குமரி ஆதவன்

வட்டார அறிவியக்கம் என ஒன்று உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை, எனக்கே அதைப்பற்றிய தெளிவு குமரி மாவட்டத்திற்கு 1998ல் வந்த பின்னர்தான் உருவாகியது. அதைப்பற்றிய மதிப்பும் அதன் வரலாற்று இடமும் உருவாக மேலும் பலகாலம் ஆகியது.

ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு, நிலப்பரப்பு வட்டத்திற்குள் மட்டுமே நிகழும் அறிவியக்கம் என வட்டார அறிவியக்கத்தைச் சொல்லலாம். அது மாநில அளவில், பொதுவான மொழிச்சூழலில் அறியப்படாமலிருக்கும். மாநில அளவில் அளிக்கப்படும் விருதுகளும் ஏற்புகளும் அதற்கு அமையாமலிருக்கும். ஆனால் அது ஓர் உயிர்ப்புள்ள இயக்கம்

குமரிமாவட்டத்தில் நானறிந்தவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. குமரிமாவட்டத்திற்குள் மட்டும் புழங்குபவை அவை. மதம்சார்ந்த வெளியீடுகள் மேலும் நூறு இருக்கும், அவற்றை இங்கே சேர்க்கவில்லை. இச்சிற்றிதழ்களில் கவிதைகள், கதைகள், சிறுகட்டுரைகள், வட்டாரச் செய்திகள் வெளிவருகின்றன. இவற்றுக்கு இங்கே ஒரு வாசிப்புச்சூழல் உண்டு.

சதங்கை சிற்றிதழ் இவ்வாறு வனமாலிகையால் வெளியிடப்பட்ட இதழ்தான். அ.கா.பெருமாள் பூதப்பாண்டியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த கைவிளக்கு என்னும் சிற்றிதழில்தான் தன் ஆரம்பகால எழுத்துக்களை எழுதிக்கொண்டிருந்தார். பூதை சொ அண்ணாமலை நடத்தி வந்தார். பூமேடை ராமையா ‘மெய்முரசு’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார். நான் தக்கலையில் வேலைபார்த்தபோது முதற்சங்கு என்ற சிற்றிதழ் தக்கலையில் இருந்து வெளிவந்தது. சிவனி சதீஷ் அதை நடத்திவந்தார்.

இந்த இதழ்களும் இவற்றில் எழுதுபவர்களும் ஒர் இரண்டாம்கட்ட அறிவுக்களத்தை உருவாக்குகிறார்கள். அறிமுக எழுத்தாளர்கள் எழுதவும் ஆரம்பகட்ட வாசகர்கள் அறிவியக்கத்தை அறிமுகம் செய்துகொள்ளவும் இவர்கள் உதவுகிறார்கள். இந்த அறிவியக்கத்தை ஓர் அடித்தள இயக்கம் என்றெ சொல்லமுடியும். லக்ஷ்மி மணிவண்ணன், குமாரசெல்வா போன்ற படைப்பாளிகள் இந்த அறிவியக்கத்தில் இருந்து வந்தவர்களே.

சென்ற கால்நூற்றாண்டாக குமரியின் வட்டார அறிவியத்தின் முதன்மை முகங்களில் ஒருவர் குமரி ஆதவன். தக்கலையில் நான் வேலைபார்த்தபோது அவர் அருகே ஒரு சிறிய ஊரில் ஆசிரியர். கடுமையான இளமைப்பருவம் வழியாக வளர்ந்து வந்து முதுநிலை ஆசிரியராக ஆனவர். அவர் அடைந்த எதிர்மறைச் சூழல்களில் பாதியளவு அடைந்தவர்கூட கசப்பும் கோபமும் நிறைந்தவராக ஆகியிருப்பார். குமரி ஆதவன் நன்னம்பிக்கையும் பேரன்பும் மட்டுமே நிறைந்த மனம் கொண்டவர். நான் அறிந்தவரை கிறித்தவ ஆன்மிகம் உருவாக்கும் நேர்நிலைப் பண்புகளின் உருவம் அவர்.

குமரி ஆதவன் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். சமீபத்தில் அவர் கொரோனா பாதித்திருந்ததை வாட்ஸப்பில் தெரியப்படுத்தியபோது நான் அடைந்த பதற்றம் நான் அவரை என் இளவலாகவே நினைத்திருந்தேன் என எனக்குக் காட்டியது. எந்த சூழலிலும் எவருக்கும் உதவத் தயாராக இருப்பவர் அவர். அவரைப்போன்ற தளராத நன்னம்பிக்கை கொண்ட இலட்சியவாதிகள்தான் சரியான ஆசிரியர்களாக இருக்க முடியும்.

குமரி ஆதவனின் இலக்கியப் பணி என்பது அவருடைய ஆசிரியப் பணியின் நீட்சி. அவர் தன்னை சமூகம் நோக்கிப் பேசுபவராக, விழுமியங்களின் பிரச்சாரகராகவே முன்வைக்கிறார். அந்த நேரடித்தன்மையே அவர் படைப்புகளின் அழகியல். தெளிவான குரல்கொண்ட பேச்சாளராக குமரி மாவட்டம் முழுக்க அவர் அறியப்பட்டிருக்கிறார். அமுதசுரபி இலக்கிய இயக்கம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார்.ஆத்மார்த்தமான அவருடைய கவிதைகளை இருபதாண்டுகளாக வாசித்துவருகிறேன். சமீபத்தில் பல இளைய கவிஞர்களின் தொகுதிகளில் குமரி ஆதவனின் முன்னுரையை காண்கையில் அவர் ஓர் இயக்கமாக ஆகியிருப்பது தெரிகிறது.

குமரி ஆதவன் அவருடைய பணி எல்லையை குமரிக்குள் நிறுத்திக்கொண்டவர். இந்த கொரோனா காலத்திற்கு முன்புவரை அவருடைய குரல் குமரியில் எங்கேனும் ஒர் இலக்கியமேடையில் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. அவருடைய படைப்புக்களும் அறிமுகக்குறிப்புகளும் குமரியின் இதழ்களில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. பண்பாட்டை நாம் ஒரு மரம் எனக்கொண்டால் ஆணிவேர்களுக்கு நிகரான ஆற்றல்கொண்டவை சல்லிவேர்த் தொகைகள். குமரியின் பண்பாட்டு வேர்களில் ஒன்று குமரி ஆதவன். அடிப்படை இலட்சியவாதம் ஒன்றை சலிக்காமல் முன்வைத்துக்கொண்டே இருப்பது அவர் குரல்.

அம்மாவும் வெண்கல செம்பும்குலை தள்ளிய வாழைக்குக்காற்றுத் தடுப்பாய்க்கம்பு நாட்டஒத்தையாய்ச் சுமந்து களைத்துப் போன கால்கள்.அண்ணன் சுமக்காமல்என் தலையில்ஏற்றி விட்ட வெறுப்பின் சுமை.திரும்பத் திரும்பக் காயப் போட்ட கருவாடு போல்வரண்டு போன நாவோடுதாகத்தில் விக்கலெடுக்கமீண்டும் சுமட்டிற்காய்த் தட்டுத் தடுமாறி வீடு வந்தேன்.பழைய கஞ்சித் தண்ணியைவெண்கல செம்பில் நீட்டினாள் அம்மா.இதயத்தை இறுக்க மாக்கியிருந்தஎன் கோபத்தின் உச்சத்தில்வெங்கலச் செம்புவிழுந்து சப்பியதுஇப்போதும்தாகம் இருக்கிறதுவிக்கல் வருகிறதுஅம்மாவையும் வெண்கல செம்பையும் தான்காணவில்லை![குமரி ஆதவன்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.