முன்னுரை மாதிரி

இந்தக் கட்டுரைகள் என்னை எழுதிக்கொண்டிருந்தபோது நான் கொஞ்சம் பிசியான காலக்கட்டத்தில் (கட்டத்தில் அப்போது ஆறு புள்ளிகளும் ஒன்பது கோடுகளும் இருந்தன) வாழ்ந்துகொண்டிருந்தேன். பள்ளி கிளம்பும் அவசரத்தில் குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மாவானவர் பின்னால் நின்றுகொண்டு “உம்! தலைய நிமித்து. நேரா பாரு! குனியாதடி சனியனே!” என்று அன்பாக எச்சரித்தபடி தலை பின்னிவிடுவது மாதிரிதான் இவை என்னை எழுதி எழுதவைத்தன.


ஒரு நாளைக்குக் குறைந்தது மூவாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுதியாக வேண்டிய துறையில் இருப்பவனுக்கு மோட்சம் தருபவை இந்த முன்னூற்று சொச்சம் சொற்களே. இது முள்ளை முள்ளால் எடுப்பது அல்ல. உண்ணும் விரதத்தை எலுமிச்சை ஜூஸ் கொடுத்துத் தொடங்கி வைப்பது மாதிரி.


ஒரு காலத்தில் பத்திரிகைகள் கேட்டாலொழிய என் கைக்கு எழுத வராமல் இருந்தது. பின்னொரு காலத்தில் வாரப் பத்திரிகைகள் அலுப்பூட்டத் தொடங்கியபோது அவற்றுக்கு எழுதுவதையும் வாசிப்பதையும் அறவே குறைத்தேன். இப்போதெல்லாம் ஏனோ கேட்டால்கூட எழுதத் தோன்றுவதில்லை. எனக்கே எனக்கான இணையத் தளத்தில் என்னிஷ்டத்துக்குக் கிறுக்கிக் கொள்வதில் ஒரு திருப்தி.


இதிலும் ஒரு காலத்தில் எத்தனை பேர் படிக்கிறார்கள், யார் யார் மறுமொழி தருகிறார்கள் என்று பார்ப்பேன். ஹிட் கவுண்ட், அலெக்ஸா ரேட்டிங் என்று ஆயிரத்தெட்டு அநாவசியங்களைவேறு சேர்த்து வைத்திருந்தேன். அதுவும் வேறொரு காலத்தில் விருப்பப் பட்டியலில் இருந்து உதிர்ந்து போனது. யார் படித்தால் என்ன? படிக்காது போனால் என்ன? எழுதத் தோன்றியது; எழுதினேன், படிக்கத் தோன்றினால் நானே படித்தும் கொள்வேன் என்றாகிப் போனேன்.


ஆனால் ஒன்று புரிந்தது. எந்த ஆரவாரமும் இன்றி சொந்த சந்தோஷத்துக்காக என்னவாவது எழுதிக் கிழித்துக்கொண்டிருந்தாலும் நமக்கென சில பிரத்தியேக வாசக ஜீவராசிகள் எப்படியோ வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நமது வாழ்வின் ஒரு சில அத்தியாயங்களை வாழ்ந்தவர்களாகவோ அல்லது அவர்கள் வாழ நினைத்து இயலாது போன வாழ்வை வேடிக்கை பார்க்க வந்தவர்களாகவோ இருப்பார்கள்.


எல்லா எழுத்தும் தான் பிறக்கும்போதே தன் வாசகனையும் சேர்த்தே பிறப்பித்துக்கொள்கிறது.


O


இவை கதைகளா கட்டுரைகளா கட்டுக் கதைகளா என்று எனக்குத் தெரியாது. இவை நான் எழுதியவை. என்ன தோன்றுகிறதோ அவற்றை சென்சாரே செய்யாமல் அப்படியே இறக்கி வைத்தவை. சிரிக்கச் சிரிக்க எழுதுகிறீர்கள் என்றார்கள். சிரிப்பாய்ச் சிரிக்காத வரை சரி என்பதைத் தாண்டி என்னிடம் சொல்ல வேறில்லை.


இந்த சமூகத்துக்கு உபயோகமாக, என்னவாவது கருத்து சொல்லுவதாக, ஒரு சிந்தனை மரபை அடியொற்றியதாக, தத்துவத் தூதுவளை ரசம் பிழிந்து வைப்பதாக இவற்றில் ஒரு வரியும் உங்களுக்கு அகப்படாது என்பதே நான் ஒரு மனித நேயம் மிக்க எழுத்தாளன் என்பதை உங்களுக்குப் புரியவைக்கும்.


நவீன பேரிலக்கியப் புண்ணாக்கு வியாபாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பல்லாண்டுக் காலமாக உடம்புக்கு காதி கிராஃப்டின் அபரஞ்சி சோப்பு போட்டுக் குளிக்கிறேன். மனத்துக்கு இது.


தீர்ந்தது விஷயம்.


பா. ராகவன்

டிசம்பர் 1, 2014


[வெளிவரவிருக்கும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி கட்டுரைத் தொகுப்புக்கான முன்னுரையாக எழுதியது.]


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2014 22:51
No comments have been added yet.