யதார்த்தம் என்பது

குழும விவாதத்தில் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் பற்றி நான் இப்படி சொல்லியிருந்தேன். ஆன்மா தேங்கிப்போய் த் தீனி காமம் எனப் புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால் சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே'


போகன் அதற்கு பதிலிட்டிருந்தார். 'சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே என்கிறீர்கள்.'

எனக்குப் புரியவில்லை.ஒரு உச்சத்தை நோக்கிப் போகவில்லை என்கிறீர்களோ?சித்தரிப்பே போதாதா?'


கண்டிப்பாகப் போதாது. பொதுவாகத் தமிழிலே ஒரு நம்பிக்கை எழுபதுகளில் உருவாக்கப்பட்டது. வாழ்க்கையை நம்பகமாகச் சித்தரித்தாலே இலக்கியத்துக்குப் போதும் என்ற எண்ணம். காரணம் வணிக எழுத்தின் பொய்யான ஜோடனைகள். இலக்கியம் அதற்கு மாற்றாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. கல்கி வாசித்த வாசகனுக்குக் கிருத்திகா பெரும் மனஎழுச்சியைக் கொடுப்பது இயல்பே.


ஆனால் தொண்ணூறுகளில் இலக்கியம் அடுத்தகட்டம் நோக்கி வந்தது. வணிக எழுத்து முக்கியமழிந்து இலக்கிய ஒப்பீட்டுக்கே வராமலாகியது. இலக்கியங்கள் சொந்தக்கால்களில் நிற்கவேண்டிய கட்டாயமேற்பட்டது. இந்நிலையில் அதே பழைய நாவல்களை வாசிக்கையில் ஏமாற்றமே வந்தது. அவை ஒரு 'யதார்த்தச்' சித்திரத்தைக் காட்டுகின்றன. சரி, அதற்கென்ன?


யதார்த்தம் என்பதே ஒரு புனைவுதான். இலக்கியத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும். நாம் நம்மைச்சுற்றி உள்ள சில விஷயங்களை நம் தேவைக்கேற்பத் தெரிவுசெய்து அவற்றைக்கொண்டு உருவாக்கிக்கொண்டிருப்பதே நம் யதார்த்தம். அன்றாட யதார்த்தம் சமூக யதார்த்தம் எல்லாமே அப்படித்தான்.


உதாரணமாக வன்முறையும் பரிதவிப்புமாகக் கொப்பளிக்கும் சேரிக்கு அருகே வாழும் ஒரு சென்னை மத்தியவர்க்கத்தினன் மிக மிகச் சாதாரணமான சம்பிரதாயமான ஒரு வாழ்க்கையைத் தனக்கான வாழ்க்கை யதார்த்தமாக உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். அந்தச் சேரிவாழ்க்கை அவனுடைய யதார்த்தம் அல்ல.


இலக்கியத்தில் காட்டப்படும் யதார்த்தம், நாம் புனைந்துள்ள இந்த அன்றாட, சமூக யதார்த்ததுடன் பொருந்திப்போகும்போது நாம் அதை யதார்த்தமான கதை என்று சொல்கிறோம்.இணையாதபோது அது யதார்த்தக்கதை இல்லை என்கிறோம். ஜி.நாகராஜனின் நாவல்கள் ஒருகாலகட்டத்தில் யதார்த்தமானவை அல்ல என்று சொல்லப்பட்டன. சிங்காரம் நாவல்கள் இன்றும் அப்படிச் சொல்லப்படுகின்றன.


நாமறிந்த அன்றாட யதார்த்தமே 'உண்மையான' யதார்த்தம் என்ற நம்பிக்கையில் இருந்து யதார்த்தம் X கற்பனை என்ற ஒரு பிரிவினை அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு அதிகம் வாசிக்காதவர்களிடையே இன்றும் நீடிக்கிறது. இலக்கியத்தில் எல்லாமே கற்பனைதான். மிகமிக 'நம்பகமான' யதார்த்தமும் கற்பனையே. 'உள்ளது உள்ளபடி' சொல்வதற்கு இலக்கியத்தில் இடமே இல்லை. எந்தச் சித்தரிப்பிலும் இலக்கியவாதிக்குரிய தேர்வு என்று ஒன்று இருக்கும்.  நிகழ்ச்சிகளில், படிமங்களில், சொற்களில்.


அந்தத் தேர்வை ஏன் அவன் நிகழ்த்துகிறான், அதன் மூலம் அவன் என்ன விளைவை உருவாக்குகிறான் என்பதே அந்த யதார்த்தச் சித்தரிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது. அதன்மூலம் அவன் முன்வைக்கும் வாழ்க்கைத் தரிசனம் என்ன, வாசகனை அவன் எங்கே கொண்டு செல்கிறான் என்பதுதான் இலக்கியத்திடம் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி.


நல்ல படைப்பு முதலில் ஒரு மெய்நிகர் வாழ்க்கையனுபவத்தை வாசகனுக்கு அளிக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் புற யதார்த்தத்தைக் கற்பனையால் மீறி இன்னும் பல யதார்த்தங்களில் அவன் வாழச் செய்கிறது. அதன் வழியாக அவனை அது ஒரு சுயதரிசனத்துக்கு, வாழ்க்கைத் தரிசனத்துக்கு, பிரபஞ்ச தரிசனத்துக்குக் கொண்டு செல்கிறது. இலக்கியம் மூலம் அப்படிச் செல்லத் தெரிந்தவனே வாசகன்.


ஐம்பது அறுபதுகளைச்சேர்ந்த இலக்கியவாதிகளுக்கு இந்த யதார்த்தம் சார்ந்த பிரமைகள் இல்லை. மிகமிக அன்றாட யதார்த்தம் சார்ந்தவர் என்று சொல்லப்படும் அசோகமித்திரனின் படைப்புலகில் பலவகையான மாயயதார்த்தங்களை, கொந்தளிப்பான அக யதார்த்தங்களை வாசகன் காணமுடியும். ஆனால் எழுபது எண்பதுகளில் வந்த எழுத்தாளர்களுக்கு இது பெரும் சுமையாக ஆகி அவர்களின் படைப்பியக்கத்தையே சோர்ந்து போகச் செய்தது.


நான் எழுதவந்தகாலம் முதலே இந்த தரிசனம் என்ற மையத்தை மிக முன்வைத்து வாதாடியிருக்கிறேன். என் காலகட்டத்தில் பேசப்பட்ட நெல்லை எழுத்தாளர்களின் கதைகள் அளித்த பெரும் சலிப்பே முக்கியமான காரணம். ஒரே முடுக்கு, ஒரே ஸ்டோர்வீடு, ஒரே போன்ற மக்கள், ஒரேபோன்ற செயற்கை நெகிழ்ச்சி கொண்ட மொழி. உள்ளீடாக எப்போதுமே அடக்கப்பட்ட காமம். காமம் பற்றி எல்லாருக்கும் தெரிந்ததைப் பூடகமாக்கினால் நுட்பமான கலை என்ற நம்பிக்கை மேலோங்கியிருந்தது.


'ஆம், மனிதமனம் காமக் குரோத மோகங்களால் ஆனதே. மேலே சொல்லு' என்று இவர்களிடம் கேட்டால் மொத்தப் படைப்புலகமே திகைத்து நின்றுவிடும். இன்று இவர்களின் கதைகள் பெரும்பாலும் ஈசல்போல இறகுதிர்ந்து கிடக்கின்றன.


யதார்த்தத்தை ஆசிரியன் சித்தரிப்பது வாசகனின் ஆழ்மனத்தை இது மெய் என நம்ப வைப்பதற்காகவே. அப்படிப் புனைவின் தளத்தில் நம்ப வைக்கப்பட்ட எதுவும் யதார்த்தமே. மாய யதார்த்தமும் மிகை புனைவும் எல்லாம் புனைவு முறைகளே.யதார்த்தவாதமும் அப்படி ஒரு புனைவுமுறை மட்டுமே. அவற்றினூடாக ஆசிரியனும் வாசகனும் சேர்ந்து சென்றடையும் ஆழங்கள் உச்சங்களே புனைவை அர்த்தமுள்ளதாக்குகின்றன. அவ்வகையில் எல்லாவகையான புனைவுக்கும் இலக்கியத்தில் சம மதிப்புத்தான்.


'அன்றாட யதார்த்தத்தைச் சொல்கிறது என ஒருபடைப்பை மதிப்பிடுவது அதை அவமதிப்பது மட்டுமே' என நான்1992ல் எழுதிய வரியை மீண்டும் நினைவுகூர்கிறேன்.


ஜெ








கிருத்திகா அஞ்சலி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.