அசடனாக இருப்பது

செல்வம்,


சற்று முன்னர் உங்கள் காலம் இதழில் ஜெயமோகன் அவர்களின் அசடனும் ஞானியும் கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். பகுதி 2-ல் உள்ளவை பகுதி 1-ல் முன்வைக்கப்படும் மெய்யியற் கருத்தீட்டுக்கான சித்தாந்த, இலக்கிய எடுத்துக்காட்டுகள். இங்கு பகுதி 1-ல் உள்ள மெய்யியற் கருத்தீட்டையே நான் கருத்தில் கொண்டுள்ளேன்:


(நான் ஒரு மெய்யியல் மாணவன். Concept என்பதைக் கருத்தாக்கம் என்பது பொருந்தாது என்பதால், கருத்தீடு என்பதை இங்கு பயன்படுத்துகிறேன்).


பகுதி 1-உடன் நான் 100 விழுக்காடு உடன்படுகிறேன். நித்தியாவோ ஜெயமோகனோ சராசரித்தனம் என்று விவரிப்பது கூட ஓர் இடக்கரடக்கலே! அவர்கள் அதனைப் பாமரத்தனம் என்று விவரித்தால் கூட அது செல்லுபடியாகும்.


அவர்கள் அரைவேக்காடுகள் கூட அல்ல, கால்வேக்காடுகள்! அவர்களுடன் எதிர்நீச்சல் போடுவது ஓர் ஆழிப்பேரலையை எதிர்த்து நீச்சல் போடுவதற்கு நிகர். யாரோ ஒருவர் குறிப்பிட்டவாறு, உன்னை நீ தாழ்த்தி உரைத்தால், சமூகம் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளும். அத்தகைய சமூகத்துள் வாழநேர்ந்தமை ஓர் அவப்பேறே.


செக்கோவின் 6-ம் இலக்க அறை (Ward No. 6) என்ற கதையில், தனது உளநோயாளியின் நுண்மதி கண்டு வியக்கும் ஓர் உளநோய் மருத்துவரை வெளியுலகம் உளநோயாளி ஆக்கிவிடுகிறது! போரை எதிர்த்துச் சிறைசென்று மீண்ட Bertrand Russell, உள்ளே இருக்கவேண்டிய பலர் வெளியே இருக்கிறார்கள், வெளியே இருக்கவேண்டிய பலர் உள்ளே இருக்கிறார்கள் என்று முழங்கியதுண்டு.


குளித்துவிட்டு அரைத்துண்டுடன் வெயில் துய்த்துக்கொண்டிருந்த (மெய்யியலர்) Diogenes-இடம் நேரில் சென்ற மகா அலெக்சாந்தர்:


"நான்தான் மகா அலெக்சாந்தர்" என்றான்.

"நான்தான் Diogenes" என்றார் அவர்.

"தங்களுக்கு நான் என்ன பணிவிடை புரிவது?"

"விலத்தி நில், எனக்கு வெயில் படட்டும்!"


அப்புறம், "நான் அலெக்சாந்தராக இல்லாவிட்டால், Diogenes ஆக இருக்கவே விரும்புவேன்" என்று அந்த மாமன்னன் சொன்னதாகக் கேள்வி. இதனை முன்னொரு தடவை என்னுடன் கடமையாற்றும் ஓர் எகிப்திய (அறபு) மொழிபெயர்ப்பாளரிடம் தெரிவித்தபொழுது, அவர் தங்கள் (எகிப்திய) வரலாற்று நிகழ்வு ஒன்றைத் தெரிவித்தார்: "மாட்சிமை தங்கிய மன்னர் தங்களைக் காண விரும்புகிறார்" என்று தூதுவர்கள் வந்து ஒரு ஞானியிடம் தெரிவித்தார்கள். அதற்கு அவர் "நான் இருக்கிற இடம் மன்னருக்குத் தெரியும் அல்லவா!" என்று சொல்லி அனுப்பினாராம்.


மணி வேலுப்பிள்ளை

தொடர்புடைய பதிவுகள்

அசடனும் ஞானியும்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.