மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’

masti-venkatesh-iyengar-folk-factory.img

மாஸ்தி


 


 


வரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர்.


ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா? ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா? வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும்.


வரலாறு என்று இன்று நாம் கூறும்போது பொதுவானதும் தகவல்சார்ந்ததுமான கடந்தகாலச் சித்திரத்தையே குறிப்பிடுகிறோம். அது வெறும் தகவல் தொகுப்பு மட்டுமே. இத்தகைய வரலாற்று சித்திரம் நம் மரபில் இல்லை. இறந்தகாலத்தை நாம் தகவல்களாக ஞாபகம் வைத்திருக்கவில்லை. அறமதிப்பீடுகள் சார்ந்து தான் இறந்தகாலத்தை வகுத்தும் தொகுத்தும் வைத்திருக்கிறோம். ஒரு விழுமியத்தை சாரமாக முன்வைக்காத நிகழ்ச்சி எத்வும் நம் நினைவின் வரலாற்றுத் தொகுப்பில் நிலைநிற்பதில்லை.


ஆகவேதான் நமது வரலாறு முழுக்க ஐதீகங்களாகவும் புராணங்களாகவும் உள்ளது. ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றுச்சித்திரம் நம்மிடம் இருக்கவில்லை. ராஜராஜன் குறித்த ஐதீகமே இருந்தது. ஐதீகம் என்பது அறநெறிகளை முதன்மைபடுத்தும் பொருட்டு மாற்றியமைக்கப்பட்டதும், செறிவூட்டப்பட்டதுமான வரலாறுதான். ஆகவே நம் மனதில் மரபு மூலம் வந்து சேர்ந்துள்ள ராஜராஜன் சிற்பிக்கு தாம்பூலம் சுருட்டித் தந்த சிவனருட் செல்வன். அவன் காலத்தில்தான் வலங்கை இலங்கை சாதியினரிடையே பெரும் பூசல்கள் தொடங்கின என்பது நம் மரபின் நினைவில் இல்லை.


மாறும் அறநெறிகளுக்கேற்ப ஐதீகங்களை ஒவ்வொரு சமூகமும் மாற்றியமைத்தபடியே உள்ளது. வாய்மொழி மூலமாகவே இந்த மாற்றம் நடைபெறும். சமூகத்தின் தேவைக்கும் மனநிலைக்கும் ஏற்ப ஐதீகத்தின் சில பகுதிகள் மேலும் அழுத்தம் பெறுகின்றன. சில பகுதிகள் கைவிடப்படுகின்றன. ராஜராஜ சோழனின் வரலாறு திராவிட இயக்கத்தால் மறுபுரிதலுக்கு உள்ளானபோது சிற்பவெற்றியான கலைக்கோயிலைப் படைத்தவன், கடாரம் கொண்டவன் என்ற சித்திரம் முதன்மைப்பட்டு சிவனருட்செல்வன் என்பது பின்னடைந்தது


இந்த மாற்றம் இயல்பாக நடப்பதில்லை. வரலாற்றாய்வு ஒரு பக்கம் இதை நிகழ்த்துகிறது. இலக்கிய படைப்புகள் அதை சமூகமனத்தில ஆழமாக நிறுவுகின்றன. ராஜராஜ சோழன் குறித்த நம் மனச்சித்திரம் கல்கியால், பொன்னியின் செல்வன் மூலம் உருவாக்கப்பட்டது. அரு ராமநாதனின் ராஜராஜ சோழன் நாடகம் மூலமும் ஏ.பி.நாகராஜன் -சிவாஜி கணேசன் கூட்டு உருவாக்கிய திரைப்படம் மூலமும் நிறுவப்பட்டது


அச்சு ஊடகம் வந்து, இலக்கியம் வெகுஜன மனநிலையுடன் நேரடியாக உரையாட ஆரம்பித்த பிறகு வணிக எழுத்து உருவாயிற்று. ஐதீகங்களை மறுபுனைவு செய்வது வெகுஜன எழுத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று ஆயிற்று. அதாவது மரபை நிகழ்காலத்திற்கு உவப்பாக, சமகாலத்துக் கருத்தியலுக்கு சார்பாக, மாற்றி புனைந்து கொள்வது. கல்கியும் சாண்டில்யனும் செய்தது இதையே. அவர்கள் எழுதியது வரலாற்றைப் பற்றி அல்ல; ஐதீகங்களைப் பற்றிதான். அவர்கள் படைப்புகளை வேண்டுமெனில் ‘ஐதீக நாவல்கள்’ எனலாம்.


அங்கும் பிரச்சனை எழுகிறது. அவை நாவல்கள் தாமா? வாழ்வை தொகுத்து பார்த்து தீவிரமான தேடலொன்றை நிகழ்த்துவதற்குரிய வடிவம் நாவல். மேற்குறிப்பிட்டப் படைப்புகளின் நோக்கம் கேளிக்கை. மரபை நமது பகற்கனவுக்கு ஏற்ப மாற்றி ரசிக்கும் உத்தியே அவற்றில் உள்ளது. எனவே மேற்கத்திய இலக்கிய வடிவ நிர்ணயப்படி அவற்றை உணர்ச்சிக் கதைகள் (Romances) என்று கூற முடியும்.


வரலாற்று நாவலின் முதல் இயல்பு அது தகவல்களிலான, புறவய வரலாற்றை தன் விளைநிலமாகக் கொண்டிருக்கும் என்பதே வரலாற்றுப் பார்வையில் உள்ள இடைவெளிகளை தன் புனைவு மூலம் நிரப்புவதே வரலாற்று நாவல் என்பது பொதுவான ஒரு வரையறை. ஏன் அவ்வாறு நிரப்ப வேண்டும் என்பது அடுத்த கேள்வி. அவ்வாறு வரலாற்றில் ‘தலையிடுவதனூடாக’ அது அவ்வரலாற்றுப் பார்வையை விமரிசிக்கவோ மாற்றியமைக்கவோ முயல்கிறது. ஆகவே வரலாற்றில் கற்பனை மூலம் ஊடுருவி வரலாற்றுக் கட்டுமானத்தின் அடிப்படைபார்வையை விமர்சித்து, மாற்றியெழுத முற்படுவதே வரலாற்று நாவலாகும்.


ஆகவே பொதுப்பார்வையின் இடைவெளிகளை நிரப்புவதே வரலாற்று நாவலின் பணியாகும். உதாரணமாக நமது அதிகாரப்பூர்வ சோழர் வரலாற்றில் ராஜராஜன் பெரியகோவிலைக் கட்டினான் என்று மட்டுமே உள்ளது. அதற்குரிய செல்வம் எப்படி சுரண்டி சேகரிக்கப்பட்டது, அக்கால சமூகச் சூழலில் அதன் விளைவுகள் என்ன, என்று ஒரு நாவலாசிரியன் கற்பனை செய்து எழுதலாம். மன்னனை மையம் கொண்ட ஒரு பார்வையை மக்களை மையம் கொண்டதாக அவன் மாற்றுகிறான். தமிழில் இவ்வாறு வரலாற்றை சமானியர்களை பெரிதும் முதன்மைப் படுத்தி எழுத முற்பட்ட நாவல்கள் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், என்ற நாவல் தொடர்கள்.


பிரபஞ்சன் பேட்டியன்றில் வரலாற்று நாவல் குறித்த பிரக்ஞையை தன்னிடம் உருவாக்கிய இரண்டு நாவல்கள் என்று கூறியிருக்கிறார், ஒன்று அலக்ஸி தல்ஸ்தோயின் ‘சக்கரவர்த்தி பீட்டர்’ சிக்க வீரராஜேந்திரன்.  எஸ்.ராமகிருஷ்ணன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. இன்னொன்று ‘சிக்கவீர ராஜேந்திரன்’. ஸ்ரீரங்கத்து தமிழரான மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய கன்னட நாவல்.


சார்பதிவாளராக கர்நாடகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தன் 96வது வயதில் மறைந்த மாஸ்தி கன்னடத்தில் எழுதியது அவரது அதிர்ஷ்டம். ஓர் இலக்கியவாதிக்கு இந்தியாவில் சாத்தியமான எல்லா கௌரவங்களையும் அவர் அங்கு அடைந்தார். `சிக்கவீர ராஜேந்திரனுக்கு 1985ல் `பாரதீய ஞானபீட விருது’ கிடைத்தது. அவரது புனைபெயர். `ஸ்ரீனிவாச’ .இறுதிகாலத்தில் அசல் பெயரில் எழுதினார். ‘சென்ன பசவ நாயக்கன்’ அவருடைய இன்னொரு வரலாற்று நாவல். அது தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை.


மாஸ்தியின் மொழி பெயர்ப்பாளரான ஹேமா ஆனந்த தீர்த்தன் கிளுகிளுப்பான பல கதைகளையும் மாத நாவல்களையும் எழுதிய தமிழ் எழுத்தாளர். தன் வாழ்நாளின் இறுதியில் இம் மொழிபெயர்ப்பே தன் வாழ்நாளின் சாதனை என்று அவர் கூறி இருக்கிறார்.


தன் 90வயதில் ஞானபீடப்பரிசு பெற்றபோது மாஸ்தி தன் ஏற்புரையில் தனக்கு மதத்தில் இருந்த நம்பிக்கை முற்றாக மறைந்துவிட்டது என்றார். மனித குலத்தின் மேலான முழுமையான வாழ்வு விஞ்ஞானம் மூலமே சாத்தியம் என்று இப்போது தோன்றுகிறது என்றார். விஞ்ஞானமென்றால் வாழ்க்கையைப்பற்றிய நிரூபணம் சார்ந்த தர்க்கபூர்வமான புறவயப் பார்வையே என்று விளக்கினார்.


மாஸ்தியின் படைப்புலகை அணுக திறந்த வாசல் இதுவே. அவரது எழுத்துகளில் எவ்விதமான யதார்த்த மீறல்களும் இல்லை. கனவுகளும் இலட்சியவாதிகளும் இல்லை. தீவிர மனஎழுச்சிகளோ நெகிழ்வுகளோ இல்லை. அனைத்து தளங்களிலும் சமன்படுத்தப்பட்ட, தர்க்கபூர்வமான, முற்றிலும் யதார்த்தமான நாவல்கள் அவருடையவை.


*


Portrait_of_Chikka_Veera_Rajah,_the_last_King_of_Coorg

சிக்க வீர ராஜேந்திர குழந்தையாக


 


 


கர்நாடக மாநிலத்துடன் இன்று இணைந்துள்ள குடகு (அல்லது கூர்க்) வரலாறு தொடங்கும்போதே தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. அதன் மீது மைசூர் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் அவ்வப்போது இருந்து வந்தது என்றபோதிலும் கூட குடகு மலைப் பகுதியின் நிலரீதியான தனித்தன்மையும், அங்குள்ள குடகர்களின் இனரீதியான சிறப்படையாளமும், தனிமொழியும் அவர்களை எந்த மையநில கலாச்சாரத்துடனும் இணையவிடவில்லை. ஒருபக்கம் மலையாளநாடு, ஒருபக்கம் மைசூர், ஒருபக்கம் மங்கலூர் நாயக்க அரசுகள் என எப்போதும் எதிரிகளினால் சூழப்பட்டிருந்தமையால் போர்சன்னத்ததுடனேயே குடகு இருந்துவந்தது.


குடகு மன்னன் உண்மையில் பற்பல குலத்தலைவர்களினாலும், அவர்களுடைய குல ஆச்சாரங்களினாலும் கட்டுப்படுத்தப்படுபவன். இந்த ‘ஜனநாயக’ அம்சம் குடகு மன்னனுக்கும் அவனது குடிச்சமூகத்திற்கும் இடையே நேரடியான உறவை உருவாக்கியது. ஆகவே பிற பகுதிகளைப் போல மன்னனை வென்று ஆட்சியைப் பிடிப்பது குடகில் சாத்தியமாகவில்லை. குடகின் மன்னன் உண்மையில் ஒரு சிறு பழங்குடித்தலைவன் மட்டுமே என்று கூறலாம். பெரிய தேசங்களிலும் பேரரசுகளும் உருவாகும்போது. மன்னன் படிப்படியாக தனிமைப்படுகிறான். வரம்பில்லா அதிகாரம் உடையவன் ஆகிறான். அது வேறுவகையான ஆட்சிமுறைகளுக்கு வழிவகுக்கிறது.


குடகின் வல்லமை மிக்க மன்னனாகிய தொட்ட வீர ராஜேந்திரனுக்கு தேவம்ம்மா என்று ஒரே ஒரு பெண் குழந்தைதான். தனக்குப்பின் தேவம்மா ஆட்சி செய்யவேண்டுமென்று தொட்ட வீர ராஜேந்திரன் விரும்பினான். தொட்ட வீர ராஜேந்திரனுக்குப்பின் தேவம்மா ஆட்சியமைத்தபோதிலும்கூட தொட்ட வீர ராஜேந்திரனின் தம்பி லிங்க ராஜன் குடகின் இனக்குழுத்தலைவர்களையும் அமைச்சர்களையும் கவர்ந்து அவளை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு அவனே அரசனானான். தன் மகன் சிக்க வீரராஜேந்திரனுக்கு தனக்குப்பின் பட்டம் கிடைக்கவேண்டுமென்று அவர்களிடம் உறுதியும் பெற்றுக் கொள்கிறான்.


சிக்கவீர ராஜேந்திரன் இயல்பிலேயே கோழை. மிகச்சிறு வயதிலேயே அவன் லிங்க ராஜனின் சதியாலோசனைகளைக் கண்டு அஞ்சியும் ,மன்னனாக முடியுமா என்னும் ஏக்கத்திலும் வளர்கிறான். அவனை எவருமே கவனித்து வளர்க்கவில்லை. ஆகவே அவன் குடிகாரனாக, பெண்பொறுக்கியாக ஆணவமும் அற்பத்தனமும் கொண்டு வளர்கிறான். அவன் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் குடகர்குலத்தைச் சேர்ந்தவளான கௌரம்மா அவனுக்கு மனைவியானதுதான். ஆனால் அதனால் பயனில்லாதபடி அவனுடைய குணம் ஏற்கனவே கெட்டுபோய்விட்டிருந்தது.


ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் தேசமாக அதற்குள் மாறிவிட்டிருந்தது. எனவே பாதுகாப்பு சம்பந்தமான சவால்கள் ஏதும் இருக்கவில்லை. குடகின் பொருளாதாரம் படிப்படியாக சரிந்து வந்தாலும் அது மேல்மட்டத்தில் உறைக்க ஆரம்பிக்கவில்லை. விளைவாக முழுமையான செயலின்மைக்கும் சோம்பலுக்கும் அரசன் ஆளாகிறான். அவனுடைய முரட்டுத்தனமும் பொறுப்பின்மையும் வளர்கின்றன. மிதமிஞ்சிய போகம் உடலையும் ஆன்மாவையும் சிதைக்கிறது. லிங்கராஜனுக்கு சோரபுத்திரனான நொண்டி பசவன் அனாதையாக சவரக்காரர் வீட்டில் வளார்கிறான். மிகுந்த மதிக்கூர்மையும் தந்திரமும் குரூரமும் கொண்டவனாகிய நொண்டி பசவன் சிறுவயதிலேயே சிக்க வீரராஜேந்திரனுக்கு தோழனாகி அவனை சகல இருட்பாதைகள் வழியாகவும் அழைத்துச் செல்கிறான்.


படிப்படியாக பிரச்சனைகள் பெருகி வருகின்றன. நாவல் தொடங்கும் கட்டத்தில் வீழ்ச்சியின் விரைவுக்கட்டத்தில் பிரச்சினைகளின் நடுவே நிற்கிறான் சிக்க வீரராஜேந்திரன். தங்கை தேவம்மாவின் கணவன் பசவராஜன் தன் இடத்தைப்பறிக்க கூடுமென உணர்ந்து அவளை சிறைவைத்திருக்கிறான். வலிமை மிக்க குடகுத்தலைவர்களின் பெண்கள் மீது ஆசைப்பட்டு அவர்களைப் பகைத்துக் கொள்கிறான். மிதமிஞ்சிய ஊழல்கள் மூலம் பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறான். வெள்ளையருடனான உறவுகளை சீரழித்துக் கொண்டிருக்கிறான். மந்திரிகளை அவமதித்து அவர்களின் வெறுப்பை குவித்து வைத்திருக்கிறான். இந்நிலையில் ஒருபோதும் செய்யக்கூடாதவற்றையே தன் ஆணவம் மற்றும் மூர்க்கத்தனம் காரணமாக செய்தபடியே செல்கிறான் சிக்க வீரராஜேந்திரன்.


ஏறத்தாழ பதினான்கு வருடகாலம் சிக்க வீரராஜேந்திரன் ஆட்சி செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனுடைய ஆட்சி தேவையில்லை என்று அவனது அமைச்சர்களும் குடகு சமூகமும் கருதும் நிலை ஏற்படுகிறது. இம்மாதிரியான தருணங்களைத் தவற விடாத ஆங்கிலேயர் உட்புகுந்து குடகின் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஏற்பவே அமைகின்றன. அல்லது சிக்க வீர ராஜேந்திரன் அமைத்துத் தருகிறான்


மன்னனின் தங்கை தேவம்மாவும் மைத்துனரும் ஆங்கிலேயரிடம் சரண் அடைகிறார்கள். அவர்களின் குழந்தைமட்டும் தவறிவிழுந்து சிக்கவீர ராஜேதிரன் கையில் சிக்கிவிடுகிறது.அவர்களை விட்டுத் தரும்படி மன்னன் கோருகிறான். ஆங்கிலேயர் அதற்கு ஒப்பவில்லை. ஏற்கனவே ஆங்கிலேய பகுதியில் சரண் அடைந்த சென்ன வீரனை விசாரணைக்கு என அழைத்துக்கொண்ட சிக்க வீரராஜேந்திரன் உடனே அவனை சுட்டு தள்ளினான். அவ்விசாரணை பற்றி ஆங்கிலேயர் கேட்ட எந்த கேல்விகளுக்கும் அவன் பதில் சொல்லவில்லை. ஆங்கிலேயர் பால் கோபம் கொண்ட சிக்க வீரராஜேந்திரன் அந்தக்குழந்தையைக் கொல்கிறான். ஆங்கிலேயரின் தூதரான கருணாகர மேனன் சிக்க வீரராஜேந்திரனால் கைதுசெய்யப்படுகிறான்


ஆங்கிலேயப்படைகள் கர்னல் ·ப்ரேசர் தலைமையில் குடகை சுற்றி வளைக்கின்றன. தன் முதலமைச்சர் போபண்ணாவே ஆங்கிலேயருடன் சேர்ந்துகொள்வதை சிக்க வீரராஜேந்திரன் காண்கிறான். குடகு வீழ்கிறது. நொண்டி பசவன் கொல்லப்படுகிறான். சிக்கவீர ராஜேந்திரன் கைதுசெய்யபட்டு நாடுகடத்தப்பட்டு லண்டனில் வீட்டுச்சிறையில் இருந்து மடிகிறான். அவன் மகள் மதம் மாறி ஆங்கிலேய காப்டன் காம்பெல் என்பவரை மணம் புரிந்துகொள்கிறாள். அக்குடும்பமே குடகு வரலாற்றில் இருந்து மறைந்து மறக்கப்பட்டு போகிறது. ‘சிக்கவீர ராஜேந்திரன்’ நாவலின் ‘கதை’ இதுதான்.


ஏறத்தாழ தொண்ணூறு சதம் அசல் சரித்திர சம்பவங்களை ஒட்டியே எழுதப்பட்ட நாவல் இது. தகவல்களை கருவாக தொகுத்து படைப்பை வடிவமைப்பதில் வரலாற்றாய்வாளரின் முறைமையையும் நேர்த்தியையும் மாஸ்தி கையாள்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியாலரின் கடிதங்கள்னப்படியே அளிக்கப்பட்டுள்ளன. ராஜதந்திர நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மிக நம்பகமாக விரிவாக நாவலில் அளிக்கப்படுகின்றன.


இந்நாவலின் வழியாக மாஸ்தி உண்மையான வரலாற்றில் ஆற்றும் ‘தலையீடு’ என்ன? வரலாற்றில் இயங்கு முறை குறித்த நேர்த்தியான சித்தரிப்பு ஒன்றை அவர் தருகிறார். ஒரு வரலாற்று நூலில் ‘சிக்கவீர ராஜேந்திரன் குடகின் கடைசி மன்னன். நிர்வாகச் சீர்கேடினால் பதவி இழந்து நாடுகடத்தப்பட்டான்’ என்ற ஒற்றை வரியை மட்டுமே காணமுடியும். ஆனால் புனைவு மூலம் இதை விரிவு படுத்துகையில் நாம் காண்பது ஒரு பெரிய மானுட நாடகம்.


மாஸ்தியின் நாவலில் சிக்கவீர ராஜேந்திரன் ஒரு மையப்புள்ளி. ஒரு பக்கம் பசவன்,. பகவதி முதலிய சீரழிவு சக்திகள் அவனை சரிவை நோக்கி இழுக்கின்றன. மறுபக்கம் அவன் மனைவி கவுரம்மாஜி, அமைச்சர் போபண்ணா, லட்சுமிநாராயணய்யா போன்ற நலம்நாடும் சக்திகள் அவனை மீட்க போராடுகின்றன. இருபக்கங்களிலுமாக அலை மோதி படிப்படியாக அவன் சரிந்து மறைகிறான். ஒரு வரலாற்று நிகழ்வு முழுமையடைகிறது. மலைமீதிருந்து ஒரு பாறை சரிகிறது, அது புவியின் ஈர்ப்பு விதி. ஆனால் அணுகும் பார்வையால்தான் அச்சரிவில் நசுங்கும் உயிர்களின் வலி தெரியவருகிறது.


குடகு ஆங்கிலேயர் கரங்களுக்கு போனது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு. அத்தனை தனியரசுகளும் அப்படி சரிந்தன. ஆகவே, எதற்கும் சிக்கவீர ராஜேந்திரனை குறை கூற முடியாது. வரலாறு எனும் பகடையில் ஒரு காய்தான் அவன். ஆனால் அவன் பலவீனங்களும் பலங்களும் உடைய மனிதன். அவனது ஒவ்வொரு சரிவிலும் அவனுடைய பங்கும் உள்ளது. வரலாறு சிக்கவீர ராஜேந்திரன் உருவாக்கியதா இல்லை அவன் வரலாற்றை உருவாக்கினானா? இதே கேள்வியை வரலாற்றில் எல்லா மன்னர்கள் மீதும் விரிவடையச் செய்யலாம். ‘போரும் அமைதியும்’ நாவலில் தல்ஸ்தோய் எழுப்பிய வினாதான் அது.


அரண்மனை, நிர்வாகம், அந்தப்புரம் என்றெங்கும் நமது ராஜாராணி கதைகள் மூலம் நாம் உருவாக்கி வைத்துள்ள கற்பனைகளை சர்வசாதாரணமாக நொறுக்கிச் செல்லும் நாவல் இது. மன்னன் ஒரு மனிதன்தான் என்றால் அரண்மனையும் ஒரு வீடுதானே? சிக்கவீர ராஜேந்திரனின் பலவிதமான உறவுச் சிக்கல்கள் மிக நுட்பமாக இந்நாவலில் காட்டப்படுகின்றன. எதற்கும் கட்டுப்படாத அவனால் லட்சுமி நாராயணய்யா, உத்தய்ய தக்கன் போன்ற முதியவர்களை எவ்வகையிலும் எதிர்த்து பேச முடியவில்லை. விரும்பிய பெண்ணை சிறைப்பிடித்து அடைத்து வைக்கும் அவன் தொட்டவ்வா போன்ற ஒரு தாயின் முன் கூசி தலைகுனிகிறான். அவனுள் உறையும் மனிதனை அவன் பலவீனங்கள் தொடர்ந்து சிதறடிக்கின்றன


சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சியை நாம் அவனுடைய கோணத்திலும் அனுதாபத்துடன் நோக்க வாய்ப்பு அளித்திருப்பதே இந்நாவலின் வெற்றியாகும். மன்னர் குலத்தில் பிறக்கும் குழந்தை அன்னையின் அணைப்பும் தந்தையின் வழிகாட்டலையும் பெற்று வளர்வதில்லை. அது சேடிகளின் செவிலிகளின் அணைப்பில் வளர்கிறது. அவர்கள் அக்குழந்தைக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் அவனை கண்டிப்பதும் தண்டிப்பதும் இல்லை. விளைவாக தனக்கு சுற்றும் தன் சொல்லை ஆணையாக ஏற்று வாழும் மானுடக்கூட்டத்தை கண்டு வளரும் அக்குழந்தை மிதமிஞ்சி வீங்கிய அகந்தையுடன் உருவாகிறது. அகந்தை அதன் நற்குணங்களையெல்லாம் மறைத்து விடுகிறது. அகந்தை சீண்டப்படுகையில் குரூரமாகிறது. புகழப்படுகையில் முட்டாள்தனமாகிறது.


உண்மையில் சிக்கவீர ராஜேந்திரன் அவனது சூழலால் உருவாக்கப்பட்ட ஒரு பொம்மை. அச்சூழலின் மொத்த கனத்தையும் அதுவே தாங்குகிறது. நசுங்கி உடைகிறது. அவ்வாறு உடைந்ததன் குற்றத்தையும் வரலாறு அதன் மீதே சுமத்தி அவனை நிரந்தரமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் அச்சூழலை உருவாக்கியதன் பொறுப்¨ப்பம் அவன் மீதே சுமத்திவிடுகிறது.


*


Chikka Veerarajendra - The Last King of Coorg with the princess Gowramma

சிக்கவீர ராஜேந்திரன். லண்டனில், நாடுகடத்தப்பட்ட நிலையில், தன் மகளுடன்


 


குடகின் நிர்வாகஅமைப்பை உருவாக்கி நிலை நிறுத்தும் அதிகாரங்கள், உணர்வுகள், குறியீடுகள், மரபுகள் அனைத்தும் இந்நாவலில் பலவகையில் காட்டப்படுகின்றன. சார்ந்த வாசகன் கற்பனை வழியாக இந்திய மன்னராட்சி முறையின் பல்வேறு இயல்புகளை இந்நாவல் வழியாக அடைய முடியும். வரலாறு குறித்த நமது உருவகங்களை பல்வேறு கோணங்களில் உடைத்து ஆராயமுடியும். அதுவே இந்நாவலை இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நாவல்களில் ஒன்றாக ஆக்குகிறது.


அரசு என்பது புறவயமான ஓர் அமைப்பு அல்ல என்பதை இந்நாவல் காட்டுகிறது எனலாம். அது சில நம்பிக்கைகள் மரபுகள் மனோபாவங்கள் ஆகியவற்றின் விளைவாக உருவாகிவருவதாகும். சிக்கவீர ராஜேந்திரன் அற்பன் அயோக்கியன் என்பதை குடகே அறியும். ஆனாலும் அம்மக்களும் அமைச்சர்களும் அரச விஸ்வாசத்துடன்தான் இருக்கின்றனர். மன்னனின் கொடுமையால் தன் நீதியுணர்வு உலுக்கபடும்போதுகூட அமைச்சர் லட்சுமி நாராயணய்ய ராஜதுரோகத்தை எண்ணிப்பார்க்க முடியாதவராகவே இருக்கிறார்.


ஆனால் ஓர் எல்லை இருக்கிறது. குடிமக்களை வதைப்பது அவர்கள் வீட்டுப்பெண்களை கற்பழிபது எனறு அவனது வெறி எல்லைகடக்கும்போது ஒவ்வொருவராக விலகிச்செல்கிறார்கள். சாத்வீக உருவமான ரேவண்னச்செட்டியின் மனமுறிவு அதன் முதல் அடிக்கல்நகர்வு. அதன் பின் குடகுமலை பழங்குடித்தலைவனாகிய உத்தய்ய தக்கனின் விலகல். கடைசியில் போபண்ணாவின் விலக்கம். அதன் பின் சிக்கவீர ராஜேந்திரன் ஒரு உளுத்த மரம்தான் . வெள்ளையர் சற்று உலுக்கினாலே போதும்.


வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்றியதன் பின்னனியில் சிக்கவீர ராஜேந்திரனைப்போன்ற பொறுப்பில்லாத குரூரமான மன்னர்களின் பங்களிப்பு மிக அதிகம். பிரிட்டிஷ் அரசாட்சியை இந்திய மக்கள் விரும்பி நன்றியுடன் ஏற்றுக்கொண்ட இடங்களே அதிகம். மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சரித்திரம் இக்காலகட்டத்தில் இல்லை. பலவீனமான மன்னர்களைக் கைக்குள் போட்டிருந்த நொண்டி பசவனைப்போன்றவர்களும் அதிகம்.


இதே கதை கேரள வரலாற்றிலும் நடந்தது. கேரள வரலாற்றில் இதேபோன்று ஜயந்தன் நம்பூதிரி என்பவர் மன்னரை ஆட்டிப்படைத்து போலி ஆட்சி நடத்தினார். கொடுமை தாளாமல் மக்கள் திவான் வேலுத்தம்பி தளவாய் தலைமையில் கிளர்ந்தெழுந்தார்கள். போபண்ணாவைப்போலவே பிரிட்டிஷ் உதவியை வேலுத்தம்பி நாடினார். ஆனால் பிரிட்டிஷார் ஆட்சியை எடுத்துக்கொள்வதை எதிர்த்து போராடி கொல்லப்பட்டார்.


*


1

விக்டோரியா கௌரம்மா. சிக்கவீர ராஜேந்திரனின் மகள். ஆங்கிலேயரால் லண்டனுக்கு அனுப்பப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டாள்.


 


இந்நாவலில் மிக உயிர்துடிப்பான கதாபாத்திரம் சிக்க வீர ராஜேந்திரனின் மனைவியான கௌரம்மா. அழகும் கம்பீரமும் நிறைந்த குடகுப்பெண் அவள். எந்நிலையிலும் அவளுடையசுய கௌரவத்தை அவள் இழப்பதில்லை. ஆனால் சிக்கவீர ராஜேந்திரன் அவளை இழிவாக நடத்துவதை வசைபாடுவதை மிகுந்த பொறுமையுடன் சகித்துக் கொள்கிறாள். அவனுடைய உள்ளூர உறையும் தார்மீகத்தை பிடித்துக்கொண்டு அவனை கட்டுப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்கிறாள்


நாவலில் ஒருமுறை சிக்க வீர ராஜேந்திரன் நோயுற்று படுக்கையில் கிடக்கும்போது கௌரம்மா அவனை உடனிருந்து தாசிபோல கவனித்துக் கொள்வதை சிகிழ்ச்சை அளிக்க வந்த வெள்லைக்கார டாக்டர் பார்க்கிறார். சிக்க வீர ராஜேந்திரனுக்கு அளிக்கப்படும் மருந்துகளை அவளே சற்று குடித்துப் பார்த்துவிட்டுத்தான் கொடுக்கிறாள். டாக்டர் துரை இந்த உதவாக்கரையை இப்படி பேணுகிறாளே, இவளுக்குப் பெண் என்ர சுயமரியாதையே இல்லையா’ என்று எண்ணி இளக்காரமே கொள்கிறாள்.


ஆனால் அசாதாரணமான பொறுமையும் மதிவன்மையும் கொண்டவள் கௌரம்மா. ஒருகட்டத்தில் அவளே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வது நல்லது என்ற எண்ணம்கூட அமைச்சர்களுக்கு உருவாகிறது.அவள் அதை ஏற்கவில்லை. உள்ளூர அவளுக்கு ஒன்று தெரியும், ஆண்மைய சமூகமான குடகு அவளை உள்ளூர ஏற்காது. தேவம்மா எவ்வகையிலும் மேம்பட்டவளாக இருந்தும் கூட குடகின் வீரர்குழுவும் அமைச்சர்குழுவும் எந்தவிதமான தகுதியும் இல்லாத லிங்கராஜனையும் சிக்கவீர ராஜேந்திரனையும் அவர்கள் ஆண்கள் என்பதனாலேயே தொட்ட வீர ராஜேந்திரனின் விருப்பத்தையும் மீறி மன்னர்களாக ஏற்றனர். அவ்வகையில் குடகின் விதியை தீர்மானித்தவர்கள் அவர்களே.


சரிந்தபடியே இருக்கும் சிக்க வீர ராஜேந்திரனின் அரசை தூக்கி நிறுத்திவிட தன் கடைசி சக்தியையும் செலவிடுகிறாள் கௌரம்மா. சொல்லப்போனால் அவளுடைய வாழ்க்கையே கணவனின் சரிவுக்கு அணைகொடுக்கும் இடைவிடாத முயற்சிமட்டுமே. கணவனை மீண்டும் மீண்டும் குடகின் உண்மையான அதிகார அமைப்புடன் சமரசம் செய்துவைக்க அவள் முயல்கிறாள். எல்லா முயற்சிகளிலும் முழுமையான தோல்வியை கண்டு சிக்கவீர ராஜேந்திரனின் முழு வீழ்ச்சியை கண்டு மனம் உடைந்து இறக்கிறாள்.


என் வாசிப்பு நினைவில் இக்கட்டுரையை எழுதிய முதல்பிரதியில் கௌரம்மாவின் பெயரை நஞ்சம்மா என்றே எழுதிருந்தேன். அது பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கதாநாயகியின் பெயர். இவ்விரு கதாபாத்திரங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பிரமிப்பூட்டுவது. வாழ்நாளெல்லாம் இருவருமே முரட்டுமுட்டாளான கணவனை பாதுகாத்து தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள போராடினார்கள்.அவர்களின் வீரம் விவேகம் பொறுமை அறிவு அனைத்துமே அதில் வீணாகச் செலவானது. அவர்கள் இருவரின் வாழ்க்கையும் துன்பியல் காவியத்தன்மை கொண்டதுதான்.


கௌரம்மா அரசி. நஞ்சம்மா எளிய கிராமத்துப்பெண். கௌரம்மா தன் மகளின் அரசபதவிக்காக வாழ்நாளெல்லாம் போராடினாள்.நஞ்சம்மா குழந்தைகளின் வயிறு நிறைவதற்காகவே உழைத்து உழைத்து தேய்ந்தாள். ஆனால் இரு பெண்களுமே தங்கள் கம்பீரத்தை இழக்கவில்லை. நஞ்சம்மாவும் அரசிக்குரிய மாண்புடனேயே வாழ்ந்தாள். இவ்விரு கதாபாத்திரங்களையும் ஒப்பிடும்தோறும் வாழ்க்கையின் இருமுகங்கள் மனக்கண்ணில் விரிகின்றன, இரண்டிலும் நிறைந்திருக்கும் ஒரே விழுமியமும் தெரிகிறது.


*


‘சிக்க வீர ராஜேந்திரன்’ நாவலின் முக்கியமான கவற்சி ஒன்று உண்டு. சிக்க வீர ராஜேந்திரன்கைதாகி வேலூர் சென்று அங்கிருந்து லண்டன் சென்று மறைந்தபின் பலவருடங்கள் கழித்து இதை எழுதிய ஆசிரியரின் கூற்றாக மிஈண்டும் நீளும் பகுதிதன அது. நாவல் உருவான கதை என விரியும் அப்பகுதி இந்நாவலுக்கு ஒரு சிறந்த மீபுனைவு [ மெட்டா ·பிக்ஷன்] என்னும் தளத்தை அளித்துவிடுகிறது. நாவல் முழுக்க ஊடாடிய பல நுண்ணிய சரடுகள் ஒன்றாக இணைந்து நாவலை அடுத்த கட்டத்துக்குத் தூக்குகின்றன.


உத்தய்ய தக்கனின் கொள்ளுப்பேரன் உத்தய்யனுடன் குடகுக்குச் செல்லும் ஆசிரியர் குடகின் கடைசி மன்னன் சிக்க வீர ராஜேந்திரனின் கதையை க் கேள்விப்படுகிறார். அப்போது கூட இருந்த நண்பர்களில் ஒருவர் லண்டன் செல்கிறார். அங்கே யதேச்சையாக சிக்க வீர ராஜேந்திரனின் மகள் விக்டோரியா கௌரம்மாவின் மகள் எடித் சாது கௌரம்மாவைக் காண்கிறார். அங்கே கௌரம்மாவின் ஓவியத்தைக் கண்டு அதில் தெரியும் கம்பீரத்தை உணர்ந்து கைகூப்பி எழுந்துநிற்கிறார். ‘விதி வேறு மாதிரி இருந்திருந்தால் குடகே என்னுடையதாக இருந்திருக்கலாம்’ என்கிறாள் எடித்.


எடித்தின் அம்மா அவளது மரணப்படுக்கையில் தன் குழந்தை ஆணாக இருந்தால் உத்தய்யன் என்றும் பெண்ணாக இருந்தால் சாது என்றும் பெயரிடவேண்டும் என்று கோருகிறாள். அதுவரை நாவலில் மிக மௌனமாக ஓடிய ஒரு அதிதீவிரமான காதலின் சரடு சட்டென்று வெளிபப்டும் இடம் அது. தன் அம்மாவை அப்பா வெறுத்துவிட்டார் என்கிறாள் எடித். அம்மாவின் விலைமதிப்பற்ற நகைகளுடன் வங்கிக்குச் சென்றவர் திரும்பவில்லை. கொல்லப்பட்டிருக்கலாம், தப்பிச்சென்றிருக்கலாம். நுண்ணிய மௌனங்களுடன் சட் சட்டென்று விரியும் பல தளங்கள் கொண்ட வரலாற்றுச் சித்திரம் இது. இங்கிருந்து நாவலின் முதல் அத்தியாயத்துக்கு , முதல் வரிக்கு வரும்போது நாவல் முற்றிலும் புதிதாக தொடங்குவதைக் காணலாம்.


இந்த ஒட்டுமொத்த வரலாற்றின் மாபெரும்சோக நாயகி விக்டோரியா கௌரம்மாதான். நினைவறியா நாளிலேயேஅவர் நாடுகடத்தப்படுகிறார். முற்றிலும் அன்னியர்களுடன் வளர்கிறார். கட்டாய மதமாற்றம். நாடுகடத்தப்பட்ட பஞ்சாப் இளவரசர் துலிப் சிங்கை மணக்க விரும்புகிறார். அந்த மணம் நடக்கக்கூடாது என்பதற்காக கேப்டன் கேம்பலுக்கு கட்டாய மணம் செய்விக்கப்படுகிறார். அன்னிய நிலத்தின் குளிரில், அறியாத ஆசாரங்களில் சிக்கி வதையுண்டு சாகிறார். அன்னிய நிலத்தில் அவருக்காக ஒரு சிலுவை மட்டும் எஞ்சுகிறது. ஒரு அற்புதமான இரண்டாம் பாகத்துக்கான வாய்ப்புள்ள உண்மைக்கதை இந்நாவல். எவரேனும் எழுதலாம்.


 


*


மாஸ்தி உத்வேகமூட்டும் கதைசொல்லியல்ல. முதிர்ந்த தாத்தா ஒருவர் பற்றின்றிச் சொல்லிச்செல்வதுபோன்ற பாவனையில் குறைவான வர்ணனைகளுடன் கதைசொல்கிறார். தல்ஸ்தோய்த்தனமான எளிய நடை. அவ்வபோது ஆசிரியர் கூற்றாக வரும் வரிகளிலும் தல்ஸ்தோய்க்குரிய எளிமையும் விவேகமும் தெரிகிறது .”அரண்மனையிகளில் எப்போதும் அபின் முதலானவை இருக்கும். அரண்மனை வாழ்வில் ஆகாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவே விஷமும் முக்கியமானது. முறை தவறிய வாழ்க்கைக்கு ஆகாரத்தைவிட விஷமே விருப்பமான வஸ்து, ஆகாரம் தராத விடுதலையை தரக்கூடியது ” போன்றவரிகள் நாவலெங்கும் நம்மை வந்தடைகின்றன.


அதேசமயம் மாஸ்தி நிகழ்வுகளையும் நிகழ்வுகளை ஊடறுத்தோடும் மன உணர்வுகளையும் மிகுந்த வல்லமையுடன் சொல்கிறார் என்பதையும் காணலாம். சிறந்த உதாரணம் சிக்கவீரன் தன் தங்கை குழந்தையை கொல்லும் இடம். அவனுடைய ஆழ்மன அச்சம் அதிலிருந்து வந்த குரூரமும் அவசரமும் சிந்திக்காமல் செய்யும் கொலை உடனே வந்து கவ்வும் இனம் புரியாத அச்சம் . அதன்பின் அவன் அக்கொலையை கண்டிக்காத ஒருவனாகிய பசவனை தேடுவது அவனைக் கண்டதுமே சுதாரித்துக்கோண்டு விடுவது போன்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியரின் திறன் வியப்பூட்டும்படி வெளிபப்டுகிற. சிந்தனைக்கு அப்பால் உள்ள போதத்தை தொடு உலுப்பும் காட்சி இது.


மாஸ்தியின் திறன் வெளிப்படும் முக்கியமான இடங்களில் முதிர்ச்சியும் விவேகமும் உள்ள மனிதர்கள் உரையாடும் இடங்கள் முக்கியமானவை. உத்தய்ய தக்கன் ரேவண்ன செட்டி அரசனிடம் உரையாடும் இடம், லட்சுமி நாராயணய்யா கௌரம்மா பதவியேற்க வேண்டுமென கோரும் இடம் போன்றவை நாசுக்கும் பெரும்போக்கும் நுட்பமும் கலந்த அரசவை உரையாடல்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.


வரலாறு என்பது ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து பின்னகர்ந்து பொய்யாக, பழங்கதையாக,கனவாக மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கையே என்று காட்டும் அபூர்வமான நாவல் சிக்க வீர ராஜேந்திரன்.


 


பின்செய்தி


1992ல் மாஸ்தியின் நாவலை தூர்தர்சனில் தொடராகப்போடமுன்வந்தனர். ஆனால் வீரசைவ மடங்களின் கடுமையான எதிர்ப்பால் இந்த புகழ்பெற்ற நாவலை ஒளிபரப்புவது தவிர்க்கப்பட்டது. சிக்கவீர ராஜேந்திரன் ஒரு வீரசைவ மன்னன், அவனை எதிர்மறையாகக் காட்டுவதை ஏற்கமுடியாது என்றன மடங்கள். இந்நாவலேகூட இன்று பொதுவாக அச்சில் இல்லை.


 


இதேகாலகட்டத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஞனாபீடப்பரிசு பெற்ற நாவலான கயிறு தூரதர்சனில் இந்தியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. எம்.எஸ்.சத்யூ இயக்கம்.அதில் மலையாளிகளின் தாய்வழிச்சமூக அமைப்பு காட்டப்பட்டதனால் ‘அவமானம் ‘ அடைந்த கேரள அமைப்புகளின் எதிர்ப்பால் அதுவும் நிறுத்தப்பட்டது.


 


இந்தியாவின் பண்பாட்டுச்சூழலில் சென்ற இருபத்தைந்தாண்டுக்கலமாக உருவாகிவலுப்பெற்றுவரும் அடிப்படைவாதப்போக்குகளின் உதாரணங்கள் இவை.


 


[சிக்கவீர ராஜேந்திரன்_மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்; தமிழில்: ஹேமா ஆனந்ததீர்த்தன் நேஷனல் புக் டிரஸ்ட்]


 


மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jan 29, 2006


 


சிக்கவீர ராஜேந்திரன் விக்கி பக்கம்

தொடர்புடைய பதிவுகள்

லட்சுமி நந்தன் போரா’

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2016 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.