மதுமஞ்சரி திருமணம்- சிவராஜ்
இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்பில், கல்லூரி மாணவர்கள் சிலரும் இணைந்து ஓர் ஆவணப்பட திரையிடலைக் கண்டோம். அந்தப்படம் எண்டோசல்ஃபான் நஞ்சின் தீங்கைப் பற்றியது. ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அந்த ஆவணப்படத்திற்காக நேர்காணல் தந்த அனைவருமே, எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி நஞ்சால் இறந்து காற்றில் கலந்துவிட்டார்களென அப்படம் முடியும்போது காட்டப்பட்டது. அதைக்கண்டு உணர்வுகலங்கி அய்யா நம்மாழ்வார் அங்கிருந்த மாணவர்களிடம் குரல்நடுங்க அழுதபடி பேசிய காட்சி என் மனதுக்குள் அப்படியே ஈரங்காயாமல் இன்னமும் இருக்கிறது.
எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக தமிழகம் முழதும் விழிப்புணர்வு பயணம் செல்வது என அன்றிரவே முடிவுசெய்தோம். ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்களை நிகழ்த்தினோம். எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களைக்கொண்டு அக்கூட்டம் நிகழ்த்தப்பட்டது. அத்தகையதொரு நிகழ்வொன்று கோவையில் நடந்தது. எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக களத்தில் போராடும் எத்தனையோ மனிதர்கள் அந்நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அந்நிகழ்வில்தான் முதன்முதலாக நாங்கள் ‘நிகமானந்தா‘ எனும் மனிதரின் பெயரை அறிந்தோம்.
மாக்சிய அறிஞர் எஸ்.என். நாகராஜன்தான் அப்பெயரை அந்தக்கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார். “தண்ணிய காப்பாத்தனும்னு ஒரு மனுசன் நூத்திப்பதினாலு நாளு உண்ணாவிரதமிருந்து அணுவணுவா துடிச்சு செத்திருக்கான்” என்று அவர் சொன்னபோது அங்கிருந்த எல்லோருமே கலங்கிப்போனோம். அன்றைய இரவுதான் நாங்கள் நிகமானந்தாவைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கினோம்.
தண்ணீருக்காக உயிர்நீத்த நிகமானந்தாவின் இறப்பை அறிந்துகொண்ட அந்தநாள்தான் ஒரு பெருஞ்செயலுக்கான துவக்கம். இன்று, இக்கணம் யோசித்துப் பார்த்தால் அந்த செய்திதான் எங்களுக்குள் செயல்சார்ந்த தீவிரத்தன்மையை விதைத்திருக்கிறது எனத் தோன்றுகிறது.
கங்கை நதிக்கரையில் இயங்கும் தொழிற்சாலைகள் அந்நதியில் மாசுகலப்பதைத் தடுத்து நிறுத்தக்கோரி, 114 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் இளந்துறவி நிகமானந்தா. தனது உயிரையே போராட்டக்கருவியாக மாற்றி, தண்ணீரைக் காக்கும் பெரும்பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறதென இச்சமூகத்திற்கு அறைகூவல் விடுத்த இறையுள்ளம். எங்கள் மானசீக ஆசானாக நாங்கள் கண்ணீர்மல்கி ஏற்றுக்கொண்ட நல்லான்மா. அத்தகைய நிகமானந்தாவின் கடைசி மூச்சுக்காற்றை அகத்திலேந்தி குக்கூ நிலத்திற்கு வந்தடைந்த மகள்தான் மதுமஞ்சரி.
கட்டிக்கலை வடிவமைப்புப் பொறியியல் படித்துவிட்டு, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் பணிபுரிந்த மஞ்சரி, குக்கூ காட்டுப்பள்ளிக்கு முதன்முதலாக வந்தநாள் இன்னமும் ஈரங்குறையாமல் மனதிலிருக்கிறது. அன்றைய தினம் மஞ்சரியுடன் உரையாடும்போது, “மஞ்சரி… கிராமங்கிராமமா மொதல்ல நடந்துபோ… அப்பறம் சைக்கிள்ல போ… அப்பறம் டவுன்பஸ்ல போ… எல்லா பக்கமும் போய் பாத்திட்டு என்னமாதிரியான சூழல்ல உனக்கு வேல பாக்கனும்னு தோணுதோ, அதை செய்யலாம்” என்று சொன்னேன்.
அப்படியானதொரு பயணத்தில் ‘ஒரு மலையடிவார கிராமத்துல தண்ணிக்கு இவ்வளவு பற்றாக்குறை இருக்கே‘ என்ற அனுபவ உண்மையை உணர்ந்தவளாய் தண்ணீர் சார்ந்த செயல்பாடுகளில் சிறுகச்சிறுகத் தன்னை இணைத்துக்கொண்டாள் மஞ்சரி. ஆனால், இன்று யோசித்துப் பார்த்தால் அவளது செயற்தாக்கம் அளப்பரியது என்பதை உணரமுடிகிறது. மலைக்கிராம மக்களுடைய தாகத்தை… தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீருக்காக அலையும் துயரத்தை… விளிம்புநிலையினர் அடையும் நிராகரிப்பை என அவர்களின் விசும்பல் குரலை இந்தியச்சூழல் வரை கவனப்படுத்திக் கொண்டுசென்றதில் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்க‘த்தின் பெரும்பங்குண்டு. அதன் செயல்விசையாக இருந்து களம் இயங்கியவள் மஞ்சரி.
இதுவரையில், மலையுச்சி துவங்கி சமவெளி வரையென பல்வேறு பகுதிகளிலிருந்த 15 கிணறுகள் முழுமையாகத் தூர்வாரி புனரமைக்கப்பட்டு ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிணற்றை அளவெடுத்து வரைபடமாக்குவது துவங்கி, அதன் ஆழச்சுனையில் கல்லகற்றி நீர்க்கண்ணைத் திறப்பதுவரை மஞ்சரி தாளாத தீவிரத்தோடு செயலாற்றியுள்ளாள்.
கிணற்றைத் தூர்வார உழைக்கும் மனிதர்களோடும், தன்னார்வ நண்பர்களோடும் இணைந்து பணிசெய்து, அடிப்படை வசதிகளற்ற மலைக்கிராமங்களில் மாதக்கணக்கில் தங்கியிருந்து ஒவ்வொரு கிணற்றையும் உளத்தவிப்போடு மீட்டிருக்கிறாள். நீர்ச்சுனையின் முதல்நீரை ஊரின் குலதெய்வ பாதத்திலூற்றி கண்ணீர்மல்கி கரங்கூப்பி நிற்பவள் மதுமஞ்சரி.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியை அறிய நேர்ந்தபோது நாங்களனைவருமே அதிர்ச்சியுற்றோம். எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி சிறுமிக்கு உடல்நிலை மோசமாகிறது. மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துபார்க்கையில், அவளுடைய உடல்முழுதும் மலத்துகள்கள் எலும்புமஜ்ஜை வரை பரவியிருப்பது தெரியவருகிறது. அதன்பிறகுதான் எல்லோருக்கும் உண்மை தெரியவந்தது. அவள் பள்ளிக்கூடத்தில் கழிவறை இல்லாததால் மலத்தை அடக்கியடக்கி இரத்தத்தில் மலங்கலந்து செத்திருக்கிறாள் அச்சிறுமி.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு துயரடைந்த நாளிலிருந்தே நெல்லிவாசல் மலைக்கிராமத்தில் எப்படியாவது ஒரு கழிவறையைக் கட்டிவிட வேண்டும் என்பது செயற்தவிப்பாக நீண்டது. காலம் கனிந்து அந்தச்செயலை நிறைவேற்ற முடிவுசெய்தபோது, கழிவறையை வடிவமைத்துக் கட்டித்தர துணைநின்ற நல்மனம்தான் மைக்கேல். மலைக்கிராமத்திற்கேற்ற வகையில், அங்கு நிலமெழுந்த லாந்தர் விளக்குபோல அழகுற வடிவமைத்து பெருமழையிலும் உடனுழைத்து, செஞ்சாந்து நிறத்தில் இரு கழிவறைகளைக் கட்டிமுடித்தார் மைக்கேல். அரசுப்பள்ளி பெண் குழந்தைகளுக்கான கழிவறையாக அது இன்றுவரை பயன்பட்டுவருகிறது.
மைக்கேல்… கட்டிடக்கலை வடிவமைப்புப் பொறியியல் முடித்துவிட்டு இந்தியாவின் பல முன்னோடி கட்டிடக்கலை ஆசிரியர்களிடம் அருகமர்ந்து கற்றமனம். இத்தகைய ஒருவரை கழிவறை கட்டித்தரக் கேட்கிறோமே என யோசித்துபோது, அந்த எண்ணத்தை எல்லாம் போட்டுடைத்து தூசாக்கி களத்தில் இறங்கி ஒவ்வொரு வேலையையும் அர்ப்பணிப்பும் தீவிரமும் செய்நேர்த்தியும் கலந்து செய்துமுடித்தார் மைக்கேல். அதன்பிறகு, ஈரோடு சென்னிமலையில் நூற்பு தொழிற்கூடம், அதன் நெசவுப்பள்ளி, ஈரோடு லட்சுமண ஐயர் விடுதி என அனைத்தையும் மைக்கேலும் அவருடைய சகாக்களுமே நல்லபடியாக முடித்துக் கொடுத்தார்கள். மைக்கேல் குக்கூவின் அன்புமிகு ஆன்மாக்களில் ஒருவாரானார்.
மதுமஞ்சரியும் மைக்கேலும் இணையராக வாழ்வதென முடிவெடுத்திருக்கிறார்கள். இவர்களது இணையேற்பு நிகழ்வானது நாளை (30 நவம்பர் 2025) காலை 8 மணிக்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள எழுதியமரத்தையன் கோவில் வனத்தில் நிகழவுள்ளது. இணையேற்பு நிகழ்வாக மட்டுமேயல்லாமல், பழங்குடி குடும்பத்துக்கு கன்றுக்குட்டிகள் தருவது; அங்கு வசிக்கும் பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்குவது; இணையேற்பு நிகழும் கோவில் சூழமைவைச்சுற்றி குறுங்காடு உருவாக்கும் செயலசைவுத் துவக்கமும் இவ்விழாவுடன் இணைவுகொள்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றி மீட்பதற்கான ‘விதைக் காப்பகமும்‘ இந்நிகழ்வில் துவங்கப்படவுள்ளது. காப்பகத்தின் முதல் செயலசைவாக, ஒருவருக்கு தலா இரண்டு கிலோ வீதம் இருநூறு விவசாயிகளிடம் ஒப்படைக்க உள்ளோம். அவர்கள் அவ்விதையைப் பயிரிட்டு அறுவடை செய்தபிறகு மீண்டும் காப்பகத்திற்கு நான்கு கிலோ விதைநெல்லைக் கொடையாகத் திருப்பித் தருவார்கள். சுழற்சி அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகள் ஊரிலுள்ள எல்லா விவசாயிகளுக்கும் விதையளிக்கும் தொடர்ச்சியும் இதிலடங்கும்.
வேர்நனைக்கும் நீரருளால்… இந்த இணையேற்பு உங்கள் எல்லோரின் அன்பையும் ஆசியையும் வேண்டிப்பெற்று நிகழவுள்ளது. அந்தியூர் மலைக்கிராமமான சோளகணை பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் முதல்… இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் வரை… எல்லோரும் இணையேற்பு நாளன்று திரளவுள்ளார்கள். மதுமஞ்சரி மைக்கேல்… இவர்களிருவரின் இணையேற்பு, இருதயம் நிறைந்து வாழ்த்தும் உங்களெல்லோரின் எண்ணத்து அன்பினால் இன்னும் சிறப்புற்று நிகழ்ந்திட, இங்கு இக்கணம் நன்றெழுக!
மலையாழும் தெய்வங்களே உயிரனைத்தையும் காத்திடுக!
மழையாகும் நீர்முகில்களே
ஊர்க்கிணற்றில் சுரந்தெழுக!
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
Thanks & Regards,
Thannaram Noolveli
“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல
செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்“
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

