Venba Geethayan's Blog, page 2

May 31, 2024

மகன்றில் களவு 16

எங்கோ தொலைவில் இசைக்கும் கசல் 

மீள மீள 

ஈரடி சந்தங்கள் 

அன்பைச் சொல்ல இத்தனை சொற்கள் 

எத்தனை நிலவுகளைக் கண்டிருக்கும் இப்பிரியம் 

நிலவற்ற நாளிலும் கூட பிணைந்திருக்கும் 

ஆறு பருவங்களை சந்தித்திருக்கும்

எதிரெதிரே சந்தித்த விழிகள் சொல்லாத களவினை 

சொற்களால் அணிசெய்தல் அரிது 

எவ்வளவு கரவுகளை உள்ளம் கொள்ளும் 

இரவுகளின் முணுமுணுப்பு போல 

பாலை மொழியின் இசை தரும் தண்மை

என்றோ சந்தித்த விழிகளின் களவு 

அவளது யாழ் மீட்டியது 

ஈரடி சந்தங்கள் 

மீள மீள


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2024 13:16

May 3, 2024

மகன்றில் களவு 15

பிரிந்து கூடிடும் முகில்களின் ஒருநாள்

முகில்களற்ற தெளிந்த வானின் ஒருநாள்

பகலில் தெரியும் நிலவின் நாளும் கூட

பொழுதுகள் புலப்படா நாளும் அதுதான்

கருமுகில் உதிர்க்கும் முதற்துளியின் நாளது

அந்நாள்தனில் மொழிந்த சொற்கள்தாம்

கோடைகாலத்துப் பெருமழை

போதும் சொற்கள்

கோர்த்து அணிகலனாய் சுமந்திட

எடை தாளாது

முன்னொருநாள்

அரிவையின் கூந்தல் விலக்கி

சுவாசத்தின் சத்தம் கேட்டிடும் நெருக்கத்தில்

இதயத்தின் முணுமுணுப்பின் அணுக்கத்தில்

அவன் சொல்லிச் சென்ற வரிகள் சில

அவள் மேனியை அணிசெய்திடும் துகில்களென

நாணத்தைக் கவர்ந்து ஒளிந்தவனுக்கு

அவ்வரிகளை நினைவுபடுத்துமோ? 

இந்நாட்கள்


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2024 14:19

April 3, 2024

மகன்றில் களவு 14

பாலைச் சுரமென இரவு

பற்றிட நன்றாய் திண்தோள்

போதிய அளவாய் அணுக்கம்

நுதல் தொட்டு மிடறிறங்கும் வியர்வை

பவழமல்லி ஸ்பரிசமாய் உறுத்தும் மீசை

அறைமுனையில் மிளிரும் இருவிழிகள்

மெதுவாய் இருளில் நகர்ந்தது

ஊடலுக்கு ஆயத்தமாகும் பூனைக்குட்டி

மேசைமேல் குதித்தது 

புகைப்படச் சட்டகத்தைத் தட்டிவிட 

கொள்ளை பிரியம்

புகைப்படத்தில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் 

தலைவனும் தலைவியும் 

இன்னும் கட்டிக்கொண்டனர்

பூனை அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல்

அமைதியாய் அறைக்கு வெளியே நடந்தது 


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2024 11:47

March 9, 2024

மகன்றில் களவு 13

சாளரம் நிறைத்த தீக்கொன்றைப் பூக்கள்

கூடுதல் செம்மை

துளி நாணமுமாய்

தெளிந்த வானில் 

முகிலென ஓர் ஸ்பரிசம் 

மெதுவாய் நகர்ந்திட

நிழலெனப் படர்ந்த அணுக்கம்

உதிர்ந்த ஒற்றைத் தீக்கொன்றை

தொலைவில் நனிவெயில்

நிலத்தில் வீழ்ந்த மலருக்கு 

கிட்டியது 

ஒற்றை முகிலும்

பற்றிட நிழலும்

இன்னும் அடர்சிவப்பாய்

இன்மதுவுடன் 

புதுமலராய்


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2024 17:30

February 10, 2024

மகன்றில் களவு 12

கானல் நீர் வழிந்திடும் வேனில்

இரவுக்கு ஏங்கும் நிலம்

பொல்லா தாகத்தைப் போக்கிடும்

ஓர் துளி ஆறென அவள்

பாலை உணராத பசுமை

எரிமீனொன்று விழுந்தது போல் 

சடுதியில் அச்சான முத்தம் 

போர்த்திய இரவினுள் எண்ணிலடங்கா விண்மீன்கள் 

தனியே வெறித்த நிலவின் மீது 

சிட்டிகைக் காதலைத் தூவிவிட்டு 

அனிச்சையாய் மறைந்தாள்

வேனிலும் கலைந்தது


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2024 10:42

January 27, 2024

மகன்றில் களவு 11

அவனிடம் சேராத கடிதங்கள்

அலமாரிக்குள் ஒளிந்து கிடந்தன

அவள் Scarlet வண்ண நகப்பூச்சுக்கு ஏக்கம் காற்றில் பரவிய இருவாச்சி வாசம்

பின்னிக் கொண்ட விரல்கள் 

பசையிட்ட இறுக்கம் 

பின்கழுத்தில் உரசும் மீசை

பாதங்களில் என்றுமில்லாத கூச்சம்

தள்ளிவிட்டவளிடம் மெய் சொல்லவா என்றான் 

அருகே இழுத்து அவள் சொல்லிய

மந்தணத்தை இரு நிழல்களும் அறியும் 

கடிதங்கள் மெதுவாகத் தம்மை 

வாசித்து நாணுற்றன

அலமாரி இன்னும் இறுக்கமாய் பூட்டிக்கொண்டது

மாடத்தில் படர்ந்த நிழல் கண்டு

இருவாச்சிப் பூக்கள் பசந்தன


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2024 19:32

December 27, 2023

மகன்றில் களவு 10

இடையோடு இழுத்து வளைத்திட

மீசையில் சிக்கிய அவளிதழ்

சிதறிய நித்திலப் பரல்கள்

எடுக்கவுமில்லை கோர்க்கவுமில்லை

நிரம்பி வழிந்த அமைதியைக் கலைத்தது

இருவரது மூச்சுக்காற்று

புடவை நாணத்தில் சுருங்கிற்று

காலம் கொஞ்சம் சலித்துகொண்டது

வெளிச்சத்திற்கு வெட்கமில்லை

சாளரத்தின் வழியே அழையா விருந்தாளியாய் நுழைந்தது

முழுவதுமாய் அவனுள் லயித்தாள்

அவனைப் பொருட்படுத்தவிலை

கடந்துசெல்லும் நிமிடங்களை கைகொள்ள முடியாதென்று


-வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2023 11:19

November 16, 2023

மகன்றில் களவு 9

அவன் வரவுக்கென்றே நிலையில்

மாட்டப்பட்ட மஞ்சள் வண்ணத் திரைச்சீலை

ஒவ்வொரு முறை அசையும் பொழுதிலும்

அவனது பிம்பம்

போனமுறை அணிந்த வெளிர்நீல வெள்ளைக்கோடு சட்டையுடன்

கடிகார ஊசல் போல

வந்து மறைந்தான்

அவளது கதவு

நல்லூழ் கொண்ட ஓர் அந்திவேளையில் தட்டப்பட்டது

அன்றைக்கு அவன் அணிந்திருந்தது வேறு 

அவளோ அன்றும் முதல் சந்திப்பில் அணிந்த 

அதே ப்ளூபெர்ரி நிற சேலையுடன் இருந்தாள் 

அறைமுழுதும் நிறைந்தது

இருவரின் இனிமை

மஞ்சள் திரைச்சீலை பேறு பெற்றது


-வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2023 08:57

November 4, 2023

மகன்றில் களவு 8

அரக்கு நிற டாமி ஹில்ஃபிகர் சட்டையினுள் முகம் புதைத்திட

கூந்தல் கற்றையைப் பற்றிய விரல்கள்

பின்கழுத்தில் முன்பு அழுத்திய இதழின் லிப்ஸ்டிக் தடம்

அன்பின் அழுத்தமெனப் பதிந்தது

பதிலுக்கு அன்பைப் பகிர்ந்திட

அவளது இடத்தோளில் உகிர்த்தடம்

யாருமில்லை தானே கள்வனென

சுவரோர நிலைக்கண்ணாடி

இன்னும் எத்தனை காலம் இப்படி இறுக்கி 

தவம் செய்வாயென முத்தமிட்டுத் தட்டிவிட்டாள்

திரும்பி நோக்காது நடந்தாள் 

இன்னும் அவன் இதயத்துடிப்பு கேட்கின்றது

- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2023 12:31

October 25, 2023

மகன்றில் களவு 7

கடிகையின் முள் நகர்வுகளை நோக்கிதவம் செய்தது தாபம்நாளும் அல்லும் அவள் இருத்தலை அறியாதுபொறுமையாய் நகர்ந்தனசிதறிக்கிடந்த மென்முல்லைகள் அணிகளற்ற கூந்தல்கலையாத தொய்யில்துயில் மறந்த விழிகள்வரவின் பொருட்டு வாயிலை நோக்கினஅவன் தலையணை சேமித்த வாசனைதற்போதைக்கு ஆற்றும் குளிகைஇடை நில்லா கலிங்கத்தைஇழுத்து வளைத்திடஅறுபொழுதும் ஓய்ந்து கிடக்கின்றனஅறிவையை அறியாது இருக்கும் அவன் வன்நெஞ்சு காத்திருக்கும் கடிகைக்கேனும்மோட்சம் அளிக்கட்டும் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2023 12:38

Venba Geethayan's Blog

Venba Geethayan
Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Venba Geethayan's blog with rss.