ஒழுக்கத்தின் நிறப்பட்டை
சதிர், பரதம்- ஒரு விவாதம்
அன்புள்ள ஜெ,
நீங்கள் உங்கள் கட்டுரையில் சொல்வது போல தேவதாசி மரபு என்பது கோயில்களைச் சார்ந்த ஒரு தாய்வழிச் சமூகம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்திலே பலவகையான வாழ்க்கைமுறைகள் இருந்துள்ளன. தாய்வழிச் சமூகத்தின் அம்சங்கள் இங்குள்ள போர்ச்சாதிகளிடமும் உண்டு. ஆகவேதான் அங்கே விதவை மறுமணமும், விவாகரத்துக்குப் பின் மறுமணமும் இயல்பாக இருந்தது. நான் அத்தகைய போர்ச்சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் சமூக வழக்கத்தையெல்லாம் ஒழுக்கமின்மை என்று சொல்லும் ஒரு குரல் இப்போது உள்ளது. அந்தக் குரல் சைவமரபில் இருந்தது. காங்கிரஸில் இருந்தது. திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதைத்தான எழுதினார்கள். குறிப்பாக பாரதிதாசன் ஒருத்திக்கு ஒருவன் என்பதை மிகப்பெரிய அறமாகச் சொல்கிறார். தாய்வழிச்சமூக வாழ்க்கைமுறையை ஒழுக்கமற்றது என்று சொல்பவர்கள் இங்கே உள்ள சீரழிந்த தந்தைவழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதை தூக்கிப்பிடிப்பவர்கள். இங்குள்ள பெண்ணியவாதிகளும் அதைச் சொல்வது வருந்தத்தக்க மடத்தனம். ஆனால் பெண்களும் அதைச் சொல்வது வருத்தம் அளிப்பது.
க. சிவசமுத்திரம்.
அன்புள்ள சிவசமுத்திரம்,
உங்கள் கடிதத்தை தமிழாக்கம் செய்துள்ளேன். முக்கியமான கடிதம்.
நான் தாய்வழிச்சமூகத்தைச் சேர்ந்தவன். தந்தைவழிச் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டினர் இன்றுகூட ஊடகங்களில் தொடர்ச்சியாக அச்சமூகத்தை இழிவுசெய்வதைக் காணலாம். அவர்களின் பார்வையில் தந்தைவழிச் சமூகத்திலுள்ள ஆண்களின் எல்லா பாலியல் நடத்தைகளும் சுரண்டல்களும் இயல்பானவை. தாய்வழிச்சமூகத்தின் செயல்பாடுகள் ஒழுக்கமற்றவை. (சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலிலேயே தாமுவின் குடும்பம் அவ்வாறு இழிவுசெய்யப்படுவதன் சித்திரம் உள்ளது). தமிழகத்தின் தந்தைவழிச் சமூகப் பெருங்குடும்பங்களில் ஆதிக்க ஆண்கள் குடும்பத்தின் பெண்கள் மேல் செலுத்தும் பாலியல் ஆதிக்கம் எல்லா எல்லைகளையும் மீறிய ஒன்று. அதை குறைந்த அளவில் இலக்கியம் பதிவுசெய்துள்ளது. (ஓர் உதாரணம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம்).
தமிழகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன வாழ்க்கைக்குள் வந்தது. அப்போதுதான் அது இதுதான் தமிழ் மரபு, இதுவே தமிழ் பண்பாடு, இது தமிழர் அறம் என்ன தன்னை சராசரிப்படுத்திக்கொண்டது. அப்போது உயர்குடிகளின் ஒழுக்கமும் பண்பாடும்தான் உயர்வானவை என்றும், இயல்பானவை என்றும், தமிழரின் ஒழுக்கமும் நாகரீகமும் அதுவே என்றும் வகுக்கப்பட்டது. பிராமணர், பிராமணரல்லா உயர்சாதியினர் (வேளாளர் , செட்டியார்கள் மற்றும் முதலியார்கள்) சேர்ந்து அதை அவர்களே முடிவுசெய்து அவர்களே ஏற்றுக்கொண்டு நிறுவிவிட்டார்கள்.
ஓர் உதாரணம் சொல்கிறேனே. தமிழில் ‘விதவை மறுமணம்’ என்பது ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்காக சமூகசீர்திருத்த முன்னோடிகள் ஏராளமாகப் பேசியுமிருக்கிறார்கள். கைம்பெண் மறுவாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1900 முதல் விதவை மறுமணம் இலக்கியத்தில் ஒரு முக்கியமான பேசுபொருள். தமிழிலக்கியத்தில் விதவை மறுமணம் பெரிய பேசுபொருள். மாயாவி எழுதிய புகழ்பெற்ற கண்கள் உறங்காவோ நாவலில் இளம்விதவையான ஒரு பெண் மருத்துவர் மறுமணம் செய்வதை ஊரே கொந்தளித்து எதிர்க்கிறது. ஆனால் உண்மையில் நம் கிராமங்கள் அப்படித்தான் இருந்தனவா?
விதவை நோன்பு என்பது ஒட்டுமொத்த தமிழ்ப்பண்பாட்டின் பிரச்சினை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையா?
சாதிவாரியாகப் பார்த்தால் விதவை மறுமணம் அனுமதிக்கப்படாத சாதிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் மிகச்சிறுபான்மையினரான உயர்சாதியினர் மட்டுமே. எஞ்சிய போர்ச்சாதிகள், குடியானவச் சாதிகள், அடித்தள மக்கள் அனைவரிலும் மிக இயல்பாக மறுமணம் செய்யும் வழக்கம் இருந்தது. அதற்கான சடங்குகள் இருந்தன. அது அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் பாரம்பரியம். அப்படியென்றால் விதவைமறுமணம் என்பது எப்படி ‘தமிழகத்தின் சமூக–பண்பாட்டுப் பிரச்சினை’ ஆக மாறியது? எவர் மாற்றினார்கள்?
நாம் சினிமாக்களை பார்ப்போம். எத்தனை விதவைகள்! 1940 முதல் தமிழ் சினிமாவில் விதவைப்பெண்களின் துயரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாட்டு இன்றும் விதவையின் குரலாக தமிழ் சினிமாவில் இருந்து ஒலிக்கிறது. விதவையைப் புனிதப்படுத்தும் எவ்வளவு படங்கள். விதவையாக இருப்பது ஒரு வகையான தவம் (கைம்மை நோன்பு) என்று காட்டும் எவ்வளவு படங்கள். இரண்டு சினிமாக்களை பார்ப்போம். நான் பாடும் பாடல் என்று ஒரு படம். கதைநாயகி விதவை. கணவன் கேட்டுக்கொண்டமையால் அவள் பொட்டும்பூவும் வைத்துக்கொள்கிறாள். அதைக்கண்டு அவள் கன்னி என நம்பி ஒருவன் அவளை விரும்பி திருமணம் செய்யலாமா என்று கேட்கிறான். அதெப்படி அப்படி என்னிடம் கேட்கலாம் என்று அவள் தீயால் நெற்றியைச் சுட்டுக்கொள்கிறாள்.
அந்தப்படம் வெளிவந்தபோது ஒரு விவாதம். அந்தப்படத்தை கண்டித்து சிவசங்கரி எழுதினார். ஏனென்றால் அவர் கணவன் மறைந்தபின்னரும் கணவரின் விருப்பப்படி பொட்டு வைத்துக்கொண்டிருந்தார். சென்னையில் விஜில் என்னும் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் கோவி மணிசேகரன் “கணவன் மறைந்த பின் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்கள் பெண்களல்ல, பேய்கள்” என்று பேசினார். அரங்கில் ஒரே சச்சரவு. அந்த கூட்டத்தில்தான் நான் க.நா.சுவைச் சந்தித்தேன். வெளியே காபி சாப்பிடச் செல்லும்போது அவர் சங்கரநாராயணன் என்பவரிடம் “ஒழுக்கம் பற்றிப் பேசுற எந்தப் பேச்சுமே பாதுகாப்பின்மையிலே இருந்து வர்ரது. அது இலக்கியத்திலே இடமில்லை” என்றார்.
அதற்கும் பிறகுதான் சின்னத்தம்பி படம் வந்தது. அதில் ஒரு விதவைத்தாயை ‘சித்திரவதை’ செய்கிறார்கள். எப்படி? அவள் வெள்ளைச்சேலைமேல் வண்ணத்தை ஊற்றி! அந்த வண்ணம் அவளுக்கு தீ பட்டதுபோல எரிகிறது. அவள் துடிதுடிக்கிறாள். அதை தமிழ்மக்கள் பார்த்து ரசித்தனர். அவர்களில் முக்கால்வாசிப்பேரின் சாதிகளில் விதவைகள் மறுமணம் செய்யும் வழக்கம் இயல்பாக இருந்தது. எல்லா குடும்பங்களிலும் மறுமணம் செய்துகொண்டு வாழும் விதவைகள் இருந்தனர். அவர்கள் அந்தப் படங்களைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவர்களின் குழந்தைகள் என்ன நினைப்பார்கள்? எவருமே அதை சிந்திக்கவில்லை.
ஒரு சிறுபான்மை எப்படி ஒரு பண்பாட்டின் பெரும்பான்மையை இப்படி இழிவுசெய்ய முடிகிறது? அந்த இழிவுபடுத்தலை மதத்தின் பெயரால் பிராமணர்கள் செய்திருந்தால் கொந்தளித்திருப்பார்கள். தமிழ்ப்பண்பாட்டின் பெயரால் பிராமணரல்லாதவர்கள் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறார்கள். இதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். (யாருடைய சொத்து, கண்ணகியும் மாதவியும்) தமிழ்ப்பண்பாட்டின் ஒரே பெண் அடையாளமாக கண்ணகியை முன்வைப்பது என்பது இந்தியப் பண்பாட்டின் ஒரே பெண் அடையாளமாக சீதையை முன்வைப்பதுபோன்றது. இருவருமே ஆணாதிக்கச் சமூகத்தின் பலியாடுகள். அவர்களை தியாகிகள் ஆக்குவதன் வழியாக ஆணாதிக்க விழுமியங்கள் புனிதப்படுத்தப்பட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன. ஆனால் இங்கே முற்போக்கினரும், பெண்ணியரும்கூட அதைத்தான் செய்கிறார்கள்.
மேலே சொன்ன படங்கள் வெளிவந்தபின் இன்னொரு படம் வந்தது. சீமான் எழுதிய கதை அது. பசும்பொன். அதில் விதவை மறுமணம் இயல்பாக நிகழ்ந்து அந்த அன்னைக்கு இன்னொரு கணவனில் மகன்கள் இருப்பதுபோல இருந்தது. சீமான் அவர் அறிந்த இயல்பான சமூகக்கதையை எழுத, அச்சமூகத்தைச்சேர்ந்த பாரதிராஜா இயக்கினார். படம் பெருந்தோல்வி. காரணம் அந்த விதவை மறுமணத்தை மக்கள் ஏற்கவில்லை, அத்துடன் அதிலிருந்த வரண்ட நிலமும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி அக்காலத்தில் சீமான் ஒரு தனி உரையாடலில் சொன்னார். “தமிழ் சனங்க அவங்களோட பண்பாடு எதுவோ அதை நினைச்சு வெக்கப்படுற மாதிரி செஞ்சுட்டாங்க. அவங்களோட நெறம், அவங்களோட நெலம், அவங்களோட சாப்பாடு எல்லாமே தப்புன்னு ஆக்கிட்டாங்க” அது ஓர் உண்மை.
ஒரு பண்பாட்டுக்கு, ஒரு சமூகத்திற்கு என ஒட்டுமொத்தமாக ஓர் ஒழுக்கநெறி இருக்கமுடியாது. ஓர் உணவு, ஒரே தெய்வம் இருக்கமுடியாது என்பதைப்போலத்தான் அதுவும். ஒவ்வொரு சமூகக்குழுவும் தனக்கான வாழ்க்கைமுறையை உருவாக்கிக்கொண்டுள்ளது. ஒழுக்கம் அதன் ஒரு பகுதியே. தாய்வழிச்சமூகம் தனக்கான ஒழுக்கம் கொண்டது. தாய்வழிச்சமூகத்தின் பெண் எந்நிலையிலும் ஒரு பொய்யைச் சொல்லக்கூடாது, அதுதான் அவளுக்கான ஒழுக்கமீறல். ஆனால் பொய்சொல்லாமல் தந்தைவழிச் சமூகப்பெண் வாழவே முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவீனயுகத்தின் தொடக்ககாலத்தில், நாம் நம் பண்பாடு இது என வகுத்துக்கொண்டபோது இதுவே நம் பொது ஒழுக்கம் என நூல்களைக்கொண்டும், உயர்சாதியினரின் வாழ்க்கையைக் கொண்டும் ஒரு முடிவை அடைந்திருக்கலாம். ஆனால் அந்த ஒற்றைப்படைத்தன்மையைக் களைந்து விரிவான பன்முகத்தன்மையை உருவாக்கிக்கொள்ளவேண்டிய காலம் இது.
சுரண்டல் அற்ற எந்த ஒழுக்கமும் நல்லொழுக்கமே. ஒழுக்கம் சார்ந்து இன்னொருவரை பழிப்பதும் மதிப்பிடுவதும் இழிவு. இன்னொரு வகை ஒழுக்கத்தை குறைத்துப் பார்ப்பது முழுமையான பண்பாட்டு அறிவின்மை மட்டுமே. எச்சமூகத்திலும் ஒழுக்கம் என்பது ஒரு பலநிறப் பட்டையாகவே இருக்கும். அந்த வானவில்லை புரிந்துகொள்ள முடியாதவர்கள் பண்பாடற்ற பழம்பிறவிகள்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

