Venba Geethayan's Blog, page 3

October 23, 2023

மகன்றில் களவு 6

இந்த யாமத்தில் அவிழும் முகிழின்ஒரு துளி மதுவினும் பேரினிமைஅவன் மிச்சம் வைத்த தேறல்குறையற்ற யாழின் நரம்புகள்அணிச்சரமென கோர்த்திடஒளிர்நிலவின் தண்மைமெதுவாய் கரைந்திடஉரசிய தோள்கள் அறியும்உண்மை நிலைதனைஅனைத்தும் மாயை
தன்னினிமையே மெய்யெனநகைத்தது தேறலின் கடைத்துளி 
யாமமோ கடந்திட மறந்து துயின்றதுஅவன்மேல் சரிந்தவள் மெதுவாய் மொழிந்தாள்துயிலும் இரவுதனை எழுப்பி விடாதேயென்று
- வெண்பா கீதாயன் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2023 14:02

October 7, 2023

மகன்றில் களவு 5

துள்ளி வரும் அலைகளின் நீலம்

ஒட்டிக் கொண்டது பாதங்களில்

கூடலில் இருந்த நண்டுகளிடையே முணுமுணுப்பு 

கோர்த்துக்கொண்ட கரங்களுள் இருந்த வெப்பத்தில்

வான்வெளியில் இருந்து உருகிப் பொழிந்த உடுக்கள்

இறுக்கத்தில் தளர்ந்த முகில்கள் 

நாணமேதுமற்று ஒளிரும் வெண்கீற்று

ஸ்பரிசத்துடன் கலந்த மணல்

இருள்தான் இன்னுமொரு பொழுது நீடிக்கட்டும்

இத்தனை மிளிர்வுகளுக்கு இன்னொரு தருணம் அரிது

- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 14:24

September 26, 2023

மகன்றில் களவு 4

பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை

நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்

நொடியில் பிடுங்கி மேசையில்

வீசினான்

சிதறிய மலர்களின் மணம்

நாணமுற்றன

அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை

அவன் மூச்சுக்காற்று சுவைத்த

நொடிதனில்

- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2023 09:30

September 21, 2023

மகன்றில் களவு 3

சேடல் முகிழ் பொழுதது

மோதி விளையாடும் முகில்கள்

சிதறிய நூபுர முத்துப்பரல்கள் 

அடர்வன ஓர் வகிடுப் பாதையில் 

தேடிட நேரமன்று

என்றோ அவ்வழியே அவன் வரவு

தாள்தனில் உறுத்திய பரல்கள் 

கணப்பொழுதில் அவள் உரு

எழுந்து அணைந்தது 

வெறி கொண்ட அணங்கென 


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2023 04:27

September 12, 2023

மகன்றில் களவு - 2

அதிகாலையா பின்னிரவா என்றறியாத வேளையில்

ஒளிரும் விண்மீன்களுக்கிடையே

ஏதோவொரு விண்மீன்

என் சாளரத்தில் அமர்ந்தது

அதனிடம் பெயர் கேட்க புரண்டு படுத்தேன்

அத்தனை மிளிர்வுடன்

நின்றொளிர்ந்தது

விழிகள் கூசிட

அவன் பெயர் இட்டேன்

இன்னும் நெருக்கத்தில் வந்தமர்ந்தது விண்மீன்

சாளரத் திரையை இழுத்துவிட்டு

கண்களை மூடிக் கொண்டேன்


-வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2023 08:09

September 11, 2023

மகன்றில் களவு 1

பெரும்பொழுதுகள் பல கடந்துயாமத்துத் துயில்களைத் துறந்துஆதியுகத்தினில்காதலுற்ற அரிவையும் அவளவனும்திகட்டும் முயக்கத்தில்நிலத்தின் ஆழத்தில் அமிழ்த்திய மதுக்குடுவைஅவனுக்குக் கிடைக்கப்பெற்றது இக்கார்காலத்தில் அம்மதுவின் துளி ருசிஅவளது காதல் 
- வெண்பா கீதாயன் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2023 07:50

February 14, 2022

ஒருநாள்...

 

வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே! 

 

- ஆண்டாள்

 

வாடையே, எழு!
தென்றலே, வா!
என் தோட்டத்தின்மேல் வீசு!
அதன் நறுமணம் பரவட்டும்!
என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்!
அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!

 

- அதிகாரம் 4, உன்னத சங்கீதம்

 

காதலைச் சொல்வதற்கு அந்த ஒரு நாள் போதுமா? வெறும் ஒரே நாளில் என் வாழ்வில் பங்கு கொள்ளப்போகிறவனிடத்தில் நான் இந்த ஒட்டுமொத்த உணர்வைச் சொல்லிவிட முடியுமா? அவனொன்றும் எனக்கு புதியவனன்று. எத்தனையோ முறை காபிக் கோப்பைகளையும் மதுக் கோப்பைகளையும் பகிர்ந்திருக்கிறேன். அவன் என்னை நோக்குவதற்கும் பிறபெண்களை நோக்குவதற்குமான வேறுபாட்டை உணர்ந்துள்ளேன். அவனின் ரசனைகளை அறிவேன். என்னுடைய ரசனைகளை அறிந்திட வாய்ப்புகள் வழங்கியிருக்கிறேன். நான்கு முறை அலுவலக லிஃப்டில் அவனின் ஸ்பரிசத்தை உரசல்களின் ஊடே தெரிந்துள்ளேன். இவ்வளவு மட்டும் போதுமா காதலைச் சொல்வதற்கு? 

 

இரவு ஒன்பது மணிக்கு நகரின் முக்கியமான உயர்தர மது உணவு அரங்கிற்கு அழைத்துள்ளேன். ஒன்பது வரை அந்நாளின் அறிவிப்பைத் தள்ளிப் போட்டது என் முட்டாள்த்தனம். பிரம்ம கமலம் மலரும் தருணத்தை நோக்குவது போல ஒவ்வொரு நொடியும் அத்தனை தாமதமாய் இயங்கியது. ஒன்பது மணி வரை ஒருவேலையும் ஓடவில்லை. மதிய உணவைத் தவிர்த்தேன். கிட்டத்தட்ட ஆறு லிட்டர் தண்ணீர் அருந்தியிருப்பேன். அப்படியும் நா வறட்சி; எண்ண மறந்த அளவிற்கு சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். கைப்பையில் இருக்கும் நீலநிற கவுனை எடுத்து வந்திருக்கிறேனா என மூன்று முறைக்கு மேல் அலுவலகத்தில் சரிபார்த்து விட்டேன். பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீனா கையைப் பிடித்து ஏதும் பிரச்சனையா என அழுத்தினாள். அறையின் குளிர்தன்மை என் உடலுக்குப் போதவில்லை. உள்ளங்கைகளும் கால்களும் குளிர்ந்திருந்தன. இருப்பினும் காது பின்மடலிலிருந்து கழுத்து வழியே வியர்வை படர்ந்திருந்தது. 

 

அணிந்திருந்த வெள்ளை நிறச் சட்டை முதுகில் ஒட்டி நனைந்திருந்தது. இறுக்கமாகக் கொண்டையிட்டிருந்தது எப்படியோ சரிந்து கூந்தல் என் தோளில் விழ மீண்டும் சரியாகக் கொண்டை போட இயலவில்லை. இந்த ஒன்பது மணிதான் ஆகித் தொலையாதா என அலைபேசியேத் திருப்பிப் பார்த்தேன். நான்கு மணி ஆகியிருந்தது. கட்டிடத்தின் நீலம் பூசிய கண்ணாடி முகப்புகளில் பட்டு சூரியஒளிக் கற்றைகள் கோடுகளாகச் சிதறிக்கொண்டிருந்தன. 

 

எதிரே ஆர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். உயரமானவள், சற்றே அகலமும் பொருந்தியவள். அவளுடைய குதிரைவால் அவளை இன்னும் உயரமாகக் காட்டும். ஆனால் என்னைவிடவெல்லாம் பேரழகி இல்லை எனத் தெரியும். இருப்பினும் அவன் நான்கு முறை அவளிடம் தனியாக நின்று பேசியிருக்கிறான். அவளை அவன் பார்ப்பதை நானும் பார்த்திருக்கிறேன். என்னை நோக்குவது போல அவளைப் பார்க்கமாட்டான். ஆனால் மற்ற பெண்கள் போலவும் அவளைப் பார்க்கமாட்டான். அதுதான் சிக்கல். ஒருவேளை அவளை ஏற்கெனவே காதலிக்கின்றானோ? 

 

ஒருவேளை அவன் அவளைக் காதலித்துக்கொண்டிருந்தால்அந்த இரவின் ஒன்பது மணிக்கு எனக்கு நரகம் துவங்கிவிடும் என எண்ணினேன். பிறகு பிரம்ம கமலமாவது அந்திமந்தாரையாவது? அழுகை வேறு வந்தது. ஐயயோ கண் வீங்கினால் அழகாக இருக்கமாட்டோம், மஸ்காரா கலையும் என்கிற எண்ணங்கள் மேலும் வருத்தத்தை வரவழைத்தன. ஏற்கெனவே ஒரு முறை வேறு எதற்கோ அழுதபோது நீ பர்மிய பெண் மாதிரி இருக்கிறாய் என கிண்டல் செய்துவிட்டு சிகரட் புகையை முகத்தில் விட்டான். அப்போது சிரித்தேன். ஆனால் அன்றைய நாளில் இவ்வாறு நடந்தால் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது சோகமாக இருக்க நேரிடும். பேசாமல் வெறும் பாஸ்தாவும் மூன்று லார்ஜ் பிளாக் லேபிளும் அருந்தி சியர்ஸ் சொல்லிவிட்டு ஒன்பது மணியைக் கடந்துவிடலாமா எனக்கூட யோசித்தேன். ஆனால் அது ஒரு அற்புதமான நாள்; தேய்வழக்கான நாளும் கூட; ஏன் மற்ற நாட்களில் காதலைச் சொன்னால் காதல் நன்றாக இராதா என்ன? இருப்பினும் அதுவொரு இந்திரவிழா போல, புதுப்புனலென காதல் எல்லா யுவன்களின் யுவதிகளின் விழிகளிலும் வழியும். எங்கும் கவிதைகள் பாடப்படும்; முத்தங்களும் கூடல்களும் அதிகமாய் நிகழ்த்தப்பெறும். காமம் கடைந்தெடுக்கப்பட்டு அமுத மழையென அனைவரின் அறைகளினுள் பொழிந்திடும் நாளது. மன்மதன் எய்த ஐந்து மலர்களும் அன்றைய காதலர்களின் படுக்கைகளின் கிடந்து பாடுபடும் நாளது. 

 

மணி 5:10 எனக் காட்டியது. அவனிடமிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி, "டின்னரை நாளை வைத்துக்கொள்ளலாமா?" என்னுடைய நேரம் மட்டும் ஏன் இயற்பியல் விதிகளின் கீழ் மிக மோசமாக இயங்குகிறது என நொந்தபடி மேசையில் தலைவைத்துக் கொண்டேன். கண்டிப்பாக அப்படியானால் ஆர்த்தியுடன்தான் செல்லப்போகிறான் எனக் கருதி நீனாவை ஆர்த்தியிடம் பேச்சுக்காக இரவு உணவுக்கு அழைக்கும்படி அவள் என்ன சொல்கிறாள் என கேட்டு வரும்படி வற்புறுத்தினேன். நீனாவிடம் ஆர்த்தி விரைவாக வீட்டுக்குக் கிளம்புவதாகவும் நாளை வருவதாகவும் கூறியதை அறிந்து உறுதிப்படுத்திக்கொண்டேன். 

 

கைப்பையில் இருந்த நீலகவுனின் நுனி எட்டிப்பார்த்தது. மீண்டுமொரு வாட்ஸ்அப் செய்தி, அவனிடமிருந்து. "மன்னித்துவிடு, டின்னருக்கு கண்டிப்பாக வருகிறேன், மது அரங்கில் சந்திப்போம்". உண்மையில் தலை வலிப்பது போல இருந்தது. நீனா நிலைமையைப் பார்த்து காபி வாங்கி வந்து தந்தாள். ஒரு காதலைச் சொல்வதற்குள் என்னென்ன நேர்கிறது.

 

ஒருவழியாக ஏழு மணி ஆகிவிட்டது. அவன் கிளம்பிவிட்டான். நானும் அப்போது கிளம்பி கேப் ஏறினால்தான் சரியாக ஒன்பது மணிக்குச் செல்ல முடியும். பெண்கள் அறைக்குச் சென்றேன். அடர்நீல நிற கவுனை மாற்றினேன். வெர்ஸேஸை மணிக்கட்டிலும் கழுத்திலும் பூசிக் கொண்டேன். அதுவரை உணராத மணமொன்று எழுந்தது. காஜல் மஸ்காரா சகிதத்தோடு சற்று அடர்நிற இதழ்ச்சாயம் அணிந்துவிட்டு கொண்டையைக் கழற்றினேன். முடி கீழ்முதுகு வரை படர்ந்தது. கண்ணாடியில் மிக அழகியாகத் தோன்றினேன். இதே கோலத்தில் யாரிடம் சொன்னாலும் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற கர்வம் எழுந்தது. 

 

காரில் அமர்ந்தேன்; 'யாமம் உய்யாமை நின்றன்று' என வெள்ளிவீதியார் பாடியதைப் போல அவ்வளவு வாகன நெரிசலில் கூட எனக்கு நேரம் நின்று போனதாகத் தோன்றியது. இதயத்துடிப்பு அதிகமாகிக் கொண்டு போனது. கலவி புரிவது கூட எளிது; ஆனால் இதோ நீ என் வாழ்விலும் நான் உன் வாழ்விலும் பங்கு கொள்ள விரும்புகிறேன் என கூறிட விழையும் தருணமென்பது மிகப் பெரியது. வெற்று இச்சை என்பது அன்றே தீர்ந்துவிடக்கூடியது; ஆபத்தற்றது. ஆனால் காதல் ஆலகால விஷம்; அதைக் காலத்திற்கும் கழுத்தில் தேக்கிட வேண்டும். கொஞ்சம் உள்ளே இறங்கினாலும் உயிர் பறித்திட வல்லது.

 

போகும் வழியெங்கிலும் இதயங்களைத் தோரணமாகத் தொங்கவிட்டிருந்தது சமூகம்; கடை வீதிகளில் காதலர் தினத் தள்ளுபடிகள்; ஒரு நாள் இத்தனை ரோஜாக்கள் இங்கு எத்தனை காதலருக்காக மலர்ந்துள்ளன? பூக்கார அக்கா எந்த வருடமும் ஒரு ரோஜா கூட மிச்சமாகவில்லை என்றார். சிவப்பு ரோஜாக்குவியலுடன் அவன் முன்பு நின்றால் என்ன சொல்லுவான்? இதுவொன்றும் எனக்கு முதல் காதலில்லை. அவனுக்கும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் எது என்னை இத்தனை மெல்லியவளாய் மீண்டும் மலரச் செய்கிறது? 

 

ஐயோ! உணவரங்கை அடைந்துவிட்டேன். பாலிவுட்டின் அதிசிறந்த காதல்பாடல்கள் நிரையாக இசைத்துக்கொண்டிருந்தன. என்றோ நான் பார்த்த ஷர்மிளா டாகூர்களும் டிம்பிள் கபாடியாக்களும் ஸ்ரீதேவிக்களும் கஜோல்களும் பல்வேறு திரைப்பட காதல் காட்சிகளாக பல்வேறு நாயகர்களுடன் வந்து சென்றனர். 

 

பாசிப்பச்சை நிறச் முழுக்கை சட்டையும் தந்த நிற காற்சாட்டையும் அணிந்து மெல்லிய புன்னகையுடன் மேசை நான்கில் அமர்ந்திருந்தான். ஒரு நொடி யோசித்தேன், பெண்ணாகப் போய் முதலில் காதலைச் சொல்வது நன்றாகவா இருக்கும்? லஜ்ஜை கெட்டவளெனக் கருதுவானோ? அருகே சென்று அமர்ந்தேன். என் வலக்கையிலிருந்த ரோஜாக்குவியலைக் கண்டான். இடக்கையோடு பற்றியிழுத்து காதில் என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்றான்.

 

மளமளவென அழுகை வந்தது; அவன் எனக்கு புதியவனன்று; மிகவும் பழகிய ஆண்; ஒருமுறை மழையில் அவன் நனைந்தபடி குடை தந்து அனுப்பினான்; துணைக்கு பலமுறை வீடுவரை நடந்து வந்து விட்டுச் சென்றிருக்கிறான்; பலகணியில் வேடிக்கை பார்க்கும் மாலைகளில் சைக்கிளுடன் சிரித்தபடி சென்றிருக்கிறான்; உயரமும் காபியின் நிறமுமாய் எப்போதும் கச்சிதமான தோற்றத்துடன் இருப்பவன்; அன்று அணுஅணுவாய் ரகசியமாய் ரசித்த ஒருவன் என்னை நாணங்கொள்ளச் செய்ததில் முழுதாய் உருகினேன். 

 

கட்டித்தழுவி ஐ லவ் யூ கூறினான்; வெறும் இரவு உணவோடு முடிந்து விடாமல் நிறைய டக்கீலா ஷாட்கள், பல்வேறு நினைவுகள் என நேரம் நகர்ந்தது. முதல் சந்திப்பு அலுவலகத்தில், அன்றைய தினம் வெளிர்நீல நிறச் சட்டையும் கருப்பு நிறக் காற்சட்டையும் அணிந்து இன் செய்து அழகான சுருள்முடியை வாரிய தலையுடன் என்னிடம் தன்னுடைய இடம் எங்கிருக்கின்றது என தயக்கத்தோடு கேட்டான். தெரியவில்லை, என் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா என்றேன். நீனா சத்தமாகச் சிரித்துவிட்டாள்; அவன் அப்போது கண்டிப்பாக ஒருநாள் அமர்வேனடி என நினைத்தானாம்; நான்தான் அதற்கும் அனுமதி அளித்துள்ளேன். அன்றைய நாளின் இனிமை வாழ்வின் எத்தருணத்தில் எண்ணும்போதும் உவகை கொள்ளச் செய்யும். இந்தக் காதல் என்றில்லை; இதற்கு முந்தைய காதல்களின் துவக்கங்களும் அவ்வாறு இனிமையானவையே. 

 

இதோ, அருகே என் மெத்தையில் துயில் கொள்பவன் அன்று என்னை அழச்செய்தவன் கிடையாது; சராசரியானவன். ஆம், பெண்கள் நாம் நினைக்கும் காவியநாயகனை காணும் ஆண்களிடம் தேடிக் கண்டடைகிறோம். சில நாட்களில் இவன் அவ்வாறு இல்லை என அறிய வரும்போது ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் எல்லா ஆண்களுக்குள்ளும் நம் காவிய நாயகன் சில நாட்களே எழுகிறான்; எஞ்சிய வாழ்நாளில் எல்லா ஆண்களும் சராசரி ஆண்களே. பெண்களும் அவ்வாறானவர்களே; காதலில் நிகழும் சாகசங்கள் ஒருவித விழவுகள்; அவை தினமும் நிகழா. 

 

மைத்துனன் தம்பி மதுசூதன் வந்து தினமும் கைத்தலம் பற்றினால் கோதையின் கனவுக்கு மதிப்புதான் ஏது?

 

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2022 02:42

July 26, 2021

காதம்பரி தேவி

            காதம்பரி தேவி வங்காள படைப்புகள் எப்போதும் ஓர் தரிசனத்தையும் அமைதியையும் தரவல்லவை. ஒரு வங்காள நாவலையோ ஒரு வங்காள கவிதையையோ ஒரு வங்காள கலைப்படைப்பையோ தீவிரமான மனநிலையில் நுகரும்போது அது எல்லையற்ற அமைதியையும் மென்னுணர்வையும் அளிக்கும். நேற்றிரவு வங்காள திரைப்படமான காதம்பரி பார்த்தேன். 
         தாகூர் குடும்பத்தின் படைப்புகள் மீது எந்த அளவிற்கு விவாதங்களும் உரையாடல்களும் எழுந்தனவோ அதே அளவிற்கு அவர்களது குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களும் பெங்காலிகளிடையே முணுமுணுப்புகளாக உண்டு. தாகூர் குடும்பத்தின் மருமகளும் ரவீந்திரநாத் தாகூரின் அண்ணியுமான காதம்பரி தேவியின் தற்கொலை குறித்து தாகூரின் எழுத்துகள் வழியே எழுந்த உரையாடல்கள் மூலம் நூல்கள் வந்துள்ளன. அத்துடன் அவரது தற்கொலையை மையப்படுத்தி வெளியான திரைப்படம் காதம்பரி. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவில் வைக்கப்படுவதில் எனக்கு எப்போதும் உவப்பில்லை. இருப்பினும் ஓர் உறவு கலைக்கு அடிப்படையாக எழும்போது அதுகுறித்த எழுத்துக்குத் தேவை இருக்கிறது.                    தன் தந்தை பணியாற்றும் தாகூர் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் வாய்ப்பு சிறுமி காதம்பரிக்கு அமைகிறது. கணவனோ தன்னைவிட பதினைந்து வயது மூத்தவர். விளையாட்டையும் பொழுதுபோக்கையும் விரும்பும் சிறுமிக்குக் குடும்பப் பொறுப்புகள் அமைகின்றன. குடும்ப பொறுப்புகளை முடித்து எஞ்சிய நேரத்தில் சிறுமியாக அவ்வீட்டில் உலாவரும்போது அதே வயதையொத்த சிறுவன் ரவீந்திரநாத் தாகூர் தன் அண்ணிக்கு நல்ல களித்தோழனாக அமைகிறார். மேலும் தன் கணவனுக்கு வேறு பெண் மீது விருப்பம் இருப்பதை அறிந்து காதம்பரி தாகூர் குடும்ப கௌரவத்திற்கான மருமகளென மட்டுமே அமைகிறாள். களித்தோழன் என்கிற உறவை பெண் எந்த வரையறைக்குள்ளும் வைக்கமுடியாது. காதலனை விட உயர்ந்தவனா எனில் ஆம், காதலனிடம் சொல்லப்படாத ரகசியங்கள் கூட களித்தோழனிடம் சொல்லப்பட்டிருக்கும். களித்தோழனிடத்தில் காதல் இருக்கும்; ஆனால் அது உடல் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. இறுக்கி அணைத்துக் கொள்ள, தோளில் சாய்ந்து கொள்ள, ரகசியங்களை கிசுகிசுக்க, ஓடிப்பிடித்து விளையாட, அரங்கில் உடன் ஆட, எல்லாவற்றையும் பேசிச் சிரிக்க, உரிமையாகக் கோபம் கொள்ள எல்லா பெண்ணிற்கும் ஒரு களித்தோழன் தேவைப்படுகிறான்.
              களித்தோழனிடத்தில் விவாகரத்து குறித்தோ, காதல்முறிவு குறித்தோ அஞ்ச வேண்டியதில்லை. காதம்பரிக்கும் ரவிக்குமான உறவு அத்தகையது. ரவிக்கும் தன் படைப்புகளுக்கான ஊற்றுமுகமாகவும் முதல்ரசிகையாகவும் அமைந்திட காதம்பரி தேவைப்படுகிறாள். காதம்பரியை தேவியாக உருவகித்து உபாசகனென வழிபடுமளவிற்கு காதம்பரியின்பால் ரவி காதல் கொள்கிறார். லண்டன் பயணத்தின் போது காதம்பரியின் பிரிவால் எழுதிய பக்னா ஹிரிதய் கவிதை நூலை காதம்பரிக்கே சமர்ப்பிக்கின்றார்.
            மறுபுறம் காதம்பரி தன் கணவரின் சகோதரி ஸ்வர்ணகுமாரியின் குழந்தை ஊர்மிளாவுடன் நேரம் செலவளிக்கிறார். கவிதையில் ஆழ்வது, இசையில் செலவிடுவது, ஊர்மிளாவுடன் விளையாடுவது போன்ற செயல்கள் மற்ற சக மேட்டிமை மருமகள்களுக்கு எரிச்சலை வரவழைக்கின்றன. ரவியுடனான உறவை சக மருமகள்கள் இழிவாகப் பேசத் துவங்குகின்றனர்; காதம்பரி கணவரை சரியாக கவனிப்பதில்லை என்கிற அலரோடு கவனமின்மையால் நிகழும் ஊர்மிளாவின் இறப்பும் காதம்பரியை மிகப்பெரிய உளச்சோர்வினுள் தள்ளுகிறது. இதற்கிடையில் ரவியும் மிருணாளிணியை மணந்து கொள்கிறார். 
         இத்தனை நாள் களித்தோழனாக இருந்த ரவி திருமணத்திற்குப் பின் அந்நியமாகிறார். இவ்வளவு காலமும் தன் உணர்வுகளையும் ரசனைகளையும் ரகசியங்களையும் அருவியாய் பொலிந்த பெண்ணால் இப்போது எதையும் அடக்கி வைக்க இயலாமல் விடுதலை கொள்ள எண்ணுகிறாள். அளவுக்கதிகமாக அபின் உட்கொண்டு தாகூர் வீட்டிலிருந்து நிரந்தரமாக விடுதலை கொள்கிறாள் காதம்பரி. தாகூர் குடும்பத்தினர் அதை ஓர் இயற்கையான மரணமென அறிவித்து அதைக் கடக்கவும் முயன்றனர். 
           ரவீந்திரநாத் தாகூரின் "Broken heart" வாசிக்கப்படும்போதெல்லாம் விடுதலையடைந்த காதம்பரி மீண்டும் அக்காதலில் வீழ விழைவாள்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2021 13:03

June 28, 2021

ஓர் உலவு- சிறுகதை

 

                                   ஓர் உலவு


            இன்று முழுநிலவு நாள்; எனக்கு வானெங்கும் முழுநிலவுகள் தெரிகின்றன. இவ்வளவு ஒளிமிகுந்த இரவுகளை உன்னுடனான நாட்களில் கண்டுள்ளேன். எதிரில் வண்ணவிளக்குகள் நிலவின் ஒளிக்கு போட்டி போட்டுக்கொண்டு கடல்உலவுக்கலங்களின் கேளிக்கைகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. ஐந்து வருடங்களுக்குப் பின் இந்த அஜாக்ஸியோ நகரத்திற்கு வந்திருக்கின்றேன். இரண்டு வருடகால கோர்ஸிகா வாழ்க்கை இன்றைய இரவைப்போல இறந்தகாலத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கிறது. அப்பாவின் பணியின் பொருட்டு குழந்தைப்பருவத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நிலங்களில் காலத்தினை ஓட்டினேன். இருபதுகளின் தொடக்கத்தின் இனிமையை அறியச் செய்தது கோர்ஸிகா. கோர்ஸிகா மட்டுமன்று; நீயும்தான்; நீயும் நானும் இங்கு இருக்கமாட்டோமென்று நம்பிதான் விமான நிலையம் வரை நுழைந்தேன். இந்த விடுதியின் கார் ஓட்டுனர் பைகளை வாங்கிக் கொண்டு மார்த்தின் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது நீ நினைவுகளில் வரத்துவங்கினாய். பல்கலைக்கழக விடுமுறைகளில் நீயும் நானும் சேர்ந்து இந்த டி61 சாலையில் பலமுறை பயணித்திருக்கின்றோம். நம் கொண்டாட்டங்களையும் கூடல்களையும் ஊடல்களையும் இறுதியில் நம் பிரிவையும் கூட இந்த சாலை அறிந்துள்ளது.

             பச்சைவிழிகளுடன் குட்டையான மெல்லிய கேசமும் கன்னக்குழி சிரிப்பும் உயரமான உடலமைப்பும் வெளிறிய நிறமும் கொண்ட உன் காதலி வெரோனிக்கா என்னை அறைந்தது கூட இங்கேதான். அவளுக்குத் தெரியாது, நீ என் காதலன் என்று. நீயும் அதை தேவரகசியமாக வைத்துக்கொண்டாய். நாம் காதலித்த நாட்கள் அழிந்த கிரேக்க இதிகாசங்களில் ஏதேனும் ஒன்றாய் இருக்கக் கூடும். செர்ரிக்களை நறுக்கி விஸ்கியில் போட்டு பனித்துறுவல்களைச் சேர்த்து அருந்தும் பழக்கத்தினை நீயே கற்றுக்கொடுத்தாய். அன்றெல்லாம் மூன்று பெக்குகளில் உன்மீது சரிவேன். இன்று இது ஏழாவது பெக். ஒன்றுமே ஆகவில்லை.

             முதல்நாள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது பலரும் கோர்ஸ் மொழியில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டபோது நான் மட்டும் பிரெஞ்சில் அறிமுகம் செய்துகொண்டேன். இத்தாலியர்கள் கூட அதிகமாகவே இருந்தனர். ஆனால் பிரெஞ்சு பேச அப்போது ஆளில்லை. கோர்சிகாவின் கலாச்சார ஆராய்ச்சிகள், கிரேக்க புராணங்கள், லித்தியகாலங்கள், ரோமர்கள் என்று பாடங்களுக்குள் முடங்கிக்கிடந்தேன். கோர்சு புரிந்தாலும் பிரெஞ்சிலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். சிறிது நாட்களில் நீ எனக்கு பகுதிநேர விரிவுரையாளராக அறிமுகமானாய். அப்போது உனக்கு நான் எழுதிய காதல்கடிதங்கள் மிகுந்த மரியாதையுடன் எழுதப்பட்டிருக்கும். மார்த்தினியோ ரூஸோ என்று அறிமுகம் செய்து கொண்டு பாடங்கள் நடத்திக்கொண்டிருப்பாய். உண்மையில் நீ பாடம் நடத்தும்விதம் அசுவாரசியமானவை. அரைத்தூக்கத்திற்கு அழைத்துச் செல்வாய். ஒருநாள் உன்கேள்விக்கு ஏதோ பதில் சொன்னேன். உடனே பாராட்டி பெயர் கேட்டபோது இனானா மிலானி என்றேன். இனானா சுமேரிய தொல் இறைவி என்று அவள்குறித்து சிறிது நேரம் நீ  வகுப்பெடுக்க ஏன் பெயர் சொன்னோமென எண்ணுமளவிற்கு நித்திரை வந்தது.

             முதல்பருவத் தேர்வுகளில் என்னால் முடிந்தஅளவிற்கு நன்றாக எழுதி வகுப்பில் இரண்டாவதாக வந்தேன். அப்போதும் தனியாக அழைத்துப் பாராட்டினாய். அந்த தருணத்தில்தான் உன்மீது ஈர்ப்பு வரத்துவங்கியது. ஏனெனில் நீ அப்போது கோர்சுவிலோ இத்தாலியத்திலோ பேசாமல் பிரெஞ்சில் பாராட்டினாய். பிறகு ஒருநாள் தேநீர்விடுதியில் தனியாக உன்னைக் கண்டேன். ஓடிவந்து உரையாடத்துவங்கினேன். நன்றாக நினைவுள்ளது மார்த்தி, "எனக்கு கோர்சு மொழி கற்றுத்தருகின்றீர்களா மதிப்பிற்குரிய மார்த்தினியோ" என்று சம்பாஷனையைத் துவங்கினேன்.நீ உறக்கம் வரவைப்பாய் என்று தெரிந்தும் உன்மீது இருக்கும் குருட்டுத்தனமான ஆர்வத்தில் கேட்டேன்.

               ஓய்வுநாட்களில் நம் சந்திப்புகள் கற்றல்தொடர்பாக ஆரம்பித்தன. உன் அம்மாவின் பெர்சிய சாயல்தான் உன்னிடம் பெரிதாக நிறைந்திருக்கும். உன் அப்பா துணைப்பெயருக்காகவே இருக்கிறார் என்று நான் சுட்டியபோது "என் அம்மா நான் அப்பா போல நடந்துகொள்வதாகச் சொல்வாள்; என்றாய். உடனே நான் "உங்கள் அப்பாவும் பாடம் நடத்துகையில் உறக்கம் வரவைப்பாரா" என்று சற்று அத்துமீறிவிட்டேன். நீ விளையாட்டாய் பதிலுக்குத் தலையில் தட்டினாய். உன் ஆண்மை உனது பாவனைகளுக்கு என்னை ரகசிய ரசிகையாக மாற்றியது. ஆறரை அடி உயரத்தில் முகத்தில் நரம்புகள் தெரியுமளவிற்கு வெளுப்பாக இருப்பாய். அடர் மீசை யும் தேகத்தில் ரோமங்களும் கொண்டு முழுக்க பெர்சியனாகவே தெரிவாய். நீ சிரிக்கும்போது, பாவனைகளை மாற்றும்போதெல்லாம் கன்னங்கள் சிவக்கும். நீ விரிவுரையாளனாக இருப்பதற்கு பதிலாக குதிரையில் அமர்ந்து நகர்வலம் வருகின்ற படைவீரனாகியிருக்கலாம். ஆனால் உன் குரல் கொஞ்சம் பெண்மை மிக்கது. அதுதான் என் உறக்கத்திற்குக் காரணம். எனக்குப் பிடிக்காததும் உன் குரல்தான். ஆனால் பழகிவிட்டது.

            பல்வேறு விவாதங்கள் நடத்தியுள்ளேன். உன்னால் நான் கோர்சுவில் விவாதம் நடத்துமளவிற்கு வளர்ந்தேன். என் கழுத்தெலும்புப் புடைப்புகள் விரிய உன்னிடம் ஒருநாள் காரணமின்றி வம்பிழுத்துக் கத்தினேன். ஏனெனில் லூசியாவை அழுத்தமாகக் கட்டிப்பிடித்துப் பாராட்டினாய். நீ சாதாரணமாகவே செய்தாய். அவள் கண்களில் காதலைக்கண்டதும் மிகுந்த எரிச்சலுக்குள்ளானேன்.

மொபைல் அழைப்பு வருகிறது,

"ஹலோ... சொல்லுங்கள் வாஹித்"

"ஏய் இனா, சென்று சேர்ந்தால் அழைக்கமாட்டாயா?!... நீ நினைவுகளுக்குள் மூழ்கலாம்... உன் நினைவுகளுக்காகவே பிரத்தியேகமாக பத்து நாட்கள் தந்துள்ளேன்...ஆனால் என்னைப் பிரிவுற்றவனைப் போல உணர வைக்காதே"

"மன்னியுங்கள் வாஹித்...லவ் யூ"

"அவ்வவ்வபோது அழை, இனானா...இது உனக்கான காலம்... எனக்கு கடந்தகாலமென பெரிதாக இல்லை....உழைப்பிலேயே வீணாக்கியவன்...அதில் மனைவியைக்கூட தொலைத்தவன்... நீ அவ்வாறானவள் கிடையாது"

"அன்பே...இப்படிப்பேசாதே... உன் உழைப்பின் டாலர்கள்தான் எனக்கு இந்த விடுமுறையைப் பரிசளித்திருக்கின்றன...நீயும் உடன்வந்திருக்கலாம்...வாஹித்"

"இல்லை... இனானா...நான் வந்தால் நீ பாதி நிஜத்திலும் பாதி நினைவுகளிலும் தத்தளித்துக் கொண்டிருப்பாய்...வரும்போது நிறைவுற்றவளாக வா... அதுபோதும்...அடுத்த விடுமுறைக்கு இருவரும் சேர்ந்தே அலய்னாவுடன் ஆசியா பயணம் மேற்கொள்வோம்"

"நீ என் கடவுள் வாஹித்...நான் உன்னுடையவள் என்பதை மறக்காதே..."

"முத்தங்கள்...இனா...நீ என்னுடையவள் என்பதால் மட்டுமே உனக்கிந்த பயணம்...இப்போதே நள்ளிரவு ஆகின்றது...உறங்க முயற்சி செய்...கண்ணே"

"லவ் யூ வாஹித்"

                வாஹித் எத்தனை நல்லவன் மார்த்தி! நமக்கான நேரத்தினை அளித்திருக்கின்றான். உன் வெரோனிக்கா என் வாஹித்தின் நிழல்பக்கம் கூட நிற்க இயலாது. வாஹித் கிலானியை நான் துபாய் பயணத்தில் ஒரு தொழில்முனைவோர் விருந்தில் சந்தித்தேன். அவனது மனைவி சாரா ஒரு அமெரிக்கனுடன் காதல் வயப்பட்டு பிரிந்திருந்த காலமது. நானும் உன்னைவிட்டு வெகுதூரம் வந்திருந்தேன். எனக்கு நீ துரோகம் இழைத்ததாகவே அப்போது கருதினேன். வெரோனிக்கா மேத்யூ உன் முன்னாள் காதலி என்பதையும் அவள் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றதையும் நீ மறைத்திருக்கக் கூடாது மார்த்தினியோ. அவள் என்னை விலைமாது போல நடத்தினாள். அவளுக்கு நீ எழுதிய காதல் கடிதங்களை என் முன்னால் வீசி "பார், விலைமகளே...தற்காலிகப் பிரிவில் புகுந்து குளிர்காயப் பார்க்கிறாயா" என்று பல்கலைக்கழக வளாகத்தில் நின்று கூச்சலிட்டாள். அன்று பித்துப்பிடித்தவள் போல அவற்றையெல்லாம் பொறுக்கியெடுத்து கண்ணீருடன் வாசித்தேன். ஆம், இன்று என்னை அழைக்கின்ற அத்தனை வார்த்தைகளையும் வர்ணனைகளையும் அவளுக்கு எழுதியிருந்தாய். கண்ணாடித் துகள்களாகச் சிதறினேன். என் நீண்ட கூந்தலுக்குள் முகம் புதைத்துக்கொண்டு ஓரிரவில் "வானில் ஒரு நட்சத்திரத்தைக் காணவில்லை; அது இப்போது என்னுடன் இருக்கிறது; அதன் இருள்கூந்தலுக்குள் நான் முகம் புதைத்துக் கிடக்கின்றேன்" என்றாய். உன் நட்சத்திரம் இன்று இந்த வளாகத்தில் சிதறிக்கிடக்கிறது. நீ சார்தினியாவில் இருந்து நாளைமறுநாள் வருவாய். உன் வெரோனிக்கா என்னை நம்வீட்டில் இருக்கவிடமாட்டாள் என்றே கருதுகிறேன். ஒருவேளை துரத்தப்பட்டால் அஜாக்ஸியோ விமான நிலையத்தில் அருங்காட்சியக சிலைபோல காத்திருக்கின்றேன். இல்லையெனில் நூற்றிப்பத்து யூரோக்களில் கடல்உலவில் சென்று மூன்று பெக் வைன் அருந்தி இந்த அமைதியான கடலுடன் கலந்துவிட ஆசைப்படுகிறேன். இப்படியான மனநிலையில்தான் அன்றிரவு வீட்டிற்குச் சென்றேன்.

            ஆனால் வியப்பு! வீட்டில் நுழைந்ததும் வெரோனிக்கா ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக ரொட்டித்துண்டுகளைத் தின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து மன்னிப்பு கேட்டாள். என்னால் நம்பவே முடியவில்லை. "மிஸ். மிலானி, நீ ஒரு சிறுபெண், நான் அறியாமல் அவ்வாறு கோபித்துவிட்டேன், இன்றும் மார்த்தினியோ என்னைக் காதலிக்கின்றான். உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் என்னைக் கடந்தகாலமாக மட்டும் கருதியிருந்தால் உன்னிடம் நிச்சயம் தெரிவித்திருப்பான். நான்தான் பிரிந்தேன். அவன்மீது சந்தேகம் கொண்டேன். பிரிந்தேன்; அவனே என்னிடம் என்றேனும் என்மேல் துளிக்காதல் தென்பட்டால் வா வெரோனிக்கா என்றான். அவன் முகத்தில் காபியை ஊற்றிவிட்டு கிளம்பினேன். இன்று மன்னிப்பு கேட்டு இணையவந்துள்ளேன். இந்த ஒன்றரை வருடமும் வறட்டுப்பிடிவாதத்தால் தனித்திருந்தேன். ஓரளவிற்கு மேல் அவன் காதல்முன் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இப்போதும் நீ அவனைக் காதலித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனது காதல்தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. புரிந்துகொள்.நீ இந்த வீட்டிலேயே உனது ஆராய்ச்சிப்படிப்பு முடியும் வரை இருக்கலாம். மேற்கொண்டு படிக்கவோ பணிகளுக்கோ நான் உதவுகின்றேன். ஆனால் நீ அவன் காதலி இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள். இல்லையென்றால் என்றேனும் உனக்கிது பெரும்வலியை ஏற்படுத்தக்கூடும். மீண்டும் என்னை மன்னித்துவிடு இனானா" என்று சொற்களை மிக நேர்த்தியாகக் கோர்த்தாள். அவளது பச்சை விழிப்பார்வை என்மீது நஞ்சைப் பரவவிட்டதை உணர்ந்தேன்.

              பதில் கூறயியலாமல் "நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும் வெரோனிக்கா" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்தேன். மெத்தையில்  வீழ்ந்து கம்பளியைப் போர்த்திக்கொண்டு கதறியழுதேன். அந்த இரவு கடந்திட இறைவனை மன்றாடினேன். பல கூடல்களின் முடிவில் நாம் ஒன்றாக சுற்றிக்கொண்ட கம்பளி இன்று இன்னுமொரு உறைவாதையினை அளித்தது.

            உன்வீட்டில் தங்க ஆரம்பித்த நாட்களில் பனைமரங்கள் சூழ வீசும் குளிர்காற்றை மிகவும் விரும்பினேன். பனைமரங்களுக்கு நடுவிலிருந்து வரும் சூரியஒளி என்னை அழகாக்குவது போல உணர்ந்தேன். ஒருநாள் இருவரும் காலையில் பல்கலைக்கழகத்திற்குக் கிளம்பும்போது நீ காரை எடுத்துக்கொண்டு வெளியே நின்றாய். நான் சூரிய ஒளியில் நடந்துவருவதைக் கண்டு "தங்கத்தில் குளித்தவள் போல இருக்கிறாய்" என்று நெற்றியில் முத்தமிட்டாய். அந்த இளஞ்சூட்டுச் சூரியனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

         இதே டி61 சாலையில் உள்ள உணவு விடுதியில் நீயும் நானும் பன்றி இறைச்சித்துண்டுகள் பரப்பப்பட்ட ப்ரூஸ்கெட்டாவும், ஸ்பினாச் கிராஸ்தினியும் தெரிவு செய்து மதிய உணவை இந்தக் கடலை வேடிக்கை பார்க்கச் செய்து மென்றுகொண்டிருந்தோம். நான் மேலிருக்கும் வெண்ணெயில் வார்த்த இறைச்சித் துண்டுகளை மட்டும் தின்றுவிட்டு அடியிலிருக்கும் ரொட்டியை உன்னிடம் தந்தேன். என் கன்னத்தைக் கிள்ளி விளையாடியபடி நீ சுவைத்துக்கொண்டிருந்தாய். ஒருநாள் உன்வீட்டில் நீயே எனக்குப் பன்றி இறைச்சியினை லாவகமாக ஒரேவடிவங்களில் வெட்டி ஏதோ மாயங்கள் செய்து வறுவலாக்கித் தந்தாய். இரத்த ரோஜா நிறத்தில் அத்துண்டுகள் பளபளப்பாக பொறிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு துண்டாக மெல்லும்போது இறைச்சியின் கொழுப்பு நாக்கில் படிய ஒரு மென்மையான கதகதப்பினைத் தந்தது. கண்ணை மூடிக்கொண்டு நான் ரசித்து ருசித்தபோது "உனக்கு இது இவ்வளவு பிடிக்குமா?" என்றாய். "பல நகரங்களில் இதேபோன்ற இறைச்சிகளைச் சுவைத்துள்ளேன், மார்த்தினியோ...ஆனால் இந்த இறைச்சித் துண்டுகளின் சுவையாக உன் காதல் நிறைந்துள்ளது" என்றேன்.

         நம் பிரிவிற்குப் பின் நான் பன்றி இறைச்சியினை சுவைக்கவேயில்லை. வாஹித் பன்றியிறைச்சி உண்ணமாட்டான். நானும் அவனுடன் இணைந்துகொண்டேன். இன்று இந்நகரத்திற்கு வந்துகூட காய்கறி சாலட்களையும், மாட்டிறைச்சி பீஸாக்களையும் தின்றேன். கண்கள் முழுவதும் பயண அசதியும் நித்திரையும் தேங்கிநிற்கின்றன. இந்த விடியல் மீண்டும் உன்னை நினைவுபடுத்துவதாகட்டும்.

மறுநாள் காலை 11 மணி

                  ரொம்ப நாட்களுக்குப் பிறகு அசதியில் நிறைவாக தூக்கம் கிட்டியுள்ளது. நல்ல உறக்கம் என்பது மார்த்தினியோவின் கைகளுக்குள்ளும் பின்னர் வாஹித்தின் கைகளுக்குள்ளும் இருக்கின்றது. வாஹித் தனது தோல் தொழிற்சாலை வணிகம் தொடர்பாக வெளியே தங்க நேர்ந்திடும் சமயங்களில் எல்லாம் தலையணையில் தனிமையின் கனத்தினை உணர்வேன். கிரீன் டீ அருந்திக்கொண்டே காதல் கதையினைக் குறிப்புகளாக எழுதுவதும் அழகிய உணர்வாக இருக்கின்றது. வாஹித்திடம் பேசவேண்டும்போல உள்ளது. ஆனால் சான் ஃபிரான்ஸிஸ்கோ நேரப்படி அதிகாலை மூன்று மணி இருக்கும்.

             வாஹித்தை எழுப்பினால் கூட உடன் உறங்கும் அலய்னாவும் எழக்கூடும். அவள் தன் தந்தையுடன் உறங்குவதில் அத்தனை விழைவு கொள்கிறாள். நான்கு வயதில் அம்மாவை விமான நிலையம் வந்து அழாமல் முத்தமிட்டு விடைகொடுக்கும் அளவிற்கு வாஹித் அவளைப் பழக்கியிருக்கிறான். என் வயிற்றில் இருந்தபோதே அவள் வாஹித்தின் குரலுக்கு அசைவு கொடுப்பாள். வாஹித் முத்தமிட்டால் துள்ளுவாள்; வயிற்றிலேயே தந்தையுடன் காதல் உடன்படிக்கை செய்துகொண்டவள். பிறந்ததும் வெள்ளைடவலில் பூங்கொத்து போல கொண்டு வந்து தந்தார்கள். என்னைப்போலவே அடர்பழுப்பு நிறக் கண்கள்; கொஞ்சமாகப் பட்டுநூல் போல நெற்றி படர்ந்த பழுப்பு முடிகள். வாஹித்தின் அதே வெள்ளை நிறமும் அவனது மூக்கும். டவலை அழுத்தினாலே சிவந்தாள். வெள்ளை ரோஜாவிற்குக் கைகால்கள் முளைத்தது போல துள்ளிக்கொண்டிருந்தாள். புருவத்தை உயர்த்தி அவள் மொழியில் தந்தையைக் கேட்டாள். வாஹித்திடம் "இவள் நான் உனக்கு அளிக்கும் பரிசு" என்று கண்ணீர் வர பூரிப்புடன் தந்தேன். கைகளில் வாங்கியதும் வாஹித்தைப் பார்த்து குமிழ்வாயால் சிரித்தாள்; தன் பிஞ்சு விரல்களால் அவன் மூக்கைப் பிடித்தாள். மீசையைப் பாதத்தால் தொட்டு கூச்சமாகி அழத்துவங்கினாள். என் முலைகள் இரண்டையும் கனமாக உணர்ந்தேன். ஆம், அவளுக்காக பால் சுரக்கத் துவங்கியது. அந்த சிறிய வாயினால் முலைக்கண்ணைக் கவ்வி தேங்கிய கண்ணீருடன் பாலை உறிஞ்சத் துவங்கினாள். வாஹித் என் தலையை வருடிக்கொடுத்து "அவள் உறிஞ்சுவதை என்னால் உணர முடிகிறது" என்று என்னை அணைத்துக் கண்ணீர் சிந்தினான். இரானிய மொழியில் அலய்னா என்றால் இளவரசியாம். ஆம், வாஹித்தின் இளவரசி, என் காதல் சாம்ராஜியத்திற்குக் கிடைத்த இளவரசி. இப்போது யார் பெயர் கேட்டாலும் இளவரசி "அலய்னா கிலானி" என்று பெருமையாக முகத்தை  வைத்துக்கொண்டு கிலானியுடன் சேர்த்துச் சொல்கின்றார்கள். கொஞ்சநேரம் வீதிகளிலும் கடற்கரையிலும் செலவளிக்க விழைகிறேன்.

                  சிட்டாடல் கடற்காற்றினை சுவாசித்துக்கொண்டு ஒருவித மர்மத்தினைத் தன்னுள் தேக்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் கடல்உலவுகளில் விருப்பம் கொள்கின்றனர். சுற்றுலாவில் கூட தங்களது அந்தஸ்த்தை ஏற்றிக்காட்ட முயல்கின்றனர். சொகுசுக்கப்பல்கள் வராத காலத்தில் சிட்டாடல் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இருந்தது. மார்த்தினியோ, நீயும் நானும் அந்த நீலப்படிகக் கடலில் நின்று இதழோடு இதழ் கோர்த்து முத்தமிட்டதை ஒரு ஐம்பது பேரேனும் பார்த்திருப்பார்கள். இன்று அதிகபட்சம் ஒரு பதினைந்து பேர் இருக்கின்றனர். அவர்களும் புகைப்படம் எடுப்பதில் முனைப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நீலத்தின் தூய்மைக்குள் கலந்திட ஒருவருக்கும் விருப்பமில்லை.  இங்குள்ள கூழாங்கற்கள் என் பாதங்களை நலம்விசாரித்துக் கொண்டன. கடலில் தனியாக இறங்கி நின்றேன். இடையளவு நீர் என்னை ஏந்திக்கொண்டது. கொஞ்சமாக உள்ளிழுத்தது; நீலத்துடன் முழுதாகக் கலந்து ஆழ்ந்திடும் அளவிற்கு ஆர்வம் ஏற்பட்டது. உடலில் சிலிர்ப்பு தோன்றியது. ஒருவித பித்துநிலைக்குச் செல்வதாக உணர்ந்து மெதுவாக வெளியே வந்தேன். உடைமாற்றிக்கொண்டு டி111ஏ சாலையில் நடக்கத் துவங்கினேன். சன்கிளாஸினால் கண்கள் சோர்வடையவில்லை. கடல்சார் உணவகத்தில் ரொட்டித்துண்டுகளும் இறால்களையும் உண்டேன். மணி மாலை 4 ஆகிறது. வாஹித் எப்படியும் தொழிற்சாலைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பார்.

"வாஹித்"

"சொல்... இனானா....இப்போதுதான் உன்னைப் பற்றி நானும் அலய்னாவும் பேசிக்கொண்டிருந்தோம். நீ முத்தமிடும்போது உனது பிங்க் லிப்ஸ்டிக்கினால் மட்டுமே அலய்னா கன்னம் சிவக்கிறதாம். என்னிடம் முத்தம் வாங்கிவிட்டு கண்ணாடிக்கு இழுத்துச்சென்று பாருங்கள் அப்பா சிவக்கவில்லை என்கிறாள்"

"உங்கள் அழுத்தமெல்லாம் என்னிடம் மட்டும்தான்...அம்மாவின் கன்னம் சிவக்குமே என்று பதில் சொல்லி இருக்கலாமே"

"கள்ளி, அலய்னாவுக்கு நான் மென்மையானவன்"

"ஆனாலும் உங்கள் குணம் அவளிடம் இருக்கின்றது...நீங்கள் கழுத்தில் கடித்தால் அவள் வந்து அம்மா முத்தம் தருகிறேன் என்று சொல்லி கன்னத்தில் கடித்து வைக்கின்றாள்...முரட்டுபெண்"

"உன்னுடைய கடிகளும் கீறல்களும் எதில் சேர்த்தி? கிளம்பும் அன்று என் முதுகில் ஏற்படுத்திய கீறல் இரண்டு நாட்களாகியும் எரிகிறது...அரக்கியே"

"நல்லது...இன்று தொழிற்சாலை செல்லவில்லையா...இல்லை...இளவரசியுடன்தான் என் பொழுதுகள் கழியவேண்டுமென்பது இளவரசியின் ஆணை"

"ஆம், என்னைத் தொழிற்சாலைக்கு அனுப்பி அலுவல்களை முடிக்கச் செய்து அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற கணவன் தானே நீ...அவள் உன்னைக் கெடுக்கிறாள்"

"ஆம், அம்மாவை போலவே"

"அவளின் குறும்புகளுக்கு நீயும் பொறுப்பு"

"அது இருக்கட்டும், இன்று என்ன செய்தாய் என் கண்மணியே"

"இன்று உன் தீயமனைவி கடற்கரைக் கூழாங்கற்களிடம் வாஹித்தை மறந்தும் காதலித்து விடாதீர்கள் என்று வகுப்பெடுத்து வந்தாள்"

"ஏன் அவ்வாறு?"

"என்னைவிட உன்னை அதிகமாக யாரும் காதலித்துவிடக் கூடாதென்று"

"அலய்னாவிடமுமா போட்டிக்கு நிற்பாய்?"

"ஆம், சொல்லி வை...அந்த கொடுங்கோல் ஆட்சி செய்யும் இளவரசியிடம்"

"இதோ, மாட்சிமை பொருந்திய இளவரசி அவர்களே ஓடி வருகிறார்கள்...உன்னை ஆணையிட"

"ஏய் மில்லானி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்"

"இன்னும் உனக்கு இனானா வரமாட்டேங்கிறதே  இளவரசி... எங்கே...சொல்...இனானா"

"ஈஆன்னா..."

"இ..."

"ஈ..."

"னா"

"ஹா"

"னா"

"ஈஹாஆன்னா"

"போதும்... அலய்னா...நான்கு வருடங்களாக என் கையில் இருக்கிறாய்...என் பெயர் சொல்ல முடியவில்லை...மற்றதெல்லாம் தெளிவாகப் பேசு"

"போதும் மில்லானி... நீ பெயர் கற்றுக்கொடுப்பதாக இருந்தால் நீ அங்கேயே இருந்துகொள்...அப்பாவிடம் நான் வேறு மில்லானியை வாங்கச் சொல்கின்றேன்"

"இறைவா...பொறுத்தருள்க குட்டி இளவரசியே...அலய்னாவிற்கு என்ன வேண்டும்?"

"நிறைய முத்தங்கள் வாங்கி வா...மில்லானி...அப்புறம் அப்பா ஒரு கதை சொன்னார்...அதில் வரும் தேவதையை வாங்கி வா..."

"உனக்கெதற்கு தேவதை"

"அதாவது வேலை செய்ய"

"இன்னும் நூறு தேவதைகள் வந்தாலும் உனக்கு போதாதே"

"சரி, அப்பாவிடம் பேசு... நான் பூக்களிடம் பேசப் போகிறேன்"

"நல்லது,"

"வாஹித், அதென்ன தேவதைக்கதை?"

"சான்பிரான்ஸிஸ்கோ வா...இரவில் சொல்கின்றேன்...அலய்னாவிற்குத் துணையாக குட்டி தேவதை வேண்டுமாம்"

"அடுத்த விமானத்தில் வரவா? உன் காதலை மிகவும் தேடுகின்றேன்...அல்லது அலய்னாவுடன் கிளம்பி நீயாவது வா"

"அட, உன் பயணம் முழுதாக முடிய வேண்டாமா? இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன... குறிப்புகள் என்னாவது?"

"இந்த நொடியில் அது தேவையற்றதெனக் கருதுகிறேன் வாஹித்"

"அடுத்தநொடியில் தேவையானதாக இருக்கலாம்...மொபைலை வைத்துவிட்டு குறிப்பெழுதச் செல் சிறுக்கியே"

"என்னை வதைக்கிறாய் வாஹித்"

"லவ் யூ இனானா...நான் அழைப்பைத் துண்டித்துவிட்டேன்"

"லவ் யூ வாஹித்"

         துபாயில் மன்ஸில் டவுன் டவுணில் ஐந்தாவது தளத்தில் அறைக்குள் வெறுமை சூழ்ந்ததால் வெளியில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். அவன் தனது தொழில்முனைவோர் சந்திப்பு முடிந்து சகாக்களுடன் பேசிக்கொண்டு வரும்போது என்னை உற்று நோக்கினான். நான் வெளியே ஒளிர்ந்துகொண்டிருந்த வண்ணமின்விளக்குகளை நோக்கியபடி நடந்தேன். அவன் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றதை உள்ளம் உணர்த்தியது. இரவில் வியா வெனெட்டோவில் ஒரு மூலையில் அமர்ந்து நியோக்கி கர்கன்ஸோலா மற்றும் ஹவுஸ் வைன்னும் ஆர்டர் செய்தேன். கூரிய மூக்கும் பச்சை நரம்புகள் மிளிர அழகாகக் கலைத்துவிடப்பட்ட முடியுடன் ஆறரை அடி உயரத்தில் ஒருவன் என்முன் வந்து அமர்ந்தான். ஆம், அப்போது உற்று நோக்கியவன்தான். "நான் வாஹித் கிலானி" என்று கை கொடுத்தான்; நானும் மிலானி என்று அறிமுகம் செய்துகொண்டு கை குலுக்கினேன். "தனியாகவா வந்துள்ளீர்கள்? உங்களைப் பார்த்தால் அர்மேனியர் போல் தெரிகிறது " என்றான். மென்னகையுடன் சற்றே கூச்சத்தை வெளிப்படுத்தி பிரெஞ்ச் தேசத்தவள் என்றேன். "இல்லையில்லை, பெரிய நெற்றி, புருவமற்ற பெருவிழிகள், நீள்கூந்தல், இதெல்லாம் அர்மேனிய சாயல்" என்றான்.

            உண்மையில் எனக்கு அம்மாவைப் பற்றிய விவரம் தெரிந்ததில்லை; அப்பாவிடம் கேட்டதுமில்லை. அப்பாவின் காதலி அப்பாவிற்கு உதவியாளராக இருந்தாள்; அவள் இறுதிவரை அப்பாவைக்கூட திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த அம்மையார் என்னைச் சிறுவயதில் ஓய்வுநேரங்களில் கொஞ்சிக்கொண்டிருப்பார். எனது தனிமையை எடுத்துக் கொண்டவர்களுள் முக்கியமானவர். அப்பா எங்கிருந்தாலும் வங்கிக்கணக்கில் யூரோக்கள் விழுந்துகொண்டே இருக்கும். நானும் பகட்டாக செலவு செய்பவள் கிடையாது. இவ்வளவு சிந்தனையும் ஓடி திடீரென வியா வெனெட்டோ டேபிள் முன் அமர்ந்திருக்கும் நினைவு வந்தது. அவன் கன்னம் சிவந்த புன்னகையுடன் என்னவாயிற்று என்று கேட்டான். ஒன்றுமில்லை என தலையசைத்துவிட்டு வைன் அருந்தத் துவங்கினேன். அன்றைய இரவில் அவனது கதைகளைக் கேட்கத் துவங்கினேன். தலையசைப்புகளையும் "ஹ்ம்"களையும் கடந்து பெரிய மறுமொழிகள் நான் சொல்லவில்லை. அவனது தோல் பதனிடும் தொழிற்சாலை நஷ்டத்தை நோக்கி நகர்வது குறித்தும் இருந்தும் காதலியின் நினைவை மறக்க இங்கு வந்துள்ளதாகவும் சொல்லியபோதுதான் நிஜமாகவே மகிழ்ந்து நானும் அந்த துரோகியை மறக்கவே இங்கு வந்தேனென்று உன்னுடனான மோசமான அனுபவங்களைச் சொல்லினேன். மிகுந்த ஒலியுடன் சிரித்தான்; என்னைச் சிறுமியென்று சொல்லி கேலி செய்தான். இருவரும் பேசிக்கொண்டே அவரவர் அறைகளை நோக்கிக் கிளம்பினோம்.

              அறையில் பொன்னொளிர் விளக்குகளில் நிலைகண்ணாடியில் அழகாகத் தெரிந்தேன். ஆனாலும் விழிகள் சோகத்தை ஏந்திக்கொண்டிருந்தன. பின்னர் கேமிசோலும் பாக்ஸரும் மாற்றிக்கொண்டு பால்கனியில் அமர்ந்து இருளையும் அதைத் தோற்கடிக்க முயலும் நகரத்தின் ஒளிவீச்சினையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் நகரத்தின் ஒளி சலிப்பூட்டி இருளைத் தேடத் துவங்கினேன். தலை வலிக்கவும் தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நித்திரையைத் தேடினேன். அறையின் அழைப்புமணியை யாரோ அழுத்தினார்கள்; எழயியலாமல் புரண்டு படுத்தேன்.

              மாலை நான்கு மணிக்கு ஒருவழியாக எழுந்து குளித்துவிட்டு வாஹித் அறைக்குச் செல்ல கதவைத் திறந்தால் வாஹித் வாசலில் நின்றான்.

"குட் மார்னிங், உனக்கு இப்போதுதான் விடிந்ததென்று அறிந்தேன்"

"ஹாஹாஹா...குட்  ஈவினிங் வாஹித்...உங்களுக்கு இது மாலைநேரம்தானே"

"அப்படித்தான் நினைக்கிறேன் மிலானி"

"வெகுநேரம் தூங்கிவிட்டேன்...நடுவில் வந்து எனக்காய் காத்திருந்தீர்கள் என்றால் மன்னிக்க வேண்டும்."

"உள்ளை அழைக்காமல் வாசலில் மன்னிப்பு கேட்டு திருப்பி அனுப்புவதாய் உத்தேசமா?"

"மீண்டும் மன்னிக்க, வாருங்கள்"

       வேலைப்பாடு மிக்க நாற்காலியில் அவன் அமர்ந்திருந்த தோரணையில் ஓர் பேரரசனாகத் தெரிந்தான். பொன்னிற கோட் சூட் அவனுக்கு மிகப் பொருத்தமானதாய் இருந்தது. அறைக்கு தேநீர் கொண்டு வரச்செய்து சாதாரண உரையாடலாகப் போய்க்கொண்டிருந்தது.

"நாளை என்ன திட்டம் மிலானி"

"தெரியவில்லை"

"அப்படியானால் என்னுடைய மனைவியாக என்னுடன் சான் பிரான்சிஸ்கோ வரயியலுமா?"

"வாஹித், உங்களின் நகைச்சுவை உணர்வு என்னை வியப்பு கொள்ளச் செய்கிறது"

"நான் நிஜமாகவே கேட்கின்றேன்...குறைந்தபட்சம் என்னுடைய காதலியாக வா...பிடித்திருந்தால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்... இதோ விமானச்சீட்டுகள் கூட தயாராக இருக்கின்றன பார்"

"என்ன சொல்கின்றீர்கள் வாஹித்?! நான் யோசிக்க நேரம் வேண்டும்"

"நாளை காலை 9:10இற்கு எமிரேட்ஸ் விமானம் தயாராக நிற்கும்...நான் இங்கிருந்து காலை ஏழு மணிக்கு அறையை காலை செய்கிறேன்...அதுவரை தாராளமாக யோசிக்கலாம்... உன்னை ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டேன்...என்னை நம்பமுடியுமென்றால் மட்டும் என்னுடன் வரலாம்.... இரவு முழுவதும் உன் பற்றிய சிந்தனை... அவளை முழுதாக என்னுளிருந்து மழுங்கச் செய்துவிட்டாய்...நல்லதொரு துணையாக அமைவாய் என்ற நம்பிக்கையில்தான் இத்தகைய அசட்டுத்தனம் செய்தேன்...மன்னித்துவிடு... வரமுடியவில்லையென்றால் நல்லதொரு தோழியாக வழியனுப்ப வரவேண்டுமென்பது இந்த நண்பனின் கோரிக்கை"

         சலனமில்லாத தெளிவான பேச்சு என்னைப் பரபரப்பிற்குள்ளாக்கியது.

"ஓரிரவில் உங்கள் வாழ்க்கைத்துணையாக என்னை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?"

"இதோ பார் மிலானி... நேற்றிரவு நீ சொன்ன உன் அனுபவத்தில் உன் எதிர்பார்ப்பு காதலாக மட்டுமே இருந்தது; சாரா என் தொழிலை கவனித்து வந்தாள்; சற்று நான் நஷ்டமடைகின்றேன் என்று தெரிய வந்தபோது திறமையற்றவன் என்று ஒரே வார்த்தையில் என்னை தூக்கி விசிவிட்டு ராபர்ட்டுடன் கைகோர்த்தாள்.உண்மையில் அன்றிரவு நான் தற்கொலைக்கு முயன்றேன்.அல்லாஹ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு என்னைக் கைவிட்டதாகவே உணர்ந்தேன். அல்லாஹ்விடம் பிரிவை ஒப்புக்கொள்ள முடியாமல் கதறி மன்றாடினேன். மீட்பவனும் அவன்தானே, மிலானி... நேற்று அவன் என்னை மீட்டதாக உணர்ந்தேன்" என்றான்.

        மறுநாள் காலையில் வாஹித்துடன் விமானம் ஏறினேன். அன்றிரவு மார்த்தினியோ என்கிற கையாலாகா துரோகியிடமிருந்து என்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல வந்த கந்தர்வனாக நான் வாஹித்தை உணரவில்லை. கந்தர்வனில்லை; ஆனால் தற்கொலை மனநிலையில் இருந்த எனக்கான மீட்பனாக உணர்ந்தேன். அன்று உன்னை கையாலாகா துரோகி என்று உறுதிப்படுத்திக் கொண்டேன் மார்த்தினியோ. உன்மீதான நல்ல அபிப்பிராயங்களை வாஹித் எப்போதும் சுட்டிக்காட்டுவான். எனினும் துரோகி எனும் சொல்லை மூளை நாளங்கள் அழிக்க மறுக்கின்றன. எட்டு நாட்களும் வாஹித் அற்ற தனிமை என்னை நரகத்தினுள் தள்ளிவிடுமென்று அச்சப்படுகிறேன். முதல் காதல் எனும் இக்குறிப்புகளை இந்த நீலம் பரவிய கடலில் விட்டுச்செல்ல எண்ணுகின்றேன். அல்லது இந்த முதற்காதலை அஜாக்ஸியோவின் குப்பைத்தொட்டி ஏதேனும் ஏந்திக்கொண்டிருக்கலாம். எழுத்துகள் மலினமானவையல்ல மார்த்தி, உன் காதல் மலினமானது.  உறங்க இயலாத தனிமையிலும் உன் நினைவுகள் கொந்தளிக்கச் செய்கின்றன.

              வெரோனிக்கா என்ன செய்து கொண்டிருப்பாள்? என்னை நினைவுறுவாளா? நினைவுறும் அளவிற்கு ஏளனம் செய்தவளாயிற்றே; வாடகை கூட வேண்டாம்; அறைத்தோழியாக இருந்துகொள்ளலாம்; உன் பேராசிரியரிடம் சந்தேகங்களுக்குத் தீர்வுகளும் கேட்கலாம்; இதுபோன்ற சொற்றொடர்களால் தன்னைப் பெருந்தன்மை கொண்டவள் போல்  காட்டிக்கொண்டாள். நீ என்னை நினைப்பதற்குக்கூட பயப்படுகின்ற கோழையாயிற்றே. வெரோனிக்காவிற்குத் தெரிந்துவிடுமோ என்று நிம்மதியற்று இந்தப் பொழுதினைக் கழிப்பாய். மெத்தையில் வீழத் தோன்றுகிறது. பிறகு எழுதுகின்றேன்.

            விமான நிலையத்தில் மோதிரம் மாற்றி சான்பிரான்ஸிஸ்கோவில் வாஹித்தை கரம்கொண்டு காலங்கள் ஓடியதே தெரியவில்லை. மீண்டும் இந்த கடற்கரைக்கே வந்தமர்கின்றேன். மீண்டும் உணர்வெழுச்சியில் இந்தக் குறிப்பேடைக் கடலில் வீசிவிட்டு அடுத்த விமானத்தில் சான் பிரான்ஸிஸ்கோ செல்ல விடாய் கொண்டுள்ளேன். எட்டுநாட்கள் வரை பொறுத்திருப்பது என்பது இயேசுவின் உள்ளங்கைகளில் அடிக்கப்பட்ட ஆணிகள் மீண்டும் எனக்கு பரிசாய் கிடைப்பதைப் போன்ற உணர்வு எஞ்சுகின்றது. ஏன் இரண்டாம் காதலென்று வாஹித் என் கதாநாயகனாகக் கூடாது? முதல் என்பதற்காக மட்டும் அக்காதல் எழுதப்படவேண்டுமென்பது சட்டமில்லை. நான் வாஹித்தை மட்டுமே காதலிக்கின்றேன் மார்த்தினியோ. இந்த கசப்பான குறிப்புகள் நிறைந்த பக்கங்கள் தீயில் பொசுங்கிட வேண்டும். இந்த கடல்நீர் இவற்றை அள்ளிக்கொண்டு போகாதா? நீலம் நிறைந்த இனிமையை கசப்பால் நிறைக்க விழைவில்லை. டி61 சாலையின் எந்த குப்பைத்தொட்டியை இந்தக் குறிப்பேடு அலங்காரம் செய்யப்போகிறதென்று தெரியவில்லை.

          "ஏய் இனானா?"

            பழக்கப்பட்ட ஆணின் குரலெனத் திரும்பி நோக்கினாள். அங்கே மார்த்தினியோ அவனுக்கான வழக்கமான அழகியல் அடையாளங்களின்றி நின்றுகொண்டிருந்தான். குறிப்பேடையும் பேனாவையும் பையில் வைத்துக்கொண்டு அவனை நோக்கி எந்த உணர்வுமின்றி நடந்தாள்.

"இனானா, கடற்கன்னி போல ஆச்சரியம் ஊட்டுபவளாய் இருக்கின்றாய். உன்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2021 11:57

May 17, 2020

இறுதி நெருப்பு - சிறுகதை


                                                               இறுதி நெருப்பு"தொடையிலிருந்து கையை எடு இழிமகனே, இல்லையென்றால் வோட்கா போத்தல் உன் கேவலமான தலையில் சிதறடிக்கப்படும்" என்று தியா கத்தினாள். மாறன் "கூல், மிஸ்.தியா டிஸோஸா, உனக்கு பழக்கமானது என நினைத்தேன்" என்று விலகி எதிரே அமர்ந்தான்.கண்டோலிம் கடற்கரை கடலிலிருந்து பார்க்க ஆங்காங்கே ஒளிரும் மின் விளக்குகளால் மின்மினிப்பூச்சிகள் கூட்டமாக ஒளிரும் புதரெனக் காட்சியளித்தது. அரேபியக் கடலின் அலைகள் காதலியின் கழுத்தை வருடுவதைப் போல கரையை மென்னலைகளாக வருடிச்சென்றன. கடலின் பாசி வாசனையும் குளிர்காற்றும் இரவின் வாசனையாக உருமாறிச் சுழன்றடித்தன. 
 பதினைந்தடி  நடந்து சென்று அலையில் கால்நனைக்கும் தூரத்தில் தியாவும் மாறனும் பிங் வோட்கா போத்தல், நறுக்கிய அன்னாசித் துண்டுகள், ஆப்பிள் சாலத், ரவா மீன் கறி சகிதம் அமர்ந்திருந்தனர். மாறன் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முதுகலை மானுடவியல் படித்துவிட்டு போட்டோகிராஃபி என்று சுற்றித்திரியும் உயர்நடுத்தர வர்க்க இளைஞன். தியா டிஸோஸா கார்மெல் பெண்கள் கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு வளரும் கொங்கணி எழுத்தாளராக கதைகள் எழுதிவருகிறாள். அதுபோக கண்டோலிமில் நடுத்தரவர்க்க சுற்றுலா பயணிகளுக்காக மதுவிடுதி நடத்துகிறாள். 
 மூன்று நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து கேமராவுடன் கோவாவிற்கு கிளம்பிய மாறன் தியாவின் மதுவிடுதியில் மது அருந்திவிட்டு வலிய நட்புபாரட்டத் துவங்கியிருந்தான். பாரிலேயே அவளுக்கு உதவிகள் செய்துகொண்டு கடற்கரையில் அவளை விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அணுக்கமாக அணுக அத்தனை முயற்சிகளையும் எடுத்தான். அவளும் அவன் செய்யும் வேடிக்கைகளை ஓரளவிற்கு அனுமதித்தாள். இன்று மூன்றாம்நாள், அவளது குடும்பம் போன்ற தனிப்பட்ட உரையாடல்களை வலிய தவிர்த்துவந்தாள். மாறனுக்கு தியா பார் வைத்திருக்கும் இளம் கொங்கணி எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஒன்றும் தெரியாது. ஆனால் மாறன் தன் வீட்டு டாய்லட்டில் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸின் நிறம் வரை அவளிடம் ஒப்பித்துவிட்டான். 

 விலகி அமர்ந்த மாறனிடம் சிறிது நேரம் கழித்து ஒரு மிடறு வோட்கா அருந்திவிட்டு தியா கேட்டாள், "ஏன் கொங்கணி பெண்கள் அனைவரும் வேசிகள் என்று நினைக்கிறீர்கள்?" மாறன், "தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய், அவ்வாறில்லை" என்று தலைகுனிந்தான். "பிறகேன் தொடையில் கைவைத்தாய் மூடா? இதைப்போல உன் ஊர்ப்பெண்ணிடம் நடந்துகொள்வாயா?" என்றாள். முனகலாக "அவர்கள் உன்னைப்போல உடையணிந்துகொண்டு பார் நடத்தவில்லை" என்று முகத்தைத் திருப்பினான். தியா சற்று அழுத்தமான குரலில் "ஆமாம், வாயில் துணியைத் திணித்துக்கொண்டு இருட்டுக்குள் கால் விரிப்பவள்கள்" என்றாள். மாறன் எழுந்து மணலை உதறி "நீ கேவலமாகப் பேசுகிறாய்" என்றான். தியா அன்னாசித் துண்டை எடுத்து வாயில்போட்டுக்கொண்டு நிமிர்ந்து "உன் எண்ணங்களை விட கேவலமானதில்லை" என்றாள். 

 மாறன் தரைவிரிப்பில் மணல் சிதற நடந்தான். அமர்ந்திருந்த தியா கத்தினாள், "தெருவோரப் பிச்சைக்காரியை புணரத் தேடிச் செல்லும் கேவலமான புகைப்படக்கலைஞன், உன் கேமரா நாயைக் கூட விட்டுவைக்காது". போனவேகத்தில் கோபத்தில் திரும்பி வந்து அடிக்கப்பாய்ந்தான். ஆங்காங்கே அமர்ந்திருந்த ஜோடிகள் இக்காட்சியைப் பார்த்தனர். சிரித்தபடி சியர்ஸ் சொல்லி அதிர்வின்றி வோட்காவை விழுங்கினாள். அவளின் பயமின்மை அவனுக்கு இன்னும் அவமானமாக இருந்தது. முழந்தாளிட்டு விரிப்பில் கண்ணீருடன் அமர்ந்தான். "நீர் குடித்து நிதானமாகு" என தண்ணீர்போத்தலை அவனிடம் நீட்டினாள்.  மடமடவென சட்டை நனைய விழுங்கிவிட்டு அமர்ந்தான். கடலலைகளின் இரைச்சல் அவர்களின் அமைதியை சமன் செய்தது. 
 மெல்லிய முறுவலுடன் "நீ என்னை முயற்சி செய்கிறாய் என்று முதல்நாளே தெரியும், எனக்கும் உன்னைப் பிடிக்கும், ஆனால் உன்னுடைய இந்த மலின எண்ணங்களைக் கிடையாது. நேற்று அந்த பிரெஞ்ச் கிழவன் வாயில் நீர் சொட்ட என்னை கவனிக்கிறான் என்றதும் நீ என்னை கேபினில் அமரச்சொல்லிவிட்டு மதுவும் உணவும் அவனுக்குப் பரிமாறினாயே, அப்போது பிடித்தது. சிறிது நேரமும் முன்பு நீயும் அந்தக் கிழவனாக மாறிவிட்டாய், அவ்வளவுதான்" என்றாள். அவன் "ஆனாலும் இந்த சப்பை மூக்கிற்கு இவ்வளவு கோபம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை." என்று சிரித்தான். "ஆனால் எங்கள் பெண்கள் வரை வசைபாடிவிட்டாய்", "அது உலக வழக்கம்தான்" என்று அவன் தோளைத் தட்டினாள்.   ராவா மீன் துண்டை கடித்துவிட்டு " போத்தலால் அடிக்கமாட்டாய் என்றால் ஒன்று சொல்கிறேன்,  இந்தத் துண்டு உன் உதட்டைச் சுவைப்பது போல இருக்கிறது" என்றான். தியா "என் உதட்டை எப்போது சுவைத்தாய்?" என இதழ் சுழித்தாள். "கற்பனையில், உதட்டை மட்டுமல்ல" என்று கண்ணடித்தான்.

 "இதுவரை எத்தனை இளம்பெண்களை வீழ்த்தியிருப்பாய்?"
 "அதென்ன இளம்பெண்கள்? ஏன் என்னால் பெண்மணிகளை வீழ்த்தமுடியாதா?"
"இல்லை முடியாது. பெண்மணிகளுக்கு உன் இனிய சொற்கள் தேவையில்லை. அவர்களுக்கு உன் ஜாக்கிக்குள் இருக்கும் பொருள் சரியாக வேலை செய்தால் போதும். என்னிடம் பேசுவதைப் போல் அவர்களிடம் வளவளவென பேசினால் உன் வாயை அடைக்க தமது பிரம்மாண்ட முலைகளைத் திணித்துவிடுவார்கள்"
"ச்சீ, நீ மிக மோசமாகப் பேசுகிறாய். மோசமான ஆணை விடவும்" 
"உன்னிடம் மிகுந்த அளவாகப் பேசுகிறேன்" என்று கண் சிமிட்டினாள். மஞ்சள் ஒளியில் அவள் பெரிய கண்களின் நீண்ட இமைப்பீலிகள் பறக்க எழும் குருவியின் சிறகைப் போல விரிந்து விரிந்து உயர்த்தின. இத்தனை அழகான விழிகள் தன்னுடன் படித்த உமாவுக்குக் கிடையாது. தன் அம்மாவின் கண்களை அழகென நினைத்திருந்தான். அடர்புருவங்களுடன் அழகான பெரியகண்கள் அவனுக்குக் குழந்தையிலிருந்து பழக்கப்பட்ட பார்வை. ஆனால் தியாவின் விழிகள் இன்னும் அகன்றவை, ஆனால் அழகை மீறிய ஈர்ப்பு இருந்தது. அவள் குனிந்து வோட்கா ஊற்றும்போதுதான் கவனித்தான். அவளுக்குப் புருவமே இல்லை.புருவமற்ற விழிகள் தூய அழகு; கண்களுக்கு புருவமென்பது எல்லைக்கோடு. இவள் விழிகளின் அழகு எல்லைகளற்றது. நிமிர்ந்து அவனுக்கு கோப்பையை அளித்து சியர்ஸ் சொன்னாள். 
 "இதே மனநிலையில் இருந்தால் அரேபிய கடல் சலித்து உள்வாங்கிக்கொள்ளும். எழுத்தாளராக ஏதாவது கதை சொல், அன்பே". "நான் எழுதிய கதை போதுமானதா மிஸ்டர் மாறன்?". "தாராளம்". விரிப்பில் இருந்த பொருட்களை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். வானத்தில் ஆங்காங்கே நட்சத்திரங்களுடன் முகத்தைத் திரையிட்டப் பெண்போல மேகப்படலத்தின் பின் நிலா தெரிந்தது.

 "என்ன படுத்துவிட்டாய் தியா? கதை எங்கே?" "சொல்கிறேன், நீ கோவா இன்குஸிஷன் ட்ரிப்யூனல் பற்றி படித்திருப்பாய் அல்லவா? அதைப்பற்றிய கதைதான் இது, கேள்". மாறனும் அருகே கால்நீட்டிப் படுத்தான். ஈரப்பதமான குளிர்காற்று வோட்கா போதைக்கு இதமாக இருந்தது. தூரத்தில் கணவன் மனைவி சண்டை குறித்த கொங்கணி நாட்டுபுறப் பாடலை ஒரு கிழவி பாடிக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி உடலெங்கும் டாட்டூக்களும் ஜடைகளும் கொண்ட வண்ண வண்ண பூக்கள் கொண்ட உடைகளில் ஹிப்பிகள் அமர்ந்திருந்தனர். அவளது குரல் உலோகப்பானையில் கரண்டியை விட்டு ஒரே வாக்கில் சுரண்டுவதைப் போன்று ஏற்ற இறக்கங்கள் இன்றி சீராக இருந்தது. தியா கதை சொல்லத் துவங்கினாள். 

கொங்கண நிலத்தின் செழுமையில் பங்குகொள்பவள் அக்னாஷினி எனும் ஸுவாரி நதி; மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி தான் கால் பதிக்கும் இடங்களெல்லாம் பசுமையை விதைத்து அரபிக்கடலில் புதிதாய் கூடும் காதலியைப் போல ஒவ்வொரு நொடியும் முத்தமிட்டுக் கலக்கிறாள். தூயவளுக்குக் கூட உப்புமுத்தமே விருப்பமுடையதாய் உள்ளது. நீலவானத்திற்குத் தன்னைச் சூழ்ந்த பசுமையை ஆடியென எழச்செய்து பெருமிதம் கொண்டு ஓடுவாள். வானம் அவளின் பைந்நீர்மை கண்டு நாணி மேகங்களைக் கொண்டு தன்னை மறைத்துக்கொள்ளும். ஸுவாரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்த அழகிய கிராமம் இன்றைய கோட்டாலிம். பூர்வீகத்தில் இதன் பெயர் குஷஸ்தலெ; இதுவே துவாரகை என பார்வை மழுங்கிய கிழவிகள் அகன்ற அலையோடும் முகத்துவாரத்தை நோக்கி கதைகள் சொல்வதுண்டு. 
 1500களில்  வெறும் வணிகர்களாக வந்து ஆட்சியில் அமர்ந்த பறங்கியருக்கு கொங்கண நிலத்தின் அழகு பெரும் வேட்கையை அளித்தது. ஆனால் தாங்கள் வணங்கும் சிலுவையை அறியாத நெற்றியில் திலகமிட்ட சந்தனம் தோய்த்த கொங்கண மக்கள் அழகான யுவதியின் நிர்வாண உடலை ரசிக்கும்போது விழியில் விழுந்து உறுத்தும் தூசியைப் போல எரிச்சலை உருவாக்கினர். கோவில்கள் அனைத்தும் களையப்பட்டு குலத்தின் இறைவன்களைப் புதைத்துக் கல்லறைச் சிலுவைகளென தேவாலயங்கள் எழுந்தன. அக்காலத்தில் மங்களூருக்கும் பம்பாயிக்கும் கொங்கணர்கள் தப்பியோடினர்.

 கார்ட்டாலிம் மங்கேஷ் கோவில் பண்டிதரின் மகள் தேவி; பதினாறு அகவையினள். பக்கத்து ஜில்லாக்களில் அவளது பந்துமித்திரர்கள் தங்கள் வீட்டில் பூஜிக்கப்பட்ட தேவியரையும் இறைவர்களையும் வீதிகளில் போட்டு கொளுத்திவிட்டு போர்ச்சு திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றனர். உச்சரிப்பில் பிடிபடாத புதியபெயர்களைத் தரித்துக்கொண்டனர். 
 ஒருநாள் மாலை கார்ட்டாலிம் வீதிகளில் குதிரையில் வந்த பறங்கியன் ஒருவன் போர்ச்சு மொழியில் உரக்க அறிவிப்புகளைக் கூறிச் சுற்றிச் சென்றான். கொங்கண தேசத்தில் கொங்கணியும் மராத்தியும் பேசக்கூடாதென்றும் அனைவரும் போர்ச்சுகீசிய மொழிகற்று பேசவேண்டுமென போர்ச்சுகீசிய அரசால் ஆணையிடப்பட்டது. அதனால் கொங்கணிகள் பேசிய போர்ச்சு ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு கொங்கணியும் உண்மையில் தனித்தனியாகத் தனக்கு வந்த போர்ச்சு சொற்களைக் காற்றிடம் பேசிக்கொண்டிருந்தான். கார்டாலிம்மில் அவ்வீரன் பேசியதை ஓரளவு போர்ச்சு தெரிந்த இளைஞர்கள் ஊராரைக் கூட்டிச் சொன்னார்கள். அவ்விளைஞர்களில் ஒருவன் பம்பாய் சென்று நூல்கற்றுத் தேர்ந்து மராத்தி, சமஸ்க்ருதம், போர்ச்சு முதலியவற்றில் பத்திகளையும் கவிவரிகளையும்  எழுதுபவன் ரவி ராய்கர். 
  அரசமரத்தின் அடியில் அனைவரையும் அழைத்து ரவி சொன்னான், " கிராமத்தவர்கள் அனைவரும் மேன்மை பொருந்திய கேப்டன் ரோட்ரிகஸை உடனே சென்று சந்திக்க வேண்டும், இல்லையேல் கிராமத்தார் விரும்பாத விளைவுகளைச் சந்திக்க நேரும்". மக்கள் சிரித்தார்கள்; மங்கேஷ் கோயில் பண்டிதர், "பன்றிக்கறி தின்பவனை போய் பார்ப்பதா?" என்றார். கூட்டத்தில் ஹோ எனக் கத்தினர். தோஃபிக் நரைத்த தாடியை தடவிய படி "எங்களில் ஹாரம்" என்றார். ரவி "நம் அனைவருக்கும் பறங்கியரே ஹாரம்தான்" என்று சிரித்தான். நகைப்பொலி எழ அனைவரும் நகர்ந்தனர். அப்போதுதான் கூட்டத்தில் தேவியின் பார்வையை உணர்ந்தான் ரவி. 
 மறுநாள் விடியலில் அக்னாஷினி கரையில் நீரெடுத்துக் கொண்டு தேவி வரும்போது எதிரே ரவியைக் கண்டாள். "ஏய், நீ பண்டிதரின் மகள்தானே" என்றான். தேவி "ஆம்" என தலையசைத்துவிட்டு விறுவிறுவென நடந்தாள். ரவி அவளை நோக்கி "உன் தந்தை என்னை நல்ல யுவன் என்று பாராட்டுவார், அழகியபெண்ணே, என்னுடைய நற்குணத்திற்குப் பரிசாக உன்னையளித்தால் போதும், பேறுபெற்றேன் என்று ஸுவாரியில் குதித்து மோட்சம் பெறுவேன்" என உரக்கக் கத்தினான். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே மனைக்கு வந்தாள். மங்கேஷ் ஆலயத்திற்கான பூக்கூடை அறையிலேயே இருந்தது. 

 "பாயி வந்து எடுத்துக்கொண்டு போகவில்லையா?" என்று மாமியிடம் கேட்டாள் தேவி. மாமி "தெரியவில்லை, உஷத்கால பூஜைக்குச் சென்றவன் இன்னும் வரவில்லை" என்றாள். சிறிதுநேரத்தில் தோஃபிக்கும் சாரங்கும் உடலில் கரிபடர ஓடிவந்து கூச்சலிட்டனர். "மங்கேஷ் கோவிலைத் தீவைத்து கொளுத்திவிட்டார்கள் பறங்கியர், அந்த ரோட்ரிகஸ் வேசிமகன் கோவிலையும் உள்ளிருந்த பண்டிதரையும் தன் ஆட்களை வைத்துக் கொளுத்திவிட்டான்" எனக் கத்தினர். தேவி சத்தத்தைக் கேட்டு பூக்கூடையில் தட்டிவிழுந்து ஓடிவந்தாள். "அனைவரும் இங்கிருந்து ஓடுங்கள், ரோட்ரிகஸ் படையுடன் இங்குதான் குதிரைகளில் வந்துகொண்டிருக்கிறான்" என்று கத்தினார் தோஃபிக். தேவி சோர்ந்து திண்ணையில் அமர்ந்தாள். தோஃபிக் தேவியிடம் "நீ அழுவதற்குக் கூட நேரமில்லை மகளே, மாமியை என்னோடு அனுப்பு, என் அம்மி, மனைவி உள்ளிட்டோருடன் அவர்கள் இணைந்துகொள்ளட்டும். நீ ரவியிடம் சென்று சொல்லி அவனை அழைத்துவா, பறங்கி மிருகங்களின் கண்களுக்கு நீ ஒருபோதும் இரையாகி விடக்கூடாது மகளே, ரவியை நீ முழுதாக நம்பலாம்" என்று அழுதார். மாமியின் துணிகளை பொட்டலம் கட்டி தோஃபிக், சாரங்க் குழுவிடம் மாமியை அனுப்பிவைத்தாள். ஏன் அத்தனை அவசரமென மாமியின் பார்வை மங்கிய விழிகளுக்குப் புரியவில்லை. ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த ரவியை நோக்கி ஓடிவந்தாள் தேவி. 

ரவியிடம் தேவி "பாயியை, எரித்து, எரித்து, கோவில்" என்று ஓரிரு வார்த்தைகளைச் சொல்லி மயங்கிவிழுந்தாள். ஆற்றுநீரை எடுத்துவந்து அவள்மீது தெளித்து எழுப்பினான். அப்போது புகைநெடி பரவியது. தூரத்தில் வீடுகளனைத்தும் எரிந்துகொண்டிருந்தன.  விழித்தவள் இமைகொட்டாமல் அக்காட்சியைக் கண்டாள். கருஞ்சுருள்களாக புகையும் ஓலங்களும் இறுதி மன்றாடல்களும் கேட்டன. பேரலையின் ஓசையென அழுகைக்குரல்கள் விண்ணை எட்டின. எழுந்த ரவியைப் பிடித்து அழுத்தினாள். "உன்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றாள். அவன் தேவியின் தெளிவைக் கண்டு பயந்தான். "மொத்த ஊரும் எரிந்துகொண்டிருக்கிறது, சுட்ட பன்றியிறைச்சியை விட மானுட இறைச்சியின் சுவையை அறியக் கிளம்பிவிட்டார்கள். அவர்களின் தெய்வம் அத்தனை கொடூரமானதா ரவி?" என்றாள். ரவி "அவர்கள் தெய்வத்தையே நிர்வாணப்படுத்திக் கல்லால் அடித்து சிலுவையில் அறைந்துதான் தெய்வமாக்கினார்கள்" என்றான். தேவி "விந்தைதான்" என்றாள். 
இருவரும் சிறிதுநேரம் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர். அமைதியாக நீரலைகளின் ஓசை மட்டும் நிறைந்திருந்தது. தேவி அமைதியாகக் கூறினாள், "சிலநாழிகைகளுக்கு முன் தலையைத் தொட்டு வாழ்த்தியவர் இந்த நொடி இல்லை, ஆமாம், அவரே உனக்கு என்னைப் பரிசளித்துள்ளார். அதற்காக ஆற்றில் விழுந்துவிடாதே, என்னை பத்திரமாகப் பார்த்துக்கொள்". அவள் கைகளைப் பிடித்து கதறியழுதான். "பண்டிதர் பிடித்துத் தரவேண்டிய கைகள் இவை, என் மாயி இறப்பிற்குப் பின் மங்கேஷ்வரனின் பிரசாதமென போஜனம் அளித்தீர்களே, திரும்பி வாருங்கள், தேவி அழுகிறாள் பண்டிதரே".
 "ரோட்ரிகஸை மங்கேஷ்வரன் ஒன்றும் செய்யவில்லையில்லையா? பிறகேன் இத்தனை காலம் அவனை பூஜித்தோம்? பார் ரவி, அங்கே எரிந்துகொண்டிருப்பவர்கள் மகாபௌர்ணமியும் விருத்தோத்ஸவமும் கொண்டாடி வழிபட்டவர்கள். தனக்கு அவியாகவேண்டுமென தன்னையே எரித்துக்கொண்டானா? பாயி என் மாயியின் மீது கொண்ட பிரியத்தைவிட அதிகமாக மங்கேஷ் மீது கொண்டிருந்தார். அதற்கான அருளா இது?" என்று கதறினாள். சிறிதுநேரம் கரையில் வளர்ந்திருக்கும் புற்களை நோக்கினாள். ரவி முழுவதுமாக உடைந்திருந்தான். திடீரென தேவி எழுந்து "வா ரவி, பறங்கியர் ஊரை எவ்வாறு சீரழித்திருக்கிறார்களென்று பார்ப்போம்" என்றாள். அவளுடைய நிலையைக் கண்டு சித்தமிழந்தாளோ என எண்ணினான். "எழுந்திரு ரவி, நீ கற்றவன், தெய்வங்களின் பெயரால் நடக்கும் அநீதிகளுக்கு நீ நியாயம் கேட்க வேண்டும். இதை பாயிக்காகவோ மங்கேஷ்வரனுக்காகவோ கேட்கவில்லை. இந்நிலத்தின் பிரஜைகளுக்காக கேட்கிறேன்." "உணர்ச்சி வேகத்தில் எதுவும் செய்யமுடியாது தேவி" என்றான். "ஆம், முன்பு ஷாக்கள் வந்தபோதும் நம் மரபினர் இதையேதான் சொல்லியிருப்பார்கள். இன்று ஷா பறங்கியர் இல்லாத பகுதிகளில் ரகசியமாகத் தன்னை மன்னன் என்று சொல்லிக்கொள்கிறார். நாளை பறங்கியருக்கும் இதே நிலை வரும். ஆனால் அப்போதும் நாம்தான் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்போம். நீயும் நானும் உயிரோடு இருப்பதின் பொருள் என்ன? நாமும் அக்கூட்டத்தோடு எரிந்திருந்தால் உணர்ச்சியே எழுந்திருக்காதல்லவா?" "நீ அதிர்ச்சியில் பிதற்றுகிறாய் தேவி" "இல்லை, தெளிந்திருக்கிறேன், நீ கோழை ரவி." தலைகுனிந்தபடி ரவி எழுந்தான். 
             இருவரும் எழுந்து ஊரை நோக்கி நடக்கத்தொடங்கினர். சடலங்கள், தானியங்கள், கூரைகள், ஆடைகள் என்று விதவிதமான எரிந்த புகைமணங்கள்; புகைமணத்தில் இத்தனை வேறுபாடு உண்டு என்பதை நாசிகள் உணர்ந்தன. அழுகிய இறைச்சியைச் சுட்டதைப் போல மணம் எழுந்தது; ஓலை எரிந்த மணம்; கருகிய உணவு மணம்; எல்லா மனைகளும் சிதறடிக்கப்பட்டு வானிலிருந்து தீ மழையாகப் பெய்து ஓய்ந்ததைப் போல எரிந்த பொருட்கள் மற்றும் மனிதர்கள் என கலந்து நிறைந்தனர். தேவியின் பாதத்தில் எரிந்த கட்டையொன்று தட்டுப்பட்டு நொறுநொறுவென பொடியானது; உற்றுப்பார்த்தாள்; பாதங்கள் கூச விலகிச் சரியப்போனாள். யாருடைய காலோ அது. ரவிக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தூரத்தில் ஒருவன் உடலெங்கும் கரியோடு குலுங்கி அழுதுகொண்டிருந்தான். தேவியும் ரவியும் அவனிடம் ஓடிச்சென்றனர். "சாரங்க் மாமா" என்று அழைத்தான் ரவி. ஓடிவந்து ரவியைக் கட்டித் தழுவினார். தேவியைப் பார்த்து "நல்லவேளை நீ ரவியை பார்க்கச் சென்றாய். இல்லையெனில் நீயும் இங்கே சாம்பலாகியிருப்பாய் மகளே" என்று அழுதார். 
  கேப்டன் ரோட்ரிகஸ் நூறு பேர் கொண்ட குதிரை வீரர்களை அனுப்பி மங்கேஷ் கோவிலைப் பூட்டி கொளுத்திவிட்டு, வெடிப்பொதிகளை வீசித் தகர்த்துவிட்டு ஊரைநோக்கி விரைந்தனர். இங்குள்ள மக்கள் வெளியேறத் தடை போடப்பட்டு குதிரை வீரர்கள் தீப்பந்தங்களை குடியிருப்புகளில் வீசிச் சென்றனர். மேலும் பெண்கள் மீதும் கிளம்பிய மக்கள் மீதும் எண்ணெய் சீசாக்கள் வீசப்பட்டன. உயிரோடு கொளுத்திவிட்டு குதிரைகளில் விரைந்தனர். ஒருவரேனும் இதைச் சொல்ல உயிரோடு இருக்க வேண்டுமென பாதியெரிந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்து பின்கட்டில் பதுங்கினேன். கூச்சல்களும் ஓலங்களும். அவற்றைக் கேட்கும்போது நான் இறந்து போயிருக்கலாமென்று தோன்றியது. பிறகு வந்து பார்த்தேன், எரிந்த உடல்கள்; அனைவரும் எரிந்துவிட்டனர், மங்கேஷ்வரர் உட்பட. 

 "மாமா, ஆள்பவர்கள் பிரஜைகளைக் காக்க வேண்டும்; அழிக்கக்கூடாது. ரவி போர்ச்சுகீசிய சர்க்காருக்கு எழுதட்டும்" என்றாள் தேவி. ரவி உறைந்து நின்றான். "உன்னால் முடியும்; திருச்சபை விசாரணை நடத்துகிறார்களே நாடுமுழுக்க, செந்தூரத் திலகமிட்டதற்கெல்லாம் தண்டனை தருகிறார்களே மற்ற ஊர்களில், இங்கு தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். சாட்சியை சாரங்க் மாமா சொல்வார்" என்றாள். அவள் அத்தனை புத்திசாலியான பெண் என்பதை அத்தருணத்தில்தான் ரவி உணர்ந்தான். 
மனு மாஜிஸ்ட்ரேட் முன் விசாரிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சாரங்கின் சாட்சியை ஏற்றுக்கொண்டு கேப்டன் ரோட்ரிகஸ் உடனடியாக நகரைப் புனரமைத்துத் தரும்படியும் மாற்று மதத்தவர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளாதிருக்கும்படியும் மீண்டும் மங்கேஷ் ஆலயத்தைக் கட்டித்தர வேண்டும்மென்றும் தீர்ப்பளித்தார். 

 சாத்சஷ்டியிலுள்ள மாளிகையில் இறுகிய முகத்துடன் பூட்ஸ்களை உதறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான் ரோட்ரிகஸ். உதவியாளன் "மேன்மை பொருந்திய கேப்டனுக்கு வணக்கம்" என்று மதுக்கோப்பையையும் சுட்ட பன்றி இறைச்சி மற்றும் கன்று இறைச்சியை மேசையில் வைத்து பணிந்து நின்றான். நாற்காலியில் அமர்ந்த ரோட்ரிகஸ் "டியாகோ டி அசிவெதோ ரோட்ரிகஸ் கேப்டன் ரோட்ரிகஸாக உட்கார எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று அந்த கிழட்டு மாஜிஸ்ட்ரேட்டுக்குத் தெரியுமா? அவனை குதிரையில் கட்டி இழுத்துவருவேன். அவன் உடலில் கத்தோலிக்க போர்த்துகீசிய குருதி ஓடுகிறதா? இல்லை அவள் அன்னை இந்த வெந்தய நாற்றம் வீசும் ஹிந்துஸ்தான அடிமைக்குப் பெற்றாளா? இன்குஸிஷனில் அவனை விசாரித்துச் சிலுவையில் தொங்கவிடுவேன். மனு அளித்த ரவியையும் அந்த சாட்சி சொன்ன அடிமையையும் எரிப்பேன்" என்று கத்தினான். மதுவை மிச்சமின்றி ஒரே மிடற்றில் விழுங்கிவிட்டு பொன்னிறமும் இளஞ்சிவப்பு நிறமுமான சுட்ட ரோஜா போலிருக்கும் பன்றி இறைச்சியை மென்றான். அருட்தந்தை அறையின் கதவைத் தட்டினார். ரோட்ரிகஸ் திறந்தான்; இயேசுவின் ஆசிகள் என்று நெற்றியில் சிலுவையிட்டார். "ஆமென்" என்றான். "இந்த சாலஸ்டேவில் அனைத்தும் நான்தான். சாத்தானின் ஊரையும் வழிபாட்டிடத்தையும் அழித்த செயல் இயேசுவுக்கு மிகப் பிரியமானது. நீ திருச்சபைச் சட்டங்களின் படி புனிதன். இயேசுவின் மகிமை உனக்கு எப்போதும் துணை நிற்கும். வைசிராயை சந்தித்தேன். அவர் மேலும் சாத்தான்களின் வழிபாட்டிடங்களை அழிக்க உனக்கு ஆலோசனை அளித்துள்ளார். போர்ச்சுகல் அரசு உன்னுடன் நிற்கும், வீரனே. பரலோக ராஜ்ஜியமும் உனதாகும்" என்றார். ரோட்ரிகஸ் புன்சிரிப்புடன் "உங்கள் ஆசி, இரவுணவில் துணைபுரியலாமே" என்றான். "கோவன் முழுக்க சிலுவைகளைப் பதித்திடு, மகனே! ஒருநாள் விருந்துண்போம்" என்றார். 
"ரோட்ரிகஸ் எப்படியும் நம்மைத் தேட ஆட்களை அனுப்பியிருப்பான், நான் இறந்தோம்" என்றார் சாரங்க். தேவி "நாம் சான்குலே செல்வோம், அங்கே என் மைத்துனி அன்னையுடன் சகுந்தலா இருக்கிறாள். அங்கு சென்று பண்ணை வேலை செய்யலாம்" என்றாள். ரவிக்கும் அது சரியெனத் தோன்றியது.  சான்குலேவிற்கு மூவரும் நடந்தே சென்றார்கள். செல்லும் பாதையில் பெரும்பாலும் கேட்டிராத மொழியில் துதிப்பாடல்களையும் அணிகலன்கள் ஏதுமணியாத சிலைகள் முன் மண்டியிட்டு வழிபடுவதையும் பார்த்தார்கள். சான்குலேவில் சகுந்தலா மனை முற்றிலும் மாறியிருந்தது. மாவிலைத் தோரணங்களுக்கு பதிலாக சீமைத் திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. உள்ளே இயேசு ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. சகுந்தலா வித்தியாசமாகத் தயங்கி வரவேற்றாள். நீண்ட கவுன் அணிந்திருந்தாள்; காதில் முத்துகள் தவிர வேறு அணிகலன்கள் ஏதுமில்லை. தலைமுடியை குட்டையாக்கியிருந்தாள். தேவி கேட்கும் முன்பே சகுந்தலா சொல்ல ஆரம்பித்தாள். "நான் ஞானஸ்னானம் பெற்ற மரியா இப்போது. சீமாட்டி ஃபெர்டினன்டா வீட்டில் பணி செய்கிறேன். மாதம் 200 ஸெராஃபின்கள் ஊதியம் தருகிறார்கள். மாயியின் உடல்நிலை சீராகியுள்ளது. போர்ச்சு மொழி நன்றாகப் பேசுவேன். வாழ்க்கை இப்போதுதான் நன்றாகச் செல்கிறது. இயேசுவின் கருணை" என்றாள். ரவியும் சாரங்கும் அதிர்ச்சியுடன் சகுந்தலாவைப் பார்த்தபடி பலகையில் அமர்ந்திருந்தனர். இளநீரில் வெல்லம் சேர்த்த பானத்தை மூவருக்கும் பரிமாறிவிட்டு அமர்ந்தாள்.
  "நீ ஒரு பிராமணப் பெண் சகுந்தலா" என்றாள் தேவி. 

"அதனால் என்ன?"
 "அறிவில்லாமல் பேசாதே, நீ நேரடியாக திருச்சபை சட்டத்தின்படி எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம், திலகமிடுகிறாய் என்றோ சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள் சொல்கிறாய் என்றோ கைது செய்யப்படலாம்" 
"நான் அவற்றை மறந்து காலமாகிவிட்டது. பார், வீடு ஒரு மேனாட்டுப் பெண்ணின் மனை போலில்லை?" என்று மரியா கேட்டாள். 
 அப்போது திரையை விலக்கிவிட்டு பெட்ரோ நுழைந்தான். மூவரையும் கண்டு திகைக்க "நான் மரியாவுடன் பணியாற்றும் பெட்ரோ, மன்னிக்க" என்று போர்ச்சில் சொன்னான். ரவி "பரவாயில்லை, வாருங்கள்" என்றான். மரியா "இவர்கள் என் உறவினர்கள்" என அறிமுகம் செய்தான். "பிறகு வருகிறேன் மரியா" என்று அவசரமாக விடைபெற்றான்.
 ரவி சாரங்கிடம் கண்ணைக் காட்டி "நாம் கிளம்பலாமென நினைக்கிறேன் தேவி" என்று எழுந்தான். தேவி "இருவரும் சற்று காத்திருங்கள் மரியாவிடம் பேசிவிட்டு வருகிறேன்" என்றாள்.  
 "சகுந்தலா, நீ உண்மையில் பைத்தியமா? பறங்கியனுடன் சிநேகிக்கிறாய்?" 
"நீ அனாதையை சினேகிப்பதை விடவா? பம்பாய் சென்று படித்து வந்தவன் என்பதால்தானே ரவியுடன் இருக்கிறாய்?"
"நான் உன்னுடன் சண்டையிட வரவில்லை சகுந்தலா. அனாதையால் எனக்கு ஆபத்தில்லை. ஆனால் பறங்கியனால் பெரும் ஆபத்தை நீ சந்திக்கக் கூடும்"
"அவன் என்னை திருச்சபையில் சொல்லி விரைவில் விவாஹம் செய்துகொள்ளப் போவதாகச் சொல்லியிருக்கிறான்"
"அவனுடைய சப்பாத்துகளை துடைக்க வேண்டுமானால் அழைத்துச் செல்வான். நம் மொழியில் சொல்லவேண்டுமென்றால் அவனைப் பொறுத்தவரை நீ சூத்திரப்பெண், ஒருபோதும் அவன் மனையாட்டி ஆகிவிடமுடியாது."
"நீ இவ்வளவு பொறாமை கொண்ட பெண் என இப்போதுதான் தெரிகிறது தேவி, வெளியே போ"
"போவதற்கு முன் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் சகுந்தலா, ஓநாய்களால் ஆடுகளை ஒருபோதும் சிநேகிக்க முடியாது. ஒருவேளை சிநேகிக்கிறதென்றால் இரைக்காக மட்டுமே இருக்க முடியும். இப்போதும் நீ என் மைத்துனிதான், பறங்கியருக்கு இரையாகிவிடாதே" 
"உனக்கும்தான் இது, ரவி உன்னை பம்பாயில் வேசியாக்கி விற்கப்போகிறான், கிளம்படி" 
தேவி புன்முறுவலுடன் "பறங்கியரை சிநேகித்த ஸ்திரீகள்தான் அவ்வாறு நம் கடற்கரைத் தெருக்களில் அலைகிறார்கள். நலமுடன் இரு" என்று சொல்லி உட்கட்டில் படுத்திருக்கும் சகுந்தலாவின் மாயியிடம் பாதம் தொட்டு வணங்கிக் கிளம்பினாள். 
 பம்பாய் சென்றாலும் இதே பறங்கியர் கூட்டம்தான் ஆளுமென வடமராட்டியமான காந்தேஷத்தை நோக்கி தேவி, ரவி, சாரங்க் மூவரும் பயணம் மேற்கொண்டனர். காந்தேஷம் தபதி ஆறு ஓடும் வளமான வண்டல் சமவெளிகளைக் கொண்டது. ஃபாரூக்கி சுல்தான்களின் கீழ் ஆளப்படும் பிரதேசம்; தற்போது இரண்டாம் மீரான் முகமது ஷா ஆட்சி செய்கிறார். அங்கு பிழைத்து வாழ்வதற்கு அதிகபட்ச சாத்தியம் இருக்கிறது. தேவியும் ரவியும் விவாஹம் செய்துகொண்டனர். ரவி ஒரு தானிய வணிகரிடம் உதவியாளராகச் சேர்ந்தான். சாரங்க் அருகிலிருக்கு நிலத்தில் வேளாண் வேலைகள் செய்துவந்தார். 

 ஒரு கேளிக்கை அரங்கில் பெட்ரோ ஒரு பறங்கிப் பெண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்ததை வெளியிலிருந்து மரியா பார்த்துவிட்டாள். உள்ளே நுழைந்து "ச்சீ, துரோகி, உன் குலப்புத்தியை காட்டி விட்டாயே, ஒழுங்காக என்னை விவாஹம் செய்து கொள்" என்று கூச்சலிட்டாள். சுற்றிலும் நின்ற போர்ச்சுகீசியர் வேடிக்கை பார்த்தனர். பெட்ரோ மரியாவின் கன்னத்தில் அறைந்து "அடிமை வேசியே, உன்னை இங்கு நுழைய யார் அனுமதி தந்தது?" என்று தலைமுடியைப் பற்றியிழுத்து வெளியேற்றினான். 
வீட்டிற்கு வந்து இயேசுவின் படத்தின் முன் கதறியழுதாள் மரியா, "உன்னை நம்பினேன் கடவுளே, கைவிட்டுவிட்டாயே". 
 மறுநாள் திருச்சபையிலிருந்து இருவர் வீட்டுக்கு வந்து மரியாவைக் கைது செய்தார்கள். மரியா சாம்பாயோ மாளிகைக்கு அழைத்துவரப்பட்டாள். நுழைவாயிலைப் பார்த்ததும் மரியா இதுவே தனது இறுதிநாளென அறிந்துகொண்டாள். எதிரே பெட்ரோ நின்றான். தலைமை விசாரணை அதிகாரி விசாரணையைத் துவக்கினார். 
"மரியா என்னும் கோவன் கத்தோலிக்க பெண்ணாகிய நீ மேன்மை பொருந்திய அரசர் போற்றும் இறைவனின் திருச்சட்டத்தின் கீழ் செயல்படுகிற கான்செல்ஹு ஸுப்ரிமோவுக்கு எதிராக நடந்திருக்கிறாய் என்பதை ஒத்துக்கொள்கிறாயா?"
"கனவான் அவர்களே, நான் ஒரு தவறும் செய்யாதவள். இயேசுவின் மீது ஆணை" என்று அழத்துவங்கினாள் மரியா. 
"பெண்ணே கவனமாகக் கேள், நீ மரியாதைக்குரிய சீமாட்டி ஃபெர்டினன்டாவிடம் பணிபுரிபவள். ஆனால் அவரின் மாண்புக்குக் களங்கம் விளைவித்திருக்கிறாய். கத்தோலிக்கத்திற்கு எதிராக விபச்சாரம் செய்ய முயன்றிருக்கிறாய். கத்தோலிக்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட யுவனான பெட்ரோவை 30 ஸெராஃபின்களுக்கு பாவம் செய்ய அழைத்திருக்கிறாய். மேலும் அவன் வருங்கால மனைவியை கனவான்களுக்கான அரங்கில் அவமானப் படுத்தியிருக்கிறாய். இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட சாட்சியங்களுடன் நீ செய்த குற்றங்களின் பட்டியல். இத்திருச்சபை உனக்கு இப்போதே உரிய தண்டனை அளிக்க உத்தரவிடலாம். எனினும் கத்தோலிக்க இறைமை பாவிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமெனும் கொள்கையை எமக்கு போதித்திருப்பதால் நீ உன் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்பாயெனில் நீ கத்தோலிக்க பெண் என்பதால் உனக்கான தண்டனையில் சில சலுகைகள் அளிக்கப்படும்."
மரியா பேசவே இயலாமல் கதறி அழுதாள், ஒருகட்டத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு "ஆம், நான் செய்த குற்றம் பெட்ரோ என்னை விவாஹம் செய்து கொள்வான் என்று நம்பி சினேகித்ததுதான், அதற்கான தண்டனையை எனக்கு அளியுங்கள் மரியாதைக்குரிய கோமானே" என்றாள். 
"இந்த திருச்சபை விசாரணை மன்றம் இதைப்போன்ற பல திசைதிருப்பும் மொழிகளைக் கேட்டிருக்கிறது. இப்போது நீ கூறிய வாக்கியத்தைத் திரும்பப் பெறாவிட்டால் பொய் சொன்ன குற்றமும் உன் குற்றப்பட்டியலில் சேரும்" 
பெட்ரோவின் பச்சை நிற விழிகளைப் பார்த்துக் கொண்டு மரியா "ஆம், அத்தனை குற்றங்களையும் ஏற்கிறேன். ஆனால் மரியாவாக இல்லாமல் சகுந்தலாவாக, என் பழைய வழிபாட்டினை ஏற்றதற்கான குற்றத்தையும் இத்துடன் எழுதி அதிகபட்ச தண்டனையை அளியுங்கள். கத்தோலிக்கப் பெண்ணாக அன்றி பிராமணப் பெண்ணாக இறக்க விரும்புகிறேன்" என்று தான் அணிந்திருந்த  மேனாட்டு கவுனை அவளே கழற்றினாள். 
கூடத்தின் வெளியே கட்டைகளில் எண்ணெய் ஊற்றப்பட்டு சகுந்தலாவிற்கான தீ அவளை வரவேற்பது போல நெடுங்கரங்களாகவும் செந்நாக்குகளாகவும் மஞ்சள் நாகங்களாகவும் விரிந்து எரிந்துகொண்டிருந்தது. 
தியா "ஏய் மாறா, கதை முடிந்தது, உறங்கிவிட்டாயா?" என்று மாறனை உலுக்கினாள். மாறன் "இந்தக் கதையைக் கேட்டபின் உறக்கம் வருமா என்ன?" என்றான். 
"ஆமாம், உன்னுடைய இந்தக் கதைக்கு கிறிஸ்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?"
"தெரியாது, என்ன செய்வார்களோ?"
"ஏன் அவ்வாறு சொல்கிறாய்?"
"உன்னிடம்தான் முதன்முறையாக இக்கதையைச் சொல்கிறேன், மிஸ்டர். மாறன்"
"உனக்கு பொய் சொல்லவும் தெரிந்திருக்கிறது"
"நிஜமாக"
"கோவாவின் மேல் எவ்வளவு பேருக்கு ஆசை, எத்தனை கொலைகள்?"
"ஆமாம், இந்த மண் என்னைப்போல, கொஞ்சம் அசந்தால் உன்னை போன்ற எவனாவது அதன் தொடையில் கைவைப்பான்"
"தயவுசெய்து மன்னித்து விடு தியா"
"ஒழிந்து போ"
"ஏய், வெளிச்சம் வருகிறது, கடலில் சூரியனைக் காணவில்லை?"
"முட்டாளே, இது மேற்குக்கடல்"
"மீண்டும் மன்னித்துவிடு"
"ஒழுங்காக அறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2020 09:34

Venba Geethayan's Blog

Venba Geethayan
Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Venba Geethayan's blog with rss.