ஒலிம்பிக் வெற்றி
கடந்த பதினைந்து நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து வந்தேன். இந்தப் போட்டிகள் மனதை மிகவும் உற்சாகப்படுத்தியது. பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதுமே பெரும் மனச்சோர்வும் அச்சமும் பீடித்திருந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் இதற்கு மாற்றான நம்பிக்கையை, உத்வேகத்தை அளித்தன.
இந்தியர்கள் போட்டியில் வெல்லும் தருணங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி நிகரற்றது. அதிலும் ஹாக்கி மற்றும் மல்யுத்த போட்டிகளில் கடைசி நிமிஷம் வரை ஏற்பட்ட பரபரப்பும் முடிவில் நாம் அடைந்த வெற்றியும் மறக்க முடியாதது.

ஒலிம்பிக் முழுவதும் இளைஞர்கள். துடிப்பான, திறமையான, உறுதியான இளைஞர்கள். அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்கக் காத்திருந்தார்கள். ஒரு கனவை எதிர்கொள்ளும் தருணமது. மைதானத்தில் அவர்கள் நடந்து வருவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது போலவே தோற்றவர்களும் கூட தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு கம்பீரமாகத் திரும்பிச் செல்வதைக் காணும் போது பரவசமாக இருந்தது
கொட்டும் மழைக்குள்ளும் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். அவர்களில் எவரும் இந்தச் சூழலில் விளையாடுகிறோமோ என்று புலம்பவில்லை. எந்த முகத்திலும் கலக்கமில்லை.
விருதை வாங்கும் போது அவர்கள் கண்களில் கசியும் கண்ணீர் மகிழ்ச்சியால் மட்டும் ஏற்படவில்லை. எத்தனை தடைகள். புறக்கணிப்புகளைத் தாண்டி தன்னை நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் வழியே ஒரு தேசம் தலைநிமிர்கிறது. அந்தத் தேசத்தின் கடைக்கோடி மூலையில் உள்ள ஒருவருக்கு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது.
ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா.

நீரஜ் சோப்ராவின் தங்கம் இந்தியாவில் மறைந்துகிடக்கும் திறமையின் அடையாளம். ஒலிம்பிக்கிற்கு முன்னால் நீரஜ் சோப்ராவைப் பற்றியோ, ஈட்டி எறிதல் பற்றியோ ஊடகங்கள் கவனம் கொள்ளவேயில்லை. ஊடக கவனம் குவிந்திருந்த போட்டிகளில் நாம் வெற்றிபெறவில்லை. ஆனால் நீரஜ் வந்தார், வென்றார் என்பது போலத் தனது அபூர்வ சாதனையை நிகழ்த்தித் தங்கத்தைப் பெற்றுவிட்டார்.
ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ஆடியது மிகச்சிறப்பு. உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இந்தியா ஹாக்கியில் தனது பெருமையை மீட்டுக் கொண்டுவிட்டது
பி வி சிந்து இரண்டாம் முறையாகப் பதக்கம் பெற்றிருப்பது மகிழ்ச்சியானது. ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் புதிய வரலாறு படைத்துள்ளார்.,
மல்யுத்த போட்டியில் ரவிகுமார் தஹியா மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் சிறப்பாக மோதினார்கள். வென்றார்கள். அவர்களின் வெற்றியை ஹரியானாவில் மக்கள் கொண்டாடியதைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். என்னவொரு சந்தோஷம். உற்சாகம்.
சிறப்பாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடர் நேற்று மாலை வான வேடிக்கைகளுடன் முடிவடைந்தது. பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் ஒப்படைக்கப்பட்டது. அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கொடியேந்தி வந்த போது நாங்களும் கைதட்டிக் கொண்டாடினோம்.
கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெல்லும் போது வீதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். மைதானத்தில் இனிப்பு வழங்குவார்கள். பேனர் வைப்பார்கள். அப்படியான எந்தக் கொண்டாட்டதையும் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற போது காணமுடியவில்லை என்பது வருத்தமானதே.
தடகள விளையாட்டுகளில் இந்தியாவிற்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இந்தியாவின் கடமை.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
