சதிர், பரதம்- ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ,

ஒரு தனிப்பட்ட சந்தேகம். கீழ்க்கண்ட விவாதத்தைக் காணவும் 

செந்தில் ஜெகந்நாதன் குறிப்பு

‘நடன அரசி‘ என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்ட, மயிலாடுதுறையில் பிறந்த நடனக் கலைஞர் பத்மபூஷன் குமாரி கமலா அவர்கள் காலமானார். சதிர் ஆட்டம்,  பரதநாட்டியமாக  மறு உரு அடைந்து பொது மேடைகளில் பாரம்பரிய கலையாக அங்கீகாரம் பெறுவதற்கு முக்கிய இணைப்பாக இருந்தவர். இன்று மேடைகளில் அரங்கேறும் பரதநாட்டிய பாணியை வரையறுத்ததில் மிக முக்கியமான முன்னோடி குமாரி கமலா அவர்கள்.

அஞ்சலிகள்.

செந்தில் ஜெகந்நாதன் செந்தில் ஜெகன்னாதன்

ஜெயக்குமார் பரத்வாஜ் பதில்

மறைந்த நடனக் கலைஞர் கமலா அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலி குறிப்பு முகநூலில் இருந்து. எழுதியவர் இலக்கியவாதி என்று அறிகிறேன் அவருடைய நூல் எதுவும் நான் வாசித்ததில்லை. தகவல் பிழையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பு. சதிர் என்பது தான் பரதநாட்டியமாக மாறியது என்று தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. அது குறித்து. பண்டைய தமிழ் இலக்கியங்களில், கூத்து என்ற சொல்லே நடனத்திற்கு சொல்லப்பட்டது. பிற்காலத்தில் சொக்கம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. சொக்கம் என்பது சுத்த நிருத்தம், அது 108 கரணங்களை உடையது என்று விளக்குகிறார்கள். பின்னாளில் பரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. சொக்கம் என்பது ஸ்வச்சம்   என்ற பாகத சொல்லின் திரிபு. 

சிதம்பரம் திருக்கோயிலில் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் கோப்பெரும் சிங்கன் தன்னை பரதம் வல்ல பெருமான் என்று குறிப்பிட்டு கொள்கிறான். பரத சேனாபதீயம், மகாபரத சூடாமணி போன்ற இடைக்காலத்தில் எழுதப்பட்ட  நூல்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.  அப்படியானால் சதிர் என்ற சொல் எங்கே வருகிறது. நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலும், தனிப்பாடல் திரட்டிலும் சதிர் என்ற சொல் அழகு, மேன்மை, பெருமை இவற்றை குறிப்பதாக வருகிறது. நடனத்தைக் குறிப்பதற்காக சதிர் என்ற சொல் பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப்படவே இல்லை. 

அப்படியானால் நடனத்தை குறிப்பதாக சதிர் எங்கிருந்து வந்தது? சதிர் என்ற சொல் சதர என்ற பார்சி சொல்லை ஒட்டி பிறந்தது. சதர என்ற சொல்லுக்கு பார்சி மொழியில் அவை அல்லது அரசவை என்று பொருள். உருது மொழியிலும் அதே பொருளில் கையாளப்பட்டது. (சதுர நாச் என்ற ஹிந்தி பாடலை நினைவு படுத்திக் கொள்ளலாம்.) அவையில் ஆடக்கூடியதை சதர நாச் என்றும் அது விஜயநகர அரசவையில் வரும் பொழுது சதர நாச் என்றது போய் சதிராட்டம் என்று ஆனது.  பரதநாட்டியம் என்ற சொல் பழைய சொல்தான். சதிர் என்பதுதான் புதிய சொல். கோவில்களில் ஆடப்பட்ட நாட்டியம் சதிர் என்ற வகையில் வராது. அரசவையில் ஆடப்பட்டது அதுவும்  16ஆம் நூற்றாண்டு சொல்.       

வரலாற்றை எழுதும் பொழுது மிக கவனமாக  கையாள வேண்டும் என்று நான் மீண்டும் நினைவு படுத்திக்கொள்கிறேன்.

ஜெயக்குமார் பரத்வாஜ் jeyakumar

இந்த விவாதத்தை இன்று கவனிக்க நேர்ந்தது. செந்தில் ஜெகன்நாதன் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவுக்கு பதிலாக ஜெயக்குமார் பரத்வாஜ் ஆலையக்கலை வாட்சாப் குழுமத்தில் இப்பதிவை எழுதியிருந்தார்.

இதை வாசித்த போது ஒரு சந்தேகம் எழுகிறது. செந்தில் ஜெகன்நாதன், ‘சதிர் ஆட்டம், பரதநாட்டியமாக மறு உரு அடைந்து பொது மேடைகளில் பாரம்பரிய கலையாக அங்கீகாரம் பெற்றது’ என்கிறார். அவர் வாக்கியத்தை இவ்வாறு புரிந்துகொள்கிறேன்: ‘அரசவைகளிலும் தனியார் புரவலர்களின் சபைகளிலும் ஆடப்பட்டுக்கொண்டிருந்த நடனமானது மறு உரு அடைந்து பொது மேடைகளில் பாரம்பரிய கலையாக அங்கீகாரம் பெற்றது‘. இந்த வாக்கியத்தில் அரசவைகளில் ஆடப்பட்ட நடனத்தைச் சுட்ட சதிர் என்ற சொல்லையும், பொது மேடையில் பாரம்பரியம் அங்கீகாரம் பெற்ற நடனத்தைச் சுட்ட பரதநாட்டியம் என்ற சொல்லையும் ஆசிரியர் பயன்படுத்துவதாக எடுத்துக்கொண்டேன். 

வரலாற்றுரீதியாக அது உண்மையும் கூட. பரதநாட்டியம், பரதம் என்ற சொல் வெகுகாலமாக பயன்பாட்டில் இருந்த சொல் தான். நடனத்தைக் குறிக்க சதிர் என்றச் சொல் உருவானது பின்னாளில் தான். அதில் மறுப்பு இல்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டைப் பொருத்தவரை சதிர் என்ற சொல்லும் பரதநாட்டியம் என்ற சொல்லும் இரு வெவ்வேறு விஷயங்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டன. கலாக்‌ஷேத்ராவில் ஆடப்பட்ட நாட்டியம் சதிர் என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்படவில்லை. பரதநாட்டியம் என்ற சொல்லை மட்டும் தான் அவர்கள் பயன்படுத்தினார்கள் — அதுவரை நடந்துவந்த அரசவைக்கச்சேரிகளிலிருந்து தங்கள் நாட்டியப்பாணியை வேறுபடுத்திக்கொள்ள. சதிரின் பகுதிகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். சதிர் காலத்தில் அழிந்தது. மறுஉருவாக்கம் செய்யப்பட்டு பரதநாட்டியம் என்ற பழைய சொல்லால் மீஅடையாளப்படுத்தப்பட்ட நவீன வடிவமே எஞ்சியது. இந்த வித்தியாசத்தைக் குறிக்கவே இச்சொற்களை இவ்வகையில் செந்தில் ஜெகன்நாதன் கையாண்டார் என்று எடுத்துக்கொண்டேன். 

ஜெயக்குமாரின் சொல் ஆய்வு முறை விவாதத்தின் அர்த்தத்தளத்தை திசைத்திருபுவதாக உள்ளது என்று நினைக்கிறேன். பரதநாட்டியம் என்ற சொல் பழமையானது, சதிர் புதிய சொல், ஆகவே சதிர் பரதமாக உருமாறியிருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். ஆனால் சொல் என்பது சொல் மட்டுமல்ல அல்லவா? முன்னரே பயனில் இருந்த சொல் புதிய அர்த்தங்களை பெற்றுக்கொண்டு மறுகண்டடைவாகும்போது அதன் மாறுபாடுகளும் புதுமைகளுமே அச்சொல்லின் த்வனியென்று முதன்மையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் அல்லவா? விவேகாநந்தர் உரைத்ததும் வேதாந்தம், சங்கரர் உரைத்ததும் வேதாந்தம். ஆனால் விவேகாநந்தரின் வேதாந்தம் என்னும்போது அதன் நவீனத்தன்மையும் உலகளாவியத்தன்மையும் தான் முதல் அர்த்தங்களாக எழுகின்றன. இவ்வாறு தானே ருக்மிணி தேவியின் காலத்துக்குப் பின்னால் எழுந்த பரதநாட்டியம் என்ற சொல்லையும் பொருள் கொள்ள வேண்டும்?

என்னுடைய சந்தேகங்கள் இரண்டு.

முதல் சந்தேகம் வாக்கியங்களை அர்த்தப்படுத்திக்கொள்வதைப் பற்றியது, வாக்கியங்களை precise-ஆக உருவாக்குவதைப் பற்றியதும் கூட. ‘சதிர் ஆட்டம், பரத நாட்டியமாக மறு உரு அடைந்தது‘ என்ற வாக்கியம் அதன் அர்த்தத்தளத்தில் சரியானதா? ஆசிரியர் உத்தேசித்த அர்த்தத்தில் அந்த வாக்கியத்தை அமைக்க வேறு வழி உள்ளதா?

இரண்டாவது, விவாத முறை சார்ந்தது, இவ்வகை விவாதங்களில் இப்படிப்பட்ட சொல் ஆய்வுகளின் பங்கு என்ன? இவை நடைமுறை அர்த்தங்களை கணக்கில எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன்?

இந்த விவாதத்தில் என்னுடைய ஆர்வம் சொற்றொடர்களை அர்த்தப்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் விவாத முறை சார்ந்தது மட்டுமே. ஆகவே தான் உங்களுக்கு எழுதுகிறேன். இந்தக் குறிப்பிட்டத் விவாதத்தலைப்பில் நேரம் செலவிட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆகவே பொதுவில் பதிவு எழுதவில்லை. எனவே இக்கடிதத்தை வெளியிட நேர்ந்தால் என் பெயர் வேண்டாம்.

எஸ் 

அன்புள்ள எஸ்,

இந்த விஷயத்தில் ‘திட்டவட்டமாக’ எதையாவது சொல்லும் ஆய்வுத்தகுதி எனக்கில்லை. என் தகுதி என்பது விஷ்ணுபுரம் நாவலை எழுதும்போது நான் நடனக்கலை பற்றி செய்த சில ஆய்வுகள்தான். என் குறைவான புரிதலைக்கொண்டு பார்த்தாலே ஜெயக்குமார் மிகச்சரியாகவே சொல்கிறார். அவர்தான் இதைச் சொல்ல தகுதியானவர்.

நீங்கள் சொல்வதுபோல இது எளிமையான சொல் ஆய்வு அல்ல. சதிர் என்ற சொல்லை பரதநாட்டியமாக ஆக்கியது அல்ல. செந்தில் ஜெகந்நாதன் சொல்லுவது இங்கே வழக்கமாக பேசப்படும் ஒரு கருத்து. அதாவது சதிர் என்பது வேறு. அதை இன்றிருக்கும் பரதநாட்டியமாக ஆக்கிவிட்டார்கள். சதிர் என்ற ஆட்டத்தை காமச்சுவை கொண்டது, ஒருவகையான ‘மக்கள் கலை’ என வரையறை செய்தார்கள். பரதநாட்டியம் என்பது சம்ஸ்கிருதமயமாக்கமும் இந்து பக்திமயமாக்கமும் செய்யப்பட்டு திரிக்கப்பட்ட கலை என்று பொருள்கொண்டார்கள். ஆகவே மரபார்ந்த ஒரு கலை அழிக்கப்பட்டுவிட்டது, அதன் திரிபடைந்த வடிவமே இன்றிருப்பது என்கிறார்கள். மேம்படுத்தல் என்ற பெயரில் அசல் இல்லாமலாக்கப்பட்டது என்கிறார்கள்.இது திரும்பத் திரும்பச் சொல்லி நிலைநாட்டப்படுகிறது. ஜெயக்குமார் பதில் சொல்வது அதற்குத்தான். ருக்மிணிதேவி அருண்டேலுக்கு எதிரான ஒரு பிரச்சாரமாக இது செய்யப்பட்டது. அதை ருக்மிணிதேவி தன் பணியைச் செய்ய தொடங்கிய காலகட்டத்திலேயே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

சதிர்தான் பரதமாகியது என்பதை நம் பொதுமனநிலை உடனடியாக ஏற்றுக்கொண்டது. அதற்கான முதன்மைக் காரணம் சாதிதான். ஒன்று, அந்த பேச்சு பிராமண சாதிக்கு எதிரானதாக இருந்தது. இரண்டு, ருக்மிணிதேவி என்னும் பெரிய ஆளுமைக்கும், அவர் உருவாக்கிய கலாக்ஷேத்ரா என்னும் அமைப்புக்கும் எதிரானதாக இருந்தது. தமிழ்ச்சூழலில் இதெல்லாம் ஆய்வின் அடிப்படையில் அல்ல, சாதிநிலைபாடுகளின் அடிப்படையிலேயே முடிவாகின்றன.

உண்மையில் இந்த விஷயம் இத்தனை எளிதாக இருக்க வாய்ப்பே இல்லை. எந்த சமூகமாற்றமும், கலையுருமாற்றமும் அப்படி எளிதாக நிகழ்ந்துவிடாது. அதற்கு முன்னோக்கிய நகர்வும் பின்னோக்கிய நகர்வுமாக சிக்கலான ஒரு வளர்சிதைமாற்றமே இருக்கும். எளிமைப்படுத்திக்கொண்டால் அரசியல்சரிநிலைகளை ஆக்ரோஷமாகப் பேசமுடியும். அங்கே எளிய அரசியலாளகள் வந்து காழ்ப்பைக்கொட்ட முடியும். அதற்குத்தான் இன்றைய சமூகஊடகக் காலகட்டத்தில் ஏற்பும் மிகுதி.

என் புரிதலை இப்படிச் சொல்கிறேன். இது விரிவான ஒரு வரலாற்றுச் சித்திரம். இதையே நான் விஷ்ணுபுரம் நாவலில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

*

இந்தியாவெங்கும் பல்வேறு வகையான நடனங்கள் இருந்திருக்கலாம். ஏனென்றால் நடனம் ஓர் அடிப்படைக் கலை. நடனம் அடிப்படையில் பழங்குடி, நாட்டார்கலையாக இருந்திருக்கிறது. இன்றும் பலநூறு நாட்டார் நடனவடிவங்கள் உள்ளன. ஆனால் அது செவ்வியல் நடனமாக திரண்டு, பல ஆயிரமாண்டுகளாக இருந்திருக்கிறது என்பதை நாம் புராணங்களில் இருந்தே அறிகிறோம். மகாபாரதமே செவ்வியல் நடனம் பற்றிய செய்திகளை  அளிக்கிறது.

செவ்வியலாக்கம் எப்படி நிகழ்கிறது? பல்வேறு பழங்குடி- நாட்டார் கலைகளுக்கு பொதுவான இலக்கணம் உருவாக்கப்படுகிறது. (லக்ஷண சாஸ்திரம்). இலக்கணம் உருவானபின் அதற்கான பயிற்சி முறைகள் உருவாகின்றன. அந்தக்கலையை நிகழ்த்தும் சிறப்புக் கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். அவற்றை ரசிக்கும் தேர்ச்சிகொண்ட ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

அந்தச் செவ்வியலாக்கம் மகாபாரதக் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டது. நடனக்கலை உபவேதங்களில் ஒன்றாக கருதப்பட்டது. அந்த மரபில் வந்த நடனக்கலை இலக்கண ஆசிரியர்தான் பரதமுனிவர். அவர் உருவாக்கிய நாட்டிய சாஸ்திரம் இன்றும் முழுமையாகக் கிடைக்கும் நூல். பிற்காலத்தைய நடனம்- நிகழ்த்துகலைகள் அனைத்துக்கும் அதுவே அடிப்படை நூல். அதன் காலம் பொமு 1 முதல் பொயு 2 வரையிலான காலகட்டம் என ஊகிக்கப்படுகிறது.

பரத நாட்டிய சாஸ்திரம் நடனக்கலையை இரண்டாகப் பிரிக்கிறது. தாண்டவம், லாஸ்யம். லாஸ்யம் என்பது மெல்லசைவுகள் கொண்ட நடனம். பெரும்பாலும் பெண்கள் ஆடுவது. தாண்டவம் வல்லசைவுகளாலானது, ஆண்களுக்குரியது. பரதமுனிவரின் இலக்கணப்படி அமைந்த எல்லா நடனங்களையுமே பரதநாட்டியம் என்று சொல்லும் வழக்கம் உண்டு. குறிப்பாக லாஸ்ய நடனமெல்லாம் பரதநாட்டியமே.

தமிழகத்தில் தொல்காலம் முதலே நடனம் கூத்து என்று சொல்லப்பட்டுவந்தது. பலவகையான கூத்துக்களை சிலப்பதிகாரம் சொல்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் நடனம் என்பது மிகமிக நுணுக்கங்கள் கூடிய செவ்வியல் கலைதான் என்பதை அது சொல்லும் இலக்கணங்கள் வழியாகக் காணலாம். கூத்தின் இலக்கணத்தை வகுத்துரைத்த கூத்தநூல் என்னும் இலக்கண நூலைப்  பற்றி பிற்காலச் சோழர் காலகட்டத்தை (பொயு 12 ஆம் நூற்றாண்டு) சேர்ந்த தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடுகிறார்கள். சாத்தனார் எழுதியதாகச் சொல்லப்படும் இந்நூல் கிடைக்கவில்லை.

(கூத்தநூல் என்ற பேரில் ஒரு போலிநூல் உள்ளது. இது ச.து.சு.யோகியார் கண்டடைந்து பதிப்பித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இது அவரால் எழுதப்பட்ட போலிநூல் என நிறுவப்பட்டுள்ளது)

தமிழுக்கே உரிய ஒரு கூத்துமரபு உண்டு, அதற்கான இலக்கணநூல் இருந்திருக்கலாம். கூத்தநூல் அந்த இலக்கணத்தை முன்வைத்த நூலாக இருந்திருக்கலாம். கூத்தநூல் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் வழிநூலாக இருக்கலாம் என்ற கூற்றும் உண்டு. கூத்தநூலின் மேற்கோள்களாக வெவ்வேறு பிற்காலநூல்களில் குறிப்பிடப்படும் எல்லா இலக்கணங்களும் பரதநூலில் உள்ளவையே. அந்நூல் கிடைக்காத நிலையில் எதையும் அறுதியாகச் சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் சங்ககாலம் முதலே கலைகள், நடனம் ஆகியவற்றையே வாழ்வெனக் கொண்ட பரத்தையர் குலம் இருந்துள்ளது. பரத்தையரை பிற்காலத்தைய ஐரோப்பிய ஒழுக்கவியலின் கண்கள் வழியாகப் பார்த்து விபச்சாரிகள் என முத்திரையடிப்பதை தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்களின் தொடக்கநிலையினர் செய்துள்ளனர். திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அது மிகப்பெரிய பண்பாட்டுப் பிழை என்றே நான் நினைக்கிறேன். பரத்தையர் தங்களுக்கான ஒழுக்கநெறிகொண்ட தாய்வழிச் சமூகத்தினராக இருக்கவே வாய்ப்பு. என் ஆழ்நதியைத் தேடி நூலில் விரிவாகப் பேசியுள்ளேன்.

சோழர்காலத்தில் நடனக்கலை அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தது. பரத்தையர் மரபு தேவரடியார் மரபு என உருமாறியது. ஆனால் தேவரடியார் எவரும் சமூகக்கீழ்ப்படியினராக இருக்கவில்லை. தேவரடியார் குலத்தில் அரசர்கள் மணம் புரிந்துகொண்டு, அப்பெண்கள் பட்டத்தரசிகளாக ஆகும் சமூக அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆலயங்களைக் கட்டுமளவுக்குச் செல்வ வளத்துடனும் இருந்தனர்.

ஆகவே அவர்களிடமிருந்த நடனக்கலை எளிமையான நாட்டார்க்கலைவடிவமாக இருக்க வாய்ப்பில்லை.  தேர்ச்சிமிக்க செவ்வியல்கலையே அவர்களிடம் இருந்தது என்று நூல்களை ஆதாரமாகக் கொண்டும், சிற்பங்களை ஆதாரமாகக் கொண்டும் நிறுவமுடியும். ஒரு செவ்வியல் கலைமரபில் இருந்து நாட்டார்கலை உருவாகாது. ஒரு செவ்வியல்கலை முழுமையாக அழிந்து அங்கே தகுதிக்குறைவான ஒரு கலை உருவாகும் என்பதற்கான உதாரணம் எங்குமில்லை. தமிழின் நடனக்கலை கூத்து என்று அழைக்கப்பட்டது. பரதக்கலை என்றும் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றுகள் உள்ளன. அதையே ஜெயக்குமார் குறிப்பிடுகிறார். தாராசுரம் போன்ற சோழர்கால ஆலயங்களிலுள்ள நடனச்சிலைகள் பரதநூல் சொல்லும் கரணங்களையே சித்தரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த தமிழ்நடனக்கலை சதிர் என்று மட்டும் அழைக்கப்பட்ட ஒன்று  என்றும், அது நாட்டார்த்தன்மை கொண்ட ஒரு கேளிக்கைக் கலை மட்டுமே என்றும் ஓர் உளப்பதிவு இன்று பலரிடமுள்ளது. ருக்மிணி அதை ‘மேம்படுத்தி’ மேடைநடனமாக கட்டமைத்தார் என்றும், அதில் சம்ஸ்கிருதச் செவ்வியல் இலக்கணத்தையும் பக்திசார்ந்த பேசுபொருளையும் புகுத்தி அதை ‘உயர்கலையாக’ ஆக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. இதை ருக்மிணிதேவி அருண்டேலின் ஆதரவாளர்கள் அவரது சாதனையாகச் சொல்கிறார்கள். அவரது எதிரிகள் அதை அவர் செய்த திரிப்பு என்றும், சதிர் என்ற இயல்பான கலையை அவர் அழித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் இரண்டும் ஒரே தரப்புதான். இரண்டுமே பிழையானவை.

தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவதாசிகளும் பாலியல்தொழில் செய்து வந்தனர் என்றும், அவர்கள் ஆடியதே சதிர் என்றும், பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூகசீர்திருத்தவாதிகளான மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அச்சமூகத்தை மீட்டனர் என்றும் ஒர் எளிய வரலாறு கட்டமைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த சதிர் பரதநாட்டியமாக ஆக்கப்பட்ட கதையும் சொல்லப்படுகிறது. இதிலுள்ள விந்தையான முரண்பாடு என்னவென்றால் தேவதாசிகள் ‘சீர்திருத்தப்பட்டது’ முற்போக்கு என்றும் ஆனால் சதிர் பரதநாட்டியமாக ஆக்கப்பட்டது பண்பாட்டு அழிப்பு என்றும் ஒரே சமயம் ஒரே சாராரால் சொல்லப்படுவதுதான்.

இப்படி ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகவே முத்திரையடித்து இழிவுசெய்வது, அவர்களின் வரலாற்றைச் சிறுமைசெய்வது பெரும் அநீதி. அச்சமூகம் மிகச்சிறுபான்மை என்பதனால் மட்டுமே இதைச் செய்யமுடிகிறது. ஒரு சேவையை ஒரு சாராருக்குச் செய்தால் அச்சேவையைப் பெற்றவர்களைக் கீழ்மைப்படுத்தி, தங்களை மீட்பர்களாக மேலே நிறுத்திக்கொள்வது என்பது மதவாதிகளின் மனநிலை. அரசியலாளர்களிடமிருப்பதும் அதே மனநிலைதான். தேவதாசி முறை ஒழிப்பு என்பது அவசியமான ஒரு சமூக சீர்திருத்தமே, அது நிலவுடைமைக்கால வழக்கம். அச்சீர்திருத்தத்தைச் செய்தவர்கள் போற்றத்தக்க மனிதாபிமானிகளே. ஆனால் அதன்பொருள் அச்சமூகம் ஒட்டுமொத்தமாகவே இழிநிலையில் இருந்தது என்பது அல்ல.

தேவதாசிகளின் வாழ்க்கைமுறை, பொருளியல்நிலை ஆகியவை பலநூற்றாண்டுகளாக உயநிலையில் இருந்தன. ஆனால் அவர்களின் பொருளியல் நிலை பதினெட்டாம் நூற்றாண்டு முதல் தொடர்வீழ்ச்சிக்கு உள்ளாகியது. காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக பழைய மன்னர்களும் குறுநிலமன்னர்களும் அதிகாரம் இழந்தமை. தொடர்ந்து வந்த பஞ்சங்களால் நிலவுடைமைச் சமூக அமைப்பு சரிந்தமை. அந்த அமைப்பின் ஆதரவில் இருந்தவர்களாகிய தேவதாசிகள் வீழ்ச்சி அடைந்தனர். பொதுவாக ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தை நம்பியிருக்கும் சமூகங்கள்தான் பொருளியல்வீழ்ச்சியின் முதல் அடியை பெறுவார்கள். ஏனென்றல் கலைகள் என்பவை அடிப்படைத்தேவைகள் அல்ல.

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொருளியல் வீழ்ச்சி எல்லா சமூகங்களையும் சீரழித்தது. தமிழகத்தில் இருந்து பல கோடிப்பேர் அடிமைகளாக உலகம் முழுக்கச் சென்றனர். அக்ரகாரங்கள் கொடிய வறுமையை அடைந்தன, அதை அக்கால நூல்களிலேயே காணலாம். தேவதாசிகளும் வறுமையடைந்தனர், அவர்களில் ஒரு சாராரின் ஒழுக்கநெறிகள் மாறியிருக்கலாம். அவர்களின் கலையிலும் அவ்வீழ்ச்சி இருந்திருக்கலாம். ஆனால் அச்சமூகம் முழுக்க முழுக்க அச்சீரழிவை அடையவில்லை. கணிசமானவர்கள் உயர் பொருளியல் நிலையில் இருந்தனர். அவர்களிடமிருந்த கலையும் உயர்தரத்திலேயே இருந்தது.

தேவதாசிகளிடம் இருந்த இசைக்கலை எத்தகைய தூய செவ்வியல் தரம் கொண்டிருந்தது என்பதை வீணை தனம்மாள் போன்ற பல கலைஞர்களின் இசையைப் பற்றி எழுதியவர்கள் பதிவுசெய்துள்ளனர்.மிகமிக நுணுக்கமான செவ்வியல்கலையாகவே அது இருந்திருக்கிறது. அப்படியென்றால் நடனம் மட்டும் தெருக்கலையாகவா இருந்திருக்கும்? அதுவும் இரண்டு நிலைகளிலேயே இருந்திருக்கும். ஒன்று தூய செவ்வியல் நடனம், இன்னொன்று பொதுரசனைக்குரிய எளிய நடனம். பொதுரசனைக்குரிய எளிய நடனம் திருவிழாக்களில் மக்கள் நடுவே தெருவில் ஆடப்பட்டது. அதுவே சதிர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அது ஆலயங்கள் செல்வவளம் குன்றி, அதைச்சார்ந்து வாழ்ந்தவர்கள் பிழைப்பின்பொருட்டு கலையை விற்கவேண்டியிருந்த நிலை உருவானபோது ஏற்பட்ட சிதைவுதான்.

சதிர் என்ற சொல்லுக்கு ஜெயக்குமார் சொல்லும் பொருள் சரியானது என நினைக்கிறேன். ஆனால் நான் சதுர (திறன், பயிற்சி) என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ ஆக இருக்கலாம் என எண்ணியிருந்தேன். மலையாளத்தில் சதுர் என்றால் கைத்திறன் என்பதுதான். அகராதி அளிக்கும் பொருளும் அதுதான். பதினெட்டாம் நூற்றாண்டு வரையில்கூட தமிழ் நூல்களில் சதிர் என்ற சொல் திறமை, நுட்பம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பேச்சுமொழியில் நடனத்தைக் குறிப்பதாக பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அதாவது திருவிழாக்களிலும் மற்ற பொது இடங்களிலும் ஆடப்பட்ட ‘மக்கள் ரசனைக்கான’ நாட்டியத்தைக் குறிக்கும் சொல் அது.

பதினெட்டாம் நூற்றாண்டின் நாட்டியப்பதங்களில் சதிர் என்னும் சொல் உள்ளது என்று கு.அழகிரிசாமி சொல்கிறார். பெரும்பாலும் சிருங்காரச் சுவைகொண்டதும், எளிய நிலப்பிரபுக்களின் சபைகளிலும் கோயில்விழாக்களிலும் ஆடப்பட்ட நடனமே சதிர் எனப்பட்டது. அந்த சதிர் அழியவெல்லாம் இல்லை. அது திருவிழாக்களில் ஆடப்பட்டது. அந்த மரபு அப்படியே தொழில்முறை நாடகமாக ஆகியது. சினிமாவுக்குள் நுழைந்தது. அதில் சிருங்காரம் முதன்மை ரசமாக இருந்தது. இன்றும் ஏதோ வடிவில் உள்ளது.

பல சிருங்காரப் பதங்கள் இன்று பார்க்கையில் மலினமான ரசத்தை முன்வைப்பவையாக இருந்திருக்கின்றன.கல்கி முதல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வரை அந்த சிருங்காரப் பதங்களை கடுமையான சொற்களில் நிராகரித்துள்ளனர். அது பண்பாடோ மரபோ அல்ல, அது ஒருவகை திரிபுநிலை என்று கண்டித்துள்ளனர். உதாரணமாக ஆழ்வாரப்பிள்ளை பதம் ‘சந்தியில் வைத்தென்னை முந்தியில் பிடிக்கிறீர் தரமல்ல முருகையனே’. அதன் சரணம் இப்படி. ‘மருவ ஆசை உண்டானால் பொன்னுடன்
மனையினை தேடி இரவினில் வாரும்’. இந்த அவச்சுவையை தமிழ்ப் பண்பாடு என்றோ, தமிழரின் அசலான கூத்து மரபு என்றோ அறிவுள்ள எவரும் சொல்லமாட்டார்கள். இது ஒரு பெரும் சமூகச்சரிவின் விளைவான கலைச் சிதைவு மட்டுமே.

உண்மையில் இச்சிதைவு எல்லா கலைகளுக்கும் நிகழ்ந்தது. கேரளநிலத்தில் லாஸ்யம் என்றும் பரதம் என்றும் சொல்லப்பட்ட ஓர் ஆடல்முறை இருந்தது. அது இதேபோல நயம் குன்றியது. பின்னர் அது மறு ஆக்கம் செய்யப்பட்டு மோகினியாட்டமாக ஆகியது. கதகளியே கூட இடைக்காலத்தில் அதன் செவ்வியல்தன்மையை இழந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியா முழுக்க கலைகளில் உருவாகியிருந்த வீழ்ச்சிக்கு எதிரான மனநிலைகள் உருவாயின. அவற்றை மீட்கும் இயக்கங்கள் எழுந்தன. தாகூரின் சாந்திநிகேதனம் மணிபுரி, ஒடிசி உள்ளிட்ட கலைகளை மீட்டெடுத்தது. கதகளியை வள்ளத்தோளின் கலாமண்டலம் மீட்டெடுத்தது. அதைப்போலத்தான் கூத்தை கலாக்ஷேத்ரா மீட்டது. கலாக்ஷேத்ராமீது  ‘சீர்திருத்தம் என்ற பேரில் மரபைச் சிதைத்துவிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டு தாகூர், வள்ளத்தோள், சிவராமகாரந்த் ஆகியோர் மீதும் எழுந்தது.

தமிழ் கூத்துமரபின் தொடர்ச்சியான நடனக்கலை சோழர்காலம் முதல் இந்திய அளவிலான இலக்கணத்துடன் உரையாடி வளர்ந்திருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். கலைகளின் இயல்பு அது, அவை தூய்மையை தக்கவைத்துக்கொள்ள முயல்வதில்லை, பிற கலைவடிவங்களுடனும் கலைக்கொள்கைகளுடனும் உரையாடி அவற்றை ஏற்றுக்கொண்டு வளர்கின்றன. சோழர் ஆட்சிக்காலம் சம்ஸ்கிருதம் தமிழில் முதன்மைச் செல்வாக்கு செலுத்திய காலம். இந்தியா முழுக இருந்து எல்லா கலைவடிவங்களும் இங்கே வந்த காலம். கூத்தன் என சிவன் வகுக்கப்பட்ட காலம். கூத்து பிரபஞ்ச இயக்கமாகவே உன்னதப்படுத்தப்பட்ட காலம்.

அந்த தூய தமிழ்ச் செவ்வியல் நடனமும் தேவதாசிகளிடம் இருந்தது. தூய செவ்வியல்வடிவிலேயே இருந்தது. கூத்தபிரான் ஆடியது ‘சதிர்’ அல்ல. கூத்துதான். அதைத்தான் ருக்மிணிதேவி மீட்டு எடுத்தார். உண்மையில் அதை அவர் அழிவிலிருந்து காத்தார். அவர் அதை தேவதாசிகளிடமிருந்து கற்றார். பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் இலக்கணப்படி அதைச் சீரமைத்தார். அதற்கு பரதநாட்டியம் என்ற பெயர் ஏன் அமைந்தது என்றால் அது பலநூற்றாண்டுகளாகவே பரதநாட்டியம் என்ற பேரிலும் அழைக்கப்பட்டிருந்தது என்பதனால்தான். கூத்து, சதிர் ஆகிய இரு சொற்களும் நாட்டியத்தின் சிறுமைப்படுத்தப்பட்ட வடிவைச் சுட்டுவதாக பேச்சுவழக்கில் ஆகிவிட்டிருந்தன. ஆகவே பரதநாட்டியம் என்ற பெயர் நிலைகொண்டது.

ஆகவே சதிர் என்னும் கலை பரதநாட்டியமாக ஆக்கப்பட்டது என்பது மிக எளிமையாக்கப்பட்ட, அல்லது பிழையான ஒரு பார்வை என்றே நான் நினைக்கிறேன். முன்னரும் எழுதியுள்ளேன். தமிழில் இருந்த செவ்வியல்தன்மை கொண்ட ஆடல்முறையே நவீன மேடையுத்திகள், கூடுதல் கருப்பொருட்கள்  சேர்க்கப்பட்டு பரதநாட்டியம் என ஆகியது. அப்படி சேர்க்கப்பட்ட கருப்பொருட்கள் பக்தி சார்ந்தவை. குறிப்பாக ராதாகிருஷ்ண லீலை. இந்தியாவின் லாஸ்ய வடிவங்களில் எல்லாமே ராதா-கிருஷ்ண லீலை முதன்மைப் பேசுபொருளாக இருந்தது.காரணம் பக்தி இயக்கம், குறிப்பாக புஷ்டிமார்க்கம். தமிழகத்தில் என்றுமே ராதாகிருஷ்ண வழிபாடு வலுவாக இருந்ததில்லை. காரணம், இங்கிருந்த வைணவமாகிய ஶ்ரீமார்க்கத்தில் ராதாபாவம் இல்லை. அத்தகைய கருப்பொருட்கள் ஒடிஸி முதலியவற்றில் இருந்து பரதநாட்டியத்துக்கு கொண்டுவரப்பட்டன. அதுவே ருக்மிணி போன்றவர்களின் கொடை.

சுருக்கமாக, ருக்மிணி தேவி பரதநாட்டியத்தை உருவாக்கவில்லை. சதிரை பரதநாட்டியமாக மாற்றவில்லை. அன்றிருந்த நாட்டியத்தில் பரதம் என எப்போதுமே அழைக்கப்பட்டு வந்த ஒன்றை, இந்தியாவின் பிற லாஸ்யமுறைகளுடன் இணைத்து முன்னெடுத்தார். அதையே ஜெயக்குமார் சொல்கிறார் என நினைக்கிறேன். அதுவே உண்மைக்கு அணுக்கமானது என்பது என் எண்ணம்.

ஜெ

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.