Kindle Notes & Highlights
இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன். ‘ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக் கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்.’
‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்.’ இலக்கியம் மொழியில் எழுதப்படுவதில்லை என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டீர்கள்தானே? தமிழ்க்கவிதை தமிழில் மட்டும் அமைந்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவருக்கும் அது புரிந்துவிடும் அல்லவா? ஓர் அகராதியை வைத்துக்கொண்டு அதை எவரும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
அப்படியானால் தமிழ்க்கவிதை எதில் அமைந்திருக்கிறது? தமிழ் மொழிக்குள் நுண்மையாக அமைந்துள்ள இன்னொரு குறியீட்டு மொழியில் அமைந்துள்ளது. அதை மீமொழி [Meta Language] என்று நவீன மொழியியலில் சொல்கிறார்கள். அது மொழியின் இரண்டாவது அடுக்கு. இப்படி பல அடுக்குகளை உருவாக்கிக்கொண்டுதான் எந்தமொழியும் செயல்பட முடியும். நம்மை அறியாமலேயே இப்படி பல அடுக்குகள் நம் மொழியில் உள்ளன.
படி என்ற பொருளையே இன்னொன்றுக்கு குறியீடாக ஆக்க முடியும் அல்லவா? அப்போது படி என்னும்போது அது அந்தப்பொருளைச் சுட்டிக்காட்டி கூடவே அந்தப்பொருள் எதற்கு குறியீடோ அதையும் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?
ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம்.
உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.
ஏன் கூர்மை ஒளி என்று நேரடியாகச் சொன்னால் என்ன? சொல்லலாம்தான். ஆனால் வாள் என்னும்போது சட்டென்று அவ்விரண்டும் ஒரு திட்டவட்டமான காட்சி அனுபவமாக கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் வழி. அது சொல்லித் தெரியவைக்க முயல்வது இல்லை. அனுபவமாக ஆக்க முயல்கிறது.
தமிழ்ப்புதுக்கவிதையில் பறவை என்று சொன்னால் அது விடுதலை, வானுடன் உள்ள தொடர்பு என்ற பொருளையே அளிக்கிறது என்று சொல்லலாம்தான். ஆனால் அந்த வழியைக் கொண்டு இன்று வரும் ஒரு புதிய கவிதையை புரிந்துகொள்ள முடியாது. இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்று கொண்டிருக்கும்.
பெரும்பாலும் இந்த மீமொழி என்பது இயற்கையை ஆழ்ந்து கவனித்து அதில் உள்ள காட்சி நுட்பங்களை குறியீடுகளாக ஆக்கி அக உணர்ச்சிகளை சொல்லுவதன் மூலம் உருவாகி வருகிறது.
மீண்டும் முதல் கேள்விக்கு வருகிறேன். நவீன இலக்கியம் என்பது என்ன? இப்போது ஒரு பதிலை நான் சொல்ல முடியும். நவீன கவிதை இன்றைய நவீன மீமொழியில் எழுதப்பட்டது. மரபுக்கவிதை மரபான மீமொழியில் எழுதப்பட்டது.
தமிழில் பாரதி அந்த பிரக்ஞையை அடைந்த முதல் கவிஞன். ஆகவே அவன் நவீனக் கவிஞன். அவன் தமிழில் எழுதினாலும் தமிழுக்குள் அவன் பிரக்ஞை நிலைகொள்ளவில்லை. உலக இலக்கியத்தின் பரந்தவெளியில் நின்றுகொண்டு அவன் எழுதினான்.
இங்கே என்ன நடக்கிறது என்றால் தமிழுக்குள் உள்ள இந்த இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு, அதாவது மீமொழி, உலகம் தழுவியதாக ஆகிவிடுகிறது. இலக்கியத்துக்கு உலகம் முழுக்க ஒரே குறியீட்டு மொழி ஒன்று உருவாகி வந்தது. அதனால்தான் நமக்கு பாப்லோ நெரூதாவும் மயகோவ்ஸ்கியும் புரிந்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனை என்றால் இப்படி உலகம் முழுமைக்குமாக ஒரு இலக்கிய மீமொழி உருவானதேயாகும்.
இங்கிருந்துதான் நவீன இலக்கியம் மரபிலக்கியத்தில் இருந்து துண்டுபட்டு தனியாக ஆகிறது. மரபிலக்கியத்துக்குள் உள்ள மீமொழி இங்கேயே உருவாகி இந்த எல்லைக்குள் நிற்பது. நவீன இலக்கியத்துக்கான மீமொழி உலகளாவிய மீமொழியின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.
இந்த மனநிலை கவிதையை, இலக்கியத்தை அறிவதற்கு மிகமிக எதிரானது. ஒரு ஆக்கத்தில் ஆசிரியர் ‘சொல்லவந்த கருத்து’ என்ன என்று தேடுவதும் அதை அவர் ‘ஐயம்திரிபற’ சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும்தான் உண்மையில் நவீன இலக்கியத்தில் இருந்தே மரபான வாசகர்களை பிரிக்கிறது.
ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதே போன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம் போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிறது.
ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?
ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்றன. அதிகமாக கற்பனை செய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.
ஆகவே பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் முக்கியமான அழகியல் உத்தி. தெள்ளத்தெளிவாக இருப்பது இலக்கியத்தின் பலவீனம்.
அவர்களுக்கு நவீன இலக்கியம் சிக்கலாக இருக்கிறது, காரணம் இங்கே உரை இல்லை. பொருள்மயக்கம் முகத்தில் அறைகிறது.
ஒரு பெண்ணுள் ஓங்கியுள்ளது தாய்மையே என நீங்கள் எண்ணினால் அவள் அந்த பெண் இருந்த அறையைச் சுட்டிக்காட்டியிருப்பாள் என்பீர்கள். பெண்ணுக்குள் இருப்பது காதலிதான் காமம்தான் என்றீர்கள் என்றால் அவள் ஒருபோதும் தன் காதலனை இன்னொரு பேரழகிக்கு விட்டுக்கொடுக்க மாட்டாள்.
ஆகவே நவீன இலக்கியத்தை அறிந்துகொள்ள இரு அடிப்படை புரிதல் தேவை என்று சொல்லிக்கொள்கிறேன். ஒன்று, நவீன இலக்கியம் உலகளாவிய ஒரு மீமொழியில் உள்ளது. அந்த மீமொழியை பயிலவேண்டும். இரண்டு, நவீன இலக்கியம் தெளிவுபடுத்துவதன் மூலம் நம்மிடம் தொடர்புகொள்ளவில்லை. மாறாக பொருள்மயக்கங்கள் மூலம் நம் கற்பனையை விரியச்செய்து நம்மை சிந்திக்க வைக்கிறது. அது எதைச் சொல்லவருகிறது என்று பார்க்கக் கூடாது. அந்தப் படைப்பு அளிக்கும் அனுபவத்தை நம் சொந்தக் கற்பனைமூலம் விரியச்செய்யவேண்டும். இவ்விரு அடிப்படைத்தெளிவும் இருந்தால் நவீன இலக்கியத்துக்குள் நுழைவது மிக எளிது. நவீன இலக்கியம் என்பது நவீன சிந்தனைகளின் அழகியல் வடிவம். நவீன
...more
உங்கள் கடிதத்தில் ஒரு பட்டியல் இட்டிருக்கிறீர்கள் அல்லவா, அவர்களில் எவராகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத சிலர் இருப்பார்கள், அவர்களே என் வாசகர்கள். அவர்களுக்குத் தங்கள் சொந்தவாழ்க்கை சார்ந்த கேள்விகள் இருக்கும், அதை அறிவுத்தளத்திலும் இலக்கியத்திலும் சொந்தமாகவே தேடிக் கண்டடையும் முனைப்பு இருக்கும். அவர்களே இலக்கிய வாசகர்கள். இலக்கியவாதி எழுதுவது வலதுசாரிகளுக்காகவோ இடதுசாரிகளுக்காகவோ அல்ல. இலக்கிய வாசகர்களுக்காக மட்டுமே.
இந்த ‘சாரிகள்’ இலக்கியம் வாசிக்க முடியாது. ஏனென்றால் வரும்போதே அவர்கள் ‘நிறைந்து’போய் மாறாத அளவுகோல்களுடன் வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே நம்பி ஏற்று உறுதிகொண்டிருப்பவை இலக்கியப்படைப்பில் இருக்கின்றனவா என்று பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள். இருந்தால் கொண்டாடுவார்கள், இல்லையென்றால் எதிர்ப்பார்கள். உண்மையில் அவர்கள் தங்கள் நேரத்தையே வீணடிக்கிறார்கள். ஓர் அறிதல்முறையை, ஒரு கலையை எதையும் அறியாமல் எதையும் ரசிக்காமல் அணுகுவதைப்போல வெட்டிவேலை வேறில்லை.
நல்ல வாசகன் என்பவன் வாசிப்பால் உருவாகிறவன் அல்ல. அவன் நுண்ணுணர்வு உடையவன் என்பதனால்தான் நல்ல வாசகனாக ஆகிறான். அவனால் போலிப்பாவனைகளை, வறட்டு அரசியல்களை, எளிய காழ்ப்புகளை உடனடியாக அடையாளம் காணமுடியும். அவற்றை நிராகரித்து தனக்குரிய இலக்கியத்தையும் ஆசிரியர்களையும் கண்டடைய முடியும். அந்த திறன் இயல்பிலேயே இல்லாதவன் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க நேர்ந்தாலும் அவனால் அவற்றை உள்வாங்க முடியாது. அவன் வாசிப்பே பயனற்றதுதான்.
பொதுவாக வாசகர்களிடம் இருக்கும் இயல்புகளைக் கொண்டு அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். அந்தரங்க வாசகன், பொது வாசகன். அந்தரங்க வாசகன் வாசிப்பை அந்தரங்கமாகவே நிகழ்த்திக்கொள்கிறான். இலக்கியப்படைப்பில் தன் உள்ளத்தை, ஆழ்மனதை அடையாளம் காண்கிறான். தன் தனிப்பட்ட கேள்விகளை படைப்பினூடாக உசாவி தன் விடைகளைக் கண்டடைகிறான்.
உண்மையில் இலக்கிய வாசகன் என்பவன் அவனே. அவனுக்கு இலக்கியப்படைப்பும், இலக்கிய ஆசிரியனும்தான் முக்கியம். இலக்கியப்படைப்புக்கும் தனக்கும் நடுவே இன்னொரு குரல் ஒலிப்பதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். இலக்கிய ஆசிரியனுக்கும் தனக்கும் நடுவே மிக அந்தரங்கமான நீண்ட உரையாடலையே அவன் நிகழ்த்துவான். அங்கே புறச்சூழலின் கருத்துக்களுக்கும் ஓசைகளுக்கும் இடமே அளிக்கமாட்டான்.
ஆனால் அவை தன் முழுமை அல்ல என்று உணர்பவனே இலக்கியவாசகன். தன் அந்தரங்கம் இவற்றுக்கு அப்பாலுள்ள ஒன்று என அறிந்து அதைக்கொண்டு இலக்கியப் படைப்புகளை வாசிப்பவன்.
ஆகவே அவன் அந்த புற அடையாளத்தை மேலும் மேலும் இறுகப்பற்றிக்கொள்வான். காழ்ப்பு, கசப்பு ஆகியவற்றை உருவாக்கி கொள்வான். தீவிரமான பற்றுக்களை அறிக்கையிட்டபடியே இருப்பான். நம்பிக்கை குறைவானவர்களே நம்பிக்கையை அறைகூவிக் கொண்டிருப்பார்கள்.
அபத்தமான பகுப்புகளைச் செய்து தன் ஏற்பையும் மறுப்பையும் அறிக்கையிட்டுக் கொண்டிருப்பான். அவன் ஓயாது செயல்பட்டாகவேண்டும், ஏனென்றால் அவன் தன் நம்பிக்கையை கூவிக்கொண்டே இருந்தாலொழிய அவனே அந்நம்பிக்கையை விட்டுவிலகிவிடுவான்.
நான் எழுதிக்கொண்டிருப்பது அந்தரங்க வாசகனுக்காக. அவனுடன் அந்தரங்கமாக பேச என் படைப்புகளால் முடியும். அங்கே நானும் அவனும் அடையாளங்கள் அற்றவர்கள்.
சிந்திப்பவனுக்கு ஒரு தேடலும், ஐயங்களும் இருக்கும். இவர்களிடம் அது நிகழ்வதே இல்லை. ஆகவே உலகிலுள்ள அனைத்தையும் மறுக்க, விமர்சிக்க, கேலிசெய்யத் துணிவார்கள். அது ஆணவம் அல்ல, அறியாமையின் மூர்க்கம். ஆணவம் அறிவிலிருந்து வருவது, அறியாமையின் மூர்க்கம் அதைவிட பலமடங்கு ஆற்றல்மிக்கது. அதனுடன் பேசவே முடியாது.
அது ஒரு படிமம். அது நம்மால் கற்பனையில் வளர்க்கப்படவேண்டிய ஒன்று. ஆசிரியர் நமக்கு அளிப்பது ஒரு செய்தியையோ எண்ணத்தையோ அல்ல. அவர் நமக்கு அளிப்பது நாம் வளர்த்தெடுக்கவேண்டிய ஒரு படிமத்தை புனைவெழுத்திலும் செய்திகளும் எண்ணங்களும்தான் இருக்கும். ஆனால் அவை இங்கே நாம் கற்பனையில் வளர்த்தெடுக்க வேண்டியவையாக இருக்கும்.
அங்கே வைரஸ் என்று சொல்லப்படுவது வைரஸ் மட்டுமாக இருக்கவேண்டியதில்லை. அது ஒரு தீய எண்ணமாக, தீயவிளைவாக இருக்கலாம்.
அப்படியென்றால் முதல்வரியில் சொல்லப்படும் வைரஸ் என்ன? அது ஓர் உவமை, ஒரு படிமம். அது மனிதனுள் செயல்படும் ஓர் எண்ணத்தையே குறிப்பிடுகிறது.
ஏன் புனைவு தேவைப்படுகிறது? அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்படிச் சொல்கிறேன். தகவலுண்மைகளுக்கு அப்பால் வேறுவகை உண்மைகள் உள்ளன என நாம் பொதுவாக உணர்வதில்லை. அவை நாம் நம் அகத்தே உணர்பவை, ஆகவே அகஉண்மைகள். அவ்வுண்மைகளை நாம் இன்னொருவர் சொல்லி நாம் அடைய முடியாது. அது தெரிந்துகொள்ளும் உண்மை அல்ல, உணர்ந்துகொள்ளும் உண்மை. அவ்வாறு உணர்ந்துகொள்ளச் செய்வதற்கே நமக்குப் புனைவுகள் தேவைப்படுகின்றன.
விபத்து எச்சரிக்கைப் பயிற்சிகள் எப்படி அளிக்கிறார்கள்? செயற்கையாக விபத்துபோன்ற சூழலை உருவாக்கி அதில் நம்மை செயல்பட வைத்து தேர்ச்சிபெறச் செய்கிறார்கள்.
நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.
இவ்வாறு நாமே அடையும் உண்மையே அகஉண்மை, அதை இலக்கியம் நமக்கு அளிக்கவில்லை, மாறாக நாம் அதைநோக்கிச் சென்று அதை அடைய வைக்கிறது. அதற்கான வாழ்க்கைச்சூழலை, களத்தை மட்டுமே இலக்கியப் படைப்பு உருவாக்கி அளிக்கிறது.
புறவயமான உண்மையை நமக்கு சொல்ல புனைவல்லாத படைப்புகள் தேவை. அகவுண்மையை நாமே சென்று அடைய புனைவுகள் தேவை. தர்க்கபூர்வமாகவும் தகவல்சார்ந்தும் அறிய புனைவல்லாத எழுத்து தேவை. நுண்ணுணர்வால் அறியவும் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ளவும் புனைவுதேவை.
அது பயில்வதுதானே ஒழிய வாசிப்பது அல்ல.
மனித ஆளுமை என்பது அவன் எந்த விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதைச் சார்ந்து உருவாவதில்லை. ஏராளமான விஷயங்களை அறிந்த ஒன்றுக்கும் பயனில்லாதவர்களை நான் நிறையவே கண்டிருக்கிறேன். மனிதஅறிவும், விவேகமும் அம்மனிதன் கொள்ளும் அனுபவங்கள், அவ்வனுபவங்களில் இருந்து அவன் பெறும் அகப்பக்குவம் ஆகியவற்றைச் சார்ந்து மட்டுமே உருவாகின்றன.
அனுபவங்களை ஒருவனின் அகம் சந்திக்க வேண்டும். உள்ளே இழுத்துக் கொண்டு அக அனுபவங்களாக ஆக்க வேண்டும், செரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான அனுபவங்களில் இருந்தே தீவிரமான ஆளுமை வளர்ச்சியைப் பெற்றவர்களும் உண்டு.
அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளக் கூடிய, ஆராயக் கூடிய, சாராம்சப்படுத்தித் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளக்கூடிய, அந்த அகச்செயல்பாட்டைத்தான் சிந்தனை என்கிறோம். அனுபவங்களை சிந்தனை இணையான வேகத்துடன் சந்திக்கும் போது சிறந்த ஆளுமை உருவாக்கம் நிகழ்கிறது எனலாம்.
ஒருவனின் மொத்த வாழ்க்கையில் பொருட்படுத்தத் தக்க அனுபவங்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்பது ஓஷோ சொன்னது.
நம் வாசிப்பு நம் அகஅனுபவ உலகை பிரம்மாண்டமானதாக ஆக்குகிறது. நம் கற்பனை அனுபவ உலகம் விரிந்து விரிந்து பரவுகிறது.
வெறும் சிந்தனைக் கல்வி வெறும் வறட்டுப் பாண்டித்தியமாக ஆகும். வெறும் கற்பனை சார்ந்த வாசிப்பு பகற்கனவுகளில் கட்டிப் போடும். சரிசமமான வாசிப்பு மனிதர்களை மலரச் செய்கிறது.
ஏனென்றால் மனத்தையும் புத்தியையும் மூன்று தளைகள் கட்டியிருக்கின்றன. முதலில் தளையாக அமைவது நான் என்னும் உணர்வு. சுயமைய நோக்கு. குழந்தை கருவுக்குள் நுழையும்போதே அது உருவாகிவிடுகிறது என்பது நம் மரபு. அதற்கு ஆணவமலம் என்று சைவசித்தாந்தத்தில் பெயர். நான் என்பது நான் உருவாகும்போதே உருவாகி என்னுள் எப்போதும் இருக்கும் ஒரு உணர்வு.
அந்த ஆணவத்துடன் இணைவது முன்னரே இருந்து பிறந்ததும் வந்து ஒட்டிக்கொள்ளும் உலகியல்கூறுகள். உறவுகள், சூழல், இனமதமொழி அடையாளங்கள் என அது பலவகை. நம் செயல்கள் சிந்தனைகள் அனைத்தையுமே நாம் வந்து பிறக்கும்போது வந்து சூழும் இந்த விஷயங்கள் தீர்மானிக்கின்றன. இந்த தொடர்ச்சியையே கன்மம் என்கிறார்கள். அது முற்பிறப்பின் விளைவாக இப்பிறப்பில் தொடர்வது என்பது ஓரு விளக்கம். அவ்விளக்கத்தை ஏற்காவிட்டாலும் இது நம் சிந்தனையை வடிவமைத்துக் கட்டுப்படுத்தும் தளை என்பதை நாமே உணரலாம்.
ஒன்று இது [இதம்] அதாவது நான். என் ஆத்மா. என் ஞானம். அதாவது அறிவோன். அல்லது இன்றைய மேலைநாட்டுத் தத்துவக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமென்றால் தன்னிலை. [Subjectivity] இரண்டு ‘அது’ [அதம்] உலகம், பிரபஞ்சம் அதாவது அறிபடு பொருள். புறனிலை [Object].
அறிவு என்பது இரண்டுக்கும் நடுவே உருவாவது. அது ‘இதை’ சார்ந்து இருக்கும் தோறும் இதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அந்த அறிவை ‘அதை’ சார்ந்து ஆக்கும்தோறும் அது முழுமை கொள்கிறது. அதற்கான வழிமுறை ‘இதை’ மெல்ல மெல்ல இல்லாமலாக்குவது. மேலைநாட்டுக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமென்றால் தன்னிலையைக் கரைத்தழிப்பது. அறிதலை மெல்ல மெல்ல ‘என்’ அறிதல் அல்லாமலாக்குவது.