயக்கிய டாக்டர் ஷிவாகோ (Doctor Zhivago) பாருங்கள். நாவலை விடவும் படம் சிறப்பாக உள்ளது. இது போலவேதான் ஹிட்ச்காக் இயக்கிய திரைப்படங்கள். அந்த நாவல்களை வாசித்தால் இத்தனை திகிலும் பரபரப்பும் இருக்காது. அதே நேரம் தாரஸ் புல்பா, இடியட், கரமசோவ் சகோதரர்கள் போன்ற நாவல்கள் திரைப்படமாக வெளியாகி தோல்வியே அடைந்தன.

எந்த இலக்கியப் படைப்பினையும் அப்படியே படமாக்க முடியாது. அதைத் திரைக்கு ஏற்ப மாற்றம் செய்யும்போது இழப்புகளைத் தவிர்க்க முடியாது. அட்டன்பரோவின் காந்தி படத்தில் காந்தியின் இளமைக்காலம் குறித்து ஒரு காட்சிகூடக் கிடையாது. நேரடியாகப் படம் காந்தி சுடப்படுவதில் துவங்கித் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்யும் பிளாஷ்பே காட்சியாகித் திரும்பிவிடுகிறது.

காந்தியின் சத்தியசோதனை படித்தால் அதில் இளமைப்பருவம் எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது. ஏன் அந்தக் காட்சிகளை அட்டன்பரோ தேவையில்லை என்று நீக்கினார். இந்தியராக இருந்தால் நிச்சயம் அந்தக் காட்சிகளைக் குறைந்த அளவில் வைத்திருப்பார். ஆகவே படத்தின் இயக்குநர் யார் என்பதே அந்த இலக்கியப் படைப்பினை அவர் எப்படி வெளிப்படுத்துவார் என்பதைத் தீர்மானிக்கிறது.

தேவதாஸ் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். பலமுறை பலமொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. பிமல்ராயின் தேவதாஸ் ஒருவிதம் என்றால் நாகேஸ்வர ராவ் நடித்த தேவதாஸ் மறுவிதம். எனக்கு தெலுங்கில் உருவாக்கபட்ட தேவதாஸ் மிகவும் பிடிக்கும். அதே நேரம் அந்த நாவலைப் படித்துப் பார்த்தால் அதன் அனுபவம் வேறுவிதமானது. படம் தான் நாவலை உலகம் அறியச் செய்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தரும் அனுபவம் ஒருவிதம் என்றால் அந்த நாடகங்களை சிறந்த இயக்குநர்கள் மகத்தான கலைப்படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார்கள். Kenneth Branagh – Hamlet, Grigori Kozintsev – King Lear, Akira kurosawa – Ran, Baz Luhrmann – Romeo and Juliet பாருங்கள். எவ்வளவு சிறப்பாக உருவாக்கபட்டிருக்கின்றன என்பதை நீங்களே அறிவீர்கள்.

தொடரும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 19:35
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.