பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?

அண்ணே,


தாழ்மையுடன் தங்களிடம் சில கேள்விகள் சமர்ப்பிக்கிறேன்.


1. பாரதிக்கு "மகாகவி" என்று பட்டம் கொடுத்தது யார்? எதனால்?


2. இந்த அணுகுண்டை இப்பொழுது வீசுவதற்கு என்ன காரணம்?


3. பாரதியைப்போல் நமக்கும் இருக்கும் உதாரண புருஷர்கள் குறைவு. அவரை demystify பண்ணுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?


அன்புடன்,

இரங்கராஜன்



அன்புள்ள இரங்கராஜன்,


பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தது எவர் என்று சொல்ல முடியாது. ஆனால் பாரதி என்ற ஆளுமைச்சித்திரம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தை நாம் வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள முடியும்.


1921 ல் பாரதி மறையும்போது இந்திய சுதந்திரப்போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக இருக்கவில்லை. காந்தி அப்போதுதான் இந்தியா திரும்பி 1918ல் சம்பாரன் சத்யாக்ரகத்தை நடத்தி தேசியகவனத்தை ஈட்டிக்கொண்டிருந்தார். இந்தியாவெங்கும் பயணம் செய்து மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற பிரிவினையால் சிதறிச் சீர்குலைந்திருந்த காங்கிரஸை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.


1908 ல் வ.உ.சி எடுத்த நெல்லை கிளர்ச்சி பிரிட்டிஷாரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டதை ஒட்டி அரசியல் சோர்வடைந்து, புதுவையில் தலைமறைவாக வாழ்ந்து ,பின்னர் கடையம் வந்து ஒதுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து, சென்னை திரும்பித் தீவிர அரசியலை விட்டு இதழியல் பணியில் ஈடுபட்டிருந்த பாரதிக்கு காந்தியின் வருகை ஒரு பெரிய விடிவாகத் தெரிந்தது. வாழ்விக்க வந்த மகாத்மா என்ற வாழ்த்தை காந்தி இந்திய அரசியலில் செய்த சாதனைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே பாரதி எழுதிவிட்டது அதனால்தான்.


1919ல் ரௌலட் சட்டம் வந்தபோது காந்தி அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தை மீண்டும் வேகம் பிடிக்கச்செய்தார். இம்முறை நேரடியான மக்கள் பங்கேற்புள்ள பேரியக்கமாக அது இருந்தது. ஆனால் சௌரிசௌராவில் நடந்த வன்முறைக்குப்பின்னர் பயிற்சிபெறாத மக்களைக்கொண்டு அமைதிப்போராட்டத்தை முன்னெடுக்கமுடியாதென்ற எண்ணம் காந்திக்கு ஏற்பட்டது. ஆகவே போராட்டத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டார். தனக்களிக்கப்பட்ட ஆறாண்டு சிறைவாசத்தை ஏற்றுச் சிறைசென்றார்.


காந்தியின் போராட்டத்தின் மக்களாதரவு பிரிட்டிஷாரை மிரளச்செய்தது. காந்தி சிறையிலிருந்த காலகட்டத்தில் காங்கிரஸை பிரிட்டிஷார் வெற்றிகரமாக உடைத்தனர். மாகாணத்தேர்தலில் போட்டியிட்டு வென்று பிரிட்டிஷார் அளிக்கும் ஆட்சிவாய்ப்புகளைப் பெறும் நோக்குடன் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு இருவரும் காங்கிரஸைப் பிளந்து சுதேசிக் கட்சியை உருவாக்கினார்கள். இந்தியா முழுக்க காங்கிரஸுக்கு எதிரான அமைப்புகளை உருவாக்க ஆதரவளித்தனர் பிரிட்டிஷார்.


பிரிட்டிஷ் ஆட்சியில் அரசுப்பதவிகளை வாதாடிப்பெறும் நோக்குடன் 1917ல் உருவாக்கப்பட்ட South Indian Liberal Federation என்ற அமைப்பு ஜஸ்டிஸ் கட்சியாக உருவெடுத்தது இச்சூழலில்தான். மாகாணத் தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிடாததைப் பயன்படுத்திக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சி வென்று சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது.


இக்காலகட்டம் தமிழகத்தில் காங்கிரஸின் சோர்வுக்காலகட்டம். காங்கிரஸுக்கு எதிரான உக்கிரமான பிரச்சாரப்போரை ஜஸ்டிஸ் கட்சி நடத்தியது. அதற்கு எதிராகக் காங்கிரஸ் எதிர்ப்பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கருத்தியல் போரில் காங்கிரஸுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம் பாரதி. அவரது எரிந்தடங்கிய தனிவாழ்க்கையும், மேடைகளில் எளிதில் சாமானியர்களைக் கொள்ளைகொள்ளும் பாடல்களும் காங்கிரஸுக்குப் பெரிதும் உதவின.


1924ல் சிறைமீண்ட காந்தி காங்கிரஸின் பிளவுகளைப் பேச்சுவார்த்தை மூலமும் உண்ணாவிரதம் மூலமும் சரிசெய்ய முயன்றார். காங்கிரஸுக்கு முழுநேரத் தொண்டர்களை லட்சக்கணக்கில் சேர்த்துத் தன் ஆசிரமங்கள் வழியாக அவர்களுக்கு அகிம்சைப்போராட்டத்துக்கான பயிற்சியை அளித்தார். இந்தக் காலகட்டம் முழுக்க காங்கிரஸின் அமைப்புவேகத்தை நிலைநிறுத்த இதழ்களும் மேடைகளும் தான் முயன்றுவந்தன. இந்தக் காலகட்டத்தில்தான் பாரதி தமிழக மேடைகள் முழுக்க ஒலிக்க ஆரம்பித்தார்.


1928ல் காந்தி உப்புசத்யாக்கிரகத்தை ஆரம்பித்தார். தமிழகத்தில் நடந்த முதல் வெகுஜன அரசியலியக்கம் இது எனலாம். அந்தப் போராட்டமே இன்று நாம் காணும் பாரதி என்ற ஆளுமையை உருவாக்கியது. பாரதியை 1910 முதல் அறிந்திருந்த வ ரா இந்தக்காலகட்டத்தில்தான் பாரதியை மகாகவி என்று பேச ஆரம்பித்தார். பாரதி வரலாற்றை எழுதினார். பாரதி காந்திக்கு ஆசீர்வாதம் அளித்தது போன்றபுராணங்களை உருவாக்கி பாரதியின் ஆளுமைச்சித்திரத்தைக் கட்டி எழுப்பினார். பாரதியை மேடையில் நிறுவியவர்களில் சத்தியமூர்த்தி முதன்மையானவர்.


1935ல் பாரதியை உலகமொழிகளில் உள்ள மகாகவிகளிலேயே முதன்மையானவர், அவருடன் ஒப்பிட்டால் ஷேக்ஸ்பியரும் மில்டனும் கம்பனும் எல்லாம் வெறும் தூசி என ஒரு மேடையில் அவர் பேச அதற்குக் கல்கி எதிர்வினையாற்ற அதை ஒட்டியே பாரதி மகாகவியா என்ற விவாதம் எழுந்தது.


பாரதியை மிகையாக அழுத்திச்சொல்லி நிறுவவேண்டிய தேவை தேசிய இயக்கத்துக்கு இருந்தது. காரணம் தமிழகத்தில் இந்தியதேசிய இயக்கம் வட இந்தியா போல முழுமையாகவும் வலிமையாகவும் நிகழவில்லை என்பதே. அன்றிருந்த தமிழகம் சென்னை மாகாணமாகவும் சமஸ்தானங்களாகவும் இருந்தது. சமஸ்தானங்களில் சுதந்திர இயக்கம் அனேகமாக நிகழவில்லை.சென்னையில் காங்கிரஸ் ஜஸ்டிஸ் கட்சியின் வலுவான எதிர்ப்பை எப்போதும் எதிர்கொண்டிருந்தது. காங்கிரஸ் முன்வைத்த தேசிய உணர்வுகளுக்கு எதிரான சக்திகளாக ஆரம்பகால தலித் இயக்கமும் வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.


மேலும் பாரதி அவன் எழுதிய காலகட்டத்திலேயே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டுதான் இருந்தான்.உதாரணமாக அயோத்திதாசர் பாரதியை மிகக்கடுமையாக எதிர்த்து பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறார். 'ஈனப்பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கிருப்பவரன்றோ' என்ற வரி அயோத்திதாசரை கொந்தளிக்கசெய்தது. அந்த வரியை த் திரும்பப்பெற வேண்டும் என அவர் எழுதினார், பாரதி அயோத்திதாசரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. அந்த வரியை அவர் பறையர்களை இழிவுபடுத்த எழுதவில்லை என்பதே அவர் நிலைப்பாடாக இருந்தது.


பாரதி அயோத்திதாசரின் அப்பட்டமான பிரிட்டிஷ் ஆதரவுப்போக்கால் கடும் எரிச்சலடைந்திருக்கலாம். அயோத்திதாசரின் பிரிட்டிஷ் விசுவாசம் தர்க்கம் கடந்த ஒன்று. இருவருடைய எழுத்துக்களையும் கால அடிப்படையில் ஒப்பிட்டால் அயோத்தி தாசருக்கே பாரதி எதிர்வினையாற்றுகிறார் என்பது தெரியும். ஆனால் அவர் ஓரிடத்தில்கூட பண்டிதர் பெயரைச் சொல்லவில்லை. 'நான் எழுதுவது பட்டணத்து பட்லர் பறையர்களைப்பற்றி அல்ல' என்று மட்டும் பாரதி எதிர்வினையாற்றியிருக்கிறார். பதிலுக்கு பாரதியை வேஷப்பார்ப்பான் என்றே அயோத்திதாசர் எழுதினார். பாரதி ஒரு பிராமணக்குரல் என்ற விமர்சனம் பாரதி வாழ்ந்தபோதே இருந்தது.


ஆகவே பாரதியை ஒரு தொன்மம் அளவுக்கு மேலே கொண்டு செல்லவேண்டிய அவசியம் அன்றைய காங்கிரஸுக்கு இருந்தது. அவரது மரணத்தின்போது அவர் கனகலிங்கத்துக்குப் பூணூல்போட்ட விஷயம் புறக்கணிக்கப்பட்டது. பதினைந்து வருடம் கழித்து அது மீளமீளப் பேசப்பட்டது. கனகலிங்கம் என்ன ஆனார் என்பது கவனிக்கப்படவேயில்லை. பாரதி இலக்கிய விமர்சன அளவுகோல்களுக்கே அப்பாற்பட்ட மகாகவி, சித்தர், யோகி, அதிமானுடன் போன்ற என்ற ஆவேசமான நிலைப்பாடுகள் உருவானது இவ்வாறுதான்.


இந்த 'அணுகுண்டை' நான் புதிதாக வீசவில்லை என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். பாரதிமீதான விமர்சனங்கள் எப்போதும் உள்ளன. நான் சொல்வது எப்போதும் எல்லாத் தலைமுறையிலும் நவீன இலக்கியச் சூழலுக்குள் இருந்து வந்த விமர்சனங்களை மட்டுமே. அவை எப்போதும் இருக்கும்.


பாரதியை ஓர் உதாரணபுருஷன் என்ற தளத்தில் demystify செய்யும் நோக்கம் எனக்கில்லை. பாரதியை மகத்தான இலட்சியவாதியாக, தமிழ்ப்பண்பாட்டின் சிற்பிகளில் ஒருவராக, மட்டுமே இந்த விவாதத்தில் முன்வைக்கிறேன். பாரதி அரசியலிலும் பண்பாட்டிலும் செயல்படும் எவருக்கும் ஒரு முதன்மையான முன்னுதாரணம். ஆனால் அந்த பிம்பம் உண்மையை அடிப்படையாகக் கொண்டே அமையலாம். பாரதியை பற்றிய பொய்யான அல்லது மிகையான கற்பனைகளின் அடிப்படையில் அமையவேண்டியதில்லை.


தமிழில் கிட்டத்தட்ட நூறாண்டுகளாகவே பாரதியைக் கடுமையான எதிர்மறை விமர்சனத்துக்கு ஆளாக்கும் போக்கு இருந்துகொண்டே இருப்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். அதற்கு நேர் எதிராக அவரைப் புராணபுருஷன் அளவுக்கு கொண்டுசெல்லும் மொழிபுகள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் அல்ல எதிலுமே நடுநிலையை நோக்கி, உண்மையை நோக்கிச் செல்லக்கூடியதே என் அணுகுமுறையாக இருந்திருக்கிறது. பாரதியின் ஆளுமையின் உண்மைத்தன்மை, பாரதியின் படைப்புகளின் உண்மையான பெறுமதி ஆகியவற்றை நோக்கியே செல்ல விரும்புகிறேன்.இலக்கியத்திறனாய்வு என்பதன் நோக்கம் அதுவே. அதல்லாமல் வெறுமே பிம்பங்களை உருவாக்குவதோ நிலைநிறுத்துவதோ அல்ல.


இலக்கியம் ஒரு அறிவியக்கம் என்ற நிலையிலேயே de-mystification என்ற அடிப்படை இயல்புடன் இருக்கிறதென்பதை நீங்கள் உணரலாம். சமரசமில்லாமல் உடைத்து உண்மையை வெளியே எடுப்பதே அதன் வழியாக இருக்கிறது. நவீன இலக்கியத்தை அணுகும்போது மரபான மனங்கள் அதைக் கொஞ்சம் அதிர்ச்சியுடன்மட்டுமே உணர்கின்றன. அன்பு , காதல், கற்பு என எல்லாவற்றையும் உடைத்து ஆராயும் இலக்கியத்தின் வழிமுறை அவர்களுக்குத் திகிலூட்டுகிறது.


சமீபத்தில் என் 'இன்றையகாந்தி' நூலை வாசித்துவிட்டு மூத்த காந்தியர் ஒருவர் தொலைபேசியில் ஆதங்கத்துடன் சொன்னார். காந்தியின் பாலியல் சோதனைகளை, அவரது பாலியல் மனத்தடுமாற்றங்களை எல்லாம் இவ்வளவு விரிவாகப் பேசத்தான் வேண்டுமா? அவை காந்தி என்ற இலட்சியபிம்பத்தை இளம் மனங்களில் உடைத்துவிடும் அல்லவா?' நான் சொன்னேன் 'அந்நூல் காந்தியைக் கட்டி எழுப்பும் நோக்கம் கொண்டதல்ல. காந்தியை அறியும் நோக்கம் கொண்டது. சத்தியசோதனை எழுதியவர் சத்தியத்தின் பலத்தில் நிற்கட்டும்'


அதையே பாரதிக்கும் சொல்வேன் ' உண்மை ஒளிர்க'என்று பாடவோ?-அதில் உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?' என்று பாடியவன் உண்மையின் பீடத்தில் நிற்கட்டும்


ஜெ


 


(குழும விவாதங்களின் இறுதிப்பகுதி)

தொடர்புடைய பதிவுகள்

பாரதி வரலாறு…
சிலைகள்
பாரதி விவாதம்-7 – கநாசு
பாரதி -கடிதங்கள்
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
பாரதி-கடிதங்கள்
பாரதி விவாதம் 5 – தோத்திரப் பாடல்கள்
பாரதி-கடிதங்கள்
பாரதி விவாதம் 4 – தாகூர்
பாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.