‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37

37. பாவையாடல்


அசோகசுந்தரி வந்த வேளை குருநகரியை விண்ணகங்கள் வாழ்த்த வழியமைத்தது என்று நிமித்திகர் கூறினர். அவள் நகர்நுழைந்த அன்று மாலை இளவெயிலில் ஒளிப்பெருக்காக மழை ஒன்று பெய்தது. கீழ்த்திசையில் வானவில் ஒன்று நகர்மேல் வளைந்து நின்றது. அன்றும் தொடர்ந்துமென ஏழுநாட்கள் மழை பெய்து நகர் குளிர்ந்தது. மலைகளுக்குமேல் மின்னல்கள் பின்னப்பட்ட முகில்முடி அமைந்தது. மண்மணத்துடன் பெருகிவந்தன சிற்றாறுகள்.


ஏழாம்நாள் நகருக்கு வடக்கே வீடமைக்க மண்தோண்டியவர்கள் ஒரு புதையலை கண்டடைந்தனர். அறியாத தொல்லரசன் ஒருவனின் மண்முடியும் ஏழுகலம் பொன்னும் அதிலிருந்தது. அச்செல்வம் கருவூலத்தை அடைந்த மறுநாள் ஆயர்குடிகள் நகருக்குள் வந்து ஆடு ஒன்று ஏழுகுட்டியிட்ட செய்தியை சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் இனியசெய்திகள் அணைந்தன. “திருமகள் எழுந்தாள். சுடர் எழுந்தபின் அகல் வெறும் மண்குவளை அல்ல” என்றார் நகர்க்கவிஞர் ஒருவர்.


அரண்மனையை  சில நாட்களிலேயே முழுமையாக நிறைத்துவிட்டாள் அசோகசுந்தரி. இடைநாழிகளில் மான்களையும் மயில்களையும் துரத்திக்கொண்டு ஓடினாள். தூண்களில் தொங்கவிடப்பட்ட மலர்த்தோரணங்களைப் பற்றி தொங்கி மேலேறி உத்தரங்களின் மேல் கைவிரித்து நடந்து கூச்சலிட்டு நகைத்தாள். ஒருநாள் அரண்மனையின் கூரைக்கூம்பு மேல் ஏறி உச்சிக்கம்பத்தைப் பற்றியபடி நின்று கூச்சலிட்டு நகைத்தாள். அரண்மனைக்காவலர் கூடி அவளை கெஞ்சி மன்றாடி இறங்கிவரச்செய்தனர்.


மலர்த்தோட்டங்களில் பகல் முழுக்க அலைந்து திரிந்தாள். எதையெதையோ பொறுக்கிக் கொண்டுவந்து சேர்த்தாள். மயிலிறகுகள் முதல் முயல்புழுக்கைகள் வரை அவள் சேமிப்பில் இருந்தன.  அருமணிபதிக்கப்பட்ட கணையாழிகளையும் கூழாங்கற்களையும் ஒன்றாக சேர்த்து வைத்திருந்தாள்.  ”அழகுள்ளவை என அவள் எவற்றை எண்ணுகிறாள் என்றே புரியவில்லை, பாம்புச்சட்டை ஒன்றை எடுத்து தோளிலிட்டுக்கொண்டு வந்தாள் நேற்று” என்றாள் அவைச்சேடி. “அது அழகுதான், பாம்பை நாம் அஞ்சாமலிருந்தால். வெள்ளிச்சால்வை” என்றாள் முதுசெவிலி.


அரண்மனையின் விலங்குகளும் பறவைகளும் அவளுக்கு அணுக்கமாயின. பின்னர் சேடியரின் குழந்தைகள் அவளுக்கு சுற்றமாக மாறின. ஓரிரு நாட்களுக்குள்ளே அரண்மனையின் சேடியரும் ஏவலரும் அவளை தங்கள் குழந்தை என எண்ணத்தலைப்பட்டனர். மானுடருக்குள்ள வேறுபாடு அவள் எண்ணத்தில் படியவில்லை. விழிகளிலோ மொழிகளிலோ எவ்வகையிலும் அது வெளிப்படாதபோது மானுடப் படிநிலைகளாலான உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அரண்மனை மக்களுக்கு அவளுடன் இருப்பதென்பது விடுதலைக்கனவு போலிருந்தது. தொலைவில் அவளைக் கண்டாலோ, எங்கேனும் அவள் குரலைக் கேட்டாலோ, அவள் பெயரை எவரேனும் சொல்லகேட்டாலோ அவர்கள் முகம் மலர்ந்தனர். அவளுடன் இருக்கையில் பொறுப்பையும் கடமையையும் தன்னிலையையும் முற்றிலும் மறந்து அவர்களும் களிகொண்ட மைந்தர்களும் சிறுமியரும் என ஆயினர்.


முதுசெவிலியர் கூவி நகைத்தபடி அவளை துரத்திக்கொண்டோடினர். காவலர்கள் தங்கள் படைக்கலங்களை அவளுக்கு விளையாடக்கொடுத்து தாங்களும் சுற்றி விளையாடினர். அவளிருக்கும் இடத்தில் ஆடலிருக்குமென்பதனால் அத்தனை குழவியரும் அவளுடனிருந்தனர். அரண்மனை அகத்தளம் எப்போதும் சிரிப்பும் கூச்சலும் நிரம்பியதாக மாறியது. அங்கிருந்து கிளம்பி அவள் அமைச்சு நிலைகளுக்கும் படைத்தலைவர் அறைகளுக்கும் செல்லத்தொடங்கியபோது அவளைத் தடுக்கும்பொருட்டு வாயில்களனைத்தையும் முற்றாக மூடி வைக்கும்படி பத்மன் ஆணையிட்டான். “நல்லவேளை, அவரால் பறக்கமுடியாது. நாகம்போல் ஒழுகவும் இயலாது” என்றான் சிற்றமைச்சன்.


நகுஷனிடம் “இதில் நன்றென ஒன்று உள்ளதென்றால் எல்லைகளை மீறிச்செல்லும் வழக்கம் அவருக்கில்லை என்பதே. நெடுங்காலம் எல்லைக்குள் வாழ்ந்து பழகியவர் என்பதால் தான் அடைந்த இடத்திற்குள் மேலும் மேலும் வெளி பெருக்கி முடிவின்மையை உருவாக்க அவரால் முடிகிறது. ஒரு சிறு இடைநாழியையே நகரம் போல் எண்ணிக் கொள்ள அவர்களால் முடியும் ஒரு மரத்தை காடாக்கவும் ஒருநிழலில் முழுநாளையும் வாழ்ந்து நிறைக்கவும் இயலும்” என்றான் பத்மன். “ஒவ்வொன்றும் அவருக்காக பேருருக் கொள்கின்றதோ என ஐயம்கொள்கிறேன், அரசே” என அவன் தொடர்ந்தான். “நேற்று ஒரு கருவண்டு யானையாகியது. மத்தகம் உலைய அடிமரக்கால் எடுத்துவைத்து அது நடந்ததை நானே கண்டேன். அது பிளிறியதை இரவில் கனவில் கேட்டேன்.”


“அவர் கொண்டிருக்கும் உலகியல் ஆர்வம் எனக்கு முதலில் வியப்பையே ஊட்டியது” என்றாள் முதுசெவிலி. “அணிகளையும் ஆடைகளையும் அள்ளி சூடிக் கொள்கிறார். ஓர் ஆடையைக் கண்டதும் அணிந்திருந்த ஆடையை அக்கணமே கழற்றி வீசி அதை அணிகிறார். நகையொன்றை அணிந்து பிறிதொரு நகையை கையில் எடுத்தபடி விலகி ஓடி துள்ளிக்குதித்துச் சுழன்றதுமே முதல் நகையைக் கழற்றி அங்கேயே வீசிவிட்டு அடுத்ததை அணிகிறார்.”


“ஆனால் பின்பு அறிந்தேன், உலகியல்பொருட்களில் உறையும் தெய்வப்பேரழகை. அவர் அணிகளிலும் ஆடைகளிலும் அந்த அழகை மட்டுமே காண்கிறார். அவை செல்வமென்று அவர் அறிந்திருக்கவில்லை. பொன் நாணயங்களையும் அரச முத்திரைகளையும் கூழாங்கல்லெனவே அவர் விழிகள் நோக்குகின்றன” என முதுசெவிலி தொடர்ந்தாள்.


“கைக்குழந்தைகளையும் மலர்களைப்போலவே எண்ணிக்கொள்கிறார். இடையிலும் தோளிலும் எப்போதும் குழந்தைகளை வைத்திருக்கிறார். ஆனால் குழந்தைகளுக்கு அவர் அன்னையென்றில்லையென்பதை அன்னையர் உடனே புரிந்து கொள்கின்றனர். குழந்தைகளைப் பேணவோ காக்கவோ அவரால் இயலவில்லை. ஆர்வமிழந்த இடத்திலேயே குழந்தையை விட்டுவிட்டு அடுத்த விளையாட்டுக்கு செல்கிறார். குழந்தையின் அழுகை அவரை கரைக்கவில்லை. முகம் சிணுங்கி அது அழத்தொடங்கியதுமே அங்கேயே விட்டு விட்டு பிறிதொன்றை நோக்கி திரும்பிக் கொள்கிறார். பிறிதொரு குழந்தை அவர், அதில் அன்னை எழமுடியாது” என்றாள் முதுசெவிலி.


ஆனால் குழந்தைகள் அவளையே விரும்பின. எதிர்ப்படும் விழிகளிலெல்லாம் அன்னையரைக் கண்டு சலித்திருந்த அவர்களுக்கு பெரியவர்களின்  ஆற்றலும் கொண்ட அவ்வழகிய குழந்தை புதியதொரு களியாட்டமாக அமைந்தது. கையை நிலத்திலறைந்து கடைவாய் ஒழுக தவழும் குழந்தைகூட அவள் குரல் கேட்ட திசை நோக்கி திரும்பியது. அன்னையரின் கைகளிலிருந்து திமிறி சறுக்கி இறங்கி கால்கை உதைத்து கிண்கிணி இழுபட அவளை நோக்கியே சென்றது.



tigerமணவிழா மேடையிலேயே அவள் எவளென்று குடிகள் அனைவரும் அறிந்து கொண்டனர். மங்கல ஆடையணிந்து சேடியர் இருபுறமும் அகம்படி வர மங்கலக் கணிகையர் முன்னால் வாழ்த்துரைத்துச் செல்ல இசைச்சூதர் பின்னால் முழங்கித் தொடர மணமேடைக்கு அவள் வந்தபோது மக்கள் குரவையிட்டு அரிமலர் தூவி அவளை வாழ்த்தினர். குரவையொலி கேட்டு அவள் துள்ளிக் குதித்துச் சுழன்று அனைவரையும் பார்த்து தானும் நகைக்கூச்சலிட்டாள். வாயில் கைவைத்து நாக்கு சுழற்றி குரவையொலி இட்ட பெண்களைப்பார்த்து தானும் அதுபோலவே கைவைத்து ஒலியெழுப்ப முயன்றாள். அவளைக் கட்டுப்படுத்த பின்னால் வந்த முதுசெவிலி இருகைகளையும் பற்றி மென்குரலில் அடக்க அவள் மெல்ல தணிந்து பின் செவிலி அகன்றதும் மீண்டும் வாயில் கைவைத்து குரவையிட்டாள்.


தலைமேல் விழுந்த அரிமலர்கள் கண்ணில் படாமல் தடுக்க ஆடைமுனையை எடுத்து தலைக்கு மேல் விரித்து பிடித்துக்கொண்டாள். கைகளை விரித்து அசைத்து மழைவிளையாடுவதுபோல அரிமலர் பொழிவை அளைந்தாள். அப்பால் ஒருங்கியமைந்திருந்த மணமேடை அறையில் நகுஷனைப் பார்த்ததும் நிரையொழுங்கை உடைத்து அவனை நோக்கி ஓடிவந்து “இங்கே இருக்கிறீர்களா?” என்று கூச்சலிட்டாள். அந்தணர்களை கால்தூக்கி வைத்து கடந்து அவனருகே வந்து அமர்ந்துகொண்டாள். குரவையிட்ட பெண்கள் ஓசையடக்கி வியந்து அவளைப்பார்த்தனர். அந்தணர்கள் தங்கள் சொல்முதல்வரை விழிகளால் உசாவ அவர் பணி தொடரட்டுமென்று இமையசைத்தார்.


நகுஷன் செவிலியை உறுவிழிகளால் பார்த்து அவளை கட்டுப்படுத்தும்படி அறிவுறுத்தினான். நான் என்ன செய்வது என்று அவள் பதற்றத்துடன் கைகாட்டினாள். தான் வந்த வழி முழுக்க கண்டவற்றை உரத்த குரலில் அவள் அவனிடம் சொல்லத்தொடங்கினாள். “அங்கே ஒரு மான் நின்றது. அதை இங்கே கூட்டிவர முயன்றேன். அது இவர்கள் எழுப்பும் ஓசையைக் கேட்டு ஓடிப்போய்விட்டது. நல்ல மான்… அதற்கு நான் மிருகி என்று பெயரிட்டிருக்கிறேன். இதோ இவர்கள் ஏன் இப்படி ஓசையிடுகிறார்கள்? இந்த ஓசையை நான் இதற்குமுன் கேட்டதில்லை. ஆனால் சில பொழுது குரங்குகள் இவ்வாறு மரக்கிளைகளில் ஒலியெழுப்பியதை கேட்டிருக்கிறேன். இவர்கள் அங்கிருந்து கேட்டிருப்பார்களோ? அன்னைக் குரங்கு குழந்தையை பெற்றால் இப்படி அவை ஓசையிடும் என்று நான் பார்த்திருக்கிறேன். இதோ இவ்வாறு…” என்று சொல்லி அவள் வாயில் கைவைத்து உரக்க குரலெழுப்பினாள்.


அந்தணர்கள் தயங்கி “அரசே…” என்றனர். குனிந்து முதல்வரிடம் “சடங்குகளை குறைத்துக் கொள்வோம். விரைவில் மணநிகழ்வு முடியட்டும்” என்று பத்மன் சொன்னான்.  அவர்கள் “அவ்வாறே” என்றனர். ஒவ்வொரு சடங்கையும் அவள் விளையாட்டாக மாற்றினாள். அவள் மேல் நீர்தெளித்த அந்தணரின் கையிலிருந்த கலத்தை வாங்கி திருப்பி அவர்கள்மேல் தெளித்தாள். ஒருவரின் குடுமியை கைகளால் பற்றி மெல்ல ஆட்டினாள். நடுவே மணமேடையிலிருந்து பாய்ந்திறங்கி ஓடிச்சென்று அங்கே நின்றுகொண்டிருந்த தொல்குலத்துக் கன்னியொருத்தியின் தலையிலிருந்த மலரைப்பார்த்து  ”இதை எனக்குக் கொடு!” என்று கேட்டாள். சேடியர் அவளை திருப்பி அழைத்துக்கொண்டு வந்து அமரவைத்தனர்.


மெல்ல சூழ்ந்திருந்தவர்கள் நகைக்கலாயினர். பத்மன் திரும்பிப்பார்க்க நகைப்புகள் விழிகளில் மட்டுமே ஒளியென்றாயின. சூழ்ந்திருந்த குருநகரியின் குடிகள் அனைவருமே அவளைக்கண்டு ஏளனம் கொள்வதுபோல நகுஷன் எண்ணினான். சினத்தில் அவன் உடல் துடித்துக்கொண்டிருந்தது. பத்மன் “அரசே, பொறுங்கள்” என்றான். எட்டு மங்கலங்கள் அமைந்த பொற்தாலத்தில் மணநாண் வந்தது. கைகள்மேல் மிதந்து சென்ற தாலத்தில் அது சுற்றி வர குலத்தலைவர்கள் தொட்டு வாழ்த்தினர்.  ”நானும் அதை தொடுவேன்! நானும் அதை தொடுவேன்!” என்று அவள் எழுந்தாள்.


“அமர்க, அரசி! அதை தங்கள் கழுத்தில்தான் கட்டப்போகிறார்” என்றாள் முதுசெவிலி. “என் கழுத்திலா? ஏன்?” என்றாள். “தாங்கள் அரசியாகப் போகிறீர்கள்” என்றாள். “யாருக்கு?” என அவள் வியந்தாள். “அரசருக்கு.”  அவள் நகுஷனை நோக்கிவிட்டு “அரசருக்கு யார் கட்டுவார்கள்?” என்றாள்.   ”சற்று அமைதியாக இருங்கள். சடங்குகள் முடிந்தபிறகு அனைத்தையும் நானே சொல்கிறேன்” என்று செவிலி சொன்னாள்.


“நான்! நானே கட்டுவேன்!” என்று அவள் அதை எடுக்கப்போனாள். “பேசாதே!” என்று நகுஷன் தாழ்ந்த கடுங்குரலில் சொல்ல அவள் திகைத்து உடனே அழத்தொடங்கினாள். “நான் கட்டமாட்டேன். நான் எழுந்து உள்ளே போவேன்” என்றாள்.  ”அமருங்கள், அரசி! தாங்கள் அமர்ந்தால் உள்ளே சென்றதும் விளையாடுவதற்கு புதிய ஒரு பொருளைத் தருவேன்” என்றாள் செவிலி. “நாம் இப்போதே போய் விளையாடுவோம்” என்றாள். “இதைக் கட்டிய பிறகு போவோம், சற்று பொறுங்கள்” என்று அவள் சொன்னாள்.


மங்கலநாண் அருகணைந்தது. அதில் குலத்தலைவர்கள் சந்திரகுலத்து குலமுத்திரை பொறிக்கப்பட்டு சுருட்டப்பட்டு மஞ்சள்நூல் கட்டி இறுக்கப்பட்ட பனையோலைச்சுருளை கோத்தனர். அனல் புனல் இரண்டுக்கும் அதைக் காட்டி ஒப்புதல் பெற்ற பின் பெருந்தாலத்தில் இரு மலர்மாலைகளுடன் மணைக்கு கொண்டுசென்றனர்.  அவற்றை மாற்றிக் கொள்ளும்படி வைதிகர் சொன்னார்கள். நகுஷன் அவள் கழுத்தில் அந்த மாலையை அணிவிக்க அசோகசுந்தரி மகிழ்ந்து எம்பிக் குதித்து தன் கழுத்தில் இருந்த மாலையை அவனுக்கு அணிவித்தாள். அவன் அணிவித்த மாலையை திரும்பக் கழற்றி செவிலி தலையினூடாக அணிவிக்க முயன்றாள்.


“அங்கே பாருங்கள்… அரசி, சற்று அசையாமலிருங்கள்” என்றாள் செவிலி. நகுஷன் மங்கல நாணை அவள் கழுத்தில் கட்ட அவள் அதில் தன் முன் தொங்கிய பனையோலைச் சுருளை எடுத்து சுற்றியிறுக்கிக் கட்டியிருந்த நூலை அவிழ்க்க முயன்றாள். அதை செய்யக்கூடாதென்று மெல்லிய குரலில் சொன்னபடி செவிலி அவள் கையைப்பிடித்து கீழே விட்டாள். அவள் அதை உடனே மறந்து குத்துவிளக்கின் சுடரை நோக்கி ஒரு மலரை எடுத்து வீசினாள்.


மும்முடிச்சு இட்டு அவளை மணம் கொண்டபின் அதுவரை இருந்த பதற்றம் விலகி உடல் எளிதாக நகுஷனின் முகத்தில் புன்னகை வந்தது. ஒவ்வொரு சடங்கிலும் அவள் மகிழ்ந்து சிரிப்பதை அவன் சிரித்தபடி நோக்கலானான். ஏழு அடி வைத்தபோதும் அம்மி மிதித்தபோதும் அவள் சிரித்து துள்ளினாள். அருந்ததி பார்க்கச் சொன்னவுடன் “எங்கே? எங்கே அவள்?” என்று கேட்டு அவள் விழிகளால் துழாவியபோது சூழ்ந்திருந்த பெண்கள் அனைவருமே வாய் பொத்தி நகைத்தனர்.


ஆனால் அந்நகைப்பு ஏளனத்தில் இருந்து அன்பாக மாறியிருப்பதை நகுஷன் கண்டான். தங்கள் வீட்டுக் குழந்தையொருத்தியை விளையாடவிட்டு சூழ்ந்திருந்து நோக்கும் அன்னையர் போலிருந்தனர் அங்குள்ள பெண்கள் அனைவரும். நிலையையும் வயதையும் மறந்து மகளுடனோ பெயர்த்தியுடனோ ஆடும் நோக்கு கொண்டிருந்தனர் குலமூத்தோர்.



tigerநகுஷன் அசோகசுந்தரியை முடிசூட்டி அரியணையில் இடமமர்த்தி குருநகரியின் பட்டத்தரசியாக நிறுத்தினான். மணநாள் அன்று மாலையில் நிமித்திகர் கூடி களம் பரப்பி அவன் அவளை கூடவேண்டிய பொழுதைக் கணித்து ஏழுநாட்கள் கழித்து பொழுது குறித்தனர். அவர்களின் இணைவிரவுக்கென அரண்மனை வடகோட்டத்தில் மகிழஞ்சோலைக்கு நடுவே காவல் சூழ்ந்த சிறு குடிலொன்று அமைக்கப்பட்டது.  மலர்களாலும் வண்ணப்பட்டுகளாலும் அணி செய்யப்பட்ட அக்குடிலில் சேடியர் இன்னுணவும்  விழிநிறை பொருட்களும் கொண்டுவந்து சேர்த்தனர். மலரணியும் தூப நறுமணமும் நிறைத்தனர்.


அரசனின் மணநிறைவுநாள் என்பது அக்குடிகளுக்கும் விழவென்றே கொள்ளப்பட்டது. நன்மைந்தர்பேறுகொண்டு குருநகரி வளம்கொள்ளவேண்டுமென மூத்தோர் தெய்வங்களை வேண்டினர். உடலினானும் அழகுளாளும் இணைவது அவ்விரவை நல்லுறவுக்கான தருணமென்றாக்கியதனால் இளையோரும் துணைவியரும் அதை தாங்களும் கொண்டாடினர். வளர்பிறை வானில் எழுந்த பின்னால் பாங்கனுடன் நகுஷன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் உள்ளம் பதைப்பு கொண்டிருந்தது. அவளை மணந்தபிறகு உணர்ந்த நிறைவு மணஇரவை எண்ணியபோது ஐயமென்றும் அச்சமென்றும் மாறிவிட்டிருந்தது.


முந்தையநாள் மாலை அவையமர்ந்து பேசுகையில் பத்மனிடம் “இன்றுவரை அவளிடம் நான் உரையாடியதில்லை என்றே உணர்கிறேன்” என்றான். பத்மன் “அவரிடம் எவரும் உரையாட முடியவில்லை, அரசே” என்றான். “அவள் என்னை தன் களித்தோழனாக புனைந்து கொள்கிறாள். அவள் அத்தோழனுடன்தான்  சொல்லாடுகிறாள். அவளுடன் சென்று விளையாடுவது அப்புனைவே. நான் இப்பால் திகைப்புடன் நின்று நோக்குகிறேன்” என்று நகுஷன் சொன்னான்.  ”இன்று என் வேட்கையுடன் ஆணென நான் நிற்கையில் அவள் அறிந்த ஒருவனை எதிர்பார்த்து வந்து அதிர்ச்சியுறக்கூடும். என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றான்.


பத்மன்  ”உறவுகளில் அவ்வண்ணம் முன்னரே வகுத்து ஒத்திகைநோக்கி சொல்கோத்து எவரும் ஈடுபடுவதில்லை, அரசே. அவ்வாறு செய்ய வேண்டுமென்று விழைவார்கள். அந்தந்த கணங்களில் அவர்களின் உள்ளுறைந்த உயிரியல்பே வெளிப்படுகிறது” என்றான். நகுஷன் பெருமூச்சுவிட்டு “அஞ்சி பின்கால் எடுக்கலாகாதென்று இதற்கு துணிந்தேன். இதுவோ அறியா எதிரி. வெண்புகைப் புரவிகளுடன் போரிட்ட தொல்வீரன் ஒருவனைப்பற்றிய சூதர்பாடல்களை நினைவுறுகிறேன்” என்றான்.


நகுஷன் அன்று காலை விளங்காக் கனவொன்று கண்டான். நீர்ப்பாவை ஒன்றை மூழ்கிக் கிடக்கும் சிலையென்றெண்ணி அவன் எடுக்க முயன்றுகொண்டே இருப்பது போல். விழித்தெழுந்து எண்ணம் தலையை எடை கொள்ள வைக்க சாளரத்தினூடாக வெளியே அசையும் இலையின் ஒளியை நோக்கிக்கொண்டிருந்தபோது முதுசெவிலி அவனருகே வந்தாள். “அரசே, இன்று தங்கள் மண நாள் இரவு” என்றாள். ஆமென அவன் தலையசைத்தான். “பிறபெண்டிரை நீ இதுவரை அறிந்ததில்லை என்று அறிவேன்” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “காமத்தையே உண்மையுருவில் இப்போதுதான் காணப்போகிறாய். உள்ளக்காமம் சொல்லில் படர்ந்து கனவில் ஊடுருவி வளர்ந்து எழுவது. அரசே, ஆனால் அதை விடவும் பேருருக்கொண்டது உடற்காமம்” என்றாள்.


அவன் செவியளித்து தொலைவுநோக்கி நின்றான். “மலரினும் மெல்லிது, அதன் செவ்வி சிலரே தலைப்படுவார்” என்றாள். அவன் திரும்பி “மென்மையாக… அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?” என்றான்.  “அதைத்தான் அனைவரும் சொல்லியிருப்பார்கள். அவ்வண்ணம் அல்ல நான் சொல்ல வருவது” என்றாள். அவன் விழிதிகைத்து நோக்க “காமம் முதல்புணர்வுநாளில் ஆணால் கன்னிக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அது மூன்று வகைகளில் என்று நூல்கள் சொல்கின்றன.”


“அன்னைப்பறவை குஞ்சுக்கு பறத்தலை கற்பித்தல் முதல் வழி. அதை பக்‌ஷிபாலக நியாயம் என்கின்றன நூல்கள். முதலில் தயக்கமே இல்லாமல்  கூண்டிலிருந்து தள்ளிவிடு. கருவிலேயே காற்றை அறிந்த சிறகு அதற்கு இருக்கிறது. பறக்கும் விழைவு உள்ளை நிறைத்திருக்கிறது. அது பறக்கும். பறக்காவிடில் பறக்க இயலாதது அது என்றே பொருள்” என்றாள் முதுசெவிலி. “இவ்வுலகில் எங்குமுள்ளதும் எவராலும் இயல்வதும் இவ்வழியே.”


“எழுத்து பழகும் குழந்தையின் வழி இரண்டாவது” என்று அவள் தொடர்ந்து சொன்னாள். “கையோ உள்ளமோ முன்பறியாதவை எண்ணும் எழுத்தும். ஆகவே விலக்கி தயங்கி, வலிந்திழுக்கையில் வழியறியாது வந்து மெல்லத் தொட்டு, நுனியறிந்து சுவைகொண்டு மேலுமென இறங்கி, படிப்படியாக அறிதல் அதன் நெறி.  முற்றிலும் தானற்ற பிறிதொன்றில் தான் வெளிப்படும் உவகையே எழுத்தறிதல்.  கற்றல் என்பது உருமாறுதல் என்றும் பெருகுதல் என்றும் எய்துதல் என்றும் அவர் அறியட்டும். நெடுந்தூரம் போந்து திரும்பி நோக்குகையில் விட்டு வந்ததனைத்தும் மிகச்சிறிதெனத் தோன்றும் பெருமிதத்தை அவர் கொள்ளட்டும்.”


“வந்தமையும் அயல் ஒவ்வொன்றும் முன்னரே அவரில் இருந்தவற்றை முற்றிலும் உருமாற்றும். துயருற்றும் ஏங்கியும் வலி கொண்டும் அவர் காணட்டும், அவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் உருமாறி பேருவகையாக ஆகக்கூடும் என. கைபற்றி விரலால் மணலில் எழுத வை. திருத்தித்திருத்தி வடிவெழச்செய்.  பொருளின்மை திரண்டு பொருளென்று ஆகும்வரை, ஓசையும் கோடுகளும் மொழியென்றும் எழுத்தென்றும ஆகும் வரை.”


“மூன்றாம் முறை தெய்வத்தை எழுப்புவது போன்றது” என்றாள் முதுசெவிலி. “படையலிடுதல், பாடலளித்தல், பலிக்கொடை. எழாவிடில் தன்னை வளைத்து தலையளித்தல். எழும் தெய்வம் நம்மை வென்று நம்மில் நம் தலையை பீடமாக்கி அமரும். தெய்வம் அமர்ந்த தலை இறங்கா மத்து திமிர்த்த களிற்றுமத்தகம். அத்தெய்வம் சலித்து ஒருநாள் இறங்குகையில் நாம் முழுவெறுமையை மட்டுமே கொள்வோம். அரசே, உன் மூதாதை புரூரவஸ் விண்மங்கை ஊர்வசியை மூன்றாவது வழியில் அணுகினார். அவரில் எழுந்த தெய்வம் ஆடி முடித்து அடங்கி மீண்டது. கைவிடப்பட்ட வெறும் கோயில் என அவர் எஞ்சினார். அதுவே இறுதி வழியென்றுணர்க! முதலிரு வழிகளும் தோற்குமென்றால் மூன்றாவது வழியை தேர்க!”


காமமண்டபம் நோக்கி நடக்கையில் எல்லை வரை உடன் வந்த பத்மனிடம் நகுஷன் சொன்னான்  ”மூன்று வழிகளை அன்னை உரைத்தார். எவ்வழியைத் தேர்வதென்று எனக்குத் தெரியவில்லை. மூன்றுவழிகளுக்கும் அப்பால் ஏதோ ஒன்று உள்ளது என உணர்கிறேன்.” பத்மன் புன்னகைத்து “வழி எதுவென்று முடிவெடுப்பது அரசியின் இயல்பைக் கொண்டு அல்ல அரசே, தங்களின் இயல்பைக் கொண்டுதான்” என்றான். நகுஷன் திரும்பி நோக்க “மூன்று வழிகளையும் அறிந்திருங்கள். மூன்றையும் உள்ளத்திற்கு சொல்லி அப்படியே மறந்துவிடுங்கள். உங்களில் ஆழ்ந்திருக்கும் தன்னியல்பு மூன்றிலொன்றை தானே தெரிவு செய்யட்டும்” என்றான் பத்மன்.


நகுஷன் “அது தீங்கென்றால்? அதனால் பழி சேருமென்றால்?” என்றான். பத்மன் “ஊழென்பது உடலிலேயே பொறிக்கப்பட்டுள்ளது என்றொரு முதுசொல் உள்ளது. நீங்கள் எவரென்பது உங்கள் தசைகளில், விழிகளில், நாவில், எண்ணங்களில் பிறப்பதற்கு முன்னரே எழுந்துவிட்டது. பிறிதொன்றை நீங்கள் ஆற்ற முடியாது. சிட்டுக்குருவியின் சிறகுகள் துள்ளுவதும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் சாமரமாவதும் பயிற்சியால் அல்ல.” நகுஷன் எண்ணி எண்ணி எல்லை காணாது சலித்து திரும்பி பெருமூச்சுடன் “நன்று! எது கனிந்துள்ளதோ அது நிகழட்டும்!” என்று வடக்குச் சோலைக்குள்  சென்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2017 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.