தமிழில் இலக்கிய விமர்சனம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா? தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார்? யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா?


ராம்குமார் சாத்தூரப்பன்


அன்புள்ள ராம்குமார்


தமிழில் தொன்மையான திறனாய்வு முறைமை ஒன்று இருந்துள்ளது. நூல்களை சபை நடுவே அரங்கேர்றம்செய்யும் முறை இருந்தது, அது ஒரு திறனாய்வுமேடையே. அந்தத் திறனாய்வுகள் பதிவாகவில்லை


நம்முடைய உரைகளைத் திறனாய்வு முறைகளில் ஒன்றாகக் கருதலாம். நச்சினார்க்கினியர் உரை மிகச்சிறந்த திறனாய்வு நோக்குக்கு உதாரணமாக உள்ளது


நவீனத்திறனாய்வு இங்கே நவீன இலக்கியம் வந்ததும் சேர்ந்தே வந்துவிட்டது. வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரைகள் சிறந்த திறனாய்வுக்கான அழகிய தொடக்கமாக அமைந்தன. குறிப்பாக கண்ணன்பாடல்களுக்கு எழுதிய முன்னுரை. அது சிறந்த திறனாய்வுக்கான மூன்று அடிப்படைக்கூறுகளையும் கொண்டுள்ளது. . 1. ரசனை 2. ஆய்வு 3 மதிப்பீடு.


அதன்பின் முதல் தலைமுறை இலக்கிய விமர்சகர்களில் ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் அழகியல் நோக்கில் படைப்புகளை விமர்சனம்செய்தனர். புதுமைப்பித்தன் கதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதிய முன்னுரை முக்கியமான ஒரு விமர்சன மாதிரி. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களின் மதிப்புரைகளும் விமர்சனமரபை முன்னெடுத்தன.


இலக்கியவிமர்சனம் ஒரு பெரிய இயக்கமாக எழுந்தது க.நா.சு யுகத்தில்தான். அவருடையது ரசனை விமர்சனம். அவரது நண்பரும் பகைவருமான சி.சு.செல்லப்பா எழுதியது அலசல் விமர்சனம். அவர்களுக்கு நேர் எதிராக செயல்பட்டது மார்க்ஸியக் கோட்பாட்டு விமர்சனம். கைலாசபதி, சிவத்தம்பி,நா.வானமாமலை ஆகியோர் அம்மரபின் முக்கியமான விமர்சகர்கள்.

அடுத்த தலைமுறையில் இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு பலர் எழுதவந்தனர். வெங்கட் சாமிநாதன் , சுந்தர ராமசாமி போன்றவர்களை க.நா.சு மரபினர் எனலாம். கெ.முத்தையா, கெ.எஸ்.சிவக்குமாரன், ஏ.ஜே.கனகரட்னா போன்றவர்களை கைலாசபதி மரபு எனலாம்.


அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த விமர்சகர்களில் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் போன்றவர்கள் அழகியல் நோக்கை முன்னெடுத்தனர். ராஜ்கௌதமன் எம்.ஏ.நுஃப்மான், தமிழவன் போன்றவர்கள் கோட்பாட்டு நோக்கை முன்னெடுத்தனர்.


தமிழிலக்கிய விமர்சனத்தில் சமகாலத்தில் க.மோகனரங்கன் போன்றவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் பொதுவாக எழுத்தாளர்களே விமர்சனங்களையும் எழுதுவதே தமிழில் வழக்கமாக உள்ளது


தமிழ் இலக்கிய விமர்சகர்கள், விமர்சனப்போக்குகள் அனைத்தையும் தொகுத்தளிக்கும் கலைக்களஞ்சியமாக எம்.வேதசகாயகுமாரின் இணையதளம் உள்ளது. அதில் சுருக்கமாகத் தமிழ் இலக்கிய விமர்சன வரலாறு அளிக்கப்பட்டுள்ளது.


நான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூல் மறுபதிப்பு கிழக்கு வெளியீடாக வரவுள்ளது. அதில் எல்லா வகையான அறிமுகத்தகவல்களும் உள்ளன


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.