வான்நெசவு

அமேசான் நூல்கள்

இந்தக் கதைகள் அனைத்துமே நான் பணியாற்றிய தொலைதொடர்புத்துறை சார்ந்து எழுதப்பட்டவை. நான் 1984 நவம்பரில் தொலைதொடர்புத்துறை ஊழியனானேன். நான்காண்டுகள் கழித்து 1988ல் நிரந்தர ஊழியராக ஆனேன். முதலில் கேரளத்தில் காசர்கோடு. பின்பு தமிழகத்துக்கு மாற்றலாகி வந்தேன். 1989 முதல் 1997 வரை பாலக்கோட்டிலும் தருமபுரியிலும். 2008ல் இருபதாண்டு ஊழியத்துக்குப்பின் விருப்ப ஓய்வுபெற்றுக்கொண்டேன். அதுவரை தக்கலை தொலைபேசி நிலைய ஊழியர்

நான் பணியிலிருந்த நாள் முழுக்க என்.எஃப்.பி.டி.இ தொழிற்சங்க ஊழியன். அது இடதுசாரி தொழிற்சங்கம். பின்னர் அது உடைந்தபோது மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிச் சார்புள்ள பி.எஸ்.என்.எல்.யூவின் உறுப்பினர். ஆனால் அந்த உடைவு தொலைதொடர்புத் துறை ஊழியர்சங்கங்களின் வீழ்ச்சியின் தொடக்கம் என்றும், பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஆற்றல் முழுமையாகவே அழிய வழிவகுத்தது என்றும், அதற்குக் காரணமாக அமைந்தது மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல்நோக்கம் கொண்ட ‘கைப்பற்றல்’ உத்தி என்றும் இன்று நம்புகிறேன்

2005 முதலே நான் பி.எஸ்.என்.எல் வேலையில் இல்லை என்று சொல்லவேண்டும். பெரும்பாலும் விடுப்பில் இருந்து சினிமா வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். விருப்ப ஓய்வுக்குப் பின் நான் பி.எஸ்.என்.எல்லை மறந்தேவிட்டேன். அங்கே பணியாற்றியதாக கற்பனைகூட செய்ய முடியாத நிலை. எப்போதாவது அந்த அலுவலகத்தை கடந்துசெல்லும்போது ஒரு மின்னல்போல நினைவு எழுந்து வரும். ஆனால் உடனே விலக்கிவிடுவேன்

இக்காரணத்தால் நான் பி.எஸ்.என்.எல் தோழர்கள் எவரிடமும் தொடர்பை பேணவில்லை. 1989 முதல் 2008 வரை என்னுடன் பணியாற்றிய எவரையும் அதன்பின் ஒருமுறைகூட சந்திக்கவில்லை. ஓர் ஆழமான விலக்கம் அது. ஆனால் விதிவிலக்கு மலபார் நண்பர்கள். அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து அவர்களுடன் நல்லுறவில் இருக்கிறேன்.

அதற்கு ஒரு காரணம் உண்டு. அரசு ஊழியர்களுக்கு ஒரு மனநிலை உள்ளது. அவர்கள் எவராயினும் அவர்கள் பார்க்கும் வேலையின் படிந்லையை ஒட்டி மனநிலையும் அமையும். அவர்கள் எப்படியானாலும் பிறர் அவர்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஒருவர் இன்னொருவரை சந்தித்ததுமே அவர் என்ன வேலைப்படிநிலையில் இருக்கிறார் என்றுதான் கேட்பார். அது நவீனச் சாதிமுறை. உடலுழைப்பு தொழிலாளர்கள், குமாஸ்தாநிலை ஊழியர்கள், சிறுஅதிகாரிகள், உயர்நிலை அதிகாரிகள் என்று நால்வர்ணம் அங்கே உண்டு.

அந்தச் சாதிமுறை மிகமிக கறாராகப் பேணப்படுவது. ஒருவர் கழிப்பறையை இன்னொருவர் பயன்படுத்த முடியாது. ஒருவர் நாற்காலியில் இன்னொருவர் அமர முடியாது. ஒரு கடைநிலை ஊழியர் மகத்தான எழுத்தாளர் என்றாலும் முதல்நிலை அதிகாரிக்கு அவர் தீண்டத்தகாதவரே, அவருடன் அமர்ந்து உணவுண்ண மாட்டார். ஒரே காரில் பயணம் செய்ய மாட்டார். அலுவலகங்களில் வேலைசெய்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

நான் பி.எஸ்.என்ல்.எல்லில் குமாஸ்தாவாக இருந்தேன். அதுவே என் இலக்கியவேலைக்கு வசதியானது என முடிவுசெய்து எந்த போட்டித்தேர்வும், தகுதித்தேர்வும் எழுதாமல் அதிலேயே நீடித்தேன். ஆனால் குமாஸ்தா என்னும் நிலையை என் உளநிலையாக ஆக்காமல் மிக கவனமாகவும் இருந்தேன். எழுத்தாளனாகவே என்னை வைத்துக்கொண்டேன். நான் ஆண்டில் நூற்றைம்பது நாள் பணியாற்றினால் மிகுதி. பெரும்பாலும் சம்பளமில்லா விடுப்பில் இருப்பேன். பயணங்கள் செய்துகொண்டே இருந்தேன்.

ஆனாலும் நான் குமாஸ்தாவாகவே பார்க்கப்பட்டேன். என் பழைய அலுவலகத் தோழர்களில் நான் எழுத்தாளன் என அறிந்தவர்கள் ஓரிருவர் மட்டுமே. வாசகர்கள் என எவருமில்லை. குமாஸ்தாவாக ஒரு குறுகல் என்னிடம் இருந்தது என அதை அந்த வேலையை உதறிய பின்னரே உணர்ந்தேன். இன்றிருக்கும் நிமிர்வுடன் நான் பி.எஸ்.என்.எல்லை நினைக்க முடியாது. ஒரு முன்னாள் தொலைதொடர்பு ஊழியரை நான் சந்தித்தால் ஐந்தாவது நிமிடத்தில் அவர் என் பென்ஷன் என்ன என்று கேட்டு என்னை குமாஸ்தாவாக உருமாற்றிவிடுவார். மலபார் நண்பர்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் இன்னமும் இந்தியாவில் புரட்சி வரும் என நம்பியிருக்கும் எளிய மார்க்சியர்கள்.

இன்று நான் உணரும் விடுதலை, நிமிர்வு ஆகியவற்றுக்கு சினிமாவுக்கு கடன்பட்டிருக்கிறேன். நான் தமிழுக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்குப் பெரும் பங்களிப்பாற்றியவன். சங்க காலம் முதல் இன்றுவரை அவ்வகையில் என்னுடன் ஒப்பிடச் சில பெயர்களே உள்ளன. அதில் எனக்கு ஐயமில்லை. காலம் அதை ஏற்று நிலைநிறுத்தும். பதிலுக்கு தமிழ்ச் சமூகத்தில் இருந்து நான் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஓர் எழுத்தாளனுக்குரிய இடத்தை, பொருளை அளித்தது தமிழ் சினிமாதான். தமிழகத்தில் நான் எவருக்கேனும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் தமிழ் திரையின் இயக்குநர்களுக்கு மட்டும்தான்.

ஆனால் ஓர் அமைப்பாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். இருபதாண்டுக்காலம் எனக்கு கவலையற்ற ஒரு வேலைச்சூழல் அங்கே இருந்தது. இன்று பல நண்பர்கள் அலுவலகச்சூழலால் பிழிந்தெடுக்கப்பட்டு சக்கையாக மீள்வதை காண்கையில் நான் நல்லூழ் கொண்டவன் என உணர்கிறேன்.

தொலைதொடர்புத்துறை வாழ்க்கையைப் பற்றி நான் ஒரு சொல்கூட எழுதாமைக்குக் காரணம் இந்த விலக்கம்தான். அங்கே என்னை நிறுத்திக்கொள்ள, அவ்வடையாளத்தை சூடிக்கொள்ள நான் விரும்பவில்லை.  தொலைபேசித் துறையில் இருந்து விடுபட்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொலைபேசித் துறை பின்னணியில் என் முதல் கதையை எழுதியிருக்கிறேன். அச்சூழல் என் உள்ளத்தில் பின்னகர்ந்து, போதிய இடைவெளி உருவாகி, அதை எவருடைய வாழ்வோ என நான் அணுக இத்தனை காலம் ஆகியிருக்கிறது. இந்தக் கதைகளில் தொலைதொடர்புத்துறை உள்ளது,  நான் இல்லை.

இந்தக்கதைகளில் ஓர் அலுவலகச் சூழல், ஒரு தொழில்நுட்பச்சூழல் உள்ளது. ஆனால் அது ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்ட ப்படவில்லை. தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன. தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன.

என் பிரியத்திற்குரிய மலபார் நண்பர்கள் பாலசந்திரனுக்கும் கருணாகரனுக்கும் இந்நூல்

ஜெ

மின்னூலாக வெளிவந்திருக்கும் வான்நெசவு தொகுப்புக்கான முன்னுரை

வான்நெசவு வாங்க

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.