பிரான்சு நிஜமும் நிழலும் – II

இடைக்காலம் (கி.பி 476- 1453)

இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது  இலத்தீன் மொழியின்  வெகுசன வடிவம்.  இரும்பு யுகத்தில்,  பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், மக்களைக் கொலுவாக்கள் என்றும், அவர்கள் பேசிய மொழி   கொலுவா என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரோமானியர்  படையெடுத்துப்பின் விளைகாக இலத்தீன் மொழி உள்ளே நுழைகிறது. இந்த இலத்தீன் உள்ளூர் மொழியோடு கலந்து  வெகுசனப் பயன்பாட்டிற்கு வருகிறது. இடைக்காலத்தின் ஆரம்பத்தில் ரொமானியர்களின் செல்வாக்கு ஜெர்மானியர்களின் படையெடுப்பினால் சரிவுற்றதும், ஜெர்மானிய பிராங்க் இன மக்கள் ரொமானியர் இடத்தைப்  பிடிக்கின்றனர்,  இந்நிலையில்  இடைக்காலத்தின் போது பிரான்சுநாட்டில் செல்வாக்குடனிருந்வை மூன்று வெகுசன மொழிகள். அ. ஓக் மொழி (la langue d’oc); ஆ. ஓய் மொழி (la langue d’oïl ); இ. பிராங்ஃகோ – ப்ரொவொன்சால்(le franco-provençal). இவற்றைத் தவிர பேச்சு வழக்கிலிருந்த மொழிகளும் அனேகம். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்  ஈல் தெ பிரான்சு (ile de france) அரசவை  மொழியை  இலத்தீன் மொழிக்குப் பதிலாக பயன்படுத்துவதென,  1539 ஆம் ஆண்டில் தீர்மானிக்கிறார்கள். ஆக முதன்முறையாக இலத்தீன் மொழியின் இடத்தில், வெகுசனமொழியாக மட்டுமே இருந்து வந்த இன்றைய பிரெஞ்சு மொழி அதிகாரமொழியாக, அரசு மொழியாக, சமயமொழியாக, இலக்கியமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக  பிரெஞ்சு மொழியின் வரலாறு:

இடைக்காலத்தில்  எழுதவும் படிக்கவும் தெரிந்த மக்கள் குறைந்த எண்ணிக்கையினர், அதுவும் தவிர  ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அறிந்திராத மக்களின் வாய்மொழியாக  இலக்கியம் அறியப்பட்ட காலம். ‘les troubadours’ அல்லது ‘les trouvères’  என்கிற   பாணர்கள் நிலமானிய  பிரபுக்களின் வரவேற்பறைகளில்,  அவைக் களத்தில்  இட்டுக்கட்டிக் பாடியவைதான் அன்றைக்கு இலக்கியம்.  வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டவை என்பதால் மறக்காலிருக்க ஓசையால் சொற்களை வரிசைப்படுத்திக்கொள்வது அவசியமாயிற்று. அவர்களின் படைப்புத் திறன் என்பது நினைவு படுத்த இயலாத சொற்களை, வரிகளை இட்டு நிரப்புவது.  எனவேதான் இடைக்காலத்தின் ஆரம்பகாலத்தில் படைப்பாளிகள் பெயரைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை.  திரும்பத் திரும்ப ஒரே கதை  கூறுபவரின் சொல்வன்மையைப் பொறுத்து புதிய புதிய கற்பனைகளுடன் சொல்லபட்டன. பொதுவாகவே இடைக்கால இலக்கியங்களைத் தழுவல்கள், மொழிபெயர்ப்புகள் என்றுதான் ( இலத்தீன் மொழியிலிருந்து வெகுசன மொழிக்கு)  கூறமுடியும். நிலமானிய முறை வழக்கில் இருந்தகாலம். எனவே பணம் படைத்த, அதிகாரம் படைத்த செல்வந்தர்களின்  ஆதரவினை நம்பியே  இலக்கியங்களுமிருந்தன.

‘படைப்பு’,  ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில்  பதின்மூன்றாம் நூற்றாண்டில்  வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி  கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம்,  மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம்.  இந்த இரண்டாவது வகையினர்  பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும்,  பிரபுக்கள்  அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.  இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’   என்கிற குதிரைவீரர்கள்  இருந்தனர்.   இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன.  இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் ‘பரணி’ இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம்.  இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால்  முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2024 19:45
No comments have been added yet.


Nagarathinam Krishna's Blog

Nagarathinam Krishna
Nagarathinam Krishna isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Nagarathinam Krishna's blog with rss.