இந்திய அறிவியல் எங்கே?

அன்புள்ள ஜெ,


அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர்  கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக   அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் சிறு பகுதி கூட  இன்றுள்ள கட்டிடங்களில் காண முடிவதில்லை அல்லவா.


நான் அறிவியலில் ஆர்வம் உடையவன். மருத்துவம் (சித்த,ஆயுர்வேத), அறிவியல்,  துறைகளில் நாம் எந்தளவிற்கு  முன்னேறியிருந்தோம்? அதுபற்றி ஏதேனும் ஆய்வுகள் நடந்திருக்கிறதா?  அயோத்தி தாசர் போன்ற முதற்சிந்தனையாளர்கள் இத்துறைகளில் நம்மிடையே  உள்ளனரா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.


கருத்துச்செறிவான  உரைக்கு மிக்க நன்றி.


சங்கரன்


அன்புள்ள சங்கரன்,


இந்திய மருத்துவம் போன்ற துறைகளைப்பற்றி அந்தத் துறை வல்லுநர்கள்தான் சொல்லவேண்டும். நான் அறிந்தவரை ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவமுறைகள் சமகாலத்தில் உலகிலிருந்த எந்த மருத்துவமுறையையும் விடப் பலமடங்கு மேம்பட்டவையாக இருந்தன. இயற்கையில் இருந்து பல்லாயிரம் மருந்துத்தாவரங்களை அவை இயல்பும் விளைவும் அறிந்து அட்டவணையிட்டிருப்பதை ஒரு மானுட சாதனை என்றே சொல்லவேண்டும். கேரளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட கவனகௌமுதி என்ற ஆயுர்வேத தாவரநூலை பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட மூவாயிரம் பக்கம். அது ஒரு பெரும் கலைக்களஞ்சியம்.


பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் இந்திய ஞானம் எல்லாத்துறைகளிலும் பெரும் தேக்கத்தை அடைந்தது. இருநூறு வருடங்களுக்குப்பின் இந்திய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன் அது மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டது. இன்று நாம் வாசிக்கும் பழைய செவ்வியல்நூல்கள் அறிவியல் நூல்கள் எல்லாம் அக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுக்கு வந்தவை.


ஆனால் சுதந்திரத்துக்குப்பின்னர் இந்தியமறுமலர்ச்சிக்கால மனநிலைகள் தேங்கின. ஐரோப்பிய வழிபாட்டாளரும் அடிப்படையில் இந்தியமரபுமேல் மதிப்பில்லாதவருமான நேருவின் யுகம் ஆரம்பமாகியது. அவரது ஆலோசகர்களான மகாலானோபிஸ், பி என் ஹக்ஸர் போன்றவர்கள் ஐரோப்பியவழிபாட்டு – இந்திய நிராகரிப்பு  மனநிலையை நவீனசிந்தனையாக கருதினர். அவர்களே சுதந்திர இந்தியாவின் கல்விக்கொள்கையை வடிவமைத்தனர். அதில் ஐரோப்பிய அறிவியலும் தத்துவமும் மட்டுமே முன்னிறுத்தப்பட்டன.


இன்று இந்தியாவில் எந்த பகுதியிலுமே கல்வித்தளத்தில் இந்தியசிந்தனை, இந்திய அறிவியல் கற்பிக்கப்படுவதில்லை. அவை இந்துமதம் சார்ந்தவையாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவற்றைப் பழையமையானவை என்று முத்திரை குத்தும் செயலைக் கல்வித்துறை கடந்த அறுபதாண்டுக்காலமாகச் செய்து வருகிறது. நேருயுகத்தில் கல்வி-அறிவுத்துறையில் மேலாதிக்கம் பெற்ற இடதுசாரிகள் இந்தத் தவறான எண்ணங்களை இன்றளவும் காலத்துக்குப் பரப்பி வருகிறார்கள். நமது கல்வி என்பது முழுக்கமுழுக்க மொழியாக்கக் கல்வியாக ஆகிவிட்டிருக்கிறது.

விளைவாக இதற்கு நேர் எதிரான ஒரு போக்கு உருவாகி வந்தது. எந்த ஆய்வுநெறியும் இல்லாமல் வெறுமே 'நம்ம கிட்ட இல்லாததா ஒண்ணுமே கெடையாது' என்றவகைப் பேச்சுக்கள். அவற்றுக்கான அர்த்தமற்ற ஆய்வுகள். நாசா புகைப்படத்தில் இரண்டரைலட்சம் வருடம் பழைமையான சேது பாலத்தைக் கண்டுபிடிப்பது பீமனின் எலும்புக்கூட்டை மீட்பது போன்ற அசட்டுத்தனங்கள்.  ஆப்ரிக்க மொழியெல்லாம் தமிழே என்பது போன்ற அதீத தாவல்கள்.


இந்திய அறிவியலை அப்படி 'சும்மா' உருவாக்கிவிட முடியாது. அது தனிப்பட்ட முயற்சிகளாலும் நிகழாது. அதற்கு மூன்றுநூற்றாண்டுக்காலப் பின்னடைவு உள்ளது. அதை எல்லாத்தளங்களிலும் உயிர்ப்பித்து அதன் பின்னடைவை சரிசெய்து நவீன யுகத்துக்குரியதாக ஆக்குவதென்பது ஒரு பெரும் கூட்டுப்பணி. அரசு மூலம் ஒரு பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடாக அது நிகழ்ந்தால் மட்டுமே அந்த மறு உயிர்ப்பு நிகழ முடியும்.


ஆனால் இன்றைய அறிவுலகமே அந்த மனநிலைக்கு நேர்எதிரானதாக உள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் அறிந்துகொள்ளுவதே அறிவுக்குப் போதுமானது என்ற நம்பிக்கை நம் கல்வித்துறையில் சிந்தனைத்துறையில் இதழியலில் எல்லாம் வேரூன்றியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் தாசர்களாக வாழ்ந்தவர்களின் வாரிசுகள் அந்த அடிமை மனநிலையை சுதந்திர நாட்டிலும் மைய ஓட்டமாகக் கொண்டுசெல்கிறார்கள்.


ஆகவே சென்ற அரைநூற்றாண்டுக்காலத்தில் இந்திய சிந்தனை, இந்திய அறிவியல் சார்ந்து ஒட்டுமொத்தமான எந்த ஆய்வும் நடக்கவில்லை என்பதே உண்மை. தனிப்பட்ட முறையில் ஆங்காங்கே சில ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதுபோல சுதந்திரம்கிடைத்த பின் இந்திய ஞானமும் இந்திய அறிவியலும் புத்துயிர்கொண்டு எழவில்லை. ஆகவே இன்று வரை இந்தியா உலகுக்கு ஏதும் கொடுக்காததாக, வெறும் ஊழியர்களை மட்டும் உருவாக்கி விற்பதாக அமைந்துள்ளது.


நேருமேல் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு. ஆனாலும் அவரை நல்லெண்ணம் கொண்ட அசடர் என்றே என் மனம் மதிப்பிடுகிறது. சமகாலச் சிந்தனையோட்டங்களில் அடித்துச்செல்லப்படும் எளிமையான மனம் கொண்டவர் அவர். ஒருவகையில் இந்திய மரபுக்கு அவர் அளித்தது பெரிய தேக்கத்தையே.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.