உறவின் மதிப்பு.

ஃபின்னிஷ் இயக்குனர் கிளாஸ் ஹாரோ இயக்கிய திரைப்படம் ONE LAST DEAL.
கலைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒலாவி முதுமை மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக ஓய்வு பெற முயல்கிறார். குடும்பத்தை விடவும் அவருக்குக் கலைப்பொருட்கள் விற்பனை மீதே நாட்டம் அதிகம். ஆகவே கேலரியில் தனியே வசிக்கிறார். கலைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் தான் அவரது நண்பர்கள்.
கலையின் மீதான ரசனை மற்றும் விற்பனை முறைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் அவரைப் போன்ற தீவிர கலை ஆர்வலர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கலையின் மதிப்பைச் சந்தை முடிவு செய்யக்கூடாது என அவர் நினைக்கிறார். அத்தோடு தன்னைப் போன்ற நேர்மையான கலை ஆர்வலர்கள் இனி வணிகம் செய்து வாழமுடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்கிறார். ஆகவே கடைசியாக ஒரு வணிகம் செய்துவிட்டு தொழிலை விட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
[image error]
ஒரு ஏலத்தில், பழைய ஓவியம் ஒன்று அவரது கவனத்தை ஈர்க்கிறது. அந்த ஓவியத்தில் அதை வரைந்தவர் யார் எனப் பெயரில்லாத காரணத்தால் குறைவான விலைக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது ஒரு புகழ்பெற்ற ஒவியம் என நம்பும் ஒலாவி அதை விலைக்கு வாங்கி விற்பது என முடிவு செய்கிறார். அவர் கைவசம் அந்த ஓவியத்தை வாங்குமளவு பணமில்லை. ஆகவே பலரிடமும் கடன் கேட்கிறார். ஒலாவியின் உள்ளுணர்வு அது ஒரு கடைசி அதிர்ஷ்டம் என்று அவரை நம்ப வைக்கிறது.
ஒலாவியின் மகள் லியா தன் மகன் ஓட்டோவுடன் தனித்துவாழுகிறார். அவளைக் கூடப் பல ஆண்டுகளாக ஒலாவி பார்க்கவில்லை. ஒரு நாள் ஓட்டோவிற்குப் பயிற்சி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆகவே அவன் உங்களுடன் வேலை செய்யட்டும் என லியா அனுப்பி வைக்கிறாள். விருப்பமில்லாமல் அவனைத் தன் கடையில் பணியாற்ற அனுமதிக்கிறார். தாத்தா இல்லாத நேரத்தில் ஒரு கலைப்பொருளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து காட்டுகிறான் ஓட்டோ. இது அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் அந்த ஓவியம் யார் வரைந்தது என்று தேட ஆரம்பிக்கிறார் ஒலாவி. இதற்கு ஓட்டோ உறுதுணை செய்கிறான். குறிப்பாக இணையவழியாக அவன் தகவலைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். விளையாட்டு பையனாக இருந்தவனுக்குக் கலையுலகம் அறிமுகமாகிறது.
[image error]
அந்த ஓவியம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய ஓவியரான இலியா ரெபின் வரைந்த இயேசு கிறிஸ்து என்பதைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் இலியா ஏன் அதில் தன் கையெழுத்துப் போடவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலைத் தேடுகிறார்கள். அத்தோடு இலியா ரெபின் ஓவியங்களின் பட்டியலில் அந்த ஓவியம் பற்றி ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று தேடி அலைகிறார்கள். முடிவில் அது ரெபின் வரைந்த ஓவியம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்
ஏலத்தில் அந்த ஓவியத்தை எடுக்கப் பலத்த போட்டி உருவாகிறது. ஏல நிறுவனத்தில் இலியா ரிபின் ஓவியத்தை விலைக்கு வாங்க முயற்சிக்கும் போது நமக்கு அவருடன் சேர்ந்து பதைபதைப்புத் தொற்றிக் கொள்கிறது.
பெரும்தொகை கொடுத்து ஒலாவி அதை விலைக்கு வாங்குகிறார். இதற்காக மகளிடம் கடன் கேட்கிறார்.பேரன் சேமித்து வைத்த பணத்தைக் கடன் வாங்குகிறார்.
அரும்பாடு பட்ட வாங்கிய அந்த ஓவியத்தை விற்பதில் பிரச்சனை துவங்குகிறது. உண்மையை அறிந்த ஏல நிறுவனம் மூலம் புதிய குழப்பங்கள் உருவாகிறது. ஒலாவி அந்த ஓவியத்தை என்ன செய்தார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
பெயர் தெரியாத ஓவியத்தின் உண்மையைத் தேடும் கிழவரின் கதை எனத் தோற்ற அளவில் தெரிந்தாலும் பேரனுக்கும் தாத்தாவிற்குமான உறவு எப்படி உருவாகிறது. எவ்வாறு வலுப்பெறுகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள் என்பதையே படம் சித்தரிக்கிறது.
[image error]
ஒலாவி கடந்தகாலத்தைச் சேர்ந்தவர். இன்றைய தொழில்நுட்பங்கள் எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. ஆன்லைன் விற்பனை போன்றவற்றை விட்டு ஒதுங்கியே இருக்கிறார். அவரிடம் கம்ப்யூட்டர் கூடக் கிடையாது. ஆனால் ஓட்டோ எப்போதும் கையில் ஒரு ஐபேட் வைத்துக் கொண்டிருக்கிறான். நவீனத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும் அவன் கைக்கொள்ளுகிறான். ஒலாவி இந்த மாற்றத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்வதை மிக நேர்த்தியாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.
தன் மகளிடம் ஒலாவி கடன் கேட்கும் காட்சியில் அவள் இத்தனை ஆண்டுகளாகத் தன்னைக் கைவிட்ட நீங்கள் இப்போது எப்படி உதவி கேட்கிறீர்கள் என்று கேட்கிறாள். ஒலாவியிடம் பதில் இல்லை.
ஒலாவி ஓவியத்தின் பின்னணியை ஆராயத் தொடங்குவதும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகள் வெளிப்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இலியா ரெபின் லியோ டால்ஸ்டாய் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் பலரையும் ஓவியம் வரைந்திருக்கிறார். ரஷ்யாவின் மிக முக்கிய ஓவியர்களில் ஒவியர். கதையின் வழியாக நாம் இலியாவின் ஓவிய உலகையும் அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.
[image error]
ஒலாவி தனது கேலரியை நிரந்தரமாக மூடி வெளியேறும் காட்சி துயரமானது. தன்னுடைய கேலரியை பேருந்தில் இருந்தபடியே அவர் திரும்பி பார்க்கிறார். எத்தனை நினைவுகள். எவ்வளவு சந்தோஷங்கள்.
மதிப்பு மிக்க ஓவியத்தைக் கண்டறியும் அவர் அதைவிடவும் மதிப்பு மிக்கது உறவுகளே என்று முடிவில் உணருகிறார். விலைமதிப்பில்லாத ஒவியத்தை விடவும் உயர்வானது தாத்தாவின் அன்பு என்பதை ஓட்டோவும் உணர்ந்து கொள்கிறான்.
“I love art more than virtue, more than people, more than family, more than friends, more than any kind of happiness or joy in life. I love it secretly, jealously, like an old drunkard என்று சொல்கிறார் ஓவியர் இலியா ரிபின். இதன் பிரதிபலிப்பு போலவே ஒலாவி உருவாக்கப்பட்டிருக்கிறார்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
