கதையே வாழ்க்கை

இடக்கை நாவல் குறித்த விமர்சனம்.

செ.ஆதிரை.

      இடக்கை நாவல் நூற்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்களையும், மன்னன்களின் அசுர வேட்டைகளையும், கொலைகளையும், அவர்களின் மன்னிப்புகளையும், மனித பசியின் கோரதாண்டவத்தையும், நீதி மறுக்கப்பட்டவர்கள், நீதி கேட்டு அலைவதையும், டெல்லி மாநகரைச் சுற்றி தெருத்தெருவாக அலைந்துதிரிந்து தெரிந்துகொண்டதுபோல் உள்ளது ….

       இதில் முதல் கதையே ஒளரங்கசீப்பைப் பற்றியது தான் …..தனக்கு எதிராக போர்த் தொடுக்க வரும் மன்னர்களை பயத்தில் தள்ள, அரசனுக்கு எதிரான போரில் தோற்ற வீரர்களின் 1000 நாக்குகளை மட்டும் வெட்டி மாலையாக்கி, அரண்மனை வாயிலில் தொங்கவிட்ட மன்னன் ஒளரங்கசீப்…

அனார் என்பவள் தாதிப் பெண்களில் ஒருவள். ஒரு முறை ஒளரங்கை அழைத்து பவளமல்லி பூ ஒன்றை மரத்திலிருந்து உதிர்க்கச் செய்து பிறகு அதை மரத்திலே ஒட்ட வைக்கச் சொன்னாள். ஒளரங்கசீப் பல முறை முயன்றும் அதை ஒட்ட வைக்க முடியவில்லை. அரசனுக்கு முடியாத ஒன்றைச் சொன்னதால் யானையின் காலில் மிதித்து கொல்லப்பட்டாள். அதற்கு ஆணையிட்டது ஒளரங்கசீப் …..

இவர்களை விட்டுத் தள்ளுங்கள்….இவர்களெல்லாம் யார் யாரோ….. தனது சொந்த மகளான ஜெப்புன்னிஷா தனக்கு பிடிக்காத, எதற்கும் உதவாத கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள் என சிறையில் அடைத்தவன். இது தவறு என அஜ்யா உரைத்த போது “குற்றவாளிகள் மீது நான் ஒருபோதும் இரக்கம் காட்டுவதில்லை”. கவிதை எழுதினால் கூட குற்றமா ! அது சரி கவிதை என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனிடம் “நான் கவிதை பாடுவதற்காகவே பிறந்தவள், தான் இறந்தாலும் எலும்புகள் பாடிக் கொண்டிருக்கும். ரோஜா செடியை புதைமேட்டில் வைத்தாலும் பூக்க வே செய்யும். அதன் நிறம், மணம் மாறிவிடாது”. இப்படியெல்லாம் உணர்ச்சி பொங்க பாடியது ஜெப் புன்னிஷாவின் தவறு தான்…..பாவம் அவள் ஆராயும் மூளைக்கு, அழகை எப்போதும் ரசிக்கத் தெரியாது என அறியாமல் போய்விட்டாள்…..

அதன் பிறகு வருடங்கள் கடந்தது. இவ்வளவு மரணத்தையும், இயல்பாக கண் இமைக்கும் நேரத்தில் செய்து முடித்த ஒளரங்கசீப் இறுதியாக தனது மரணம் எப்படி நிகழப்போகிறதோ என பயந்து பயந்து நிமிடத்தைக் கடத்தினான். இறுதியாக ஞானி இபின் முகைதீனிடம் சென்று தனது மரணம் எவ்வாறு நிகழப்போகிறது? என எந்தப் பாவமும் செய்யாதவன்போல கேட்பான். பிறகு இபின் சில பதில்களை முகத்தில் அறைந்தார் போல கூறுவார்.

ஒளரங்: என் மரணம் இயல்பாக இருக்காது என தோன்றுகிறது.

ஞானி : எப்படி நடந்தாலும் மரணம் ஒன்று தானே. கவலைப்படுவதால் என்ன ஆகப்போகிறது.

ஒளரங்: துர்மரணத்தை நான் விரும்பவில்லை.

ஞானி : மரணம் எவர் விருப்பத்தின்படியும் நிறைவேறுவதில்லை.

    இப்படியாக ஞானி ஒளரங்கசீப்பை மன்றாடவைத்துவிடுவார். இறுதியில் ஒளரங்கை ஒரு மணற்குன்றிலிருந்து தனது கையால் தண்ணீர் எடுத்துவரச் சொல்வார். ஆனால் தண்ணீர் ஞானியை நெருங்கும் முன் கைகளிலிருந்து சிந்திவிடும். இப்படியாக பல முறை முயற்சி செய்து தோற்பார். ” இதுதான் உன் விதி. உன் தேசத்தின் விதி…… உன் கைகள் இரத்தக் கறை படிந்தவை. எந்தக் கரங்கள் தூய்மையானதாக, அடுத்தவரை தாங்கிப் பிடிப்பதாக, இருப்பதை அன்போடு பகிர்ந்து தருவதாக இருக்கிறதோ அக்கரங்களில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். உன் கரங்கள் பேராசையின் கறை படிந்தது. அப்பாவிகளின் குருதிக் கறைபடிந்தது. அதிகாரத்திற்காக ஆயிரம் ஆயிரம் துரோகச் செயல் செய்தது. இந்தக் கைகளால் ஒரு துளி தண்ணீரைக் கூட காப்பாற்ற முடியாது. உன் செயல்களே உன் இறுதியை தீர்மானிக்கின்றன”. இவ்வாறாக ஞானியின் பதிலே ஒளரங்கை பாதியாக தின்று தீர்த்துவிடும். இறுதியாக ஞானி முடிவிற்கு வந்து ” உன் மரணம் எவர் கைகளாலும் நிகழாது. ஆனால் நீ நோயினால் அவதியுற்று இறந்துபோவாய்”.

ஆயிரம் ஆயிரம் அப்பாவித்தலைகளை எடுத்த மன்னனுக்கு இறுதியில் யார் அவர் தலையை எடுக்கப்போகிறார் என்ற பயம் …… வாழ்வின் கொடுமையான நிமிடங்கள் தன் சாவை கண் முன் பார்ப்பது. அது ஒளரங்கிற்கு கிடைத்துவிட்டது. அதேபோல் இறுதிக் காலங்களிலாவது அவர் தனது தவறை உணர்ந்தாரே என்று மனதிருப்தி கொள்வதா? அல்ல குழம்பி சுற்றுவதா? எனத் தெரியவில்லை…..

         இரண்டாவதாக முடிக்கப்படுவது அஜ்யாவின் கதை . அஜ்யா என்பவன்அரவாணி. அந்தப்புரத்தில் பணியாற்றுபவள். ஒளரங் தனது வாயால் சகோதரி என அன்பாக அழைக்கப்பட்டவள். சிறு வயதில் ஆணாக இருந்த அவள் ஒரு சிலையின் மீது ஆசைபட்டு பெண்ணாக உருமாறியவள். அந்த சிலைக்கு கூட ராதா எனப்பெயர் வைத்து அழகு பார்த்தவள் அவள் ஒருத்தியே…. சிறு வயதில் இம்ரான் என்னும் பெயருடன் பாவாடைகளை கட்டிக்கொண்டு விளையாடித் திரிவாள்.அப்போது தர்ஷன் என்னும் சிறுவன் குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு சில கதைகளை அவிழ்த்து விட அவன் பின்னாலேயே அலைவாள். கதைகள் எப்போதும் மனிதர்களை தன் பின்னே பித்து பிடித்தவர்களைப் போல அலைக்கடிக்கிறது. இறுதியாக தர்ஷன், அஜ்யா ஆண் என அறிந்து அவனை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டான். காலத்தின் சாபக்கேடுதான் நேசித்த ஒருவரை பிச்சைகாரர்களாக்கி நேசித்தவர் முன்நிறுத்துவது. தர்ஷின் கடைசியில் பிச்சைகாரனாக மாறி அஜ்யாவை சந்தித்து இறுதியில் அவள் கையால் சமைக்கப்பட்ட உணவை சுவைத்து சாப்பிட்டுவிட்டு” நீ மன்னனின் அவையில் மிகச்சிறந்தவளாக வருவாய்” என ஆசீர்வதித்துச் செல்வான்.அவன் சொன்னது போலவே  ஒளரங்கின் ஆலோசகராக இருந்தாள். பிறகு ஒளரங்காகும் தருவாயில் சில பொற்காசுகளையும், வெள்ளியால் நெய்யப்பட்ட குல்லாவையும் கொடுத்து சகோதரா என அழைத்த ஒருவனுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு, இந்த நாட்டைவிட்டு வேறு எங்காவது ஓடி விடு என்பான். ஆனால் அஜ்யா எங்கேயும் செல்லாமல் ஒரங்கின் மகன்களிடம் உதைபட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, இதற்கு சாவதே மேல் என்று முடிவு எடுக்கும் தருவாயில் தூக்கிலிடப்படுவாள்.

        அஜ்யாவைப் போன்ற சிறந்த மனிதரை ஒளரங்கின் நாடு இழக்கும் தருவாயில் கிழக்கிந்திய கம்பெனி உள்நுழைந்து தனது ஆட்டத்தைத் துவங்கியது. இதுவே ஒளரங்கின் மகன்களுக்கு கொடுக்கப்பட்ட சிறந்த தண்டனை…..

        மூன்றவதாக முடிக்கப்படுவது பிஷாட மன்னனின் கதை. இவனுக்கு பிஷாடன் என பெயர் வைத்ததற்கு பதிலாக மனித உயிர்களின் ஓலங்களை கேட்டு ரசிக்கும் பிசாசு என பெயர் வைத்திருக்கலாம். இவன் மக்களை படுத்திய பாடு அளக்கவே முடியாதது. இவனுக்கு பதில் ஒளரங்கே பரவாயில்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது மனது.

எதை வேண்டுமானாலும் பொருத்துக்கொள்ளலாம், ஆனால் தினந்தினமும் தனக்காதத் தோற்றுத் தோற்று சதுரங்கம் விளையாடிய அநாம் என்ற குரங்கை கொல்வதற்கு இவனுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ என மனது புலம்பியது…..

டெல்லி பயணத்திற்காக செல்லும் வழியில் யாரோ இரண்டு பேர் பிஷாடனை குருடனாக்கி, கையையும் காலையும் வெட்டிவிட்டு உயிருடன் விட்டுச் செல்வார்கள். அவன் உயிரையும் எடுத்து விடுங்கள் எனப் போராடுவான் . கனவிலும் கூட நான் யாரையும் சாக வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் இந்த பிஷாடன் விட்டால் என்னையே கொலைகாரி ஆக்கி இருப்பான். நல்லவேளை அவனே இறந்து விட்டான். இறுதியாக இவன் நீதி என்றால் என்னவென்றே தெரியாமல் செத்து விட்டான். இதுதான் என்னை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. என்ன செய்வது? நான் ஒன்றும் கதையின் ஆசிரியை இல்லையே ……

         அடுத்ததாக தூமகேது. வாழ்வென்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்வை முடித்த அப்பாவி…

இடையன் ஒருவனால் குற்றம் சுமத்தப் பட்டு காலாவில் அடைபட்ட அப்பாவி. பிறகு சக்ரதாரால் கட்டிவிடப்பட்ட கதைகளால் தப்பித்தவன் ……

தப்பித்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாடு நாடாக மனைவியையும் குழந்தைகளையும் தேடித்தேடி அலைந்ததைத் தவிர.

பிறகு கால்போன போக்கில் போகாமல் புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு இஸ்லாமிய பிச்சைக்காரன் ஒருவன் கொடுத்த வெள்ளி தொப்பியை அணிந்து கொண்டு , 10 வயதில் சாமந்தி மாலையை எடுத்ததால் சூடு வைக்கப் பட்ட கைகளில், வாழ்க்கையே வேண்டாம் என நினைக்கும் வயதில் அக்கைகளில் மாலை வந்து விழுகிறது. அந்த மாலையை எடுத்து முகர்ந்தபடியே அவனது இடக்கை தாளமிடுகிறது. இடக்கையில் முடிந்தே போகாத கதாபாத்திரம் தூமகேது. கதைகளின் வழியாக எல்லா ஊர்களிலும்  வாழ்ந்து கொண்டு இருப்பவன்….

கிணற்றடியிலும் , ஆட்டுத் தோலிலும் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனுக்கு கதையே வாழ்க்கை ஆகிப்போனது.

••••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2021 20:23
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.