டாலியின் அனிமேஷன்
1946-ல் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து ஓவியர் சால்வடார் டாலி ஒரு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ‘Destino’ என்ற அந்த அனிமேஷன் அவரது காலத்தில் முடிக்கபடவில்லை. 2003-ல் முடிக்கப்பட்ட இக் குறும்படம் டாலியின் வியப்பூட்டும் கற்பனையை அழகாக வெளிப்படுத்துகிறது.

1945 ஆம் ஆண்டு வார்னர் ஸ்டுடியோவின் உரிமையாளரான ஜாக் வார்னர் வீட்டில் நடந்த விருந்தில் டிஸ்னியும் டாலியும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது தனது சர்ரியல் ஓவியங்களைக் கொண்ட அனிமேஷன் ஒன்றை உருவாக்க விரும்புவதாக டாலி தெரிவித்தார்.

அதனை டிஸ்னி உடனே ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக டாலி டிஸ்னி ஸ்டுடியோவிற்குச் சென்றார், எட்டு மாதங்களில், 22 ஓவியங்கள் மற்றும் 135 க்கும் மேற்பட்ட ஸ்டோரிபோர்டுகள், வரைபடங்கள் மற்றும் ஓவியங்களை உருவாக்கினார். இதனைக் கொண்டு சிறிய அனிமேஷனும் தயாரிக்கபட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இந்த முயற்சி முழுமையாகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பு. 2003 இல் “டெஸ்டினோ” வெளியிடப்பட்டுப் பெரிய வரவேற்பை பெற்றது.
ஆறு நிமிடங்கள் 40 வினாடிகள் கொண்ட இந்த அனிமேஷன் திரைப்படத்தில் உரையாடல் கிடையாது .இசையும் நடனமும் கலந்து காலத்தின் உருவகமான குரோனோஸ், டாலியா என்ற இளம் பெண்ணைப் பின்தொடர்வதை விவரிக்கிறது. உண்மையான அன்பைத் தேடும் ஒரு இளம் பெண்ணைப் பற்றிய ஒரு எளிய கதை என்று இதனை டிஸ்னி குறிப்பிடுகிறார்.
டாலியாவின் சுழன்றாடும் நடனம். உருகி வழியும் உடல்கள். விசித்திரக் கடிகாரம். கூட்டுக்கண்கள், நிழலின் மணிக்கூண்டு, மலராகும் டாலியிவின்தலை. வியப்பூட்டும் நிலக்காட்சிகள் என டாலியின் கனவுநிலைத் தோற்றங்கள் மாறுபட்ட அனுபவத்தைத் தருகின்றன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 664 followers

