வீரகதைப்பாடல்கள்

அன்பு ஜெயமோகன்,


நலந்தானே. தமிழினியில் இலியட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். ட்ராய் ( பிராட் பிட்) திரைப்படமாகக்  காட்டப்பட்டதை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நிறைய சாரமிருந்ததாக உணர்கிறேன்.


தமிழில் உள்ள வீரகதைகள் பற்றிப் பேசவே இந்தக் கடிதத்தை எழுதத் துவங்கினேன். மதுரை வீரன், பொன்னர் சங்கர் பற்றிய பாடல்கள் நிறைய கோவில்களில் இன்றும் பாடப்பட்டு வருகின்றனதானே. 'மன்னான் சின்னாண்டி கதைப்பாடல்கள்' என்னும் சிறிய புத்தகத்தை 9 வருடங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சாலையோர பழம்புத்தகங்களிலிருந்து கண்டெடுத்தேன்.


இன்னமும்  நினைவிருக்கும் சில வரிகள்  'தப்பி, தலை முழுகி, தானமிட்டு, சோறுதிண்டு' என்பன. திரும்பத் திரும்ப இவை கூறப்பட்டிருந்தன. கதையின் நாயகன் தங்கை வீட்டுக்குச் சென்றால், பெண் பார்க்கச்சென்றால், போருக்குச்சென்றால் என எல்லா சமயங்களிலும் அவன் துணி துவைத்து , குளித்து , தானமிட்டு பின்பு உணவருந்தியதாக இருந்தது. கிட்டத்த 'குஜிலி' வடிவில் . எங்கள் ஊரில் கணியான் பாட்டு இன்றும் ஆடிமாதம் அம்மன் கொடையில்  உண்டு. நமது சுடலை மாடாசாமி இசக்கி அம்மனைமணமுடித்தமை முதலான வில்லுப்படல்கள் குறித்தும் நினைவுக்கு வந்தது.இவற்றைக்குறித்து நீங்கள் விரிவாக  எழுதுவீர்கள் என நம்புகிறேன். வீட்டில்அனைவரும் நலம் தானே.


வணக்கங்கள்.

ஜெயராஜன்


அன்புள்ள ஜெயராஜன்


நான் ஓர் ஒப்புமைக்காக மலையாள வீரகதைப்பாடல்களைச் சொன்னேன். தமிழ் வீரகதைப்பாடல்களைத் தமிழின் தொன்மையான பாடாண் திணைப் பாடல்களுடன் ஒப்பிட்டு ஒரு பொதுவான மன வரைவு நம்மிடம் இருக்கிறதா என்று ஆராயலாம்தான். அதை ஆய்வாளர்கள் எவரேனும் செய்யவேண்டும்.


ஜெ


வணக்கம் …


தமிழினியில் உங்கள் இலியட் விமர்சனம் பார்த்தேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது மட்டுமல்ல இந்தக்காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. நாங்கள் வீரகோசங்களை நிறுத்திவிட்டு புத்திபூர்வமாக யோசித்தால் மிகுதிக் காலத்தை அர்த்தமுடையதாக்கமுடியும்.


யார் சொல்வது யார் கேட்பது…? உங்கள் ஆய்வுழைப்பிற்கு நன்றி.


அன்புடன்


அ.கேதீஸ்வரன்.


அன்புள்ள கேதீஸ்வரன்


வீரகதைப்பாடல்கள் உடல் வீரம் , அதாவது மறம் சம்பந்தப்பட்டவை.


அதற்கு நேர் எதிரான சொல்லாக அறம் மாறியது சமணர் காலகட்டத்தில். அகிம்சையின் பீடமேறியவரை மகாவீரர் எனக் கொண்டாடும் ஒரு மரபும் நமக்கிருந்தது


அந்த மரபே நாம் இன்றும் கொண்டாட வேண்டிய மரபு.


ஜெ


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.