செய்தியின் நிறம்.

புதிய சிறுகதை

தொலைவில் மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது.

கண்ணாடியைச் சரி செய்தபடியே திவாகர் காருக்கு வெளியே பார்த்தான். ஒருவேளை அது உணவகமாக இருக்கக்கூடும்.

கடிகாரத்தைப் பார்த்தபோது பத்தரையைக் கடந்திருந்தது. இரவு ஏழு மணிக்கே அவனுக்குப் பசித்தது. ஆனால் வக்கீல் ஷியாம்பிரசாத்தை காணப் போக வேண்டும் என்பதால் சமோசா மட்டுமே சாப்பிட்டான். ஷியாம்பிரசாத் வீட்டில் மசாலா டீ கொடுத்தார்கள். மாலையிலிருந்து மூன்று நான்குமுறை டீ குடித்தாகிவிட்டது. அது நாக்கில் புளிப்புச் சுவையை உருவாக்கியிருந்தது.

பர்காம்புரா போவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரமாகிவிடும். மழைநாளாக இருப்பதால் வழியில் உணவு கிடைக்குமா என்பது சந்தேகமே. நிச்சயம் அந்த மஞ்சள் வெளிச்சம் ஒரு தாபாவாகத் தான் இருக்ககூடும். ஏதாவது ரொட்டியை சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தால் பனிரெண்டிற்குள் அறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். காலை ஏழு மணிக்கு எஸ்பி அதுல் பாண்டேயை சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தான்.

சாலையில் வாகனங்களேயில்லை. புதிய பாலம் வேலை நடப்பதால் இந்த ரோடு வழியாக வாகனங்கள திரும்பிவிட்டிருந்தார்கள். இது தான் பர்காம்புரா செல்லும் பழைய பாதை. நாற்கரச் சாலை வந்தபிறகு இதைப் பயன்படுத்துகிறவர்கள் குறைந்துவிட்டார்கள். பிரதான சாலையில் இணைவதற்கு இன்னமும் பதினைந்து கிலோ மீட்டர் போக வேண்டும். வெகு தூரத்தில் இருண்ட வானில் தெரிந்த மங்கலான ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பசியில் சுரந்த அமிலம் வயிற்றை வலிக்கச் செய்து கொண்டிருந்தது.

பத்திரிக்கையாளர் வேலையில் அவன் சந்தித்த முக்கியப் பிரச்சனை. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது. உறங்குவது இரண்டுமே. நிதானமாக, ருசித்து எப்போது சாப்பிட்டோம் என்று நினைவிலே இல்லை. அது போலத் தான் உறக்கமும் ஆழ்ந்து உறங்கி பல ஆண்டுகள் போய்விட்டன. கல்லூரி நாட்களில் ஹாஸ்டலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கிடப்பான். பல நாட்கள் வகுப்பிற்கே போனதில்லை. உறக்கம் அவ்வளவு சுகமாக இருக்கும். சில ஞாயிற்றுகிழமைகளில் பகலில் கட்டிலை விட்டு எழுந்திருக்கவே மாட்டான். அந்தச் சுகமெல்லாம் மறைந்து போய்விட்டன. இப்போது அசதியில், களைப்பில் தான் உறங்கப்போகிறான். அதுவும் கெட்டகனவுகள் துரத்துகின்றன. பல நாட்கள் கனவில் சபதமிட்டு அலறியிருக்கிறான். சில நேரம் கனவில் கூட யாரிடமோ கேள்விகள் கேட்டபடியே இருப்பான்.

ஏன் ஆங்கிலப் பத்திரிக்கையாளர் பணியைத் தேர்வு செய்தோம். எதற்காக இப்படிச் செய்திகளைத் துரத்திக் கொண்டு அலைகிறோம். மாயமானை போலச் செய்திகள் வசீகரமாகயிருக்கின்றன. ஆனால் துரத்திப் போனால் மிஞ்சுவது ஏமாற்றமே..

அவனது வார இதழின் எடிட்டர் அன்வர் அலி, இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர், சராசரியான உயரம். வழுக்கை விழுந்த தலை. கறுப்புப் பிரேம் போட்ட கண்ணாடி. சற்றே பெரிய மூக்கு. முக்கால்கை சட்டை. கதர் பேண்ட். கையில் ஒரு பழைய குடையுடன் தான் அலுவலகம் வந்து போவார். மைப்பேனா மட்டுமே பயன்படுத்துவார். லண்டனில் படித்தவர் என்ற அடையாளமே கிடையாது. சாதாரண ரப்பர் செருப்புகள். சட்டை பையில் ஒரு சிவப்புப் பென்சில். துண்டு காகிதங்களில் தான் எழுதுவார்.

அவர் தொலைபேசியில் பேசும் போது அருகிலிருந்து திவாகர் அவரையே கவனித்துக் கொண்டிருப்பான். எதிரில் பேசுகிறவர் அவரை மிரட்டும் போதும் அன்வர் அலியிடமிருந்து ஒரு கடுஞ்சொல் வராது.

மிக மெல்லிய குரலில் தனது தரப்பை அவர் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது கட்டுரைகளும் அப்படித் தான் இருந்தன. உண்மையைச் சொல்வதற்கு அவர் பயந்ததேயில்லை. துணிச்சல், தைரியம், உறுதியான நம்பிக்கை இவற்றையே அவர் இளம் பத்திரிக்கையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

திவாகர் அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருந்தான். அவனது முதல் கட்டுரைத் தொகுப்பு வெளியான போது அதை அன்வர் அலிக்கே சமர்ப்பணம் செய்திருந்தான். அந்தக் கட்டுரை நூலை பிரஸ்கிளப்பில் வெளியிட்ட இரவில் அன்வர் அலி சொன்னார்

“திவா.. சர்க்கஸில் பார் விளையாடுபவனைப் போலத் தாவித்தாவி செல்லும் மொழி நடை உனக்குக் கைவந்திருக்கிறது. அது இளைஞர்களுக்குப் பிடிக்கும். இப்போது யார் விரிவாகவும் நுட்பமாகவும் எழுதுவதைப் படிக்கிறார்கள். பத்திரிக்கையாளனின் வேலை மீன்பிடிப்பது போன்றது. தூண்டிலை வீசி விட்டுப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். எந்த மீன் தூண்டிலில் மாட்டும் என்று யாருக்குத் தெரியும். சில நேரம் உன் தூண்டிலில் திமிங்கிலமும் மாட்டக்கூடும். அப்போது நீ தான் சாண்டியாகோ, திமிங்கிலத்துடன் சமர் செய்ய வேண்டியது வரும். ஹெமிங்வே நாவலில் சாண்டியாகோ தன் கைகளுடன் பேசுவான். பத்திரிக்கையாளனும் தன் கைகளும் பேச வேண்டியவனே.“

அவரது வீட்டில் இறக்கிவிடும்வரை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேவந்தான். வீட்டின் முன்பு டாக்சியை விட்டு இறங்கும் போது தன் பையிலிருந்த சிவப்பு பென்சிலை அவனிடம் கொடுத்து இது தான் எனது பரிசு என்றார். அந்தப் பென்சிலை தன் வாழ்நாளில் கிடைத்த பெரும் பரிசாக வைத்திருந்தான் திவாகர்.

••

சாலையின் இடப்புறம் எருமையொன்று படுத்து கிடப்பது போலத் தோன்றியது. கார் அதைக்கடந்த போது எருமையில்லை. கைவிடப்பட்ட தார்டின் கவிழ்ந்துகிடக்கிறது என்று தெரிந்தது. தோற்ற மயக்கங்கள் உண்மையில்லை. அதைப் பிரித்தரிய தெரிந்திருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிகின்ற யாவும் கூட உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லை. தோற்றத்தைக் கடந்து உண்மை ஒளிந்திருக்கக் கூடும். அதற்கு ஆராய வேண்டும். கண்ணை மட்டுமே நம்பக்கூடாது.

கார் சீராகச் சாலையில் சென்று கொண்டிருந்தது. திவாகர் எத்தனையே இரவுகளை இப்படிக் காரில் பயணித்துக் கடந்திருக்கிறான். காரிலே உறங்கியிருக்கிறான். ஒருமுறை ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கச் சென்ற இரவில் அவன் கண்முன்னால் பாம் ஒன்று வெடித்துச் சிதறியது. நூறு அடி தூரத்தில் நின்றிருந்த வேனும் மனிதர்களும் சிதறிப்போனார்கள். பிய்த்து எறியப்பட்ட இரும்புத்துண்டு ஒன்று அவர்கள் காரின் கண்ணாடியில் விழுந்து கண்ணாடி சிதறியது. எங்கும் ஒலம். காரில் வெளிச்சத்தில் துண்டிக்கப்பட்டுக் கிடந்த கை ஒன்றைக் கண்டான். கண்ணாடி வளையல்கள் அணிந்த இளம்பெண்ணின் கையது. அந்தப் பெண் என்ன ஆனாள் எனத்தெரியவில்லை. ஆனால் அவளது கை துண்டிக்கப்பட்டுத் தனியே கிடந்தது. அந்தக் காட்சி மனதை நடுங்கச் செய்தது. சைரன் ஒலிகளுடன் வாகனங்கள் வரத்துவங்கின. ராணுவம் அந்த இடத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டது. காரில் அறைக்குத் திரும்பியதும் திவாகர் தன்னை மீறி அழுதான்.

திவாகர் மன உளைச்சல் அதிகமான நேரத்தில் யாருமற்ற இடம் தேடி நேபாளத்திற்குப் போயிருக்கிறான். மனிதர்களின் நடமாட்டமேயில்லாத பள்ளத்தாக்கில் ஒற்றை ஆளாகக் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கிறான். பரபரப்பிலிருந்து விடுபட்டு விடலாம் ஆனால் நினைவுகளிலிருந்து எப்படி விடுபடுவது. யாருமற்ற இடத்திலும் நினைவின் வழியே மனிதர்கள் மீண்டு எழுந்துவிடுகிறார்கள். கடந்தகாலத்தின் நினைவுகள் வழிநடத்தாத மனிதர்கள் எவரேனும் உண்டா என்ன.

ஏனோ அன்றைய இரவில் அன்வர் அலியை பார்க்க வேண்டும் போலத் தோன்றியபடியே இருந்தது..

••

டிரைவர் காரை ஒட்டியபடியே “அது ஒரு தாபா“ என்று சொன்னான்

“நாம் நிறுத்தி சாப்பிட்டுவிடுவோம். திரும்ப மழை வரும் போல இருக்கிறது“

“இரவில் பெய்யும் மழை நிற்காது“ என்றான் டிரைவர்

அவன் சொல்வது நிஜம். கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டேதானிருக்கும்.

மழைக்காலத்தில் ஒரு நாள் என்பது மிகவும் சிறியதாகிவிடுகிறது. மழையில் வீடுகள். வீதிகள் சுருங்கிப்போகின்றன. மனிதர்களை விளையாட்டுப் பொருளைப் போல உருமாற்றுகிறது மழை. மழைக்கு ஒராயிரம் வேலையிருக்கிறது. மரத்தில் சிக்கிக் கொண்ட பட்டம் ஒன்றை மழை தன்விரலால் எடுத்து விடுகிறது. இன்னொரு இடத்தில் கழுவப்படாத சிலையை மழை சுத்தம் செய்கிறது. வேறு இடத்தில் மழை கல்உரல் ஒன்றைப் புரட்டிப் போடுவது போலச் சுற்றிவந்து கொண்டிருக்கிறது.

வாழை மரத்தில் மழை பெய்யும் போது பார்த்திருக்கிறீர்களா. மழையிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறது வாழை. தலை நிமிர்ந்து மழையைப் பார்ப்பதுமில்லை. வாழை இழையில் மழையின் துளிகள் சறுக்கி விளையாடுகின்றன. சில நேரம் இலையிலிருந்து எகிறி பூமியை நோக்கித் தாவும். அது ஒரு மாயநடனம். ஆம், மழை இயற்கையின் பெருநடனம்.

கடந்த பத்துநாட்களாகவே திவாகர் பர்காம்புராவை சுற்றிக் கொண்டேயிருந்தான். பர்காம்புரா குண்டுவெடிப்பு தொடர்பான கட்டுரை எழுதுவதற்காக உண்மையைச் சேகரித்துக் கொண்டிருந்தான். டெல்லியில் வேலை என்றாலும் மாசத்தில் பத்து நாள் இப்படி ஏதாவது ஒரு மாநிலத்தில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

சிறந்த புலனாய்வு கட்டுரை எழுதியதற்காக இரண்டு முறை பிரஸ் கவுன்சில் விருதுகளையும் பெற்றிருக்கிறான். ஒரு முறை ஜப்பானிய அரசு அவனுக்குத் தங்கப் பேனா விருது அளித்துக் கௌரவித்திருக்கிறது. அவனுடன் பணியாற்றிய பலரும் அதிக ஊதியம் கிடைக்கிறது எனத் தொலைக்காட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அவனுக்குக் காட்சி ஊடகத்தை விடவும் அச்சு ஊடகமே பிடித்திருந்தது.

••

கார் அந்த மஞ்சள் வெளிச்சதை நெருங்கியது.

அது ஒரு பஞ்சாபி தாபா

டிரைவரை நிறுத்த சொல்லிவிட்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டான். கார் பிரதான சாலையை விட்டு கிழே இறங்கியது. மண்சாலையது. ஈரத்தில் சேறும் சகதியுமாக இருந்தது. பழைய ஹிந்திபாடல் ஒன்றை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு டியூப் லைட்டுகள் எரிந்து கொண்டிருந்தன. தகரக் கொட்டகை ஒன்றினுள். நாலைந்து கயித்துக் கட்டில் போட்டு வைத்து இருந்தார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருந்தது. கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருந்தார்கள்.

காலியாகக் கிடந்த ஒரு கட்டிலில் அமர்ந்தபடியே சாப்பிட என்னகிடைக்கும் எனக்கேட்டான். சர்வர் வரிசையாக ஒப்புவித்துக் கொண்டிருந்த போது பரோட்டாவும் ஆலு சப்ஜியும் ஆர்டர் செய்தான். ஒரு கட்டில் அடியில் பூனை ஒன்று படுத்துகிடந்தது. அதை நோக்கி கையை அசைத்தான். பூனை அவனைக் கண்டுகொள்ளவேயில்லை.

•••

கடந்த பத்து நாட்களுக்குள் அவன் பர்காம்புரா குண்டுவெடிப்பு குறித்து நிறைய ரகசியங்களைக் கண்டுபிடித்திருந்தான். சில தகவல்கள் அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தன. குண்டுவெடிப்பு என்ற ஒற்றைச் செயலுக்குள் எத்தனையோ மனிதர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.

ஒருமுறை அன்வர் அலியிடம் திவாகர் கேட்டான்

“அதிகாரத்திலிருப்பவர்களுக்கு மனசாட்சியே கிடையதா குற்றவுணர்ச்சி அவர்களைக் கொல்லாதா. ஏன் இப்படி உண்மையைக் கொன்று புதைக்கிறார்கள்“.

அன்வர் அலி சிரித்தபடியே சொன்னார்

. “சிறுவனைப் போலப் பேசுகிறாய். மனசாட்சி என்ன டெல்லி ரேடியோவா எந்நேரமும் எதையாவது சொல்லிக் கொண்டேயிருக்க. அவர்களின் மனசாட்சி கல்லறையைப் போன்றது. அதனுள் முணுமுணுப்பேயில்லை, சலனமேயில்லை. உண்மையை ஆழத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள். நாம் தான் மனசாட்சிக்கு பயப்பட வேண்டியிருக்கிறது“

அன்வர் அலி சொன்னது உண்மை.

உண்மையை அறிந்து கொள்வது கடினமானது. அதை விடவும் கடினமானது அதைப் பத்திரிக்கையில் வெளியிடச் செய்வது. அன்வர் அலி எடிட்டராக இருந்தவரை அவன் தைரியமாக உண்மையை எழுதிக் கொடுப்பான். ஆனால் புதிய எடிட்டராக ஷர்மிளா பாண்டே வந்தபிறகு அப்படி எழுத முடியவில்லை. ஒருவேளை எழுதிக் கொடுத்தாலும் அவள் வெளியிட மாட்டாள். ஷர்மிளா பாண்டே அமெரிக்காவில் படித்தவள். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள். அவளுக்குப் பத்திரிக்கை ஆசிரியர் வேலை என்பது அலங்காரமான பதவி மட்டுமே.

••

சம்பளத்தை விடவும் தன்னைச் சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறார்கள் என்பதால் திவாகர் பத்திரிக்கையிலே இருந்தான். இந்தியா முழுவதும் அவனுக்கென வாசகர்கள் இருந்தார்கள். அரசியல் தலைவர்கள் பலரும் அவனது கட்டுரைகளை வாசித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அவனது சில கட்டுரைகள் ஒரே நேரம் ஆறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடப்படுவதும் உண்டு.. .

திவாகர் தனது பத்திரிக்கையுலக அனுபவத்தில் ஒன்றேயொன்றை உறுதியாகக் கற்றுக் கொண்டிருந்தான். எந்தச் செய்தியையும் நம்பக்கூடாது. சந்தேகிக்க வேண்டும். செய்தியினுள் மறைந்துள்ள புலப்படாத விஷயங்களை, மனிதர்களை அடையாளம் காண வேண்டும். அவற்றில் எதைக் கவனப்படுத்த வேண்டுமோ அதைக் கவனப்படுத்த வேண்டும். உண்மையைத் தேடிக்கண்டறிவதே தனது பணி.

எல்லாத் தினசரி செய்தித் தாள்களும் மரண ஓலைகளே. ஒரு நாளில் வாசகன் எத்தனை மரணச் செய்திகளை வாசிக்கிறான். கொலையைத் தன் வாழ்நாளில் ஒருமுறை கூடக் கண்டிராத பொதுமக்கள் அன்றாடம் பத்திரிக்கைகள் வழியாகக் கொடூரமான கொலைகாரர்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். கொலையாளி பெண்ணா இருந்தால் அவளை ரசிக்கிறார்கள். அவளைப் பற்றித் திரைப்படம் உருவாக்குகிறார்கள்.

மக்கள் பத்திரிக்கைகளை நம்புகிறார்கள். பத்திரிக்கையாளன் என்பவன் உண்மையைக் கண்டறிந்து சொல்பவன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசு, அதிகாரம் எதற்கும் பயப்படாதவன் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாகச் செயல்படுகிற பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலரே. திவாகர் இதுவரை அப்படி தானிருந்தான். அவனுக்கு எவரையும் பற்றிப் பயமில்லை. எந்த மிரட்டலாலும் அவனது எழுத்தை ஒடுக்கமுடியவில்லை.

பத்திரிக்கையாளனாக அவன் சிறப்பாகவே செயல்பட்டான் ஆனால் ஒரேகுறை தனது உடல்நலத்தைக் கவனிக்கவே முடியவில்லை. இந்த முப்பத்தியாறு வயதிற்குள் அல்சர் வந்துவிட்டது. சமீபமாக ரத்தக்கொதிப்பும் உருவாகியுள்ளது. மூக்குக் கண்ணாடியின் பவர் அதிகமாகிவிட்டது. சாமானிய மனிதர்களைப் போல வார விடுமுறை கிடையாது. வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறான். வீடெங்கும் புத்தகங்கள். இசை தட்டுகள்.

சொந்த ஊரிலிருந்து யாரும் அவனைத் தேடி வருவதில்லை. அவனும் ஊருக்குப் போவதில்லை. வங்கிக் கணக்கில் இரண்டரை லட்சம் உள்ளது. அவ்வளவு தான் இத்தனை ஆண்டுக்கால சேமிப்பு. நல்லவேளையாக அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வேடிக்கையாகச் சொல்லிக் கொள்வான்.

திவாகரின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. சிறிய நகரம். அங்கே பள்ளி இறுதி வரை படித்தான். கோவையிலுள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தான். சட்டப்படிப்பை டெல்லியில் படிக்கலாம் என அண்ணன் சொன்ன காரணத்தால் டெல்லிக்குச் சென்றான். டெல்லி வாழ்க்கை அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அவனோடு சட்டம் படித்த நண்பர்கள் கலக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுடன் ஒன்றாகச் சுற்றவும் போராட்டங்களில் கலந்து கொள்ளவும் செய்தான். மெல்ல அவனுக்குள் இருந்த சிறுநகர மனிதன் தொலைந்து போனான்.

மெட்ரோ மனிதர்களில் தானும் ஒருவன் என்பதை உணர்ந்தான். சமூகப் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டான். ஒரு வருஷத்திற்குள் அவனது பேச்சும் நடவடிக்கைகளும் மாறியிருந்தன. அப்போது அவன் எழுதிய கட்டுரைகள் ஆங்கில நாளிதழ்களில் வெளியாகின. அதன் பிறகே அவன் வக்கீல் படிப்பைக் கைவிட்டு பத்திரிக்கையாளன் ஆவது என முடிவு செய்தான்.

திவாகர் அன்றாடம் காலை டீ குடித்தவுடன் எல்லாச் செய்தி தாள்களையும் வாசித்து விடுவான். எப்போதாவது ஓய்வாக இருந்தால் ஓவியம் வரைவான். பள்ளிநாட்களில் இருந்து தொடரும் பழக்கமது. ஒவியம் வரைவதற்குப் பழகியதாலோ என்னவோ சின்னஞ்சிறு விஷயங்கள் கூட அவன் கவனத்தில் வந்துவிடுகின்றன. முகங்களை நினைவு கொள்வது எளிதாகயிருந்தது.

••

டெல்லியில் பத்திரிக்கையாளராக வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் நேற்று வரை ஆயிரம் பார்ட்டிகளுக்கு மேல் போயிருப்பான். தினமும் ஏதாவது ஒரு பார்ட்டி. யாராவது வம்பு வளப்பார்கள். பார்ட்டிக்கு போக வேண்டியது பத்திரிக்கையாளனின் வேலை. அங்கே தான் தனிப்பட்ட விஷயங்கள் எளிதாகக் கிடைக்கும். அரசியல்வாதிகளுடன் எளிதாகப் பேச முடியும். போதையேறியதும் பலரும் ரகசியங்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ளத்துவங்கிவிடுவார்கள். அவன் வெளியிட்ட பல செய்திகள் பார்டியில் கிடைத்தவையே. ஆனால் பார்ட்டி என்பது ஒரு புதைகுழி, அதற்குள் சிக்கிவிடாமல் காலூன்றுவது பெரிய சவால்.

அன்றிரவு பார்ட்டியில் திவாகரை கண்டதும் நிவாஸ் கைதூக்கி பெரிய கும்பிடு போட்டான். அது மிகவும் செயற்கையாக இருந்தது. எதற்கு ஒரு பத்திரிக்கையாளன் இப்படி நடிக்க வேண்டும். திவாகர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கையில் மதுவோடு நிவாஸ் அவன் அருகில் வந்து நின்று கேட்டான்

“உங்கள் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் அமைச்சருடன் ரோம் போகிறாராமே..“.

“இருக்கலாம் “என்றான் திவாகர்

“பட்டியலை பார்த்துவிட்டேன். அவரது பெயரும் இருக்கிறது. நானும் போகிறேன். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவாய். முகர்ஜியும் வருகிறார். அவர் தான் குழுவின் தலைவர்“

“ முகர்ஜியா“ என வியப்போடு கேட்டான் திவாகர்

“ஏன் ஆச்சரியப்படுகிறாய். எல்லா மனிதர்களும் பலவீனமானவர்கள் தான். முகர்ஜியின் மகன் லண்டனில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டான். அமைச்சர் தலையிட்டு பிரச்சனையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார். இனி முகர்ஜி எப்படிப் பேனாவை உயர்த்துவார். அவ்வளவு தான் அவரது வீராவேச எதிர்ப்பு அத்தியாயம் முடிந்துவிட்டது. இப்போது அரசின் புகழ்பாடும் பத்திரிக்கையாளர் அணிக்குத் தலைவராகிவிட்டார். உடனடி பலன் ரோம் பயணம்“

“பாவம் முகர்ஜி“ என்றான் திவாகர்.

“உன் நண்பனாகச் சொல்கிறேன். உன் பிடிவாதமான கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வது போலக் கட்டுரைகள் எழுது. இந்தப் பயணத்தில் உன் பேரையும் சேர்க்கச் சொல்லிவிடுகிறேன்“

“அதற்குப் பதிலாக ரோட்டில் பிச்சை எடுப்பேன்“ என்றான் திவாகர்

“கண்டிப்பாக ஒரு நாள் அந்த நிலைக்கு நீ தள்ளப்படுவாய். எனக்கு நன்றாகத் தெரியும். நீயில்லை. உன்னைப் போலப் பலமுட்டாள்களை உருவாக்கிய அன்வர் அலிக்கு என்ன நடந்தது தெரியும் தானே. ஒரு பத்திரிக்கையும் அவரைக் காப்பாற்றவில்லை. எத்தனை நீதிமன்ற வழக்குகள். அலைக்கழிப்பு. பாவம் அந்தக் கிழவர்“

“அன்வர்அலியை பற்றிப் பேசுவதற்கு உனக்கு யோக்கியதை கிடையாது“ என்றான் திவாகர்

“நல்லவேளை அவரிடம் நான் வேலை செய்யவில்லை. இல்லாவிட்டால் என் மூளையும் கெட்டுப்போயிருக்கும்“

“அவரிடம் நீ வேலைக்குச் சென்றிருந்தால் உன்னைக் கழுதையைப் போல நடத்தியிருப்பார்“. எனச் சிரித்தபடியே சொன்னான்

நிவாஸின் முகம் மாறியது. அவன் கோபத்துடன் இன்னொரு பெக் மதுவை எடுப்பதற்காகச் சென்றான். அப்போது அருகில் வந்த கமல்நாத் கேட்டான்

“அவனுடன் ஏன் வம்பு வழக்கிறாய். மிக மோசமான ஆள்“

“இவனை இப்படியே விடக்கூடாது“ என்று கோபமாகச் சொன்னான் திவாகர்

அன்று திவாகர் ஆறு ரவுண்ட் குடித்தான். போதையின் உச்சத்தில் அவன் நிவாஸை தேடிப் போனான்.

நிவாஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தட்டில் கோழிக்கறியும் பிரியாணியும் சாலட்டும் இருந்தன. அப்படியே அந்தத் தட்டினை கீழே தட்டிவிட்டான் திவாகர், அத்துடன் பரிகாசமான குரலில் சொன்னான்

“தட்டில் வைத்துச் சாப்பிடுவது நாயின் பழக்கமில்லை, தரையில் சிந்தியதை நக்கி சாப்பிடு“

அதைக்கேட்ட நிவாஸ் அவனை அடிக்கக் கையை ஓங்கினான். திவாகர் விலகிக் கொள்ளவே காற்றில் கை வீசினான். ஆத்திரம் அதிகமாகவே மோசமான வசைகளைப் பொழிய ஆரம்பித்தான்.

திவாகர் அவன் மீது யாரோ குடித்து வைத்த மிச்சமதுவை ஊற்றினான். இருவரும் கட்டி உருண்டார்கள். யார் விலக்கிவிட்டது எனத்தெரியவில்லை.

எப்படி அறைக்கு வந்தான். எப்போது உறங்கினான் எதுவும் நினைவில் இல்லை

ஆனால் காலை பத்தரை மணிக்குக் கண்விழித்தபோது தலை கனமாக இருந்தது. அவன் மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தான் நிவாஸ். அன்வர் அலி தான் தலையிட்டு அவனைக் கேசிலிருந்து விடுவித்தார்.

••

பரோட்டா வந்தது. கூடவே சூடான சப்ஜி. பசியாக இருந்ததாலோ என்னவோ உணவின் ருசி அபாரமாக இருந்தது. சிறிய உணவகங்கள் ஏமாற்றுவதில்லை. பெரிய ஹோட்டல்களைத் தான் நம்பி சாப்பிடப் போக முடியவில்லை. அவன் ரொட்டியை அவசரமாகப் பிய்த்துச் சாப்பிட்டான். இன்னொரு மூலையில் டிரைவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் இடி இடிக்கும் ஓசை கேட்டது.. மழை வரக்கூடும். அதற்குள் விடுதி அறைக்குப் போய்விட்டால் நல்லது.

அவன் சாப்பிடுவதைக் கண்ட பூனை அருகில் வந்து நின்றது. ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்துப் போட்டான். அதை முகர்ந்து பார்த்துவிட்டு வாலாட்டியபடியே சாப்பிடாமல் கடந்து போனது

என்ன எதிர்ப்பார்த்து வந்தது அந்தப் பூனை.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது செல்போன் அடித்தது. மறுமுனையில் ஷர்மிளா பாண்டே தான் பேசினாள்.

“உடனடியாகக் குவாலியர் போய் மேத்தா பாய் தனது நாய்களுக்கு ஆடம்பர திருமணம் செய்து வைப்பது பற்றிக் கவர் ஸ்டோரி எழுத வேண்டும்“ என்றாள்

“பர்காம்புரா குண்டுவெடிப்பு என்னாவது“ என்று கோபமாகக் கேட்டான் திவாகர்

“அதைவிடு. எல்லாப் பத்திரிக்கைகளும் எழுதி ஒய்ந்துவிட்டன. இனி யாரும் அதைப் படிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள். “

“உண்மையான குற்றவாளி யார் என்று நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆதாரங்கள் இருக்கிறது“ என்றான் திவாகர்.

“அதை அப்படியே தூக்கிப்போடு. நமது வேலை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி விசாரணை செய்வதில்லை. அது போலீஸ் டிபார்ட்மெண்ட் வேலை. நம் வேலை சுவாரஸ்யத்தைத் தருவது. ஊதிப்பெருக்கினால் தான் பலூனிற்கு அழகு. வெறும் பலூனைப் பார்க்கச் சகிக்காது “

“பின் எதற்காகப் பைத்தியக்காரன் போல நான் அலைந்து திரிய வேண்டும்“ என்று கோபமாகக் கேட்டான் திவாகர்

“நீ அன்வர் அலியின் தயாரிப்பு. இப்படித்தானிருப்பாய். உன்னோடு விவாதம் செய்ய விரும்பவில்லை. மேத்தா பாய் நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கபோவது வேடிக்கையாக இருக்கும். நாய்களுக்குத் தனியே அலங்கார நகைகள் தயாரிக்கப்படுகிறதாம். நீ உடனே போய் மேத்தா பாயை இண்டர்வியூ எடு. நாய்களை நல்ல புகைப்படங்களாக எடுத்து அனுப்பு. சுவாரஸ்யத்தை உருவாக்கு திவா. “

“என்னால் போக முடியாது. “

“உன் விருப்பம் முக்கியமானதில்லை இது உத்தரவு.. “ என்று கறாரான குரலில் சொன்னாள் ஷர்மிளா

“நான் வேலையை ரிசைன் செய்துவிடுகிறேன்“ என்றான் திவாகர்

“சந்தோஷம்“ என்று ஏளனமாகச் சொன்னபடியே போனை வைத்தாள் ஷர்மிளா.

திவாகருக்கு ஆத்திரமாக வந்தது. பர்காம்புரா குண்டுவெடிப்பில் தான் சேகரித்த உண்மைகளை என்ன செய்வது. ஏன் ஒடி ஒடி உண்மைகளைக் கண்டறிந்தோம். உயிருள்ளவர்களுக்கே நீதி கிடைக்காத காலத்தில் இறந்தவர்களுக்காக யார் நீதி கேட்கப் போகிறார்கள். அநீதி தான் நம் காலத்தின் அடையாளமா.

வேலை போனதை விடவும் தன்னை ஒரு கரப்பான் பூச்சியைப் போல ஷர்மிளா நடத்தியதைத் தாங்க முடியவில்லை.

யாரோ ஒரு பணக்காரன் தனது நாய்களுக்குத் திருமணம் நடத்துவதைத் தன்னைப் போல ஒருவன் தேடிப் போய்க் கட்டுரை எழுத வேண்டுமா. எவ்வளவு இழிவான உத்தரவு. வேலை போனால் போகட்டும். பேசாமல் கொஞ்ச நாட்கள் ஊரில் போய் இயற்கை விவசாயம் செய்து பிழைக்கலாம் என்று யோசித்துக் கொண்டான்.

தொடர்ந்து சாப்பிட முடியவில்லை.

பரோட்டாவை அப்படியே வைத்துவிட்டு எழுந்து கொண்டான். வெளியே மழை துவங்கியிருந்தது. மனதிலிருந்த ஆத்திரம் அடங்கவில்லை.

வாசலில் வந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

செய்திகளைத் துரத்திக் கொண்டேயிருப்பது அலுப்பாக இருந்தது. உண்மை யாருக்குத் தேவை. உண்மையைப் புதைப்பதற்குத் தான் எவ்வளவு ஏற்பாடுகள். தந்திரங்கள். அறிந்தே தான் மாயமானை துரத்திக் கொண்டிருக்கிறோம். செய்திகளின் பேராறு மக்களை அடித்துப் போகிறது. மரக்கட்டைகள் தண்ணீரில் செல்வது போல மக்கள் நடந்து கொள்கிறார்கள். சிறியதோ, பெரியதா எவரும் தன் தவறுகளை ஒப்புக்கொள்வதில்லை. அதை மறைப்பதற்காக எவ்வளவு பொய்யும் சொல்லத் தயார் ஆகிவிட்டார்கள். அச்சிடப்பட்ட பொய்கள். காட்சிகளாக மாறும் பொய்கள். நாம் அலங்கரிக்கப்பட்ட பொய்களை நம்புகிறோம். பொய்களை விற்கிறார்கள். தானும் அதற்கு ஒரு மறைமுக உடந்தையே.

யோசிக்க யோசிக்க மனதில் குழப்பமும் ஆற்றாமையும் தான் கூடிக் கொண்டிருந்தது.

அப்போது தாபாவை நோக்கி ஒரு அம்பாசிடர் கார் வருவது போலத் தெரிந்தது. சாரலின் ஊடே அந்தக் கார் தெளிவற்றுத் தெரிந்தது.

அந்தக் காரிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். அதில் ஒருவனை வக்கீல் ஷியாம் பிரசாத் வீட்டில் பார்த்தது போல இருந்தது. அவன் தானா எனச் சரியாகத் தெரியவில்லை. திவாகர் சிகரெட்டை ஊதியபடியே தனது காரை நோக்கி நடந்தான். அவர்கள் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்று அவன் அறியவில்லை. தனது டிரைவரை அழைப்பதற்காகத் திவாகர் திரும்பிப் பார்த்தான்.

ஷியாம்பிரசாத் வீட்டில் பார்த்தவனின் கையில் பெரிய உருட்டுக்கட்டை ஒன்றிருப்பது கண்ணில் பட்டது.

ஏதோ நடக்கப்போகிறது எனத் திவாகர் சுதாரிப்பதற்குள் அவன் மீது உருட்டுக்கட்டையால் ஒருவன் தாக்கினான். தலையில் பலமாக அடி விழுந்தது. திவாகர் ரத்தம் வடிவதை உணர்ந்து ஓட முயன்றான். ஆனால் அவர்கள் சுற்றிலும் வளைந்து கொண்டார்கள். திவாகர் கூக்குரலிட்டபோது மூன்று பேரும் அவனைப் பலமாகத் தாக்க ஆரம்பித்திருந்தார்கள். திவாகர் போராடினான். ஒருவன் பியர் பாட்டிலை உடைத்து அவன் அடிவயிற்றில் சொருகினான். திவாகரால் வலியைத் தாங்கமுடியவில்லை. பலமாக ஓலமிட்டான்.

திவாகரின் குரல் மழைக்குள் கரைந்து ஒடிக் கொண்டிருந்தது

•••

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 18:38
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.