(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ஜெ. பிரான்சிஸ் கிருபா

“கல்லெறியும் தூரத்தில் இருந்த குளத்துக் கரையை அடைந்த போதுதான் தெரிந்தது அது ஒரு ரயில் சாலை என்று. அதன்மீது ஏறி நின்று தலையை வட்டமடித்துப் பார்த்தான். ரயில் சாலை அதன் போக்கில் இரண்டு பக்கமும் நீண்டு போய் தொலைவில் ஓடுங்கியது. ரயில் சாலையில் மிக நீளமான ஏணியொன்று கிடத்திப் போடப்பட்டிருந்தது. அந்த ஏணியில் ஏறிச் செல்வதென்று முடிவெடுத்து கவனமாக ஏறிச் சென்றான். அது ஒன்றும் பெரிய சிரமமாக இல்லை. தரையில் சமனமாக நடப்பது போல்தானிருந்தது. படிக்கட்டுகள் ஏற்படுத்தும் களைப்பை அவை உண்டாக்கவில்லை.

குனிந்து கைநிறைய ஜல்லிகளை அள்ளினான். ஒவ்வொன்றாய் இலக்கின்றி உயரே வீசியெறிந்தான். ஜிவ்வென்ற ஓசையெழும்பியது. இரண்டு கற்கள் மீதமிருந்த நிலையில் எதிரே தூரத்தில் ரயில் சாலையில் சதுரமாக ஏதோ தென்பட்டது. கருகிய செங்கல் போலத் தோற்றமளித்தது. புகை புறப்பட்டு உயரே செல்வதை கவனிக்க முடிந்தது. ரயில்தான் வந்து கொண்டிருந்தது. ரயில் இச்சந்தர்ப்பத்தில் மிக அநாகரிகமாக நடந்துகொள்வதாக அவனுக்கு மனத்தாங்களும், கோபமும் மூண்டது. ஒரு மனிதன் அதிலும் பல விசித்திர சக்திகள் நிறைந்த வீரன் இந்த ஏணியில் ஏறி வந்துகொண்டிருக்க ரயிலுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் அதே ஏணியில் இறங்கி வரும்? அதன் பணிவற்ற செயலால் இன்னும் சில நிமிடங்களில் யார் யாருக்கு வழிவிடுவது என்ற மானப் பிரச்சனை தேவையின்றித் தோன்றப் போகிறதே! சும்மா விடுவதாக இல்லை இந்த ரயிலை. அது தன் வாழ்க்கைப் பயணத்தில் முதல்முறையாக சரியான, அதே நேரத்தில் என்றென்றைக்கும் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறது. அது பயணிகள் ரயிலா சரக்கு ரயிலா என்பதை தூரத்திலிருந்து அறிந்துகொள்ள முடியவில்லை. அது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நியாயத் தீர்ப்பு பொதுவானது. பாரபட்சமற்றது. ஒருவேளை இந்த ரயிலுக்கு நல்ல காலமிருந்தால் அதன் மூளை வேலை செய்யலாம். பாதையிலிருந்து இறங்கி ஏணியைவிட்டு விலகி அவனைக் கடந்துபோய் சாமர்த்தியமாக மீண்டும் இந்த மேட்டுப் பாதையை அடையலாம். தவறினால் அதற்கு ஐயோ... கேடுதான்.

பறவைக் கூட்டம் நிகழப்போகும் விபரீதத்தை உணர்ந்து வினோதமான குரல்களில் அலறியது. நாராசமான கூக்குரலில் எச்சரிக்கை பகிரங்கமாக வெளிப்பட்டது. ஐயோ... ஒரு பரிகாசக் கூட்டத்தை வெயிலை விரித்து தரையோடு தரையாக உருகியோடச் செய்த இந்த மனிதனிடம் இந்த எளிய ரயில் வசம்கெட்டுச் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழியப் போகிறதே என்று அவை பரிதாபப்பட்டன.

அவன் ரயிலை எதிர்கொண்டு வேகமாக நடந்தான். ரயில் முரட்டுக் குருடனைப்போல சிறிதும் யோசிக்காமல் அதே கதியில் வந்து கொண்டிருந்தது. அதன் சிக்குபுக்கு சப்தம் தெளிவாகக் கேட்கும் தொலைவுக்குள் நுழைந்தது. முதுகெலும்பையுடைத்து தலையை நசுக்கி பாதையோரத்தில் அடித்துக் கொன்று போடப்பட்ட ஒரு பாம்பின் சித்திரம் அவனுக்குள் தோன்றி மறைந்தது. ஆனாலும் சிறிதளவும் அவன் மனத்தில் கருணை சுரக்கவில்லை. விதிபோல் நடக்கிறது. வேறு வழியில்லை. இருப்பது ஒரு வழி. இருவருக்குமாக ஒரே ஒரு வழி. தெளிவற்ற குரலில் ரயில் பணிவாக ஊளையிட்டது அவன் காதுகளில் விழுந்தது. கேட்டும் கேட்காததுபோல் தலையைக் கவிழ்ந்தவண்ணம் உறுதியோடு நடந்தான். ஊளைச் சத்தம் இன்னும் உரத்தொலித்தது. இப்போது அதன் குரல் அழுவதற்குத் தயாராக உடைந்திருந்ததை அவன் கவனித்தான். இருப்பினும் பிடிவாதமாக நிமிர்ந்து பார்க்காமலிருந்தான். நிமிர்ந்து முகத்துக்கு முகம் பார்த்தால் எதிர்பாராமல் இரக்கமுண்டாகி விடலாம். அது நல்லதல்ல. குற்றத்தை, தவறை ஊக்குவிக்கும் செயலில் சென்று அது முடியலாம். அது தவிர்க்கப்பட வேண்டும். இன்று விட்டுவிட்டால் இன்னொரு நாளும் இதே தப்பிதத்தை அது செய்யலாம். எனவே இந்தப் பிரச்சனை இன்றே தீர்வுக்கு வந்தாக வேண்டும். இந்தப் பிரச்சனை ஊளை ஒலமாக மாறி மிக நெருங்கி விட்டிருந்தது. பீதியில் ரயில் கதறியழுதது. 'என்னை மன்னியுங்கள் என்னை மன்னியுங்கள். உங்கள் வழியில் தெரியாமல் வந்துவிட்டேன். என்னைப் பொறுத்து என்னைக் காப்பாற்றுங்கள்' என கையெடுத்துக் கும்பிட்டு அது கெஞ்சுவதை மனக்கண்ணில் கண்டான். வைராக்கியத்தை இளகவிடவில்லை. இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள சில அடி தூரங்களே இடையிலிருந்தபோது ரயில் மிகப் பெரிய அலறலோடு கண்களை இறுக மூடிக்கொண்டது. நிலத்தில் நடுக்கம் பரவியது. அச்சமயத்தில் பின்னேயிருந்து இரண்டு கைகள் அவன் இடைப்பகுதியில் நுழைந்து 'கிச்சலம்' காட்டிற்று. அவன் கூச்சத்தில் நெளிந்து துடித்து காற்றில் எகிறித் தெறித்து பாதையோரம் விழுந்தான். ரயிலுக்கு எத்தப் பங்கமுமில்லாமல் பாதை கிடைத்தது. முழுமூச்சோடு உச்சபட்ச வேகத்தில் அது தப்பி ஓடியது. கடந்து செல்லும் அதன் பெட்டிகளை வெறித்தான். ஆபத்து முற்றிலும் விலகியிராததையுணர்ந்த அவை கடும் குளிருக்குள் சிக்கிய பூஞ்சையுடல் போலப் பயந்து கிடுகிடுத்தன.”

ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
Read more quotes from ஜெ. பிரான்சிஸ் கிருபா


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Kanni(கன்னி) Kanni by ஜெ. பிரான்சிஸ் கிருபா
49 ratings, average rating, 11 reviews

Browse By Tag