மலர்களை நேசிக்கும் காளை.
அமெரிக்க எழுத்தாளர் முன்ரோ லீஃப் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபெர்டினாண்ட் குழந்தைகளுக்கான சிறந்த கதைப் புத்தகம். மலர்களை நேசிக்கும் ஒரு காளையின் கதையைச் சொல்லும் இந்நூல் அனிமேஷன் திரைப்படமாகவும் வந்துள்ளது

இளம் காளையான ஃபெர்டினாண்ட் மற்ற காளைக் கன்றுகளைப் போல மோதவும், குதிக்கவும், மற்ற காளைகளோடு சேர்ந்து விளையாடவும் விரும்பாமல் தனிமையில் அமர்ந்து கொண்டு பூக்களை ரசிக்கிறது. அதற்கு. பூக்களை மிகவும் பிடிக்கும், தனிமையும் பிடிக்கும். மலர்களின் நறுமணத்தை அனுபவிக்கிறது. இதற்கென ஒரு மரத்தடி நிழலினையும் தேர்வு செய்துள்ளது.
ஃபெர்டினாண்ட் இப்படி நடந்து கொள்வதைக் கண்ட தாய்பசு தனது மகன் தனிமைப்பட்டுப் போய்விடுவான் என்று கவலை கொள்கிறது.

ஃபெர்டினாண்ட் வளர்ந்து காளையாகிறது. அதனுடன் வளர்ந்த மற்ற காளைகளை நகரில் நடக்கும் காளைச்சண்டைக்கு அழைத்துப் போகிறார்கள். ஆனால் ஃபெர்டினாண்ட்டிற்குச் சண்டையிடுவதில் ஆர்வமில்லை. அது எப்போதும் மலர்களை ரசித்தபடியே அமைதியாக இருக்கவே விரும்புகிறது
ஒரு நாள் மலர்களை ரசித்துக் கொண்டிருக்கும் போது தேனீ ஒன்று அதனைக் கொட்டி விடவே ஆவேசமாக ஃபெர்டினாண்ட் துள்ளியோடுகிறது. ஃபெர்டினாண்ட்டின் வேகம் மற்றும் துள்ளல் காரணமாக அதனைக் காளைச் சண்டைக்குத் தேர்வு செய்கிறார்கள்.
மாட்ரிட் மைதானத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே ஒரே ஆரவாரம். இசைக்குழுக்கள் இசை முழங்குகின்றன ஃபெர்டினாண்ட் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் அதன் கம்பீர உருவத்தைப் பார்த்து மக்கள் வியக்கிறார்கள். காளையோ மைதானத்தில் பெண்கள் சூடியுள்ள மலர்களை வெறித்துப் பார்க்கிறது.

மைதானத்தின் நடுவில் வந்த காளையை வீர்ர்கள் குத்தீட்டிகளுடன் சீண்டுகிறார்கள். ஆனால் காளை சண்டையிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாகப் பெண்கள் சூடிய பூக்களை ரசித்தபடியே அமைதியாக அமர்ந்து கொள்கிறது..
மற்றவர்களுக்காகத் தனது இயல்பை ஃபெர்டினாண்ட் மாற்றிக் கொள்ளவில்லை. அது மைதானத்தின் கூச்சலைத் தாண்டி அமைதியாக, மலர்களை ரசித்தபடியே அமர்ந்து விடுகிறது.
எல்லாக் காளைகளும் சண்டையிட விரும்புவதில்லை. இப்படித் தனிமையை விரும்பும் காளையும் இருக்கக் கூடும்.
முடிவில் ஃபெர்டினாண்ட் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பி தனக்கு விருப்பமான மரத்தடியில் மலர்களின் நறுமணத்தை அனுபவித்தபடி மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்துகிறது.

சிறார்கள் மட்டுமின்றிப் பெற்றோர்களும் இந்தக் கதையைப் படிக்க வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட மகனையோ, மகளையோ பல பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. காளைச் சண்டையில் வெல்வது தான் வாழ்வின் லட்சியம் என ஃபெர்டினாண்ட் நினைப்பதில்லை. தனது இயல்பு வேறு என்பதையே உலகிற்கு அடையாளம் காட்டுகிறது, அப்படியாக உங்கள் பையனோ, பெண்ணோ இருக்கக் கூடும்.
ஃபெர்டினாண்ட்டினைப் புரிந்து கொள்ளாமல் மக்கள் அதனைச் சண்டையிட வைக்கிறார்கள். அப்படித் தான் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை விரும்பாத ஒன்றில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள்.
ஃபெர்டினாண்ட் மலர்களை நேசிப்பதைப் போலச் சில குழந்தைகள் படம் வரைவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சிலருக்கு இசையில், விளையாட்டில். எழுதுவதில் ஆர்வம் உருவாகிறது. அவர்களை வீடு புரிந்து கொள்வதில்லை. மற்றவரை உதாரணம் காட்டி உன்னை மாற்றிக் கொள் என அறிவுரை சொல்கிறார்கள். வற்புறுத்துகிறார்கள். தண்டிக்கிறார்கள்.
உலகம் தன்னைக் கேலி செய்வதைப் பற்றி ஃபெர்டினாண்ட் கவலை கொள்வதில்லை. உலகம் ஆரவாரத்தை முன்னெடுக்கும் போது அரிதாகவே இப்படிச் சிலர் அமைதியை விரும்புகிறார்கள். தனக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
1936ல் வெளியான இந்த நூலை ஹிட்லர் தடைசெய்திருக்கிறார். எரிக்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார். ஆனால் அமைதி மற்றும் மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்தும் சிறந்த புத்தகமாக மகாத்மா காந்தி இதனைப் பாராட்டியிருக்கிறார்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 669 followers

