ஆலயம்- கடிதம்-5

www.marvelmurugan.com ஆலயம் எவருடையது?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது ஆலயம் பற்றிய அனுபவம் விசாலமானது மற்றும் நேரில் கண்டடைந்தது (வெறும் புத்தக அறிவல்ல) என்று அறிவேன். மற்றும் தாங்கள் எனது ஆதர்ச எழுத்தாளர். எனவே மாற்று கருத்து கூற சிறிது தயக்கம் இருந்தது.

(1) சத்குரு அவர்கள் கோவில்களை இப்போது அமைந்திருக்கும் அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றோ, இல்லை கோவிலில் பூஜை செய்யும் சாதியை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றோ எங்கும் சொல்லவில்லை. அவர் சொல்வது ‘பக்தர்களிடம்’ ஒப்படையுங்கள். முழுமையான செயல்திட்டம் அவரிடம் உள்ளது (ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்). கிட்டத்தட்ட ‘autonomous system’ போன்று செயல்படும் பக்தர்கள் மற்றும் ஆன்றோர் கமிட்டி போல இருக்கலாம். செயல்திட்டம் முழுவதும் வெளியிட்டால், அதை பற்றிய விவாதமே நடக்கும். எனவே இப்போது ஒற்றை வரியில் ‘பக்தர்களிடம்’ ஒப்படையுங்கள் என்று சொல்லி விட்டார். எனவே பக்தர்கள் என்று கூறியவுடன் கோவில் புராதனம் பற்றி அறியா மூடர்கள்  என்ற ,முன்முடிவு தேவை இல்லை. நாமே  இவ்வளவு யோசிக்கும் போது, கோவில்களின் ஆன்மீக அறிவுள்ள அவர் கண்டிப்பாக யோசித்திருப்பார் என்று நம்புவது நல்லது.

(2) தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு தாங்கள் சென்றிருப்பீர்கள். அரசாங்கம் நிர்வகிக்கும் கோவில்களின் பராமரிப்புக்கும், இவைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் தங்களுக்கே தெரியும். ஒரு புகழ் பெற்ற மதுரையில் உள்ள சிவன் கோவில் சென்றபோது கருவறை அருகே மிக மோசமான வாடை அடித்தது. அபிசேக நீர் ஒரு வாரமாக சுத்தபடுத்தபடாமல் இருந்தது. நொந்து போனேன். அங்கே உள்ள எந்த ஒரு அறநிலைய துறை ஊழியர்களுக்கும் அதில் எள்ளளவும் கவலை இல்லை. அவர்களது ஒரே குறி டிக்கெட் குடுக்காமல் காசை மட்டும் வாங்கி கொண்டு சிறப்பு பாதையில் பக்தர்களை அனுப்பதிவதிலே இருந்தது.

(3) கோவில்கள் அரசாங்கத்தால் வருவாய் வரும் இடம் போலவே கையாள படுகிறது. ஆன்மீக உணர்வு இல்லாதவர்களிடம் கோவில் இருக்ககூடாது. மற்ற மதத்தில் அந்தந்த மதத்தை சேர்த்த பக்தர்கள் வசம் இருக்கும்போது, ஏன் இந்து என்று வரும்போது மட்டும் இப்படி கேள்வி எழுகிறது?

தங்கள் அன்புள்ள

சக்தி, மதுரை

 

அன்புள்ள சக்தி,

நான் ஜக்கி வாசுதேவ் அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு எதிராக எதையும் சொல்லவில்லை. கோயில்கள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை, அவை அழிந்துகொண்டிருக்கின்றன என்ற விழிப்புணர்வை சமூகத்தில் உருவாக்க அவருடைய இயக்கத்தால் இயலுமென்றால் அது வரவேற்புக்குரியதே. இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் அதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த விழிப்புணர்வை பொதுவாகக் கொண்டுசெல்ல முடியவில்லை. இதழ்கள் எண்ணியும் முடியவில்லை. அவரைப்போன்ற ஆன்மிக இயக்கத்தலைவர்களால் இயலலாம்.

ஆனால் செய்யவேண்டியது ஆலயம் ஒரு பொதுச் சொத்து, பேணப்படவேண்டியது, அதன் நெறிகள் கடைப்பிடிக்கப்படவேண்டியவை என்னும் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்குவதுதான். மக்களுக்கு அந்த விழிப்புணர்வு ஓரளவேனும் வந்தால்கூட ஆலய அழிவுக்கு எதிராகக் குரல்கொடுப்பார்கள். ஆகம மீறல்களை எதிர்ப்பார்கள். அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படவேண்டும் என்று கருதுவார்கள். ஆலயச் சொத்துக்கள் சூறையாடப்படுவதை கண்டிப்பார்கள். மக்கள் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்பதே இன்றைய முதற்சிக்கல்.

அதை செய்யாமல் அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று மட்டும் குரலெழுப்புகையில் அது அதிகாரத்துக்கான குரலாலாக ஒலிக்கிறது. எதிர்மறை அரசியல் ஆன்மிகத்திற்கு எவ்வகையிலும் உகந்தது அல்ல. அதை எப்போதும் அரசியல்வாதிகளே கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

இன்று ஆலயப்பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டாகவேண்டிய நெறிகளை வகுத்து அவற்றை மக்கள் முன்வைப்பதே ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் செய்யவேண்டியது. அவற்றை மக்கள் ஏற்றுக்கொண்டால் அரசும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை விதி.

ஜெ

ஆலயம் கடிதம் 1 ஆலயம் கடிதங்கள்-2

ஆலயம் கடிதங்கள் 3

ஆலயம் எவருடையது? கடிதம் 4

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.