Nagarathinam Krishna's Blog, page 2
September 2, 2024
திறனாய்வுக் கலை
அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு வகையில் நமக்குள்ளாகவோ, வெளிப்படையாகவோ குறைகாண்பதும், பிறரைக் குற்றம்சாட்டுவதும், கண்டிப்பதும் மனிதர் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன.
« சே… கடுமையான வெயில், வெயில் தாழ்ந்தபின் வெளியில் வந்திருக்கவேண்டும் ». அல்லது « புறப்படும்போதே மப்பும் மந்தாரமுமாக இருந்தது, மழைவரும்போலிருந்தது குடை எடுத்துகொண்டு வந்திருக்க வேண்டும். »
இவை இரண்டும் இயற்கையின் பண்பிற்கொப்ப ஒருவர் தான் நடக்கத் தவறியது குறித்து, அல்லது இயற்கையின் முனெச்சரிக்கையை அவர் அலட்சியபடுத்தியதை முன்னிட்டு மனம் நொந்து, தம்மைத் தாமே விமர்சிக்க்கும் வகையில் தெரிவிப்பவை.
« எத்தனை பேர் இந்த வழியாகப் போயிருப்பார்கள், யாரேனும் ஒருவர் இந்தக் கல்லை எடுத்து ஓரமாகப் போட்டிருக்கக் கூடாதா, தடுக்கிவிழ இருந்தேன் ! » என்றோ அல்லது « ரோடு போட்டு ஒரு மாதம் ஆகலை இதற்குள்ள குண்டும் குழியுமா இருக்கு, » என்றோ உரத்தெழும் குரல்கள் நமக்குத்தெரிந்த மனிதர்களை முன்வைத்தோ அல்லது தெரியாத மனிதர்களை முன்வைத்தோ வைக்கப்படும் விமர்சனங்கள், பிறிதொருவகை.
எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தன்னையோ, தான் முன்பின் அறிந்திராத நபரையோ விமர்சிப்பவர்களன்றி, எதற்கு வம்பென்று தமது விதியை விமர்சித்து கோபத்தைத் தணித்துக்கொள்ளும் மனிதர்களும் நம்மிடையே உண்டு. குடும்பம், நட்பு, அலுவலகம் போன்ற இடங்களில் நாம் விமர்சனங்களை பிறர் குறித்து நேரடியாக அந்நபரிடமோ, அவரைச் சார்ந்தவர்களிடமோ வைப்பதுண்டு, அந்தப் பிறரும் அவசியமெனில் நம்மையும் அதேமுறையில் விமர்சிப்பதுமுண்டு.
Criticism என ஆங்கிலத்திலும், critique என பிரெஞ்சு மொழியிலும் சொல்லப்படும் வார்த்தையின் மூலம் criticus என்கிற இலத்தீன் சொல். அதன் பொருள் மதிப்பீடுசெய்பவர், சார்பற்று கருத்துரைப்பவர். அதாவது குறைகளை சுட்டியும், நிறைகளை பாராட்டியும் கருத்துரைக்கும் அல்லது தீர்ப்பெழுதும் ஒருவர்.
பொதுவில் விமர்சகர்கள் இருவகை. பிறமனிதர்களைக் காயப்படுத்தவென்றே விமர்சனங்களை வைப்பவர்கள் முதல்வகை. குறைகளைக் களைந்து இனி வரும் நாட்களில் சம்பந்தப்பட்டவர் மேன்மையுற வேண்டும் என்ற நோக்கில் விமர்சனங்களை வைப்பவர்கள் இரண்டாவது வகை. விமர்சனம் அல்லது திறனாய்வு ஒரு கலையெனில், உண்மையான விமர்சகர்களின் நோக்கம் இரண்டாவதாகத்தான் இருக்கவேண்டும். காரணம் கலையின் முயற்சி ஆக்கலேயன்றி அழித்தல் அல்ல.
திறனாய்வு என்ற சொல்லை காதில் வாங்கிய கணத்தில் நமது சிந்தனையில் எழுவது கலையும் இலக்கியமும் ; அதாவது எழுத்தாகவும் கலையாகவும் வடிவம் பெறும் அனைத்தும் திறனாய்வுக்குரியவை. இன்று நேற்றல்ல மனிதர் வாழ்க்கையில் கலையும் இலக்கியமும் கைகோர்த்த நாள்தொட்டு அவை விமர்சனத்திற்குரியவையாக இருந்து வந்துள்ளன, அவற்றில் இடம்பெறும் சம்பவகளும், கையாளும் கருப்பொருள்களும், மானுடத்திற்குப் பயன்தரக்கூடியவையாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இவற்றை வரவேற்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம். பண்டையைத் தமிழ் வழக்கில் தொல்காப்பியம், தண்டியலங்காரம் போன்றவை அப்போதைய செய்யுள் வடிவ படைப்புகளுக்கென்று சில இலக்கண விதிமுறைகள எழுதிவைத்திருந்தன. கவிஞர்கள் அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு என்கிற நியதிக்குட்பட்டு படைக்கவேண்டிய கட்டாயம். அன்றியும் அன்றைய தமிழரின் வாழ்வியலுக்கு இசைந்து, எழுதவேண்டுமென்கிற எதிர்பார்ப்புகள் வேறு ; மீறியவை நிராகரிக்கப்பட்டன. அதிலும் பரிசில் வேண்டியும், பசியாறவும் படைத்தகாலத்தில் விமர்சிக்க, புறம்தள்ள ஆயிரத்தெட்டுக் காரணங்கள்.
இன்றைய படைப்பிலக்கியம் நேற்றைய நெறிகளுக்கு உட்பட்டவை அல்ல, குறிப்பாக இலக்கணமெகிற கைவிலங்கு கால்விலங்குகள் இவற்றுக்கில்லை. சொல் புதிது, சுவைபுதிது, பொருள்புதிதென பாரதி வழியில் வாழும் காலத்தை கருத்திற்கொண்டு கலையும் இலக்கியமும் படைக்கப்படும் காலம். மரபுகளை சீர்தூக்கி பார்த்து, ஒவ்வாததை ஒதுக்கும் காலம்,
தவிர, பிறந்த மண்ணைத் துறந்து வாழ்பவர்கள் அனேகம். அவ்வாறு துறக்கிறபோது புலம்பெயர்ந்த மண்ணின் பண்பாடும், அரசியலும் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கை ஒருவகையெனில், சொந்தமண்ணில் வாழ்கிறவர்களின் நிலையென்ன ? அமெரிக்கர்கர்களாக ஐரோப்பியர்களாக வாழ்கிற தமிழர்கள் சென்னையிலும், கோவையிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏன் இந்தியாவிலேயே பெங்களூரு, மும்பையென தமிழர்கள் வாழ்வதில்லையா ? சிலப்பதிகாரம், மனோன்மணீயம் வாசித்த தமிழர்கள் இன்று டால்ஸ்டாய், அல்பெர் கமுய் என வாசிக்கிறபோது, நடைமுறை வாழ்க்கை, உலக மயமாக்கலோடு ஒத்திசைந்து போகிறபோது, இன்றைய படைப்புகள் அதை எதிரொலிக்கத்தானே செய்யும். இந்நிலையில் திறனாய்வாளர்களும் காலத்திற்கேற்ப படைப்புகளை அணுகவேண்டிய நெருக்கடி.
இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து இன்று சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள் வந்துவிடுகின்றன. மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டும். ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து, கூடாது. எவ்வித முற்சாய்விற்கும் இடம் தராமல் ஒரு படைப்பை அணுகுவதற்கு வசதியாக, உரிய அவகாசத்தை வாசகர்களுக்கு அளித்த பின்னரே விமர்சனங்கள் வரவேண்டும்.
பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எங்ஙனம் தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே விளம்பர உத்தியோடு அல்லது அத்தகைய நுட்பத்தோடு படைப்பிலக்கியத்திற்கு வைக்கப்படும் விமர்சனங்களை நம்பியும் ஒரு படைப்பின் தராதரத்தை தீர்மானித்துவிடமுடியாது. இன்று படைப்பு வெளிவந்த கணத்திலேயே பதிப்பகமோ, எழுத்தாளர்களோ காட்டும் அக்கறையினால் புத்தகங்கள் திறனாய்வாளர்களின் கைக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. இவர்களும் புத்தகம் கிடைத்த குறுகிய காலத்திலேயே எதையாவது எழுதித் தரவேண்டிய நெருக்கடி. படித்து முடித்த படைப்பு உண்மையில் ஏற்படுத்தும் தாக்கமென்ன ? அனுபவமென்ன என்பதையெல்லாம் சிந்தித்து எழுத நேரம் கிடைப்பதில்லை. வாசித்த கணத்தில் எதை உணர்கிறார்களோ அதை உடனே எழுதிவிடுகிறோம். கலைப் படைப்பு என்பது கணத்திற்குரியது அல்ல, கணத்தைக் கடந்தது. காலத்தோடு எதிர் நீச்சல் போடுவது. வாசித்து முடித்தபின், தொடரும் கணங்களில், நாட்களில் நமக்குள் அப்படைப்பு என்ன நிகழ்த்துகிறது என்பது முக்கியம்.
மேற்குலகில் கலை இலக்கிய விமர்சகர்கள் ஊடகங்களில் ஊதியத்திற்குப் பணிபுரிகிறவர்கள். படைப்பாளிகளுக்கும், விமர்சகர்களுக்குமான இடைபட்ட தூரம் அதிகம். நெருக்கமிருந்தால்கூட பாவபுண்ணியம் பார்த்து விமர்சனங்களை வைக்கும் வழக்கம் அதிகமில்லை. பெரும்பான்மையான விமர்சகர்கள், சுதந்திரத்துடன், எவ்வித முன்முடிபுமின்றி செயல்பட வாய்ப்புண்டு. அப்படி இருந்தும்கூட ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு நூலைக்குறித்து எழுதவேண்டிய நெருக்கடியில் சரியான, நியாயமான திறனாய்வுகளை எழுதத் தவறிவிடுகிறார்கள். இங்கு நமக்குக் கூடுதக் நெருக்கடி. தமிழ்ச் சூழலில் இன்று எழுத்தாளரென்கிற அடைமொழியோடு வலம்வருகிறவர்கள் ஏராளம். படைப்பு குறித்து எழுதும் திறனாய்வாளரும் அப்படைப்பாளியும் ஒரே குழுவைச் சேர்ந்தவராக அல்லது எதிராளி அணியினராக இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு. நண்பர்களாக, தெரிந்தவர்களாக இருக்கிறபோது குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவது இயற்கை. அடுத்து குற்றங்கடிகிற பேர்வழிகளை பொதுவில் படைப்பாளிகள் வெறுக்கவே செய்வோம், அவர்களைக் கொண்டாடுகிற படைப்பாளிகள் எந்த உலகிலுமில்லை. இருந்தபோதிலும் மேலை நாட்டு விமர்கர்களில் பெரும்பான்மையோர் காய்தல் உவத்தலற்று ஒரு படைப்பை அணுகுகிறவர்கள் என்பதால் படைப்பாளிகள் மனம் வருந்துவதில்லை.
புதுச்சேரி மொழியியல் ஆய்வு தமிழ் ஆய்வுமாணவர்களுடன், கலந்துரையாடலை நண்பர் பக்கதவச்சல பாரதி ஏற்பாடு செய்திருந்தார் அப்போது நோபெல் பரிசுபெற்ற எழுத்தாளர் லெ கிளேஸியொவின் குற்றவிசாரணை நாவலை வாசித்ததாகவும் அது தமக்கு நிறைவைத் தரஇல்லையென்றும், அதைவிட தமிழில் நல்ல நாவல்கள் வருகின்றன என்றும் கூறியவர், தாம் நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை என்ற உண்மையையும் ஒளிக்காமல் தெரிவித்தார். நண்பர் பகதவச்சல பாரதி முதிர்ந்த சிந்தனையாளர். எனவே குற்றவிசாரணை நாவல் அவருக்கு நிறைவைத் தராதது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. அதனை மறுக்கின்ற வகையில் அன்று என்னிடத்தில் பதிலொன்று இருந்தும் அதை நான் சொல்வது சரி அல்ல, அதனை ஒளித்து மழுப்பலாகத்தான் ஒரு பதிலைக் கூறினேன். அந் நாவல் வெளியீட்டின்போது காலச்சுவடு சார்பாக கலந்துகொண்ட கவிஞர் சுகுமாரன் நேர்மறையான சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். புத்தக வெளியீடு நிகழ்வுகளில் பெரும்பாலும் நிறைகளைச் சுட்டிக் காட்டுவதே நமது மரபு. நண்பர் பக்தவச்சல பாரதி கருத்தின் அடிப்படையில் எழுதவேண்டும் என நினைத்தபோது திருநெல்வேலி சதகத்துல்லாஹ் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் ந.ஜிதேந்திரன்(தற்போது திருவனந்தபுரம் அரசு கல்லூரி பேராசிரியர்) என்பவர் குற்றவிசாரணை நாவலை தாம் படித்ததாகவும், தமக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் « லெ கிளேஸியோவின் குற்ற விசாரணையில் நுண்பொருள் கோட்பாட்டியல் » என்ற தலைப்பில் கட்டுரையொன்றை திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தாம் வாசித்ததாகவும் எனக்கு எழுதியிருந்தார், எழுதியதோடு கட்டுரையையும் அனுப்பியிருந்தார். குற்றவிசாரணை நாவலைப் பற்றிய எனது கருத்திற்கு இணக்கமாக அக்கட்டுரை இருந்தது.
நண்பர் பக்தவச்சல பாரதியின் எதிர்மறையான கருத்தும், முனைவர் ந.ஜிதேந்திரன் என்பவரின் ஒத்திசைவானக் கருத்தும் இரண்டுமே நாவல் எழுதப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து வந்திருக்கின்றன. இரண்டுமே கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு சொல்லப்பட்டவை. எதிர்மறையான விமர்சனத்தை வைத்த நண்பர் பக்தவச்சல பாரதியை அறிவேன். நேர்மறையான விமர்சனத்தை வைத்த திரு நெல்வேலி பேராசிரியரை அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம் மூலம் அறியவந்தேன். இரண்டுமே காலத்தின் விமர்சனம். குற்றவிசாரணை நாவல், நண்பர் பக்தவச்சல பாரதியைப்போல பிரெஞ்சு மொழியில்கூடஒரு சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது, நாவலை எதிர்மறையாக விமர்சித்த பிரெஞ்சு வாசகர்கள் இருக்கிறார்கள். அதேவேளை வெளிவந்த காலத்தில் மகத்தான வரவேற்பை பெற்றபடைப்பு, பிரான்சு நாட்டின் மிகப்பெரிய படைப்பிலக்கிய விருதான ‘கொன் க்கூர்’ விருதைப் பெற்ற நாவல். இங்கே விருதுகள் தேர்வுக் குழுவினரின் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, தேர்வுக்கான இலக்கிய காரணங்களை வெளிப்படையாக அறிவித்து அறிவித்துத் தகுதிகுரியவை மேடைக்கு வருகின்றன.
ஒரு படைப்புக்கு இருவகையான கருத்துக்களுக்கும் வாய்ப்புண்டு. ஒரு படைப்பை ஒட்டுமொத்த மானுடமும் இசைந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், அதனைக் காலம் முன்மொழியவேண்டும், காலத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால்தான் ஆயிரமாயிரம் நடிகர்கள், ஆளுக்கொரு ரசிகர்மன்றங்கள். நாவிற்கு பல ருசிகளுண்டு என்பதாலேயே உணவகங்களில் நம்முன் ஒரு பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள்.
ஒரு வாசகனாக நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்வது எந்தப் படைப்பையும் முன் முடிபுடன் அணுகாதீர்கள். தேர்தல் நிற்கிற வேட்பாளரை ஆதரித்தும், எதிர்த்தும் சொல்லப்படும் கருத்துக்களை காதில் வாங்கவேண்டியதுதான், ஆனால் வாக்குரிமை நம்முடையது. அப்பாவுக்குப் பெண்பிடித்திருக்கிறது, அம்மாவுக்கும் பிடித்திருக்கிறது, தங்கைக்குப் பெண்ணின் மூக்கு கருடன் மூக்கு என்பதன் அடிபடையிலெல்லாம் எப்படி வாழ்க்கைத் துணையைத் தேடக்கூடாதோ அதுபோலத்தான் விமர்சனங்களின் அடிப்படையிலும் ஒரு புத்தகத்தைத் தேர்வுசெய்வது சரியாகாது. வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாசிப்பிற்கும் நம்முடைய மனம் என்ன சொல்கிறது என்பது முக்கியம்.
——————————————————————-
–
August 29, 2024
சைகோன் – புதுச்சேரி (நாவல்): ஒரு தீவிர அபுனைவு – பிரேமானந்தவேலு, திறனாய்வாளர்
நல்ல புதினங்களை வாசிக்கும் பொது இரண்டு நிலையில் அவை நம்மை பாதிப்பது வழக்கம். சில வரிகளை படிக்கும் போது, அவை நம் நினைவடுக்குகளுக்குள் ஒரு பின்னோக்கிய பயணத்தில் ஆழ்த்திவிடுபவையாக இருக்கும். வேறு சில நமது கற்பனையில் மலர்ந்து, விரிந்து, வேர்விட்டு விடும். பிறகு பலகாலங்கள் கடந்து, அந்த வரிகளின் பின்னணியில் அமைந்த இடங்களுக்கோ, சூழ்நிலைகளுக்குள்ளோ நாம் தற்செயலாக கடந்து சேரும்போது, அந்த வரிகளின் உணர்வுகள் அலை அலையாய் மேலெழுவதும், ஆங்கிலத்தில் Deja Vu என்பார்களே, அந்த இனம்புரியாத பரிச்சய உணர்வினை கிளர்ந்து விடுபவையாக இருந்துவிடும்.
அதுவும் ஒரு புதினத்தின் களம், கடந்தகாலத்தில் இருந்துவிட்டால்?… அதுவும் அன்று நடந்து முடிந்த சரித்திர சம்பவங்களின் பின்னணியில், நாம் அறிந்த ஒரு இடத்தில் ஒரு காலும் அறியாத ஒரு நாட்டில் இன்னொரு காலும் வைத்து நம்மை நிறுத்தி காட்சிகளை விரித்தால் ?…
ஒரு தீவிர அபுனைவு வாசிப்பின் பின், ஆசுவாசத்துக்காகவும் இடைவெளிக்காகவும் கையில்லெடுத்த புதினம் இது. ஆனால் இதுவோ, என்னை புதுச்சேரியில் இருந்து கப்பலில் ஏற்றி, சைகோன் வரை ஒரு காலப்பயணத்தில் அழைத்துச்சென்றுவிட்டது.
இதை எழுதிய நாகரத்தினம் கிருஷ்ணா, இன்று பிரான்சின் ஸ்டராஸ்புர்க் நகரத்தில் வாழ்ந்து வந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு புதுச்சேரித் தமிழர். தொடர்ந்து சிறுகதை, நெடும் புதினம் என்று தொடர்ந்து இயங்கிவருபவர். முக்கியமாக பிரென்ச்சு மொழியில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வரும் பணியை தொடர்ந்து வருபவர். மேலும் அவரின் முதல் நாவல் “நீலக்கடல்” தமிழக அரசின் பரிசினையும், இரண்டாவது நாவல் ‘மாத்தா கரி’ கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. எனக்கு அவர் எழுத்தை வாசிப்பது இதுதான் முதல் முறை.
பாலகுமாரன், ஜெயமோகன் போன்றவர்களின் எழுத்தில் வாசிப்பவருக்கு உணர்வுகளை வார்த்தைகளின் வழியே வேகமாக கடத்தும் பிரயத்தனம் வெளிப்படும். வாசிப்பவர்கள், படிக்கும் போதே வார்த்தைகளின் வழியே தங்கள் மனதுக்குள் உணர்வு கடத்தப்படுவதை உணர்வர். அது ஒரு வகையான எழுத்து. அதை படிப்பவர்கள் ஆரம்பத்திலேயே உணர்வோடு ஒன்றி, ஒரு உணர்வெழுச்சி நிலையில் தொடர்ந்து வருவார்கள். சாமானிய வாசகனுக்கு, இவற்றோடு ஒன்றுவது இயல்பாகவே நிகழும். அப்படி உணர்ச்சிகரமான அந்நிலையில் இருக்கும்போது, சமநிலை குலைந்து, படைப்பாளியின் சிந்தனைகளை அப்படியே தர்க்க ரீதியான ஆய்வின்றி நேரடியாக உள்வாங்குவதும் நிகழும்.
அடுத்து வேறு சில வகை எழுத்துக்கள், உணர்வுகளை வார்த்தைகளில் கொப்பளிக்க விடுவதில்லை. வார்த்தை அலங்காரங்களிலும் இதில் ஏதும் இருக்காது. ஆரம்பத்தில் வெகு தட்டையாக, வறட்சியாக தெரியும் வரிகள், அதில் ஊடாக வரும் பல நிகழ்வுகள் வழியே, அதன் பாத்திரங்களின் குரல் வழியே வெளிப்படும் உணர்வு, கவனமாக வாசிக்கும் வாசகனுக்கு, அவன் ஞாபகங்கள் வழியாக புதிய புரிதல்களை, தன் சொந்த வாழ்வின் வழியாகவே ஏற்படுத்தும். இதற்கு , சற்று கூர்ந்து கவனித்து, அதில் ஆழ்ந்து போக, வாசிப்பவருக்கு பயிற்சி தேவைப்படும்.
“வடிவத்தில் சைகோன் ஒரு பெரிய புதுச்சேரி. குறிப்பாகப் புதுச்சேரியின் வெள்ளையர் பகுதியை அவ்வப்போது நினைவூட்டுவதுண்டு. சைகோனைச் சுற்றிலும் மூன்று நதிகள். எனவே வீட்டில் நான்கு சுவர்களுக்குள் உணரும் புழுக்கத்தை வெளியில் காணமுடியாது. வீட்டில் என்னைத் தனிமை வெப்பம் சுட்டெரிக்கும். இந்த இரண்டிலிருந்தும் என்னை விடுவித்துக்கொள்ள சைகோன் விழாக்களும் வீதிகளும் பெரிதும் உதவியாய் இருந்திருக்கின்றன.”
இப்படி வரிகள் அதீத உணர்வுக் கிளர்ச்சியின்றி வாசிப்பவரின் மனதோடு உரையாடுவதைக் காணலாம்.
சிறுவயதில், எங்கள் அம்மா ஊரில், எங்கள் வீ ட்டில் மட்டும் அல்ல, பல வீடுகளிலும் எந்த ஒரு நல்லது கெட்டது நடந்தாலும், ராமசாமித்தாத்தா வந்து முன்னால் நின்று நடத்திவைப்பது என் கண்ணில் இன்றும் நிற்கிறது. ஆள் சற்று ஏறக்குறைய ஆறு அடிக்கு நிற்பார். அதோடு விவசாயத்தில் பாடுபட்டு வந்ததால் அகன்ற நெஞ்சும், வாட்ட சாட்டமான உடம்புடனும் அவர் வந்து நின்று, தன் கணீர் குரலில் அதட்ட ஆரம்பிக்கும் போது, அந்த நிகழ்வு நன்றாக நடந்துவிடும்.
சாதாரண நாட்களில் அவர், ஊர் எல்லையில் இருக்கும் அவர் தோட்டத்தில் ஓயாமல் பாடு படும் ஒரு கடும் பாட்டாளி. பெரும் வசதி என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் மனிதன்.
வீட்டில் அனைவருடன் சேர்ந்தே வளர்ந்த என் அம்மாவின் அத்தை மகன், வயதில் குறைந்த எல்லோராலும் பெரியண்ணன் என்று அழைக்கப்பட்டவர், என்னை எப்போதும் கையில் வைத்து, பாசத்தோடு வேண்டியதை வாங்கிக்கொடுப்பவர், மிக இளவயதில் திடீர் என்று ஒரு அதிகாலை விழுந்து இறந்த போது, அவரை பெற்ற என் அம்மாவின் அத்தை மட்டுமல்ல, என் தாத்தா உட்பட அனைவரும் அதிர்ச்சியில் விக்கித்து நின்றனர். அப்போது, என் தாத்தா ” ராமசாமி மாமனுக்கு சொல்லியுடுங்க” என்று தடுமாற்றத்தோடு சொன்னது நினைவிருக்கிறது எனக்கு. அவர் வந்து, அவருடைய கணீர் குரல் அங்கு ஒலிக்க ஆரம்பித்ததும், நடக்க வேண்டிய காரியங்கள் அடுத்தடுத்து கடகடவென நடந்தேறுவதையும் ஐந்தாறு வயது சிறுவனான நான் ஒரு வித ஆச்சரியத்தோடு பார்த்தது ஞாபகம் இருக்கிறது.
“பாகூரில் சின்னையா பிள்ளையென்று ஒருவர் இருந்தார். அம்மா வழியில் சொந்தம். வித்தியாசமான மனுஷன். ஊரில் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அவரைக் கூப்பிடவேண்டாம் ஆஜராகிவிடுவார். இதுதான் என்பதில்லை எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வார். பந்தக்காலும் நடுவார், பந்தி இலையை எடுக்கவும் செய்வார். இவ்வளவு செய்கிறவர், கடைசிப் பந்தியிலாவது உட்கார்ந்து, ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் இல்லையா, தொடமாட்டார். அவர் இறக்கும் வரை அப்படித்தான் வாழ்ந்தார். இப்படி வாழ்ந்து என்ன சம்பாதித்தார் என்கிறீர்களா. நிலம் நீச்சு ஆளு அம்பென்று வாழ்ந்த பெரிய மனிதர்களெல்லாம் அவரைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிடுவார்கள். மூலவரைச் சேவித்துக்கொண்டு ஊரின் முக்கியமான பெரிய மனிதர்களெல்லாம் நிற்பார்கள், தீபாராதனைத் தட்டுடன் அர்ச்சகர் ஓரமாய் நிற்கிற சின்னய்யா பிள்ளையைத் தேடுவார். “இதற்காகவா இந்த மனுஷன் இவ்வளவையும் செய்யணும்?” என்று ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன். “நீ கேட்ட இந்தக் கேள்வியைப் பலரும் அவரிடம் ஏற்கெனவே கேட்டாச்சு; மழுப்பலான சிரிப்பைத் தவிர வேறெதையும் அந்தப் பைத்தியக்காரன் சொன்னதில்லை” என்றார். பாகூரில் கேட்ட கேள்விக்கு, எனக்கு விடை கிடைத்த இடம், சைகோன்”
இதைப்படித்த பின் எனக்கும் கூட ஒரு விடை தெரிந்தது.
“எனது கால் பதித்த பூமியை, கைதொட்ட பூவரசு மரங்களை, பழகிய சிநேகிதிகளை, தாயை, தந்தையை, தம்பிகளை, பாகூர் ஏரியை, புதுச்சேரி குயில் தோப்பை, அதிகாலை நாதஸ்வரத்தை, மார்கழி மாதத் திருப்பாவையை, அம்மா ஆசையோடு கொடுத்த அதிரசத்தை என்றாவது ஒரு நாள் திரும்பக் காண்பேன், தொடுவேன், கேட்பேன், ருசிப்பேன் என்ற நம்பிக்கையில் கணங்களைக் கரைத்துக்கொண்டிருக்கிறேன்.”
இந்த வரிகளை படிக்கும்போது, பல ஆயிரம் மைல்கள் கடந்து முற்றிலும் வேறு மொழி, வேறு சூழலில் வேலைக்கு போன போது என் மனதில் இருந்த உணர்வுகளை அருமையாக முன்னால் நிறுத்தியது.
1920களின் இறுதியில் துவங்கி, இரண்டாம் உலக யுத்தம் முடியும் வரை நடைபெறும் இந்தக் கதை, வேதவல்லி என்னும் பாகூர் பெண்ணின் வாழ்வை அவர் குரலிலும், அவரைச் சார்ந்தவர்களின் குரலின் வழியாகவும் கூறினாலும், அது வேதவல்லியின் கடிதங்கள் வழியாக விரியும் புற உலகையும், அந்த காலகட்டத்தில் இருந்த சூழல் மற்றும் மனிதர்கள் வாயிலாக ஒரு விரிவான சித்திரத்தையும் நம்கண் முன் விரிக்கிறது. அடுக்கடுக்கான தாமரை போல, ஒவ்வொரு இதழாக, பல அடுக்குகளில் கதை நகர்கிறது.
“பெரியார், பெண்விடுதலைன்னு பேசற ஆம்பிளைகளுக்குக்கூடத் தங்கள் வீட்டுப்பெண்கள் வேதகாலப் பெண்ணா இருந்தால்தான் திருப்தி.’ புருஷாந்தி மனைவி காலையில தைரியமற்று புலம்பினப்ப எனக்கு மனசுல தோணினது எல்லா ஆம்பிளைகளும் ஒன்னுங்கற விஷயம்தான்.”
…
“பிறந்த வீட்டு மனிதர்களைச் சந்திக்கிறபோதும் அவர்கள் வீடுகளைத் தாண்டிச்செல்ல நேரும்போதும் எங்கள் கண்களை நீங்கள் பார்த்திருக்கணும்; கார்த்திகை தீபத்தைக் கண்ணுல ஏத்திக்கிட்டு, கண்ணீரை நெஞ்சுல சுமந்துக்கிட்டு, எடுத்துவைக்கும் அடிகளில் இலக்கணைப் பிழைகள் செய்து…”
என்று பெண்ணின் நிலை மற்றும் தடுமாற்றங்களை கூறுவதாகட்டும், இல்லை,
” புதுச்சேரி ஊரையும் இரண்டாகப் பிரித்து ஐரோப்பியர் ஒதுங்கி வாழ்ந்தனர். இந்திய மேட்டுக்குடியினர் இரண்டு வகையினர். முதலாமவர் பழைமைவாதிகள்; இரண்டாம்வகையினர், ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் மோகம் கொண்டவர்கள். இந்தியப் பழைமைவாதிகளுக்குத் தங்கள் பண்பாட்டில் ஐரோப்பியர் குறுக்கிடாதவரை காலனி ஆட்சி, ஐரோப்பியப் பண்பாடு – இரண்டின்மீதும் தங்களுக்குப் பகையோ, வெறுப்போ இல்லை என்கிற மனநிலை. பிரெஞ்சுக் கல்வி கிடைத்த புதுச்சேரி வாசிகளுக்கு மேற்கத்தியப் பண்பாடு மேலானது; அவர்கள் வாழ்க்கைமுறை உயர்ந்தது.”
…
“பிரெஞ்சு அரசு, காலனி மக்கள் பிரெஞ்சுக் குடிமக்களாக மாறுவதற்கு உதவும் அரசாணையைப் பிறப்பித்தது. மாறிய காலனி மக்கள் இந்தியப் பிறப்பு வழங்கியுள்ள சமூக அடையாளத்தைத் துறக்கவும் பிரான்சு தேசத்துக் குடிமக்களுக்கு ஈடாகச் சலுகைகள், உரிமைகள் பெறவும் உறுதி அளித்தது. அரசாணைகளும் சட்டங்களும் விரைவான மாற்றத்திற்கு ஓரளவேனும் உதவக்கூடியவை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும் அவை ஏட்டுச்சுரக்காய் என்பதுதான் புதுச்சேரியிலும் சைகோனிலும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரிக் காலனி மக்களின் சொந்த அனுபவம்.”
…
“புதுச்சேரியில் ஆயிரத்தெட்டுச் சாதிகள். அவர்களை வழிநடத்தும் மக்கள் தலைவர்களுக்குத் தங்கள் அரசியல் செல்வாக்கு பற்றிய கவலைகள்.”
…
“பிரெஞ்சு மக்கள் என்றால் பிரான்சு நாட்டிலிருந்து இந்தோசீனாவில் வணிகம் செய்ய, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட இங்கு வந்தவர்களோடு, புதுச்சேரித் தமிழர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரித் தமிழர்களெனில் பிரெஞ்சுக் குடியுரிமையுடன் இந்தோசீனாவிற்கு வந்தவர்கள். இந்தோசீனா பிரெஞ்சுக் காலனி என்கிறபோதும் புதுச்சேரிக் காலனி மக்களைப்போல இந்தோ-சீனர்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை கிடையாது. இந்த ஓரவஞ்சனைக்கான காரணத்தைப் பிரெஞ்சுக் காரர்களிடம்தான் கேட்கவேண்டும். பிரெஞ்சுக் குடியுரிமை வாங்கின புதுச்சேரிக் காலனி மக்கள், பிரான்சு தேசத்து மக்களுக்குச் சமம். அவர்களுக்கு என்னென்ன சலுகைகளும் உரிமைகளும் உண்டோ அவ்வளவும் எங்களுக்கும் உண்டெனச் சொல்லப்பட்டது. ஆனால் இதில் உண்மை இல்லை என்பதுதான் எங்களனுபவம்.”
என்று பிரெஞ்சு நாட்டின் அரசியல் விளையாட்டுக்களால் விளைந்த நிகழ்வுகளையும் அடுக்கடுக்காக எடுத்து வைப்பதாகட்டும், வரிகளில் பொதிந்திருக்கும் நிகழ்வுகளையும் அதன் பின்னணியையும், கவனமாக ஆழ்ந்து வாசித்தது புரிந்துகொள்வது ஒரு நல்ல முயற்சி .
“உங்கள் கணவரும் நீங்களும் சிங்காரமும் நானும் ரெனோன்சான்கள், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள். நாங்கள் பிரான்சுக்கு விசுவாசமா இருக்கவேண்டும் என்பதுதான் குடியுரிமை வற்புறுத்தும் நியாயம். பிரிட்டிஷ் இந்தியாவிலும் எல்லா இந்தியரும் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறணும் என நினைப்பதில்லை. அடுத்தவேளை சோறுக்கு என்னவழி என யோசிக்கிற மனுஷனுக்கும் பிரிட்டிஷாரை அண்டி வாழ்வதுதான் சொகமென நினைக்கிற கூட்டத்துக்கும் இந்தியா விடுதலை பெறணும்ங்கிற எந்த அவசியமும் இல்லை. அதேவேளை பிரெஞ்சுக் குடியுரிமை இருப்பதால நாம இந்தியரில்லைன்னு ஆயிடுமா? நம்முடைய பிள்ளைகள் எப்படியோ, நம்மால சோறு சாப்பிடாம இருக்கமுடியுதா? உண்மையைச் சொல்றேன்… எனக்கு இத்தியாவுக்குப் பிறகுதான் பிரான்சு.”
என்று இந்தியத் தமிழர்களுக்கும், புதுச்சேரி தமிழர்களுக்கும் உள்ள மன வேறுபாட்டையும், அவர்களின் பொருளாதார நிலைகளையும் அவர் படம்பிடித்துக் காட்டும் போது, அக்காலத்தில் வேறு வேறு நாட்டின் பகுதிகளாக இருந்த தமிழ்மண்ணின் நிலை நமக்கு ஒரு புதிய அநுபவம்.
இந்திய விடுதலைக்கும், தமிழரின் முன்னேற்றத்திற்கும் போராடிய லியோன் பிரஷாந்தி (Leon Prouchandy) என்ற மாமனிதரின் சோக வாழ்வையும், இந்திய மற்றும் வியட்நாமிய சுதந்திர போராட்டத்தையும் ஒரு பேறிழையாக பின்னி எடுத்த திரையின் மீது அவர் மீது ஈர்ப்பு கொண்ட வேதவல்லி, அவர் தம்பி, கணவர், என்று தீட்டிய சித்திரம் அருமையான அனுபவம்.
இப்படி அடுக்குகளில் இருக்கும் கதைகளை ஒரு கோர்வையாக தந்து, இந்தப் புத்தகம் அழைத்துச் சென்ற காலப்பயணத்தில் ஆழ்ந்து, புத்தகம் முடிந்த பின்னும் வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
————————-
August 24, 2024
சைகோன் – புதுச்சேரி: தனித்துவமான தமிழ் நாவல் – மாலன், எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர்
தஞ்சை, நெல்லை, கொங்கு, நாஞ்சில், நடுநாடு, யாழ்ப்பாணம், கிழக்கிலங்கை, மலையகம், ஏன் மலையாளம், தில்லி எனப் பல பகுதிகளில் வாழ்கிற தமிழர்களின் வாழ்வைப் பதிவு செய்கிற பல படைப்புக்கள் தமிழில் ஏராளம். ஆனால் புதுச்சேரித் தமிழர்கள் பற்றி எழுதியவர்கள் மிகக் குறைவு. இத்தனைக்கும் புதுவைத் தமிழர்கள் தனித்துவமான வரலாறு கொண்டவர்கள்.
புதுவைத் தமிழர்களைப் பற்றித் தொடர்ந்து சிறப்பாக எழுதும் ஒரு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா. அவருடையன வட்டார வழக்கு நாவல்கள் அல்ல. ஆனால் புதுவைத் தமிழர்களின் புலம் பெயர்வு, அதற்கு உந்திய வரலாற்றுக் காரணிகள், அதன் பின் உள்ள வலி, அவை தமிழர் வாழ்வியலில் ஏற்படுத்திய திரிபுகள் இவற்றை எழுதுபவர் அவர். இவற்றை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. அவற்றை உண்மைக்கு அருகில் நின்று சித்தரிக்க ஏராளமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்து தொகுக்க வேண்டும். அந்தக் களப்பின்னணியில் கதை மாந்தர்களை நிறுவ வேண்டும். வரலாறு, வாழ்க்கை இரண்டிலும் ஆழ்ந்த ஞானம் இன்றி இவை சாத்தியப்படாது.
அவரது உழைப்பும் முனைப்பும் தனித்துவமான படைப்புக்களைத் தமிழுக்குத் தந்திருக்கின்றன.அவரது நீலக்கடல் 16-17ஆம் நூற்றாண்டுகளில் மொரிஷியஸிற்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி தமிழர்களைப் பற்றியது. என் சிற்றறிவுக்கும் வாசக ஞானத்திற்கும் எட்டியவரை மொரிஷியஸ் குறித்து அவருக்கு முன், ஏன் அவரையன்றி, எழுதியவர்கள் யாருமில்லை.
அண்மையில் (டிசம்பர் 2021) வெளியான அவரது சைகோன் –புதுச்சேரி, கிழக்காசியாவில் பிரன்ச் காலனியாக இருந்த வியட்நாமிற்கு (அப்போது அது லாவோஸ், கம்போடியாவுடன் இணைந்து இந்தோ சீனா என்றழைக்கப்பட்ட பூமி) சென்ற புதுச்சேரித் தமிழ்க் குடும்பம் ஒன்றைப் பற்றியது.
பிரன்ச் காலனி ஆதிக்கம் புதுவைத் தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. அது: அவர்கள் தங்கள் இந்தியப் பூர்வீக சமூக அடையாளத்தை, (வேறென்ன, ஜாதியை) தந்தை பெயரை, துறந்து பிரன்ச் பெயர்களில் ஒன்றை தங்கள் பெயருடன் கூடிய ஒட்டாக ஏற்பார்கள் என்றால் அவர்களுக்கு பிரன்ச் குடியுரிமை அளிக்கப்படும். அதை ஏற்று ஃபெலிக்ஸ், எதுவார் என்ற பெயர்களைச் சூடிக் கொண்டு அக்கரைப் பசும்புல்வெளிகளைக் கற்பனை செய்து கொண்டு கப்பலேறியவர்கள் பலர். அவர்களுக்கு ரெனொன்சான் என்று பெயர். ரொனான்சான்களுக்கு பிரன்ச் குடியுரிமை அளிக்கும் சிவில் உரிமைகள் மட்டுமல்ல, எட்டாம் வகுப்புப் படித்திருந்தல் இந்தோ சீனாவில் அரசு வேலைகளும் காத்திருந்தன. ராணுவவத்திலும் பணிகள் கிடைத்தன. பிரான்சின் அடிமைகளாகவும், வியட்நாமியர் மீது அதிகாரம் செலுத்தும் கறுப்பு துரைகளாகவும் பலர் கப்பலேறி இந்தோ சீனா சென்றனர்.
அங்கு குழப்பமான சமூக நிலைமை. ‘தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்ட வியட்நாமின் பூர்வ குடிகள் ஒரு புறம். அவர்களில் இரண்டு பிரிவுகள்: ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் பலனாய்க் கிடைத்த கல்வி, வேலை, பொருளாதர முன்னேற்றம் எனப் பலன் கண்டு பிரஞ்ச் அரசை ஆதரிப்ப்பவர்கள்’ அவர்கள் நம்மைச் சுரண்டுகிறார்கள் என அறிந்ததால் அதை எதிர்ப்பவர்கள். தமிழர்களிலும் இரு வகை. பிரஞ்ச் அரசில் பணி கிடைத்து அதன் சார்பில் நிற்கும் புதுச்சேரித் தமிழர்கள், பிரிட்டீஷ் இந்தியப் பகுதியிலிருந்து வணிகம் செய்யச் சென்ற செட்டியார்கள், இஸ்லாமியர்கள் என்ற ரெனோசான்கள் அல்லாதோர் என இருவகை.
இரண்டாம் உலக யுத்தம் மூண்டதும் குழப்பம் அதிகரிக்கிறது. ஜெர்மானியர்கள் கையில் பிரான்ஸ் விழுவது, ஜெர்மனியின் கூட்டாளியான ஜப்பானின் அதிகாரத்தின் கீழ் வியட்நாம் வருவது, எதிரிக்கு எதிரி, நம் நண்பன் என்ற அடிப்படையில் ஜப்பானின் துணை கொண்டு பிரிட்டீஷ் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க நேதாஜி படை திரட்டக் களம் இறங்குவது, அதனை அடுத்து புதுவைத் தமிழர்களுக்கும்- பிரிட்டீஷ் இந்தியத் தமிழர்களுக்குமிடையே மூளும் முரண் எனச் சிடுக்கு விழுகிறது. இதைப் பின்புலமாகக் கொண்டு, ஆனால் அதிக விவரங்களைத் திணித்துத் திணறடிக்காமல், வேதவல்லி என்ற பெண்ணின் குடும்பத்தைப் பற்றிய கதையை சரளமாகச் சொல்லிச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.
புலம் பெயர்ந்து வந்த புதிய மண்ணில், மொழி, கலாசாரம், உணவு எனப் பல வித்தியாசங்கள் கொண்ட சமூகத்தில் புருஷனை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனிமையில் துயருறுகிற பெண்ணில் தொடங்குகிறது கதை. “முடிந்த மட்டும் கிடைத்த வாழ்க்கையை அங்கீகரிப்பதொன்றுதான் நாம் கரையேறுவதற்கான வழி. சொந்த நாட்டை விட்டு வந்த பலரும் அப்படித்தான் தங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். வேற வழியில்லை. இந்த வாழ்க்கையை நாமா தேடிக்கொண்டோம்.சைகோன் நம்மைக் கூப்பிடல்லை….வியட்நாமியர்களை நேசிக்கப் பழகு. அவர்களது உணவு முறைகளையும், பண்பாடுகளையும் ஏத்துக்கனு சொல்லலை.ஆனா தெரிஞ்சுக்க. அவர்களைக் காப்பாற்றுவதற்காக இதை நான் சொல்லவில்லை. உன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சொல்கிறேன்.புதுச்சேரி மனிதர்களும் கோயில்களும் குளங்களும் சைகோனிலும் உண்டு. புதுச்சேரி முகவரியை வைத்துக் கொண்டு தேடினால் அவர்கள் கிடைக்க மாட்டாங்க. சைகோன் முகவரியைக் கொண்டு தேடணும்” என்று வேதவல்லியின் தம்பி ஒர் உரையாடலில் அவளிடம் சொல்வதை அவள் ஏற்கும் போது வாழ்க்கை முனை திரும்புகிறது.
வேதவல்லி, தேவையான நேரங்களில் கடவுளைப்போல நாவலில் அவ்வப்போது பிரசன்னமாகும் புருஷாந்தி, அவருடன் வேதவல்லிக்கு மறை நீரோட்டமாக உள்ள மோகம், இவை கதையின் மைய இழை என நாகரத்தினம் கிருஷ்ணா கருதியிருக்கலாம்; திட்டமிட்டிருக்கலாம். ஆனால் எனக்கு இந்தத் தம்பியின்- எதுவார் சிங்காரவேலு- பாத்திரம் என்னை வசீகரிக்கிறது. அது பிழையல்ல. சில நேரங்களில் படைப்பவனின் நோக்கத்தையும் விட பாத்திரங்கள் விஸ்வரூபம் எடுத்துவிடும். மோகமுள்ளில் யமுனாவை விட தங்கம்மாள் நமக்கு நெருக்கமாகவில்லையா?
நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழி அபாரமானது. அவர் சிந்தும் உவமைகள் வித்தியாசமானவை. “பிள்ளைத் தாய்ச்சிப் பெண்ணின் முகத்தைப் போல வெயில் பளபளத்தது”,”ரயில் பெட்டியைக் கோர்த்தது போல் அவனுக்குப் பெயர்”, “எருமைத் தயிரை ஏட்டோடு அகப்பை கொள்ள எடுத்துச் சோற்றுக்கு வலிக்காமல் தலையில் பூவை வைக்கிறது போல’
வர்ணனைகளிலும் அவர் மொழி ஆளுமை துலங்குகிறது. “கடும் சூரியன். சுடாத நிலம். தொட்டுச் சிரிக்கும் காற்று. தொடாமல் சிரிக்கும் ஏரி நீர். பறை கொட்டுவதுபோலச் சலசலக்கும் பனையோலைகள். இரை தொட்டு முணுமுணுக்கும் தூக்கணாங்குருவிகள்” சில உவமைகள் பாத்திரங்களின் மனநிலையைப் பொருத்தமாக சித்தரிக்கின்றன. மரச் சிற்பி ஒருவரின் தம்பி மகளின் எண்ண ஓட்டம், கடல் அலைக்களைக் காண்கையில், “ அலைச் சீவல்களை இழைத்துத் தள்ளும் சீவுளியைக் கண்கள் தேட” என்பதாக விரிகிறது.
வியட்நாமியர்களான அனாமிட்களுடைய உணவு, பானங்கள், உடைகள், பண்டிகைகள், சடங்குகள் எல்லாம் விவரிக்கப்பட்டிருப்பது சைகோன் நகர வர்ணனை,வெட்ப தட்பம் பற்றிய வாசகங்கள் எல்லாம் நம்மை அங்கேயே கொண்டு செல்கின்றன.
பாத்திரங்களே கதை சொல்வது போல (இடங்களும், சைகோனும், புதுச்சேரியும் கூடப் பாத்திரங்கள்தானே) கட்டப்பட்டிருக்கும் நாவலின் வடிவம் புதியது அல்ல. ஆனால் அவை நாவலின் கட்டுமானத்திற்குக் கை கொடுக்கின்றன.
நான் முரண்படும் இடங்களும் உண்டு. நாவலில் வரும் புருஷாந்தி காந்தி, பெரியார் இருவர் மீதும் பற்றுக் கொண்ட தலைவராகச் சித்தரிக்கப்படுகிறார். காந்தியைத் தன் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒருவர், எப்படிப் பெரியாரைத் தன் தலைவராக ஏற்க முடியும், அல்லது பெரியாரைத் தலைவராக ஏற்ற ஒருவர் காந்தியை எப்படி அங்கீகரிக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. இருவரும் முரண்பட்ட கொள்கைகள் கொண்டவர்கள். புருஷாந்தி நாவலில் அறிமுகமாவது 1934 ஜனவரியில் சைகோனில் நடக்கும் பொங்கல் விழாவில்.பெரியார் 1930களிலேயே காந்தியை விமர்சிக்க்கத் தொடங்கிவிட்டார். காந்தியை பிரிட்டீஷ் ஏஜெண்ட் என்றும் அவரது தண்டியாத்திரையைக் கேலி செய்தும், வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றதைப் பற்றி ஏளனமாகவும் 19.2.1933ல் குடிஅரசில் எழுதிய தலையங்கத்தில் எழுதியிருக்கிறார். பெரியாரின் அரசியலை ஏற்காமல் சமூக சீர்திருத்தக் கொள்கைக்காக அவரை ஏற்றவர்கள் கூட காந்தியின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்க முடியாது. பெரியாரைப் பொறுத்தவரை காந்தி வர்ணசிரம முறையின் ஆதரவாளர், அவரது ஹரிஜன மேம்பாடு என்பது பித்தலாட்டம் கடைசி வரை அவர் அந்த நிலைப்பாட்டில் மாறவில்லை. பெரியாரின் மரண சாசனம் எனக் கருதத்தக்க அவரது கடைசிப் பேருரையில் (19.12.1973) கூட ஒழிய வேண்டியவை என அவர் பட்டியலிடும் ஐந்தில் ஒன்று காந்தி ஒழிய வேண்டும் என்பது. அப்போது காந்தி உயிருடன் இல்லை. அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆகியிருந்தன. அதனால் பெரியார் ‘காந்தி ஒழிய வேண்டும்’ என்று சொல்வது காந்தியின் கொள்கைகளைத்தான் என்பது வெளிப்படை.
இது வறுத்த கடலைப் பொட்டலத்தில் கிடந்த ஒரு எண்ணைக் கடலை. இதைப் பொருட்படுத்தாமல் நாவலைப் படிக்கலாம். படிக்க வேண்டிய நாவல் இது.
———————————–
July 14, 2024
கலையும் பணமும்
சென்ற முறை இந்தியா வந்திருந்தபோது சொந்த கிராமத்தில் எனது சகவயது நண்பரின் மகனைப் பற்றி விசாரித்தேன், அவர் தெரிவித்தபதில் :
« என்ன வேலைன்னு தெரியாது ஆனா, வீட்டு வாடகை, வேளாவேளைக்குச் சாப்பாடு, நல்லது கெட்டதென, குடும்பத்தை அவனால சமாளிக்க முடியுது. » எனக்கூறி உதட்டைப் பிதுக்கினார்.
நண்பரின் மகன் நவீன இலக்கியத்தில் ஆர்வங்கொண்ட இளைஞர், ஆனால் ஜீவனத்திற்கு எழுத்தை மட்டுமே நம்பிருக்கிறவரா அல்லது வேறுவேலை ஏதேனும் பார்க்கிறவராவென்று எனக்குத் தெரியாது. நண்பருக்குக் கிராமத்தில் விவசாயத்தொழில். மகனைச் சிரமப்பட்டு படிக்கவைத்தார், படித்த தன்மகன் அவர் எதிர்பார்த்தது போன்றதொரு வேலையைப் பார்க்காததில் வருத்தம் இருந்துள்ளது. ஒருவன் வளர்ந்தபின் வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்ள அல்லது வாழ்க்கையை ஓட்ட ஏதாவதொரு வேலைபார்க்கவேண்டும் என்பது இந்தியச் சமூகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் மனிதர் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளபட்ட நியதி. எதாவதொரு வேலை பார்த்தால்போதுமென சமூகம் விதித்திருந்தாலும், வேலைகளுக்குக்குள் ஏற்றத்தாழ்வுகளை இச்சமூகம் வைத்துள்ளது. ஆட்சியாளர்கள், நிர்வாகிகள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், முதல் வரிசை. இவர்களுக்கு அடுத்த படிநிலையில் துறைமைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், பொறியாளர், வழக்குறைஞர், ஆசிரியர் போன்றோரைக் காண்கிறோம். பொதுவாகவே துறைமைப் பணியில் இருப்பவர்களுக்கும் அதாவது, மருத்துவர், பொறியாளர்,வழக்குரைஞர், ஆசிரியர், போன்றவர்களுக்கும் ; ஆட்சியாளர்கள், தொழில் அதிபர்கள், பெரு நிறுவன நிர்வாகிகளுக்கும் மனிதச் சமூகத்தின் இயக்கத்திற்குத் தாங்கள் மட்டுமே பொறுப்பு, தாங்கள் இல்லையெனில் சமூகமே முடங்கிவிடும் என்கிற எண்ணமுண்டு. ஒரு சமூகத்தின் இயக்கத்திற்கு அனைத்துவகை பணிகளும் தேவை. மருத்துரைப்போலவே செவிலியரும் தேவை, காவல்துறை கண்காணிப்பாளர் தேவையெனில் காவலரும் தேவை, உயர் அதிகாரியைப்போலவே கடைநிலை ஊழியரும் தேவை. மனிதர் வாழ்க்கையின் தினசரி நகர்வில் சக மனிதர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது. ஒரு நகரசபையின் ஆணையர் முதல் தூய்மைப் பணியாளர்வரை உழைக்கவில்லையெனில், நமது தினசரிகளில் துர்நாற்றம் வீசும் என்பது நிச்சயம். ஆக வயிற்றுப் பிழைப்புக்காக ஒருவன் ஏதோவொரு வேலைசெய்து பிழைக்கிறான் என வைத்துக்கொண்டாலும் அம்மனிதனும் பிறமனிதர்களைப் போலவே சமூகத்தின் இயக்கத்தில் பங்கேற்கிறான் என்பது தெளிவான உண்மை. இந்நிலையில் கிராமத்து நண்பர் மொழியில் சொல்வதெனில் எலோருக்குமே வயிற்றை சமாளிப்பது முதன்மை நோக்கம், சமாளிக்க முடிந்ததும் பிறதேவைகளுக்கு அவன் ஏங்குகிறான், எதையும் செய்கிறான். இங்கே பிறதேவைகள் என்பதை அத்தியவசியத்தோடு நிறுத்திக்கொள்ளாத ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, விளைவாக மூலப்பொருளான பணத்தின் போதைக்கு அவன் அடிமையாகிறான், உடலையும் வயிற்றையும் கடந்த உபரித் தேவைகள் தற்போது கனவுகள், ஆசைகள், பேராசைகளென்று துளிர்விடுகின்றன, எனவே, அவனுக்கு சமூகத்தின் நலன் முக்கியமல்ல, தன்னுடைய நலன் முக்கியம். ஆகமொத்தத்தில் மனிதர் சமூகத்தில் நாம் அனைவருமே ஒருவர் மற்றவரை அறிந்தோ அறியாமலோ சார்ந்திருக்கிறோம் என்பதும், சமூகத்திற்கு நாமிழைக்கும் கேடு, ஒருவகையில் நமக்கே நாமிழைக்கும் கேடு என்பதும் கவனத்திற்கு வருவதில்லை. இப்பிரச்சினையில் கலை இலக்கியவாதிகளும் சிக்குண்டிருப்பது நமக்கு கவலை தருகிறது.
தங்கள் உழைப்பைச் சேவையாக அன்றி செய்யும் பொருளோடு அல்லது படைக்கும் பொருளோடு நேரடியாக பங்களீப்பவர் மூவர் :
தொழிலாளி : தொழிற்புரட்சிக்குப் பிறகு, இன்றையதேதியில் தொழிலாளி என்பவர் ஓர் உயிரூட்டப்பட்ட எந்திரம், எவ்விதப் பிரக்ஞையுமின்றி இடப்பட்ட கட்டளை, அல்லது விதிக்கப்பட்ட நியதிக்கேற்ப குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனக்களிக்கும் ஊதியத்திற்குரிய உழைப்பை அளித்து ஒரு பொருளை அல்லது அப்பொருளின் ஒரு பகுதியை செய்து முடிக்கவேண்டும், செய்து முடித்த பொருள் அவர் உழைப்பிற்கான சான்றே அன்றி, அவர் திறமைக்கான சான்றல்ல. அப்பொருளின் உற்பத்தியில், அத்தொழிலாளியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பங்களிக்கிறார்கள், அவரை விபத்து காரணமாகவோ, வேறு காரணங்களை முன்னிட்டோ பணியிலிருந்து விடுவிப்பினும், உற்பத்திப் பொருட்களில் பாதிப்பிருப்பதில்லை, வேறொரு தொழிலாளியைக் கொண்டு அப்பணியைத் தொடரமுடியும்.
கைவினைஞர் : பொருளுற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் மற்றொரு நபர் கைவினைஞர். சிறு முதலீட்டில் தனியொருவராக அலது ஒன்றிரண்டு ஆட்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு, வழக்கில் உள்ள பொருளை பிரத்தியேக கவனமெடுத்து தயாரித்த பின்னர், அதைத் தனது வாடிக்கையாளர் மனமகிழ்ந்து வாங்கிச்செல்வதைக் கண்டு பெருமிதம் அடைகிறவர் அனைவருமே இப்பட்டியலில் அடங்குவர். சமையற்கலைஞர், தச்சர், பொற்கொல்லர், காலணிகள் செய்பவர், குயவரென நாமறிந்த பலரும் கைவினைஞர்களே.
கலைஞன் : கலைஞன் என்பவன் உற்பத்தியில் பங்கேற்கும் தொழிலாளி அல்ல ; வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் நேற்று செய்ததையே திரும்பச்செய்து சந்தைக்குப் போனதும் அப்பொருளினின்று அந்நியப்படுத்தபடும் கைவினைஞனும் அவனல்ல. .நம்முடைய மகாபலிபுர சிற்பிகளை அவர்கள் புதுமையாக எதையும் படைக்காதவரை கைவினைஞர்களாகத்தான் பார்க்க இயலுமேயொழிய கலைஞர்களாக, ஏற்றுக்கொள்வதற்கில்லை. காரணம் பழனியாண்டவரை அப்படியே நகலெடுத்து உகாண்டாவிற்கு அல்லது தென் அமெரிக்க கயானாவிற்கு அனுப்பும் ஒருவர் கலைஞர் ஆகமாட்டார். எனவே எழுத்து, ஓவியம், இசை, சிற்பம் எதுவாயினும் தனது அறிவையும் உணர்ச்சியையும் இணைத்து புதிதாக ஒன்றைப் படைப்பவன் கலைஞன். அவனுடைய படைப்பு அம்மனிதனின் வயிற்றுப் பசியை போக்குகிறதோ இல்லையோ அவனுடையை மனப்பசியைத் தணிக்க உதவுகிறது, அவனுடைய படைப்பின் நோக்கமும் அதுதான். இங்கே அப்படைப்பு புதியது என்பதும், போலச் செய்தது அல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்படைப்பைக் கண்டு, கேட்டு, வாசித்து இன்புறும் மனிதர்கள் அவனுடைய கலைத் திறனைப் போற்றுகிறார்கள். அவருடைய அபிமானியாக மாறுகிறார்கள்.
நமது கவலை, உழைப்பாளர்கள் செய்துமுடிக்கும் பொருள் பற்றியதல்ல, இன்றைய கலைஞர்களின் படைப்பு பற்றியது. இன்று நேற்றல்ல தொன்று தொட்டே கலைசார்ந்த முயற்சிகளையும் கலை படைப்புகளையும் மனிதனின் உயிர்வாழ்க்கைக்கு உதவக்கூடியவை என்றோ சமூகச் சக்கரத்தை சுழல வைக்கிற பிற உற்பத்திபொருட்களுக்கு நிகரானவை என்றோ மனிதர் வாழ்க்கை ஒப்புக்கொண்டதில்லை. ஆயினும் கலைஞர்களும் அவர்களின் படைப்புகளும் மேன்மையானவை, ஒரு சமூகத்தை மதிப்பிட அவசியமானவை, என்கிற உண்மையை உலகம் மறுத்ததில்லை
கலையென்பது அழகு, உண்மை, இயற்கை ; ஒரு கலைஞன் பிற மனிதர்களைப்போல மனிதரின் புறவாழ்க்கைத் தேவைக்கேற்ப தான் கற்றதை நடைமுறை படுத்தவோ, பிறருக்குப் போதிக்கவோ தொழிற்படுபவனல்லன், தான் கற்றவற்றோடு தான் கல்லாதவற்றையும் சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்ளும் பங்காளன். அவன் வயிற்றுப்பசியைக்கூட போக்கிக்கொள்ள மறந்து கற்பனையில் வாழ்ந்தவன். சமூகத்தின் புறவாழ்வு தேவைகளுக்காக அல்ல அதனுடைய அகவாழ்வு தேவைகளுக்காக தனது அடிப்படைத் தேவைகளைக்கூட நிராகரித்தவன், அவன் பொதுவில் கூலிக்கு மாரடித்தவனல்ல, மகிழ்ச்சியோ துக்கமோ தன் மனதோடு வாழ்ந்தவன். விவசாயக் கூலியாக வேலை பார்த்திருக்கலாம், மடம், பீடமென வைத்துக்கொண்டு குறி சொல்லியிருக்கலாம், ஆரூடம், பார்த்திருக்கலாம், கோவில் அர்ச்சகராக, அலுவலக எழுத்தராக, நாலுவீட்டில் பத்துபாத்திரம் தேய்த்து இப்படி ஏதோவொரு வேலைசெய்து வயிறை கழுவி இருக்கலாம் ? திறன் மிக்க அறிவு அவற்றுக்கென அநேகக் கதவுகளை திறந்து வைத்திருந்தது. இருந்தும் வள்ளுவனும், ஔவையும், புதுமைப்பித்தனும், பாரதியும், மாப்பசானும், டாவின்சியும், வான்காகும் எதற்காக படைப்பாளிகளாக அவதாரம் எடுத்தார்கள் ? நம்முடைய சமூகத்தின் இயக்கம் கலைஞர்கள் சார்ந்ததில்லை ; உழைபாளர்களையும், துறைசார்ந்த வலுனர்களையும் சார்ந்ததெனில், ஏன் இவர்கள் இன்றுங்கூட உலகெங்கும் திரும்பத் திரும்பப் பிறக்கிறார்கள், எழுதுகிறார்கள், தீட்டுகிறார்கள், வடிக்கிறார்கள். அருங்காட்சியகத்திலும், நூலகங்களிலும் ஒப்புமையற்ற அவர்கள் உழைப்பு பொருள் விலைமதிப்பற்றதென்கிற போற்றுதலை ஏன் பெறுகிறது ?
ஆனால் இன்றைய நிலைமை என்ன ? கலை இலக்கியத்திலும் பணத்தின் ஆதிக்கம். பணமும் அதன் பரிவாரங்களும் பிறதுறைகளைப்போலவே இன்றைய இலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் எளிதாக வெல்லமுடிந்திருக்கிறது. தன்னுடைய பதிப்பக முதலாளி வெளிச்சம்போட, ஒளிவட்டம் சூட்டத் தவறினால் இவனே முதலாளியாக மாறி அதற்கான உத்திகளில், வழிமுறைகளில் வியாபாரத் தந்திரங்களோடு எழுத்தில் குத்தாட்டமும், சண்டைகாட்சிகள், காதல் காட்சிகளும் சேர்த்து ஈக்கள் மொய்ப்பதற்கு ஆவனச் செய்து எழுத, தீட்ட, வடிக்க வேண்டிய நெருக்கடி உள்ளது. சராசரி எழுத்தாளனைக்காட்டிலும், சினிமா பரிவாரத்தோடு சேர்ந்து நிற்கும் இலக்கியவாதி இங்கே பேரிலக்கியவாதி, மகா கவி. நல்ல கலைஞர்களை இந்நிலைக்குத் தள்ளுவது யார் ? வாக்குரிமையை விலைக்கு விற்கும் மக்கள் கூட்டத்தில் அரிச்சந்திரர்களை எங்கே தேடமுடியும் ? தண்ணீரை விட கொக்கோகோலாவை விலைகொடுத்து வாங்கும் இலக்கிய அபிமானிகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறபோது வேறு வழி ? நேற்றுவரை நித்தம்நித்தம் புதிதாக படைத்தவன் அவன், படைக்கிறபொழுதே பணம் சம்பாதிப்பதும் அல்லது அதற்கான வெகுமதியை வேறுவகையில் பெற முனைவதும் அவனுடைய நோக்கங்களாக இருந்ததில்லை.
இந்நிலையில் நமக்கு முன் பூதாகாரமாக எழுந்து நிற்கும் கேள்வி, இன்றிருப்பவன் கலைஞனா, கைவினைஞனா ? இன்றைய ஔவையும் புதுமைப்பித்தனும் எடுத்திருக்கும் அவதாரம் வேறு, இது போட்டிகள் நிறைந்த உலகம் : சந்தையில் ஒரே நிறத்தில், வாசனையில் அதிக பேதமின்றி கடை விரிக்கப்படும் பொருள்கள் ஏராளம், இடைத் தரகரைத் தற்போது நம்புவதில் பயனில்லை என்கிறபோது, முதலீடு அறிவுமட்டுமல்ல பிறவும் என்கிறபோது ; அதற்கான தந்திரங்களில் இறங்கவேண்டிய அவசியம் கலைஞர்களுக்கு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் உலகின் பிறபகுதிகளைக் காட்டிலும் நடிகர்களுக்குள்ள வரவேற்பும், அவர்களில் யாரை அரியாசனத்தில் அமரச் செய்வதென்கிற தேர்விலும் நம்முடைய இரசனையை நாம் அறிந்திருக்கிறபோது, திரைக்கதை வசனம், இயக்கம் மற்றும் ஒலி, ஒளியை அதே உபாயத்துடன் கட்டமைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இன்று எழுத்தாளர்களும், ஓவியர்களும், சிற்பிகளும் இருக்கிறார்கள், அவர்களைத் திரும்ப கைவினைஞர்கள் நிலையினின்று கலைஞர்களாக அரியாசனத்தில் அமர்த்தும் பொறுப்பு கலைஅபிமானிகளுக்கு இருக்கிறது.
கலைஞர்கள் உழைப்பு என்பது மனிதர் சமூகத்தில் வயிற்றுப்பாட்டுக்கானது அல்ல மனப்பாட்டுக்காக என்கிற பேருண்மையை உணரவேண்டிய தருணமிது. இங்கேதான் ரூஸ்ஸோவின் சமூக ஒப்பந்தம் சிந்தனைக் குறித்து, நாம் யோசிக்க வேண்டும். ஒரு பக்கம் தனி மனிதன் அவனுடைய நலன் ; இன்னொரு பக்கம் அவன் சார்ந்த சமூகம். அதனுடைய நலன். சமூகத்தின் நலன் என்பது அவனுடைய நலனும் ஆகும், காரணம் அத்தனிமனிதன் அச்சமூகத்தின் ஓர் அங்கம். இநிலையில் அவன் முக்கியத்துவம் தரவேண்டியது அவனுடைய தனிமனிதனுக்கல்ல, அவனுள் இருக்கும் சமூகத்தின் பிரதிநிதிக்கு, அவனுடைய நலனுக்கு. காரணம் தனி மனிதனுக்குக் கேடெனில் அவன் மட்டுமே பாதிக்கப்படுகிறான், ஆனால் சமூகத்திற்கு கேடெனில் அதன் உறுபினனாகிய இவன் மட்டுமல்ல, இவனுடைய உடன்பிறந்தோர், நண்பர்கள், சுற்றம், ஊரார், இவன் இனத்துமக்கள், இன்றைய தலைமுறை, நாளைய தலைமுறையென பெருவாரியான மக்களை அக்கேடு சென்றடையும். ஆகச் சமூகத்தின் நலன் கருதி இன்றைய கலைஞன் எழுதவும், தீட்டவும், வடிக்கவும் செய்தால் மாப்பசானும், புதுமைப்பித்தனும், பாரதியும், கீட்ஸும் நமக்குத் திரும்பக் கிடைப்பார்கள்.
——————————————————————————————————
June 18, 2024
யாம் மெய்யாய் கண்டவற்றுள் -1
(2018 டிசம்பர் யுகமாயினி இதழில் வந்த கட்டுரை)
இரண்டு பிரெஞ்சு பெண்கள் சந்தித்துக்கொண்டால் பேச்சுக்கான முதல் கருப்பொருள் செல்லப்பிராணிகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். நாய்க்கு என்ன கொடுக்கிறாய், பூனைக்கு எந்த மருத்துவரிடம் போகிறாய், விடுமுறைக்கு இத்தாலிபோனபோது நாய் உன்னுடன் வந்திருந்ததா? இப்படி முடிவில்லாமல் கேள்விகள் நீளும். அவரவர் கணவன்மார்களின் நலனைத்தான் விசாரிக்கிறார்களோ என்று சந்தேகித்து வியப்புடன் ஒட்டுகேட்பதுண்டு, ஆனால் பதில்களில் வெளிப்படும் அக்கறையும், இழையும் ஆதங்கமும் தங்கள் சரிபாதிக்கானதல்ல என்பது விளங்கிவிடும். கீழைத் தேசத்து கணவன்மார்களின் நிலைமை பரவாயில்லையென நினைக்கத் தோன்றும்.
மேற்கத்திய ஆண்வர்க்கத்தின் முதல் எதிரியான நாய் பற்றிய கதையிது. சிவலிங்கம் சாட்சிசொன்னதுபோல, காலபைரவன் சாட்சியான கதை. பொய் சாட்சியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இது நாய் சாட்சி. நாயைக் கண்டால் ஆக இளப்பமாக இருந்தது ஒருகாலம். ‘நாயினும் கடையேன்’ என்று சொல்லிக்கொண்ட மகான்களையெல்லாம் படித்திருக்கிறோம். குரைக்கிற நாய் கடிக்காதென்ற பழமொழியும் உண்டு. ஓர் ஆணுக்குப்பதிலாக நாயை மணந்து கொண்ட, பெண்ணுக்கு நேர்ந்த சௌகரியங்களைப் பேசும் மராட்டியமொழிக் கதைபற்றி நகைச்சுவை கலந்து பிரபஞ்சன் ஆற்றிய உரையும் நினைவிலிருக்கிறது. சீனாவில் நாயின் உபயோகம் வேறுமாதிரி இருக்கிறது. அங்கே சில மாகாணங்களில் நாய் இறைச்சியால் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் மிகப் பிரபலம் என்கிறார்கள். சீனர்களில் ஒரு பிரிவினர் நாய்க்கறியை விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். பாரம்பரிய மருத்துவக் குண உணவு வகைகளிலும் நாய் இறைச்சி சேர்க்கப்படுவதுண்டு என்கிறார்கள். இந்து கடவுள்களுக்கு வாகன ஏற்பாடுகளைச் செய்தவர்கள், இறக்குமதியில் ஆர்வம் காட்டாத சுதேசிகள் போலிருக்கிறது. உள்ளூர் தயாரிப்பாக இருந்தால், பிரச்சினை இருக்காதென்று நினைத்திருக்கலாம். ஒட்டகம், கரடியென்று ஆசைபடாமல், தங்கள் தெய்வங்களுக்கு ஆனை, சிங்கம், புலியென்ற வரிசையில், பைரவனுக்கு அல்லது வைரவனுக்கு நாய்வாகனம்.
சேலம் அரசு மருத்துவமனைகளில் நாய்க் கடிக்கு ஊசி போட வரும் நோயாளிகள் ரேஷன் அட்டையை அவசியம் கொண்டு வரவேண்டுன்று ஒருமுறை செய்தித்தாளில் வாசித்த ஞாபகம். நாய்க் கடி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகிற இலவச ஊசிகளால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.15 கோடிவரை செலவாகிறதென்பதே அந்த நிபந்தனைக்கான காரணமென்று சொல்லப்பட்டிருந்தது. சேலம் மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நாய்க்கடி மருந்து ஒன்றின் விலை ரூ.400. ஏழைகள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த மருந்து வழங்கப்படுகிறது. வசதி படைத்தவர்களும் இங்கு வந்து இந்த ஊசியை போட்டுக் கொள்கின்றனர். இதை கட்டுப்படுத்தவே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை உள்ளிட்ட சான்றுகள் கட்டாயம் கொண்டு வர வேண்டும்”, எனச் சொல்கிறோம் என்றார். ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டுமில்லையா? தம்பதிகள் சண்டையில் முடியும் கடியையோ, அரசியல்வாதிகளின் கடியையோ, இலக்கியவாதிகளின் கடியையோ, இந்தச் செலவுக்கணக்கில் கொண்டுவந்திடக்கூடாதென்பதில் அரசுக்குள்ள அக்கறை நமக்குப் புரியாமலில்லை.
ஐரோப்பிய விமான தளங்களில் போதைமருந்து கடத்துபவர்களைப் பிடிக்க நாய்களை உபயோகிப்பதைப் பார்க்கிறேன். தாடி வைத்திருப்பவர்களையெல்லாம் பின்லாடன்களாகச் சந்தேகிக்கிற ஜார்ஜ் புஷ்ஷைப்போல அவை பண்ணும் கூத்து சுவாரஸ்யமாக இருக்கும். பெண்களைக் கண்ணீரில் நனைக்காத நாய்களைத் தொலைகாட்சி தொடர்களில் பார்த்திருக்கிறேன். புதுச்சேரிக்கருகே இருந்த எங்கள் கிராமத்தில் நடந்தது. அந்த நாட்களில், தெருவாசல் கதவுகள் எப்போதும் திறந்தபடி கிடக்கும். ஒரு வீட்டிற்கு பெண்பார்க்கவென்று அசலூர் மாப்பிள்ளையும், அவன் பெற்றோர்களும், சுற்றத்தாரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர். பெருசு ஒன்று, “பொண்ணை கூட்டி வாங்கம்மா, நேரமாவுதில்ல”, எனக் குரல் கொடுத்தது, சட்டென்று அங்கே அமைதி கவிந்தது. பெண்ணை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தார்கள். தன்னைத்தான் அழைத்ததுபோல அடி பிசகாமல் நடந்து வந்து ஒற்றையாக அது நின்றது, தூண்களில் சாய்ந்தபடியும், நடு வாசலிலும் நிற்கிற விடலைப் பையன்களும், பெண்களும் கொல்லென்று சிரித்தார்கள். மாப்பிள்ளை பையன் நிமிர்ந்தவன், தானே கேலிப்பொருளாக்கப் பட்டிருப்பதுபோல உணர்ந்தான். திறந்தவீட்டில் நுழையும் வழக்கத்திற்கேற்ப அங்குவந்து தரிசனம் தந்த நாய்தான் அத்தனைக்கும் காரணம். “நம்ம மணியம்மை நாய்தான்”, பெண்ணுக்குத் தகப்பன் பூரிப்புடன் சொன்னார். ஆக நாய்க்கு காமெடியும் வரும். சாஎலெஸ் ஷ¥ல்ஸ் என்ற எழுத்தாளர் ஸ்னூப்பி என்றொரு நாயை வளர்த்து வந்ததாகவும், அது விநோதமான குணங்கள் உடையதெனவும் சுஜாதா எழுதி படித்த நினைவு. அந்நாய்க்கு சிலரைப் பிடிக்கும்- ஒரு சிலரைப் பிடிக்காது. லூஸி’ என்கிற பெண்ணைப் பிடிக்குமாம். “எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டால், வாலை விஸ் விஸ் என்று தீவிரமாக ஆட்டுமாம். மற்றவரைக்காட்டி “அவரை எவ்வளவு பிடிக்கும்?” என்று பேட்டால், வாலின் நுனியை மட்டும் ஆட்டுமாம். நான் சொல்ல இருப்பது நாயின் வாலாட்டும் விவகாரமல்ல, குரைப்பு விவகாரம் பற்றியது.
ஒரு கொலை வழக்கில் டல்மேஷன் நாயொன்றின் சாட்சிக்கு பிரான்சு நாட்டு நீதித்துறை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. நடந்தது இதுதான். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒர் அறுபது வயது மூதாட்டியொருத்தி பாரீஸ் நகரில் வீட்டில் தூக்கில் தொங்கியிருந்தாள். தடயவியல் பரிசோதனைகளின் முடிவில் கொலையென்று முடிவாயிற்று. புலன்விசாரணையில் இறுதியில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்திருக்கிறார்கள், விசாரணை அதிகாரிக்குள்ள பிரச்சினை, பிடிபட்ட குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை ஒன்று திரட்டவேண்டும். குற்றம் நடந்தபோது, அங்கிருந்த ஒரே சாட்சியம் மூதாட்டியுடைய செல்லப்பிராணியான டல்மேஷன் நாய். வழக்குவிசாரணையை நடத்துகிற குற்றவியல் முதண்மை அதிகாரி, சம்பவத்தினை மறுகட்டமைப்பு செய்வதற்கு நாய் ஒத்துழைக்கவேண்டுமென்று கேட்டு நீதிமன்ற உத்தரவினைப் பிறப்பித்தார். அதன்படி கடந்த ஜூலைமாதம் குற்றம் சாட்டபட்ட இருவரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றனர். இருவரில் ஒருவரைப்பார்த்து நாய் குரைத்திருக்கிறது. நீதிமன்ற எழுத்தர் ஒருவர் அதைப்பதிவு செய்துகொண்டார், தொடர்ந்து புலன்விசாரணையை மேற்கொண்ட அதிகாரி, ஆவணப்படுத்திவருகிறார். தற்போதையை நிலவரத்தின்படி விசாரணையை முடித்தபிறகே வழக்குபற்றிய விபரம் முழுவதுமாக வெளியில் தெரியவரும்.
பிரெஞ்சு நீதித்துறை அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ” எனக்கென்னவோ இதொரு அசாதாரண விஷயமாகத் தெரிகிறது. பிரான்சு நாட்டு நீதித்துறை வரலாற்றில் இதற்குமுன்பு நாயைச் சாட்சியாகவோ அல்லது விசாரணைக்குட்படுத்தியாகவோ சம்பவங்களில்லை. சில வருடங்களுக்கு முன்பு கனடாவிலோ அல்லது ஆஸ்த்திரேலியாவிலோ மணவிலக்கு வழக்கொன்றிர்க்கு, கிளியொன்றின் சாட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஆக எனக்குத் தெரிந்து விலங்குகளை சாட்சியாக எடுத்துக்கொண்ட வழக்குகள் வேறில்லை”, என்கிறார். சரி விலங்குகளின் சாட்சிகளை எந்த அளவிற்கு நம்புவது? அதன் அடிப்படையில் வழங்கப்படும் நீதிக்குள்ள தகுதியென்ன, எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவரது பதில், ” உண்மைதான் பொதுவாக பிறவிலங்குகளின் பங்களிப்பை நீதிவிசாரணையொன்றில் எப்படி எடுத்துக்கொள்கிறோமோ, அப்படித்தான் நாயின் சாட்சியையும் கருதவேண்டும், தவிர நாய் தனது குரலின் ஊடாக இதைத்தான் தெரிவிக்கிறது என திட்டவட்டமாக சொல்லமுடியாத நிலையில் அதுவொரு சாட்சியே இல்லை (null and void) என்றாகிறது, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அல்லது நடந்த குற்றத்திற்கான சாட்சியாகக் கருதப்படும் ஒருவனைக் கண்டு நாய் குரைப்பதை யார் அர்த்தப்படுத்துவது, எப்படி எடுத்துக்கொள்வது? இந்நிலையில் சட்டத் தன்மையற்ற நாயின் குரைப்பை சாட்சியாகக்கொள்வதும் அதன் அடிப்படையில் வழக்குச் சம்பந்தமான ஆவணத்தைத் தயாரிப்பதும் அவசியமாவென, விசாரணை அதிகாரி யோசிக்க வேண்டுமென்கிறார், ஆகத் தற்போதைக்கு இந்த வழக்கில் குரைத்த டல்மேஷன் நாய் சட்டப்படிக் கடிக்கபோவதில்லை- குரைக்கிற நாய் கடிக்காதென்பது பழமொழி.
இந்தியா வல்லரசாக வளர்ந்துவருவதன் காரணமோ என்னவோ வற்றலும் தொற்றலுமாக இருந்த காலமெல்லாம் போய்விட்டது, இப்போது நாய்கள் குறிப்பாக தெரு நாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்து உடல் மினுங்க வலம் வருவதை புதுச்சேரியில் கண்டேன். அவைகளும் அரசியல்வாதிகள், நடிகர்களைப்போல கூட்டம் சேர்க்கின்றன, சேட்டைகள் செய்கின்றன, சத்தமிட்டு விவாதத்திற்கு அழைக்கின்றன, எதிர்க்குரல் கொடுக்கின்றன, ஆர்பாட்டம் செய்த வேகத்தோடு அடங்கிப்போகவும் செய்கின்றன. மரியாதைக்கும் பஞ்சமில்லை சராசரி மனிதர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள், பயத்துடன் ஒதுங்கிப்போகிறார்கள். புதுக்கோட்டையில் நகராட்சி கவுன்சிலர் ஓருவரை தெரு நாய்கள் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அவரது பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்து மக்களை அடிக்கடி அச்சுருத்தி வந்தனவாம். இந் நிலையில் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிந்த கவுன்சிலரை தெரு நாய்கள் சேர்ந்து துரத்தி இருக்கின்றன. நாய்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவரது கை எலும்பு முறிந்ததாம். நீதி: மனித சாட்சிகள் நின்று சாதிக்க முடியாததை, நாய்கள் ஓடிச் சாதிக்கும். மனித சாட்சியே இல்லை என்ற நிலையில் பிரான்சு நீதித்துறை விசாரணை அதிகாரி நாயைக் கூப்பிட்டிருக்கிறார். “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்ற கொள்கையின் அடிப்படையில் பார்க்கிறபோது, குற்றவியல் நீதிவிசாரணை அதிகாரியின் இம்முயற்சி அர்த்தமற்றதுதான் ஆனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதியும் சட்டமும் இருக்கிற நாடுகளில் இப்பிரச்சினைகளை எப்படி கையாள்வது?
இந்தியத் திருநாட்டில் மனித சாட்சிகளை அச்சுறுத்துவதும், விலைகொடுத்து வாங்கப்படுபதும் சர்வ சாதாரணம். குப்பனுக்கும் சுப்பனுக்கும் எதிராக, சாட்சிகள் தைரியமாக பேசும், அப்பாவி குற்றவாளிகளுக்கு எதிராக குற்றவழக்குத் தொடர்ந்தவர்கள் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியும். ஆனால் சட்டம் நெருங்க முடியாதத் திருக்கூட்டம் ஒன்றிருக்கிறது, மனித சாட்சிகளால் துரத்த முடியாத கூட்டமது. அக்கூட்டத்தை அவதானித்தால் அரசியல்வாதிகள், கோடியில் புரளும் ஆன்மீகவாதிகள், நடிகர்கள், பெருவியாபரிகள் அங்கம் வகிப்பார்கள். தீர்ப்பு வழங்கும் நீதித்துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதற்கு சாட்சிகள் உண்டு(?). மனித சாட்சிகள் துரத்தமுடியாத அவர்களை நாய்கள்தான் துரத்தவேண்டும், விலங்குகள்தான் தண்டிக்க வேண்டும். *****
நன்றி: யுகமாயினி
May 23, 2024
கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம் : “சைகோன் – புதுச்சேரி” நாவலை முன்வைத்து: பேராசிரியர் க. பஞ்சாங்கம்.
I
சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல் ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்கு முன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன் கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை குறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானே இலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள், கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்த நேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல் எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையான இந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில் இயங்கியுள்ளார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான்.
முதலில் களத்தை –அதுவும் புதிய புதிய களத்தைத்– தேர்ந்தெடுப்பது, பிறகு அதன் மேல் நின்று கொண்டு எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் தகவல்களைத் தேடித் திரட்டித் தன்னுணர்வாக உள்ளிழுத்துத் தேக்கி வைத்துக் கொள்வது, தொடர்ந்து தேக்கி வைத்துக் கொண்டதைக் கதையாடலாக மொழிமயப்படுத்துவது என்று முப்பரிமாணத்தில் தன் புனைவெழுத்தை நடத்திக் காட்டுகிறார் கிருஷ்ணா; இதை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சான்றுகளோடு விளக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. அவருடைய முதல் நாவலான ‘நீலக்கடல்’ (2005), 16, 17ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரீசியஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்ட புதுச்சேரிப் பிரெஞ்சு காலனிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. மொரீசியஸ் தீவு என்ற, தமிழில் இதுவரை யாருமே தொடாத, புதிய களத்தில் காலூன்றிக் கொண்டு அந்த நாவல் நடக்கிறது. இது போலவே மாத்தாஹரி (2008), காஃப்காவின் நாய்க்குட்டி (2015), ரணகளம் (2018) ஆகிய நாவல்கள் பிரெஞ்சுக் காலனியாக இருந்த, புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஐரோப்பா வரை நீளுகின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2012), நாயக்கர் காலச் செஞ்சியையும் புதுச்சேரியையும் களமாகக் கொண்டு இயங்குகிறது. இறந்த காலம் (2019) என்ற நாவல் புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் ‘ஆரோவில்’-ஐ இயங்கு களமாக அமைத்துக் கொள்ளுகிறது. இப்போது இந்த நாவல், –சைகோன் புதுச்சேரி– பிரெஞ்சு காலனியாக இருந்த இந்தோ சீனாவைத் (சைகோன்) தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறு போல நகர்கிறது.; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும், தொடர்ந்து மொழிமயப்படுத்துவதுமென முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கிருஷ்ணாவின் இந்த எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவிற்குப் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ் மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள் நாம் போற்றும் பிரபஞ்சனும் நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்; இதிலும் பிரபஞ்சனின் களம் காலனிக்குள்ளான புதுச்சேரி நிலப்பரப்பு மட்டும்தான்; ஆனால் கிருஷ்ணாவின் களம் பிரெஞ்சுக் காலனிக்கு ஆட்பட்ட பல்வேறு வகையான நிலப்பரப்பென விரிந்தது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கிந்திய நாடுகளில் நடந்த ஐரோப்பியர்களின் காலனித்துவத்தைத் தமிழில் வேறு சிலரும் எழுதியுள்ளனர்தான்; ப.சிங்காரம் (கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோனி), அகிலன் (பால்மரக் காட்டினிலே), ஆர்.சண்முகம் (சயாம் மரண ரயில்), ரங்கசாமி (லங்கா நதிக்கரையில்), குமரன் (செம்மண்ணில் நீல மலர்கள்), இளம் வழுதி (இலட்சியப்பாதை); பாரதியாரின் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற கவிதையையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணா போல் முழுக்க முழுக்கத் தன் நாவல் எழுத்துக்கள் அனைத்திலும் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை பிரெஞ்சுக் காலனித்துவத்தால் புதுச்சேரி வாசிகள் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு அசைவுகளைப் பல்வேறு கோணத்தில் நான் முன்பே சுட்டிக்காட்டியது போல பல்வேறு ‘களத்தில்’ வைத்துத் தமிழில் படைப்பிலக்கியம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இதை எந்த அளவிற்கு இன்றைய புதுச்சேரி வாசிகளும் எழுத்தாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
II
ஓடி ஓடி உலகம் முழுக்கக் காலனிகளைத் தேடி அடைய ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் காலனி நாடாக உருவெடுத்தது; மேலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இதுதான் முதலில் சிக்கிய காலனி என்ற தகவலையும் இந்த “சைகோன் புதுச்சேரி” நாவல் மூலம் அறிந்து கொள்கிறோம்; இந்தப் போட்டியில் நாங்கள் மற்ற ஐரோப்பியர்களை விட வித்தியாசமானவர்கள்; யோக்கியவான்கள், காலனிக்குள்ளான மக்கள் நலத்தையும் எண்ணிப்பார்ப்பவர்கள் என்றொரு எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் தன் காலனி மக்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமையை வழங்கியது பிரெஞ்சு அரசு. இதற்குப் பெயர் “ரெனோன்சான்” என்பதாகும். இந்த ஆணைப்படிச் “சட்டப்பூர்வமான வயதடைந்த பிரெஞ்சிந்தியர்கள் அனைவரும் ஜாதி, மதம், பாலின வேறுபாடுகள் குறுக்கீடின்றி, பிறப்பால் அவரவருக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அடையாளத்தைக் (சாதி போன்ற அடையாளத்தை) களைந்து கொள்ளலாம்.” குடும்பப் பெயர் ஒன்றைச் (சான்றாக எதுவார் என்பது போன்று) வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரி மக்கள், ஏறத்தாழ ‘மூவாயிரம் கல்’ தொலைவில் இருக்கும் மற்றொரு பிரெஞ்சுக் காலனி நாடான வியட்நாமிற்கு, நாங்களும் பிரெஞ்சுக் குடிமக்கள்தான் என்ற கோதாவோடு, வசதியான வாழ்வைத் தேடிப் புலம்பெயர்ந்து வாழ்ந்த கதையைத்தான் இந்த நாவலில் புனைவாக்கியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. எட்டாம் வகுப்பு அளவிற்குப் புதுச்சேரிப் பள்ளிகளில் படித்தவர்களுக்கே சைகோனில் கடற்படை, ஆயுதக்கிடங்கு, கல்வித்துறை, கப்பல் நிறுவனம், நீதித்துறை, நகராட்சி, காவல்துறை… என்று கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற உத்தியோகங்கள் காத்திருந்தன என்ற தகவலைத் தருகிறார் கதைசொல்லி.
பிரெஞ்சு இந்திய நகரமான புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் விவசாயக் குடும்பம் ஒன்றில் இரண்டு தம்பிகளோடு மூத்தவனாகப் பிறந்து செல்லமாக வளர்ந்த வேதவல்லியை அவளுடைய 14ஆவது வயதில் 30 வயதடைந்த தாய்மாமன் சுப்புராயனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கிறார்கள்; ஒரே காரணம், தாய்மாமன் வீடு பக்கத்துத் தெருதான்; எனவே அன்பு மகளை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆசைதான்; ஆனால் சுப்புராயனோ, “திருமணம் முடித்து நீ பக்கத்துத் தெருவிற்கு வருவதற்கே அந்த அழுகை அழுதவர்கள், சைகோனுக்கு உன்னை அனுப்பச் சம்மதிப்பார்களா? யோசித்துப்பார்” என்று மனைவியைச் சமாதானப்படுத்திச் சம்பாதித்து வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையில் கப்பலேறி சைகோன் வந்து சேர்கிறான். இவ்வாறு “புருஷனுடைய காரியம் யாவிலும் கை கொடுக்க” விதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த வேதவல்லியைப் பிரெஞ்சுக் காலனிய அடக்குமுறைக்குள்ளான வியட்நாமியரும், அடக்குகின்ற ஐரோப்பியரும், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரித் தமிழர்களும், மளிகைக்கடை, ஜவுளிக்கடை, வட்டிக்கடை என்று வணிகம் செய்து சம்பாதிக்க வந்த பிரிட்டிஷ் இந்தியர்களும் ரெயோல் தமிழர்களும் (அதாவது ஐரோப்பியர் கலப்பால் உருவானவர்கள் – தங்களுக்கான விசுவாசிகளை உருவாக்கிக்கொள்ள உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்துக்கொள்ளும் தந்திரத்தினால் உருவான இனம்) மற்றும் லாவோஸ், தாய், கம்போடிய மக்களும் வாழ்கின்ற இந்தோசீனா எனப்படும் சைகோன் என்னவாக மாற்றி வளர்த்தெடுத்தது என்பதுதான் இந்த நாவலின் அடிச்சரடு.
பத்து வயது ஆவதற்குள்ளேயே முழு வீட்டு மராமத்து அனைத்தையும் ஏற்று நடத்திய விவசாயக் குடும்பத்துப் பொண்ணான வேதவல்லி எப்படிப்பட்டவள்? “எருமைத் தயிரை ஏட்டோடு அகப்பை கொள்ள எடுத்துச் சோற்றுக்கு வலிக்காமல் தலையில் பூவை வைக்கிறது போல வைப்பவளாம்”; இப்படிப்பட்டவளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு பிடிக்கவா செய்யும்? “கை நிறைய சோத்தை அள்ளி வாயில் வச்சேன்; இங்கே கரண்டியைப் புடி, குச்சியைப் புடின்னு பாடம் எடுக்கிறாங்க” என்கிறாள் ஓரிடத்தில். கதைசொல்லியும் 1985 தொடங்கி இன்று வரை புலம்பெயர்ந்து பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதனால் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அத்தனை அவஸ்தைகளையும் மிக நுணுக்கமாக வேதவல்லி மூலமாக நாவலுக்கு எந்தப் பங்கமும் இல்லாமல் புனைவு வெளிக்குள் பொருத்தி விடுகிறார். ஆண்டுகள் பல ஆனாலும் வேதவல்லிக்குள் சைகோன் நுழையவே முடியவில்லை:
“சுப்புராயனைத் தவிர என்னுடையதென்று சொல்ல இங்கு எதுவுமில்லை. கண்களைக் கட்டிப் புதைகுழியில் தள்ளப்பட்டிருப்பதைப் போலப் பல நேரங்களில் உணர்கிறேன். ஒவ்வொரு கணமும் புதுச்சேரிக்குத் திரும்பாமல் புதைந்துவிடுவேனோ என அஞ்சி நாட்களைக் கழிக்கிறேன். என் கால் பதித்த பூமியை, கைதொட்ட பூவரசு மரங்களை, பழகிய சினேகிதிகளை, தாயை, தந்தையை, தம்பிகளை, பாகூர் ஏரியை, புதுச்சேரி குயில் தோப்பை, அதிகாலை நாதஸ்வரத்தை, மார்கழி மாதத் திருப்பாவையை, அம்மா ஆசையோடு கொடுத்த அதிரசத்தை என்றாவது ஒருநாள் திரும்பக் காண்பேன், தொடுவேன், கேட்பேன், ருசிப்பேன் என்ற நம்பிக்கையில் கணங்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன்.”
இவ்வாறு “பிறந்த மண்நோய்” என்று சொல்லத் தக்க அளவிற்குப் பீடிக்கப்பட்டிருக்கும் வேதவல்லித் தன்னைச் சைகோனுக்குக் கொண்டு வந்து சேர்த்த, காவல்துறையில் பணியாற்றும் கணவன் சுப்புராயன் நடவடிக்கையில் வெறுப்புற்று ஆண்-பெண் உறவில் ஆணின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பாங்கினை மிக நுட்பமாக உணர்ந்து கொள்பவளாகப் பரிணாமம் அடைகிறாள். “விவேகம், சமயோசிதம், நிதானம், சாதுரியம் என எதிலும் வேதவல்லி மீசுரம்” என்று தன் கணவன் சுப்புராயன் வாயாலேயே சொல்லும் அளவிற்குச் சைகோன் வாழ்வில் வளர்ச்சி அடைகிறாள் “அடை காத்த கோழியே தன் குஞ்சைப் பருந்து வசம் ஒப்படைத்த கதைதான் என் திருமணம்” என்று உணர்ந்து கொள்ளும் அளவிற்கு உயர்கிறாள்:
“பொட்டைக் கழுதைகளுக்குத் தெரிந்து ஆவப்போவதென்ன என்பது அவருடைய உயர்ந்த அபிப்ராயம். வயிற்றுக்குச் சோறு, உடுக்கத் துணி, இந்திரியங்கள் தாகவிடாயில் தவிக்கிறபோது தாம்பத்ய உறவு, ஐரோப்பியர் கொண்டாட்டமோ, தமிழர் விழாக்களோ எதுவென்றாலும் தேர்போல் ஜோடிச்சு, அம்மனைப் போல அலங்கரிச்சு இழுத்துச் சென்று சபையில் நிறுத்தும் புருஷ லட்சணம்; இதற்கு மேல் ஒரு பெண்டாட்டி மூக்கைச் சிந்த என்ன தேவை இருக்கு என்கிற சமூகத்திற்கு என் புலம்பல் காதில் விழாதென்று எனக்குத் தெரியும்.”
இது மட்டுமா? மற்றொரு இடத்தில், “பெரியார், பெண் விடுதலையென்று பேசுற ஆம்பிளைக்குக் கூடத் தங்கள் வீட்டுப் பெண்கள் வேதகாலப் பெண்ணா இருந்தா திருப்தி” என்றும் கிண்டல் செய்கிறாள். “இது என் கணவர் வாங்கிக் கொடுத்த புடவை” என்று ஒரு விழா நிகழ்ச்சியில் வீட்டுக்காரரைப் பெருமைப்படுத்தும் ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்து ஒரு வாங்கு வாங்கி விடுகிறாள் வேதவல்லி:
“பிறந்ததிலிருந்து நம்ம கேட்டு எது நடந்திருக்கு? இந்த ஆளுக்குக் கழுத்த நீட்டுன்னு சொன்னாங்க, நீட்டினோம். தொங்கத் தொங்கத் தாலி கட்டிக்கிட்டோம். இதைச் சமைச்சி வை, அதைப் பண்ணி வை’ என்பாங்க, செய்தோம், “சைகோனுக்குப் புறப்படுன்னு” சொன்னாங்க, புறப்பட்டு வந்தோம். நாமளும் மனுஷங்க தானே; அவங்களுக்கு ரெண்டு வார்த்தை, நம்மளுக்கு ரெண்டு வார்த்தைன்னு இருப்பதுதானே நியாயம் என்றெல்லாம் இன்னும் நீண்டு கொண்டு போகிறது அந்த உரையாடல். இப்படியெல்லாம் வேதவல்லி புதிய பரிணாமம் அடைவதற்கு, ஒரு பக்கம் குடிகாரக் கணவன் என்றால் மற்றொரு பக்கம் இஸ்மாயில் அண்ணன், அவர் மனைவி அமீனா பேகம் மற்றும் புருஷாந்தி போன்ற உன்னதமான ஆண்களோடு பழகக் கிடைத்த வாய்ப்பும், சைகோன் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டு அதன் நிர்வாகியாகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றக் கிடைத்த சமூகச் சூழலும்தான் காரணம் எனச் சொல்ல வேண்டும்; இஸ்மாயில் அண்ணன் ஜவுளிக்கடை, பலசரக்குக்கடை என வைத்துப் பெருஞ்செல்வந்தராக விளங்குபவர். கணவன் மனைவி இருவரும் இந்தியர் சங்கம், அது சார்ந்த விழாக்கள் என அனைத்தையும் முன்னின்று நடத்துபவர்கள். இவர்களின் இஸ்லாமிய வீட்டைக் காட்சிப்படுத்தும் இடத்தில் கதைசொல்லியின் எடுத்துரைப்புத் திறனை அறிந்து வியந்து நிற்க நேர்கிறது; (இந்த மாதிரி சைகோன் நகரத்தையும் தெருக்களையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் வனங்களையும் ஆறுகளையும் கடலையும் போர்க் காட்சிகளையும் நாவலுக்குள் காட்சிப்படுத்த கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருக்கும் கடும் உழைப்பினையும் மொழித்திறத்தினையும் புலப்படுத்த தனியாகவே ஒரு கட்டுரை எழுதினால்தான் முடியும்).
வேதவல்லி வாழ்வில் பெரும் இடம் பிடித்த மற்றொருவரான லெயோன் புருஷாந்தியும் புதுச்சேரியைச் சேர்ந்த ரெனோன்சான்தான்; ஆனால் மற்ற பிரெஞ்சு இந்தியரைப் போல் இல்லாமல் பிரிட்டிஷ் இந்தியா விடுதலை பெற வேண்டும்; அப்பொழுதுதான் பிரெஞ்சு இந்தியாவான புதுச்சேரிக்கும் விடுதலை சாத்தியமென்று இயங்குபவர்; சைகோனிலுள்ள பிரெஞ்சு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த புருஷாந்தி, இந்தியாவில் காந்தியடிகள், ‘அந்நியர்களிடம் அடிமை வேலை பார்க்கும், உத்தியோகத்தை உதறிவிட்டுத் தேசத்திற்காக வெளியே வரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தபோது தானும் வங்கி வேலையை உதறிவிட்டு வெளியே வந்தவர். அதுமட்டுமல்ல நான்கு பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் கோடீஸ்வரியான தன் உறவுக்கார விதவையை இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டதால் பெரும் சீர்திருத்தவாதி என்று பேர் பெற்றவர்; இவரைக் குறித்து வேதவல்லி ஓரிடத்தில், “என்னைப் போல பிறந்த மண்ணுக்கு ஏங்கும் ஓர் ஆணைச் சந்தித்தேன்; 15 ஆண்டுகாலம் அந்த மனிதருடன் எனது சினேகிதம்” என்கிறாள். அவரைக் குறித்துக் கேள்விப்படுவனவும், நேரடியாகவும் பார்க்கின்ற அவரது நடைமுறைச் செயல்பாடுகளும் வேதவல்லியை அவருக்கு நெருக்கமாக இட்டுச் செல்லுகின்றன.
இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஜெர்மனி பிரான்சு தேசத்தைப் பிடித்துவிடவே, பிரெஞ்சுக் காலனியான சைகோன் தலைமை, ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான் கைக்கு மாறுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரியான ஜப்பான் உதவியோடு சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்களைத் திரட்டி, “இந்திய தேசிய சுதந்திர லீக்” சார்பில் “இந்திய தேசியப் படை” என்ற விடுதலைப் படையை உருவாக்கி அதன் தலைவராக இருந்த நேதாஜி, சைகோனுக்கும் வருகை தருகிறார்; சைகோன் தமிழர்களிடையே படு குழப்பம்; தற்போதைய தலைமை, நேதாஜிக்கு வேண்டிய ஜப்பானின் தலைமை என்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வரவேற்கத் தயாராகின்றனர். விடுதலை விரும்பியான புருஷாந்திதான் துணிச்சலாக முன்னின்று நடத்துகிறார்; அரசு ஊழியனான கணவனின் முணுமுணுப்பையும் பொருட்படுத்தாமல் வேதவல்லி ஆர்வத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறாள். அப்பொழுது வேதவல்லி கூறும் ஒரு கூற்று முக்கியமானது: “புருஷாந்தியின் சகோதரர் போல இருந்தார் ‘நேதாஜி’ ” என்கிறாள். தன் விரல்களில் கழுத்தில் கிடந்தவை மட்டுமல்லாமல், தன் மனைவி உடம்பில் கிடந்த நகைகளை எல்லாம் கழற்றி நேதாஜி கையில் கொடுத்த புருஷாந்தியைப் பார்த்து வியந்து விம்மி நிற்கிறாள் வேதவல்லி. இதை ஒட்டி வேதவல்லியின் நினைவோட்டத்தைக் கதைசொல்லி சித்திரிக்கும் பகுதி மிக முக்கியமானது. வேதவல்லியின் நெஞ்சில் எந்த அளவிற்குப் புருஷாந்தி வேர் விட்டுப் படர்ந்துவிட்டார் என்பதைக் காட்டும் பகுதி: “நேதாஜிக்கும் புருஷாந்திக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை. உயரம், ஆகிருதி, தேஜஸ், முகவிலாசம்- இரண்டுபேருக்கும் அப்படியொரு ஒற்றுமை. இருவருமே சராசரி மனிதர் கூட்டத்தில் பிறந்தவர்கள்… அதிகம் போலிகளே நிறைந்த மனிதர் கூட்டத்தில் இப்படிப் பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்… புருஷாந்தியும் நேதாஜியும் விதியால் தீர்மானிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை; விதியைத் தீர்மானிக்கிற மனிதர்கள். சொந்த விதியை மட்டுமல்ல ,மானுடத்தின் விதியை, தேசங்களின் விதியைத் திருத்தி எழுதுகிறவர்கள்; இந்த அபூர்வ மனிதர்களுக்கு முன்பாக சுப்புவும் நானும் எங்களைப் போன்ற கோடானு கோடி ஈனப் பிறவிகளும் மழைக்கால ஈசல் போலப் பிறப்பதும் தெரியாது; இறப்பதும் தெரியாது. இந்த மகாபுருஷர்கள் முளைப்பர்கள், செடியாவார்கள், கொடியாவார்கள், மரமாக நிற்பார்கள். பூவாக, காயாக, கனியாகக் கற்பகோடி காலம் பயன் தருவார்கள்.” இப்படியெல்லாம் புருஷாந்தியைத் தன் நெஞ்சில் பரவிப்படர அனுமதிக்கும் வேதவல்லி ஓரிடத்தில், “மனதில்கூட அந்நிய ஆடவனைத் தீண்டக் கூடாது என்பது உங்கள் சமூகவிதியெனில் நான் உத்தமி கிடையாது” என்று சொல்ல நேர்கிறது; மேலும் புருஷாந்தி, “எங்கள் ரப்பர் தோட்டத்து வேலையாள் ஒருத்தன் ‘இந்தக் குழந்தை அனாதை’ என்று என்னிடம் வந்து விட்டுள்ளான்; இதை நீங்கள்தான் உங்கள் குழந்தையாக ஏற்று உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டபோது குழந்தை இல்லாத வேதவல்லி, கணவனிடம் கூட முன் அனுமதி கேட்காமல் சம்மதிக்கிறாள். ‘லட்சுமி’ என்று பெயரிட்டுப் பின்பு கணவனையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறாள்; புருஷாந்தி செய்கிற ஒவ்வொரு செயலும் அவளுக்குள் இனிமை தருவதாக அமைகிறது.
வேதவல்லியின் இத்தகைய நடவடிக்கைகளைக் காண்கின்ற குடிகாரக் கணவனுக்குள்ளும் சந்தேகம் பரவி வினைபுரிவதையும் கதைசொல்லி பதிவு செய்கிறார்; புருஷாந்தியின் கார் டயரைத் தன் ஆட்களை விட்டுப் பஞ்சர் பண்ண வைக்கிறார்; புருஷாந்தியோடு சேர்ந்து நேதாஜி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவில் வீடு திரும்பும்போது மழையில் நனைந்துவிட்ட வேதவல்லி, கதவை எவ்வளவு தட்டியும் திறக்காமல் இரவு முழுக்க வெளியிலேயே கிடக்கும்படிச் செய்கிறார்; தாங்க முடியாத மனநிலை மேலெழும் ஒரு நிலையில் நேரடியாகவே தன் மனைவியைப் பார்த்து “வேதா! நீ என்னை விட்டுப் போய்விட மாட்டீயே” என மருவுகிறார். பதிலுக்கு ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்கிறாள் மனைவி.
வேதவல்லி “கடந்த 15 ஆண்டுகளாக, புருஷாந்தியுடன் எனது சினேகிதம்” என்று சொல்லிக் கொண்டாலும் காதலென்றும் சொல்ல முடியாத, வெறுமனே நட்பு என்றும் சொல்ல முடியாத ஏதோ ஒரு விதமான பெயர் வைக்க முடியாத உறவு இருவர்க்கிடையே உருவாகிச் செயல்படுவதைக் கதைசொல்லி மிக நுட்பமாகப் புனைந்து காட்டுகிறார். ஆண் – பெண் உறவில் பெரிதும் பேசப்படாத, ஆனால் சமூகத்தில் பெருவாரியாக நடைமுறையில் உள்ள நுட்பமான ஒரு புதிரான உறவை -மொழிவழிக் கதையாடுவதற்குச் சவாலாக இருக்கும் உறவை -மிக மேன்மையான முறையில் போகிற போக்கில் பதிவு செய்வது போன்ற ஒரு பாவனையில் படைத்துக்காட்டியிருப்பது, கதைசொல்லியின் மனித உறவுகள் குறித்த மகாபுரிதலையும் அதைப் புனையும் மொழியாற்றலையும் காட்டுவதாக உணர்ந்து வாசகன் என்ற முறையில் மகிழ்ந்தேன். ரவிந்தரநாத் தாகூர் இந்த மாதிரியான ஓர் உறவைத் தனது சிதைந்த கூடு (நஷ்ட நீட) என்றொரு கதையில் எழுதிக் காட்டியிருக்கிறார்; சத்யசித்ரே கூட அதைக் ‘காதம்பரி’ என்று திரைப்படமாக எடுத்துள்ளார். மகாமேதைகளின் அடையாளம் இத்தகைய நுண்ணிய தளங்களில் இயங்கிக் காட்டுவதுதான் போலும்.
III
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்குவதைப் பார்த்து அமெரிக்கா, பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு, “இனி இந்தக் காலனிய அரசியலைத் தொடரக் கூடாதென்ற” நிபந்தனையுடன் உதவ முன் வந்தவுடன் இங்கிலாந்து வெற்றி அடையத் தொடங்குகிறது; 1945 மார்ச்சு முதல் ஆகஸ்டு மாதம் வரை ஜப்பான் சைக்கோனில் எதிர்த் தாக்குதல் நடத்திப் பிரெஞ்சு வீரர்களைக் கொன்று குவித்தது; ஆனாலும் சைகோன் முழுதும் ஜப்பானியர்தான் இருப்பது போல நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் B52 விமானம் குண்டு மழை பொழியவே மீண்டும் சைகோன் பிரெஞ்சுக்காரர்களின் கீழ் வந்தது. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகிக் கிடந்த பிரான்சிலும் போரில் ஜெர்மன் தோற்றதால் மீண்டும் பிரெஞ்சியர் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது; ஆக்ரமிக்கப்பட்ட பிரான்சில் இருந்து தப்பித்து இங்கிலாந்தில் இருந்து கொண்டு தெகோல், பிரான்சு விடுதலைப் படையை நடத்திக் கொண்டிருந்ததால், இந்த விடுதலைப்படைக்குப் புதுச்சேரியில் உள்ள தமிழ் மக்களும் நிதி திரட்டினர் என்ற தகவலையும் கதைசொல்லி பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு சைகோனில் மீண்டும் பிரெஞ்சியர் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டவுடன் ஜப்பான் ஆதரவுடன் இயங்கிய நேதாஜிக்குச் சைக்கோனில் வரவேற்பும் நன்கொடையும் அளிப்பதை முன்னின்று நடத்திய புருஷாந்தி கைது செய்யப்படுகிறார்; அவர் குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அவரை வெளியே கொண்டு வர வேதவல்லி படாதபாடு படுகிறாள்.. அவருடைய அருமை பெருமைகளையும் சமூகச் சேவைகளையும் பட்டியலிட்டு அதிகாரத்தின் முன் கோரிக்கை வைக்க மனு ஒன்றைத் தயாரித்துப் பலரிடம் கையெழுத்து வாங்க அலைகிறாள்.. ஆனால் யாரும் அதிகாரத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவரிடம் உதவிகள் பெற்ற தமிழர்கள் யாரும் புருஷாந்தியை எட்டிக் கூடப்பார்க்கவில்லை. இந்த இடத்தில் கதைசொல்லி தமிழர்களின் மன அமைப்பில் உறைந்து கிடக்கும் அடிமை உணர்வையும் ஒற்றுமையின்மையையும் புலப்படுத்தி விடுகிறார்.மிகவும் வேண்டிய இஸ்மாயில் அண்ணன் கூட ஒத்துழைக்கவில்லை; தனக்குப் பிறகு சைகோன் வந்து சேர்ந்த சின்னத்தம்பி சிங்காரவேலும் மனுவில் கையெழுத்துவிட மறுத்துவிடுகிறான்; இறுதியில் விசாரணை என்ற பேரில் வதைபட்டு மனம் பிறழ்ந்த நிலையில் புருஷாந்தி சிறையிலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்..
இதற்கிடையில் சைகோனை நூறாண்டு காலமாக அடிமைப்படுத்தி வியட்நாம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சுக் காலனித்துவத்திற்கு எதிராகக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஹோசிமின் தலைமையிலான கம்யூனிஸ்டு விடுதலைப் படை ‘தியன்பியன் பூ’ – எனும் இடத்தில் தன் கடைசி யுத்தத்தைத் தொடங்கிவிட்டது. இந்தப் போர்க்களக் காட்சிகளையும், வியட்நாம் மக்களின் வீரதீரங்களையும் கதைசொல்லி கம்பனைப் போல், நேரில் பார்த்தவர் போல் அவ்வளவு நேர்த்தியாக எடுத்துரைக்கிறார். எப்பொழுதுமே சம்பளம் வாங்கும் அரசாங்கக் கூலிப் படைக்கும் உயிரைப் பணையம் வைத்துப் போராடும் விடுதலைப் படைக்கும் நடக்கும் போரில் விடுதலைப் படை வெற்றி பெறுவதுதானே வரலாற்றின் அறம். “யானைக்கும் புலிக்கும் இடையிலான யுத்தம்” என்று இந்தப் போரை வர்ணித்தாராம் ஹோசிமின். நாவலாசிரியரும் புலிகள் போலப் பாய்ந்து வியட்நாம் விடுதலை வீரர்கள் போரிட்டதை வாசகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறார். கடந்து வர முடியாதபடி அகலமான, கொடூரமான முள்கம்பிவேலி போட்டிருக்குமாம் காலனிய அரசு; முன்னே செல்லும் வியட்நாம் வீரர்கள் அந்த முள் வேலிமேல் தலைகுப்புறப் படுத்துக்கொள்வார்களாம்; பின்னே வரும் வீரர்கள் அந்த உடலின் மேல் மிதித்து முன்னேறிச் செல்வார்களாம். இப்படி மிதிபட்டு உயிரோடு இருந்தவர்கள் குறைவு. இவ்வாறு 56 நாட்கள் உயிரைக் கொடுத்து நடத்திய போரில் சைகோன் தன் விடுதலையைச் சாதித்துக்கொண்டது.
இனிப் பிரான்சுக்குச் செல்வதா? புதுச்சேரிக்குச் செல்வதா? சைக்கோனிலேயே தங்குவதா? என்று பிரச்சனைகள் எழுந்தபோது வேதவல்லி கணவனோடு புதுச்சேரிக்குத் திரும்புகிறாள்; தம்பி சிங்காரவேலுவும் அவனது வியட்நாம் மனைவி மரியாவும் அவர்களின் மகள் இஸபெல்லாவும் பிரான்சுக்குப் புறப்படுகிறார்கள். மகன் பிலிப், கம்யூனிஸ்டு படைவீரன் என்பதால் சைகோனையே தேர்ந்தெடுக்கிறான். லட்சுமி என்று வேதவல்லியின் வளர்ப்பு மகளாக அறியப்பட்ட, வியட்நாம் தாய்க்கும் ஒரு தமிழர்க்கும் பிறந்த பைஃபோங், பாகூரில் சிங்காரவேலுவின் முதல் மனைவி ஜானகிக்குப் பிறந்து அவளால் தந்தையைத் தேடி அடைய சைகோனுக்குக் கப்பலேற்றி அனுப்பப்பட்ட பொன்னுசாமியை மணந்துகொண்டு பிரான்சுக்குப் புறப்படுகிறாள்.
***
புதுச்சேரிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு நாள் வேதவல்லி, வீட்டில் செய்த புட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தன்னைப் போலவே புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த புருஷாந்தியைப் பார்க்கக் காலாற நடந்து போகிறாள். அவர் மனம் பிறழ்ந்த அதே நிலையில், ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்; கொண்டு வந்த பாத்திரத்தை வேதவல்லி கொடுக்கிறாள். வாங்கிக் கொண்ட புருஷாந்தித் திருப்பி அவளிடமே கொடுக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பக்கத்து மனிதர் ஒருவர் “அவருக்குக் கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கம் இல்லை” என்கிறார். வேதவல்லி திரும்பி நடக்கத் தொடங்குகிறாள். “ஹோ ஹோ எனப் புருஷாந்தி சிரிப்பது வெகுதூரம் கேட்டது” என்று நாவல் முடிகிறது. இந்தச் சிரிப்புக்கான அர்த்தத்தை வாசகர்கள்தான் எழுதி நாவலை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
IV
அங்கும் இங்குமெனக் காலத்தாலும் இடத்தாலும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப்பட்டுள்ள ஒரு நேர்கோட்டில்லா நாவலுக்குள் இருந்து நானிங்கே வேதவல்லி என்கிற ஓரிழை வழியாக மட்டும் நாவலைக் குறித்து உரையாடியுள்ளேன். இதேபோல் ஒவ்வொரு இழையைப் பிடித்துக் கொண்டும் மொழியாடுவதற்கு நாவலுக்குள் விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றிரண்டையாவது சொல்லி என் முன்னுரையை முடித்தால்தான் என் மனம் நிறைவடையும்.
குறிப்பாகப் பாகூர்க்கரையில் பழகி, வயிற்றில் கருவை உருவாக்கிவிட்டுச் சைகோனுக்குக் கப்பலேறிவிட்ட வேதவல்லியின் சின்னத்தம்பி சிங்காரவேலுவை அடைவதற்குப் போராடும் ஜானகியின் கதை, பெண்ணின் பேராண்மையையும் போராடும் மன வலுவையும் புலப்படுத்தும் ஒரு கதை ஆகும். ஊரைச் சமாளித்துக் குழந்தையைப் பெற்று வளர்த்து ‘நாலு எழுத்துப்’ படித்துத் தகப்பனைத் தேடி அவனைச் சைக்கோனுக்கு அனுப்ப முடிவெடுகிறாள் ஜானகி. படிக்க வைக்கப் புதுச்சேரி சென்றால்தான் சாத்தியமென்று, வெள்ளைக்காரத் துரை வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்து சாதிக்கிறாள். ஒரு நாள் அந்தத் துரை வீட்டுத் துரைசாணி, “எனக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை; இன்று இரவு அவரோடு கட்டிலில் நீதான் படுக்க வேண்டும்” எனக் கட்டளையிடுகிறாள். வேலை போனாலும் பரவாயில்லை என்று ஜானகி மறுத்துவிடுகிறாள். நல்ல வேளை, இவளை அங்கு வேலையில் சேர்த்துவிட்ட அந்த முகவரே, வேறொரு பெண்ணை அதற்கு ஏற்பாடு செய்து விடுகிறார். இப்படி இந்தக் கதையாடலை நிகழ்த்திக்காட்டுகிறார் கதைசொல்லி; இதில் ஜானகியின் போராடும் திறம் மட்டுமா வெளிப்படுகிறது? காலனித்துவ அதிகாரம் தன் காலனிய மக்களை எந்த அளவிற்குச் சுரண்டிக் கொழுத்துத் திரிந்துள்ளது என்பதையும் இந்தக் கதையாடல் உரத்துப் பேசவிடவில்லையா? கதைசொல்லி எதுவும் பேசவில்லை; காட்சியைக் காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார்; இப்படியான தொனிகளோடு கூடிய எடுத்துரைப்பு நாவல் முழுவதும் பரந்து கிடப்பதால் நின்று நிதானமாக வாசிக்கும் வாசிப்பை நாவல் எதிர்பார்த்துக் கிடக்கிறது.
***
சைகோனின் பண்பாட்டுக் கூறுகளை நாவலுக்குள் படம் பிடிக்கச் சிங்காரவேலுக்கும், வியட்நாமியப் பெண் மரியாவிற்கும் ஏற்படும் காதலையும், தொடர்ந்து நடக்கும் திருமண வாழ்க்கை நிகழ்வுகளையும் கதைசொல்லி பயன்படுத்திக் கொள்ளுகிறார்; மரியாவின் முழுப்பெயர் மரியா ஹோவாம்மீ; அன்னமிட்டுகள் என்று அழைக்கப்படும் இந்த வியட்நாமியர் வழக்கப்படி ஒரு பெண்ணை மணம் முடிக்க வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டார்தான் சீர் வரிசை எல்லாம் செய்யவேண்டும். அரக்கு வண்ணத்திலுள்ள வட்டமான பெட்டி நிறைய வைத்திலை பாக்கு, மணப்பெண்ணுக்குச் சிவப்பு நிறத்தில் பட்டுச்சேலை, மேல் சட்டைக்காகவும் நீண்ட கால்ச்சராய்க்காகவும் பட்டுத்துணி, பொன்னாலான காதணி, இரண்டு ஜாடி நிறைய ஒயின், ஒரு கொழுத்த பன்றி – இவ்வளவும் கொடுத்தால்தான் பெண் கிடைக்கும்.
இதேபோல் வியட்நாம் உணவு வகைகளின் பெயர்களை, –பன் ச்சா, மி க்வாங், பன்ச்சுங், நேம், ச்சாய் ஜா, கோய்கோன், லெச்சே – எல்லாம் நாவலுக்குள் கொண்டு வருவதோடு, ‘பன் கஸ்யோ’ என்ற உணவை எப்படிச் சமைத்து உண்ப என்பதையும் பதிவு செய்கிறார். (உப்பு, மசாலா கலந்து வேக வைத்த இறால், பன்றி இறைச்சி, பீன்ஸ், முட்டை கலந்த கலவையை அரிசிமாவு ரொட்டியுடன் சேர்த்து, அதற்கான மீனு் சாஸ்-இல் நனைத்துச் சாப்பிட வேண்டும்.) வியட்நாமில் சாப்பிடப்படும் மற்றொரு உணவையும் இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். கோழி 21 நாள் முட்டையை அடைகாத்து முடித்தால் குஞ்சு பொரிக்கும்; ஆனால் கொழ கொழவென்று திரவத்துடன் இருக்கும் அந்த வளராத குஞ்சை 15ஆம் நாளிலேயே எடுத்துப் பக்குவம் செய்து சாப்பிடுகின்றனர். வேதவல்லியின் சுப்பு இதை விரும்பிச் சாப்பிடப் பழகிக் கொண்டாராம். இவ்வாறு சைகோனின் உணவு, உடை, அ
May 22, 2024
பிரான்சு நிஜமும் நிழலும் – 2 இடைக்காலம் தொடர்ச்சி
‘படைப்பு’, ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம், மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம். இந்த இரண்டாவது வகையினர் பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும், பிரபுக்கள் அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’ என்கிற குதிரைவீரர்கள் இருந்தனர். இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன. இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் ‘பரணி’ இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம். இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
சிலுவைப்போர்கள் (les croisades)
Signol Emile (1804-1892). Versailles, ch‚teaux de Versailles et de Trianon. MV360.நிலமானிய சமூகம் மூன்று அடுக்குகளைக்கொண்டது : முதலாவது அடுக்கு மதகுருமார்களையும், திருச்சபை உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இரண்டாவது அடுக்கில் ‘les Guerriers’ என்கிற சத்திரிய வர்க்கத்தில் நிலப்பிரபுக்களும் குதிரை வீரர்களும் அடங்குவர் ; மூன்றாவது அடுக்கென்பது les travailleurs எனும் தொழிலாளர்வர்க்கத்தில் குடியானவர்களும், கைவினைஞர்களும் அங்கம் வகித்தனர். இம்மூவரும் ஒருவரையொருவர் சார்ர்ந்திருந்தனர். ஒரு வர்க்கம் பாதிக்கப்பட்டால் மற்றவர்க்கம் உதவவேண்டும் என்ற நிலை. புனிதத் தலத்தை அல்லது புண்ணிய பூமியை(la terre sainte) மீட்பதென்ற சிலுவைப்போரில் ‘les chevaliers’ எனும் குதிரைவீரர்களின் பங்களிப்பு அவசியமாயிற்று.
நயப்பண்பு (la courtoisie). ‘ courtois’ என்ற பிரெஞ்சுசொல்லுக்குப் பொதுவெளியில் நாகரீகமாக நடந்துகொள்வதென்று பொருள். இங்கே பிரபுக்கள் அவையில் அதிலும் பெண்களும் இடம்பெற்றிருக்கிற அவையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றியதே நயப்பண்பு என்கிற ‘la courtoisie’. அதிலும் இடைக்காலத்தின் பிற்பகுதியில் (குறிப்பாக பதினோராம் நூற்றாண்டில் இன்றைய பிரான்சு நாட்டின் தென்பகுதியிலும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடபகுதியிலும்) நிலமானிய சமூகத்தில் பிரபுக்கள் அவையில் உருவான இப்புதிய வழக்கின்படி உயர்குடிப்பெண்கள் இடம்பெற்ற அவைக்களத்தில் இப்பெண்களின் நன்மதிப்பினை பெறவும், அவர்கள் காதலைச் சம்பாதிக்க்கவும் குதிரைவீரர்கள் முனைப்பு காட்டினர். அவர்களின் பார்வைக்கும், வார்த்தைக்கும், அன்பிற்கும், நயப்பண்பு அவசியமாயிற்று, அப்படி நடந்துகொண்ட குதிரைவீரர்கள், அரசவை சீமாட்டிகளின் அபிமானத்தைப் பெற்றதால், அவர்களுக்கு நட்சத்திர தகுதி கிட்டியது. விளைவாக பரணிபாடல்களில் குதிரைவீரர்கள் கதை நாயகர்கள் ஆனார்கள்.இப்’பரணி’ வகைப் (la chanson de gestes) பாடல்களின் பொதுப்பண்புகள் :
அ. கதைநாயகர்கள் அனைவரும் ஒரேமாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
ஆ. உலகம் நல்லது கெட்ட து என எதிரெதிர் நிலையில்வைத்து கையாளப்பட்டது
இ. ஈட்டும் வெற்றி எதிர்காலத்திற்குரியதாக இருந்த து.
ஈ. அரசர், பிரபுக்கள் ஆகியோரிடம் தீவிர விசுவாசத்தை வற்புறுத்தின .
உ. கதை நாயகர்கள் சமூகத்தின் முன்னுதாரணங்கள் எனக் கருதப்பட்ட னர்.
முக்கிய நூல் ‘La Chanson de Roland’ பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் அநாமதேயக் கவிஞரால் பாடப்பட்ட து. ரொலான் என்ற வீரனின் புகழப்பாடும் நூல். இருபதாயிரம் படைவீரர்களோடு ஒருலட்சம் படைவீரர்களைக்கொண்ட எதிரியோடு மோதி பலியானபின், அங்குவரும் மன்னன், ஷார்ல்மாஜ்ன்(Charlemagne) எஞ்சியிருந்த எதிரிப்படையின் மூன்று இலட்சம் வீரர்களை முற்றாக அழிக்கிறான். இறுதியில் தேவதூதன் கப்ரியல் ரொலானுடைய ஆத்மாவை சொர்க்கத்திற்குக் கொண்டுபோகிறான்.
ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம் , அக்காலகட்ட த்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய மக்களிடமிருந்து விலகி அரசவை, திருச்சபை, மேட்டுக்குடியினர் ஆகியோருக்கு உரியனவாக க் கருதப் பட்டன. இந்நிலையில் இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த ‘ரொமான்’ எனும் சாமானியர்மொழியில் சொல்லப்பட்ட இலக்கியங்கள் ‘ரொமான்’ என்று அழைக்கப் பட்டன. தமிழைப்போலவே தொடக்க காலத்தில் பண்பளவில் வெவ்வேறு அடையாளங்களுடன் இருந்த போதும் அவை கவிதைவரிகளில் சொல்லப்பட்டன. புதினம் என்றப் பொருளில் கையாளப்படும் பிரெஞ்சு ‘ரொமான்’ அந்நாளில் பிற இலக்கிய பிரதிகளைப்போலவே (ஏற்கனவே கூறியதைப்போல) படைத்தவர் கற்பனைக்கு முழுமையாக உரியவை அல்ல. ஓர் எழுத்தாளர் தம்முடையதென முழுமையாக ஒரு படைப்புக்கு உரிமை கோரமுடியாது. இச்செயல்பாட்டிற்கு அந்நாளில் வழக்கிலிருந்த பெயர், « ரொமான் மொழிக்கு கொண்டு போதல் (mettre en roman) »அதாவது « ரொமான் மொழியில் செய்தல் அல்லது படைத்தல் (faire en roman » அல்ல. இலத்தீன் மொழியில் சொல்லப்பட்ட படைப்புகளை கொண்டுவருதல் அல்லது ரொமான் மொழிக்குப் பெயர்த்தல் என்ற வகையில் அது நடைமுறைபடுத்தப் பட்ட து. ‘ரொமான்’ எனும் வெகு சன மொழியில் தொடக்கத்தில் சமயகுருமார்களின், திருச்சபை குருக்களின் உண்மை வாழ்க்கை வரலாறு சொல்லப்பட் ட து . இதன் பின்புலத்தில் சமயம் இயங்கியது. புனைவுக்கு அந்த இட த்தை அளித்தவர் கிரெத்தியன் தெ த்ருவா(Chrétien de Troyes) என்ற கவிஞர்.
.
கிரெத்தியன் தெ த்ருவா(Chrétien de Troyes) : s et பிரெஞ்சு ரொமான் வகமையின் முன்னோடி, கற்பனாவாதத்தின் அவான் – கார்ட் (avant-garde) என அழைப்பதிலும் தவறில்லை. ‘படைப்பு’ என்கிற சொல்குறித்த விவாத த்தை முதன்முதலில் தொடங்கிவைத்தவரும் இவர்தான். ஒழுங்கு, விரிசல் இரண்டையும் கதை சொல்ல லில் உள்ளடக்கி சம்பவங்களுக்கிடையே ஓர் ஒத்திசைவைக் கையாண்டவர். தொனி, அங்கதம், கதைமாந்தர்களிடமிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளல் ஆகியவை இவருடைய படைப்புகளின் சிறப்புக் கூறுகள். காதலும் வீரமும் மையப்பொருள்கள். காதல் மணவாழ்க்கையை அடிப்படையாக் கொண்டது. ஆயுதத்தை நெறியுடன் உபயோகிக்க வேண்டுமென்றார். சமூகத்தைக் குறித்த குறிப்பாக மேட்டுக்குடியினரைப்பற்றிய விமர்சனங்களும் உண்டு. ஐந்து ரொமான்களை அல்லது புதினங்களை (கவிதை வடிவில்) எழுதியிருக்கிறார், அனைத்துமே பிரத்தொன் பிரதேசத்தில், வழக்கிலிருந்த செவிவழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை.
இடைக்க்காலத்தில் மூன்றுவகை ‘ரொமான்கள்’ இருந்தன. 1. தொன்மக்கால வீரர்களின் சாகசங்களைச் சொல்பவை தொன்ம ரொமான்(le roman antique) என்றும் ; 2. பிரபுக்களின் அவையிலோ, அல்லது கல்விமானகள் பலர்கூடிய அவையிலோ சொல்லப் பட்டவை பிரெத்தோன் வகை ரொமான்(le roman breton என்றும் ; கீழைநாடுகளின் கதைகளை ஒரியண்ட்டல் ரொமான் (le roman oriental) என்றும் வகைபடுத்தப்பட்டிருந்தன.
த்ரிஸ்த்தானும் இஸேவும்(Tristan et Iseut) இடைக்கால நூல்களில் முக்கியமான ரொமான். பிரெத்தோன் பிரதேச கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாக க்கொண்ட து. கிரெத்தியென் தெ த்ருவா கூட இப்பெயரில் புதினமொன்றை அதாவது ரொமான் ஒன்றை எழுதியாகச் சொல்லப்படுகிறது. தற்போது இப்பெயரில் இரண்டு ஆசிரிரியர்கள் எழுதியுள்ள நூல்கள் கிடைத்திருக்கின்றன. ஒருவர் பெரூல் (Béroul) மற்றவர் தொமா தங்கலெத்தெர் (Thomas d’angleterre). ராஜா, இளவரசன், அழகான இளம்பெண், அரக்கன், சூனயக்காரி ஆகிய கதைமாந்தர்களைக்கொண்டு, காதலையும் வீரத்தையும் சுவைபட சொல்லியிருக்கிறார்கள். கதையின் முடிவில் கதைநாயகனும் கதைநாயகியும் காதலில் தோல்வியுற்றபோதும், மரணத்தில் இணைகிறார்கள் என்கிற கற்பனாவாத இலக்கணத்திற்குப் பொருந்துதுவது ரொமான் அல்லது புதினம்.
May 1, 2024
தமிழில் தலித் இலக்கியம்
இலக்கியத்தை, மனிதர் அடிப்படையில் இன வாரியாக, மதவாரியாக; கொள்கை அடிப்படையில், கோட்பாட்டின் அடிப்படையில்; பிரித்து அணுக முடியுமா? அது முறையா ? இருந்தும், ‘முடியும்’ அல்லது ‘முடிந்திருக்கிறது’ என்பதுதான் எதார்த்தமாக இருந்து வருகிறது. மனிதர்களை அவர்தம் உணர்வுகளைக் கலையாகவோ இலக்கியமாகவோ வெளிப்படுத்துகிற பொழுது அவரவர் நாடு சார்ந்த மண் சார்ந்த வாழ்க்கையின் சில பிரத்தியேக கூறுகளை அதிலும் குறிப்பாக புறவாழ்வை முன்வைத்தே அதிகம் சொல்லப்பட்டுள்ளன.
« மனித சமூகத்தின் மேமைக்கான வடிவங்களாகப் பார்க்கப்பட்ட இலக்கியங்கள், ஒரு கட்டத்தில் சமூகத்தின் சமத்துவமின்மையை சுட்டிக்காட்டத் தொடங்கின » என்கிற வரிகளோடு நூலாசிரியர் பயணிக்கிறார். அறத்தை வற்புறுத்த எழுதபட்ட ஆரம்பகால இலக்கியங்கள் அதைச் சமூகத்தின் மேல் தட்டு மக்களின் பிரச்சினைகளூடாக போதிக்க முயன்றனவேயன்றி அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளூடாக அல்ல. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களையும் மனிதர்களாக ஏற்கத் தொடங்கியது அண்மைக்கால நிகழ்வென்பதால், இலக்கியத்தில் தலித்தியத்தின் வருகையில் ஏற்மட்ட்ட தாமதத்தை விளங்கிக்கொள்கிறோம். ஒருவனை மேடையேற்றிக் கொண்டாடும் வழக்கும், இன்னொருவனை ஒதுக்கித் தண்டிக்கும் போக்கும், அவனுடைய சொந்த வாழ்க்கை நெறியின் உத்தம குணங்கள் அடிப்படையில் விதிக்கப்பட்டதல்ல, பதிலாக அவன் தன் பிழைப்புக்காக செய்யும் தொழிலைச் சாட்சியமாகக் கொண்டு சமூகம் வழங்கும் தண்டனை என்கிறபோது, ஏன் ? எதற்காக ? என்ற கேள்வி மானுடத்தின் நலனில், மேன்மையில் அக்கறைகொண்ட எந்தவொரு மனிதரிடத்திலும் எழுவது இயல்பு. வெம்மையைப் போக்கி குளிர்ச்சியைக் கொடுக்க மழை அருளி மண்ணுயிரைக் காப்பதாக நம்பப்படும் மாரி, அவசியமெனில் காளியாக, கொற்றவையாக அவதாரமெடுக்கிறாள். தன் பிள்ளைகளிடையே இச்சமூகம் பாரபட்சம் காட்டுவதை கலை இலக்கிய மாரிமட்டும் எங்ஙனம் சகித்துக்கொள்வாள் ? ஆக பெண் இலக்கியம், தலித் இலக்கியம் போன்ற கொற்றவை அவதாரங்கள், தீய சக்திகளை கொன்றொழிக்க தேவைப்படுகின்றன.
. ‘தமிழில் தலித்தியம்’ என்ற நூல் 2023 திறனாய்வு நூலுக்கான பஞ்சு பரிசிலினை வென்ற நூல். நூலாசிரியர் சுப்பிரமணி இரமேஷ் என்ற இளைஞர், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழில் தலித்தியம், என ஆசிரியர் நூலுக்கு பெயரிட்டிருந்தாலும், நூலாசிரியர் தமிழ் இலக்கிய வெளிக்குள் தன்னுடைய எழுதுபொருளைச் சுருக்கிக் கொள்ளாமல், இந்தியச் சமூகமெங்கும் பயணித்து, தமிழ்ச் சமூகத்திற்குள் வருகிறார். காரணம் பலரும் அறிந்ததுதான். ‘தலித்’ என்கிற சொல் தமிழ்ச்சொல் அல்ல. நாம் இரவல் பெற்ற ஒரு சொல். விதை ஊன்றப்பட்டதும், அது முளைத்து வளர்ந்ததும் மராட்டிய மண். காதலையும் வீரத்தையும் போற்றும் தமிழ்மண்ணுக்கு, சுதந்திரக் குரலை முதற்குரலாக ஒலிக்கத் வழக்கம்போல தயக்கம். ஆக மராட்டிய சேவல்கள் கூவட்டுமென நம்மவர்கள் காத்திருந்திருக்கிறார்கள். ஏதோ அங்கு நல்லது நடந்திருக்கிறது, நாடெங்கும் அடித்தட்டுமக்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ, தங்கள் உரிமைக் குரல்ழுப்ப மாகாராஷ்டிர மாநிலம் காரணமாக இருந்துள்ளது. தலித் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடமும் அம்மேன்மக்களுக்கு தலைவணங்கவேண்டும். கத்தியின்றி இரத்தமின்றி மாபெரும் புரட்சியை முன்னெடுத்த பெருமை தலித்தியம் என்ற மந்திரச்சொல்லைச் சேரும்.
‘தமிழில் தலித்தியம்’ நூலாசிரியர் பதினைந்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் ஆழமாகவும், உரிய சான்றுகளுடனும் தலித்தியம் சொல்லின் பிறப்பு, அச்சொல்லை முன்னெடுத்த மனிதர்கள்,அதற்கான காரணங்கள், இந்திய மாநிலங்களில் தலித்தியத்தின் வளர்ச்சி, அதன் பின்புலத்தில் இருந்த அமைப்புகள், அதற்குழைத்த தலைவர்கள் இலக்கியவெளியில் இந்தியாவின் முக்கிய மொழிகளில் தலித்தியம் ஏற்படுத்திய தாக்கமென நுட்பமாக அணுகியுள்ளார். தலித்தியம் பற்றிய சுருக்கமான வரலாற்றுடன் நூல் தொடங்குகிறது இந்தியக் குடியரசில் அம்பேத்கர் என்கிற மூதறிஞருடைய இடமென்ன என்பதை நாம் அறிவோம், எனவே தலித்தியத்தின் பிறப்பிடம் மகாரஷ்டிரமாக இருந்ததில் வியப்பில்லை. இத்தேசத் தலைவருடன் தலித் என்கிற சொல்லின் பிறப்புக்கு காரணமானவரென நாம் அறியவரும் மற்றொரு பெயர் ஜோதிராவ் புலே. மகாராஷ்ட்டிரத்தில் சூத்திரர்களில் ஒரு பிரிவினரான மாலி இனத்தவர். எனவே பிறப்பால் உயர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட பிற சாதி மக்களால் இவரும் இவரைச் சார்ந்தவர்களும் தினசரி வாழ்க்கையில் அவமதிப்பிற்கு உள்ளாக வேண்டியிருந்தது. விளைவாக, புலே 1873 ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து « சத்ய சோதக் சமாஜ் » எனும் அமைப்பைத்தொடங்கியுள்ளார். அதனூடாகச் சாதிய ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவத்தை நிலை நாட்டுவதும், தாழ்tத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைச் சாதியக் கொடுமைகளிலிருந்து மீட்பதும் அவரது நோக்கம். அதாவது தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட பட்டியல் சாதி மக்களை ஒன்றிணைக்க « தலித் » என்னும் சொல்லை ஜோதிராவ் புலே உருவாக்கினார்.(பக்கம் 21) என்பது தலித் சொல்லாடல் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்.
ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் மராட்டிய மண்ணில் இச்சொல்லைப் ‘புலே’ உபயோகித்திருப்பினும், இந்தியாவெங்கும் (மகாராஷ்ட்டிர மாநிலம் உட்பட) இவார்த்தை ஒடுக்கபட்ட மனிதர்களிலும் ஒருபிரிவினரை மட்டுமே அடையாளப்படுத்தும் சாதியச் சொல்லாக வழக்கில் இருப்பதால், தமிழ் மண்ணில் சாதிகள் உண்டா என்கிற தேடலோடு நூல் தொடங்குகிறது. அந்தணர், வேந்தர், மறவர், வணிகர், உழவர், கொல்லர், தச்சர், பாணர், புலையர், சேவைக்குடியினர், இழிசனர் என தொழில்சார்ந்த சாதியப் பாகுபாடுகள் நம்மிடையே இருந்ந்திருக்கின்றன என்கிற உண்மையை சங்க நூல்களின் துணைகொண்டு ஆசிரியர் உறுதிபடுத்துகிறார். தலித் இயக்கங்களைப் பற்றி பேசுகிறபோது தமிழகத்தில் 1891ல் உருவான திராவிட மகாஜன சபையின் அயோத்திதாசர் மற்றும் பறையர் மகாஜனசபையின் இரட்டைமலை சீனிவாசன் இருவரும் சாதி அரசியல் தலைவர்கள் போல இல்லாமல் எங்ஙனம் சொல்லால் செயலால் தங்கள் மக்களின் உயர்வுக்காக உண்மைச் சேவகர்களாக உழைத்திருக்கிறார்கள் என்றறிகிறோம்.
நூலில் 17 தலைப்புகள் தலித்தியம் பற்றிய ஒளிக்கதிர்களாக குறுக்கிடுகின்றன : அவை இதற்கு முந்தைய பத்தியொன்றில் தெரிவித்தது போல தலித்திய வரலாற்றில் ஆரம்பித்து தலித்திய இயக்கங்கள் ; மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா தலித் இலக்கியங்கள் ; தலித்திய தன்வரலாற்று நூல்கள் ; தலித்திய அரசியல் ; தலித்திய சிந்தனைகளென்று பயணித்து இறுதியாக தமிழ் தலித்தியம் குறித்து இந்நூல் சற்று விரிவாகவே அலசுகிறது. தலித்திய இலக்கியத்தின் பண்புகளென இடம்பெறும் குறிப்புகள் முக்கியமானவை. உதாரணத்திற்கு ;
« கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களுக்கு முக்கியத்துவம் தருகிறது »« வைதீக மரபுக்கும் ஆதிக்க சாதிகளின் பண்பாட்டுக்கும் எதிரானதாகத் தலித் இலக்கியம் படைக்கப்பட்டுள்ளது »« அதிகாரத்தை நேரடியாக கேள்விகேட்கிறது »என நிறைகளைப் பட்டியலிடும் அதே நேரத்தில்,
« சமூக நீதிகள் அல்லது அடக்குமுறைகள் மீதான சிறுகதைகளை ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற பேரால் எழுதுவதற்கு மிகவும் முரட்டுத்தனமான, கரடுமுரடான வலிந்து தாக்கும் ஒரு மொழி நடையைப் பயன்படுத்துகிறது ; கவிதையில் இது மிகவும் கூடுதலாகவே இருக்கிறது » எஅனதலித்திய இலக்கியத்தில் காணும் குறைகளையும் சுட்டத் தவறுவதில்லை.
« படித்து பொருளாதாரத்தில் முன்னேறிய தலித் இளைஞர்கள் தங்களை உயர்சாதி மனோபாவத்துடன் கட்டமைத்துக்கொண்டனர் »என்கிற விமர்சனத்தையும் காய்த்தல் உவத்தலின்றி திறனாய்வு நூலுக்கான அறத்துடன் முன்வைக்கிறது. ஆகப்பிரச்சினை சாதியத்தில் மட்டுமில்லை, மனிதர் வர்க்கம் சமனிதரிடையே ஏற்றத்தாழ்வைக் கற்பிக்க தம்முடைய சமூகச் சூழலையொத்து ஏதேனும் ஒரு காரணத்தைத் தேடுகிறதென்பது நமது வாழ்க்கை, காலம் காலமாக உணர்த்தும் உண்மை. சமத்துவமின்மையின் அடிப்படையில் சூத்திரர்கள், சூத்திரர்கள் அல்லாதோரென பிரித்துணரப்பட்ட இதே இந்தியச் சமூகத்தில் சூத்திரர்களிடையேகூட ஏற்றத்தாழ்வை முன்வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதையும், அவ்வாறே ஓரிடத்தில் தங்களை உயர்சாதியினராக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களேகூட பிரிதோரிடத்தில் சூத்திரர்களாக நடத்தப்பட்ட உதாரணங்களும் இருக்கின்றன. பாரிஸ்ட்டர் பட்டம்பெற்ற காந்தியேகூட முதல் வகுப்பில் வெள்ளையர்களுடன் பயணிக்க உரிமையில்லையென மறுக்கப்பட்ட கதை நாம் அறிந்ததுதான். அவ்வாறே இந்திய மண்ணில் உயர்சாதியினராக இருந்தாலுங்கூட ஓர் இனவாத ஐரோப்பியனுக்கு, நாம் அனைவருமே தீண்டத்தகாதவர் என்கிற எதார்த்தத்தை உணருவோமேயானால், சக மனிதரிடையே பேதங்கள் பார்க்கமாட்டோம். ஆக புற உலகில் மட்டுமல்ல மனிதர்களின் அக உலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இதற்கு விமோசனமில்லை, அதற்காக ஒடுக்கபட்ட மனிதர்கள் அமைதிகாத்திட வேண்டுமென்பதில்லை, பொறுத்தது போதும் பொங்கியெழு என உள்ளம் கட்டளையிடுகிறபோது சொரணையுள்ளவனுக்கு கோபம் வருவது இயற்கை, தலித்திய இலக்கியக்குரலை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழில் தலித்தியம் நூலாசிரியர், தமது பங்கிற்கு ஒடுக்கப்படும் மனிதர்களுக்கு ஆதரவாக தமது குரலை பதிவுசெய்ய விரும்பி அதனைக் குறையின்றி நிறைவேற்றியும் உள்ளார் எனபதுதான் இந்நூலின் சிறப்பு.
———————————————————————————————————————
April 19, 2024
பிரான்சு நிஜமும் நிழலும் – II
இடைக்காலம் (கி.பி 476- 1453)
இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது இலத்தீன் மொழியின் வெகுசன வடிவம். இரும்பு யுகத்தில், பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், மக்களைக் கொலுவாக்கள் என்றும், அவர்கள் பேசிய மொழி கொலுவா என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரோமானியர் படையெடுத்துப்பின் விளைகாக இலத்தீன் மொழி உள்ளே நுழைகிறது. இந்த இலத்தீன் உள்ளூர் மொழியோடு கலந்து வெகுசனப் பயன்பாட்டிற்கு வருகிறது. இடைக்காலத்தின் ஆரம்பத்தில் ரொமானியர்களின் செல்வாக்கு ஜெர்மானியர்களின் படையெடுப்பினால் சரிவுற்றதும், ஜெர்மானிய பிராங்க் இன மக்கள் ரொமானியர் இடத்தைப் பிடிக்கின்றனர், இந்நிலையில் இடைக்காலத்தின் போது பிரான்சுநாட்டில் செல்வாக்குடனிருந்வை மூன்று வெகுசன மொழிகள். அ. ஓக் மொழி (la langue d’oc); ஆ. ஓய் மொழி (la langue d’oïl ); இ. பிராங்ஃகோ – ப்ரொவொன்சால்(le franco-provençal). இவற்றைத் தவிர பேச்சு வழக்கிலிருந்த மொழிகளும் அனேகம். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஈல் தெ பிரான்சு (ile de france) அரசவை மொழியை இலத்தீன் மொழிக்குப் பதிலாக பயன்படுத்துவதென, 1539 ஆம் ஆண்டில் தீர்மானிக்கிறார்கள். ஆக முதன்முறையாக இலத்தீன் மொழியின் இடத்தில், வெகுசனமொழியாக மட்டுமே இருந்து வந்த இன்றைய பிரெஞ்சு மொழி அதிகாரமொழியாக, அரசு மொழியாக, சமயமொழியாக, இலக்கியமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள். பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக பிரெஞ்சு மொழியின் வரலாறு:
இடைக்காலத்தில் எழுதவும் படிக்கவும் தெரிந்த மக்கள் குறைந்த எண்ணிக்கையினர், அதுவும் தவிர ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அறிந்திராத மக்களின் வாய்மொழியாக இலக்கியம் அறியப்பட்ட காலம். ‘les troubadours’ அல்லது ‘les trouvères’ என்கிற பாணர்கள் நிலமானிய பிரபுக்களின் வரவேற்பறைகளில், அவைக் களத்தில் இட்டுக்கட்டிக் பாடியவைதான் அன்றைக்கு இலக்கியம். வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டவை என்பதால் மறக்காலிருக்க ஓசையால் சொற்களை வரிசைப்படுத்திக்கொள்வது அவசியமாயிற்று. அவர்களின் படைப்புத் திறன் என்பது நினைவு படுத்த இயலாத சொற்களை, வரிகளை இட்டு நிரப்புவது. எனவேதான் இடைக்காலத்தின் ஆரம்பகாலத்தில் படைப்பாளிகள் பெயரைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. திரும்பத் திரும்ப ஒரே கதை கூறுபவரின் சொல்வன்மையைப் பொறுத்து புதிய புதிய கற்பனைகளுடன் சொல்லபட்டன. பொதுவாகவே இடைக்கால இலக்கியங்களைத் தழுவல்கள், மொழிபெயர்ப்புகள் என்றுதான் ( இலத்தீன் மொழியிலிருந்து வெகுசன மொழிக்கு) கூறமுடியும். நிலமானிய முறை வழக்கில் இருந்தகாலம். எனவே பணம் படைத்த, அதிகாரம் படைத்த செல்வந்தர்களின் ஆதரவினை நம்பியே இலக்கியங்களுமிருந்தன.
‘படைப்பு’, ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம், மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம். இந்த இரண்டாவது வகையினர் பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும், பிரபுக்கள் அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’ என்கிற குதிரைவீரர்கள் இருந்தனர். இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன. இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் ‘பரணி’ இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம். இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
விசும்பின் துளி : நதி
ஆகாயம் – திசை – தேவலோகம் -மேகம் -வீம்பு- கருவம்- இறுமாப்பு – செருக்கு என்றெல்லாம் அகராதிகள் ‘விசும்பு’ என்ற சொல்லுக்குப் பொருள் தருகின்றன. இவற்றோடு ‘மெல்லிய அழுகையையும் சேர்த்துக்கொண்டால் சொல்லை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள உதவும். சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் நாஞ்சில் நாடனுடன் பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்தும், உட்கார்ந்தும், உண்டும் பருகியும் உரையாடியதன் விளவு இக்கட்டுரையை எழுத உட்கார்ந்தபோது விசும்பு என்ற சொல் குறித்து அகராதியைப் புரட்டத் தூண்டியது.
‘விசும்பு’ என்பதற்கு வான் சிறப்பு அதிகாரத்தின் குறள் பதினொன்றின்படி ஆகாயம். வான் சிறப்பு – பசும்புல் இரண்டையும் இணைத்து, ‘விசும்பின் துளி’ என்பதை மேகத்தின் துளியாக பார்க்கவேண்டியுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடிய வள்ளுவன் விசும்பை கருவம்-இறுமாப்பு-செருக்கு என்ற பொருளில் கையாண்டிருக்க கிஞ்சித்தும் நியாயமில்லை. பழம்தமிழ்ப்பாடல்கள் அனைத்தும் விசும்பு என்ற சொல்லை ஆகாயம் என்ற பொருளில் பயன்படுத்தியுமைக்குச் சான்றுகள் உள்ளன. விசும்பின் துளியை மெல்லிய அழுகையாக காண்பதிலும் ஓர் அழகிருக்கிறது. ஒவென்று குரலெடுத்து அழுதல் அல்லது கதறி அழுதல் சோகத்தின் உச்சம், கொடும் துன்பம். விசும்பல் அப்படியல்ல. அது குழந்தைகள், பெண்களென்று தனக்கானவர்களை தேர்ந்தெடுத்துக் கையாளுகிறது. அவர்களின் விசும்பல் பெரிதும் சுய தேவையின்பாற்பட்டது.
விசும்பலை மெல்லிய கேவலாகப் பொருள்கொண்டு ஆகாயத்துடன் இணைத்துப்பார்க்கலாமா ? ஐம்பெரும் பூதாங்களில் ஒன்றான ஆகாயத்திற்கு, உயிர்களைக் காப்பதன்றி ; அவற்றின் ஆயுளை நீட்டிக்க, அவற்றின் சந்ததியினரை உய்விக்க என்பதன்றி வேறு சுயதேவைகள் இல்லை என்பது இயற்கைத் தரும் செய்தி. விசும்பின் அழுகைத்துளிக் கூட்டத்தால் அவற்றின் பெருக்கத்தால் உருவாகும் நதிகள் ஆகாயத்தின் கொடை.
‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற உண்மையை உணர்ந்து, நிலக்குடத்தை நிரப்ப வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும் உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற நதியென்னும் அற நூல். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின் இவ்வினையையே நாம் ஆறு, புனல், நதியென அழகு தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.
பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும் மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம். மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.
காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் » என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம், நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.
பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி, பண்புகளின் கண்ணாடி, கலை இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த மெசொபொத்தோமியா ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு.
நதியோடு நமக்கு வாய்த்த பெருமையையும் இன்று அடைந்துள்ள சிறுமையையும் பேசுவதற்கு முன்பாக கடந்தகாலத்தில் நமது காவிரியும் இப்படித்தான் இருந்திருக்குமோ என என்னைக் காணும்தோறும் கனவில் ஆழ்த்தும் ரைன்(Rhin) நதி பற்றிச் சொல்லாமற்போனால் இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு எப்படியோ எனக்கு நிறைவாகாது.
பிரான்சு நாட்டை பொறுத்தவரை பெரிய நதிகளென ஐந்து நதிகள் இருக்கின்றன. இவற்றை இந்திய பெருநதிகளோடு ஒப்பிடமுடியாது. பிரான்சின் கிழக்கு எல்லையில் பாய்கிற ரைன் நதியே பிரான்சின் நீளமான நதி. கங்கையைப்போல பலகோடிமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான புனித நதி அல்ல என்கிறபோதும் தனது பிரவாகத்தால் கரையோர நகரங்களுக்கும், அந்நகர் சார்ந்த நாடுகளுக்கும் பொருள்வளத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றது. சற்றேரக்குறைய 1500 கி. மீ தூரம் பாய்கின்ற மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிற ஐரோப்பிய நதிகளில் இதுவுமொன்று. சுவிட்ஸர்லாந்து, ஆஸ்த்திரியா, ஜெர்மன், பிரான்சு, ஹாலந்து ஆகிய நாடுகளுக்கிடையே மனிதர் மற்றும் சரக்குகள் பரிமாற்ற பயன்பாட்டிற்கு உதவும் நதி.
ஒ ரைன் நதியே !
காதல் பைத்தியங்கள்
இப்போதெல்லாம்
இனிமையான கனவுகளுக்கு
இதயத்தைப் பறிகொடுப்பது
ஏன் தெரியுமா ?
பச்சைபசேல் என்றிருக்கும் – நின்
காடுகளும், பரந்துவிரித
புல்வெளிகளும்
நித்தம் நித்தம் அவர்களைப்
பித்தர்களாக்கினால்
வேறென் செய்வார்கள் ?
இது ஆல்பிரடு முஸ்ஸே (Alfred Musset) என்கிற பிரெஞ்சு கவிஞனின் ரைன் நதிபற்றிய கவிதை.
என்னைக் கவர்ந்த இன்னொரு நதி செக் நாட்டின் தலைநகர் பிராஹா வில் பாயும் வல்ட்டாவாநதி. சிலவருடங்களுக்கு முன் நகரையும் அதன் ஊடேபாயும் வல்ட்டாவா நதியிலும் பயணம் செய்த அனுப்பவம். காஃப்காபவின் நாய்க்குட்டி நாவலில் பல பக்கங்களை நதிக்கென ஒதுக்கி இருக்கிறேன், விரிக்க ஆரம்பித்தால் கட்டுரை நீளும்.
நண்பர்களே ! இயற்கை நம்மை ஈர்க்க பல்வேறு சங்கதிகளைத் தம் கைவசம் வைத்திருக்கிறது. அவற்றுள் நதிகளுக்குத் தனித்தசிறப்பு உண்டு. உயிர் வாழ, செழித்துவாழ அதனால் இவ்வுலகம் உய்ய அண்டசராசரத்தையும் தன்னுள் அடக்கிய மழைத்துளியின் பூதவடிவம் நதி. கடந்தகாலத்தில் தன்னைத் தேடி நீர் வராதென்ற நிலையில் தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது. அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிற மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும் வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .
பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி
மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி
தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்
கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !
காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை
தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி
தாணு தெற்பை சிறுபீளை சாடிணை
வெங்கோரை பொருதலை வெள்ளமே !
என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால் நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.
நதியைக் கண்ட தும் நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே தங்கலாயினர். ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ; அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும் என்று நம்பினான், அன்றிலிருந்து நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.
எனவேதான்,
பூவார் சோலை மயில் ஆல
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி !
என்று காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில் இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது.
உழவர் ஓதை, மதகோதை
உடைநீர் ஓதை, தண்பதங்கொள்
விழவரோதை, சிறந்தார்ப்ப
நடந்தாய், வாழி காவேரி !
காவிரிக்கரையில் காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.
உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்
பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை, இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம். அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில் செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்ட தோர் வையை பொருனைநதி-என
மேவியாறு பலஓடத்- திரு
மேனி செழித்த தமிழ்நாடு !
என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும் ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில் இந்த ஐந்து அல்லாது பல நதிகளின் பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.
தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும் நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில் « …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது. அவ்வாறே துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.
‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள
நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘
‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’
என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம், நீர் நிலம் என்பதால்.
ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும் அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.
ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து.
நல்குடிப்பிறந்தோர், தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும் அடுத்தவர் கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.
தமிழே தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால் மிகையில்லை.
குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான வைகையும் இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும் பின்னிப்பிணைந்தவை. காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.
நீராடல் நீர் விளையாட்டு வேறு என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, « நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும் தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல். நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும் ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு. புதுப்புனல்விளையாட்டில் பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி, நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த கதையை
“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. « கன்னியர் ஆகி நிலவினில் ஆடிக் களித்த தும் இந்நாடே- தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே ! » என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர் விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும் வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய கவலை.
————————————————————————-
Nagarathinam Krishna's Blog
- Nagarathinam Krishna's profile
- 3 followers

