சொல்லுக்குள் சொல் அமைதல்- காவியம்.
ஒவ்வொரு சொல்லும் பிற சொற்களால் பொருள்கொள்கிறது என்று அவ்வப்போது தோன்றுவதுண்டு. ஒரு சொல்லுக்குள் இன்னொரு சொல் உறைந்திருக்கிறது. நமக்கு வாசிக்கக்கிடைக்கும் ஒவ்வொரு நூலுக்குள்ளும் நாமறியாத நூல்கள் உறைகின்றன. இந்தியாவில் இன்று கிடைக்கும் தொன்மையான நூல்களை விட பல மடங்கு நூல்கள் அழிந்துவிட்டன என்பவர்கள் உண்டு. நம் தொல்நூல்கள் ஒவ்வொன்றும் வேறுநூல்களைப் பற்றிய குறிப்புகளை அளிக்கின்றன. ‘என்ப‘ என்கிறது தொல்காப்பியம். ‘அதாதோ‘ என்று தொடங்குகின்றன பல சூத்திர நூல்கள். நாம் அறிந்த நூல்கள் நூல்களின் நீள்நிரையில் இருந்து நம்மை வந்து தொடும் புள்ளிகள் மட்டுமே. எனில் அழிந்த நூல்கள் எல்லாம் எங்குள்ளன? இங்கே நாம் அவற்றையும் சேர்த்துத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோமா?
நாம் வாசிக்கும் நூல் என்பது நாம் வாழும் வாழ்க்கையின் இன்னொரு வடிவம் என்றால் இந்த வாழ்க்கை என்பது நாமறியாத எவரெவரோ வாழ்ந்த வாழ்க்கையின் எச்சம் மட்டுமே அல்லவா? இந்த வாழ்க்கையில் உறைந்துள்ள பிற வாழ்க்கைகளைத்தான் அவ்வப்போது பெருந்திகைப்புடன் உணர்ந்துகொண்டிருக்கிறோமா? ஒரு வாழ்க்கைப்புள்ளியில், ஓர் உறவுச்சந்தியில் நாம் எதையெல்லாம் கையாள்கிறோம், எவருடனெல்லாம் உறவாடுகிறோம்? ஒரு கணம் என்பது வரலாறேதான். ஒரு இடம் என்பது இப்புவியேதான்.
அந்தப் பிரம்மாண்டத்தைச் சொல்லமுயலும் நாவல் என இதைச் சொல்லலாம். ஒரு சிறுபுள்ளியில் இருந்து பலநூறு வாழ்க்கைச் சரடுகளாக விரிகிறது இது. ஒருவரோடொருவர் இணைந்துள்ள மானுடர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரின் இருப்பையும் வாழ்வையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் உணர்வுநிலைகளுக்குள், அவர்களை ஆட்டிவைக்கும் அரசியலுக்குள், சமூகவியலுக்குள் விரிந்தபடியே செல்லும் நாவல் மேலும் மேலுமென விரிந்து தொல்வரலாற்றுக்குள் செல்கிறது. அங்கிருந்து புராணங்களுக்குள், தொன்மங்களுக்குள் செல்கிறது. அந்த தொடர்விரிதலே இந்நாவலின் கதைக்களம். கதைகளை இதழ்களாகக் கொண்ட ஒரு மலர். சொல்லப்போனால் மலர்வு.

இந்நாவலை ஒரு கனவாக நீண்டகாலமாக என்னுள் வைத்திருந்தேன். துலங்கியும் மயங்கியும் என்னுடனேயே இருந்தது இது. பலமுறை எழுத எண்ணி கைவிட்டது. சொல்லப்போனால் நான் திட்டமிட்ட முதல் நாவல். இத்தனை ஆயிரம் பக்கங்களுக்குப் பின் இப்போதுதான் இதை எழுத முடிந்துள்ளது. ஒத்திசைவும் ஒழுக்கும் கொண்ட வடிவத்திற்குப் பதிலாக ஒன்றால் தொட்டு எழுப்பப்படும் இன்னொன்று என விரியும் வடிவம் கொண்டு இந்நாவல் தானாகவே நிகழ்ந்தது. இன்று இந்நாவலை வாசிக்கையில் இது நாம் வாழும் ஒவ்வொரு கணத்தையும் வெடித்துத் திறந்துகொள்ளச் செய்யும் அனுபவமாக ஆகக்கூடும் என்று படுகிறது. அதுவே இதன் இலக்கியத் தகுதி.
இந்தியா உருவாக்கிய மாபெரும் காவிய ஆசிரியர்களின் பெயர்களில் வால்மீகி, வியாசன் ஆகிய இருவருக்கும் நிகரானவராக குணாட்யர் குறிப்பிடப்படுகிறார். அவர் எழுதிய ‘பிரகத் கதை’ என்னும் பெருங்காவியம் மகாபாரதத்தை விட பலமடங்கு பெரியது எனப்படுகிறது. அதிலிருந்து கிளைத்த பல சம்ஸ்கிருத காவியங்கள் காலம்தோறும் உருவானபடியே இருந்தன. ஆனால் அந்த மூலக்காவியம் அழிந்துவிட்டது. அழிந்துவிட்ட ஒரு நூல் அழிந்தமையாலேயே அழிவின்மையை அடைந்தது என்னும் திகைப்பூட்டும் முரண்பாடே என்னை இந்நாவலை எழுதச்செய்தது.
ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை காலத்தின் குழந்தை என உணர்கிறான். காலத்தில் அழிவின்மை கொள்வேன் என கற்பனை செய்கிறான். காலத்தை நோக்கிப் பேசுகிறான். குணாட்யர் தன் காவியத்தை தானே முழுமையாக அழித்துக்கொண்டார் என்கின்றன கதைகள். அது ஓர் அலை திரும்பிச் செல்வதுபோல. எனில், காவியத்தை இயற்றியது போலவே அதுவும் ஒரு படைப்புச்செயல்பாடுதானா? எழுதும்போது என்னை ஆட்கொண்ட வினா அது.
இணையான இன்னொரு கேள்வி, இந்தியாவின் பெருங்காவியங்கள் மூன்றிலும் உள்ள அடித்தள அம்சம். தலித் எழுதியது ராமாயணம். மீனவப்பெண்ணின் மகன் எழுதியது மகாபாரதம். பழங்குடி வாழ்வில் எழுந்தது பிருஹத் காவியம். மண்ணே பெருங்காவியங்களை உருவாக்குகிறது. தத்துவம், மதம் ஆகிய அனைத்துக்கும் அடியில் காவியங்கள் மண்ணின் அழிவின்மையைத்தான் முன்வைக்கின்றனவா? அனைத்தும் அதன்மேல்தான் அமர்ந்திருக்கின்றனவா?
என் கனவினூடாக அந்த வினாக்களை நோக்கிச் சென்றேன். தங்கள் கனவுகளை மீட்டிக்கொண்டு உடன்வரும் வாசகர்களுக்காக இந்நாவலை முன்வைக்கிறேன்.
இந்நாவலை என்றும் என் வழிபாட்டுக்குரிய இலக்கியநாயகரான சிவராம காரந்த் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ள காவியம் நாவலுக்கான முன்னுரை)
காவியம் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers
