கதாநாயகி- கடிதங்கள் 10

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது

புத்தகத்தை திறந்து நாம் புத்தக உலகத்துக்குள் நுழையும் போது புத்தக உலகத்திலிருந்ததை திறந்து வெளியே விடுகிறோம். நாம் உள்நுழைந்து வாழ்வதைப்போல வெளி வந்ததும் வாழ்கிறது. பரஸ்பர உரையாடல் நிகழ்ந்து அறிமுகமாகிதான் உள்நுழையவோ வெளியேறவோ முடியும். எத்தனை புத்தகம் படித்தாலும் அத்தனை உலகத்திலும் உள்நுழைந்து உரையாடி அதிலிருப்பதை அவிழ்த்து வெளியே விடுகிறோம்.

அது தேவதையாகவுமிருக்கலாம். பிசாசாகவுமிருக்கலாம். பரஸ்பர அறிமுகமிருப்பதால் சந்திக்க நேரும் போது புன்னகை ,பூக்கவோ துணுக்கறவோ, சீறவோ, சினக்கவோ நேரிடலாம்.

மெய்யன் பிள்ளையின்உள்நுழைந்ததும் அவிழ்த்து விட்டதும் சந்திக்கும் புள்ளியில்தான் ஹெலானாவின் உருவெளித்தோற்றத்தை பார்பப்பதும் சீறுவதும் சினப்பதுவும் ஆங்கிலத்தில் பேசுவதும் தன்னிலையழிவதும் நடக்கிறது.

இந்த சிறிய அளவு உளச்சிதைவுயில்லையென்றால் நாட்டில் பிறந்தவன் காட்டில் வாழ முடியாது. மெய்யன்பிள்ளை புத்தக வாசிப்பை நாளிதழைக்கூட வாசிப்பதை நிறுத்திதான் மீண்டார்.

ஹெலனா புலியின் முன் சாப்மானை உதைத்துத் தள்ளி பிரெஸ்லெட்டை வீசியெறிந்ததில் ஆச்சரியமில்லை. பெண்கள் மனதுக்கு  ஒவ்வாதவற்றை திரும்ப திரும்ப செய்யவோ அணுபவிக்கவோ நேரிடும் போது மனதுக்குள் கசந்து கசந்து மனதுக்குள் இனிமையை அறியும் சாளரம் ஒன்றை இறுக்கி மூடிக் கொள்கிறார்கள்.

தனக்கு அடையாளம் தேடியலையும் ஹெலானா போன்ற பெண் எத்தனை கசந்திருப்பாள். ஆணை வைத்துதான் அடையாளம் எனில் அவள் போடும் வேடமும் சிரிப்பும் நாசூக்கான பேச்சும் கண்டிப்பாக ஆணை கவிழ்த்து போட்டு மிதிக்கவே செய்யும்.

நீ சுயமாக அரசியாக முடியாது. அரசியாக வேண்டுமென்றால் அரசனுக்கு மகளாக பிறக்க வேண்டும் அல்லது அரசனை மணமுடிக்க வேண்டும் என்றால் பெண் என்ன செய்வாள். மன்னன் மகளாக பிறப்பது அவள் கையிலில்லை. மணமுடிக்கவும் முடித்தவனை கைக்குள் வைக்கவும் சகல அஸ்திரங்களையும் பயன்படுத்துவாள்.

ஹெலானா நிறைவடையாமல் புத்தகத்துள் இருக்கிறாள். ஆண்களே கவனம்.
நன்றி.

தமிழரசி.

 

அன்புள்ள ஜெயமோகன்,

புற உலகம் பொருள்களால் ஆனது. ஆகவே தர்க்கத்திற்கு இடமளிப்பது. அக உலகம் உணர்வுகளால் ஆனது. தர்க்கத்திற்கு அதீதமானது. புற உலகில் ஆளுமை செலுத்தும் ஆண்கள் அக உலகில் பெண்களைச் செலுத்தும் விசைகளை புரிந்து கொள்ள வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து முடியாமல் இறுதியில் உதை வாங்கி புலி வாயில் அகப்படுவதும் , தற்கொலை யில் மடிவதும் நல்ல முரண்பாடு.

நெல்சன்

அன்புள்ள ஜெ

கதாநாயகி நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசிக்க முடியாத நாவல். ஒரே வீச்சில் செல்லாமல் அங்குமிங்கும் தொட்டுக்கொண்டே செல்கிறது. நாவலின் முக்கியமான அம்சமே அதில் இருக்கும் ‘ரிப்பீட்டிங்’தான் ஒரே வகையான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் ரோம் முதல் திருவனந்தபுரம் வரை நடக்கின்றன. அதற்கு ஆண்களும் பெண்களும் எதிர்வினையாற்றுவதில் மிக நுட்பமான வேறுபாடுதான் இருக்கிறது. ஒரே வகையான எதிர்வினை, ஆனால் ஓரிரு சொற்கள் மாறியிருக்கின்றன

அதேபோல உணர்ச்சிகளும் எவருடைய உணர்ச்சிகளென்று தெரியாமல் கலந்துள்ளன. ஒருவருடைய உணர்ச்சிகள் இன்னொருவருடைய உணர்ச்சிகளாக மாறியிருக்கின்றன. விர்ஜீனியா ஈவ்லின் ஃபேன்னி ஹெலெனா நால்வரும் ஒன்றுகலந்துள்ளார்கள். நால்வரின் சொற்களும் மெய்யனின் சொற்களும் ஒன்றாகின்றன. இந்த ரிப்பீட்டிங் அம்சத்தை கணக்கில்கொண்டுதான் கதாநாயகியை சரியாக வாசிக்கமுடியுமென நினைக்கிறேன்

ஆ.சிவக்குமார்

கதாநாயகி கடிதங்கள் -9

கதாநாயகி, கடிதங்கள் -8

கதாநாயகி கடிதங்கள்- 7

கதாநாயகி, கடிதங்கள்-6

கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.