மாபெரும் தாய் –கடிதங்கள்

சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்

ஜெ,

திரு. அகர முதல்வனின் எண் என்னிடம் இல்லை, இதை அவருக்கு அனுப்பி விடவும்.

“மாபெரும் தாய்” ஒரு உக்கிரமான கதை. இவ்வளவு கனன்ரெரியும் விவரிப்புகள் கொண்ட வெடித்து மின்னும் கற்பனை கொண்ட எழுத்தை நாம் அரிதாகவே வாசிக்கிறோம். முடிவிலாது பிறப்பிக்கும் தாய் என்கிற கதைக் கோடு இருந்தாலும் இதன் விவரணைகளே இந்த சிறுகதையின் சிறப்பு. இதில் காட்டப் பட்டிருக்கும் காட்சிகளும் அதை வர்ணிக்க துரத்திச் செல்லும் மொழியும் இதை ஒரு வாசிப்பு வளமிக்க கதையாக நம் முன் நிறுத்தி உள்ளது.

“தொன்மை உறைக்குள் செருகப்பட்ட மிகநீண்ட கருப்புநிற வாள்களாய் திசையெங்கும் பனைகள் உடல் நீட்டி நின்றன”

என்கிற வர்ணனையில் நம் வாசிப்பு பற்றிக் கொள்கிறது.

“மரத்தின் பொந்துக்குள் ஒரு நீலமலர் மட்டும் தனித்திருந்தது. பொந்தின் உள்ளே வரையப்பட்டிருந்த ஓவியத்தின் கோடுகளைக் கண்டதும் என் தண்டுவடத்தின் ரத்தவாசம் மூக்கைத் தீட்டியது. கால்களை அகல விரித்திருக்கும் பெண்ணின் ஆதிவாசலில் தீயின் கனி சுடர்ந்துகொண்டிருந்தது”

என்கிற வர்ணனை ஒரு அபாரமான காட்சி அனுபவம்.

பிரமிளின் காடன் கண்டது, ஜெயமோகனின் அம்மன் மரம் போன்ற கதைகளில் இதே போன்றதொரு உணர்வினை பெற்றுள்ளேன்.

நல்லதங்காள் போன்ற நாட்டார் தொன்மங்கள் வரிசையில் ஒரு நவீன தொன்மமாக வெற்றிகரமாக ஆச்சியை படைத்துள்ளார் அகர முதல்வன். வழிபடும் ஓவியத்தில் இருந்து ஒரு மந்திரக் கத்தியுடன் பிறந்து இறுதியில் அந்த ஓவியத்தில் சங்கமிக்கிறாள் ஆச்சி.

அவள் வழிபாடும் தன் பெண்ணுறுப்பில் பாய்ச்சிக் கொள்ளும் கத்தியும், கோபிகாவின் கருக் கலைப்பும் ரத்தத்தில் எழுதப்பட்ட பக்கங்கள். ஒரு இனத்தின் ஆழத்தில் தாய்மையும் குருதி காண் கொற்றவையும் ஒருங்கே அமைந்திருக்கும். அது தான் ஒருங்கே அவ்வினத்தை புரந்து கொண்டும் குருதி குடித்துக் கொண்டும் இருக்கும். இச்சிறுகதையில் அத்தன்மை நம் மனதில் ஒரு பழுக்க காய்ச்சிய கம்பியால் ஒரு ஆழமான சித்திரமாக எழுதப் பட்டுள்ளதையும் அது ஒரு இறந்த காலத வடுவாக அமைந்துள்ளதையும் இறுதியில் நாம் உணர்கிறோம். இது காட்டும் அரசியல் முகம் தனியே வாசிக்கத் தக்கது.

ஒரு வேட்டை நாய் போல அச்சிறுவன் பின்தொடரும் இடமும் அப்பகுதியை விவரிக்கையில் எழுத்தாளனின் சொல் பெற்ற விசையும் நம்மை திகைக்க வைக்கிறது. இக்கதையின் வாசகனாக நாமும் ஒரு நாய் போல அறியாபாதையில் நீட்டிய வாலுடன் முகர்ந்து கொண்டே சென்று ஒரு தொன்மையான குகைக்கு முன் நின்று அங்கு வரையப்பட்டுள்ள மாபெரும் தாயை திடுக்கிட்டு தரிசிக்கும் ஒரு தகிக்கும் அனுபவம் இக்கதை.

கிருஷ்ணன்,

ஈரோடு.

 

அன்புள்ள ஜெ

அகரமுதல்வனின் மாபெரும் தாய் ஒரு அருமையான கதை. ஒரு பழைய தொன்மத்தை நவீன தொன்மமாக ஆக்கி அளிக்கிறது இந்தக்கதை. நவீனச் சிறுகதையின் இலக்கணம் ஏதும் இல்லாமல் வெறும் ஒரு கதையாகவே நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் இதை இலக்கியமாக ஆக்குவது அதில் வரும் ரத்தம் என்ற குறியீடு. தாய்மையின் ரத்தம் போரின் ரத்தம் என்ற முரண்பாடு. ஆச்சி தாய்மையின் ரத்தத்தின் அதிபதி. போரின் ரத்தம் அவளை என்ன செய்யும் என்ற கேள்வியுடன், ஒரு தவிப்புடன் கதை முடிகிறது.

யோசித்துப் பார்க்கையில் இத்தகைய ஒரு கதை ஒரு சைவப்பின்னணியிலிருந்தே வரமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. காரக்கால் அம்மையாரின் கதை நினைவில் வந்து தொட்டுக்கொள்கிறது. பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை என்ற பாரதியின் வரியும் வந்து இணைந்துகொள்கிறது

எம்.மகேந்திரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.