கதை சொல்லும் புகைப்படங்கள்.
To me taking pictures means discovering rhythms, lines in reality. The eye does the framing, and the camera does the work. You see a photograph all at once, like the painting. – Henri Cartier-Bresson
உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன் குறித்த impassioned eye என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.
நம் எல்லோர் கையிலும் செல்போன் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாள் முழுவதும் புகைப்படம் எடுத்தபடியே இருக்கிறோம். ஒரு நாளில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கபடுகின்றன. அதுவும் செல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் அதிகமான பிறகு தன்னை தானே ரசிக்கத்துவங்கி தினமும் பல புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். புகைப்படம் எனும் அரிய கலை மலினப்படுத்தபட்டுவிட்டது. இணையத்தில் ஒரு நாளில் இரண்டு கோடி புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்கிறார்கள்.
முந்தைய காலம் போல இன்று ஸ்டுடியோக்கள் கிடையாது. லேப் கிடையாது. எடுத்த புகைப்படத்தைக் கழுவி காயவைத்து பிரிண்ட் போட காத்திருக்க வேண்டியதில்லை. பிரபலமான பிலிம்ரோல் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. டிஜிட்டில் வந்தபிறகு புகைப்படம் எடுப்பது செலவில்லாத வேலையாகிவிட்டது. ஆனாலும் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்கள் இன்றும் அரிய புகைப்படங்களை எடுக்கிறார்கள். இதற்காக நாட்கணக்கில் மெனக்கெடுகிறார்கள். சிறந்த புகைப்படங்களை எடுக்க காத்துக்கிடக்கிறார்கள். சர்வதேச அளவில் விருதும் அங்கீகாரமும் பெறுகிறார்கள்.
கேமிரா பொய் சொல்லாது என்பது மறைந்து போய் கேமிரா தான் அதிகம் பொய் சொல்கிறது என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சென்ற தலைமுறையின் அரிய புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களே இன்று வரலாற்றின் சாட்சியங்களாக உள்ளன. அது குடும்ப வரலாறாக இருந்தாலும் தேசத்தின் வரலாறாக இருந்தாலும் ஒன்று தான். புகைப்படம் எடுத்துக் கொள்வது ஏழை எளியவர்களுக்கு இயலாத காரியம் என்பதை டிஜிட்டல் மாற்றியிருக்கிறது என்பது உண்மையே. டிஜிட்டல் கேமிரா என்பது தொழில் நுட்ப வளர்ச்சி. அதன் பின்னுள்ள கலைஞனும் அவனது ஈடுபாடுமே முக்கியமானது.
நாளிதழ்கள் வார இதழ்கள் ஒரு காலத்தில் புகைப்படக்கலைஞர்களை தான் பெரிதும் நம்பியிருந்தன. அந்த நாட்களில் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்கள் உருவானார்கள். சாமானிய மக்களை அழகாகப் படம் பிடித்தார்கள். அன்றாட வாழ்வின் தருணங்களைப் பதிவு செய்தார்கள் இதில் முக்கியமானவர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன்

இந்த ஆவணப்படத்தில் அவர் காந்தியைச் சந்தித்த நிகழ்வினைப் பற்றிக் கூறுகிறார். காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புப் ப்ரெஸன் அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். இந்தியப்பிரிவினைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரம் பற்றி நேரடி செய்தி சேகரிப்பிற்காக மேக்னம் ஏஜென்சி ப்ரெஸனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது.
அவரது மனைவி ரத்னா மோகினி நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டின் தோழியாக இருந்த காரணத்தால் அவரால் உடனடியாகக் காந்தியைச் சந்தித்துப் பேச முடிந்தது.

அவர் பிர்லா மாளிகையில் காந்தியைச் சந்தித்து உரையாடியதோடு தனது புகைப்படங்களின் தொகுப்பினை அவரிடம் காட்டினார். மறுநாள் காந்தியைப் புகைப்படம் எடுப்பதாகத் திட்டம்.
ப்ரெஸன் காட்டிய ஆல்பத்தில் இருந்த ஒரு புகைப்படத்தைக் காந்தி வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு ப்ரெஸனிடம் இந்தப் புகைப்படத்திற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். ப்ரெஸன் அந்தப் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது. என்ன பொருள் என்று விளக்கியபோது அதைப் புரிந்து கொண்ட காந்தி மரணம் பற்றி உரையாடினார். அது தான் காந்தி பேசிய கடைசி உரையாடல். பின்பு ப்ரெஸனிடம் விடைபெற்றுக் கொண்டு காந்தி பிரார்த்தனைக்குச் சென்றார். அங்கே அவர் சுடப்பட்டார். தன்னுடைய மரணத்தை முன்னறிந்து கொண்டவர் போலக் காந்தி தன்னிடம் பேசினார் என்கிறார் ப்ரெஸன்.

காந்தியின் இறுதி நிகழ்வுகளை முழுமையாகப் ப்ரெஸன் புகைப்படம் எடுத்திருக்கிறார். காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த அறையை, அங்கு நடந்த நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். காந்தியின் கடைசி ஊர்வலத்திற்குத் திரண்டு வந்த மக்கள் திரளை. அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான அழுகையை ஆவணப்படுத்தியிருக்கிறார். காந்தியின் சிதைக்குத் தீயூட்டப்பட்டபோது அந்த நெருப்பு தன் விரலில் படும் அளவு நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். காந்தி அஸ்தியைக் கங்கையில் கரைந்த போதும் ப்ரெஸன் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை மறக்கமுடியாத புகைப்படங்கள். இந்த ஆவணப்படத்தில் அந்த அபூர்வமான தருணத்தை நினைவு கொள்கிறார் ப்ரெஸன்
காந்தியின் மரணம் குறித்து நேரு அறிவிக்கும் தருணத்தை ப்ரெஸன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதி அற்புதமான புகைப்படமது.

1947ல் துவங்கி ஆறுமுறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ப்ரெஸன் எட்வினா மவுண்ட்பேட்டனுடன் நேரு நெருக்கமாகச் சிரித்தபடியே நிற்கும் புகைப்படத்தை எடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். திருவண்ணாமலைக்கு வந்து ரமணரைப் புகைப்படம் எடுத்துள்ளார் ப்ரெஸன். இந்த ஆவணப்படத்தில் ரமணரின் கடைசி நிமிஷங்கள் பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளது.

ப்ரெஸன் எடுத்த புகைப்படங்கள் வரலாற்றின் சாட்சியமாகத் திகழுகின்றன. இந்தப் புகைப்படங்களைக் காணும் போது ஓவியத்தின் மீது ப்ரெஸனுக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடுமே அவரை மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராக மாற்றியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
தன் முதுமையில் அவர் புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டு முழுநேரமாக ஓவியம் வரைவதிலே ஈடுபட்டார்.
இந்த ஆவணப்படத்தினைக் காணும்போது ப்ரெஸன் எத்தனை நாடுகளைச் சுற்றியிருக்கிறார். எவ்வளவு மாறுபட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அத்தனை பிரபலங்களையும் நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என வியப்பு ஏற்படுகிறது.
தனது கேமிரா எல்லா மொழிகளும் பேசக்கூடியது. காரணம் அது மௌனமானது என்று வேடிக்கையாகச் சொல்கிறார் ப்ரெஸன்

மெக்சிகோ, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஆப்ரிக்கா ஆசியா, ஐரோப்பா என அவர் பயணித்து எடுத்த புகைப்படங்கள் அந்தத் தேசத்தின் சமூகப் பண்பாட்டு அடையாளங்களை, அதன் உண்மையான நெருக்கடிகளை, கொந்தளிப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. மறைக்கப்பட்ட,விலக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு போலவே அவரது புகைப்படங்கள் இருக்கின்றன.
இந்த ஆவணப்படத்தில் வயதான ப்ரெஸன் தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களைக் காட்டி அதை எங்கே எப்போது எடுத்தேன் என்பதை நினைவுகூறுகிறார். அவரது புகைப்படங்கள் குறித்துச் சக புகைப்படக்கலைஞர்களின் நேர்காணல்களும் நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லரின் நேர்காணலும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், நாடக எழுத்தாளர்களைப் புகைப்படம் எடுத்துள்ள ப்ரெஸன் அவர்களின் நெருக்கமான நண்பராகவும் இருந்திருக்கிறார்.

ஆல்பர்ட் காம்யூ, ட்ரூமன் கபோட், மர்லின் மன்றோ போன்றவரை ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்கள் அபரமானவை.
இந்தியாவைப் பற்றி ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்களில் அன்றைய இந்தியாவின் நிஜமான சித்திரம் பதிவாகியிருக்கிறது. குறிப்பாக அகதி முகாம்களைப் பற்றி அவரது புகைப்படங்கள் வரலாற்றின் அரிய ஆவணங்கள் என்றே சொல்வேன்.
பிரபல நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லர் தனது போருக்குப் பிந்தைய புகைப்படங்களைப் பற்றி எழுதும் போது ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்கள் நம்மைக் கேள்வியைக் கேட்கின்றன: இந்தத் தேசத்தின் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும்? அடுத்து எங்கே போவோம்? என்ற கேள்வியை எழுப்புகின்றன. அமெரிக்காவின் மனசாட்சியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியது தான் ப்ரெஸனின் தனித்துவம் என்கிறார்.
கார்டியர்-ப்ரெஸனின் தாத்தா ஒரு தொழிலதிபர்; ஆகவே அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரி படிப்பின் போது தொடர்ந்து தோல்வியடைவே ஓவியக் கலைஞராக மாற முடிவு செய்தார். ஓவியம் பயிலுவதற்கான ஆண்ட்ரே லாட்டின் மாணவரானார், அவர் கிராஃபிக் வடிவங்களைப் ப்ரெஸனிற்குக் கற்றுக் கொடுத்தார்.
1929 இல் சர்ரியலிசம் மேலோங்கியிருந்த பாரீஸ் நகரில் அந்த ஓவியர்களுடன் இணைந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் ப்ரெஸன் அமெரிக்கக் கவிஞர் ஹாரி கிராஸ்பி தான் அவரைப் புகைப்படக்கலையை நோக்கி தூண்டியவர். புகைப்படங்கள் எடுக்க துவங்கி அதில் தீவிரமாகச் செயல்பட்ட ப்ரெஸன் ஒரு ஆண்டுக் காலம் மெக்ஸிகோவில் கழித்தார், அங்கேயுள்ள விபச்சார விடுதிகளையும் தெரு வாழ்க்கையையும் படமாக்கினார். அவரது புகைப்படங்கள் புகழ்பெறத் துவங்கின.
உன் கண்களைக் காப்பாற்றிக் கொள் என்று அவர் ஒரு புகைப்படக்கலைஞருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அது என்றைக்கும் பொருத்தமான அறிவுரையே

புகைப்படக்கலையில் புகழ்பெற்ற பிறகு திரைக்கலையின் மீது ஈடுபாடு வந்து எடிட்டிங் கற்றுக் கொண்டு திரைத்துறையில் பணியாற்றத் துவங்கினார். ஜாவாவைச் சேர்ந்த நடனக்கலைஞரான ரத்னா மோகினியின் அழகில் மயங்கி அவரைக் காதலித்த ப்ரெஸன் பின்பு அவரையே மணந்து கொண்டார்.
மே 1940 இல், அவர் பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்தார், ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டார். அவர் அடுத்த மூன்று ஆண்டுகளை நாஜி முகாம்களில் கழித்தார், பின்பு அங்கிருந்து தப்பிப் போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பாரீஸில் வாழ்ந்தார், வாழ்நாள் முழுவதுமே நான் ஒரு தப்பியோடிய கைதியாகவே உணருகிறேன் என்று ப்ரெஸன் கூறுகிறார்
போர்க் கைதிகள் மற்றும் கட்டாய உழைப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய ஆவணப்படத்தைப் படமாக்க 1945ல் நீண்ட பயணத்தை ப்ரெஸன் மேற்கொண்டார். அதில் எடுத்த சிறந்த புகைப்படங்களை இந்த ஆவணப்படத்தில் விளக்கிச் சொல்லுகிறார்.
ப்ரெஸன் தன் காதல் மனைவி ரத்னாவை அழைத்துக் கொண்டு பின்னர்ப் பாகிஸ்தான், மியான்மார், மலாயா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.
நல்ல புகைப்படம் என்பது கதை சொல்லக்கூடியது. அதைக் காணும் ஒவ்வொருவரும் தானாகக் கதை சொல்லத்துவங்கிவிடுவார்கள். அப்படியான புகைப்படங்களைத் தான் ப்ரெஸன் எடுத்திருக்கிறார் என்கிறார் எலியட் எர்விட்

இந்த ஆவணப்படத்தில் பாக், மொஸார்ட், ராவலின் இசை கூடவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசையோடு இணைந்தே தனது எண்ணங்களை ப்ரஸன் வெளிப்படுத்துகிறார்.
1954 ஆம் ஆண்டில், ஸ்டாலின் இறந்த பிறகு ரஷ்யாவிற்குள் செல்ல, அனுமதி பெற்ற முதல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கார்டியர்-ப்ரெஸன் மட்டுமே,
நான் ஒரு பூனை ஆம். ஒரு நாயைக் கீழ்ப்படிய வைக்கமுடியும் ஆனால் பூனை எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாது, பூனைகளை அடக்க முடியாது. பூனைகள் தன் விருப்பத்தின் பாதையில் சுற்றியலைக்கூடியவை என்கிறார் ப்ரெஸன்
புகைப்படம் எடுக்கவுள்ளவருக்குத் தன் முன்னே கேமிரா இருக்கிறது என்ற உணர்வு தோன்றாதபடி புகைப்படக்கலைஞர் செயல்பட வேண்டும். அப்போது தான் நல்ல புகைப்படத்தை எடுக்க முடியும் என்கிறார்.
மனதையும் கண்ணையும் ஒரே கோட்டில் ஒன்றிணைக்கும் போது தான் சிறந்த புகைப்படம் உருவாகிறது. படப்பிடிப்பின் போது நீங்கள் ஒருபோதும் சிந்திக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னும் பின்னும் நீங்கள் சிந்திக்க வேண்டும். நிறையப் புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. புகைப்படம் நிறைய எடுத்து வீணாக்காதீர்கள். அதிகமாகச் சாப்பிடுவது வாந்தி எடுக்கவே வைக்கும்
கேமிரா என்பது உங்கள் கழுத்தில் தொங்கும் அழகான மற்றும் விலையுயர்ந்த பதக்கம் அல்ல. உங்கள் கேமிரா உங்களுடைய உடலின் ஒரு பகுதியாகும். மனதின் ஒரு பகுதியாகும். அதை ஒரு போதும் மறக்காதீர்கள். என்கிறார் ப்ரெஸன்

விலை உயர்ந்த கேமிரா கையில் இருப்பதால் மட்டும் நல்ல புகைப்படத்தை எடுத்துவிட முடியாது. ப்ரெஸன் 1932 முதல் மற்றும் அவரது படைப்பு வாழ்க்கை முழுவதும், 50 மிமீ லென்ஸுடன் சிறிய, எளிய லைக்கா 35 மிமீ கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். அவரது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அபாரமானவை.
ஒரு தீர்க்கமான தருணத்தைக் கைப்பற்றுவதே புகைப்படக்கலைஞரின் இலக்கு. அதற்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அப்படியான தருணங்களையே தனது சிறந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்கிறார்.
பிரபலங்களையும் எளிய மனிதர்களையும் ஒன்று போலத் தான் ப்ரெஸன் படமாக்கியிருக்கிறார். உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு தான் அவரது தனித்துவம்.
இந்த ஆவணப்படத்தில் ஒவியக்கூடத்திற்குச் சென்று தான் சிறுவயதில் பார்த்து ரசித்த ரூபனின் ஓவியங்களை ரசித்து வியக்கிறார் ப்ரெஸன். அத்துடன் ஓவியம் வரைவதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அவர் தீட்டிய நீர்வண்ண ஓவியங்களைக் காணுகிறார். புகைப்படத்தால் ஒரு போதும் ஓவியத்தை வெல்லமுடியாது என்று ஒரு காட்சியில் சொல்கிறார் ப்ரெஸன்.

I think photographs should have no caption, just location, and date. Date is important because things change. என ப்ரெஸன் சொல்வது உண்மையான விஷயம்.
வண்ணப்புகைப்படங்களை விடவும் கறுப்பு வெள்ளையைத் தான் அதிகம் விரும்புகிறேன். நம் நினைவுகளின் நிறம் அதுவே என்கிறார் ப்ரெஸன். இலக்கியத்திலும் ஓவியத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவரால் தான் இப்படிப் பேச முடியும்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
