Nagarathinam Krishna's Blog, page 7
October 1, 2022
சிமோன் அப்பா (பிரெஞ்சு சிறுகதை)
கி தெ மொப்பசான்
தமிழில் நா. கிருஷ்ணா
(1er décembre 1879 பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும், மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )
நண்பகல், காலை நேர வகுப்புகள் முடிவுக்குவந்ததை தெரிவிக்கும் வகையில் பள்ளி மணி அடித்து ஓய்ந்தது. பள்ளிக் கதவு திறக்கப்பட்டது, பையன்கள் முந்தி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்கள். வழக்கமாக வகுப்பிலிருந்து வெளியேறிய அடுத்தநொடி உணவுக்காக கலைந்து விடுவார்கள், இன்று வழக்கத்திற்கு மாறாக, சிறிது தூரத்தில் கூடி நின்று, முணுமுணுக்கிறார்கள்.
காரணம் இல்லாமலில்லை, அன்றைய தினம் காலையில்தான், லா பிளான்ஷோத் மகன், முதன் முறையாக அவர்கள் வகுப்பிற்கு வந்திருந்தான். பிளான்ஷோத் என்ற பெண்மணியின் பெயர் அவர்களுக்குப் புதிதல்ல, ஒவ்வொரு பையனின் குடும்பத்திலும் அப்பெயரைக் குறிப்பிட்டுப் வம்பு பேசுவது அன்றாடம் நடப்பதுதான் ; பொதுவெளியில் நல்ல அபிப்ராயம் இருப்பினும், அவர்கள் அம்மாக்களிடையே பெண்மணியின் பெயர் ஏதோ பாவப்பட்டதென்கிற அபிப்ராயம் இருக்கவே செய்தது, பையன்களும் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலேயே, அப்பெண்மணியைக்குறித்து அதே கருத்தைக் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
சிமோன் விஷயத்திற்கு வருவோம், அவன் வயது பையன்களுக்கு சிமோனைத் தெரியுமா என்றால் தெரியாது.. அவன் வீட்டிலேயே அடைந்து கிடப்பவன், பிற பையன்களோடு கிராமத்துத் தெருக்களிலோ அல்லது ஆற்றங்கரைகளிளோ ஓடிப்பிடித்து விளையாடுவதெல்லாம் இல்லை, ஊர்ப்பையன்களுக்கும் அவன் விளையாட வரவில்லை என்பதால் வருத்தமும் இல்லை. இப்படியான சூழலில்தான், சிமோன் இவர்களோடு அதிகம் கலக்காததன் காரணத்தை நன்கறிந்தவன்போல ஒருபையன், அவனுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும், கண்களை இலேசாக சிமிட்டிக்கொண்டு ஏளனத்தோடு கூறியதை ஒருவித மகிழ்ச்சியோடும், கணிசமான ஆச்சரியத்தோடும் வரவேற்று, தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவன் தெரிவித்த செய்தி :
« சிமோனைத் தெரியுமில்லையா, அவனுக்கு அப்பா கிடையாதாம் ! »
பிளான்ஷோத் மகனான சிமோனும் வகுப்பிலிருந்து வெளியில்வந்திருந்தான். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், கொஞ்சம் வெளிறிய தேகம், பார்க்க என்னவோ போலிருந்தாலும், பையன் படு சுத்தம்.
சிமோன் வீடு திரும்பவேண்டும், வேறெங்கே அவன் அம்மாவிடம். ஆனல் அவனுடைய பள்ளித் தோழர்கள் விடுவதாக இல்லை, கூடிக்கூடித் தங்களுக்குள் அவனைப்பற்றிய கிசுகிசுப்பைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தவர்களின் விஷமும், குரூரமும் கலந்த பார்வை தற்போது நம்முடைய பையன் மீது, தொடர்ந்து அவனைச் சீண்டிப் பார்க்கும் திட்டத்துடன், ஒருவர் இருவரென நெருங்க ஆரம்பித்து, அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.
இவர்களுக்கு என்னிடம் என்ன வேண்டும், எதற்காக இப்படி தண்னைச் சூழ்ந்து நிற்கவேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள இயலாமல் குழப்பத்துடனும், வியப்புடனும் சிறுவன் சிமோன் அவர்கள் மத்தியில் நிற்க, அவனைப் பற்றிய செய்தியைப் கொண்டுவந்து, அதனை வெற்றிகரமாக பரப்பிய பெருமையில் திளைத்த பையன் இவனை நெருங்கி :
« உன் பெயரென்ன ? » எனக்கேடக, இவனும் « சிமோன் ! » எனத் தெரிவித்தான்.
« சிமோன், சிமோன் மட்டும் தானா, தலைப்பெழுத்தில்லையா ? » எனத் திரும்பவும் போக்கிரிப்பையன் கேட்க,
ஐந்துவயது சிறுவனும் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் :
« ஆமாம், ‘சிமோன்’ » என்றான்.
« மொட்டையா இப்படி சிமோன் என்று சொன்னால் ஆச்சா ? » – குரலை உயர்த்தி வயதில் மூத்தபையன் சிமோனை மறுபடியும் கேட்டான்.
« என்னுடைய பெயர் சிமோன், அதைத் தவிர வேறு பெயர்களில்லை » என்றான், கண்களில் நீர்கோர்த்திருந்தது.
கூடியிருந்த பையன்கள் சிரிக்க ஆரம்பித்தனர், இப்பிரச்சனையில் மறுபடியும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் சிமோனைச் சீண்டியவன் :
« நல்லா கேட்டுக்குங்க. இவன் அப்பன் இல்லாத பையன் ! » – என்றான்.
மறுகணம், அங்கு மிகப்பெரிய அமைதி. பையன்கள் மொத்தபேரும் அதிர்ச்சியில் ஊமையாக நின்றார்கள், ‘தகப்பனற்ற ஒருபையன்’ என்பது, அவர்களைப் பொறுத்தவரை அசாதாரணமான, நம்பவியலாத, மிகவும் மோசமானதொரு தகவல். இயற்கைக்குப் புறம்பான ஓர் அதிசயப் பிறவியைப் போல அவனைப் பார்த்தனர். சிமோன் தாய் பிளான்ஷோத் குறித்து, அவர்களுடைய அம்மாக்கள் இதுநாளவரை கொண்டிருந்த, விவரிக்க முடியாத அதே வெறுப்பு தங்களிடமும் நன்கு வளர்ந்திருப்பதை அவர்கள் உணர முடிந்தது.
சிமோனைப் பொறுத்தவரை, மீளமுடியாத பேரிடரில் சிக்கியதாக கருதி, ஒரு மரத்தின் பிடிப்பில் அழுந்த சாய்ந்து நின்றான். தன் தரப்பில் பதில்சொல்லவேண்டும், என்ன சொல்லலாம், யோசித்தான். தனக்கொரு தகப்பனில்லை என்கிற மோசமான விஷயத்தை மறுப்பதற்கு, மற்ற பையன்களுக்குப் பதிலென்று ஒன்றைக் கூற அவனிடம் எதுவுமில்லை. இறுதியாக, ஏதாவது சொல்லவேண்டும் என்றெண்ணியவன்போல ஆத்திரத்துடன் அவர்களிடம்: “நீங்க நினைப்பதுபோல அப்பனில்லாத பையன் இல்லை, எனக்கும் ஒருவர் இருக்கிறார்”, எனக் கத்தினான்.
« இருக்கிறார் என்றால், எங்கே? » – இம்முறையும் கேள்வி கேட்டது வயதில் மூத்த அதே பையன்.
சிமோன் பதிலின்றி மௌனம் காத்தான்; தெரிந்தால்தானே சொல்வான். சுற்றி நின்ற சிறுவர்கள் சந்தோஷ மிகுதியில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள், விலங்குகள், பறவைகளென்று உறவாடும் வாழ்க்கை. கோழிப்பண்ணையில், காயமுற்ற ஒரு பறவையின் ஜீவனை முடிக்க, பிறகோழிகளுக்குத் தேவைப்படும் குரூரத்தைக் கண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு, சிமோன் அவர்களுக்குக் காயமுற்ற பறவை. இந்நிலையில் சிமோன் கவனம் திடீரென்று அருகிலிலிருந்த சிறுவன்மீது சென்றது, அவன் அண்டைவீட்டுப் பையன், தாய் ஒரு விதவை, சிமோனைப்போலவே அப் பையனும் தாயுடன் தனியே வசிப்பவன்.
« ஏய் உன்னைத்தான். உனக்கு மட்டும் அப்பா இருக்கிறாரா என்ன, உனக்குக் கூடத்தான் இல்லை » – என்று அவனிடம் சிமோன் கூற,
« யார் சொன்னது அப்படி, எனக்கு அப்பா இருக்கிறாரே! »- என்றான் அப் பொடியன்.
« இருந்தால், எங்கே? » சிமோன் பதில் கேள்வி கேட்டான்.
« அவர் செத்துட்டார், கல்லறையில் இருக்கிறார். »
சிமோனுக்கு தக்கப் பதிலைக் கொடுத்த பெருமிதம் பையனிடம் தெரிந்தது. அண்டைவீட்டுப் பையனின் தகவலுக்கு கூடிநின்ற பிற பையன்களின் ஒப்புதலும் முணுமுணுப்பாக வெளிப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை அவனது தந்தை கல்லறையில் இறந்துவிட்டார் என்ற உண்மை, தந்தையென்று ஒருவரும் இல்லாத பையனைத் துவம்சம் செய்யப் போதுமானது. கூடிநின்ற பையன்களின் தகப்பன்களும் பெரும்பாலும் பொல்லாதவர்கள், குடிகாரர்கள், கள்வர்கள், தங்கள் தங்கள் மனைவியரிடம் கடுமையாக நடந்துகொள்கிறவர்கள், இந்நிலையில் அவர்கள் பிள்ளைகளாகிய தாங்கள் எல்லோரும் நெறிமுறைப்படி இருப்பவர்கள்போலவும், மாறாக சிமோன் நெறிமுறைக்குள் வராதவன் போலவும் எனவே அவன் மூச்சுமுட்டிச் சாகலாம் என்பதுபோல ஒருவரை ஒருவர் முட்டிமோதிக்கொண்டு அவனை நெருங்கினார்கள்.
அடுத்த நொடி, சிமேனுக்கு நேரெதிரில் இருந்த பையன், அவனைக் கிண்டல் செய்யும் விதத்தில் தன்னுடைய நாக்கை வெளியில் நீட்டிக் காட்டிய பின்:
“அப்பாஇல்லை! இவனுக்கு அப்பா இல்லை ! » எனச் சத்தம் போட்டான்.
சிமோன் இரு கைகளாலும் அவன் தலைதலைமுடியைப் பற்றி, கால்களால் உதைக்க அச்சிறுவனோ சிமோன் கன்னத்தை மிருகத்தனமாகக் கடித்தான். அடுத்த நொடி அங்கே பெரும் சலசலப்பு. சண்டைபிடித்த பையன்கள் விலக்கப்பட்டார்கள். கூடியபையன்கள் கைத்ட்டி ஆர்ப்பரிக்க சிமோன் அடிபட்டு, ஆடைகிழிந்து, கன்றிப்போய், ஆங்காங்கே வீங்கி , தரையில் கிடந்தான். எந்திரத்தனமாக எழுந்து, தன் சட்டைக்குமேல் அணிந்திருந்த ஜாக்கெட்டில் படிந்திருந்த மண்ணையும் தூசிகளையும் தட்டிக்கொண்டிருக்க, கும்பலில் இருந்த ஒரு பையன்:
« நடந்த விஷயத்தை போய் உன் அப்பாகிட்ட சொல்லு.» எனக் கத்தினான்.
சிமோன் இதயம் உடைந்து நொறுங்கியிருந்தது. தன்னைச் சுறியிருந்த பையன்கள் பலசாலிகள், அவர்களுக்குப் பதில் சொல்ல இவனால் ஆகாது, காரணம் அவனுக்கு அப்பா இல்லை என்பது பொய்யல்ல உண்மை. பையன்கள் முன்பாக அழக்கூடாது, அப்படி அழுவது தன்னைச் சங்கடத்தில் நிறுத்தக்கூடும் என்பதால் ஒருவித பெருமிதத்துடன் அழுகையை அடக்கப் பிரயத்தனம் செய்தான். மூச்சுத் திணறியது, பின்னர் சத்தமின்றி பெரும் துக்கத்தில் உடல் குலுங்க தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
இந்நிலையில் அவனுடைய எதிரிகளிடையே ஒருவித மூர்க்கத்தனமான மகிழ்ச்சி வெடித்தது. அச்சத்திற்குரிய கொண்டாட்டங்களில் காட்டுமிராண்டிகள் வெளிப்படுத்தும் இயல்புடன், அவர்கள் ஒருவரையொருவர் கைகளைப் பிணைத்துக்கொண்டு, அவனைச் சுற்றிவந்து ஆட்டம்போடத் தொடங்கினார்கள்: « அப்பா இல்லை »” « அப்பா இல்லை » எனத் திரும்பத் திரும்பச் சொல்லவும் செய்தார்கள்.
ஆனால் சிமோன் மறு நொடி அழுகையை நிறுத்தினான். ஒருவித ஆத்திரமும் கோபமும் தலைக்கேறியது. காலடியில் கற்கள் கிடந்தன; அவற்றைக் கையிலெடுத்தவன் முழு பலத்துடன், தன்னிடம் வம்புசெய்தப் பையன்கள் மீது வீசினான். அடிபட்ட இரண்டு அல்லது மூன்று பேர் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். சிமோன் தற்போது ஏதோ பலசாலிபோல தோற்றம் தர, பிற பையன்களிடத்திலும் ஒருவித அச்சத்தைக் காணமுடிந்தது. பெருங்கோபமுற ஒரு மனிதன் முன்பு நிற்பதற்கு அஞ்சியோடும் கூட்டம்போல, பையன்களும் கோழைகளாக தங்களை விட்டால் போதுமென்று ஓடி மறைந்தனர்.
தனித்து விடப்பட்ட , தந்தையற்ற அச்சிறுவன், மனதில் தோன்றிய பழைய நினைவொன்றின் காரணமாக ஆற்றிள் மூழ்கி உயிரைவிடத் தீர்மானித்து வயற்காடுகளை நோக்கி ஓடினான். உண்மையில், எட்டுநாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு படுத்திக்கொண்டான். உயிர்வாழ்க்கைக்காக பிச்சையெடுத்த ஒரு தரித்திர மனிதன் கையில் காசில்லையென்று ஆற்றில் குதித்திருந்தான். அவனைத் நீரிலிருந்து மீட்டு கரையில் போட்டபோது சிமோன் அங்கிருந்தான். பாவபட்ட அம்மனிதன், சாதாரணமாக பரிதாபமாக இருப்பான், அத்துடன் அசுத்தமான அசிங்கமானத் தோற்றம்வேறு. இந்நிலையில் அம்மனிதனை, வெளிறிய கன்னங்கள், நீரில் நனைந்த நீண்ட தாடி, மூட மறந்த கண்களென்று கரையில் கிடத்தியிருந்தபோது, அவனிடத்தில் கண்ட அமைதி, இவனிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த கூட்டத்தில் ஒருவர். “அவன் இறந்துவிட்டான்” என்றார். இன்னொருவர் “அவன் முகத்தில் இப்போதுதான் சந்தோஷத்தை காணமுடிகிறது” என்றார். அவனைப்போல சிமோனும் ஆற்றில் விழுந்து இறக்க நினைத்தான், காரணம், இறந்த தரித்திர மனிதனுக்கு கையில் காசில்லை என்பதுபோல இவனுக்கும் தகப்பனில்லை.
ஆற்றின் அருகே சென்றதும் சிமோன் பார்வை தண்ணீர் மீது சென்றது. மீன்கள் சில தெளிவான நீரோட்டத்தில் சற்று துள்ளலுடன் உல்லாசமாக வலம்வந்தன, அவ்வப்போது எம்பி நீரின் மேற்பரப்பில் வட்டமிட்ட ஈக்களைப் பிடித்தன. அவற்றின் செயல்பாடுகள் ஆர்வத்தைத் தர ,அழுவதை நிறுத்தி அவற்றைப் பார்த்தான். ஆனால் சில சமயங்களில், புயலுக்கிடையிலான அமைதியின்போது திடீரென வீசும் சூறைக்காற்று மரங்களை முறித்து சாய்த்தபின் அடிவானத்தில் மறைந்துபோவதுண்டு, அதுபோல சாகவேண்டும் என்ற எண்ணம் மனதில் பெரும் வலியுடடன் அவனுள் உதித்தது.: “நான் நீரில் மூழ்கவேண்டும், காரணம் எனக்கும் தந்தையென்று ஒருவருமில்லை” எனத் தனக்குள் கூறிக்கொண்டான்.
வெயில் கூடுதலாக இருந்தாபோதிலும், குறைசொல்ல முடியாது, வெப்பம் தாங்கிக் கொள்ளகூடியதாக. இனிமையான கதிரொளியில் புல் பூண்டுகளில் வெதுவெதுப்பை உணர்ந்தான். நீர் கண்ணாடி போல் ஒளிர்ந்தது. சிமோன் ஒரு சில நிமிடங்கள் பேரின்பத்தில் திளைத்தான். கண்களில் நீர்கோர்த்தது, தொடர்ந்துணர்ந்த சோர்வில், அங்கிருந்த புல்தரையில், காயும் வெயிலில் படுத்துறங்க விரும்பினான்.
சிறிய பச்சை தவளையொன்று அவனது காலடியில் குதித்தது. அதைக் கையில் எடுக்க முயற்சிக்க தப்பித்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதியில் அதன் பின்னங்கால்களின் நுனியைப் பிடித்துத் தூக்கினான். அச்சிறு பிராணி, அவன் பிடியிலிருந்து தப்பிக்கச் செய்த முயற்சிகளைக் காண அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் உடலைச் சுருக்கி பின்னங்கால்களில் நிறுத்திய மறுகணம் உடலைத் தளர்த்தி, அவற்றை தவளை நீட்ட, இரண்டும் கம்பிகளைப் போல விறைத்துக் கொண்டன. அதே வேளை பொன் வளையமிட்ட வட்டமான கண்களுடன், தவளையின் முன் கால்களின் பாதங்களிரண்டும் அசைவது கைகளை அசைப்பதுபோல இருந்தது. அக்காட்சி, சிறு சிறு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று ஆணியால் இணைத்து குறுக்குமறுக்குமாக உருவாக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்குரிய விளையாட்டுபொம்மையை அவனுக்கு நினைவூட்டியது, அதிலும் இப்படித்தான் பொம்மைவீரர்களை அசைத்து இயக்க முடியும். பின்னர் தனது வீட்டையும் தாயையும் நினைத்து, மிகுந்த சோகத்துடன் பழையபடி அழ ஆரம்பித்தான். அவனுடைய கைகால்களில் உதறல் எடுத்தது. உறங்குவதற்கு முன்பு மண்டியிட்டு பிரார்த்தனை செய்வான். அதைத் தற்போதும் முயன்றான், ஆனால் அதை முடிக்க இயலவில்லை, காரணம் விம்மல்கள் இடைவெளியின்றி, விரைவாகவாகவும், கொந்தளித்தும் அவனை முழுமையாக ஆக்ரமித்திருந்தன. இந்நிலையில் அனைத்தையும் மறந்தான், அவனைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதிலும் கவனம்செல்லவில்லை, தற்போதைக்கு அழுவது ஒன்றுதான் செய்யவேண்டிய வேலை என்பதுபோல அதைமட்டும் செய்தான்.
திடீரென்று, கனத்ததொரு கரம் தோளை அழுத்துகிறது, தொடர்ந்து கட்டைக் குரலில் : « அடேய் குட்டி பையா`! அப்படியென்ன கவலை உனக்கு, எங்கிட்டச் சொல்லேன், நானும் தெரிந்து கொள்கிறேன்`! ? » என்றது. சிமோன் திரும்பிப் பார்த்தான். சுருட்டைமுடியும், தாடியுமாக வாட்டசாட்டமான தொழிலாளித் தோற்றத்தில் இருந்த அம்மனிதன் நல்லவிதமாக அவனைப் பார்த்தான். சிமோன் அவனிடம், கலங்கிய கண்களும் நெஞ்சமுமாக : :
« அப்பா இல்லையென்று சொல்லி, எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு.. எனக்கு…அப்பா இல்லை » என பதிலளித்தான்.
« என்னது, அப்பா இல்லையா, அப்ப்டையெல்லாம் ஒருவரும் இருக்க முடியாது. தந்தை இல்லாத மனிதரில்லை, எல்லோருக்கும் அப்பா உண்டு » எனத் தெரிவித்து, அந்நபர் சிரித்தான்.
சிறுவன், தனது கடுந்துயரத்திற்கிடையில், சிரமத்துடன் பதில் சொல்ல முனைந்து : “ஆனால் எனக்கு அப்படி ஒருத்தரில்லை.” » என்றான். சிறுவனின் பதில் தொழிலாளியை பையன் விஷயத்தில் அக்கறைகொள்ள வைத்தது. பையன் வேறு யாருமல்ல லா பிளான்ஷோத் மகன் என்பதைத் தொழிலாளி புரிந்துகொண்டான். ஊருக்குப் புதியவன் என்றாலும், ஓரளவிற்கு சிமோன் கதையை அம்மனிதன் அறிந்திருந்தான்.
« உனக்கு ஒரு அப்பா வேண்டும், அவ்வளவுதானே கவலைப் படாதே, கொடுக்க முடியும் , என்னுடன் வா, உன் அம்மாவிடம்போவோம்” – என்று சிமோனிடம் தெரிவித்தான்.
சிறுவன் கையைப்பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து நடந்தார்கள். தொழிலாளியின் முகத்தில் மீண்டும் சிரிப்பு, காரணம் பையனின் தாய் ‘பிளான்ஷோத்’ ஐ திரும்பச் சந்திக்க நேரும் என்பதைக் குறித்த வருத்தமேதும் அவரிடமில்லை. அப்போதெல்லாம் அவள் ஊரில் மிக அழகானப் பெண்களில் ஒருத்தியென பெயரெடுத்திருந்தாள். ஒருவேளை அத்தொழிலாளியின் அடிமனதில் அவள் இள்மபெண்ணாக இருந்தபோது இழைத்த தவறை மறுபடியும் இழைக்கலாம், என்கிற எண்ணமிருக்கலாம், யார் அறிவார்.
பையனும் தொழிலாளியும், வெள்ளையடித்து, நன்கு பராமரிக்கபட்டிருந்த ஒரு சிறிய வீட்டை . அடைந்தார்கள். அங்கிருந்த பெண்மனியைக் கண்டதும்:
« இதுதான் ! » என்று வீட்டை அடையாளப்படுத்திய பையன். « அம்மா ! » என்று கூவி அழைத்தான்.
வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி வெளிப்பட்டாள். அவளைக் கண்ட மறுநொடி தொழிலாளி சிரிப்பதை நிறுத்தினான், காரணம் நெட்டையாகவும், சற்று வெளிறிய தேகத்துடனும் இருந்த அப்பெண், ஏற்கனவே ஓருவனிடம் ஏமாந்தது போதும் இனி ஒர் ஆணை வாசற்படியைத் தாண்ட விடமாட்டேன் என்பதுபோல கடுமையான முகத்துடன் வாயிலில் நின்றிருந்தாள். அவள் தோற்றம் தொழிலாளியை அச்சம்கொள்ளச் செய்தது.தலையிலிருந்த தொப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு, தடுமாற்றத்துடன்: ” மேடம் இதோ உங்கள் பையன், ஆற்றங்கரையோரம் பார்த்தேன், அழைத்து வந்தேன் ” – என்றான்.
ஆனால் சிமோன் தன் தாயைக் இறுகப் பிடித்துக்கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்தான்:
« அம்மா, ஆற்றைத்தேடி நான் போனது, விழுந்து சாகத்தான். எல்லோரும் என்னை அடித்தார்கள், உதைத்தார்கள் … ஏனென்றால் எனக்கு அப்பா இல்லையாம் ». இளம்பெண்ணின் கன்னமிரண்டும் எறிதழல்போல சிவந்தன, நெஞ்சில் ரணப்பட்டிருந்தாள். உணர்ச்சிவேகத்தில் மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய முத்தமிட்டாள். வந்த மனிதனோ நெகிழ்ந்திருந்தான், அங்கிருந்து எப்படி விடைபெற்றுச் செலதெனத் தெரியாமல் குழம்பியபடி நின்றிருந்தான்.. இந்நிலையில் பையன் சிமோன் திடீரென்று அவனிடம் ஓடிவந்தான் :
« உங்களுக்கு என்னுடைய அப்பாவா இருக்க விருப்பமா? » – எனக்கேட்டான்.
பெரும் அமைதி. லா பிளான்ஷோத், ஊமையாக, தான் பரிதாபமானநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப்போல கூனிக்குறுகி இருகைகளையும் மார்பில்வைத்து சுவரின் பிடிமானத்தில் சாய்ந்து நின்றாள். தனது கேள்விக்குப் பதில் வராத நிலையில், சிறுவன் மீண்டும்:
« உங்களுக்கு என்னுடைய அப்பா ஆக விருப்பமில்லைன்னா சொல்லுங்க, நான் ஆத்துல குதிச்சுடறேன் »- என்றான்.
தொழிலாளி அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டவன்போல, சிரித்துக்கொண்டே
« ஏன் ஆகக் கூடாது? உனக்கு அப்பாவாக இருக்க எனக்கும் சம்மதம்தான் » என்றான்.
« நல்லது, உங்கள் பெயரைச் சொல்லுங்க, மற்றவர்கள் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டால் நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டுமில்லையா? »
“பிலிப்,” என்று தொழிலாளி தனது பெயரைக் கூறினான்.
ஒரு நொடி சிமோன் ‘பிலிப்’ என்கிற அப்பெயரை தனது மனதில் நன்கு பதிவு செய்தக்கொள்ள எண்ணியவன் போல அமைதியாக இருந்தான். பின்னர் தனது கைகளை நீட்டி:
« நல்லது, இனி பிலிப் ஆகிய நீங்கள் எனக்கு அப்பா! » – என்றான், தொழிலாளியின் பதிலால் சாமாதானம் அடைந்தவன் போல.
பையனை தரையில் இருந்து உயரே தூக்கிப்பிடித்த தொழிலாளி இரண்டு கன்னங்களிலும் ஒருவித அவசரத்துடன் முத்தமிட்டான், பின்னர் அதே வேகத்தில் அவ்விடத்திலிருந்து விரைவாக நடந்துசென்றான்.
அடுத்த நாள் பையன் பள்ளிக்குள் நுழைந்தபோது, எதிர்பார்த்ததுபோலவே விஷமச் சிரிப்பொன்று அவனை வரவேற்றது; அன்றும் வகுப்பை விட்டு வெளியேறும்போது, மூத்த வயது பையன் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிக்க, சிமோன் தன் மனதில் பதிவு செய்திருந்த வார்த்தைகளை, கல்லை எறிவதுபோல வீசினான் :
« பெயர் பிலிப், அவர் தான் என் அப்பா. »
எனச் சிமோன் தெரிவிக்கவும், எல்லா பக்கங்களிலிருந்தும் ஏளன ஆரவாரங்கள்:
« என்ன சொன்ன பிலிப்பா யார் அது?…இப்படி தலையுமில்லா வாலுமில்லாம சொன்னா போதுமா?… அது என்ன, பிலிப்?… எங்கே கண்ண்டு பிடிச்ச அந்தப் பெயரை?”
சிமோனுக்குப் பதில் சொல்ல விருப்பமில்லை; அவனுக்குத் தான் தெரிவித்த பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை, அலட்சியத்துடன் பையன்களைப் பார்த்தான். அவர்களுக்காக பயந்து ஓடும் எண்ணமில்லை மாறாக எது நடந்தாலும் நடக்கட்டும், எனப் பொறுமையுடனிருந்தான். நல்லவேளையாக பள்ளி ஆசிரியர் குறுக்கிட்டு சிக்கலிலிருந்து அவனை விடுவித்தார். அவனும் வீடுவந்து சேர்ந்தான்.
இச்சம்பவத்திற்குப் பின்னர் மூன்று மாதங்கள் தொழிலாளி பிலிப், லா பிளான்ஷோத் வீட்டு வழியாக அடிக்கடி போக நேரிட்டது. சிற்சில சமயங்களில் ஜன்னலருகே அமர்ந்து அப்பெண் எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள், அவ்வேளைகளில் அவளிடம் பேச அவன் துணிந்திருக்கிறான். அவளோ, அவனை வீட்டிற்குள் அனுமதிக்காது வெளியிலேயே நிற்கவைத்து பேசி அனுப்பிவிடுவாள். தவிர தேவையற்ற பேசுக்க்கோ, சிரிப்புக்கோ இடமில்லை என்பதுபோல நடந்துகொள்வாள். இருந்தபோதிலும் தன்னிடம் உரையாடுகிற போதெல்லாம் அவள் கன்னங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி கூடுதலாக சிவக்கின்றன, என கற்பனைசெய்துகொள்ளும் அகம்பாவம் எல்லா ஆண்களையும் போல தொழிலாளியிடமும் இருந்தது.
ஆனால் உடைந்த நற்பெயரை ஒட்டவைப்பது அத்தனைச் சுலபத்தில் இல்லை, அதற்குரிய தெம்பும் இளம்பெண்ணிடத்தில் இல்லை. வெளியிற் செல்லக்கூடத் தயங்கி லா பிளான்ஷோத், வீட்டில் அடைந்துகிடப்பாள், இருந்தபோதிலும் ஊர் வாயை அவளால் மூட முடியவில்லை. .
சிமோனைப் பொறுத்தவரை, தனது புதிய அப்பாவை மிகவும் நேசித்தான், அன்றைய அலுவல்கள் முடிந்ததும் ஒவ்வொரு மாலையும் அவருடன் உலாத்தச் செல்வான். பள்ளிக்கும் தவறாமல் ஆர்வத்துடன் சென்றுவந்ததோடு, வகுப்புத் தோழர்களுடன் பதிலுக்குப்பதில் என்றில்லாமல் கண்ணியத்துடன் பழகினான். இருப்பினும், ஒரு நாள், முதனலில் சிமோனிடம் சண்டைபிடித்த பையன் அவனிடம் சொன்னான்:
« நீ பொய் சொல்லியிருக்க. ’பிலிப் என்ற பெயரில், உனக்கு அப்பா என்று ஒருவரும் இருக்கமுடியாது. »
« எதனால் அப்படிச் சொல்ற ? » – சிமோன் குழப்பத்துடன் கேட்டான்.
தன்னுடைய கைகளைப் பிசைந்தபடி, மற்றபையன் தொடர்ந்தான் :
” காரணம், அப்படி ஒரு அப்பா உனக்கு இருந்தால் , அவர் உங்கள் அம்மாவின் கணவராக இருக்கவேண்டும்.”
அந்தப் பையன் பதிலில் இருந்த நியாயம் சிமோனைக் கலக்கமடையச் செய்தது: «இருக்கட்டுமே, அதனாலென்ன எனக்கு அவர் அப்பா. » என்றான் அவனிடம்.
« கேட்க நன்றாக இருக்கலாம், ஆனால் அவரை முழு மனதோடு அப்பா என நீ சொல்ல முடியாது »- பையன் ஏளனத்தோடு கூறினான்.
சிமோன் தலையைத் தொங்கப் போட்டபடி பிலிப் வேlலைசெய்யும் லுசோன் என்பவருடைய கொல்லுபட்டறையை நோக்கி கனவுடன் நடந்தான்.
அக்கொல்லுப்பட்டறை மரங்களால் மூடப்பட்டு இருண்டிருந்தது. அவ்விடத்தில் விசித்திரமான உலைஅடுப்பின் சென்னிற ஒளிச்சிதறல்களில் ஐந்து கொல்லர்கள் கையுறையின்றி வெறும் கைகளால் சம்மட்டிகொண்டு பெரும் சப்தத்துடன் அடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தீச்சுவாலைகளிடையே அரக்கர்கள்போல இருந்தனர். அவர்கள் விழிகள் சம்மட்டியில் வதைபட உள்ள கனிந்த இரும்புகள் மீதிருந்தன. எச்சரிக்கையுடன் கூடிய அவர்கள் கவனமனைத்தும் இரும்பு சம்மட்டியோடுசேர்ந்து உயர்வதும் திரும்ப விழுவதுமாக இருந்தன. சிமோன் யார் கண்களிலும் படாமல் மெதுவாக தன்னுடைய அண்மைக்கால நண்பரை நெருங்கி சட்டைக்கையை பிடித்து இழுத்தான். தொழிலாளியும் திரும்பினான். சட்டென்று அங்கு வேலைகள் ஸ்தம்பித்தன. அங்கிருந்த அனைவரின் கண்களும் தற்போது இவர்கள் மீது. வழக்கத்திற்கு மாறாக கொல்லுப்பட்டறையில் அமைதி. இந்நிலையில், சிமோனுடைய பலவீனமான சிறிய குரல் உரத்து ஒலித்தது:
« சொல்லுங்கள் பிலிப்! சற்று முன்பு, மிஷோது என்கிற பையன் என்னிடம், நீங்கள் எனக்குப் பெயருக்குத்தான் அப்பா என்கிறான், முழுமையான அப்பா இல்லையாம். »
« எதனால் அப்படிச் சொன்னான் ? » தொழிலாளி கேட்டான்.
« ஏனென்றால் நீங்கள் என் அம்மாவுக்கு கணவர் இல்லையாம். »- வெகுளித்தனத்துடன் வந்தது சிமோனுடைய பதில்.
சிறுவன் பதிலைக்கேட்டு ஒருவரும் சிரிக்கவில்லை.. பட்டறைகல்லில் நிறுத்தியிருந்த சம்மட்டியின் கைப்பிடியில் இருந்த தன் கைகளின் பின்பகுதியில் நெற்றிபட கவிழ்த்து, நின்றவண்னம் பிலிப் யோசனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய தோழர்களான சக தொழிலாளிகளின் பார்வை அவனைவிட்டு விலகவில்லை, மாறாக ராட்சதர்கள் போல நின்றிருந்த அம்மனிதர்களுக்கிடையில் பொடியன் சிமோன், பிலிப்பின் பதிலை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தான்.
திடீரென்று, அனைவரின் சிந்தனைக்கும் பதிலளிக்கும் வகையில், நான்கு கொல்லர்களில் ஒருவர் பிலிப்பிடம்:
« லா பிளான்ஷோத் நல்ல பெண் மட்டுமல்ல்ல துணிச்சலானவளும் கூட, அதுவன்றி அவளுடைய துரதிர்ஷ்ட்டத்திற்கிடையிலும் நேர்மையும் திடமனமும் கொண்டவள். ஒரு நேர்மையான மனிதனுக்கு, கண்ணிமிக்க மனைவியாக அவள் இருக்கக்கூடியவள் » என்று தெரிவிக்க, மற்ற மூன்று பேரும், உண்மைதான் என்றார்கள். தொழிலாளி தொடர்ந்தார்:
« அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்கு, அப்பெண் இழைத்த தவறுதான் காரணமா என்ன ?” அவளிடம், மணம் செய்துகொள்கிறேன் என சத்தியம் யாரேனும் செய்திருப்பான். இன்றைய தேதியில் ஒருவர் இருவரல்ல, பெண்களுக்கு அப்படி வாக்குறுதி அளித்து ஏமாற்றும் பலரை நான் அறிவேன். அவர்களில் நம்முடைய மரியாதைக்குரியவர்களும் அடக்கம் . »
“அது உண்மை,” – மற்ர மூன்றுகொல்லர்களும் ஒரே குரலில் பதிலளித்தனர்.
அவர் தொடர்ந்தார்: “பாவம் தன் பையனைத் தனியொருவளாக வளர்ப்பதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டாள், அவள் அழாத நாட்களே இல்லை, தவிர வீட்டைவிட்டு தேவாலயத்திற்குச் செல்வதன்றி வேறெதற்கும் வெளியிற் செல்வதில்லை. அவள் பிரச்சனைகளை ஆண்டவர் மட்டுமே நன்கு அறிவார். »
«அதுவும் உண்மைதான் » மூன்றுபேரும் திரும்பவும் ஆமோதித்தார்கள்.
அங்கு உலைக்களத்தீயை ஊதிக்கொண்டிருந்த துருத்தியின் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. திடீரென, பிலிப் சிமோன் பக்கம் குனிந்தான்.
« இன்று மாலை உன் தாயிடம் பேசுகிறேன், அவளிடம் சொல்! » எனத் தெரிவித்து சிமோன் தோளில் கைவைத்துத் தள்ளி கொல்லுபட்டறையைவிட்டு அவனை அனுப்பிவைத்தான்.
பிலிப் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தான். `அடுத்தகணம் சேர்ந்தாற்போல ஐந்து சம்மட்டிகளும் முழுமனதுடன் பட்டறைக்கல்லில் காய்ச்சிய இரும்பின்மீது விழ ஆரம்பித்து வலுவுடனும், பலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அந்திவரை தொடர்ந்தன. எப்படி பண்டிகை நாட்களில் தேவாலயமொன்றின் மணியோசை சிறிய பிற மணிகளின் ஓசையை அமிழ்த்திவிட்டு ஓங்கி ஒலிக்குமோ அதுபோல அவனுடைய சம்மட்டியும் ஒவ்வொரு நொடியும் ஓயாமல் ஒலித்து காதுசெவிடும்படி பெரும் ஓசையுடன் பிற சம்மட்டிகளின்மீது ஆதிக்கம் செலுத்த, பிலிப் தீப்பொறிகளிடையே நின்று இரும்பை அடிப்பதில் மும்முரமாக இருந்தான்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அணியும் ஜாக்கெட், துவைத்த சட்டை, ஒழுகுசெய்த தாடியுமாக லா பிளான்ஷோத் வீட்டின் கதவை, பிலிப் தட்டும்போது வானம் முழுக்க நட்சத்திரங்கள். வெளிப்பட்ட அவள் வருந்தும் குரலில்: “இருட்டிய பிறகு இப்படி வருவது சரியல்ல பிலிப்.” » என்றாள். அவன் பதில் சொல்ல விரும்பியபோதிலும், என்னசொல்வதென்று புரியாமல் தடுமாறி குழப்பத்துடன் நின்றான்.
அதையே சற்று விளக்கமாகச் சொல்ல நினைத்தவள்போல:
« உங்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டுமென்பதில்லை, என்னைப்பற்றி இந்த ஊர் பேசியது போதுமென்று நினைக்கிறேன். »
தாமதமின்றி அவன் கூறினான்:
« நீ என் மனைவியானால், அப்பேச்சு என்ன செய்யும் ! »
இம்முறை பதிலேதுமில்லை. ஆனால் இருண்டிருந்த வீட்டின் அறையிலிருந்து உடலொன்று தொபீரென விழுவதுபோல ஒரு சத்தம்.மறுகணம் அவசர அவசரமாக பிலிப் வீட்டிற்குள் சென்றான்.
ஏற்கனவே படுக்கச் சென்றிருந்த நம்முடைய சிமோன் முத்தமிடும் ஓசையையும் , அவனுடைய தாய் அடிக்குரலில் முணுமுணுப்பதையும் பிரித்துணர முடிந்தது. பின்னர், தன்னுடைய சமீபத்திய நண்பனின் ஹெர்க்குலீஸ் கரங்கள் தன்னைத் திடீரென உயர்த்திப் பிடித்திருப்பதை உணர்ந்தான். பிடித்திருந்த தொழிலாளி நண்பன் உரத்த குரலில் :
” இனி யாராவது உன்னைச் சீண்டினால், அவர்கள் காதைத் திருக உன்னுடை அப்பா கொல்லர் பிலிப் ரெமி வருவாரென்று, வகுப்புத் தோழர்களிடம் சொல்” – என்றான்
மறுநாள், பள்ளி நிரம்பி வகுப்பு தொடங்கும் நேரத்தில், பொடியன் சிமோன் எழுந்துநின்றான், வெளிறிய தோற்றம், உதடுகள் நடுங்க: “என் அப்பா பெயர் ‘பிலிப் ரெமி’, கொல்லன் , எனக்குப் பாதகம் செய்வோரின் காதை இழுத்துப்பிடித்து திருகுவேனென என்னிடம் அவர் உறுதி அளித்திருக்கிறார்” – எனத் தெரிவித்தான், குரலில் தெளிவிருந்தது.
இம்முறை ஒருவரும் சிரிக்கவில்லை, ஏனென்றால் கொல்லன் பிலிப் ரெமியை அனைவருக்கும் ஏற்கனவே நன்றாகத் தெரியும், அதுவன்றி இன்று அவன் ஓரு தந்தை, ஊரும் உலகமும் பெருமையுடன் கொண்டாடுகிற மனிதன்.
——————————
September 25, 2022
UN MASALA D’IDENTITÉS !
La Nouvelle Revue de l’Inde vient de sortir un numéro spécial sur les femmes du sous-continent indien présentes dans le monde de la francophonie.
Ce dossier regroupe des articles, des interviews, des commentaires sur des femmes rattachées à la culture indienne par la naissance ou par l’éducation et qui évoluent bien dans leurs domaines respectifs. Hélas, les articles sur Pondichéry, qui fut pourtant l’ancien comptoir français, sont quasiment inexistants, comme c’est le cas pour l’île Maurice. Il faut néanmoins apprécier les deux articles sur les femmes d’origine indienne à la Réunion.
Et puis viennent les articles qui rappellent l’Inde, dans lesquels, comme d’habitude, on parle de recettes, d’épices, de cinémas et bien sûr ! comment oublier le pays de Kali et ses multiples divinités. Or, pas le moindre mot sur la littérature indienne, où les femmes à succès sont nombreuses. Ainsi, ils pourraient évoquer Susila Raman, qui vient d’un pays anglophone, en oubliant Mme Kamala Haris, la vice-présidente des Etats-Unis par exemple.
Malgré tout, il faut apprécier et saluer les efforts de la revue La Nouvelle Revue de l’Inde. Voilà quelques siècles que les souches du sous-continent sont là, nul ne les a honorées comme le fait ce magazine.
Bravo !
September 20, 2022
அலெக்சாந்தர்
( மூல மொழியில் பிரசுரமான ஆண்டு 02 செப்டம்பர் 1889)
கி தெ மொப்பசான்
மாலை மணி நான்கு, அன்றும் வழக்கம்போல அலெக்சாந்தர், மராம்பால் குடும்பத்தாரின் சிறிய வீட்டின் வாயிற்கதவுக்கு முன்பாக மூன்று சக்கர நாற்காலியை நிறுத்தினார். இனி மாலை ஆறுமணிவரை மருத்துவரின் அலோசனைக்கிணங்க நடக்கவியலாமல் சிரமப்படும் வயதான வீட்டு எஜமானியை அந்த வண்டியில்வைத்து உலாத்த வேண்டும்.
இலகுவான அச் சக்கர நாற்காலியை வாசற்படியில் முட்டும்படி நிறுத்தியிருந்தார், உடல் பருமனான எஜமானி அப்போதுதான் சங்கடமின்றி நாற்காலியில் அமரமுடியும். பின்னர் தான் பணியாற்றும் வீட்டுக்குள் நுழைந்திருந்தார், மறுகணம் காச்சுமூச்சென்று கோபத்துடன் ஒரு குரல். ராணுவ வீர்ருக்கே உரிய கர்ண கடூரமான ஆபாசத்துடன் ஒலிக்கிறது. அக்குரல் வீட்டு எஜமானருடையது. இராணுவத்தில் தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜோசெப் மராம்பால் என்பரின் குரல். அதன் பின்பு கதவை அறைந்து சாத்தும் ஓசை, தொடர்ந்து நாற்காலிகள் இழுபடுகின்றன, தரை அதிர கேட்கும் காலடிகள், பிறகு அனைத்தும் அடங்கிப்போனது. சில நொடிகளுக்குப் பிறகு, அலெக்சாந்தரை வாயிற்படியருகில் திரும்ப பார்க்கமுடிந்தது, படிகளின் இறக்கத்தில் மிகவும் சோர்வுற்று நிலையிலிருந்த ‘திருமதி மராம்பால்’ஐ தன்னுடைய பலத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். மிகுந்தச் சிரமத்துடன் சக்கரநாற்காலியில், எஜமானி அம்மாள் உட்கார்ந்தபின்னர், நாற்காலியின் பின்புறமாகச் சென்றார். தள்ள உதவும் கைப்பிடிகள் இரண்டும் தற்போது அவருடைய பிடிக்குள், சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்.
அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிற தாடியுடன் இருக்கிறார், ஒரு நல்ல பணியாள் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.
ஜூலை மாதத்து சூரியனின் தாக்குதலில் வீதி, எனவே, சிறிய குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான வெயிலில் சோபை இழந்து காணப்பட்டன. சாலையோர நடைபாதையில் வீட்டுச் சுவர்களின் நிழல்களில் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறிது நின்று மூச்சுவாங்கிக்கொண்டு, ஆற்றை அடைவதற்குப் பெருஞ்சாலையைப் பிடிக்கும் நோக்கில் சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிகொண்டு நடந்தார்.
திருமதி மராம்பால் தனது வெள்ளை நிற குடையின் கீழ் ஏற்கனவே உறக்கத்தில் இருந்தார், அவர் கையிலிருந்து நழுவிய குடையின் கைப்பிடி அவ்வப்போது அலெக்சாந்தரின் உணர்ச்சியற்ற முகத்தில் அழுந்தச் செய்தது. இலைகள் அடர்ந்த் திலியா மரங்கள் இருபக்கமும் வளர்ந்திருந்த பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கி, மரங்களின் நிழலின் கீழ் வந்ததும் பெண்மணி உறக்கம் கலைந்திருந்தார். மிகவும் அன்பான குரலில்:
– பாவப்பட்ட மனிதரே, கொஞ்சம் மெதுவாக நடக்கலாமே ! வேகமாய்ச் சென்று, இந்த வெக்கையிலே வெந்து சாவதற்கு உங்களுக்கு விருப்பமா என்ன ! எனக்கேட்டு அலெக்சாந்தரை எச்சரிக்கிறார்..
திருமதி மராம்பால் பொதுவில் துணிச்சலான பெண்மணி, சிறிது நேரத்திற்கு முன்புதான் தழைத்திருந்த மரங்கள் தரும் நிழலின்கீழ் இருவரும் வந்திருந்தனர், இந்நிலையில் மனிதர்க்குள்ள இயல்பான சுயநலத்தில், அலெக்ஸாந்தரை மெதுவாகச் போகும்படி வேண்டினாரே அன்றி வேறு எண்ணங்கள் மனதில் இல்லை.
அவர்கள் பாதை அருகே, வளைந்த வில்போல அழகுடன் வெட்டப்பட்ட திலியா மரங்கள். விlல்லோ மரங்களின் வரிசைகளின் நடுவே வளைவும் நெளிவும் மிக்க படுகையில் நவெத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கிறது. நீர்ச்சுழலின் களுக்புளுக்கென்ற சப்தமும், பாறைகளின் மீது நீர் தாவிக்குதிக்கும் ஓலியும், நீரோட்டம் பாதை மாற்றிக்கொள்ளுமிடத்தில் எழுந்த ஓசையும் கலந்து இவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் இனிமையாதொரு நீரோசையை, ஈரக் காற்றின் குளுமையைத் தெளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆழமாக காற்றை உள்வாங்கி, ஈரநைப்புடன் கூடிய அவ்வ்விடத்தின் அழகை ருசித்த பிறகு, திருமதி மராம்பால்:
– ஹா..பாரம் குறைஞ்சதுபோல இருக்கிறது. சரி என்ன ஆச்சு என் கணவருக்கு, இன்றைக்கும் நல்ல மனநிலையில் அவர் இல்லையே, ஏன் எனத் தெரியுமா? என மெல்லிய குரலில் பணியாள் அலெக்சாந்தரைக் கேட்டார்.
.- ஓ மேடம் எப்படி நான்… என்ற அலெக்சாந்தர், வாக்கியத்தை முடித்தவரில்லை.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக திரு, திருமதி மராம்பால் இல்லத்தின் சேவையில் அலெக்சாந்தர் இருக்கிறார், முதலில் இராணுவ நிர்வாகத்தின் ஒழுங்குமுறைப்படி ஓர் உயரதிகாரியின் வீட்டு ஏவலர் என்ற வகையில் பணி. பின்னர் தமது எஜமானர்களை விட்டுப் பிரியமனமில்லாத ஒர் எளிய வேலைக்காரனாக பணியைத் தொடர்ந்தார்; தற்போது கடந்த ஆறு வருடங்களாக நாள்தோறும் பிற்பகலில் ஊரைச் சுற்றியுள்ள குறுகிய பாதைகளில் தம்முடைய எஜமானியை உலாத்த அழைத்துச் செல்பவராகவும் இருந்துவருகிறார்.
அலெக்சாந்தருடைய நெடுங்கால அர்ப்பணிப்பு சேவையும், அதன்காரணமாக, அருகருகே இருந்து பேச நேர்ந்த தினசரி வாழ்க்கையும், அவருக்கும் பெண்மணிக்கும் இடையே, ஒரு வகையான நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தியிருந்தது, அந்தவகை நெருக்கமோ அன்போ குடும்பத் தலைவரிடம் அவருக்கு இல்லை. எஜமானியும், பணியாளும் மராம்பால் குடும்ப விவகாரங்களை, தங்களுக்குள் பேதமின்றி உரையாடுவார்கள். அவர்கள் பேச்சு மற்றும் கவலையின் பிரதான விஷயம் வீட்டு எஜமானரின் மோசமான குணத்தைப் பற்றியதாக இருக்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கையில் தொடங்கிய அவருடைய ராணுவப்பணி, கசப்பானதாக முடிந்திருந்தது. தவிர பதவி உயர்வோ, புகழோ இன்றி வெறும் கேப்டன் என்கிற ஒரே தகுதியோடு ஓய்வுபெற்றிருந்தார்.
– என் கணவர் இப்படி நடந்துகொள்வதற்கு, அவருடைய இராணுவப் பணிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததுதான் காரணம். என்றைக்கு இராணுவத்திலிருந்து வெளியில் வந்தாரோ அன்றிலிருந்து அவர் அடிக்கடி இப்படித்தான்இருக்கிறார் ! – என குறைபட்டுக்கொண்டார், திருமதி மராம்பால்.
அலெக்சாண்டர் பெருமூச்சுடன் தனது எஜமானி சொல்ல நினைத்ததை முடிக்கின்றவகையில் :
– மேடம் ! அதை அடிக்கன்னு சொல்வதைக் காட்டிலும், நாள்தோறும் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே அவர் குணம் இப்படித்தான் இருந்திருக்கிறது, அதுதான் உண்மை, என்றார்.
– நன்றாகச் சொன்னீர்கள் ! இந்த மனுஷனுக்கு அதிர்ஷ்டமும் போதாது. இருபது வயசுல, அவர் தீரத்தை மெச்சி பதக்கமெல்லாம் கொடுத்தது, உண்மையில் நல்ல ஆரம்பம். பிறகு இருபது வயசிலிருந்து ஐம்பது வயசுவரை வெறும் கேப்டன் பதவியிலே காலத்தை ஓட்டவேண்டியிருந்தது, அதைத் தாண்டிப் போகவில்லை. இராணுவத்துல இருந்து ஓய்வு பெறும்போது குறைந்த பட்சம் கொலோனல் ஆகமுடியும் என்று கனவு கண்டவராம்.
– மேடம் இதற்கெல்லாம் காரணம் அவர்தான்னு நாம சொல்ல முடியும். ஒரு சவுக்குக்கு உள்ள நல்ல குணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஐயா எப்பொழுதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், விரும்பக் கூடியவராக இருந்திருந்தால், உயர் அதிகாரிகளும் அவருக்காக பரிந்து வந்திருப்பார்கள்.அவரை விரும்பி இருப்பார்கள். கடுகடுவென்று எல்லோரிடமும் எரிந்து விழுந்து என்ன சாதிக்க முடியும், பிறரிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமெனில், அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நடந்துகொள்வதுதானே முறை.
அவர் நம்மை இப்படி நடத்துவதற்கு, யாரைக் குற்றம் சொல்லமுடியும். இது நம்ம தப்பு. அவர் என்ன செய்தாலும், சகித்துக்கொண்டு, அவரோட இருக்க நாம விரும்பறோம். மற்றவர்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்க முடியாதே!
திருமதி மராம்பால் யோசனையில் ஆழ்ந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ‘ஒரு கம்பீரமான இராணுவ அதிகாரி, இளம் வயதிலேயே துறையின் பாராட்டுதலைப் பெற்றவர், நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றெல்லாம் நம்பிக்கைவைத்து மணம் செய்துகொண்ட மனிதர் கடைசியில் இப்படி இருக்கிறாரே என கடந்த பல ஆண்டுகளாக தான் கணவரால் வதைபடும் ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வாழ்க்கையில் எத்தனைச் சுலபமாக ஏமாந்து போகிறோம்! என மனதிற்குள் கூறிகொண்ட பெண்மணி, வாய்விட்டு:
– அலெக்சாந்தர், கொஞ்சம் நிற்போம், நீங்கள் வழக்கமாக உட்காருகிற பெஞ்ச் வந்துவிட்டதே, சிறிது இளைப்பபாறுங்களேன், என்றார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபயிற்சி செய்பவர்களுக்காகப் பாதையின் வளைவில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய, மரத்தாலான சற்று நீளமான இருக்கை அது. அதில் பாதி ஏற்கனவே உலுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் இப் பக்கம் அவர்கள் வருகிறபோதெல்லாம் பணியாள் அலெக்சாந்தர் இருக்கையில் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.
இருக்கையில் உட்கார்ந்ததும் பரிச்சயமான பாவத்துடனும், மனம் நிறைந்த பெருமிதத்துடனும், விசிறிபோல விரிந்திருக்கும் தம்முடைய வெண்தாடியை கைவிரல்கள் மடிப்பில் அடக்கி தாடியின் முனைவரை உருவிவிடுவார், வயிற்றின் குழிவானப் பகுதியை நெருங்குகையில் அவ்விடத்தில் தாடியை பொருத்த நினைத்ததுபோலவும், அதன் வளர்த்தியை அளவிட விழைந்ததுபோலவும் சில நொடிகள் காத்திருப்பார், அதை அன்றும் செய்தார்.
பெண்மணி தொடர்ந்தார்:
– நான் , அவரை முறைப்படி மணம் செய்துகொண்டவள், அவர் மனைவி. எனவே அவருடைய அநியாயங்களைச் சகித்துக்கொள்கிறேன். ஆனால் அலெக்சாந்தர் நீங்கள் எதற்காகச் சகித்துக்கொள்ளவேண்டும் ?
தோள்களை ஒருமுறை விளங்கிக்கொள்ளாதவகையில் குலுக்கிவிட்டு :
– ஓ! நான் …நான் மேடம், எனக் கூறியவருக்கு, அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. .
பெண்மணித் தொடர்ந்து :
உண்மையில், உங்கள் விஷயம் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். நான் திருமணம் முடித்த கையோடு என் கணவர் வீட்டிற்கு வந்தபோது, இராணுவ நிர்வாகம் உயரதிகாரியான என் கணவருக்கு நியமித்திருந்த சேவகர் நீங்கள். அந்நிலையில் என்னுடைய கணவர் உங்களை மோசமாக நடத்த அதைச் சகித்துக் கொள்வதன்றி உங்களுக்கு வேறுவழியில்லை, புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதற்குப் பின்பும் எங்கள் இல்லத்தில் தங்கியது ஏன் ? என் கணவர் வழக்கம்போல மோசமாக நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும், ஊதியத்தையும் குறைத்தல்லவா கொடுக்கிறோம். எல்லோரையும் போல வெளியில் சென்று, நிலைமை சீரானதும், திருமணம், மனைவி பிள்ளைகள் குடும்பமென்று நீங்கள் வாழ்ந்திருக்க முடியுமில்லையா ?
« ஓ ! மேடம், நான் கொஞ்சம் வேற மாதிரியான ஆசாமி » என்று கூறி அலெக்சாந்தர், அமைதியானார். ஏதோ மணியை இழுந்து அதன் ஓசையை கேட்க முனைந்த பாவனையில் தனது தாடியை உருவினார். பின்னர் அதை முகத்திலிருந்து அகற்ற நினைத்தவர்போல வலிந்து இழுக்கிறார் ; மனிதர் சங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை பதற்றத்தில் உருண்ட விழிகள் காட்டின.
திருமதி மராம்பால், தன் மனதிலோடும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் :
— நீங்கள் பட்டிகாட்டு ஆசாமி இல்லை. படித்தவரென்றும் நினைக்கிறேன்.
அலெக்சாந்தர், பெருமிதத்துடன் குறுக்கிட்டார் :
— ஆமாம் மேடம். நீங்கள் நினைப்பது சரி, நில அளைவையாளருக்குப் படித்திருக்கிறேன்.
— அப்படி இருக்கிறபோது, எதற்காக இந்த வேலைக்காரன் வேஷம், உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு ?
அவருக்கு நா குழறியது :
— அது அப்படித்தான், என்னுடைய பிறவிக்குணம் அது.
— எப்படி, உங்களுடைய பிறவிக்குணம்தான் என்ன, சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன்.
— ஆமாம், ஒன்றின்மீது எனக்கு பற்றுதல் உண்டானால், அத்துடன் முடிந்தது, அப்பொருளை, அல்லது மனிதரை விட்டு விலகிச் செல்ல எனக்கு இயலாது.
பெண்மணி கலகலவென சிரிக்கிறாள்
— ஏது, « எஜமான் மராம்பலுடைய அன்பும், அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடித்துப் போனது, அதனால்தான் உங்கள் வீடே கதியாக இருக்கிறேன் » என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அப்படியெல்லாம் சொல்லமாட்டீர்கள் இல்லையா ?
பெண்மணியின் கேள்வியைக் காதில் வாங்கிய அலெக்சாந்தருக்கு ஒருவிதப் பதற்றம், இருக்கையில் நெளிந்தார், குழப்பத்தில் இருப்பதை முகம் காட்டிக்கொடுத்தது. பெரிய மீசைக்கிடையில் முணுமுணுப்புடன் வார்த்தைகள் வெளிப்பட்டன :
– ஒருவகையில் அது சரி ஆனால் அதில் ஒரு சின்னத் திருத்தம். உங்கள் இல்லத்தில் நான் வேலைகாரனாக இருப்பது உங்கள் கணவருக்காக அல்ல உங்களுக்காக !
பெண்மணிக்கு இனிமையான முகம், அதை அலங்கரிக்க நெற்றிக்கும் மென்பட்டுத் தொப்பிக்கும் இடையில் ஒளிரும் அன்னப்பறவையின் சிறகுகள்போலவும், வெண்பனி நிறத்திலும், சிறிய பூச்சரம்போலவும் ஒவ்வொரு நாளும் அக்கறையுடன் பராமரிக்கிற சுருள் சுருளான தலைமயிர்கள்.
மிகுந்த ஆச்சரியத்தோடு, தன்னுடைய பணியாளைப் பார்த்தார்.
– உங்களை நினைக்க பாவமாகத்தான் இருக்கிறது, என்ன சொன்னீங்க எனக்காகவா, ஏன் ?
அலெக்சாந்தர், பெண்மணியின் கண்களை சந்திக்கத் தயங்கி வானத்தைப் பார்த்தார், பின்னர் பக்கவாட்டில் பார்வை சென்றது, அடுத்து தொலைவில் எதையோ தேடினார். பிறகு வெட்கத்திற்குரிய அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள கூச்சப்படும் மனிதர்களை வற்புறுத்தி இணங்கவைப்பது போல அவருடைய தலை திரும்பியது. ஒரு படைவீரனிடம், சுடு எனக் கட்டளையிட்டதும் என்ன மாற்றம் நிகழுமோ அக்கணத்தை அவரிடமும் காணமுடிந்தது. வார்த்தைகள் தயக்கமின்றி வெளிப்பட்டன :
— ஆமாம் உங்களுக்காகத்தான். ஞாபகமிருக்கிறதா, முதன்முறையாக நம்முடைய இராணுவ அதிகாரியின் கடிதமொன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைபெற்றுகொண்ட நீங்கள் சிறு அன்பளிப்பாக இரண்டொரு நாணயங்களைத் தந்தீர்கள். அதைப் புன்னகையுடன் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் இறுதிவரை வேலைக்காரனாக இருப்பதென்று முடிவெடுத்தது அன்றுதான்.
பெண்மணிக்கு அலெக்சாந்தரின் பதில் போதவில்லை, குழப்பம் நீடித்தது :
— கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா ?
மறுகணம், ஏதோ பாவப்பட்ட ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென்கிற கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல,அலெக்சாந்தரின் குரல் ஒலித்தது :
— மேடத்திடம், எனக்கு ஒருவகை பிரியம், போதுமா ? இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல என்னால் ஆகாது.
பெண்மணியிடம் மறுமொழியில்லை, அலெக்சாந்தரிடமிருந்த பார்வையை விலக்கிக்கொண்டு குனிந்த தலையை உயர்த்தாது யோசனையில் ஆழ்ந்தார். அவரிடம் உயர்ந்த பண்புகள் உண்டு : நல்லவள், அன்பானவள், நேர்மை, நீதியோடுமட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் வாழ்பவள். தன் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, அனைத்தையும் துறந்து தங்கள் வீடே கதியென்றிருக்கிற பாவப்பட்ட அம்மனிதரின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை ஒரு நொடி எண்ணிப் பார்த்தார், சிறிது அழவேண்டும்போலிருந்தது.
தன் பணியாளரிடம் சிறிதும் கோபமில்லை, மாறாக வருத்தம் தோய்ந்த குரலில் :
— சர், வீட்டிற்குத் திரும்பலாம், என்றார்.
அலெக்சாந்தர் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார், சக்கர நாற்காலியின் பின்பக்கம் சென்றவர், தள்ளத் தொடங்கினார்.
ஊரை நெருங்கியபொழுது, பாதையில் அவர்கள் எதிர் திசையில் கேப்டன் மராம்பால் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவர்களை நெருங்கிய மறுநொடி, தன் மனைவியிடம் கோபத்துடன் :
— இரவு என்ன சாப்பிடப்போறோம்? எனக்கேட்டார்.
— கோழியும் மொச்சைபயறும், என்பது பெண்மணியின் பதில்.
கேப்டன் மராம்பால் நிதானத்தை இழந்து வழக்கம்போல கத்தினார் :
— கோழி…கோழி, ஒருநாளைப்போல கோழியா, கடவுளே ! நான் படறது போதும். எவ்வளவுதான் கோழிக்கறியைத் தின்ன முடியும். நாள்தோறும் அதைச் சாப்பிடவைக்கிறோமே என்பதைப்பற்றியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா ?
பெண்மணி கணவரை சமாளிக்கும் விதமாக :
— கோபப் படாதீங்க ! மருத்துவர் உங்கள் விஷயத்தில் கூறியுள்ள அறிவுரை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வயிற்றுக்கும் அதுதான் நல்லது. உங்கள் வயிறு மட்டும் பிரச்சனைகளின்றி இருந்தால், எனக்கென்ன தயக்கம், கூடாததைக்கூட தாராளமாக சமைத்துத் தர ஏற்பாடு செய்வேன்.
பெண்மணியின் கணவரான கேப்டன், மிகுந்த எரிச்சலுடன் அலெக்சாந்தர் பக்கம் திரும்பினார்.
— என்னுடைய உடல் கெட்டதற்கு, முழுக்க முழுக்க இந்த தடியன்தான் காரணம். ஒரு வருடமா, இரண்டு வருடமா ? கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சமையல் என்றபெயரில் கண்டதையும் சமைத்து, எனக்கு விஷத்தையல்லவா கொடுத்து வருகிறான்.
மேடம் மராம்பால் தலை தற்போது நம்பிக்கைக்குரிய தங்களுடைய வேலையாளை நோக்கித் திரும்பியது. இருவர் கண்களும் சந்தித்துகொண்டன, ஒருவருக்கொருவர் இருவரும் தங்கள் பார்வையாலேயே « நன்றி » தெரிவித்துக்கொண்டனர்.
———————————————————.
Nagarathinam Krishna's Blog
- Nagarathinam Krishna's profile
- 3 followers

