Kindle Notes & Highlights
ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிடவேண்டும்.
பிரபஞ்சம் என்பது நம் அறிதலே. நாம் என்பதும் நம் அறிதலே. நம் அறிவென்பதும் நம் அறிதலே. அறிவோனும், அறிபடுபொருளும், அறிவும் ஒன்றேயாகும் உயர்நிலையே முழுமை ஞானத்தின் நிலை. நாராயணகுரு தன் ‘அறிவு’ என்னும் சிறிய நூலில் இதை அழகாக வகுத்துரைக்கிறார்.
முதற்சிக்கல் என்பது எதையும் தொடர்ச்சியாக, கூர்ந்து கவனிக்க முடியாமை. அது இந்த காலகட்டத்தின் பிரச்சினை.
ஏனென்றால் வாசிப்புக்கு மூளையுழைப்பு தேவையாகிறது. வாசிப்பு என்பது ஒரேசமயம் நிகழும் மும்முனைச் செயல்பாடு. எழுத்தடையாளங்கள் சொற்களும் மொழிகளுமாகின்றன. மொழி காட்சிகளும் நிகழ்ச்சிகளும் மனிதர்களும் கருத்துக்களுமாக நிகர்வாழ்க்கை ஆகிறது. அந்த நிகர்வாழ்க்கையிலிருந்து மேலும் வாழ்க்கைகள் முளைத்து சரடுகளாக எழுந்து பரவுகின்றன. வாசிக்க முடியாமல் திணறுபவர்களின் உண்மையான சிக்கல் என்னவென்றால் இம்மூன்றும் ஒரே சமயம் நிகழாதென்பதே.
நிகர்வாழ்க்கையில் திளைத்தபடி, தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் வாசிப்பதையே ‘காலமும் இடமும் மறந்து’ வாசிப்பது என்கிறோம்.
இப்படி வாசிப்பவர்களுக்கு நூல்களின் பக்கங்கள் ஒரு பொருட்டே அல்ல. சொல்லப்போனால் நிறையப் பக்கங்கள்தான் அவர்களைக் கவர்கின்றன, அவை அந்த நிகர்வாழ்க்கையை முழுமையாக உருவாக்கி அளிக்கின்றன. நீண்டகாலம் மூழ்கியிருக்கச் செய்கின்றன.
ஒரு வாசகன் நூலகத்துக்குச் சென்றதுமே இயல்பாக பெரியநாவல்களை தேடுகிறான் என்றால்தான் அவன் நல்ல வாசகன், அவனுக்கு வாசிப்பில் சிக்கல்கள் இல்லை, அவனால் மொழியை நிகர்வாழ்வாக முயற்சியே இல்லாமல் மாற்றிக்கொள்ள முடிகிறது, அவன் அதில் திளைத்திருக்க விழைகிறான் என்று அதற்குப்பொருள். சிறு நாவல்களை அவன் ஏமாற்றமடையச் செய்பவையாக நினைக்கக்கூடும், அவை அவன் வாழத் தொடங்கும்போதே முடிந்துவிடுகின்றன.
வாசிப்பதன் சிக்கல்களில் என்றுமுள்ள இன்னொரு பிரச்சினை, புதியனவற்றை ஏற்கமுடியாமலாதல்.
ஏனென்றால் அவற்றின் உள்ளடக்கம் அவர்களுக்கு தெரியும், ஆகவே கண்டடைதலின் இன்பமும் விரிதலின் பரவசமும் இல்லை. பெட்டிக்குள் போட்டுவைத்த பழைய நினைவுப்பொருள் அங்கே இருக்கிறதா என்று சென்று பார்த்துக்கொள்ளும் இன்பம் மட்டுமே எஞ்சுகிறது.
இன்று இணையவெளியில் காட்சியூடகம் மிகமிகப் பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது. சினிமாக்கள், இணையத்தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆவணப்படங்கள், யூடியூப் வீடியோக்கள். அவற்றில் பல மிகமிகத் தரமானவை. அவற்றைப் பரவசத்துடன் பேசுபவர்களும் பலர் இருக்கிறார்கள்.
ஏன் இந்த சலிப்பு? ஓர் ஊடகம் எளிதாகக் கிடைப்பதனால், அது நம்மேல் வந்து மோதுவதனால் மட்டும் நாம் அதில் ஈடுபட முடியாது. நாம் எவ்வளவு தேடுகிறோம், எவ்வளவு வாங்கிக்கொள்கிறோம் என்பது முக்கியம். நம்முள் எழும் கேள்விகளின் விளைவாக நாமே தேடிக்கண்டடையாத ஒன்றில் நம் ஆர்வம் நிலைகொள்வதில்லை. நம் வாழ்க்கையுடன், நம் ஆழுள்ளத்துடன் உரையாடி நம்மை எவ்வகையிலேனும் மாற்றியமைக்காத ஒன்றை நாம் நினைவு கூர்வதுமில்லை.
இன்னொரு சாரார் வாசகர்கள். அவர்கள் எழுதுவது எழுத்தாளன் அவர்களுக்கு மிக அணுக்கமானவன் என்பதனால். எழுத்து எழுத்தாளனின் ஆழுள்ளத்தை அவர்களுக்கு அருகே கொண்டு வருகிறது. வேறெந்த மனிதரிடமும் பகிரமுடியாத சிலவற்றைப் பகிரச்செய்கிறது. படைப்புகளில் இருந்து வாழ்க்கை நோக்கி நீளும் ஒரு தேடலாக அக்கடிதங்கள் அமைகின்றன.
எழுத்தாளர்களிடம் முதிர்ச்சியின்மை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. முதிர்ந்துவிட்டால் அவன் ஏன் எழுதவருகிறான்? எழுதுவதென்பதே ஒரு நிலைகுலைவைச் சரிசெய்வதற்காகத்தான். எழுத்தாளனிடம் எப்போதுமே படபடப்பும், நிலைகொள்ளாமையும் இருக்கும். நான் இதுவரை சந்தித்த எழுத்தாளர்களிலேயே நிதானமானவர்கள் சுந்தர ராமசாமியும் நாஞ்சில் நாடனும்தான். அவர்களிடம் இருக்கும் படபடப்பும் நிலைகொள்ளாமையுமே ஒரு சாதாரண வாசகனைக் குழப்பக்கூடியவை
கடைசிவரை புழங்குகிறது. ஒரு கதையை வாசித்ததும் இன்னொன்று நினைவுக்கு வருவது அந்தக் கதையின் விளைவு அல்ல. அந்தக் கதையுடன் அதற்குத் தொடர்பும் இல்லை. அது உங்கள் மனஅமைப்பு, அந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் மனமிருந்த நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதை உடனே சொல்லிவைப்பதனால் எந்த பயனும் இல்லை, தேவையில்லாத குழப்பங்களை மட்டுமே உருவாக்கும்.
ஆசிரியர் உருவாக்கியிருப்பது ஒரு படைப்பு- ஒரு மொழிக்கட்டுமானம். அதை வாசிக்க முயல்வதே வாசகனின் கடமை. அதில் என்ன கிடைத்தது என்ன கிடைக்கவில்லை என்று சொல்லலாம். என்னென்ன இருக்கவேண்டும் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லமுயல்வது அறிவின்மை.
இலக்கியப்பயிற்சி என்பது என்ன? ஒரே வரியில் சொல்லப்போனால் இலக்கியப்பயிற்சி என்பது இலக்கியப்படைப்பை பொருள்கொள்ளும் பயிற்சிதான். இப்படி இலக்கியப் படைப்பை பொருள்கொள்வதற்கு வகுக்கப்பட்ட நெறிகளோ வழிமுறைகளோ இல்லை. அதை எழுதிவைக்கவோ வகுப்புகளில் கற்பிக்கவோ முடியாது. கற்பித்தாலும் அடுத்தபடியாக வரும் படைப்பு அந்தப் பாடங்களைக் கடந்த ஒன்றாகவே இருக்கும். இலக்கியம் புதிய பாதை கண்டு முன்பிலாதபடி நிகழ்ந்துகொண்டே இருப்பது.
அந்தப் ‘பொருள்கொள்ளும் பயிற்சி’ என்பது ஒருவகையான அகப்பயிற்சி. ஒவ்வொரு வாசகனும் தன்னுள் தானே அடைவது. வாசகருக்கு வாசகர் வேறுபடுவது.
செவ்வியல் படைப்புக்களே இலக்கிய அளவுகோல்களை உருவாக்குகின்றன. அவற்றை பயில்வதே இலக்கியப் பயிற்சியின் முதல்பாடம்.
இதற்கும் அப்பால் வாசகனின் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள், அவற்றை அறிவதற்குரிய நுண்ணுணர்வும் கற்பனையும் போன்றவையே அவன் வாசிப்புப் பயிற்சியை தீர்மானிக்கின்றன. வாழ்வனுபவங்கள் முற்றாக இல்லாமலிருப்பவர்கள் இல்லை. ஆனால் அவற்றை கற்பனையில் விரித்தெடுக்க முடியவில்லை என்றால் இலக்கியப் படைப்பை நாம் அறியமுடியாது.
இரண்டு, தங்களால் அடையாளப்படுத்திக் கொள்ள இயன்ற வாழ்க்கையை மட்டுமே இவர்களால் ரசிக்கமுடியும். எந்த கதையானாலும் அதை ஏற்கனவே தாங்கள் அறிந்த வாழ்க்கையைக் கொண்டு மதிப்பிடுவார்கள். அவ்வண்ணம் முன்னரே அறியாத வாழ்க்கை என்றால் அன்னியமாக உணர்வார்கள், வாசிப்பு ஓடாது. தகவல்களைத் தவறவிடுவார்கள். கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
முதலாவதாக, ஓர் இலக்கியப்படைப்பு கதை சுவராசியத்துக்காக எழுதப்படுவதில்லை என்னும் உணர்வு இலக்கியவாசகனின் முதல் அறிதல். அது வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, வாழ்க்கையின் மேல் கேள்விகளை எழுப்பிக்கொள்கிறது, அரசியல்ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் ஆன்மிகமாகவும் அதற்கான விடையைத் தேடுகிறது என்னும் புரிதல் அவனிடம் இருக்கும்.
கதையாக இலக்கியப் படைப்பைப் பார்த்துச் சொல்லப்படும் எந்த விமர்சனத்தையும் அவன் சொல்லமாட்டான். தன் சுவாரசியத்துக்காக ஆசிரியன் எழுதவேண்டும் என நினைக்கமாட்டான். அந்தப்படைப்பின் ஆசிரியன் உருவாக்க விரும்புவது என்ன, அவன் கூறவருவது என்ன என்று மட்டுமே பார்ப்பான். அதை அறிய தன் தரப்பிலிருந்து முழுமுயற்சியை எடுத்துக்கொள்வான்.
பொதுவாசகன் சொல்லும் ‘இழுத்திட்டே போகுது’, ‘வர்ணனை ஜாஸ்தி’ போன்றவை வாசகன் தன்னை படைப்புக்கு ஒப்புக்கொடுக்காமல் படைப்பை தன்னை நோக்கி இழுப்பதன் விளைவான சலிப்பில் இருந்து எழுபவை. ‘முடிவை ஊகிச்சிட்டேன்’ என்று ஒரு நல்ல வாசகன் சொல்லவே மாட்டான், ஊகிக்காத முடிவை அளிக்கும் விளையாட்டு அல்ல புனைவு. அம்முடிவின் வழியாக அந்த ஆசிரியன் காட்ட, உணர்த்த விரும்புவது என்ன என்பதே இலக்கியத்தில் உள்ள கேள்வி.
ஆகவே கடைசியாகச் சொல்லவேண்டியது இது. ‘வணிக இலக்கியம் வாசகனை நோக்கி வரும், இலக்கியத்தை நோக்கி வாசகன் செல்லவேண்டும்.’
ஃப்ளோ என நம்மவர் சொல்லும் வாசிப்புத்தன்மை இலக்கியத்திற்கு எதிரானது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அது ஏற்கனவே அவ்வாசகன் அமைந்திருக்கும் இடத்திற்கு தான் வந்து பேசுகிறது என்பதே அதன் பொருள். அது எதையும் புதிதாகச் சொல்லவில்லை, எங்கும் அவனை எடுத்துச்செல்லவில்லை.
ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கையில் அது அமைந்துள்ள பண்பாட்டுத்தளத்தையும் நாம் தொட்டறியவேண்டும். அதுவே அப்படைப்பை அர்த்தப்படுத்துகிறது. அப்படி ஒரு புதிய பண்பாட்டுச்சூழலை அறிமுகம் செய்யாத படைப்பும் மேலோட்டமானதே. நாம் அறிந்த வாழ்க்கைச்சூழலை சொல்லும்போதேகூட இலக்கியப் படைப்புக்கள் ஒரு புதிய பண்பாட்டுச் சூழலையே அறிமுகம் செய்கின்றன. வட்டாரவழக்கு, வட்டாரக் குறிப்புகள் போல பண்பாட்டு நுட்பங்கள் முடிவற்றவை.
இரண்டு, உள்ளத்தின் ஓட்டத்தையும் தத்துவத்தையும் விரித்துரைக்கும் நீள்கூற்றுக்கள். உதாரணமாக, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அவை நாடகீயத்தன்னுரைகள் [Dramatic Monologue] போலவே வெளிப்படுகின்றன. அவற்றில் மிக நீண்ட உரையாடல்கள் உண்டு. நீண்ட கடிதங்களும் வருவதுண்டு. இவ்வளவு நீளமாகவும் கோவையாகவும் எவராவது பேசுவார்களா, எல்லா கதைமாந்தரும் இப்படி சுவாரசியமாகவும் அறிவார்ந்தும் தத்துவார்த்தமாகவும் பேசுவார்களா, சாதாரண மனிதர்கள் எவராவது இப்படி நீளமாக கடிதங்கள் எழுதுவார்களா என எண்ணினால் நாம் நாவலை, பேரிலக்கிய அனுபவத்தை இழப்போம்.
உண்மையில் அவை தத்துவம் அல்ல, தத்துவத்தின் புனைவுவடிவங்கள்தான். தத்துவம் புனைவுவடிவிலேயே மிகச்சிறப்பாக வெளிப்பட முடியும். ஏனென்றால் தத்துவத்தின் மிகச்சிறந்த கருவி உருவகம் [Metaphor] தான் அதை செவ்வியல் நாவல் அதன் மற்ற பக்கங்களில் மிகச்சிறப்பாக உருவாக்கிக் கொண்டுவர முடியும். தத்துவப்புனைவுதான் நாவல் என்னும் கலைவடிவின் முதன்மையான கலைக்கருவி. நாவலின் நோக்கமே வாழ்க்கை குறித்த பெரும்படிமங்களை, உருவகங்களை உருவாக்குவதுதான் என்பார்கள் விமர்சகர்கள்.
பேரிலக்கியங்களை வாசிக்க நாம் அளிக்கும் உழைப்பே அவற்றிலிருந்து நாம் அடையும் கல்வி என்பது. உண்மையில் பேரிலக்கியங்கள் நம்மை உருமாற்றுவது இப்படித்தான்.
உண்மையில் ஆசிரியர்களை அறியும்போது கூடவே விமர்சனமும் இருந்தால் அவர்களை அறியவே முடியாது. ஆசிரியர்களை வாசிக்கும்போதே எழும் விமர்சனம் என்பதற்கு என்ன பொருள்? நானும் ஒரு ஆள்தான் என அவருடைய படைப்புகளுக்கு முன் மார்பை விரிக்கிறோம் என்று மட்டும்தான். அந்த ஆணவமே நம்மை அவரிடமிருந்து விலக்கும் திரையாக ஆகிவிடும். பெரும்பாலும் இப்படிச் சொல்பவர்கள் ஏற்கனவே அரசியல் சார்ந்த நிலைபாடுகளுக்கு வந்திருப்பார்கள். மாறாத நிலைபாடுகளை கொண்டிருப்பார்கள். அசட்டு ஆணவங்களால் ஆட்டுவிக்கப்படுவார்கள். ஆசிரியர்களை ‘ஆய்வு’ செய்ய சில நிலையான கருவிகளையும் வைத்திருப்பார்கள். அவர்கள் வாசிப்பதே இல்லை.
அவர் ஒரே கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பவராக இருக்கலாகாது. தன் தேடலை மெய்யியல் வரலாறு, தத்துவம், மானுட உறவுகள், மானுட உள்ளம் என விரிப்பவராக இருக்கவேண்டும். அதாவது தல்ஸ்தோயில் மூழ்கியிருக்கலாம், தாமஸ் மன்னில் மூழ்கியிருக்கலாம், மக்ஸீம் கார்க்கியில் மூழ்கி இருக்கக்கூடாது.
நாம் கைவிட மறுத்து அக்குளில் இடுக்கியிருக்கும் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பிடுங்கி அப்பால் வீசுபவனே எழுத்தாளன். அவ்வாறு நம்மை ஒப்புக்கொடுத்து மாறுவது மிகமிக கடினமான ஒரு போராட்டம் வழியாகவே நிகழ்கிறது. விளைவு தெரிய நெடுநாட்களாகிறது. ஒரு ஆசிரியன் அளிக்கும் செல்வாக்கு என்பது நாம் அவனுக்கு ஆட்படுவது அல்ல, அவன் வழியாக நாம் நம் எல்லைகளை மீறிச்செல்வது. அது உண்மையில் ஒரு விடுதலை. தல்ஸ்தோய் முதல் நித்ய சைதன்ய யதி வரை எனக்கு அளித்தது விடுதலையையே.
இலக்கியத்தை தொடர்ந்து வாசிக்க வாசிக்க உங்களுக்கே பிடிகிடைக்கும். எளிமையாகக் கேட்டால் ஒரு படைப்பை நல்ல படைப்பு என உங்கள் அளவில் எப்படி முடிவுசெய்கிறீர்கள்? நீங்கள் ஏற்கனவே வாசித்தவற்றைக் கொண்டு, இல்லையா? அதைப்போல ஒரு இலக்கியச் சூழலில் முன்னரே உருவாகியிருக்கும் இலக்கியங்களே அடுத்துவரும் இலக்கியங்களின் இடத்தை முடிவுசெய்கின்றன.
வாழ்க்கைமீதும் பண்பாட்டின் மீதும் அது கொண்டிருக்கும் தொடர்பு. நல்ல படைப்பு வாழ்க்கையில் நாம் அறிந்த உண்மையை, நாம் தேடும் உண்மையை சுட்டிநிற்கும். பண்பாட்டின் மீதான விமர்சனமாகவும் விளக்கமாகவும் நிலைகொள்ளும். வடிவம், பேசுபொருள் எல்லாம் மாறக்கூடியவை. இவ்விரு கூறுகளுமே அடிப்படையானவை என சொல்லலாம்.
ஆனால் இலக்கியத்தில் அவ்வாறு சொல்லவந்த விஷயம் என்ற ஒன்று இல்லை. இலக்கியம் எப்போதும் ஆசிரியன் அறியவிரும்பும் ஒரு மன எழுச்சியை அவனே மொழியைக்கொண்டு வடித்துக்கொள்ள முயல்வது மட்டுமே. நல்ல இலக்கிய ஆக்கங்களை ஆசிரியனாலேயே விளக்கிவிட முடிவதில்லை.
நாம் நம் அகஇருப்பை தத்துவார்த்தமாக வகுத்து வைத்திருக்கிறோம். நியாயப்படுத்தல்கள், விளக்கங்கள், கொள்கைகள் என ஏராளமாக நம்முள் உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இவற்றைக்கொண்டே நாம் புரிந்துகொள்கிறோம். இது சரி, இது தவறு, இது இப்படி, இது இதனால் என வகுத்திருக்கிறோம். அதாவது நாம் நம் உள்ளத்துக்குள் ஒரு கருத்தியல் கட்டுமானத்தைக் கட்டி வைத்திருக்கிறோம்.
பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கட்டுமானம் சூழலால், அம்மா அப்பாவால், பள்ளியால் அளிக்கப்படுகிறது. அவர்களுடைய கருத்தியல் கட்டுமானம் அவர்களுக்கே தெரியாது. அதை நம்பி அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய அந்தக் கருத்தியல் கட்டுமானம் நேரடி அனுபவங்களால் அசைவுறும்போது அவர்கள் நிலைகுலைகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குழம்பிப்போகிறார்கள்.
ஆனால் ஓர் இலக்கியவாசகனுக்கு நல்ல இலக்கியப்படைப்புகளால் அவனுடைய அகக் கருத்தியல் கட்டுமானம் அசைக்கப்படுகிறது. அவன் நம்பிய எதுவும் உண்மையில் அப்படி இல்லையா என்ற எண்ணம் எழுகிறது. அவனும் கொந்தளிப்பும் குழப்பமும் அடைகிறான்.
இந்த அக-புற சமநிலையைக் கற்றுப் பழகிக்கொண்டே ஆகவேண்டும். வாழ்க்கைக்காக மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் இதுவே முதன்மையானது. பல சமயம் ‘நான் சிந்திப்பவன், ஆகவே கொஞ்சம் வேறு மாதிரித்தான் இருப்பேன்’ என நாமே நம்மைப்பற்றி எண்ணிக்கொள்ளும் ஒரு சுயபாவனையே இதற்குத் தடையாக ஆகிறது.
ஏன் இவை நிகழ்கின்றன? இவற்றைத் தவிர்க்க முடியாதா? பண்பாடு, கலாச்சாரம் குறித்து பேசும் இலக்கியவாதிகள் ஏன் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள்? அவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் முன்னோடிகளாக இருக்கக் கூடாது? தங்கள் படைப்புகளை எழுதி அவற்றை காலத்தின் தீர்ப்புக்கு விட்டு விட்டு ஏன் மெளனமாக இருக்கக் கூடாது? இக்கேள்விகள் மீண்டும், மீண்டும் எழுப்பப்படுகின்றன. வணிக எழுத்தாளர்களும், இதழ்களும் மீண்டும், மீண்டும் எழுதி இலக்கியவாதிகளை அற்பர்களாகக் காட்ட முனைகிறார்கள். இது சிந்திப்பதற்குரிய ஒரு விஷயமே.
ஆனால் இலக்கியம் கேளிக்கையும், உபதேசமும் அல்ல. அது வணிகம் அல்ல. இலக்கியம் என்பது உக்கிரமான ஆன்மீகத் தேடல் மற்றும் கருத்தியல் செயல்பாடு. ஓர் இலக்கிய படைப்பு எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி, அதன் உச்சகட்ட நோக்கம் உலகின் அனைத்து மக்களையும் முழுமையாக வெற்றி கொள்வதே. ஒர் இலக்கியவாதி எழுதும்போது அவனது மனதின் ஆழத்தில் உள்ள படைப்பு சக்தி உலகின் மிகச் சிறந்த ஆக்கத்தை உருவாக்கவே தவிக்கிறது. உலகை முழுக்க தன் பக்கம் திருப்பவே அது எண்ணுகிறது.
அதுதான் படைப்பாக்கத்தின் அடிப்படை இயல்பு. இப்படிச் சொல்லலாம். ஒரு புல் விதை எதிர்ப்பே இல்லை என்றால் உலகை புல்லால் மூடிவிடும் வல்லமை கொண்டது. அதற்குள் அந்த இச்சையை இயற்கை பொறித்து வைத்துள்ளது. ஆனால் அதன் இச்சையை அதைப் போன்ற பல்லாயிரம் இச்சைகள் தடுக்கின்றன. விளைவாக பூமி மீது ஒவ்வொரு உயிரும், பிற அனைத்தையும் எதிர்த்து மீறி தன் இடத்தை அடைகிறது. கருத்துக்களின் கதையும் இதுவே. ஒவ்வொரு கருத்தும் உலகை வெல்லத் துடிக்கிறது. பிற கருத்துக்களின் மீது மோதி உருவாகும் முரணியக்கம் மூலம் அது உலகை ஆக்கும் பல நூறு, பல கோடி இழைகளில் ஒன்றாக ஆகிறது.
நாம் சமூகம் என்று சொல்வது பல்வேறு முரண்படும் கருத்தியல்கள் பின்னி உருவாகிய ஒரு சமநிலைப் புள்ளியை. அது நிலையாக இல்லை, இடைவிடாது மாறியபடி [மாற்றப்பட்டபடி] இருக்கிறது.
ஒவ்வொரு செடியும் மற்ற செடிகளை எதிர்த்தே வளர்கிறது. ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் தன்னளவில் பிற அனைத்து படைப்புகளுக்கும் எதிரானதேயாகும். ஓர் இலக்கியப் படைப்பு எடுத்துக் கொள்ளும் இடம், பிற படைப்புகளிடமிருந்து பெறப்படுவதே. ஓர் இலக்கியப் படைப்பு சிறப்பாக உள்ளது என்று நாம் சொல்லும் போது பிற படைப்புகள் பலவற்றை மோசமானவை என நிராகரிக்கவே செய்கிறோம். ஒரு படைப்பை பிறிதொன்றுக்கு மேலாக வைக்காமல் இலக்கிய வாசிப்பு சாத்தியமே இல்லை. ஏன், ரசனை என நாம் சொல்வதென்ன, நுட்பமான நிராகரிப்பும் தேர்வும்தானே?
ஓர் இலக்கியப் படைப்பு மகிழ்விப்பதல்ல. அது சூழலில் உருவாக்குவது ஒர் ஊடுருவலை. அதன் மூலம் ஒரு தொந்தரவை. ஆங்கிலத்தில் இதை Rupture என்று சொல்லலாம். அந்த தொந்தரவு ஓர் அறிவார்ந்த சவாலை வாசகனுக்கு விடுத்து அவனை தூண்டுவதனால் இந்த ஊடுருவலை அவன் விரும்பவும் செய்கிறான். இல்லையேல் அவன் நூல்களை வாங்கவும் மாட்டானே! இலக்கியப் படைப்பு உருவாக்கும் ‘கேளிக்கை’ இத்தகையதே. அவ்வகையில் வெற்றிகரமான வணிகப்படைப்புகளிடமிருந்து இலக்கியப் படைப்பு மிக, மிக மாறுபட்ட ஒன்று.
மாறாக இலக்கியப் படைப்பு நம் மீது ஒரு கருத்தியல் தாக்குதலை நிகழ்த்துகிறது. நாம் உறுதிபடக் கட்டி வைத்துள்ள அனைத்தையும் அது கலைத்துப் போடுகிறது. நமது நம்பிக்கைகளை ஐயத்துக்குள்ளாக்குகிறது. பெரிய நாவல்களை படித்து முடித்ததும் நாம் ஒரு வெட்டவெளிக்கு வீசப்படுகிறோம். அந்த வெறுமையிலிருந்து மெல்ல மெல்ல மீளும் போது நாம் மீண்டும் நம்மை கட்டி நிலை நாட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். சற்றுத் தள்ளி, சற்று மாற்றி. இதுவே அந்நாவலின் பங்களிப்பு.
ஓர் இலக்கியப் படைப்பிடம், அச்சமூகத்தின் எல்லா கருத்தியல் தரப்புகளும் தங்கள் மோதலை நிகழ்த்துவது இயல்பானதேயாகும். ஆகவே அதன் மீதான மதிப்பிடுகளில் சில தவிர பிற அனைத்துமே எதிர் மறையானவையாக நிராகரிப்பாக இருப்பதும் மிக இயல்பே.
நல்ல இலக்கியப் படைப்பு நிலைபாடுகளினால் ஆனதல்ல. அது தேடலினால் ஆனது. அது கருத்துக்களை முன்வைப்பது இல்லை. அது முன்வைப்பது படிமங்களை. நான் எனக்கு பிரியமான உவமையை சொல்கிறேன். இலக்கியப் படைப்பு ஒருவகைக் கனவு. கனவு வாழ்க்கையில் இருந்து பிறப்பது என்பதனால் அது அரசியலற்றது அல்ல. ஆனால் அதன் அரசியல் ஒரு துண்டு பிரசுரத்தின் அரசியல் அல்ல. கருத்தியல் நிலைபாடு சார்ந்த, அமைப்பு சார்ந்த வாசகர்கள் படைப்பை சிறுமைப்படுத்திய பிறகே பேச ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறு படைப்பை ‘நிலைபாடாக,’ ‘கருத்தாகச்’ சுருக்கி சிறுமைப்படுத்தி எதிர்கொள்வது உலகமெங்கும் நிகழ்வதே. படைப்பியக்கம் இவர்களுடைய குறுக்கல்களை மீண்டும் மீண்டும்
...more
வாசிப்பு என்பது ஒற்றைப் படையாக நிகழும் ஓர் எளிய நிகழ்வு அல்ல. வாசகன் ஒரு காலியான பாத்திரமும் அல்ல. அவனுக்கு ஒரு கருத்தியல் நிலைபாடு உள்ளது. அனுபவ மண்டலம் உள்ளது. அவனுக்கென்று ஒரு ஆன்மீக தளமும் உள்ளது. அதை இலக்கியப் படைப்பு பாதிக்கிறது. அவன் அதை எதிர்த்துத் தான் தன்னை முன் வைக்கிறான். அவன் உருவாக்கும் எதிர் வியூகத்தை உடைத்துத் தான் படைப்பு தன்னை நிறுவுகிறது.
ஆகவேதான் வாசகன் மேலும் மேலும் வலிமையான படைப்புகளை தேடிச்செல்கிறான். தன் தளத்தை விட தாழ்ந்த படைப்பு அவனுக்கு எந்த இன்பத்தையும் அளிப்பதில்லை. அவன் அடையும் படைப்பு என்பது அவனது உலகுக்கும் அப்படைப்பின் உலகுக்கும் இடையேயான ஒரு பொதுவான தளம் மட்டுமே. எந்த வாசகனும் ஒரு படைப்பை முழுமையாக அடைய முடியாது. இந்த எதிர்கொள்ளலுக்கு வாசகன் எடுக்கும் முறையை ‘வாசிப்புத் தந்திரம்’ என்று இன்று சொல்கிறார்கள். ஆக இவ்வாசிப்பு தந்திரத்துடன் ஒரு படைப்பு மோதியே ஆக வேண்டும். இது ‘எழுத்து X வாசிப்பு’ என்ற போரின் ஒரு தளம்.