மேளம்

நாகசுரம், தவில் பற்றிய இசை ரசிகர்கள் பலரின் ஆதங்கத்தையும் பிரதிபலித்திருக்கிறார் கோலப்பன்-(தமிழர் மேளம்).கர்நாடக இசையின் "ராஜ வாத்தியம்" என்றால் அது நாகசுரம் தான். அதன் ஒலியின் வசீகரம் கேட்பவர் எவரையும் முதல் தீண்டலிலேயே அசைத்து உலுக்கி அடிமையாக்கும் தன்மை கொண்டது.


தி ஜானகிராமன் ஒரு கதை எழுதியிருக்கிறார். அதற்கு முன் நாகசுரத்தையே கேட்டிராத ஒரு வெள்ளைக்காரர் முன் ஒரு தேர்ந்த நாகசுர வித்வான் சாந்தமு லேகா வாசிக்க அவர் திரும்பத் திரும்ப அதையே இசைக்க சொல்லிக் கேட்டு அதில் அமிழ்ந்து விடுவார். நாகசுரத்தில் சினிமா பாட்டு வாசிப்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் வித்வானின் மகன் இதைப் பார்த்து மனம் மாறுவார். நீங்கள் சொன்ன சம்பவத்தை இதோடு பொருத்திப் பார்க்கிறேன். நமது பொது ரசனையில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது என்பது புரிய வருகிறது.


மற்ற இசைக்கருவிகளும், வாய்ப்பாட்டும் நிகழ்த்து கலைகள் என்ற அந்தஸ்து பெற்று விட, நாகசுரம்/தவில் ஒரு "சடங்கு கலை"யாகப் பார்க்கப் படுவதும் கோலப்பன் குறிப்பிடும் தேக்க நிலைக்கு ஒரு காரணமோ? நாகசுரத்தைப் பெருமளவில் எல்லா மக்களிடமும் எடுத்துச் சென்ற அந்த அம்சமே இன்று அதன் பரவலைத் தடுக்கும் காரணியாகி விட்டதோ? தெரியவில்லை.


கல்யாணங்களில் நன்றாக வாசிக்கும் நாகசுர வித்வான் களிடம் போய்ப் பேச்சுக் கொடுத்து பாராட்டிவிட்டு வருவது என் பழக்கம். நல்ல தரம் வாய்ந்த நாகசுர/தவில் இசைக்குப் பொருளியல் ரீதியாகவும் நல்ல மதிப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. திறமை உள்ள கலைஞர்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கிறது. ஆயினும் பழனியில் உள்ளது போன்ற நாகசுரப் பாடசாலைகளில் சேர்ந்து பயில்பவர்கள் அனைவருமே பரம்பரையாக வாசித்துவரும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தான். இதை மேலும் விரிவு படுத்த என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.


ஜடாயு

[image error]


அன்புள்ள ஜடாயு,


நாதஸ்வரம் மங்கலவாத்தியம் என்றாலும் நம்முடைய பொதுப்புத்தியில் மேளம் என்ற சொல் சாதிய இழிவுடன் சுட்டக்கூடியதாகவே இருந்திருக்கிறது.


அதை மாற்றியதில் பெரும்பங்கு கொத்தமங்கலம் சுப்புவுக்கு உண்டு. அவரது தில்லானா மோகனாம்பாள் என்ற நாவல் விகடனில் ஒரு காலத்தில் ஒரு பெருநிகழ்வு. நாதஸ்வர வித்வானை ஒரு கௌரவமான மனிதனாக, கட்டற்ற கலைஞனாக, பிரியத்திற்குரியவனாக அது காட்டியது. என்னிடம் எம்.வி.வெங்கட்ராம் சொன்னார், தமிழகத்தில் எல்லாராலும் மதிக்கப்பட்ட முதல் நாதஸ்வரக்கலைஞர் கொத்தமங்கலம் சுப்புவின் 'சிக்கல் சண்முகசுந்தரம்'தான் என


அந்தக்கதாபாத்திரத்தை சிவாஜி கணேசன் ஏற்று நடித்து வெளிவந்து பெரும்புகழ்பெற்ற திரைப்படமும் அத்தகைய பங்களிப்பை ஆற்றியது. சிவாஜி அவரது இயல்புக்கு மாறாக மிதமாகவும் [கத்தி எறியப்படும் காட்சி தவிர] நிதானமாகவும் நடித்தபடம் அது. கலைஞனுக்குரிய மென்மையும் பிடிவாதமும் உணர்ச்சிகரமும் கலந்த அவரது முகபாவனைகள் நுட்பமானவை.


இந்தியாவெங்கும் நாட்டுப்புறக்கலைகள்,சடங்கு கலைகளுக்கு சாதியடையாளம் உண்டு. நேற்று ஒரு கலைஞன் அக்கலைக்குரிய சூழலில் பிறந்து வளரவும் மிக இளமையிலேயே அக்கலைக்குள் சென்று கற்கவும் அந்த சாதிமுறை உதவியாக இருந்தது. நவீன காலகட்டத்தில் ஒரு எதிர்மறை அம்சமாக சாதியடையாளம் உள்ளது.


பிற சூழல்களில் எப்படி அதைத்தாண்டினார்கள்? அந்தக்கலையைப் பிறர், உயர்சாதியினர் கற்க ஆரம்பித்தார்கள். பரத நாட்டியத்துக்கு நிகழ்ந்தது அதுதான். யட்சகானத்துக்கு நிகழ்ந்தது அதுதான். அது நாதஸ்வரம் போன்றவற்றுக்கும் நிகழவேண்டும்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தவில்
தமிழர்மேளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.