‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30

[ 3 ]


பிருஹதாரண்யகத்தை நோக்கிச் சென்ற பாதை மரப்பட்டைகளும் கற்பாளங்களும் பதிக்கப்பட்ட வண்டித்தடமாக இருந்தது. “ஒரு வேதக்காட்டுக்கு வண்டித்தடம் இருப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்று தருமன் சொன்னார். “ஆம், இக்காடு மட்டுமே அவ்வாறு அரசர்களால் முற்றிலும் பேணப்படுகிறது” என்றான் அவர்களை அழைத்துச்சென்ற வைரோசனன் என்னும் மாணவன்.


அவர்கள் அவனை அப்பாதையில் அமைந்த முதல் அன்னச்சாவடியில் கண்டனர். தாழ்ந்த மரக்கூரை கொண்ட மையக்குடிலைச்சுற்றி வழிப்போக்கர் ஓய்வெடுப்பதற்கான கொட்டகையும் கொண்ட அச்சாவடியை கீர்த்திமான் என்ற அந்தணனும் துணைவியும் நடத்திக்கொண்டிருந்தனர். அதற்கு மிதிலையின் அரசர் ஜனகர் முன்பு எப்போதோ அளித்த அறக்கொடைச் சிற்றூர்களிலிருந்து தேவையான பொருட்கள் ஏழுநாட்களுக்கு ஒருமுறை வந்துகொண்டிருந்தன. கீர்த்திமானின் குடும்பம் தலைமுறைகளாக அந்தச் சாவடியை நடத்திக்கொண்டிருந்தது.


இளஞ்சாரல் மழையில் நனைந்தபடி பாண்டவர்கள் அங்கே வந்தபோது முன்னரே ஏழு ஒற்றைக்காளை வண்டிகள் அவிழ்க்கப்பட்டு நுகம் தாழ்த்தி நின்றிருந்தன. காளைகளும் பொதிசுமக்கும் பன்னிரு அத்திரிகளும் அருகே கொட்டகைக்குள் புல் மென்றுகொண்டு நின்றன. அவற்றை பூச்சிகள் கடிக்காமலிருக்க வேப்பிலைச் சருகிட்ட புகை எழும் கலங்கள் அங்கிருந்தன. கூரைமேல் வெண்புகை படர்ந்திருந்தது. அவற்றின் கழுத்துமணி ஓசையைத்தான் தருமன் தொலைவிலேயே கேட்டார். அவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒற்றைக்காளை வண்டி அங்கே சென்று நின்றது. அதை ஓட்டிவந்தவன் காளையின் கழுத்துக்கயிற்றைப்பிடித்து நிறுத்தி சகடங்களுக்குக் கீழே கட்டையை வைத்தான். அதன் தேன்மெழுகு பூசப்பட்ட பாய்க்கூரை வளைவின்மேல் ஈரம் பளபளத்தது.


பீமன் சாவடியின் முற்றத்தை அடைந்ததும் “விருந்தினர் நாங்கள். உணவும் நீரும் விழைகிறோம்!” என்று உரக்கக் கூவினான். உள்ளிருந்து சிரித்தபடி இறங்கி வந்த இளைஞன் “வருக வருக!” என்று அவர்களை கொட்டகைக்குள் அழைத்துச்சென்றான். “நீராடி உணவுண்ணும் அளவுக்கு சிறிய பசி அல்ல என பேருருவரின் முகம் சொல்கிறது. இன்னும் சற்றுநேரத்தில் உணவுண்ணலாம்” என்றான். “நான் இங்குள்ள உணவால் நிறைபவன் அல்ல” என்றான் பீமன். “இளைய பாண்டவரின் உணவு குறித்து அறியாதோர் எவர்?” என்றான் இளைஞன். அவர்கள் கூர்ந்து நோக்க “ஐவரும் சென்றால் யாரென அறியாத எவரும் பாரதவர்ஷத்தில் இருக்கமுடியாது…” என சிரித்தான்.


“என் பெயர் வைரோசனன். நான் பிருஹதாரண்யகம் செல்லும் மாணவன். நீங்களும் அங்குதான் என நினைக்கிறேன்” என்றான். பீமன் “ஆம்” என்றான். “அங்கே பல்லாயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள். அக்காடு முழுக்க கல்விநிலைகள்தான். அவர்களுக்குரிய உணவும் பிறவும் நாளும் சென்றுகொண்டிருக்கின்றன. அங்குள்ள எதையும் உண்ணமுடியாதென்று அறிந்திருப்பீர்கள்” என்றான். “ஆம், அது கந்தகக்காடு என்றனர்” என்றான் பீமன். “அங்கு நீங்கள் உண்ண பெரிய விலங்குகள் ஏதுமில்லை” என்றான் வைரோசனன். “நன்று, சிறிய விலங்குகள் பல சேர்ந்தால் பெரிய விலங்களவே ஆகும்” என்றான் பீமன்.


வைரோசனன் பேசிக்கொண்டே இருந்தான். அவர்கள் உணவுண்டபின் கொட்டகைக்கு ஓய்வெடுக்க வந்தனர். திரௌபதி கீர்த்திமானின் துணைவியும் மகளும் தங்கியிருந்த உள்ளறைக்கு சென்றுவிட்டாள். வைரோசனன் சொன்னான் “இன்று இங்குமட்டுமே வேதங்களை முழுமையாக கற்றறியமுடியும் என்கிறார்கள். பிற வேதநிலைகள் எதிலும் கற்பிக்கப்படாத வேதப்பாடல்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. ஆகவே பிருஹதாரண்யகத்தில் சிறிதுநாள் கற்றால்மட்டுமே வேதப்பேரவைகளில் மதிப்பு என்றாகிவிட்டிருக்கிறது.”


யாக்ஞவல்கியரை முதலாசிரியராகக் கொண்ட கந்தகக்காடு நோக்கி மாணவர்கள் செல்லத்தொடங்கி பலநூறாண்டுகள் ஆகின்றன என்றான் வைரோசனன். பதின்மூன்றாவது யாக்ஞவல்கியர் அங்கே ஆசிரியராக இன்று அமர்ந்திருக்கிறார். வேதம் வளர்ந்த காடுகளில் அதுவே பெரியது என்பதனால் அது பிருஹதாரண்யகம் என அழைக்கப்பட்டது. வேதம் ஓம்பும் அரசர்களின் கொடைச்செல்வத்தை ஏந்திய அத்திரிகள் நாளும் நடந்து காட்டுக்குள் உருவான அழியாத்தடம் போன்றதே அக்கல்விநிலையின் மாணவர் நாவிலும் வேதச்சொல் பதிந்திருப்பது என்றனர் சூதர்.


அதை ஒரு காடென்று சொல்வதே பிழை என்று தருமன் எண்ணினார். செல்லும் வழியெங்கும் மாணவர்களுக்கு மலைப்பொருட்களையும் பிறவற்றையும் விற்கும் சிறுவணிகர் வந்து குடிலமைத்திருந்தனர். காட்டுக்குள் ஏவலர்களின் குடில்கள் நிரைவகுத்து தெருக்களைப்போன்றே அமைந்திருந்தன. அங்கிருந்து ஓயாத பேச்சொலியும் விலங்குகளின் ஒலியும் எழுந்துகொண்டிருந்தன. அச்சாலையில் நடக்கையில் எதிரே வந்த மாணவர்கள் அனைவரும் மரவுரியின் நிறத்திலேயே அமைந்த பருத்தியாடைகளை அணிந்திருப்பதை தருமன் கண்டார்.


அதை நோக்கிய வைரோசனன் “இங்கு ஆசிரியர்கள் பட்டும் அணிவதுண்டு. இன்னுணவு உண்பதும் சிறந்த குடில்களில் வாழ்வதும் மாணவர்களின் வழக்கம்” என்றான். “இது துறவியரின் அமைப்பு அல்ல, அரசே. இவ்வுலகில் இனியதனைத்தையும் எய்துவதே வேதத்தின் பயன்களில் முதலாவது என்று கற்பிப்பவை இவர்களின் நூல்கள்.” பீமன் “இக்குருநிலை இத்தனை புகழ்மிக்கதாக இருப்பது இதனால்தான்போலும்” என்றான்.


புன்னகையுடன் அவனை நோக்கியபின் வைரோசனன் “முதற்குரு யாக்ஞவல்கியர் இளங்கன்றின் இறைச்சியை விரும்பி உண்பவர் என்கின்றன பிராமணங்கள். நெய்யுடன் சேர்த்து அவித்த ஊன்சோறு அவருக்கு உகந்த உணவாக இருந்தது என்கிறார்கள். சதபதத்தில் நடந்த சொல்சூழ்கை ஒன்றில் பசுவையும் காளையையும் உண்ணலாகாது என்று சொல்லப்பட்டபோது அவர் எழுந்து அவை இளமையானவை என்றால் நாவுக்கு மென்மையானவை, ஆகவே நான் உண்பேன் என்று சொன்னதாக பிராமணம் கூறுகிறது” என்றான்.


“அவரை நான் மிகவிரும்புவேன் என நினைக்கிறேன்” என்றான் பீமன். வைரோசனன் உரக்க நகைத்து “இக்குருநிலைக்குரிய ஆநிரைகள் அங்கே கோபதத்தில் உள்ளன. இப்போது ஒன்றரை லட்சம் பசுக்களும் காளைகளும் உள்ளன என்கிறார்கள். முதல் யாக்ஞவல்கியர் கன்றுபெருக்குவதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரிடம் பத்தாயிரம் பசுக்கள் இருந்தன என்கின்றன பிராமணங்கள்” என்றான். “மாணவர்கள் எளிதில் வேதத்தை அறிய கன்றுபெருக்குதலே வழி என்றுதான் சிலநாட்கள் முன்பு மூத்தவர் சொன்னார்” என்றான் பீமன். “அக்கன்றை உண்ணும்போது அதே மெய்மைகூடுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.”


சினத்துடன் திரும்பிநோக்கியபின் தருமன் தன்னை அடக்கிக் கொண்டார். மூங்கில்கூட்டங்களை நட்டு உருவாக்கிய பெரிய கோட்டைபோன்ற வேலிக்கு நடுவே அமைந்த வாயிலை அவர்கள் சென்றடைந்தனர். அங்கிருந்த காவல் மாணவர்களிடம் வைரோசனன் வந்திருப்பவர் அஸ்தினபுரியின் அரசகுலத்தவரான தருமன் என்றதும் அவர்கள் இணைந்து மேடைவிட்டு கீழிறங்கி வந்து வணங்கினர். “தங்கள் வருகையால் பிருஹதாரண்யகம் நலம் பெறட்டும், அரசே” என்றான் மூத்தமாணவன். “நான் நலம்பெறவே வந்தேன்” என்றார் தருமன்.


அவர்களை ஓர் இளமாணவன் வழிகாட்டி விருந்தினர் குடில்களுக்கு அழைத்துச்சென்றான். அவனுடன் செல்கையில் பீமன் மெல்லிய குரலில் வைரோசனனிடம் “நீர் அவர்களிடம் எங்களுடன் வந்தவராக அறிமுகம் செய்துகொண்டீர் அல்லவா?” என்றான். “இல்லை, நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அவ்வண்ணம் எண்ணிக்கொண்டால் அதைக் குலைத்து அவர்களை குழம்பவைப்பது கடுமையானது என உணர்ந்து அமைதி காத்தேன்.” பீமன் நகைத்து “இக்காட்டில் நான் உம்மிடம் நெருக்கமாக ஆவேன் என எண்ணுகிறேன்” என்றான்.


“இங்கு இப்போது கன்றிறைச்சி உண்ணுகிறார்களா?” என்று அவன் காதில் கேட்டான் பீமன். வைரோசனன் “ஆம், முறைப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில வகை வேள்விகளில் கன்றுகள் பலியிடப்படுகின்றன. அன்றுமட்டும் கன்றுகளை உண்கிறார்கள்” என்றான். பீமன் “ஆம், இத்தனை பசுக்களை வளர்த்துவிட்டு அவற்றை உண்ணவில்லை என்றால் எப்படி காட்டை காக்கமுடியும்?” என்றான். “ஏன், சிங்கங்களை வளர்க்கலாமே?” என்றான் வைரோசனன். பீமன் அவன் தோளில் ஓங்கி அறைந்து பெருங்குரலில் நகைத்தான்.


அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடில்கள் அரண்மனைகளுக்கு நிகராக இருந்தன. பிரம்புகளைப் பின்னி செய்யப்பட்ட மஞ்சமும், பீடங்களும் இருந்தன. மேலே காற்றசைக்கும் தட்டிவிசிறிகள் தொங்கின. தரையில் செந்நிறமான மரவுரி விரிக்கப்பட்டிருந்தது. “இவை இப்படி பேணப்படுகின்றன என்றால் ஏவலர் பலர் இங்கு இருக்கவேண்டும்” என்றார் தருமன். “ஆம், இங்கு ஏழாயிரம் ஏவலர்கள் பணியாற்றுகிறார்கள்” என்றான் அவரை வழிகாட்டி அழைத்துவந்த மாணவன்.


அன்றுமாலை குடில்களுக்கு நடுவே ஒன்றன்மேல் ஒன்றென ஏழு அடுக்குகளாக ஏறிக் கவிழ்ந்த மரப்பட்டைக் கூரையிட்ட வட்டவடிவமான பெரும்வேள்விச்சாலையில் நிகழ்ந்த அந்திக்கொடையில் முதன்மை விருந்தினராக அவர்கள் சென்றமர்ந்தனர். ஆயிரம் வைதிகர் கூடி அமர்ந்து நூறு வேள்விக்குளங்களில் அனலோம்பி அவியளித்து வேதம் முழங்கினர். அவர்களைச் சூழ்ந்து ஐந்தாயிரம் வேதமாணவர்கள் கூடிநின்று அவ்வேதப்பேரிசையில் இணைந்துகொண்டனர். அவர்களில் நானூறு பெண்களும் இருந்தனர்.


தருமன் திரும்பி நோக்க வைரோசனன் “இங்கே மாணவிகளாகவும் ஆசிரியைகளாகவும் ஆயிரத்துக்குமேல் பெண்கள் இருக்கிறார்கள் என அறிந்துள்ளேன், அரசே” என்றான். அத்தனை முகங்களும் இளமையும் ஒளியும் கொண்டிருந்தன. பயின்று கூர்தீட்டப்பட்ட குரல்கள் ஒன்றென இணைந்து ஒலித்தபோது வேதச்சொற்கள் ஒவ்வொன்றும் ஒலிதிரண்டன. ஆண்குரல்களின் அனைத்து இடைவெளிகளையும் பெண்குரல்கள் நிறைக்க பிற எங்கும் கேட்டிருக்காத முழுமையை அடைந்தது. அது மானுடக்குரலெனத் தோன்றவில்லை, ஐம்பருக்களும் இணைந்து எழுப்பிய ஒலி அது என உளமயக்கு கொண்டார் தருமன்.


வேள்வி அனைத்து வகையிலும் முழுமைகொண்டிருந்தது. அவியென நெய்யும் சோமமும் சுராவும் அன்னமும் நெருப்பளிக்கப்பட்டன. மலரும் விறகும் எரிய அங்கிருந்த காற்றே நறுமணமென ஆகியது. நறுமணம் அவ்வேதச்சொற்கள் மேல் படர்ந்தது. அக்காட்சி மண்ணுலகில் அல்ல விண்ணிலெங்கோ நிகழ்கிறதென்ற கனவை உருவாக்கியது. வேள்விநிறைவுக்குப்பின் அவிமிச்சம் பங்கிட்டு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. அதன்பின் வேள்விமுற்றத்திற்கு வந்த மாணவர்கள் சாமவேதப்பாடல்களை வெவ்வேறு இசைமுறைமைகளில் இசைத்தனர். குழல்களும் யாழ்களும் முழவுகளும் மணிகளும் உடன்சேர்ந்துகொண்டன.


இறுகிய உடல்கொண்ட இளைஞர்கள் வந்து உடற்கலைகளை காட்டினர். சிறுத்தை எனப் பாய்ந்து காற்றில் சுழன்றனர். குரங்குகள் போல தாவித்தொற்றினர். உடல்கள் அம்புகள் போல காற்றில் பாய்ந்தன. ஒருவர் மேல் ஒருவரென ஏறி ஒரு மரம் என ஆயினர். கலைந்து யானை வடிவுகொண்டனர். பரவி முதலை என ஆயினர். நடனமும் போரும் ஒன்றேயான அக்கலை தருமனை விழிவியந்து அமரச் செய்தது. அருகிருந்த அர்ஜுனனிடம் “போர்க்கலை பயிற்றுவிக்கும் இடங்களில்கூட இத்தகைய தேர்ச்சியை கண்டதில்லை” என்றார். அர்ஜுனன் “போரெனப் பயின்றால் இத்திறன் அமையாது, மூத்தவரே” என்றான். தருமன் திரும்பி நோக்க “பெரிதொன்றுக்கான கருவியாகும்போதே கலை முழுமைகொள்கிறது” என்றான்.


அதன்பின் மகளிர் கைகளில் மலர்களுடன் நிரையமைந்து துணைவேதப் பாடல்களை இன்குரலில் பாடினர். பாடலுக்கேற்ப மலர்களைச் சுழற்றியும் அசைத்தும் குலைத்தும் அப்பாடலை வண்ணங்களாக விழியறிவதுபோல எண்ணச்செய்தனர். நீரே மழையாக, பனியாக, துளியாக, நதியாக, சுனையாக, கிணறாக, அருவியாக, அலைகடலாகத் தெரிவதுபோல வேதம் முடிவிலா வடிவம் கொண்டது. சித்தம் அழிய விழிகளுக்குள் ஆத்மன் முழுமையாக குடியேறியிருந்த தருணம்.


சங்கு முழங்க அவை முடிந்ததும் முதலாசிரியரும் யாக்ஞவல்கியருமான பிரபாகரர் எழுந்து அவையை வணங்கி தன் மாணவர்களுடன் விடைபெற்றுச் சென்றார். ஒவ்வொருவராக அகன்றனர். மலர்ந்த முகத்துடன் வெளிவந்த தருமன் “இளையோனே, இதுகாறும் நாம் பார்த்தவை அல்ல, இதுவே மெய்வேதத்தின் இடம். மானுடம் இங்கு சுவையாக, உணர்வுகளாக, அறிதல்களாக பெருகிக்கொண்டே செல்கிறது. அனைத்துமாகி நின்றிருக்கும் வேதமே மானுடருக்குரியது. அதை உணர்ந்தமையால்தான் வேதவியாசர் கிருஷ்ணசாகைகளும் வேதமே என வகுத்தார்” என்றார்.


வைரோசனன் “இக்குருநிலையின் கொள்கை அதுவே” என்றான். “பிரம்மம் ஒன்றே. ஆனால் இவை அனைத்துமாக ஆகி நிறையவேண்டுமென அது எண்ணியிருக்கிறது. ஆகவேதான் வேதமும் ஓதும் நாவும் கேட்கும் காதும் உணரும் சித்தமுமாக அதுவே இங்கு விரவியிருக்கிறது. வேதம் பிரம்ம வடிவம். மானுடன் அறியும் அனைத்துமாக அதுவே ஆகவேண்டும். அனைத்துக் கலைகளும் வேதமே, அனைத்து அறிதல்களும் வேதப்பகுதிகளே என யாக்ஞவல்கியர் சொன்னார். அரசே, வேதம் வேதாங்கங்களுடனும் உபவேதங்களுடனும் இணைந்தே கற்கப்படவேண்டும் என பிருஹதாரண்யக மரபு வகுக்கிறது” என்றான்.


“நீர் இருந்த குருநிலையைவிட பிருஹதாரண்யகத்தை நன்கறிந்திருக்கிறீர்” என்றான் பீமன். “ஆம், சென்ற மூன்றாண்டுகளாக இக்குருநிலையைக் குறித்தே எண்ணிக்கொண்டிருக்கிறேன். இங்கு நுழைவது கடினம் என்றார்கள். சௌனகம், கௌஷீதகம் முதலிய குருநிலைகளில் பயின்றவர்களை கடுமையான மாற்றுப்பயிற்சிகளுக்குப் பின்னரே இங்கு ஏற்கிறார்கள். துவைதவனத்தில் இருந்து எவரும் இங்கு வரவே முடியாது” என்றான் வைரோசனன் “நல்லூழாக நான் உங்களுடன் வந்தேன்.”


பீமன் “இங்கிருந்து செல்வதும் கடினம் என எண்ணுகிறேன். இங்குள்ள மடைப்பள்ளி நாகரன் என்னும் சூதரால் நடத்தப்படுகிறது. உணவை பிரம்மமென அறிந்த படிவர் என்றே அவரை சொல்லத் துணிவேன். இப்போது மடைப்பள்ளிக்குத்தான் செல்லப்போகிறேன்” என்றான். வைரோசனன் “இங்கு இலக்கணம், காவியம், வானியல், மருத்துவம், வில்லியல், இசையியல், பொருளியல் என அனைத்துமே வேதங்களுடன் இணைத்துக் கற்கப்படுகின்றன. காமநூலும் அடுமனையறிவும்கூட உபவேதங்கள் என்றே கொள்ளப்படுகின்றன” என்றான்.  பீமன் “நன்று, அன்னமே பிரம்மம் என்று உணர்ந்தவன் பிற அனைத்தையும் பிரம்மம் என்றுணர்வதன் முதற்படியில் இருக்கிறான்” என்றபின் விலகிச்சென்றான்.


“ஆம், இதுவே முறையான வேதக்கல்வி என்று நான் எண்ணுகிறேன். நாம் இதுவரை சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் தங்களுக்கான வேதக்கல்வியை உருவாக்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் பாரதவர்ஷத்திற்குரிய வேதக்கல்வியை படைக்கின்றனர். இங்கிருந்து வேதம் எழுந்து பாரதத்தை தழுவிப்பரந்து வளரும்” என்றார் தருமன். “அர்த்தவேதம், தனுர்வேதம், கந்தர்வவேதம், ஆயுர்வேதம் ஆகியவை உபவேதங்கள். வியாகரணம், ஜோதிஷம், நிருக்தம், சந்தஸ், சிக்‌ஷா, கல்பம், சூத்திரம் ஆகியவை வேதாங்கங்கள். அவையின்றி வேதம் நிறைவுகொள்வதில்லை என்று வைசம்பாயன மரபு வகுத்தது.”


“அதை ஏற்பவர்கள்கூட அவ்வாறு வேதங்களை கற்கத் துணிவதில்லை. அவர்களின் உள்ளத்தில் வேதச்சொல்லுக்கு நோயாளியின் சீழ்குறித்துப் பேசும் ஆயுர்வேதச்சொல் எப்படி நிகராகும் என்னும் ஐயமே ஆட்டுவிக்கிறது. அந்த உளத்திரிபைக் கடக்க வேதத்தை பொருளறிந்து கற்பதும் வேதத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளச் செல்வதுமே ஒரே வழி. காடுகளில் உறைபவர்கள் வேதங்களை வெளியே மூன்றியல்புடன் கொந்தளிக்கும் வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்துகிறார்கள். இங்கு நம் முன்னோர் வாழத் துடித்தனர், வாழ்ந்து கடந்தனர். அவர்களின் விழைவும் கண்டடைதலுமே வேதம். வாழ்வில்லாத வேதம் வெற்றுச் சொல்லாய்வாகவே எஞ்சும்” என்றார் தருமன்.


திரௌபதி மெல்லிய குரலில் “இங்கு பெண்களுக்கு வேதக்கல்வி எப்போதிலிருந்து இருக்கிறது?” என்றாள். அவள் குரலைக் கேட்டே நெடுநாட்களாகின்றன என்று அப்போதுதான் தருமன் உணர்ந்தார். அவளை நோக்கி திரும்பாமலிருக்க விழிகளை கட்டுப்படுத்திக்கொண்டார். “பெண்கள் வேதமோதி வேள்வி நிகழ்த்தியது தொல்வேதகாலத்தின் இயல்பான வழக்கமாக இருந்தது, அரசி. அன்று வேதங்கள் குடிகளில் அன்றாடம் புழங்கின. வேள்விகள் இல்லமுற்றங்களில் நிகழ்த்தப்பட்டன. மூத்தோருடன் பெண்டிரும் மைந்தரும் அமர்ந்து வேதம் ஓதி அவியளித்தனர்” என்றான் வைரோசனன்.


“முனிவர்கூடிய வேதநிலைகளில் நால்வேதம் பகுக்கப்பட்டது என அறிந்திருப்பீர்கள். அவை முறையாக கற்பிக்கப்படும்பொருட்டு கல்விச்சாலைகள் அமைந்தன. அங்கே இளமைந்தர் காமவிலக்கு நோன்புகொண்டாலொழிய கல்வி அமைவதில்லை என்பதனாலும் காடுகளில் பெண்கள் வாழ்வது கடினம் என்பதனாலும் பெண்கள் விலக்கப்பட்டனர். வேதநிலைகளில் நெறிப்படி வேதம் பயின்றவரே வேள்வி இயற்றும் தகுதிகொண்டவர் என்றானபோது பெண்கள் வேள்வியிலமர்வதும் இல்லாமலாயிற்று.”


“ஆயினும் நால்வருணங்களும் தங்களுக்குரிய வேதத்தை இல்லங்களில் மகளிருக்கு கற்பித்துக்கொண்டுதான் இருந்தனர். அரசியர் வேதம் கற்பதும் வேதச்சொல்லாய்வு மன்றுகளில் அமர்வதும் இயல்பாகவே இருந்தது. பின்னர் அவர்கள் கிருஹ்ய சூத்திரத்தை மட்டும் கற்றால் போதுமென ஆயிற்று” என்றான் வைரோசனன். “கதைகளின் படி முதலாசிரியர் யாக்ஞவல்கியரே தன் இரு துணைவியருக்கும் வேதம் கற்பித்து வேள்விச்சாலையில் உடனமர்த்தினார் என்கிறார்கள். அவ்வழக்கம் இன்றும் இங்கு தொடர்கிறது.”


திரௌபதி தலையசைத்துவிட்டு நடந்தாள். அவள் ஏன் அவ்வினாவை கேட்டாள் என்று தருமன் எண்ணிக்கொண்டார். அவளை திரும்பி நோக்கவேண்டும் என்று எழுந்த உளவிசையை மீண்டும் வென்றார். அவர்கள் குடில்கள் அமைந்த வளாகத்தை அடைந்ததும் ஒவ்வொருவராக சொல்லின்றி விடைகொண்டு பிரிந்தனர். வழக்கம்போல அவர் நிற்பதையே அறியாதவளாக திரௌபதி சென்றாள். அவர் அவளை நோக்கவேண்டுமென இறுதிக்கணம் வரை எழுந்த துடிப்பை வென்று தன் குடிலைநோக்கி நடந்தார். குடில்முற்றத்தை அடைந்தபோது எடைசுமந்தவர் போல கால்கள் தளர்ந்திருந்தன.



[ 4 ]


மிதிலையின் அருகே சாலவனம் என்னும் காட்டில் காத்யாயன முனிவர் குடிலமைத்து தங்கியிருந்தார். அவர் மகள் காத்யாயினிக்கு இளமையிலேயே வேதச்சொல்லிலும் மெய்யிலும் ஈடுபாடு எழுந்ததைக் கண்ட தந்தை அவளை தன் மாணவியாக ஏற்று தானறிந்த அனைத்தையும் அவளுக்கு கற்றுக்கொடுத்தார். கற்றுத்தேர்ந்த காத்யாயினி கன்னியிளமைகொண்டபோது அவளுக்கு அவர் மணமகனை தேடத்தொடங்கினார்.


அங்கு வந்த முனிவர் ஒருவர் “நீர் செய்தது பெரும்பிழை. பெண்களுக்குரியது இல்லம். அவர்களுக்கு இல்லநெறி சொல்லும் கிருஹ்ய சூத்திரமே போதுமானது. வேதமறிந்த பெண் தன்னைவிட கற்றறிந்த ஒருவனிடம் மட்டுமே தன்னை உவந்தளிப்பாள். தன்னை ஆளாத ஆண்மகனை பெண் வெறுப்பாள். ஏனென்றால் அவள் அவனிடம் காண்பது தன் வயிற்றில் பிறக்கப்போகும் மைந்தனை. தன் மைந்தன் தன்னைவிட எளியவனாக இருக்க எந்த அன்னையும் ஒப்பமாட்டாள். காத்யாயனரே, பெண்ணின் உள்ளம் கருப்பையில் உள்ளது என்று சொல்கின்றன நூல்கள். இவளை வெல்பவனை எப்படி நீர் கண்டடைவீர்?” என்றார்.


“என்ன செய்வேன்?” என்று காத்யாயனர் திகைத்தார். அதற்கு ஒரு வழியை அவரே கண்டடைந்தார். மிதிலைக்குச் செல்லும் வேதமுனிவர்கள் அனைவரையும் தன் இல்லத்திற்கு உணவருந்த அழைத்தார். எவரேனும் ஒருவரை காத்யாயனியே சுட்டட்டும் என காத்திருந்தார். மிதிலையின் அரசர் ஜனகர் வேதமெய் காண்பதில் பெருவிழைவுள்ள அரசமுனிவர் என பெயர் பெற்றிருந்தமையால் மிதிலை நோக்கி அவ்வழியே நாளும் முனிவர்கள் செல்லும் வழக்கம் இருந்தது. வந்து அவள் கையால் உணவுண்டு சென்ற இளவைதிகர்கள், முனிமைந்தர்கள் எவரும் அவள் உள்ளம் கவரவில்லை.


ஒருநாள் அவர் இல்லத்திற்கு வந்த யாக்ஞவல்கியர் அவள் இட்ட மணையில் அமர்ந்து இலையில் காத்யாயினி பரிமாறிய அன்னத்தை கையில் எடுத்ததும் அவள் மெல்லிய குரலில் “முனிவரே, நீர் நீர்த்தூய்மை செய்துகொள்ளவில்லை” என்றாள். அவர் விழிதூக்கி நோக்கிவிட்டு உண்ணத்தொடங்கினார். அவள் பிறிதொன்றும் சொல்லாமல் உணவு பரிமாறினாள். யாக்ஞவல்கியர் மாமுனிவர் என்றும் அவரை காத்யாயினி விரும்பக்கூடும் என்றும் எதிர்பார்த்திருந்த காத்யாயனர் ஏமாற்றம் கொண்டு விழிதிருப்பிக்கொண்டார்.

ஆனால் மறுநாள் காத்யாயினி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.


“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயினி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.


யாக்ஞவல்கியரைச் சென்று கண்டு தன் மகளின் விழைவை உணர்த்தினார் காத்யாயனர். “தகுதியான பெண்ணின் விழைவை மறுக்கலாகாது. அவள் வயிற்றில் காத்திருப்பவர்களின் தீச்சொல்லுக்கு இடமாகும்” என்றார் யாக்ஞவல்கியர். அனற்சான்றாக்கி அவர் காத்யாயினியை மணந்தார். அவர்களுக்கு காத்யாயனர், சந்திரகாந்தர், மகாமேதர், விஜயர் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். பின்னாளில் வேதம் முற்றுணர்ந்த முனிவர்கள் என அவர்கள் புகழ்பெற்றனர்.


யாக்ஞவல்கியருடன் காத்யாயினி பிருஹதாரண்யகத்தின் குடிலில் வாழ்ந்தாள். நாள்தோறும் பெருகிக்கொண்டிருந்த குருநிலையின் செல்வமும் மாணவர்களும் அவளால் ஆளப்பட்டன. ஆசிரியர்துணைவியை இறைவடிவம் என மாணவர்கள் வணங்கினர். அவள் அவருக்கு மந்தணத்தில் காதலியாகவும் அவைகளில் அறத்துணைவியாகவும் இடர்களில் அமைச்சராகவும் நோயில் அன்னையாகவும் திகழ்ந்தாள். ஆடுகளத் தோழனாகவும் ஆளும் கணவனாகவும் மைந்தருக்குத் தந்தையாகவும் அவர் அவளுடன் இருந்தார்.


ஆனால் அவளிடம் அவர் ஒருநாளும் வேதமெய்மையை பேசவில்லை. வேள்வியவைகளுக்கு அவளை கைத்துணைக்கு எனக்கூட அழைத்துச்செல்லவில்லை. அது கண்மறைத்த காதலால் என முதலில் அவள் எண்ணினாள். பின்னர் அன்னையென்றே அவளைக் காட்டிய குழவியரால் என நம்பினாள். பின்னர் உணர்ந்தாள் அவருக்கு அவள் ஓர் ஆத்மா என தெரியவில்லை என. ஒருமுறைகூட அவள் தன் விழைவை அவரிடம் சொல்லவில்லை.


SOLVALAR_KAADU_EPI_30


மைந்தரும் வேதம் கற்கச் சென்றபோது அவள் தனிமைகொண்டாள். அவர்களும் தந்தையின் விழிகளையும் அசைவுகளையும் பெற்றபோது முற்றிலும் தனித்தாள். கொல்லையில் பசுக்களிடமும் வந்தமரும் பறவைகளிடமும் மட்டும் பேசலானாள். சொல்லெடுக்காதவர்களின் விழிகளில் தெரியும் ஒளி அவளிடமும் தோன்றியது. சொல் எரிந்த உடல் உருகி எலும்புரு ஆகியது. கன்னங்கள் குழிந்தன. தோல் சுருங்கி பூசணம்படிந்தது. அவள் தேம்பல்நோய் கொண்டிருக்கிறாள் என்றனர் மருத்துவர். எந்த மருந்தும் அவளை நலம்பெறச் செய்யவில்லை.


யாக்ஞவல்கியர் அவளிடம் அன்புடனிருந்தார். அவள் நோய்நீங்கும்பொருட்டு புதிய மருத்துவர்களை நாளும் கொணர்ந்தார். அவள் உணவுகளை தானே தெரிவுசெய்தார். அவளுடன் இருக்க எப்போதும் ஏவல்பெண்டுகளை அமர்த்தியிருந்தார். ஆனால் அவளை அவர் அணுகியறியவே இல்லை. கனியும்தோறும் அகல்வதும் உறவுகளில் நிகழ்வதுண்டு. அது கனிபவர் அவ்வாறு தன்னை உணர்கையில் நிகழ்வது.



தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2016 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.